வியாழன், 30 ஜூலை, 2015

இவர்தான் அப்துல்கலாம்...


  • தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்.
  • இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. 
  • ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
  • நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்படச் செய்தவர். 
  • ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
  • நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ளததுபோல் திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தவர் அப்துல் கலாம்.
  • இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகள் பிரதிபலித்தது.
  • மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
  • ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர்.
  • ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
  • அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
  • அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
  • நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. 
  • சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தவர்.
  • ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தவர்.
  • எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
  • எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
  • இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
  • உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
  • அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
  • அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
  • ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
  • அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
  • அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
  • அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
  • அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
  • திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
  • யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
  • ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
  • அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
  • அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
  • சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
  • இராமேஸ்வரத்தில் உள்ள இலட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
  • அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
  • 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
  • 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
  • 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
  • இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
  • இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
  • போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
  • தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
  • இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
  • குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தியவர்.
  • இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வுப் பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தவர்.
  • அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுபவர்.
  • அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
  • இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
  • பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
  • அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
  • சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
  • அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
  • ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும் 27.07.2015 ஆம் நாளன்று இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
                                                                                           

புதன், 22 ஜூலை, 2015

தமிழும் விசைப்பலகையும் - நூல்

தமிழும் விசைப்பலகையும் - நூல் 

(ஆசிரியர் : முனைவர் மோ.கோ. கோவைமணி)


   மோ.கோ. கோவைமணி அவர்களால் 2000இல் தஞ்சை பாமொழி பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு நூல் தமிழும் விசைப்பலகையும்.  இந்நூல் பற்றிய அறிமுகம் இங்குச் செய்யப்படுகிறது.

     பண்டைக்கால வரலாற்று மொழிகளுள் தமிழும் ஒன்று. சைகையில் தோன்றி ஓசையில் வளர்ந்து கருவியில் நிலைபெற்றது தமிழ்மொழி.  தமிழ் மொழியின் எழுத்தும் வரலாறு கொண்டதுதான்.  காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாறுபாடடைந்து வந்திருக்கிறது.  நிலைபெற்ற எழுத்துவடிவம் இதுதான் என்று எதையும் சொல்ல முடியவில்லை.    மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் எழுத்திற்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை.  இலக்கணம் இல்லாததினாலேயோ என்னவோ காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாற்றங்கொண்டுள்ளது.  இதனைத் தடுக்கும் முகத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம்முடைய அறுவகை இலக்கணம் எனும் நூலில் எழுத்தின் வரிவடிவிற்கு இலக்கணம் வகுத்தார்.  இவ்விலக்கணத்திற்குப் பிறகு திராவிட இயக்கம் வலுப்பெறும்வரை எவ்வித மாற்றமும் இல்லாமலிருந்தது.  திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றபோது பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் ணா, றா,னா, ணை, லை, ளை, னை ஆகிய ஏழு எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களை இன்றைய பழகு முறையில் தமிழக அரசு மாற்றிவிட்டது.

     
      இதனைத் தொடக்கமாகக் கொண்டு தமிழை வளர்க்கும் தமிழறிஞர்கள் தமிழ் எழுத்தின் வரிவடிவில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய முற்படுகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மொழியை அச்சு கோப்பதற்கும் சிறார்கள் எளிதில் புரிந்துகொள்வதற்கும் எழுத்துருவாக்கக் கருவிகளின் எளிமைக்கும் எனப் பலவாறு கூறுகிறார்கள். மொழிக்குத் தக்கவாறு கருவிகளை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர கருவிக்குத் தக்கவாறு மொழியைத் திருத்திக் கொள்வது எந்த விதத்தில் சரி?

      கருவிக்குத் தக்கவாறு மொழியை மாற்றாமல் மொழிக்குத் தக்கவாறு கருவியை மாற்றம் செய்யவேண்டுவதே முக்கியம்.  இக்கருத்தின் அடிப்படையில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழி எழுத்துக்களையும் ஒரே கருவியில் இணைக்கும் முயற்சியின் விளைவே இந்நூல்.  இதில் தமிழ்மொழியின் தனித்தன்மைகள் என்ன என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை அமைப்பானது எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப்பொறியின் விசைப்பலகையானது தொல்காப்பிய எழுத்திலக்கணத்திற்கு எவ்வாறு பொருத்தமுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியும், பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தத்தினால் விசைப்பலகை மாற்றம் பெற்றதையும், பாரதி விசைப்பலகை அமைப்பினைப் பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  அடுத்து, தமிழும் ஆங்கிலமும் தனித்தனி இயந்திரங்களாக இல்லாமல் ஒரே இயந்திரமாக்கும் முயற்சியில் தேன்மொழி தமிழாங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதனையுமடுத்து தட்டச்சுப் பொறியின் உறுப்புகளைப் பற்றியும் அவ்வுறுப்புகளின் பயன்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   மேலும், இதில் ஓர் உறுப்பு பழுதடைந்துவிட்டால் அதற்கு மாற்று உறுப்புகள் எவையெவை என்பது பற்றியும் எப்படியெல்லாம் பழுதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாகத் தட்டச்சுப்பொறிக் கலைச்சொற்களைத் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகியவற்றின் அகரவரிசையில் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

