செவ்வாய், 13 அக்டோபர், 2026

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

செல்லாண் டிலகுபொழில்ச் சிங்காநல் லூர்மருவுஞ்

செல்லாண்டி யம்மைதுதி செப்புதற்கு - மல்லாண்ட

திண்தோள்ப் பரமனருள் சிந்தூர மாமுகவன்

வண்டார்பூஞ் சேவடிகா வல்.

 (1)

நூல்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

பொருவறுசீர்த் திங்கள்நிகர் வதனமும்மெய்க் கருணை

            பொலிவிழியுங் கனிவாயும் பொற்கமல மலர்நேர்

உருமருவுந் திருத்தாளு மழகுதிகழ் மற்றை

            ஓங்குறுப்பெல் லாமிலகப் பாங்குடன்வந் தருள்வாய்

தருவருக்கம் மலியிமய மலையரசன் மகளாய்ச்

            சார்ந்துபரன் றனைமணந்து சரிபாதி யானாய்

திருவருளே வடிவாகச் செழுங்கருணை புரிவாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

 (2)

மொய்தவழ்பல் மணமலரா லுனையருச்சித் தேத்தும்

            முத்திநெறிப் பத்தர்களை நத்திவணங் கறியேன்

பொய்தயங்கு முலகியல்பை மெய்யெனக்கொண் டமைவேன்

            புன்மையினைக் கருதாமல் நன்மையுறப் புரிவாய்

வைதவர்க்கு முயர்பேறு மகிழ்ந்தருளி மயிலூர்

            வண்குமரன் கைவேலாய் வயங்குபரா சத்தீ

செய்தவத்துப் பெரியர்மனக் கோயிலிடத் தவிர்வாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.           

 (3)

ஞாலமிசைச் சேயாகிக் குமரனென வளர்ந்து

            நரைதிரைநோய் மூப்பிசைய நலிகிழவ னாகிக்

காலனுக்கா ளாய்ப்பிரமன் காமனெனு மிவர்தம்

            கையடைத்து நையாமல் கண்ணருளால் காப்பாய்

கோலமுறும் மதுரைமல யத்துவச மன்னன்

            குயிற்றுமழல் வேள்வியினில் குழந்தையுருக் கொண்டு

சீலமுறு மீனாட்சி யாய்யாட்சி செய்தாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

 (4)      

காஞ்சனம்மண் மகளிரெனக் கழறிடும்மூ வாசைக்

            காற்றினில்ப்பஞ் சாயலைந்து கண்கலங்கா துனையே

நோஞ்சளமெத் தனைவரினுந் தளராமல் போற்றும்

            நுண்ணியர்தோய் புண்ணியர்சீர் நண்ணிடவந் தருள்வாய்

தாஞ்சடலம் விடுத்திடும்நாள் முத்திதரும் காசித்

            தலம்காண விரும்புகவி ராசனுளம் மகிழத்

தீஞ்சுவைப்போ னகம்சமைக்க மகளுருவாய் வந்தாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே!.

 (5)

வஞ்சகம்பொய், சூதுகொலை புலைகளவு காம

            வசப்படுவோ ருடனிணங்கி மயங்கியறி விழந்தேன்

துஞ்சவரு முடலினது நிலையாமை யறிந்துந்

            துதித்துன்னைப் பணியாது துயரம்மிக வடைந்தேன்

அஞ்சலென நீயெனக்கோ ரருட்சேவை வழங்கி

            ஆண்டிலையே லீண்டெனக்கோ ராதரம்வே  றுளதோ

செஞ்சரணக் கஞ்சமதே தஞ்சமெனக் கொண்டேன்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

(6)

ஆவியுடல் பொருளென்னும் மூன்றினையு முனக்கே

            அளித்தருளில்க் குளித்துமனக் களிப்படையா தடியேன்

பாவிகள்போல் மாயவலைப் பட்டுளம்கெட் டலைந்தேன்

            பழிப்பறுமுன் விழுமித்துணையில் பார்த்தருளப் பணிந்தேன்

காவிமலர் அனையவிழிக் கவுமாரி! சூலம்

            கைப்பிடித்து மயிடனுயி ரைக்குடித்துப் பரமன்

தேவியென இடப்பாகத் திலங்கிடுவாய் பொழில்சூழ்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே!.

 (7)

அவனவளோ டதுவுமென அவிர்மூன்றா யுலகம்

            அனைத்தும்நிறைந் திடுபரமற் கவிர்மனைவி யாகி

புவனமெலா மீன்றருளுந் தாயாகி விளங்கும்

            புவனையே திரிபுரையே போற்றெழிற் சீகாழித்

தவமெனவந் தருள்ஞான சம்பந்தன் தனக்குத்

            தந்தருள்பா லமுதிலொரு சற்றெனக்கீந் தருளச்

சிவபெருமா னுடன்விடையில் திருக்காட்சி நல்காய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

(8)

கங்கணமு மரைஞாணுங் காதணியாம் குழையுங்

            கட்செவியென் றணிபரமன் கவினுருவில் பாதி

பங்குபெற்றுச் சிவனொடுநீ வேறல்லா ஞாயம்

            பத்தரறிந் துய்வுறச்செய் பண்பையறி கில்லேன்

கங்குலுறு மமாவாசை யன்று முழு நிலவாம்

            காலமெனக் கழறுமடி ராமபட்டர்க் கிரங்கித்

திங்கள்வரக் குழையையெறிந் துலகுணரச் செய்தாய்

            சிங்காநல் லூர்மருவுஞ்செல்லாண்டித் தாயே.

 (9)

இச்சையுடன் கிரியையுயர் ஞானமெனும் மூன்றாய்

            இலகலுற்றாய் சிவனோடு மிணைபிரியா தவிர்ந்தாய்

கொச்சைமனச் சிறியனுனைப் போற்றுந்நெறி அறியேன்;

            குலவருளா லடியேன்மு னிலகிவரந் தருவாய்

பச்சைநிறத் திருமாலுள் மெச்சுதங்கை யானாய்

            பாம்பணிவார் மனம்மகிழும் சாம்பவிசா முண்டீ

செச்சைமலர்க் குகனையைங்கைக் குஞ்சரத்தைப் பெற்றாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

 (10)

வெங்கண்ணசு ரச்செயலாய் நின்திருமுன் பலவா

            மேவுமுயிர்க் கொலைபுரியும் வீணர்களை யடக்கித்

துங்கமுறு கனிமுதலா வனதொகுத்துப் பரவுந்

            தூய்மையை வேட்டனர்மெய்த் தொண்டர்பலர் சிறிதே

பொங்கமுற்ற தெனினுமின்னம் மக்கள்மனம் கருணைப்

            புனிதமுற வில்லையவர் பொருந்துமனம் திருந்தச்

செங்கனல்கண் சிங்கமிசை வந்துவரந் தருவாய்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

 (11)

தாயாகு முன்சமுகஞ் சேயாகு மடியேன்

            சாற்றுமொரு விண்ணப்ப மேற்றருள வேண்டும்

பேயாக யெனையசைக்கும் மனமடங்க வேண்டும்

            பேசுவதுன் புகழாகும் பெருநிலை வேண்டும்

வேயாகுந் தோள்மகளிர் நினதுவடி வென்ன

            வேநினைக்கும் நிலைவேண்டும் வேண்டுமென துளத்தில்

சீயமிசை யென்னாளும் நீயிலக வேண்டும்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.

(12)

கொங்கிலணி தங்கும்வளக் கோவைநகர்க் கீழ்ப்பால்

            கோலம்நிறை நூலாலைச் சீலம்மிகக் கொண்டே

செங்கமல மங்கையும்வெண் பங்கயமா தவிரும்

            சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயைக்

கொங்குமலர்ச் சோலைவளச் சிரவையிற்கௌ மாரக்

            குருகந்த சாமிமுனி திருவடித்தா மரையே

மங்கலமார் செல்வமெனக் கொளுஞ்சிறியேன் புகல்பா

            வழுத்துமவர் பலநலமும் வயங்கிடுவார் தாமே.         

 (13)

திருப்புகழ்

தந்தாதன தானன தானன - தனதானா

கொங்காரல ராலணி மாலைகள் - புனைமேலோர்

            கொண்டாடுமு னாதிசை பாடியுள் - மகிழேனோ

வெங்காலன்வ ராமுனம் யானருள் - பெறுமாறே

            மின்போலொளிர் சேவையை நீதர - இசைவாயே

கங்காளம யேசுர னார்மகிழ் - வடிவாளே

            கண்டோடுவி ராவிய பால்நிகர் - மொழியாளே

சிங்காரம னேகம்நி லாவிய - உயர்சீர்தோய்

            சிங்காநல வூரிடை மேவிய – உமையாளே.

