திங்கள், 21 மே, 2018

கண்டி கதிர்காம வேலவன் மாலை


கண்டி கதிர்காம வேலவன் மாலை
பதிப்பாசிரியர்: முனைவர் மோ.கோ.கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் – 613 010.
கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் சில சமயத் தளங்களில் ஒன்றான இது, சிங்களவர், பௌத்தம், சோனகர், தமிழர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது. இங்கு சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் (சுவடி எண்.3074) பாதுகாத்து வைத்துள்ள கண்டி கதிர்காம வேலவன் மாலை என்னும் சுவடியைப் பதிப்பு செய்யப்படுகிறது.  காப்புப் பாடல் ஒன்றும், நூல் இருபத்தெட்டும் கொண்டுள்ளது.  இந்நூல் முற்றுப்பெற்றதாகத் தெரியவில்லை.  இன்னும் ஓரிரு பாடல்கள் கொண்டிருக்க வேண்டும்.  இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை.
கோயில் வரலாறு
கதிர்காம கந்தனின் பெயர்  தமிழ் சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதைக் கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான  எல்லாளனுடனான  போரில், சிங்கள மன்னனான  துட்டைகைமுனு  இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் அமைப்பு
ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தன் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கும் முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கல் கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் அழகும் பொலிவுங்கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.
கருவறையின் சிறப்பு
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது
விழாக்கள்
வருடாந்தரப் பெருவிழா
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்தரப் பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்தி வாய்ந்த யந்திரத்தைக் கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.  வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.
பிற விழாக்கள்
ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு வருகின்றது.

நூல்

சீரா கதிர்காமச் செந்தே னருமுகவா
பாராறு மாலைதலைப் படிக்கவாயே - யருள்வாய்
தாரா குழலுமையாள் தானீன்ற தற்பரமே
காராறு மேனிக் கணபதியே காப்பாமே.