      கணினி வளர்ச்சி பெற்றுவரும் அந்தக் காலகட்டத்தில் இதனுடைய தேவை என்ன என்ற வினா எழும்?  என்னதான் கணினி அதிவேகமாக வளர்ச்சி பெற்றாலும் தட்டச்சுப் பொறியின் தேவை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  கணினியின் தேவைகளைத் தட்டச்சுப்பொறியில் உருவாக்கிக் கொண்டால் இதன்தேவை இன்னும் அதிகமாகும் என்பது உறுதி.  காலத்திற்குத் தக்கவாறு பழையவற்றில் மாற்றங்கொள்வதும் புதியவற்றின் பாதிப்பு பழையவற்றில் ஏற்படுத்துவதும் புதியது ஒன்றும் அல்ல.  இதைத்தான் காலங்காலமாக அறிவியல் செய்து வருகிறது.  இவ்வெண்ண வெளிப்பாடாக இந்நூல் எழுந்துள்ளது.  இந்நூலுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.  அவ்வணிந்துரை பின்வருமாறு இங்கே தரப்படுகிறது.

சில விநாடிப் பொழுதில் உலகளாவிய நிலையில் செய்திப் பரிமாற்றம் நடைபெறும் காலமிது.  பொத்தானை அமுக்கினால் இணையம் வழி எந்தச் செய்தியையும் நிகழ்வையும் உடனுக்குடன் அறிய முடிகிறது.  இவ்வகை அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் தட்டச்சுப்பொறியின் பயன்பாடு குறைவுதான்.  எனினும், விசைப்பலகையின் தேவை உள்ளது.  கணினியில் வன்பொருள் - மென்பொருள் அமைப்பிலும் இது இடம்பெறுகிறது.  இவற்றில் இடம்பெறும் எழுத்துக்களின் வடிவம் பற்றிய ஆய்வு உலகெங்கும் பலமொழிகளில் நடந்து வருகிறது.
ரோமன் எழுத்து, தேவநாகரி எழுத்து, தமிழ் (வட்டெழுத்து) எழுத்து, படஎழுத்து எனப் பலவகை எழுத்துக்கள் நடைமுறையில் உள்ளன.  இவற்றுள் தட்டச்சுக்கு/கணினிக்கு ஏற்ற எழுத்து வகை பற்றிய உரையாடல்கள் தொடர்கின்றன.  தமிழுக்கு ரோமன்/தேவநாகரி எழுத்து வடிவைத் தந்து பொதுமைப்படுத்தலாம் என ஒரு சாரார் முழக்கமிட, மற்றொரு சாரார் ஒரு சிறு மாற்றத்தோடு தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்கின்றனர்.  ஒரு இனத்தின் அடையாளமாக அவனது மொழி கருதப்படும் சூழலில், அந்த மொழிக்கென உள்ள எழுத்து வடிவஃகளை யாரும் விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள்.  எனவே, தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டு, அதைச் செயல்படுத்தலாம் என்கிற விவாதம் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  1970களில் அரசு ஆணை வெளியிட்டதோடு, சில எழுத்துக்களில் சீர்த்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இருப்பினும், உகர ஊகார, ஐகார, ஔகார, ஒகர ஓகார எழுத்துக்களில் இன்னும் ஒரு சீரான மாற்றம் ஏற்படவில்லை.  பலரும் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.  தமிழ் உகர ஊகார கிரந்த எழுத்துக்களுக்குப் பயன்படுத்தப்படும் (ஜு, ஜூ) குறிகளை ஏனைய உகர ஊகார வரிசை எழுத்துக்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கருத்து.  ஐ வகை எழுத்துக்களை லை, னை, கை, ணை என ஒரு சாராரும், லய், னய், கய், ணய் என இன்னொரு சாராரும் எழுதக் காண்கிறோம்.  இவற்றை இரண்டு ஒற்றைக்கொம்புடன் ல, ன, க, ண என எழுதலாம் என்பார் பேரா. தெ.பொ.மீ. அவர்கள் (மலையாளத்தில் இதுதான் நடைமுறை).
இந்த எழுத்துமாற்றம் தமிழில் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. பானை, ஓலை, கல்வெட்டு என எழுதுபொருள்கள் மாறியதற்கேற்ப, எழுத்து, வடிவங்களிலும்  மாற்றம் ஏற்பட்டது.  இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் அதற்கேற்ப மாற்றம் தேவை என்கின்றனர்.  கணினிக்கு ஏற்ப எழுத்துக்களின் மாற்றம் என்கின்றனர்.  எழுத்துக்களில் மாற்றம் செய்யாது அவற்றைக் கணினி பயன்படுத்தவேண்டும்; மொழிக்குத்தான் தொழில்நுட்பம் உதவ வேண்டுமே அல்லாது, மொழி தொழில்நுட்பத்துக்கு அடிபணியக் கூடாது (கோவைமணிக்கும் இக்கருத்து உடன்பாடு) என்கிற கருத்தும் உண்டு.  இன்றைய கணினி வல்லுநர்கள் தமிழ்க் கணினிக்கு ஏற்ற எழுத்தமைப்பைக் கொண்டுள்ளது.  மாற்றம் தேவையில்லை என்கின்றனர்.  கல்வெட்டில் காணப்படும் பல சிதைந்த எழுத்துக்களைக்கூட, அதேநிலையில் கணினியில் பதிவு செய்ய முடிந்ததையும், சில குறியீடுகளைக் கணினியில் எழுத முடிந்ததையும் நேரில் பார்த்தபோது, கணினி எதையும் சாதிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது.  டெல்லிதர்பார் என்ற திரைப்படத்தில் மம்முட்டி கணினி வழி உண்மையான கொலையாளியைக் கண்டுபிடித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.  எனவே, வன்பொருள்-மென்பொருள் சிக்கல் தமிழைப் பொருத்தவரை இல்லை.  ஒருவேளை, யாருடைய மென்பொருள் சிறந்தது என்பதில் வேண்டுமானால் சிக்கல் வரலாம்.  பொறுப்புடன் செயல்பட்டால், இச்சிக்கலும் தீரும்.
கணினிக்கு உள்ள இந்த வசதிகள் தட்டச்சுப்பொறிக்கு இல்லை.  தட்டிய எழுத்துதான் தட்டச்சில் பதிவாகும்.  கட்டளை கொடுத்து எழுத முடியாது.  எனவே, தட்டச்சுப்பொறியில் எழுத்துக்களை அமைக்கும்போது ஏற்பட்ட, ஏற்படும் சிக்கல்களையும் தீர்வுகளையும் வரலாற்று ரீதியாக கோவைமணி இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.  அறுவகை இலக்கணம் என்ற நூல் தமிழ் எழுத்து வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுவது இன்றைய எழுத்தியல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும்.  இது தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சுட்டுகிறார்.  தட்டச்சு விசைப்பலகை வல்லுநர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு சீர்மை செய்து உதவலாம்.
தட்டச்சுப்பொறி தொடர்பான கலைச்சொற்களும் அவற்றிற்கான விளக்கமும், அவற்றை ஒட்டிய கலைச்சொல் பட்டியல்களும் இந்த நூலின் சிறப்பான பகுதியாகும்.  தமிழின் கலைச்சொல் வளத்துக்கு இது எடுத்துக்காட்டாக அமைகிறது.  நிறைய கலைச்சொற்களைத் தொகுத்துள்ள ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.
கோவைமணி பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஓலைச்சுவடியில் முகம்பதிக்கும் மணி தட்டச்சுப்பொறி, கணினி ஆகியவற்றிலும் கைபதிப்பது அவரது வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைகிறது.  அவரது தமிழ்ப்பணி சிறக்கும் வண்ணம் இன்னும் பல நூல்களை அவர் படைக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்கிறார்.






