செவ்வாய், 15 ஜனவரி, 2019

சிலப்பதிகாரம் - நாட்டுக் காப்பியம்



            தெய்வங்களையும் மன்னர்களையும் முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டு வந்த காப்பிய நிலையில் இருந்து நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்திக் காட்டவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுந்த காப்பியமே சிலப்பதிகாரம்.  ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மட்டும் முழுக்க முழுக்க மக்கள் காப்பியமாகத் திகழ்கிறது.  இம்மக்கள் காப்பியம் சோழ நாட்டில் தொடங்கி பாண்டிய நாட்டில் வளர்ந்து சேரநாட்டில் நிறைவுற்றததால் இதனை முந்நாட்டுக் காப்பியம் என்றும்; இயல் தொடர்பான கூறுகளும், இசை தொடர்பான கூறுகளும், நாடகம் தொடர்பான கூறுகளும் இவற்றுள் இடம்பெற்றிருப்பதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும்; கண்ணகியின் கற்புத் திறத்தையும், கோவலனின் இருமனம்-இருமணத் திறத்தையும், பரத்தையரான மாதவியின் கற்புத் திறத்தையும் எடுத்தியம்புவதால் முத்திறக் காப்பியம் என்றும் கூறலாம்.  இவையன்றி, இக்காப்பியம் நாட்டுக் காப்பியம் – நாட்டுப்புறக் கூறுகள் அடங்கிய காப்பியம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.  அவற்றை மையப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
பலிக்கொடை
            காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு நகரங்களாக இருந்தன என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எடுத்துரைக்கின்றார்.  கடற்கரையை ஒட்டிய பகுதி பட்டினப்பாக்கம் என்றும், அதனையடுத்தபகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் குறிப்பிடுவர்.  மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதி பலிக்கொடைப் பகுதி என்பர்.  இப்பகுதி வளர்ந்துள்ள மரங்களையே தூணாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாள் அங்காடியாகிய பகல் கடைப் பகுதியில், பொருளைக் கொடுப்போர் சத்தமும், வாங்குவோர் சத்தமும் இணைந்து போர்க்களம்போல் ஒலிக்கும் பகுதியாக அமைகிறது.  இங்குக் காவல் பூதம் அமைந்திருக்கிறது.  இந்திரனால் சோழ அரசனுக்குப் புகார் நகரத்தைக் காவல் காப்பதற்கு அனுப்பப்பெற்றது இக்காவல் பூதம். இக்காவல் பூதத்திற்குச் சித்திரை மாதம், சித்திரை நாள், பௌர்ணமியும் அமைந்த நாளில் மன்னனுக்கு வரும் துன்பங்கள் ஒழிப்பாயாக என வேண்டி, பூதத்தின் பலி பீடத்தில், புழுக்கல், நெய்யுருண்டை, நிணச்சோறு, பூ, சாம்பிராணிப்புகை, பொங்கல், கள் ஆகியவற்றைப் படைத்து துணங்கைக் கூத்தும், குரவைக்கூத்தும் ஆடி தெய்வம் ஏறிச் சிலர் வெற்றியையுடைய என் வேந்தன் இன்னும் வெற்றியைப் பெறுவானாக என்று கூறி, தம் கரிய பெருந்தலையை அரிந்து பலிபீடத்தில் வைப்பர்.  இவ்வாறு பலிகளில் உயர்ந்த பலியான நரபலியை மக்கள் உன்னத நோக்கத்திற்காக வழங்கும் நிலையினைச் சிலப்பதிகார இந்திரவிழா ஊரெடுத்த காதையில் காணமுடிகிறது.  நரபலி கொடுக்கும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைக்  கூறாக இங்குக் காணமுடிகிறது.  இதனை,
            “மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெம்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கஎனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகஎனக்
கல்உமிழ் கவணினர், கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கரும்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கஎன
நல்பலி பீடிகைநலம் கொளவைத்து, ஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி” (சிலப்.இந்திர., வரி.76-88)
என்ற இளங்கோவடிகள் வாக்கால் அறியமுடிகிறது.