நித்த முனைத்துதித்து நீனிலத்தோர் கொண்டாடப்
பத்துலட்சங் கோடுதமிழ்(ள்)ப் பாடவரமே - யருள்வாய்
அத்த னருமுகனே! ஆயோன் மருகோனே!!
கர்(ற்)த்தனே! யெங்கள் கதிர்காம வேலோனே.             
(1)
வாக்கு மனமு மொன்றாய் வண்மைதரு நின்பதத்தை
யேற்குந் தமிழ்(ள்)ப்பாட யெனக்குவரமே யருள்வாய்
ஆற்கும் பெரியோனே அமரர்சிறை மீட்டோனே
காற்கும் பெருமாளே கதிர்காம வேலோனே.              
(2)
அனுதினமு உனைநினைந்து அடியேனு மீடேற
உனதுடைய மலர்(ற்)ப்பதத்தை உகந்தெனக்கு நீயருள்வாய்
மனதிலையும் வாக்கிலையும் வஞ்சகமில்லா தடியேன்
கனைவிலையும் னான்மற()வேன் கதிர்காம வேலோனே.  
(3)
வில்லா லடித்த விசையனுக்குப் பாசுபதம்
வல்லாயுதங் கொடுத்த மாயோன் மருகோனே
யெல்லாற்கு நல்லபிரா(றா)ன்  யென்றேநீ யென்றள()வும்
கல்லோதான் உன்மனது கதிர்காம வேலோனே.            
(4)
அன்னையுநீ தந்தையுநீ ஆனாலு மெந்தனுக்கு
பின்னை யுலகுதனில்ப் பேசுவது நீயல்லவோ
முன்னே புரமெரித்த முக்கண்ணார் தம்புதல்வா
கன்னல்செரி முத்தே கதிர்காம வேலோனே.              
(5)
மயிலாடு மான்மரைகள் வரிப்புலிகள் வானரங்கள்
பயிலாக வாழு(ளு)ம்  பரமபதி நன்னாடு
துயிலா விள()க்கொளி(ழி)போல் துலங்குவடி வாளசைத்து
கயிலாச மென்னும் கதிர்காம வேலோனே.               
(6)
வாணா லுதைத்து மகாசூரனை வதைத்து
சேனாடர் போற்றும் செங்கைவடி வேலோனே
பூணாறம் பூண்டதிருப் பொற்கமலச் சேவடியை(க்)
காணாத கண்ணென்ன காதிர்காம வேலோனே.            
(7)
செங்கரத்தில் வேலுதவுஞ் செங்கையிலே வீற்றி(த்தி)ருக்கும்
பங்கப்படர் தமியேன் பாதகத்தைத் தீ(ர்)த்தருவள்வாய்
மங்கைவள்ளி பங்காளர் மாணிக்க மீன்றுதம்
கங்கைவள() நாடா! கதிர்காம வேலோனே.              
(8)
மிண்டிச்சமற் கழு(ழி)த்தில் மென்மேலுங் கைகலந்து
மண்டிப்பெருஞ் சூரன் வானாள்(ல்)தனை வாங்கி
தெண்டித் தமரா சிறை(ரை)மீட்ட சேவுகனே
கண்டிவள() நாடான் கதிர்காம வேலோனே.              
(9)
பாலாறு நெய்யாறு பரதேசிக் கன்னமிடும்
கோலாகலக் குமரா கோவேவுனைத் துதிப்பேன்
வேலாயுதன் விசாகர் விள()ங்குந் தண்டை
காலாயுதக் கொடியோன் கதிர்காம வேலோனே.            
(10)
சுத்தனே ஞானச் சுடரே சுடர்(க்)கொழு(ளு)ந்தே
பித்தனார் பெற்றபெரு(று) மால்(ன்) மரு(று)கோனே
குற்றமே செய்தாலுங் கொண்டுபொறுத் தருள்வாய்
கர்(ற்)த்தனே யெங்கள் கதிர்காம வேலோனே.             
(11)
யெட்டா லெழுதவொண்ணா லெழு(ளு)தத் துளையாத
நாட்டா ரரிய நடத்துவது உன்பதுமை
கோட்டானை(ச்) சிங்கம் கொடும்புலிகள் வந்தாலும்
காட்டாமல் நீயரு(று)ள்வாய் கதிர்காம வேலோனே.        
(12)
பொய்யாக வையத்தீர் போலைத்தலைமேல்ப் பொற்பாதம்
மெய்யா() வையத்தீர் வினையகலுங் கண்டாயே
அய்யா முருகா அம்புவள்ளி பங்காளா
கையா லுனைத்தொழு(ளு)வேன் கதிர்காம வேலோனே.    
(13)
நல்லா தரவுடனே நானுனது பாதகெதி
அல்லாது வேருளதோ அஞ்சலேக ரத்தருள்வாய்
வல்லா யிரஞ்சொல் வயிரமெனு நெஞ்சகந்தான்
கல்லோதான் உன்மனது கதிர்காம வேலோனே.            
(14)
நீயிருக்குந் தெய்வானை நெஞ்சிருக்க வள்ளி(ழ்ழி)யம்மை