வெள்ளி, 17 ஜூலை, 2015

முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றிப் பேராசிரியர் தெய்வசுந்தர நயினார்

பேராசிரியர் தெய்வசுந்தரநயினார் அவர்கள் தன்னுடைய முகநூலில் முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றி 17.07.2015 அன்று ஒரு இடுகையை இட்டுள்ளார்.  அதனை இங்குப் பகிர்கிறேன்.

தமிழறிஞர்கள்பற்றி (74)





முனைவர் மோ.கோ.கோவைமணி (1963) …. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தம் போன்ற பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 1989 முதல் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது அத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள், ஐக்கூ ஐநூறு, பதிப்புலகத் தூண்கள், நாடி மருத்துவம், செம்புலப்பெயல் நீர், எண்ணும் எழுத்தும், ஓலைச்சுவடியியல் ஆகிய நூல்கள்; வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆய்வுமாலை, குமரகுருபரர் ஆய்வுமாலை, முருகன் இலக்கிய ஆய்வுமாலை, திருக்குறள் ஆய்வுமாலை, செவ்வியல் தமிழ்ச்சுவடிகள் போன்ற தொகுப்பு நூல்கள் என 30க்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். இவரின் ஓலைச்சுவடியியல் என்னும் நூலுக்குத் தமிழ்நாடு அரசு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியுள்ளது. சுவடியியல், இலக்கியம், நாட்டுப்புறவியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். பல கருத்தரங்கங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டவர். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னை தொலைக்காட்சியிலும் உரையாற்றியவர். மலேசியா சென்று மலேசியா பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுவடிப்பயிற்சி அளித்தவர். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்து பாதுகாத்து வருபவர். தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுவடி எழுதும் பயிற்சியை மூன்று மணி நேரத்திற்குள் எளிய முறையில் அளிக்கும் வல்லமை பெற்றவர். இவர் சிறந்த ஐக்கூக் கவிஞரும் ஆவார். இவருடைய மின்னஞ்சல் முகவரி - paamozhi@gmail.com இவருடைய இணையதளம் -http://kovaimani-tamilmanuscriptology.blogspot.in/