            வேட்டுவ வரியிலும் கொற்றவைக்கு வேட்டுவர்கள் பலிக்கொடை கொடுப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.  அதாவது, கொற்றவையை வழிபடுகின்ற வேட்டுவர், கொற்றவைக் கோலத்தை வேட்டுவர் குலத்தில் தோன்றிய குமரிக்கு அணிவித்து, அவளை ஆட்டுவித்துத் தாங்களும் ஆடுகின்றனர்.  வேட்டுவ மக்கள் அயலூர் சென்று வேட்டையாடி ஆநிரையுட்பட பல செல்வங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்க, அவற்றுக்கு உறுதுணையாக இருந்த கொற்றவைக்குச் சிறப்புச் செய்யும் முகத்தான் பலிக்கொடை கொடுக்கின்றனர். முனிவர்க்கும் தேவர்க்கும் அருள் செய்யும் தெய்வமே உன் இணையடி தொழுகின்றோம்.  உனக்குப் பலிக்கடன் கொடுப்பது எங்களின் கடமை என்றவர்கள் எதற்கெல்லாம் பலிக்கடன் கொடுப்பார்கள் என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.
Ø  அடல்வலி எயினர் நின்னை வணங்கித் தரும் பலிக்கடன்.
Ø  நீ தந்த வெற்றிக்கு விலையாக நாங்கள் தரும் தம்முடைய மிடறுக்குருதி.
Ø  நிணத்தில் இருந்து உகுகின்ற குருதி.
Ø  அடுபுலி அன்ன வேடுவர்கள் துடியும் பறையும் கொட்ட நின் அடிக்குச் செலுத்தும் கடன்.
Ø  பலி முகத்தில் இடும் குருதி.
Ø  வழியிடை வருவோர் மிகுதியாகட்டும், அவர்களிடம் பறித்துத் திரட்டும் கொள்ளைகள் பெருகுவது ஆகட்டும் என்று இந்த வேட்டுவர் படைக்கும் மடைப்பலி.
Ø  துடியொடு பகைவர் ஊரில் அடிவைத்து எறிவதற்குக் கொடுக்கும் பலிக்கடன்.
Ø  அமுதுண்டு தேவர்கள் மடிகின்றனர்.  நஞ்சுண்டு நீ வாழ்கின்றாய்.  இது வியப்பாது உள்ளது. உன்னைப் போற்றி மகிழ்கின்றோம். பலி ஏற்று அருள்க.
Ø  அருள் என்பதை நெஞ்சகத்திலிருந்து அகற்றியவர்கள் நாங்கள்.  பொருள் கொண்டு அதற்காக மற்றவர்களைப் புண் செய்வதே எம் பண்பட்ட தொழில்.  நாங்கள் மறவர்கள், நாங்கள் இடும் பலிக்கடனை உண்பாயாக.
என்றெல்லாம் வேட்டுவர்கள் கொற்றவையிடம் தம்முடைய தொழில் தர்மத்தில் உள்ள கடனை – பலிக்கடனை – பலிக்கொடையைக் கொடுத்திருக்கின்றனர்.  இதனை,
            “வம்பலர் பல்கி, வழியும் வளம்பட
அம்புடை வல்வின் எயின்கடன் உண்குவாய்
சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்” (சிலப்.வேட்., பா.21)
“துண்என் துடியொடு துஞ்சுஊர் எறிதரு
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுது உண்டும் சாவ,ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டுஇருந்து அருள்செய்குவாய்” (மேலது, பா.22)
“பொருள்கொண்டு புண்செயின் அல்லதை, யார்க்கும்
அருள்இல் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்து நின்மாமன் செய்வஞ்ச
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய்”    (மேலது, பா.23)
என்று இளங்கோவடிகளால் சுட்டப்பெற்றிருக்கக் காணலாம்.
ஐம்பெரும் மன்றங்கள்
மக்களால் உருவாக்கப்பெற்று நன்னடத்தை வழிகளைச் செய்யும் நீதிமன்னறங்களாக ஐம்பெரும் மன்றங்களை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.  அதாவது, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடும்கல் நின்ற மன்றம், பூதம் நிற்கும் பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற ஐந்து மன்றங்கள் சிலப்பதிகாரக் காலத்தில் இருந்திருக்கிறது.  இம்மன்றங்கள் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கிக் கொள்வதாகவும் பரிகாரம் செய்து கொள்வதாகவும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
1.            களவு செய்வோரை அவர்கள் தலையில் களவாடிய பொதிகளை அடுக்கிவைத்து ஊரைச் சுற்றிவரச் செய்வது வெள்ளிடை மன்றம் ஆகும்.
2.            நோய் நொடியால் வாடுவோர் குளத்து நீரில் மூழ்கி எழுந்தால் அவர்கள் நோய் தீர்ந்தனர்.  அந்தக் குளம் உடைய மன்றம் இலஞ்சி மன்றம் ஆகும்.
