சனி, 30 நவம்பர், 2013

சிவகங்கை மாவட்டம் - களப்பணி

          கடந்த வாரம் 23.11.2013 முதல் 30.11.2013 வரை சிவகங்கை மாவட்டத்தில் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் ஈடுபட்டேன்.  இம்மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கக் கூடிய ஓலைகள் வீட்டுக் கணக்குகளாகவும்,கோயில்  கணக்குகளாகவும், நில உரிமைப் பத்திரங்களாகவும், விழாக்காலங்களில் கோயில் சபையில் அமர்ந்தவர்களின் பெயர்களாகவும், கோயில் விழாக்களின் போது எழுதப்பட்ட வரவு செலவுகளாகவும், கோயில் முறையுடையோரின் பெயர்களாகவும், ஜாதகங்களாகவும் இருக்கின்றன.  சிலரிடம் மட்டும்  மருத்துவம், நாட்டுப்புற இலக்கியம் போன்ற சுவடிகள் காணப்படுகின்றன.  

          பலரிடம் இருந்த சுவடிகள் இன்று இல்லை.  காரணங்களை வினவிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  அத்தகவல்களை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பலர் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும்போது வீட்டில் தேவையில்லாமல் இருக்கிறது என்று வெளியில் வைத்துவிட்டோம்.  அவை கரையானுக்கும் செல்லுக்கும் இரையாவரைக் கண்டு அந்தக் காலத்தில் ஆற்றில் சுவடிகளை விட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  அதனால் இவ்வாறு வீணாவதைப் பார்க்க முடியாமல் ஆற்றில் விட்டுவிட்டோம் என்கின்றனர்.

1954ஆம் ஆண்டு சிவகங்கைப் பகுதியில் பலத்த புயல் வந்ததாகவும், அப்போது குடிசை வீடுகள் எல்லாம் அடித்துச் சென்றதாகவும், அவ்வீடுகளில் இருந்த சுவடிகள் அவ்வீடுகளோடு அழிந்து விட்டமாகவும் தெரிவிக்கின்றனர்.

ஓலைச்சுவடிகளை இம்மாவட்ட மக்கள் ஓலைமுறி என்கின்றனர்.  ஓலை எழுதுதலையும் ஓலைமுறி என்கின்றனர்.  இன்றும் சில இடங்களில் ஓலைமுறி எழுதுகின்றனர் என்கின்றனர்.

பெரும்பாலான செட்டியார்கள் அயல்நாடுகளிலும், அயலூர்களிலும் குடியேறி விட்டதால், அவர்களிடம் உள்ள சுவடிகளைக் காணமுடியவில்லை.  அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அவர்கள் பிறந்த வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுகின்றனர்.  பொங்கலுக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை எல்லோரும் தங்கள் பிறந்த ஊருக்கு வந்து செவ்வாய்ப்பொங்கல் வைப்பது வழக்கமாகக் கொண்டுடிருக்கின்றனர் என்றனர்.  அவர்களின் இந்தச் செவ்வாய்ப்பொங்கல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.   வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரியையோ அல்லது தெரிந்தவர்களைக் கொண்டோ செவ்வாய்ப் பொங்கல் வைக்கச் சொல்லுவர் என்கின்றனர்.

ஏனைய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்....


ஞாயிறு, 3 நவம்பர், 2013

செம்மொழித்தமிழ் இலக்கியங்களில் கிரகணம்

கிரகணம் பற்றி பலவாறான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  பாம்பு நிலவை விழுங்குகிறது என்றும்,  அந்நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், கிரகணம் முடிந்தவுடன் கோயிலுக்குச் சென்று சாமியைக் குப்பிட்ட பிறகுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் சொல்லும் செய்திகளைக் கேட்டிருக்கின்றோம்.  கிரகணம் என்பதன் அறிவியல்  உண்மை இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  நிலவும் பூமியும் நேர்க்கோட்டில் வரும் போது நிலவின்  வீச்சு பூமியில் தெரியாது.  அந்த நேர்க்கோடு வரும் போது நிலவு மறையவும், விலகும் போது நிலவு தெரியவும் செய்யும்.  இந்த நேரம் பூமியின் இயல்புகளில் சற்று மாறுதல் நேரிடும்.  எனவேதான், இந்த நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்றெல்லாம் கூறுவர். கோயில்களில் அந்நேரத்தில் நடை அடைப்பதும் உண்டு.
     
