வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சுவடியியல் கலைச்சொற்கள்

ஒவ்வொரு துறைக்கும் எனத் தனியானதொரு கலைச்சொற்கள் விளங்குவது இயல்பு.  அவ்வகையில் சுவடியியலுக்கு என அமைந்திருக்கக் கூடிய கலைச்சொற்களை இங்குக் காண்போம்.

அசல் பிரதி  - ஓலையில் எழுதிய முதற்படி.
அசை - சுவடித்தூக்கு.
அச்சடியோலை - முத்திரை இடப்பெற்ற ஓலைப்பத்திரம்.
அச்சுநூற் சுவடி - அச்சு நூலைப் பார்த்தெழுதிய ஓலைச்சுவடி.
ஆண்பனை - காயாப்பனை.
ஆதம் - கூந்தற்பனை.
ஆதியெழுத்து - மூலவெழுத்து.
ஆலேகணி - எழுத்தாணி.
ஆவணக்களம் - ஆவணக்களரி, பத்திரப்பதிவுச் சாலை.
ஆவணம் - ஓலை, உரிமைப்பத்திரம்.
ஆவணர் - உரிமைப்பத்திரம் எழுதுவோர், 
ஆளோலை - அடிமைச்சீட்டு.
இசையோலை - ஒப்பந்த ஓலை.
இணக்கோலை - உடன்படிக்கைப் பத்திரம்.
இணாட்டு - ஓலைத்தளிர், ஓலைத்துண்டு.
இதழ் - ஏடு, ஓலை.
இராசியெழுத்து - குறியீட்டெழுத்து.
இராமபாணம் - சுவடியை அழிக்கும் ஒருவகைப் புழு.
இருப்பு நாராசம் - ஓலைகளைக் கோர்க்க உதவும் ஒருவகை இரும்புக் கம்பி.
இருவிள - பனையோலை.
இலிகிதம் - எழுத்து, கடிதம்.
இலிகிதன் - எழுத்தாளன்.
இலிபி - எழுத்து.
இலிபித்தல் - எழுதுதல்.
இலேககன் - எழுதுவோன், சித்திரக்காரன்.
இலேகனம் - எழுத்து, பூர்ஜ மரத்தின் மேலூரி.
இலேகனி - எழுத்தாணி, எழுதுகோல்.
இலேகை - எழுத்து.
இழவோலை - இறப்புச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை.
இளம்பாலாசிரியன் - குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியன்.
இளவெழுத்து - திருந்தாவெழுத்து, கிறுக்கலெழுத்து, தெளிவில்லாவெழுத்து.
ஈரம்பனை - கூந்தற்பனை.
ஈர்க்கு - ஓலை நரம்பு.
ஈர்க்குல் - ஓலை நரம்பு.
உருவெழுத்து - வரிவடிவம் கொண்ட எழுத்து.
உரைகாரர் - உரையாசிரியர்.
உரைக்கோள் - உரைகாரர் கருத்து.
உரைச்செய்யுள் - கட்டுரை.
ஊக ஆதாரப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊகத் திருத்தம் - ஊகித்தறியும் உண்மைப்பாடம்.
ஊக மூலப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊக மூலப்பிரதி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊசி - எழுத்தாணி.
எண் சுவடி - நெடுங்கணக்கு எழுதப்பெற்ற சுவடி.
எண்ணெய்க்காப்பு - சுவடி பாதுகாப்பதற்காக மருந்தெண்ணை பூசுதல்.
எழுதுகோல் - எழுத்து வரையும் கோல்.
எழுத்தாணி - ஓலையில் எழுதப்  பயன்படும் ஒரு வகைக் கருவி.
எழுத்தாணிப் பூச்சி - சுவடிகளில் காணப்படும் ஒருவகைப் பூச்சி.
எழுத்தாடுதல் - கைச்சாத்திடுதல், கையெழுத்திடுதல்.
எழுத்து வாங்குதல் - கையெழுத்து வாங்குதல்.
எழுத்துக்குத்து - எழுத்து மூலமான சாட்சியம்.
