சங்க காலத்தை இயற்கை நெறிக்காலம் எனக் கூறுவது மரபு. அக்கால மக்கள் தம் அகவாழ்வையும், புறவாழ்வையும் இயற்கையோடு இணைவாகவே அமைத்துக் கொண்டனர் என்பதே சங்க இலக்கியச் செய்தி. இயற்கை நெறிப்பட்ட வைத்தியக் கோட்பாடுகள், மருத்துவ முறைகள், அவற்றின் மீதான நம்பிக்கைகள், மருத்துவ அறிவு என்ற பல்வேறு விஷயங்கள் சங்க இலக்கியங்களின் ஊடாகப் பெறப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் மருத்துவம் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் என்ற பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் யாவும் வைணவப் பெயர்களாகவே
உள்ளன. சங்கப் புலவர்களில் வான்மீகி,
இடைக்காடர், தேரையர், ஐயாதிச்
சிறுவெண்தேரையர், மூலர், வள்ளுவர்,
சல்லியங்குமரனார் போன்றவர்கள் பெயர்களும் காணப்படுகின்றன. உள்ளத்தில் ஏற்படும் நோயைச் சிறப்பாகப் பாடிய
புலவர் ‘நோய் பாடியார்’ எனப்பட்டார்.
சங்க இலக்கியங்களில் பல தொகை நூல்களாகவும், சில தனி நூல்களாகவும் விளங்குகின்றன.
அகநானூறு, புறநானூறு என்பன 400
பாடல்களைக் கொண்ட தொகை நூல்கள்.
பத்துப்பாட்டில் வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டு, நக்கீரரின்
நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை என்பன தனி
நூல்களாகும்.
இம்மரபை ஒட்டியே சித்த மருத்துவ நூல்கள்
எழுந்துள்ளன. பதினெண் சித்தர் நாடி
சாத்திரம்,
சில்லரைக் கோவை, 18 சித்தர் பெரிய ஞானக் கோவை
என்பன தொகை நூல்கள். அகத்தியர் 12000,
போகர் 7000, யூகி முனிவர் 1200 என்பன தனிப் பெயரிலான நூல்களாகும்.
இவ்வாறு தொகை நூல்களாகவும் தனிப் பெயரிலமைந்த நூல்களாகவும் சித்த மருத்துவ
நூல்கள் அமைந்திருக்கின்றன.
மருத்துவர்கள் மட்டுமின்றி புலவர்களும், நிலம், நீர், நெருப்பு,
காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின்
இயல்புகளையும் நன்கு அறிந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.
“நிலம், நீர் விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம்
உலகம்”
என்று
தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா இவ்வுடம்பு ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட பிண்டம்
என்பது தொல்காப்பியரின் கோட்பாடாகும்.
ஐம்பூதங்களின் இயல்புகள் அவற்றின் அமைப்புகள் என்பன பற்றிச் சங்க காலப்
புலவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை,
“மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”
என்ற
புறநானூற்றுப் பாடல் வரிகள் விளக்குகின்றன.
சங்க இலக்கியங்களில் போரும் வீரரும் பற்றிய
செய்திகள் பேசப்படும் அதே வேளையில் போர்க் களத்திற் படுகாயமுற்றோர் பற்றிய
வர்ணனைகளும் இடம்பெறவே செய்கின்றன. எனவே
காயப்பட்டோருக்குரிய இரண சிகிச்சை முறைகளும் அக்காலத்தில் இருந்திருக்கும்
என்பதில் ஐயமில்லை. “ஊனுக்கு ஊனிடல்” என்ற
பழமொழியும் ஈண்டு நினைவு கொள்ளத் தக்கதாகும்.
பண்டைய நாளில் இரண சிகிச்சை முறைகளில் மருந்து
மரங்களின் பட்டை,
பால், இலைச்சாறு முதலியவற்றினால் பெறப்படும்
மருந்துகளும் பயன்படுத்தப்பட்டன.
புறநானூற்றில் இது பற்றியதொரு குறிப்பு காணப்படுகிறது.
“இரும்புச் சுவைகொண்ட விழுப்புண் நோள்தீர்த்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி மயங்கிய யாக்கையன்”
எனும்
பாடலில் பட்டை,
பால் என்பன எடுப்பதற்காக வெட்டப்பட்ட மருந்து மரத்தின்
தோற்றத்திற்கும் பகை மறவரின் இரும்பாயுதங்களாற் பதம்பார்க்கப்பட்ட உடம்பினை
ஒப்பிடுகிறார் இப்புலவர்.
சங்க காலத்தில் மருந்தை
“வாயுறை” என்றனர். வாயுறை என்பது வாய்
வழியாகச் செலுத்தப்படும் மருந்து. உணவு
செரிப்பதை “அறுதல்” என்றும், வாதத்தை “வளி” என்றும், மருத்துவரைத் “தீர்ப்பான்” என்றும், மருத்துவர்க்கு
உதவியாக உடன் இருப்பவரை “உழைச்செல்வோன்” என்றும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.