        கிரகணம் பற்றிய செய்தி செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதா என்று ஆயப் புகும் போது, எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு மற்றும் நீதி இலக்கியங்களில் தலைசிறந்ததான திருக்குறளில் இதுபோன்ற செய்திகள் இருப்பதைக் காணமுடிகிறது.   

         கேளாய், எல்ல! தோழி! வேலன்
         வெறிஅயர்  களத்துச் சிறுபல தாஅய
          விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
         உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
         அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
         சிறுபுள் மாலையும் உள்ளார், அவர்என... (அகம்.114.1-6)

என்னும் பாடலில் தலைவன் தலைவியை நினைக்காததைத் தோழி கூறுவதாக அமைந்த இப்பாடலில்,  ஏண்டி தோழி, யான் கூறுவதைக் கேட்பாயாக, வேலன் வெறியாடும் களத்தில் பரவிக் கலந்து கிடக்கும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும். வலியினையுடைய ஞாயிறு, தன் வெம்மை குறைந்து பாம்பு விழுங்கும் நிலவினைப் போல மேற்கு மலையினைச் சேர்ந்து மெல்ல மெல்ல மறையும். அத்தகைய சிறிய புல்லிய மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைக்கவில்லையே என்று கூறுகின்றதாக இப்பாடல் அமைந்துள்ளது.  திருக்குறளில், 

        கண்டது மன்னும் ஒருநாள்  அலர்மன்னும்
        திங்களைப் பாம்புகொண் டற்று.   (குறள்.1146)

இடையீடுகளானும் அல்லகுறியானுந் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள்  அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவுகடாயதாக இப்பாடல் அமைந்துள்ளது.  யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது  ஒருஞான்றே, அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போன்று உலகெங்கும் பரந்தது என்பதாக இப்பாடல் பொருள் அமைகிறது.

இவ்விரு பாடல்களால் நிலவைப் பாம்பு விழுங்கும் செய்தி பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணும் போது சங்க காலந்தொடங்கி இச்செய்திப் பரவல் நம் தமிழரிடையே நீடித்து நிலைத்திருக்கிறது என்பது உண்மை.


வியாழன், 24 அக்டோபர், 2013

ஆழ்வார் திருநகரியில் - சுவடிகள் களப்பணி

ஆழ்வார் திருநகரியில் பெரியன்  வெ. நா. சீனிவாச ஐயங்கார் அவர்களின் பயன்பாட்டில் இருந்த 85 ஓலைச்சுவடிக் கட்டுகளை அவரது மகன் பெரியன் வெ.சீ. அழகியநம்பி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளார்கள்.  அவர்களைப் பற்றிச் சிறிது இங்குக் கூறவேண்டும். வெ.நா. சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் திருஞானமுத்திரைப் பிரசுராலயம் ஒன்றை வைத்து அதன் மூலம் பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளார்.  குறைந்தது 20க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  குறிப்பாக கம்பராமாயணம் காண்டம் காண்டமாக பதிப்பித்துள்ளார்.  சுவாமி நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு, சடகோபன் திவ்ய சரிதம், சடகோபன் சந்திர கலாமாலை, இராமாணம், துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் சந்திர காலமாலை, நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ், திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம், குருகூர்ப்பள்ளு, ஆழ்வார்கள் வைபவம், தெந்திருப்பேரை திருக்கோளூர் திருப்பணிமாலை, திருவைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம் பாலகாண்டம், தெய்வச்சிலையார் விறலிவிடுதூது, கம்பராமாயணம் பால காண்டம் ஆழ்வார்திருநகரிப் பிரதிகளின்படி, கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கம்பராமாணயம் ஆரண்யா காண்டம், கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம், கம்பராமாயணம் சுந்தர காண்டம், கம்பராமாயணம் யுத்த காண்டம், கம்பராமாயணம் உத்தர காண்டம், பராங்குச நாடகம், குருகாஷேத்திர மகாத்மியம், திருக்குருகூர் திருப்பணிமாலை போன்ற பல நூல்களைப் பதிப்பித்த பெருமைக்குரியவர். அவர்  வெளியிட்ட பல நூல்கள் இன்னும் முற்றிலும் விற்பனை ஆகாமல் ஆழ்வார் திருநகரியில் திரு. அழகிய நம்பியிடம் இருக்கின்றன.  தமிழன்பர்கள் அவரிடம் +914639273039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவையன்றி பல அரிய நூல்களையும் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.  பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கின்றார்.  பல பழம் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பழக்கம் வைத்திருந்திருக்கின்றனர்.