எழுத்துக் குறியீடு - எழுத்தைக் குறிக்கும் குறியீடு.
எழுத்தூசி - எழுத்தாணி.
ஏடகம் - பலகை, பனை.
ஏடாசிரியன் - குருவின் துணையின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்பவன்.
ஏடு - பனையோலை, இதழ், சுவடி.
ஏடு சேர்த்தல் - பனையோலைகளை ஏடுகளாகச் சீவிச் சுவடிக் கட்டாக்குதல்.
ஏடு திருப்புதல் - படி எடுத்தல்.
ஏடு தூக்கி - சுவடிகளைச் சுமப்பவன்.
ஏடு பிறழ்ச்சி - சுவடிக் கட்டுக்குள் ஏடுகள் முன்பின்னாக மாறியிருத்தல்.
ஏடு வாருதல் - பனையோலைகளைச் சீவுதல்.
ஏடெழுதுதல் - புதுச் சுவடி எழுதுதல்.
ஏடெழுதுவிப்போர் - ஏடெழுதுபவரைக் கொண்டுசுவடியை எழுதச் சொல்பவர்.
ஏடெழுதுவோர் - சுவடி எழுதுபவர்.
ஏட்டுச்சுவடி - ஓலைச்சுவடி
ஏட்டுப்பொறி - ஓலையில் பதிந்த முத்திரை.
ஒற்றுதல் - பனையோலைகளில் முத்திரையிடுதல்.
ஓலை - செய்தி தாங்கிய ஓலை, ஓலைச்சுருள், ஓலைக்குடை, கடிதம், திருமுகம், முடங்கல்.
ஓலை எழுதுதல் - ஏடெழுதுதல்.
ஓலைக்கணக்கர் - பள்ளியிற் படிப்போர், ஓலையில் கணக்கெழுதுபவர்.
ஓலைக்கண் - ஓலைச்சட்டத்தில் விழும் துளை.
ஓலைச்சட்டம் - ஓலையிலான காப்பேடு.
ஓலைச்சிறகு - நரம்பு பிரிக்கப்பட்ட பனையோலையிதழ், இதழ், ஏடு.
ஓலைச்சுருள் - ஓலைக்கடிதம்.
ஓலைச்சுவடி - எழுதிய ஓலைக்கட்டு.
ஓலை தீட்டுதல் - ஓலையில் எழுதுதல்.
ஓலை தீட்டும் படை - எழுத்தாணி.
ஓலைத்தூக்கு - சீட்டுக்கவி.
ஓலைநாயகம் - தலைமை அமைச்சர்.
ஓலை போக்குதல் - ஓலையில் செய்தி அனுப்புதல்.
ஓலைப் பாசுரம் - கடிதச் செய்தி, ஓலைப்பாயிரம்.
ஓலை முத்திரை - ஓலையின் முகப்பிலிடும் முத்திரை.
ஓலை முறி - ஓலைச்சீட்டு.
ஓலையாள் - செய்தி கொண்டு போவோன்.
ஓலையெழுதுவிப்போர் - ஏடெழுதுவிப்பவர்.
ஓலையெழுதுவோர் - ஏடெழுதுபவர்.
ஓலை வாசித்தல் - திருமண அறிக்கை வெளியிடல்.
ஓலை வாரி - ஓலை சீவுங் கத்தி.
ஓலை வாருதல் - எழுவதற்கேற்ற அளவில் ஓலையை நறுக்குதல்.
ஓலை வெட்டுப்பனை - ஓலையைத் தவிர வேறெந்த பயனும் தராத பனை வகை.
கணக்காயர் - நூலோதுவிப்போர்.
கணக்குச் சுருணை - கணக்கோலைக் கட்டு, கணக்குச் சுருள்.
கணக்குச் சுருள் - கணக்குச் சுருணை.
கணக்கோலை - கணக்கு எழுதப்பெற்ற ஏடு.
கண்டம் - எழுத்தாணி.
கதம்பை - எழுதுவதற்குப் பனையோலையை வாரிக் கழிக்கப்பட்ட பகுதி.