3.            பித்தம் பிடித்தவர், நஞ்சு உண்டவர், அரவு தீண்டப்பெற்றவர் ஆகிய இவர்கள் துயர் நீங்கி உயர்வு பெற்ற பகுதி நெடும்கல் நின்ற மன்றம் ஆகும்.
4.            தீய ஒழுக்கத்தவர் அவர்களைப் புடைத்து உண்டு தண்டிப்பது பூதம் நிற்கும் பூதச் சதுக்கம் ஆகும்.
5.            அரசன் நீதி தவறினாலும், மன்றங்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினாலும் கண்ணீர் உடுத்து அழுது காட்டி அநீதியை எடுத்து உரைத்தது பாவை மன்றம் ஆகும்.
இவ்வாறு இம்மன்றங்கள் மக்களுக்கு நல்வழிப்படுத்துவதற்காக மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது.  இம்மன்றங்கள் பற்றி இளங்கோவடிகள் இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில் (வரி.111-140) குறிப்பிடுகின்றார்.
கனவு
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக விளங்குவது கனவு.  கனவுக்குத் தக்க பலன் உண்டு என்ற நம்பிக்கையுடையோர் நாட்டுப்புற மக்கள்.  நம்பிக்கையின் பாற்கொண்ட இக்கனவினை இளங்கோடிவகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் மற்றும் பாண்டியன் மாதேவியாகிய கோப்பெருந்தேவி ஆகியோருக்கு வருவதாகக் காட்டுகின்றார்.
சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில், கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  கணவனின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகி, மன வருத்தம் கொண்டவளாகக் காணப்படுகிறாள்.  இதனைக் கண்ணுற்ற கண்ணகியின் தோழி தேவந்தி என்பவள், சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய துறைகளில் நீராடி காமதேவனை வழிபட்டால் கணவனை அடையலாம் என்கிறாள்.  அதற்குக் கண்ணகி உடன்படாது, அது பெருமை தராது என்று கூறியவள், முன்னாள் இரவில் தான் கண்ட கனவினை அவளிடம் எடுத்துரைக்கின்றாள்.
நான் கண்ட கனவினை உரைத்தால் நீயே அச்சம் கொள்வாய். அக்கனவினை என் நெஞ்சம் நினைக்கும்தோறும் நடுங்குகிறது.  அக்கனவு பின்வருமாறு:
Ø  என் கணவன் என் கையைப் பிடித்துக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புதியதோர் ஊருக்கு என்னை அழைத்துச் செல்லுதல்.
Ø  அங்கே அவன் பழிச்சொல்லுக்கு ஆளாவது.
Ø  தேளைத் தூக்கி எங்கள்மேல் போட்டதுபோல் அப்பழிச்சொல் இருந்தது.
Ø  அதனைத் தொடர்ந்து கோவலனாகிய என் கணவனுக்குத் தீங்கு நிகழ்வது.
Ø  அதைக்கேள்வியுற்ற நான் காவலன் முன்சென்று வழக்காடுவது.
Ø  அதனைத் தொடர்ந்து காவலனும் அந்நகரும் அழிவு பெற்றது.
Ø  அதன் பின் உயிர் துறந்த என் கணவன் கோவலன் உயிர்பெற்று என்னைச் சந்தித்து பேசினது.
என்றவாறெல்லாம் நான் கனவு கண்டேன் என்கிறாள்.  இதனை,
“. . . . . . . . . . . . . . . . . .  பெறுகேன்
கடுக்கும் என்நெஞ்சம் கனவினால், என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில், படாததுஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன், காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்.
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ! தீக்குற்றம்
உற்றேனொடு, உற்ற உறுவனோடு யான்உற்ற
நற்றிறம் கேட்கின் நகை ஆகும்” (சிலப்.கனாத்., வரி.44-54)
என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
அடைக்கலக் காதையில் கோவலனின் கனவு இடம்பெற்றிருக்கிறது.  கோவலன் தன்னுடைய நிலையினை எண்ணி எண்ணி மாடலனிடம் கூறி வருந்தியபோது, மாடலன் கோவலனுக்குத் தக்க ஆறுதல் மொழிகள் பலப்பல கூறித் தேற்றுகின்றான்.  உன்னால், நீ தெரிந்து செய்த பிழைகள் ஏதும் இல்லை.  முற்பிறவியல் நீ பெற்ற தீவினைப் பயனே இப்பிறவியில் அடைந்திருக்கின்றாய் என்று ஆறுதல் கூற, கோவலன் தான் கண்ட கனவினை மாடலனிடம் எடுத்துரைக்கின்றான்.