தமிழர்கள் மனிதனுக்குத்
துயரத்தைக் கொடுக்கும் அனைத்தையும் நோயாகக் கருதினர். கலித்தொகையில் சில நோய்கள்
சுட்டப்படுகின்றன. அவற்றில் ஒன்று குட்ட
நோய். குட்ட நோயாளர்கள் காம நோய்
மிக்கவர்கள் என்ற குறிப்பும், கை கால்கள் குறைவதும், நிறம் மாறுவதும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளமை ஆச்சரிய மூட்டுவதாகும்.
‘ஒற்றடம்’ என்பது
புறமருந்துகளில் ஒன்றாகச் சித்த மருத்துவத்தில் உள்ளது. இம்முறையைப் பற்றிய செய்தி,
“.
. . . . . . . . . . . முயங்கிப்
பொதிவே,
முயங்கிப் பொதிவே முலைவேதின் ஒற்றி”
என்ற
கலித்தொகைப் பாடலில் வருவதைக் கொண்டு சித்த மருத்துவத்தின் பழமையை அறிய முடிகிறது.
மேலும் சங்க
இலக்கியங்களில் பசியினைப் பிணி என்றே கூறுகின்றனர். மருந்து மரம் அனைவருக்கும் உதவவல்லது. அதன் இலை, பூ, காய், பட்டை, வேர் முதலியன
அனைவருக்கும் பயன்படுவது. ஒப்புரவாளனை
இம்மரத்தோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
“வருந்திய செல்லல்
தீர்ந்த திறனறி
ஒருவன் மருந்தறை கோடலின் கொடிதே”
என்கிறது
கலித்தொகை. மருத்துவன் மருந்தை மறைத்தல்
ஆகாது. நோயுற்றார்க்கு உதவுவதே கடமையென
உணர்தல் வேண்டும். அங்ஙனம் இல்லாதல் பாவமாகக் கருதப்பட்டமையை மேற்கண்ட பாடல்
வரிகள் உணர்த்துகின்றன.
அதியமான் அடைதற்கு அரிதான
உயர்ந்த மலையின் உச்சி முடிவிலிருந்து பறித்துக் கொண்டு வரப்பெற்ற நெல்லிக்கனியை
ஔவைக்குப் பரிசாகக் கொடுத்தான்.
நெல்லிக்கனியின் மகத்துவத்தை அறிந்ததால் மருத்துவ நூல்கள் நெல்லிக்கனியை
“நல்வாழ்வுக்கனி” எனக் கூறுகின்றன.
பிளைனி என்னும் அறிஞர்
மிளகினை “இந்திய மருந்து” என்றார். இஞ்சி,
மஞ்சள், மிளகு போன்ற மூலிகைகளைப் பற்றி
எண்ணற்ற மருத்துவக் குறிப்புகளை இலக்கியங்கள் கொண்டுள்ளன. திருக்குறளில் மருத்துவம் பற்றிய கருத்துக்கள்
“மருந்து” என்னும் தலைப்பில் 95ஆவது அதிகாரம்
அமைந்துள்ளது.
இதில் நோய் வகைகள், அவை வரும்
வழிகள், அவற்றை நீக்கும் வழி முறைகள், மருந்தின்
வகைகள் ஆகியன பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளி முதலானவைகளால் அதிகம், குறைவு காரணமாகவே நோய் தோன்றும் என்பர்.
அடுத்து வரும் குறட்பாக்களில் நோய் வராமல் தடுக்கும் உணவு முறைகளும்,
கடைசி மூன்று பாடல்களில் மருத்துவர்களின் கடமை பற்றிய செய்திகளும்
உள்ளன. இவை இன்றும் பொருத்தமானவைகளாகவே
இருக்கின்றன.
கண்டங்கத்தரி வேர்,
சிறுவழுதுணைவேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்பன
‘சிறுபஞ்சமூலம்’ எனப்படும். இவ்வகை
வேர்கள், உடல் நலத்தைக் காக்கும். அறவழிப் பாடல்கள், சமுதாயத்தைத்
தீங்கிலிருந்து நீக்கி இன்பமயமாக்கும் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது.
‘திரிகடுகம்’ என்பது
சுக்கு, மிளகு, திப்பிலி
என்பதாகும். இவற்றைக் கொண்டுள்ள
மருந்துகளால் உடல் பயனடைவது போல, இந்நூலால் மக்கள் பயனடைவர்.
ஏலக்காய், உடலில் உள்ள செரிமானத்தைத் தூண்டும் பொருளாகும். இதை அடிப்படையாக உள்ள மருந்து போல ‘ஏலாதி’ என்ற
நூலும் சமுதாயத் தீங்குகளை நீக்கும்.
இவையாவும் சமணர்களால்
இயற்றப்பட்டவையாகும். பொதுத் தொண்டாற்றிய
சமணர்கள் மருத்துவத்தை அறமாகக் கருதிச் செயல்பட்டனர். ‘ஔடதானம்’ என்று மருந்துகளை வழங்குவது
அவர்களின் அடிப்படைச் சமயக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
திருமூலர்
திருமந்திரத்திலும் மருத்துவத்தைப் பற்றிக் கூறியுள்ளது பக்தி இலக்கியத்துள்
பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் திருமந்திரம் மக்களுக்குத் தேவையான பல பொது
மருத்துவக் குறிப்புக்களைக் கூர்ந்து பார்க்கும்போது திருமூலரின் மருத்துவ நுட்பம்
புலப்படும்.
திருமந்திரம் இரண்டாம்
தந்திரத்தில் அகத்தியர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
‘கர்ப்பக் கிரிகை’ என்னும் தலைப்பில் குழந்தைப்பேறு பற்றிய செய்தி
இடம்பெற்றுள்ளது. இதில் கருவில் ஏற்படும்
பல்வேறு நோய்கள் கூறப்படுகின்றன. மந்தன்,
ஊமை, பார்வை இல்லாமல் பிறத்தல், அலி என்ற பிறவி ஊனங்கள் கருவிலேயே ஏற்படுவதாகவும், கலவியின்
போது ஏற்படும் மூச்சுக் காற்றே இதற்குக் காரணம் என்றும் விளக்கியுள்ளார். மேலும், இருமல், சோகை, ஈளை, வெப்பு, உருமும் இடி போன்ற நாமுரோணி கழலை என்பன பற்றியும் கூறுகின்றார். மேலும் கழலை, சிரங்கு,
குட்டம், வாதம், கூனல்,
முடம், வீக்கம் என்பன பற்றியும்
கூறுகின்றார். இதுவும் தனஞ்சயன் என்ற
காற்றால் ஏற்படும். தனஞ்சயன் என்ற
வாயுவின் அளவு 224 அளவாக இருத்தல் வேண்டும். 10 வாயுக்களில் தனஞ்சயன்
ஒன்பதாவதாக இருக்கும். காய கற்ப முறைகள்
பற்றியும் வருகின்றன. இதில் சரப்
பயிற்சியானது முதலிடம் பெறுகின்றது.
அமுரிதாரணை என்ற பிரிவில் ‘சிவநீர் பருகில் ஓராண்டு ஊனம் வராது’ என்று
தடுப்பு மருத்துவம் பற்றியும் விளக்குகின்றார்.
100 எண்ணிக்கை மிளகு, சிவநீர்
என்ற இவற்றைக் கலந்து அருந்தினால், மயிரானது விழுந்து
மீண்டும் கருமை நிறமாக முளைக்கும். மிளகு,
நெல்லி, மஞ்சள், வேம்பு
இவற்றைப் பயன்படுத்த உடல் இறுகும் என்றெல்லாம் தன்னுடைய திருமந்திரத்தில்
திருமூலர் சித்த மருத்துவத்தை எடுத்துக்காட்டி இருக்கின்றார்.
கண்ணில் வரும் கண்
புரைக்கும் மற்றும் புள்ளி வழுதலுக்கும், வாயுக்களுக்கும்
தொடர்பு இல்லை என்று கூறும் திருமூலர்,
“கண்ணில் கூர்மன்
கலந்திலன் ஆதலால்
கண்ணில் சோதி கலந்ததும்
இல்லையே”
என்பதிலிருந்து
கண்ணிடம் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிடில் கண்ணில் நோய் உண்டாகி ஒளியும் இல்லாமல்
போய்விடும் என்று மருத்துவ நோக்கில் கூறியுள்ளதைக் காணலாம். மேலும் மனத்தால் இயங்குபவனே மனிதன். அட்டாங்க யோகத்தினை மேற்கொண்டால் மனிதன் உள்ளம்
பண்பட்டு ஆரோக்கியமான உடலினைப் பெறலாம் என்பது திருமந்திரத்தின் கூற்றாகும்.
நந்தி தேவரின் மாணவரான திருமூலர் உயிரின் இயக்கம்
பற்றியும்,
மூலாதார சக்திகள் முதலான செய்திகள் பற்றியும் மருத்துவ நோக்கில்
கூறியுள்ளார்.