கம்பை - சுவடிச்சட்டம்.
கம்பை கட்டுதல் - சுவடி கட்டுதல்.
கயிறு சாத்துதல் - ஆரூடச் சுவடியினுள் கயிறிடுதல்.
கரம் - ஓலைக்கொத்தின் திரள்.
கரம் பதிவுக்கணக்கு - வரிப்பதிவுச் சுவடி.
கரிக்காப்பு - மைக்காப்பு, ஓலையில் எழுதப்பெற்ற எழுத்து தெரிய கரி பூசுதல்.
காவோலை - முற்றினவோலை.
கான்சிபட் சுவடி - அகர் மரப்பட்டையில் மசி கொண்டு எழுதப்பெற்ற சுவடி.
காணாட்டு - ஓலை நறுக்கு.
கிரந்த தானம் - சுவடியைத் தானமாகக் கொடுத்தல், புத்தக தானம்.
கிரந்தம் - ஒரு வகை எழுத்து, ஒற்று நீக்கி உயிரும் மெய்யுமாகப்பட்ட 32 எழுத்தின் கூட்டம்.
கிளி மூக்கு - சுவடிக் கட்டில் ஏடு உதிராமல் தடுக்கும் ஒருவகை ஓலையீர்க்குத் துண்டு.
கிளிமூக்கெழுத்தாணி - தலைப்பக்கம் கிளிமூக்கு போன்ற கத்தியமைப்புடைய எழுத்தாணி.
குடவெழுத்தாணி - குண்டெழுத்தாணி.
குடைப்பனை - தாளிப்பனை.
குருத்தோலை - குருத்தாயுள்ள பனையோலை.
குறிப்போலை - கணக்கு எழுதிய ஓலை.
கூட்டெழுத்து - ஓன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்தெழுதுமெழுத்து.
கூந்தற்பனை - தாளிப்பனை.
கூர்ச்சிகை - எழுதுகோல்.
கூர்னிபாம் - ஓட்டுச்சில்லில் எழுத்தாணியால் கீறியெழுதும் எழுத்து.
கூளிப்பனை - தாளிப்பனை.
கைமுறி - ஓலைமுறி, ஓலைச்சீட்டு.
கோணோலை - அரசாணை எழுதப்பெற்ற ஓலை.
சட்டோலை - சட்டம் எபதுவதற்குரிய ஓலை.
சட்டம் வாருதல் - எழுதுஞ்சட்டம் சித்தம் செய்தல்.
சந்திரகம் - ஓலையின் உறைச்சுருள்.
சந்திரிகை - ஓலைச்சுருள்.
சபாது - படி எடுத்தல்.
சரசுவதி பண்டாரம் - சுவடிச்சாலை.
சரசுவதி பீடம் - சிக்குப்பலகை.
சரவை - தெளிவற்ற எழுத்து, எழுத்துப்பிழை, மூலத்தோடு ஒப்பிடாத சுவடி.
சரவையெழுத்து - திருத்தப்பெறாத மூலச்சுவடி.
சரவையிடுதல் - ஓலைச்சுவடியிலுள்ள எழுத்துப் பிழையைத் திருத்தம் செய்தல்.
சலாகை - சிறிய நாராசம்.
சாரோலை - முதிராத குருத்தோலை.
சார்வோலை - முதிர்ந்த குருத்தோலை.
சிக்குப் பலகை - சுவடிகள் வைத்துப் படிப்பதற்கென ஒன்றுக்குள் ஒன்றாகச் சிக்கியிருக்கும்         
                                    ஒருவகைப் பலகை.
சிதிலவேடு - சிதைந்த சுவடி.
சிதைவேடு - செல்லரித்த சுவடி.
சீட்டுக் கவி - ஓலைப்பாசுரம்.
சீதாளம் - கூந்தற்பனை, தாளிப்பனை, குடைப்பனை, தாளபத்ரம்.
சீதாளவேடு - எழுதுதற்குரிய கூந்தற்பனையேடு, எழுதுதற்குரிய தாளிப்பனையேடு.