Ø    கண்ணகி நடுங்கித் துயர் அடைகின்றாள்.
Ø    கோவலனாகிய நான் எருமை மீது ஊர்ந்து செல்கின்றேன். 
Ø    என்னுடைய ஆடைகளை மற்றவர்கள் பறித்துக்கொள்கின்றனர்.
Ø    கண்ணகியும் நானும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டுலகை அடைகின்றோம். 
Ø    மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகின்றாள்.
Ø    மன்மதன் தனலில் அம்பினை வெறும் நிலத்தில் வீசி எறிகின்றான். 
Ø    மணிமேகலை மாபெரும் துறவியாகின்றாள்.
என்பன போன்ற கனவுகளை எடுத்துரைக்கின்றான்.  இதனை,
            “கோவலன் கூறும், ஓர்குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறு ஐங்கூந்தல் நடுங்குதுயர் எய்த
கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆய்இழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர் தம்பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கைஅற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நன்இருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்என” (சிலப். அடைக்., வரி.95-106)
என்கின்றார் இளங்கோவடிகள்.  வழக்கு உரைத்தல் காதையில் கோப்பெருந்தேவி ஒரு கனவு காண்கிறாள்.  இதனை முதலில் தன்னுடைய தோழிக்கு எடுத்துரைக்கிறாள்.
Ø    அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை சாய்தல்.
Ø    வாயில் கடையில் வைக்கப்பட்டிருக்கும் மணி ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டிருத்தல்.
Ø    திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்தல்.
Ø    சூரியனை இருள் விழுங்குதல்.
Ø    வானவில் இரவில் தோன்றுதல்.
Ø    பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள்போல் நெருப்பை அள்ளி வீசுதல்.
போன்ற எதிர்மறை செயல்களைக் கண்டேன் என்கிறாள்.  இக்கனவுகளைத் தன்னுடைய கணவன் அரசவையில் உள்ள பாண்டிய மன்னனிடமும் எடுத்துக் கூறுகிறாள்.  இதனை,
            “ஆங்கு,
குடையொடு கோல்விழ நின்று நடுங்கும்
கடைமணியின் குரல் காண்பென் காண்எல்லா!
திசைஇரு நான்கும் அதிர்ந்திடும்; அன்றிக்
கதிரைஇருள் விழுங்கக் காண்பென் காண்எல்லா!
இடும்கொடி வில்இர;வெம்பகல் வீழும்
கடும்கதிர் மீன்;இவை காண்பென் காண்எல்லா!” (சிலப். வழக்., வரி.1-7)
என்கின்றார் இளங்கோவடிகள்.
இம்மூன்று வகைப்பட்ட கனவுகளும் எதிர்காலத்தில் நிகழப்போவதை நிகழ்காலத்தில் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.  இது தொன்றுதொட்டு நாட்டுப்புற மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
தீநிமித்தம்
            கனவினைப் போலவே தீநிமித்தம் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகக் கலந்திருக்கிறது.  நடந்திருக்க வேண்டியது நடக்காமல் எதிர்மறையாக இருப்பது தீநிமித்தத்திற்கான அறிகுறிகள்.  இவ்வறிகுறிகள் மக்களை விழிப்படையச் செய்யும் எனலாம்.  வரும்முன் உரைப்பது இத்தீநிமித்தம் ஆகும்.  சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை, மதுரையில் உள்ள ஆயர்சேரியில் காலையில் சில தீய நிமித்தங்கள் மாதரிக்கும் அவளது மகள் ஐயைக்கும் காணப்பட்டதாக எடுத்துரைக்கிறது. 
Ø  குடத்தில் பால் உறையவில்லை.
Ø  காளைகள் கண்ணீர் விட்டன.
Ø  வெண்ணெய் உருகவில்லை.
Ø  ஆட்டுக்குட்டிகள் துள்ளி ஆடவில்லை.
Ø  பசுக்கள் நடுங்கிக் கதறுகின்றன.
Ø  பசுக்களின் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் அறுந்து நிலத்தில் வீழ்ந்தன.
என்பன போன்ற தீநிமித்தங்களை எடுத்துக்காட்டி மதுரைக்கு ஆபத்து வரப்போவதை முன்னரே உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.