தமிழில் உள்ள 96 வகைச் சிற்றிலக்கியங்களில் சித்த மருத்துவம் பற்றிய செய்திகள் பல
உள்ளன. எடுத்துக்காட்டாக, குறவஞ்சி இலக்கியத்தில் மலையில் உண்டாகும் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும்,
கலம்பகத்தில் சம்பிரதம் சித்து என்ற பிரிவும், பள்ளு இலக்கியத்தில் வசிய மருந்துகளும் வருகின்றன. மேலும் சித்தர்கள் வரலாறும் பல நூல்களில்
காணப்படுகின்றன. முத்தானந்தர் ஞானக்
குறவஞ்சியில் ஆனந்தர், கவசை சித்தர், சதாசிவ
குரு, சித்தாதி சித்தர், சிவயோக முனி,
துதிக்கை முனி, நவகோடி சித்தர், நவநாத சித்தர், வயிரவர், மச்சமுனி,
போகர், சட்டைமுனி, கொங்கணர்,
திருமூலர், பிரமமுனி, நந்தீசர்,
கோரக்கர், இடைக்காடர், கமலமுனி,
காக்கை முனி, தன்வந்திரி, கும்பமுனி, தேரர், கொங்கண
சித்தர் ஆகிய சித்தர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
முத்தானந்தர்
ஞானக்குறவஞ்சி, கந்தசாமி காதல், சிதம்பரக்
குறவஞ்சி ஆகிய நூல்களில் சித்த மருத்துவ நூல்களில் கூறப்படாத பல அரிய மூலிகைகள்
காணப்படுகின்றன. அவைவருமாறு:
வியல்மூலி, மருசேந்தி, சீமர்மூலி, கவுரி, வெள்ளைச்சாரை,
சாகாதமூலி, திருவாரை, சஞ்சிவிப்பாலை,
வெண்மிருகமூலி, ஓரிதழ்த்தாமரை, பாலை, கருவேலி, கொடிவேலி,
பாம்பை, வெள்ளி, விலை,
மயிப்பூட்டு, செந்தலாக்கு, பொருசன், பயிரன், பாராட்டன்,
தரிசனவேதி, பரிசனவேதி, நவதள
வில்வம்.
இம்மூலிகைகள் விளையும் மலைகளாக அத்தகிரி, அறிவின்மலை, அழகர்மலை, ஆறுமலை,
கயிலை மலை, சோமசிரிமலை,
ஆனைமலை, இளையகிரி, உதயகிரி,
கண்டமலை, தம்பிரான்மலை, திருமலை,
திருவண்ணாமலை, துரகமலை, தோகமலை,
நாகமலை, நீலகிரி, மகாமேரு,
மணமூர்த்திமலை, மேகமலை, மோட்சகிரி,
வெள்ளகிரி ஆகிய மலைகளின் பௌர்களும் காணப்படுகின்றன.
மூலிகைகளால் இளமை பெறலாம் என்ற செய்தியும், காய கற்பம் பற்றிய கருத்துக்களும் சிற்றிலக்கியங்களில் வருகின்றன. கஞ்சமலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கொங்கு
மண்டல சதகம் விளக்குகின்றது.
ஆசிரியருக்காக மாணவன் உணவு சமைக்கின்றான்.
உணவு கருப்பு நிறமாக இருக்க, வேறு உணவை ஆக்கும்
முன்னர் அதை உண்ணுகின்றான். இளமையை
அடைகின்றான். இதை அறிந்த ஆசிரியர் வாந்தி
செய்யச் செய்து, எச்சில் சோற்றை உண்ணுகின்றார். அவரும் இளமை பெறுகின்றார் என்பதான ஒரு
நிகழ்ச்சி கொங்கு மண்டல சதகத்தில் வருகின்றது.
நோய்கள் ஏற்படும் வழிகள் சிற்றிலக்கியங்களில்
கூறப்படுகின்றன. குமரேசர் சதகத்தில்
கல்லினால்,
மயிரினால், மீதூண் விரும்பலால், கடுவழி நடக்கையால், மலசலங்கள் அடக்குதலால், கனி பழங்கறி உண்ணலால், நெல்லினால், உமியினால், உண்டலால், மூழ்கலால்
நோய்கள் உண்டாவதையும் உணவு பற்றிய கெடுதல்களையும் காணமுடிகிறது. மேலும், உறக்கமில்லாமை,
மன உளைச்சல், பனிக்காற்று, மாசடைந்த நீரைப் பருகுதல், இள வெளியிலில் காய்தல்,
மிகு கலவி, அதிகமான சுமையைத் தூக்குதல்,
இரவில் தயிர் ஊற்றி உண்ணல் போன்ற செயல்களும் நோய்கள் தோன்றக்
காரணங்களாகும் என்பர்.
குட்டநோய், பெருநோய், வாதம், குன்ம நோய், முற்றி
சலநோய், கண்ணோய், முயலகன், முடநோய், ஐயம், படுகசம்,
குன்மம, பன்மூலம், அகற்றி
மெய்யில், ஐ அம்படும் சகம்போல வலியீந்து, இடுமருந்து, அதில் சேரும் மருந்துச் சரக்குகள்,
புலித்துடரி, பேய்த்துடரி, நெல்லி, மேல் கொத்தான், மலைகலக்கி,
கோபுரம் தாங்கி, ஆண்துடரி, பெண்துடரி, கற்றாழை, நன்னாரி
வேர், பெரியா நங்கை, சிறியா நங்கை,
செந்நாயுருவி, தேள்கொடுக்கு, ஆனைவணங்கி, முரட்டு ஆள் வணங்கி, பேய் வணங்கி, பூனைவணங்கி, புலி
வணங்கி, கஞ்சா, மிளரகணை, தொட்டால் சுணுங்கி, துடமுறுக்கி, சலந்திரட்டி, நின்று சிணுங்கி, பொன் ஊமத்தை, நிலம் புரண்டி, நீர்மேல்
நெருப்பு, புலம்பி, அழுகண்ணி, வாதமடக்கி, முடக்கொத்தான், தொழுகண்ணி,
துளசி, வெதுப்படக்கி, பேய்மிரட்டி,
வேலி, பாசி ஆகிய மூலிகைகளின் பெயர்கள்
பேரூர்ப் புராணம், நாகையந்தாதி, சிதம்பரேசுரர்
விறலிவிடுதூது ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
சித்தர்கள்
“சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்திமுதல் முப்பத் தாறே”
என்று
கூறும் திருமூலரின் வாக்குப்படி சித்தர் என்போர் இப்பிறவியிலேயே சிவ லோகத்தைக்
கண்டுகளித்தவர்கள் ஆவர். என்றும் நிலையாக வாழ்பவர், குற்றம் இல்லாதவர், நல்வினை
தீவினைகளிலிருந்து நீங்கியவர், மேலான முக்தியை அடைந்தவர்கள்,
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த பெருமையை உடையவர்கள் ஆவார்கள்.
மேலும் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள், பேறு
பெற்றவர்கள், வீட்டின்பம் அடைந்தவர்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
“சித்” என்றால் அறிவு
எனப்படும். சித்தை உடையவர்கள்
“சித்தர்கள்”. அறிவு படைத்தவர்கள்
“அறிஞர்”, நுண்ணறிவு படைத்தவர்கள் “மெஞ்ஞானிகள்” என்றும்
கூறலாம்.
இறைவனைக் காண முயல்பவனைப்
பக்தர் என்றும், கண்டு தெளிந்தவரைச் சித்தர்
என்றும் தேவாரம் பாகுபடுத்திக் காட்டுகிறது.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றுள் சித்தம் எனப்படுவது எண்ணியதைத் திண்ணமாக
முடிப்பது. இறைவனை அடைந்தே தீருவது என்பது
வைராக்கியம். “சித்தமாம் வைராக்கியத்தில்
சித்து” எனப்படும் உணர்வுடன் கூடி இறையனுபவத்தில் திளைப்பவர்களே சித்தர்கள்
எனலாம்.
நம் நாட்டில் அநேக
சித்தர்கள் இருப்பினும் பதினெண் சித்தர்களைச் சிறப்பித்துக் கூறுவதைக்
காணலாம். பதினெண் சித்தர்களின் பெயர்கள்
வித்தியாசப்படுகின்றன. இடைச்செருகல்
காரணமாக பதினெண் சித்தர்கள் இவர்கள்தான் என்று அறுதியிட்டுக் கூற இயலாதவாறு
உள்ளனர். கருவூரார் பலதிரட்டில்
கூறப்பட்டுள்ள பதினெண் சித்தர்கள் பற்றிப்,
“பார்த்திடவேநந்தீசர்
மூலத்தீசர்
பண்பானஅகத்தீசர்
சட்டைநாதர்
போர்த்திடவேபதஞ்சலியும்
ஊனர்கண்ணர்
கோரக்கர்
கமலமுனி சண்டிகேசர்
கூர்த்திடவேஇடைக்காடர்
சிவாயசித்தர்
கொங்கணவர்
தந்தையவர் போகநாதர்
காத்திடவேமச்சமுனி
பிண்ணாக்கீசர்
காலாங்கி
சுந்தரரும் காப்புத்தானே”
என்ற
காப்புப் பாடலால் கருவூரார் குறிப்பிடும் பதினெட்டுச் சித்தர் பெயர்களை
அறிகிறோம். அபிதான சிந்தாமணி, அகத்தியர், போகர், கோரக்கர்,
கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர்,
நந்தி, கூன்கண்ணர், கொங்கணர்,
மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி,
கமலமுனி, இடைக்காடர், பிண்ணாக்கீசர்,
சுந்தரானந்தர், ரோமரிஷி, பிரம்மமுனி ஆகியோர்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு வெவ்வேறு விதமான பதினெண் சித்தர்களின்
பெயர்களைக் குறிப்பிடுவதால் பதினெண் சித்தர்கள் யார் என்பதை உறுதியாகக் கூற முடியாத
நிலை உள்ளது. இருப்பினும் இவர்கள்
எல்லோரும் சித்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு இலக்கியம் மற்றும்
மருத்துவச் சான்றுகள் கிடைக்கின்றன.
சித்தத்தைப் பண்படுத்தி,
தன்வயப்படுத்தி, ஆட்கொண்டு, மனோ சக்தியைப் பெரிய அளவில் ஊக்குவித்து, சித்தத்தால்
அடைய வேண்டியவற்றையும் அடைய வல்லவர்கள் “சித்தர்கள்” ஆவர். காய கற்பங்கள் உண்டு சமாதி நிலையில் நின்று
மாறா இளமையையும், அழியா உடலையும், எல்லையற்ற
மனோ சக்தியையும் பெற்றவர்கள், எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த “இறையாப் பெருவாழ்வு” வாழ்பவர்கள்.
சித்த
மருத்துவம்
இயற்கை சக்திகளை மனோ
பலத்தால் கட்டுப்படுத்தி சித்துக்கள் விளையாடுபவர்கள் சித்தர்கள். அச்சித்தர்களால் உருவாக்கப்பட்டதுதான் “சித்த மருத்துவம்”. சித்த மருத்துவமே பார்வதி பரமசிவன் மூலமாக
நந்திக்குச் சொல்லப்பட்டு நந்தி மூலமாகத் திருமூலர் பெற்றதுதான் என்று புராணக்கதை
ஒன்று உண்டு. மேலும் சித்த மருத்துவ
முறையை இறைவன் (சிவன்) உமாதேவிக்கும், உமாதேவி முருகனுக்கும்,
முருகன் நந்திக்கும் முறையே உபதேசிக்க, நந்தி
மூலம் சித்தர்களுக்கு உரைக்கப் பெற்றது என்றும் கூறுவர்.
இவ்வாறாக பரப்பப்பட்ட சித்த மருத்துவம்
சித்தர்களிடையே பரவலாகக் காணப்பட்டு சித்தர்களினாலே சித்த மருத்துவம் தோன்றியது
எனலாம்.
தமிழிலக்கியச் செய்திகளினூடாகச் சித்த மருத்துவ
வரலாற்றை முன்னோக்கிப் பார்க்கும் போது பல்லவர் காலம் முதல் வடமொழி மூலமாகச் சித்த
மருத்துவக் கலை பேணப்பட்டதாக அறியலாம்.
பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் சங்கத மொழியே
ஆட்சி மொழியாக இருந்தது. பிராமணரே
கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டனர்.
இவ்வித காலப் பகுதிகளிற் சங்கத மொழி மூலமே சித்த மருத்துவக் கலை வளர்ச்சி
பற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. பிராமண
ஆதிக்கம் வலுக்குன்றிய போது, தமிழ்ச் சித்தர் பரம்பரை 12ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழர் சமூகத்தில் செல்வாக்குப் பெறுவதைத்
தமிழர் சமூக வரலாறு எடுத்தியம்புகிறது.
எனவே தமிழ்ச்
சித்தர் காலத்துடன் சித்த மருத்துவம் தமிழ்மொழி மூலமாக வளர்ச்சி
பெறுவதாயிற்று. சித்தர் பாடல்களிற் சங்க
மொழியிலான மூலிகைப் பெயர்கள், மருந்துப் பெயர்கள்
காணப்படினும் அது கால நியதிப்பட்ட தவிர்க்க முடியாத நிலை எனலாம். பாண்டியர் காலச் சாசனங்களில் (கி.பி.13ஆம் நூற்றாண்டு) சோமநாத தேவர், அகோரசிவ முதலியார்
முதலிய வைத்தியச் சக்கரவர்த்திகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளமையை நோக்குமிடத்து,
பிராமணரல்லாதோரும் தமிழ் மூலம் படித்துப் பயன்படத் தக்க வகையிலே
தமிழ் மொழியில் மருத்துவக் கலை வளர்ந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தை இவை
சான்றுபடுத்துகின்றன.
சித்தர்களை நிறைமொழி மாந்தர் எனக்
குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். மணி
மந்திர ஔடதங்களில் வல்லவரான சித்தர்களை ‘நிறைமொழி மாந்தர்’ என்பதும் பொருத்தமானதே.
“இருநிலப் புகுதலும்
ஒருவிசும் பிவர்தலும்
வருதிரை நெடுங்கடல்
வாய்கொண் டுமிழ்தலும்
மந்திர மேந்தலு மென்றிவை
பிறவும்
பண்டியல் விச்சை பயிற்றிய
மாக்களைக் கண்டுமிதும்”
இவ்வாறு இலக்கியச் சான்றைப் பார்க்கும்போது
அகத்தியர் காலம் முதலாக தமிழர் பண்பாட்டில் சித்தர் பற்றிய
சிந்தனைகளும், சித்தர் கோட்பாடுகளும், அவர்களது
செயல்களும் இடம்பெற்று வந்துள்ளமை அறியப்படுகின்றது. ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் ‘சித்தர்
பாடல்கள்’ இயற்றப்பட்ட காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப்
பிற்பட்டதெனலாம்.
பண்டைக் காலத்தில் இலக்கண
நூல்களை இயற்றிய ஆசிரியர்களே மருத்துவ நூல்களையும் இயற்றினர் என்ற கருத்தும்
நிலவுகிறது. வடமொழியிற் பதஞ்சலி என்பார்
‘மகாபாஷ்யம்’ என்ற வடமொழி இலக்கண நூலை இயற்றியதுடன் பல மருத்துவ நூல்களைத்
தொகுத்தளித்துள்ளார். இது போன்றே அகத்தியர் ‘அகத்தியம்’ என்ற முதற்றமிழ் இலக்கணநூல் ஆக்கியதுடன், ‘அகத்திய வாகடம்’ முதலான பல மருத்துவ நூல்களை ஆக்கியளித்தார் எனலாம்.
இவ்வாறாகத் தமிழ்ச்
சித்தர்கள் மூன்று பெரும் பிரிவுக்குள் அடங்குவர். முதல் வகையினர், வேத
மறுப்பு ஆன்மீக ஞானம் பாடியோர். சாதி
இருப்பை மறுத்துக் கலகம் புரிந்தோர். இரண்டாம் வகையினர், வேதச்
சார்புடைய ஆன்மீக ஞானம் பாடியோர். இவர்கள்
சாதி மறுப்பை முன் வைக்கவில்லை. தனி
மனிதப் பாவங்களாகவே வாழ்வைப் பார்த்தனர்.
(இவர்கள் தத்துவ நிலையில் ஆதிப்பொருள் முதல் வாதிகள்). மூன்றாவது வகையினர், மருத்துவம்
பாடியோர். சாதி மறுப்பாளர்கள். இந்த மூவரையும் ஒரே தரத்தில் வைத்துப்
பார்த்தால் சித்தர் பற்றிய ஆய்வு முன்னேற்றத்துடன் ஏற்படவில்லை எனக் கருத
இடமளிக்கிறது.
வேதமறுப்பு ஞானம் பாடிய
சித்தர்களும், மருத்துவ ரசவாத சித்தர்களும் இருவேறு
வகைப்பட்டவர்கள். தத்துவ அடிப்படையில்
ஞானம் பாடிய சித்தர்களில் இருந்து மருத்துவச் சித்தர்கள் அடிப்படையில்
வேறுபட்டவர்கள். முரண்பட்டவர்கள். ஞானம் பாடிய சித்தர்கள் தத்துவ ஞானத் துறையில்
கருத்து முதல்வாதிகள், இறை சக்தியை ஒப்புக்
கொண்டவர்கள். மருத்துவ ரசவாதச் சித்தர்கள்
பொருள் முதல் வாதிகள். ஆனாலும், வேதமறுப்பு ஞானம் பாடிய சித்தர்களிடமும் மருத்துவ சித்தர்களிடமும் சில
பொதுத் தன்மைகளும் உண்டு. இந்த
இருவகையினருமே பாமர மக்களுக்காக உழைத்தவர்கள்.
இரு பிரிவினரும் யோகப் பயிற்சியை மேற்கொண்டவர்கள்.
மருத்துவ – ரசவாத
சித்தர்கள் பிரபஞ்சத்தையும், மனித உடற்கூற்றையும் பொருள்
முதல்வாதத் தத்துவ நிலையில் நின்று விளக்கினர்.
அவர்கள் இரசவாதிகள். ரசவாதமும்,
மருத்துவமும் ஆதி அறிவியல் ஆகும்.
பஞ்ச பூதங்களின்
கூட்டுறவும், ஐந்து பூதங்களின் சேர்க்கையின் அளவும்
காரணமாகவே நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் தோன்றுகின்றன. எல்லாப் பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு
விகிதத்தில் இந்தப் பூதங்களின் சேர்க்கை உள்ளது.
அளவு விகிதத்தில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாகவே இயற்கையில் மாறுதல்கள்
ஏற்படுகின்றன என்பதே மருத்துவச் சித்தர்களின் பொருள் முதல் வாதத் தத்துவ
ஞானமாகும். பிரபஞ்சத்தை அறிய முடியும். அதோடு அவற்றின் மீது செயல்பட்டு இயற்கையை மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைக்கக் கூடிய செயலும் பஞ்சபூதக்
கோட்பாட்டுக்குட்பட்ட இயற்கை வழியே என்பது மருத்துவ இரசவாத சித்தர்களின்
கோட்பாடாகும்.
இயற்கையோடு இணைந்த
வாழ்க்கை நடத்திய மக்கள் இயற்கைச் சூழலிற் காணப்பட்ட மரம், செடி,
கொடி, புல், பூண்டு,
இலை, காய், கனி, பூ, பிஞ்சு ஆகியவற்றை இனங்கண்டு நன்கு தெரிந்து
வைத்திருந்தனர். குறிஞ்சிப் பாட்டில் 98 வகையான தாவரப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளமையை நோக்கும் போது அக்கால
மக்கள் தாவரங்களின் இனங்களில் எவ்வளவு தூரம் பயிற்சி பெற்றிருந்தனர் என்பது
தெளிவாகிறது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் புறச் சமயங்களாகச் சமணமும்
பௌத்தமும் தமிழ் நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்த வேளையிலே தத்தம் சமயத்தைப்
பரப்பும் நடவடிக்கைகளிற் கல்வியையும், மருத்துவத்தையும்
துணையாகக் கொண்டனர். அதன் பயனாக
மருத்துவக் கலை பேணப்பட்டது. தம்சமயக்
கருத்துக்களைக் கூறும் நூல்களுக்கும் மக்களிந்த மருந்துப் பெயர்களையே சூட்டினர். அவ்வகையில் அமைந்த இலக்கியப் பெயர்களே
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய
மூன்றுமாம். மனிதனைத் தாக்கக்
கூடிய முப்பிணிகளாக சித்தர்கள் உடற்பிணி, உயிர்ப்பிணி,
பிறவிப்பிணி எனக் கூறியுள்ளனர்.