சீதாளி - சீதாளப்பனை.
சுகஸ்த லிகிதம் - தன் கையாலெழுதிய சுவடி.
சுத்த பாடம் - பிழையற்ற மூலபாடம்.
சுத்தப்பிரதி - திருத்தச்சுவடி.
சுரி - ஏட்டுத்துளை, பனையேட்டில் துளையிடும் கருவி, சுரியூசி.
சுரிப்புறம் - பனையேட்டின் துவாரமுள்ள பக்கம்.
சுரியாணி - கம்பை, நாராசம்.
சுரியூசி - பனையேட்டில் துளையிடும் கருவி, சுரி.
சுருணை - கணக்கெழுதப்பெற்ற ஓலைச்சுருள்.
சுருதி - மூல நூலாசிரியரிடம் நேரிடையாகக் கற்ற கல்வியைப் பிறிதொருவருக்கு 
                    நேரிடையாகச் சொல்லுதல், வாய்மொழிப் பாடம்.
சுவடி - பனையேட்டுச் சுவடி.
சுவடி சேர்த்தல் - ஏடு சேர்த்தல், சுவடி நூலகம், சுவடிச்சாலை.
சுவடியெழுதுதல் - அட்சரம் எழுதப் பழகுதல்.
சுவடி கட்டுதல் - படிப்பை நிறுத்துதல், சுவடி திரட்டுதல், சுவடி வரவுப் பதிவேடு, 
                                    சுவடி வேறுபாடு, சுவடி விளக்க அட்டவணை.
சுவிமியம் - சுள்ளாணி, சுள்ளாணித்தலை.
செந்திருக்கும் - ஓலைக்கடிதத்தின் முழுச்சுருள், ஓலையை அடைக்குஞ் சுருள்.
சோற்றுப்பனை - வயிரமற்ற பனை.
தமிழ் வராகன் - இறையிலி நிலம் பெற்று சுவடிகளைப் புதுப்பிப்பவன்.
தலப்பம் - தாளிப்பனை.
தலை நறுக்கு - ஓலையின் முன்பாகம்.
தளிர்பனை - குட்டைப்பனை.
தற்குறி - எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்.
தற்குறி மாட்டெறிதல் - பெயரெழுதத் தெரியாவன்,
                                                  கைக்கீறல் இதுவென்று எழுதிச் சாட்சி போடுதல்.
தாயேடு - மூலயேடு.
தாலம் - கூந்தற்பனை, பனை, மூன்று பிடிகொண்ட நீட்டலளவு.
தாளிப்பனை - கூந்தற்பனை.
திருகூசி - ஓலையில் துளையிடும் ஒரு கருவி.
திருக்கைக்கோட்டி - கோயில்களில் சுவடிகள் வைத்துக் காக்கப்படும் கோயில் மண்டபம்.
திருமந்திர ஓலை நாயகம் - தலைமை அமைச்சர்.
திருமந்திர ஓலை - அரசவையில் செய்தி வாசிப்போன்.
தூக்குத் தூக்கி - சுவடித்தூக்கைத் தூக்குபவன்.
தூரிகை - எழுதுகோல், எழுதுமிறகு, தூவல், தூலிகை.
தேரெழுத்தாணி - தேருருவக் கொண்டையுள்ள எழுத்தாணி.
நகல் - படி.
நகலேடு - படியேடு.
நறுக்கு - ஓலைச்சீட்டு, ஓலைத்துண்டு.
நாராசமேற்றுதல் - ஓலையில் துளையிடுதல்.
நாராசம் - கம்பை, ஏடுகளைக் கோர்க்க உதவும் ஓர் உலோகக் கருவி.
நாராயம் - எழுத்தாணி.
நீட்டு - திருமுகவோலை.
நீட்டோலை - திருமுகவோலை, ஊர் நடவடிக்கைகளை அறிவிப்பவர்.
நுணுக்கெழுத்து - பொடிப்பொடியாக எழுதும் எழுத்து,மிகச்சிறிய எழுத்து.