நடுகலும் கோட்டமும்
            சிறப்பாகப் போர்புரிந்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நடப்படுவது நடுகல்.  மறக்குடிப் பெண்களின் வீரம் சங்க காலந்தொடங்கி பாராட்டுப் பெற்று வந்ததே அன்றி அவர்களுக்கு நடுகல் வைத்து வழிபட்ட பழக்கமும் வழக்கமும் இல்லை.  மேலும், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் நடப்பெற்றாலும் அவற்றிற்கான கோட்டம் என்று சொல்லக்கூடிய தனியானதொரு கட்டட அமைப்பு இருந்ததில்லை. வீரர்களுக்கே நடப்பட்டு வந்த இந்நடுகல் முறையினை மாற்றிக் கற்பில் சிறந்த மகளிருக்கும் நடுகல் அமைத்தவர் சேர மன்னனாகிய செங்குட்டுவன்.  முதலில் தன்னுடைய தாய்க்கு வடக்கே இமய மலையில் இருந்து கல்கொணர்ந்து நடுகல் வைத்தவன், பின்னர் பத்தினியான கண்ணகிக்கும் வடக்கே இமயம் சென்று கல்கொணர்ந்து நடுகல் வைத்து கோட்டமும் கட்டி மகிழ்ந்தவன் சேரன் செங்குட்டுவன்.  தெய்வங்களுக்கும், மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் இருந்த இம்முறையை பெண் மக்களில் ஒருவருக்கும் ஏற்படுத்தி நாட்டுக் காப்பியக் கூறுகளை வலுமையாக்கியவர் செங்குட்டுவன் எனலாம்.
தொகுப்புரை
            சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று நாட்டுக்குரிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.  சோழ நாட்டில் தோன்றி, பாண்டிய நாட்டில் வளர்ச்சியுற்று, சேர நாட்டில் நிலைபெற்றது எனலாம்.  இக்காப்பியத்தில் நாட்டு மக்களின் நம்பிக்கைகளும் வழக்குகளும் ஏராளமாக இருக்கின்றன என்றாலும் ஒருசில மட்டும் இங்கு எடுத்துரைக்கப்படுள்ளது.

திங்கள், 14 ஜனவரி, 2019

சித்தமருத்துவச் சுவடிகளை அட்டவணைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள்



ஓலைச்சுவடிகளில் பல்வேறுபட்ட பொருண்மைகள் இடம்பெற்று இருக்கின்றன.  குறிப்பாக, சித்தமருத்துவம், இலக்கியம், இலக்கணம், மாந்திரீகம், வரலாற்றுச் செய்திகள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன.  இவ்வகைப்பட்ட ஓலைச்சுவடிகள் தொகுப்பாக இருக்கும் இடத்தில் அவற்றை எளிதாக அடையாளப்படுத்துவதற்கு அட்டவணைகள் பயன்படுகின்றன.  இவ்வாறு அட்டவணைப்படுத்தும்போது பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றுகின்றன. சித்த மருத்துவச் சுவடிகளை அட்டவணைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
அட்டவணை
            தனித்தனியாக பாடல்களாகவோ நூல்களாகவோ இருந்தபோது வராத சிக்கல் தொகுப்பிக்கும்போது ஏற்பட்டது.  பல பாடல்கள்,  நூல்கள் ஓரிடத்தில் தொகுத்து வந்தமையும்போது அவற்றை அடையாளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியே அகர வரிசைப்படுத்தல். இவ்வகரவரிசைப் பட்டியலே அட்டவணை உருவாவதற்குத் தோற்றுவாயாக அமைகிறது எனலாம்.  ஒரு துறை அறிவிலிருந்து பல்துறை அறிவு விரிவாக்கம் மனிதன் மேற்கொள்ளும்போது எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றிருப்பது கடினம்.  இதனால் அவற்றை எளிய முறையில் நினைவில் கொண்டவற்றை அடையாளப்படுத்துவதற்கு அட்டவணைப்பணி பெரிதும் உதவுகிறது எனலாம்.
            பல பொருண்மை கொண்ட ஓலைச்சுவடிகள் ஓரிடத்தில் இருக்கும்போது அவற்றைப் பொருள் பாகுபாட்டின் அடிப்படையில் பிரித்து வைத்தலும், அவற்றைப் பயன்படுத்தலும் எளிமையாக இருக்க வேண்டுமாயின் அட்டவணைப்படுத்தப்பட்டிருத்தல் அவசியம். 
            பழங்காலத்தில் புலவர் வீடுகளில் தனித்தனியாக அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்த ஓலைச்சுவடிகள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள அவற்றிற்கு முகப்பில் தொடர் எண்ணிட்டும் பெயரிட்டும்  அடையாளப்படுத்தி வைத்திருப்பர்.  ஒரு சுவடிக்கட்டில் பல நூல்கள் இருக்கும்போது முகப்பில் அமைந்திருக்கும் ஏட்டில் அக்கட்டிற்குள் இடம்பெற்றிருக்கும் நூல்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதிவைத்திருப்பர்.  இப்பணியிலிருந்தே ஓலைகளில் அட்டவணைப்படுத்தும் பணி தொடங்கியது எனலாம். 
மருத்துவர் வீட்டில் மருத்துவச் சுவடிகளும், புலவர் வீட்டில் இலக்கண இலக்கியச் சுவடிகளும், சோதிடர் வீட்டில் சோதிடச் சுவடிகளும், மந்திரவாதி வீட்டில் மாந்திரீகச் சுவடிகளும் இருந்த நிலை என்பது, அவ்வவர்கள் நித்தம் சுவடிகளைப் பயன்படுத்தியவர்களே யாவர்.  இதனால் அவர்களுக்கு அச்சுவடிகளில் இருக்கும் பொருண்மைகள் எளிதில் புலப்படும்.  ஆனால், அச்சுவடிகள் பற்றி அறியாதவர்கள் அவற்றை அடையாளங்காண வேண்டுமாயின் பயன்படுத்தியவர்கள் அடையாளப்படுத்தியிருக்க வேண்டும்.  அவ்வாறு அடையாளப்படுத்துவதே அட்டவணை ஆகும்.
பிற்காலத்தில் சுவடியைப் படிக்கும் பழக்கமும் பயன்படுத்தும் வழக்கமும் குறையத் தொடங்கிய காலத்தில் அவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.  அவ்வாறு காதுகாக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சில அமைப்புகள், நிறுவனங்கள், மன்னர்கள் தமிழரின் அடையாளங்களைத் தொகுக்கத் தொடங்கி ஓலைச்சுவடி நூலகங்களை உருவாக்கிப் பாதுகாத்தனர்.
பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஓரிடத்தில் சேர்த்துப் பாதுகாத்து வந்தாலும், அவை பயன்பாட்டில் இல்லாது போனால் அழிந்துவிடும் என்ற நிலை உருவானது.  அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அவற்றைப் பற்றிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவிக்க உருவாக்கப்பட்டதே அவ்வவ் நூலக அட்டவணைகள்.  ஓலைச்சுவடியைப் பொருத்தவரை பல்வகைப்பட்ட அட்டவணைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
அட்டவணை வகைகள்
            ஓலைச்சுவடி அட்டவணைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1.    தற்காலிகச் சுவடி அட்டவணை
2.    சுவடிப்பெயரட்டவணை
3.    சுவடி அட்டவணை
4.    சுவடி விளக்க அட்டவணை
5.    சுவடிப் பேரட்டவணை
எனப் பாகுபடுத்தலாம்.
1.         தற்காலிகச் சுவடி அட்டவணை
            பல்வேறு இடங்களில் இருந்து தொகுத்து வரப்பெற்ற ஓலைச்சுவடிகள் ஓரிடத்தில் வந்தவுடன் அவற்றைச் சுத்தம் செய்து, அவற்றில் உள்ள நூற்பெயர், நூற்பெயர் இல்லாது போனால் செய்திகளின் அடைப்படையில் வரிசை எண் கொடுத்து தற்காலிகமாகப் பதியப்படுவது தற்காலிகச் சுவடி அட்டவணை எனப்படும்.  இத்தற்காலிகச் சுவடி அட்டவணை சுவடிப்பெயரட்டவணை, சுவடி விளக்க அட்டவணை, சுவடிப்பேரட்டவணை தயாரிக்கும் வரை பயன்படுத்தப்படுவதாகும்.  இத்தற்காலிகச் சுவடி அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூற்பெயர், நூலாசிரியர் பெயர், பொருண்மை போன்றவை நுணுகி அட்டவணைப்படுத்தும்போது மாற்றத்திற்குரியனவாகும்.