இவ்விதம் நோயை மூன்றாகப் பிரித்தது போலவே மருத்துவத்தையும் தேவ மருத்துவம்,
மனித மருத்துவம், அசூர மருத்துவம் எனவும்
பிரித்துள்ளனர். சித்தர் தத்துவம்,
“பிணியின்மை செல்வம்
விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ்
வைந்து”
என்பதால்
பசிப்பிணியும்,
உடற்பிணியும் இல்லாதிருந்தாலே நல்ல சமுதாயம் என்கின்றார் வள்ளுவப்
பெருந்தகை.
சித்த மருத்துவம் என்பது
தமிழ்ச் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒப்புயர் பெற்ற ஒரு மருத்துவ
முறையாகும். அதன் அடிப்படைத் தத்துவங்கள்
அனைத்தும் அனுபவ ரீதியானது. உணவே மருந்து,
மருந்தே உணவாக அமைந்துள்ளது தான் சித்த மருத்துவம் ஆகும். ஆதி மனிதன் ஒரு மூலிகையைத் தான் மருந்தாக முதன்
முதலில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஏனெனில் மூலிகைகள் எங்கும் வளர்பவை.
எளிதில் கிடைப்பவை. நோயுள்ள
நாய்கள் குடற்புழுவை வெளிக்கொண்டு வர புல்லைத் தின்று வாந்தி எடுப்பதும், பாப்பு கடியுண்ட கீரிப் பிள்ளை பச்சிலையைத் தின்று விஷத்தை முறித்துக்
கொள்வதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆதி மனிதனுக்கு மூலிகை அறிவை ஊட்டிய
பாடங்களாகும். எனவே தமிழகத்தில் செடி,
கொடிகள் தோன்றிய காலமே சித்த மருத்துவம் தோன்றிய காலம் எனலாம்.
தொன்மை மிக்க
இம்மருத்துவம் பல சிறப்புக்களை உடையது.
சித்த மருத்துவத்தில் பிணி அணுகா விதியும் மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு நோய்க்கும் உரிய மருந்தைத் தாவரங்களே
தந்தாக வேண்டும் என்று காலங் காலமாக சித்த மருத்துவர்கள் நம்பி வந்துள்ளனர். குருதியின் அதிக அழுத்தத்தைக் கரைக்கும்
சர்ப்பகந்தி முதல் தீராத சுவாச காசத்தை கட்டுப்படுத்தும் நஞ்சறுப்பான வரை
தாவரங்களே. விரதம் என்கிற பெயரில் பட்டினி
இருந்து சீரான உறுப்புக்கு ஓய்வு கொடுத்த பின் விரதம் முடிக்க அகத்திக்கீரை உண்பது
விரதத்தால் ஏற்பட்ட சூட்டைத் தணிக்கவே ஆகும்.
பருப்பு போன்ற வாயுப் பண்டங்களைச் சமைக்கும்போது பெருங்காயம் சேர்ப்பது,
வாளைமீன் கறிக்குப் பூண்டு கூட்டுவது, இறைச்சிப்
பொருள்களுக்கு அதன் கவிச்சியை நீக்கப் பெருஞ்சீரகம் சேர்ப்பது, முட்டைக்கு மிளகுத்தூள் சேர்ப்பது போன்ற பலவும் அறிவியல் அடிப்படையில்
அமைந்த ஒன்றாகும்.
மேலும் மருந்துகளை
அகமருந்து, புறமருந்துகளாகவே கொடுத்துள்ளனர்
சித்தர்கள். இவ்விருவகை மருந்துகளும்
தத்தம் வகையில் முப்பத்திரண்டு வடிவுடையனவாகும்.
சித்தர்கள் நோய்களை
நாடிகளின் மூலமே அறிந்தனர். வாதம்,
பித்தம், கபம் போன்ற நாடிகளைக் கொண்டே எவையெவை
அதிகம், குறைவு என்ற அளவுகளைக் கண்டறிந்து நோய்களை முடிவு
செய்தனர். சித்த மருத்துவத்தில் அகத்தியர்
இரத்தினச் சுருக்க நாடியின் பிரகாரம் மொத்தம் 4448 நோய்கள்
என்று கூறுகிறார்.