தய்யாந்தன தானன தானன - தனதானா

மையார்ந்திடு வாள்விழி மாதரை - மிகவாயே

            வைதேங்கிடு தீவினை போயுனொர் - வடிவாநேர்

மெய்யாம்தவ மாதவர் தாள்பணி - தவம்நாயேன்

            மெய்தாங்கிடு மாறருள் நீசெயல் - விழைவேனே

கையேந்திடு நீள்கழை யானவில் - உடையாளே

            கள்ளேய்ந்தகு ராயணி வேள்மகிழ் - அனையாளே

செய்யோங்கிட நீள்மழை நீர்தரும் - இசையாலே

            செல்லாண்டியெ னாவரு பேர்பெறும்– உமையாளே.

 

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

சிங்காநல் லூர்வாழ்க! சேரு மவ்வூர்க் கோயிலிடந்

தங்குமியல் செல்லாண்டித் தாய்வாழ்க - மங்களமாய்ச்

சென்றுபணி வோர்வாழ்க  சீலநெறி யாளரெலாம்

என்றுமிக வாழ்க இனிது.

சபரிமலை ஐயப்பசாமி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சபரிமலை ஐயப்பசாமி பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சபரிமலை ஐயப்ப சாமிசர ணென்ன

அபரிமிதத் தொண்டருவந் தன்பால் - உபரிநலங்

கொள்ளும் படிகருதிக் கூறுதுதிக் கேற்றதுணை

விள்ளுங் குருபாத மே.

(1)

நூல்

(பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்)

செந்திரு வெனுங்கமல மங்கையரு ளாம்பொருள்

                        செல்வவள மோங்க வேண்டுஞ்

            செப்பும்மொழி யாமெவைக் கும்தா யெனுங்கலைச்

                        செல்வியருள் வளர வேண்டும்

புந்தியொரு மித்துனைப் போற்றிவழி பாடுகள்

                        புரிந்திடும் போதம் வேண்டும்

            புகலுமிவை யாவையுந் தரவேண்டி நின்றனைப்

                        போற்றிநின் றேன ருளுவாய்

“சந்திரன ணிந்திலகு சடைமுடிப் பரமனார்

                        தனயனே சரண” மென்றும்

            “சக்திவடி வேல் ஏந்து சண்முகக் கடவுளது

                        தம்பியே சரணம்” என்றும்

சந்ததம் முழங்கிவரு தொண்டருக் கருள்செயுந்

                        தலைவனே யென்னை யாள்வாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே!ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.

 (2)

பக்தியுட னேயுனைப் பாடிப் பராவுவோர்

                        பாலுறவு கொண்டு பழகேன்

            படிமீது பலவாய பொருள்மீதி லாவலால்ப்

                        பாடு பட்டுத் தளர்ந்தேன்

நத்திவரு மிரவலர்வி ரும்பியபடிக் கீந்து

                        நாளும் வாழக் கருதிலேன்

            நானுனது திருவருளை யெவ்வாறு பெற்றுய்ய

                        ஞாயமுண் டருள்கொ டேற்பாய்

எத்திசையி லுள்ளவரும் மெச்சிவந் தநுதினமும்

                        ஏத்திப் பராவு மெந்தாய்

            ஏறூரு மீசனுந் திருமாலும் மைந்தனென்று    

                        இன்புற உதித்த பரனே

சத்தியத் தொடுசுத்த மும்கொண்டு போற்றுவார்

                        தமையெ நாளும் புரப்பாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (3)

கஞ்சமலர் வேதனெற் கென்றின்னு மோருடல்

                        கணிக்கா திருக்க வேண்டும்

            காமனென் போன்மலர்க் கணைவிட்டென் நெஞ்சைக்

                        கலங்கச் செய்யாமை வேண்டும்

பஞ்சமென் னுங்கொடிய வறுமைமெய் யன்பர்தம்

                        பால்வரா நன்மை வேண்டும்;

            பகடேறி வரும்நமன் பாசம்வீ சாதெனைப்

                        பாதுகாத் திடுதல் வேண்டும்

நெஞ்சமிசை நின்வடிவை யல்லாமல் வேறெதையும்

                        நினையாத நிலைமை வேண்டும்

            நின்புகழை யல்லாம லுலகில்மா னிடர்புகழ்

                        நிகழ்த்தாத நீர்மை வேண்டும்

தஞ்சமென வந்திடுமு னடியவர் பதம்பரவு     

                        சத்தியமும் நல்க வேண்டும்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (4)

வஞ்சநினை வால்புலிப் பால்வேண்டு சிற்றன்னை

                        வார்த்தைமெய் யென்று கருதி

            வன்கா னடைந்தங்கு வாழ்ந்திடும் புலிகள்பல

                        மந்தை யாகக் கூடியே

தஞ்சமென் றுடன்வரப் பெரியதோர் புலிமீது

                        தாட்டீக மாய்வ ருங்கால்

            தரணியோ ரஞ்சிடத் தன்மனைக் கண்வருந்

                        ததியினில் தாய றிந்தே

நெஞ்சமிசை யச்சமும் பெருமதிப் பும்கொண்டு

                        நீடுதன் பிழையை யெண்ணி

            நின்னையே போற்றசெய யுலகெலா முன்தெய்வ

                        நிலையுணரு மாறு செய்தாய்

சஞ்சல மெலாமகன் றுன்னடி பராவும்மெய்த்

                        தவமடிய னேற்க ருளுவாய்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (5)

வேயொத்த தோள்மகளி ராசையுங் கடல்போல

                        மேவிடும் பொன்னா சையும்

            வெற்பனைய மண்ணாசை யும்பெருகி நாள்தோறும்

                        விளைக்கும் பெருந்து யரினால்

நாயொத்த லைந்திளைத் துச்சோர்ந் திடாவண்ணம்

                        நல்லடியார் கூட்ட முடனே

            ஞானமணம் நாளுமிரு பாதமலர் சூடுமொரு

                        நன்னிலைமை துன்ன ருள்வாய்

காயொத்த கடுமனங் கனிபோ லிளகிடக்

                        கருணைபுரி கண்களு டையாய்

            கணபதி தனக்கிளைய சோதரா என்னன்பர்

                        கழறிட வரும்பி ரானே

தாயொத்த நீயெனைச் சேயொத்திடக் கொண்டு

                        சந்ததம் காத்தல் முறைகாண்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (6)

தாமளவில் துன்புறத் தீமைசெயி னும்பிறர்

                        தமக்கிடர் செயாமை வேண்டும்

            தன்னுயிரி னைப்போல மன்னுயிர்க ளைக்கருதுந்

                        தண்கருணை மேவ வேண்டும்

சேமமாய் இவ்வுணர் வுற்றதால் பிறவுயிர்ச்

                        செற்றுணா நியமம் வேண்டும்

            தெய்வநெறி பேணும்திருத் தொண்ட ரோடுனைச்

                        சேவிக்கு மன்பு வேண்டும்

பாமரர்க ளானநாத் திகரையும் பத்திபுரி

                        பண்பில்ப் பழக்க வேண்டும்

            பசியதா மரையிலையில் நீர்போல வாழ்க்கையில்

                        பற்றின்றி நிற்க வேண்டும்

சாமளவி லிடர்வரினும் மனநிலை தளர்ந்திடாத்

                        தத்துவத் தெளிவு வேண்டும்

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (7)

இன்பமக வில்லாமல் ஏங்கும்மன் னவன்மகிழ

                        இனியமணி கண்ட நல்ப்பேர்

             இசையும்மக வாகிவந் தன்றுவிளை யாடினாய்

                        இவ்வுலக மென்று மேத்த

வன்பகடு புலிகரடி யானைமுத லாங்கொடிய

                        வனமிருகம் வாழ்ம லைக்கண்

            வாசமுற் றாய்போற்ற வருபவர்க் கிடையூறு

                        வாராத வண்ணம் வைத்தாய்

அன்பமைய வருதொண்டர் தமைவலது கையினால்

                        அஞ்சலென் றபய மருள்வாய்

            அவிர்மகர மாதமாம் தைத்திங்கள் முதல்நாளின்

                        அந்தியில்ச் சோதி வடிவாய்த்

தன்பதம் காட்டியே துன்பினைப் போக்கிடும்

                        தயைமருவு தம்பி ரானே

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (8)

கந்தம்மலி பன்மலர்த் திரள்கொண்டு நின்மலர்க்

                        கழல்க ளையருச் சித்துமெய்க்

            கனிவினொடு பலவான தோத்திரப் பாக்களைக்

                        காதலால்ப் பாடி யாடி

நிந்தனைக் கிடமாக்கும் பொறிபுலன்க ளைந்தினையும்

                        நேர்வழியில் செல்ல விட்டே

            நெஞ்சினைத் தம்வசம் நிறுத்தும்நல்த் தவயோக

                        நெறியை யான்பெற நல்குவாய்

பைந்தரு நிழல்த்தேவ ரிந்திரன் முதல்ப்பலோர்

                        பணியநின் றருள்செய் பரனே

            பரவுபூ ரனைபுட் கலையென்ற சத்திகள்

                        பத்தினிக ளாக வைத்தாய்

தந்தக் களிற்றின்மிசை வந்துற்றென் விழிகளில்த்

                        தரிசனம் தருவ தென்றோ

            சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (9)

நேத்திரமோர் மூன்றுடைய சிவபிரான் மாலன்று

                        நிறையழ கின்மோ கினியெனா

              நின்றபோ தொன்றலால் வந்ததாய் மன்பதையில்

                        நித்தமும் புகலு கின்றார்

ஆத்திரம கன்றஇடை பிங்கலைப் பெயரிரண்டு

                        அமைநாடி யொன் றாகிய

              அவிர்சுழு முனைத்திறம் போலவே திருமேனி

                        ஆனவிதம் யாவ ரறிவார்

சாத்திரமு ணர்ந்தவர்கள் போல்யோக பட்டிகை

                        தரித்திலரும் வடிவ மாய்நீ

              சார்வதால் மாதவத் திறத்தினில்க் குலவிடும்

                        தன்மைநன் கிலங்கு மன்றோ

சாத்தனரி கரபுத்ரன் மணிகண்டன் ஐயனெனச்

                        சாற்றுதிரு நாம முடையாய்

              சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (10)

நீலமுட னேகரிய நிறமுறும் கலையக்கம்

                        நிகழ்துளவ மணிகள் பூண்டு

              நெஞ்சினிலத் திடம்மேவி ஐம்புலச் சேட்டையற

                        நின்றுப்பி லாம லுண்டு

சாலவும் உரத்தெழும் தொனியினா லையப்ப

                        சாமியே சரண மென்று

             சத்தமிட் டெய்துமுன தன்பரைக் காணினுந்

                        தகுபத்தி யோங்கு மன்றோ

கோலமுறும் யானைபரி கொடுவரி யென்பதாம்பல்

                        குதிரை யில்ச்செண் டாயுதம்

              கொண்டுவரு சேவையைக் கண்டுபே ரின்பம்யான்

                        கொள்ளநீ அருள வருவாய்

தாலம்முழு தும்பரவு தலைவனே சத்தியத்

                        தவர்பர வுகுரு நாதனே

              சபரிமலை தனிலுறையு மிறைவனே ஐயப்ப

                        சாமி நின்தாள் சரணமே.                                

 (11)

திருப்புகழ்

தனனதன தனனதன தய்யத்த தான - தனதானா

மனதுலக நெறியினிடை

எய்திப்பல் வாறு - திரியாதே

            மதன்மறலி பிரமனிவர்

கையுற்று வாடி - மறுகாதே

தினமுன்னடி நினைதவசு

செய்யக்கொள் யோக - வலியாலே

            தெரிசனைகொள் ளொருநல்வரம்

நல்கக்கண் நேரில் - வருவாயே

பனகமனி பரமனரி

வெஃகிக்கொள் சேயில் - நிகழ்வோனே

            படிறுதவி ரடியரிசை

சொல்லக்கு லாவு - திறலோனே

சனனமொடு மரணமறு

மெய்யுற்ற போதர் - பனிசீலா

            சபரிமலை தனில்மருவும்

ஐயப்ப னான – பெருமாளே.