2.         சுவடிப்பெயரட்டவணை
            சுவடிகளைப் பெயரளவில் தெரிவிப்பது சுவடிப்பெயர் அட்டவணை ஆகும்.  இது ஏறக்குறைய தற்காலிகச் சுவடி அட்டவணை போன்றதென்றாலும் நூற்பெயர், ஆசிரியர் பெயர், பொருள் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டிருப்பதாகும்.  ஒரு சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளை அடையாளப்படுத்தி எடுப்பதற்கு இவ்வகைப்பட்ட சுவடிப்பெயரட்டவணை மிகுந்த உதவி புரியும். சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளின் நூற்பெயர், ஆசிரியர் பெயர், நூற்பொருண்மை என்ற முறையில் தனித்தனியே அகரவரிசைப் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருப்பின் பயன்படுத்துவோர் எளிதில் தங்களுக்குத் தேவையானதை உடனடியாக அடையாளப்படுத்தி பயன்படுத்த முடியும்.
3.         சுவடி அட்டவணை
            மேலது சுவடிப்பெயரட்டவணையுடன் சுவடியின் அளவு (நீளம், அகலம்), ஏடுகளின் எண்ணிக்கை, நிறை/குறை, தன்மை (நல்லநிலை, சுமாரான நிலை, பழுதுற்றநிலை, மிகப்பழுதுற்ற நிலை) போன்ற குறிப்புகள் மட்டும் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பது சுவடி அட்டவணை.
4.         சுவடி விளக்க அட்டவணை
சுவடி அட்டவணைக் குறிப்புகளை மேலும் விளக்கம் தருவதாக அமைப்பது சுவடி விளக்க அட்டவணையாகும்.  இச்சுவடி விளக்க அட்டவணையில் நூலகக் குறிப்புகள், நூல் விவரம், தோற்றக் கூறுகள், சிறப்புச் செய்திகள், பிற செய்திகள் போன்றன இடம்பெற்றிருக்க வேண்டும்.
நூலகக் குறிப்புகள் என்ற பகுதியில் நூலின் வரிசை எண், சுவடி எண், பொருட்பகுப்பு எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நூல் விவரம் என்ற பகுதியில் நூற்பெயர், நூலாசிரியர் பெயர், பொருள் (பாட்டும் தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு, இலக்கணம், மெய்கண்ட சாத்திரம், தத்துவம், சைவத்திருமுறை, பிறதோத்திரங்கள், காப்பியம், தலபுராணம், உரைநடை இலக்கியம், சிற்றிலக்கியம், நாட்டுப்பாடல், மருத்துவம், சோதிடம், மாந்திரீகம், நீதிநூல், பல்வகை நூல்கள், திவ்வியப்பிரபந்தம்), வடிவமும் அளவும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சுவடியின் தோற்றக் கூறுகள் என்ற பகுதியில் ஏடுகளின் எண்ணிக்கை, ஏடுகளின் நீளம் மற்றும் அகலம், எழுதப்பட்டுள்ள நிலை (ஒரு பக்கம் எழுதப்பட்டுள்ளதா? இருபக்கம் எழுதப்பட்டுள்ளதா?), ஒரு பக்கத்திற்கு எழுதப்பட்டுள்ள வரிகளின் எண்ணிக்கை, கையெழுத்து நிலை (தெளிவு, சுமார், கிறுக்கல்), சுவடி முழுமையா அல்லது குறையா போன்ற செய்திகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
சுவடியின் சிறப்புச் செய்திகள் என்ற பகுதியில் நூலின் தொடக்கப்பகுதி, நூலின் இறுதிப்பகுதி, நூலுக்கு முன்னுள்ள முற்குறிப்புச் செய்திகள், நூலுக்குப் பின்னுள்ள பிற்குறிப்புச் செய்திகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பிற செய்திகள் என்ற பகுதியில் மேலது செய்திகள் தவிர குறிப்பிடத்தக்க செய்திகள் அந்நூலைப் பற்றித் தெரிவிக்க வேண்டியிருப்பின் அவற்றைப் பிற செய்திகள் என்ற இப்பகுதியில் சேர்க்க வேண்டும்.  குறிப்பாக, ஒரு சுவடியின் தொடக்கத்தில் மருத்துவச் செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்து, இடையில் சில மாந்திரீகச் செய்திகளைச் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் மருத்துவச் செய்திகளைக் கூறியிருப்பின், அவ்வகைப்பட்ட சுவடிகளைப் பற்றி அட்டவணைப்படுத்தும்போது, மாந்திரீகச் செய்திகளை அட்டவணைப்படுத்த முடியாது.  அவ்வாறமைந்தவற்றைப் பிற செய்திகள் என்ற பகுதியில் இடையிடையே மாந்திரீகச் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற குறிப்பினைத் தருவதாகும்.
5.         சுவடிப் பேரட்டவணை
சுவடிப் பேரட்டவணை என்பது சுவடி அட்டவணை போன்றதே ஆகும்.  சுவடி அட்டவணை என்பது ஒரு சுவடி நூலகத்தில் உள்ளதை மட்டும் எடுத்துரைப்பது.  சுவடிப் பேரட்டவணை என்பது பல்வேறு சுவடி நூலகங்களில் உள்ளதை ஒன்றுபட எடுத்துரைப்பதாகும். 
மேலது அட்டவணை வகைகள் எல்லாச் சுவடி நூலகங்களிலும் தேவை கருதி தயாரித்திருக்கின்றனர்.  ஆனால், சுவடிப் பேரட்டவணையைத் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமே இதுவரை செய்திருக்கிறது. 
உலகெங்கிலும் உள்ள 46  நூலகங்களில் உள்ள தமிழ்ச்சுவடிகளின் பெருந்தொகுப்பாக இவ்வட்டவணை அமைந்திருப்பதால் இதனைச் சுவடிப் பேரட்டவணை எனலாம்.  ஐந்து தொகுதிகளால் ஆன இப்பேரட்டவணை முதல் தொகுதி முதல் நான்கு தொகுதி வரை 21972 சுவடிகளுக்கான குறிப்புகள் பொருண்மை அடிப்படையில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  ஐந்தாவது தொகுதி இந்நான்கு தொகுதியில் இடம்பெற்றிருப்பதின் அகரவரிசை தரப்பட்டுள்ளது.
இவ்வாறான இவ்வட்டவணைகள் தயாரிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் பலப்பல.  அவ்வாறு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அச்சிக்கல்களைத் போக்கும் முறைகள் பற்றியும் இனிக் காண்போம்.
சிக்கல் தோன்றும் முறைகள்
Ø  பயன்பாடற்ற நிலையில் பல இடங்களில் உள்ள சுவடிகள் கட்டவிழ்ந்து ஒன்றோடொன்று கலந்த நிலை.
Ø  கட்டவிழ்ந்த சுவடிகளை முறைப்படுத்தும்போது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. 
v     நீளஅகலம் ஒன்றாகவிருந்து….
·                  கையெழுத்து மாறுபடல்
·                  துளைகள் மாறுபடல்
·                  வரிகள் மாறுபடல்
·                  பத்திகள் மாறுபடல்
·                  ஓலைகளின் பழமை மாறுபடல்
·                  செய்யுள் மற்றும் உரைநடை மாறுபடல்
Ø  பாகப்பிரிவினையால் ஒரு சுவடியைப் பிரித்துக் கொள்ளுதல்.
Ø  ஒரு கட்டுக்குள் பல நூல்கள் இருக்கும்போது ஏட்டெண் தொடரேட்டெண் இல்லாமல் நூலேட்டெண் மட்டும் இடப்பட்டிருத்தல்.
Ø  நூலேட்டெண் இல்லாத பலநூற் கொண்ட சுவடி.
o   யாப்பு ஒன்றாக இருந்து ஒரே ஆசிரியரின் வெவ்வேறு நூற்பாடல்கள் கலந்திருத்தல்.
o   யாப்பு ஒன்றாக இருந்து வெவ்வேறு ஆசிரியர்களின் வெவ்வேறு நூற்பாடல்கள் கலந்திருத்தல்.
o   நூற்பொருண்மை ஒன்றாகவிருந்து நூல் வேறுபடல்.
o   நூலுக்கிடையில் ஏடு இல்லாமை.
o   உரைநடை, செய்யுள் கலந்த ஏடு கொண்ட சுவடி.
Ø  ஒரே நீள அகலங்கொண்ட சுவடிகள் ஒன்றாகக் கலந்திருத்தல்.
Ø  ஏட்டெண்ணோ தொடரேட்டெண்ணோ இல்லாமல் இருத்தல்.
Ø  ஒரே வகையான யாப்பமைப்பு கொண்டு, இடையேடு விடுபட, அவ்விடத்திருக்கும் ஏட்டில் புதியதொரு நூல் தொடங்குதல்.
Ø  முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புக் காலக்குறிப்புக்களால் ஏற்படும் சிக்கல்கள்.