தாயிருக்க வேயெனக்குச் சலிப்புவரு வாறென்ன
வேயிருக்க குழலூதி வெண்ணையுண்ட மால்மருகா
காயிருக்குந் தெங்காவி கதிர்காம வேலோனே.            
(15)
உன்தாள்துணை யெனக்கு உறு(ரு)தியுட னம்புமெந்தன்
சிந்தாகுலந் தித்தசெல்வ மெனக்கே யருள்வாய்
திந்திதமென் றாடுகின்ற சிவன்மகனே தேவர்தொழு(ளு)ம்
கந்தா குமரா(றா) கதிர்காம வேலோனே.                  
(16)
யென்னெஞ்சு நானும்மிடஞ் சலப்படுந் துயரம்
உன்னஞ்சரியாதோ  உண்மை யெனக்கே யரு(று)ள்வாய்
அன்னஞ்சிறு நடையா ளம்புவள்ளி பங்காளா
கண்ணஞ்சேர் கண்டிக் கதிர்காம வேலோனே.             
(17)
பட்ட(டை)யமும் சக்கரமும் பாசாங்கு சதாசிவமும்
யிட்டசவுக் கொளியும் மிலங்குமுக மார்பும்
துஷ்ட்டர்களை வெட்டி துரத்துவடி வேலசைத்து
கட்டழகா கண்டி(டீ)க் கதிகாம வேலோனே.                
(18)
உண்டென்று னாள்(ழ்)தோறும் உன்பாதம் போற்றிசெய்து
வண்டங்க வடனெஞ்சே வஞ்சலுக்கு அஞ்சலென்பர்
அண்டர்தொழு(ளு) ஆறுமுகத் தய்யா யெனக்கிற()ங்கி
கண்டபுதந் (தந்)தருள்வாய் கதிர்காம வேலோனே.          
(19)
சொல்லையா நெஞ்சில்த் துலையாக் கவலைதனை
வெல்லய்யா யெந்தனுக்கு வேண்டுவரம் தாருமய்யா
அல்லய்யா சொல்லுகிறே(ரே)ன் னானாலு முன்மனது
கல்லய்யா கந்தா கதிர்காம வேலோனே.                  
(20)
உள்ளா ளனுப்பாமல் லோடிவந்தீ றாசைகொண்டு
விள்ளாதே போம்போ வெறுங்கை முழமிடுமோ
துள்ளாதே போம்போம் துடுக்காமோ நீதிருடா
கள்ளாவுனை யறி(ரி)யேன் கதிர்காம வேலோனே.          
(21)
பூட்டிநீறா சையின்பம் போதாக் குரைச்சலுக்கு
மூட்டிநீர் சண்டைமெத்த முடிப்பெனக்குத் தந்ததுண்டோ
தீட்டிநீர் தெள்ளமுர்தம் செங்கையிலே வைகுந்தம்
காட்டிநீர் சும்மா கதிர்காம வேலோனே.                   
(22)
போதாதோ தேவரீர் பொன்மயிலின் மீதேறி
வாழு(ளு)தோ யென்வீட்டில்  வந்துவழக் குண்டாமோ
நீர்தாமோ யென்றள()வும் நெட்டூரஞ் செய்தகந்தா
காறாறு(ரு) மேனிக் கதிர்காம வேலோனே.                      
(23)
நன்றாக வுன்பாதம் னாள்தோறும் போற்றிசெய்ய
எந்தாள் எனக்குவந்த எடறுதலைத் தீத்தருள்வாய்
கொந்தா கடம்பணியும் கோவே குமரிபெற்ற
கந்தா குமரா கதிர்காம வேலோனே.                           
(24)
துள்ளி மயிலேறி  துடிதுடித்து யோடிவந்தீர்
அள்ளிப் பசும்பொன் னடவாய்க் குடுத்ததுண்டோ
வெள்ளியுந்தான் தந்தவர்போல் வேசையுடன் சொல்லாமல்
கள்ளியெனச் சொன்னீர் கதிர்காம வேலோனே.            
(25)
மணக்கோல மாகஎன்முன் வந்தாய் மதியாமல்
எனக்கோ அவளுமக்கோ யிட்டமருந் தின்பிசகோ
பிணக்கோ ணின்ணோடும் பேசாமல் மோடிபண்ண
கணக்கோதான் சொல்லுங் கதிர்காம வேலோனே.          
(26)
பனங்களிக்க னானுனையே பாடிவர வேண்டிநின்றே
யெனங்களிக்க நல்லாயிரக்க மெனக்கே யரு(று)ள்வாய்
மணங்களிக்கும் பச்சைவண்ணன் மருகனே மாதுமையாள்
கணங்களிக்குந் தேவே கதிர்காம வேலோனே.             
(27)
என்னுடைய கவலைதனை யீடழி(ளி) வேலெடுத்தும்
பண்ணுதமிழ்(ள்)ப் பாடப் படிக்கவர மெய்யருள்வாய்
அன்னஞ் சிறுநடையா ளம்புவள்ளி பங்காளா
கன்னஞ்சேர் கண்டிக் கதிர்காம வேலோனே.               
(28)
--------