நெடுமை - நெட்டெழுத்து.
நெட்டோலை - திருமுகம்.
பகர்த்துதல் - பெயர்த்து எழுதுதல், படியெடுத்தல்.
பகர்ப்பு - நகல்.
பச்சோலை - காயாத ஓலை.
படியோலை - மூலவோலையின் நகலோலை.
பட்டோலை - எழுதுவதற்குகந்த ஓலை. அரசரின் செயல் நடவடிக்கைகளை எழுதுபவர்.
பட்டோலை கொள்ளுதல் - பெரியோர் கூறியதை எழுதுதல்.
பட்டோலை போடுதல் - மூலத்திற்கு நகல் எடுத்தல்.
பதம் பார்த்தல் - பனையோலை எழுதுவதற்குகந்த நிலையிலிருக்கிறதா எனச் சோதித்தல்.
பதித்தெழுதுதல் - அழுந்த எழுதுதல், மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல்.
பனையேடு - பனையோலை, ஓலைச்சுவடி.
பாடம் பண்ணுதல் - எழுதுவதற்கேற்ப ஓலையைப் பக்குவதப்படுத்துதல்.
பிடியெழுத்தாணி - மடக்கெழுத்தாணி.
பிரதி செய்தல் - படியெடுத்தல்.
புடை நூல் - சார்பு நூல்.
புத்தக தானம் - கிரந்த தானம், சுவடியைத் தானமாகக் கொடுத்தல்.
பெண்பனை - காய்க்கும் பனை.
பெயர்த்தெழுதுதல் - நகலெழுதுதல்.
பையோலை - பச்சோலை.
பொறியொற்றோலை - முத்திரையோலை.
மஞ்சள் காப்பு - வெள்ளெழுத்தின் மீது மஞ்களை மைக்காப்பு செய்தல்.
மடக்கெழுத்தாணி - கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணி.
மடக்கோலை - எழுதி மடக்கிய ஓலை.
மடிப்பெழுத்தாணி - கைப்பிடியுள் மடங்கும் எழுத்தாணி.
முகரியோலை - முடங்கின பனையோலை.
முகரீர் - முத்திரை.
முகர் வைத்தல் - முத்திரையிடுதல்.
முடங்கல் - சுருளோலை, செய்தி தாங்கிய ஓலை.
முத்திரித்தல் - முத்திரையிடுதல்.
முறி - கொழுத்தோலை.
முறிப்பத்திரம் - ஓலைப்பத்திரம்.
முறியோலை - முகரிவோலை.
மூலயேடு - நூலாசிரியர் எழுதிய முதலேடு, முகரியோலை.
மூலக்காரன் - நூலாசிரியன்.
மூலம் - மூலபாடம்.
மூலவெழுத்து - மூலாக்கரம்.
மூலவோலை - மூல சாஸனம்.
மேலெழுத்து - காட்சிக் கையெழுத்து.
மைக்காப்பு - எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுச் சுவடிக்கு மை தடவுதல்.
மையாடல் விழா - ஆண்டுக்கொருமுறை குறிப்பிட்டதொரு நாளில் (சரஸ்வதி பூஜை) 
                                          சுவடியில் மை தடவிப் பாதுகாக்கும் விழா.
மையூட்டுதல் - ஓலைக்கு மை தடவுதல்.
மையெழுத்து - மையால் எழுதும் எழுத்து.
மையோலை பிடித்தல் - கற்கத் தொடங்கும் போது மை தடவிய எழுத்துள்ள ஓலையைக் 
                                                     கைக்கொள்ளுதல்.
மோடி - மராட்டியர் எழுத்து.
மோடியெழுத்து -இராயசவெழுத்து.
வடிவெழுத்து - ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து.
வரி - எழுத்து.
வாசகச் சுவடி - உரைநடை நூல்.
வெள்ளேடு - வெற்றேடு, எழுத்தெழுதா ஏடு.
வெள்ளோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை, முத்திரையிடப்பெறாத ஓலை.
வெற்றோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை.