புதன், 25 ஜூன், 2025

பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும் - அணிந்துரை

 

சைவம் தழைத்தோங்குவதற்கு அவதாரம் செய்தவர் சிவனடியார் பலர்.  அவற்றுள் சிவானுபவச் செல்வராஹயம், உத்தமகுலத்து உதித்தவராயும், சுந்தரமூர்த்தி சவாமிகளது திருவடித் தொண்டர்களுள் ஒருவராயும், தமிழ்ப் புலவமையில் தலைமை பெற்றவராயும், செய்யுள் இயற்றுவதில் மிகுந்த ஆற்றலுடையவராயும், அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராயும், சேரநாட்டு அரசராயும் இருந்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.  கட்டளைக் கலித்துறை வடிவில் 100 பாடல்களால் இயற்றியதே பொன்வண்ணத்தந்தாதி.

திருவாலவாயுடையார் (இவர் மதுரைத் திருவாலவாயுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள்) - 1, காரைக்காலம்மையார் - 3, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - 1, சேரமான் பெருமாள் நாயனார் - 3, நக்கீரதேவர் - 10, கல்லாட தேவர் - 1, கபிலதேவர் - 3, பரணதேவர் - 1, இளம்பெருமானடிகள் - 1, அதிராவடிகள் - 1, பட்டினத்துப் பிள்ளைகள் - 5, நம்பியாண்டார் நம்பி - 10 எனப் பன்னிருவர் பாடிய நாற்பது சிற்றிலக்கியங்கள் கொண்டது பதினொராம் திருமுறை. 

பதினோராம் திருமுறையில் அந்தாதி, இரட்டை மணிமாலை, உலா, கலம்பகம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, எழுகூற்றிருக்கை எனப் யாப்பு வகை பற்றியும், வெண்பா, விருத்தம், கலிவெண்பா எனச் செய்யுள் வகை பற்றியும், காரெட்டு, ஒருபா ஒருபஃது, ஏகதசமாலை, திருவீங்கோய் மலையெழுது என எண் வகை பற்றியும், ஆற்றுப்படை, கோப்ப் பிரசாதம், கண்ணப்ப தேவர் திருமறம், திருமுகப் பாசுரம், திருத்தொகை எனப் பொருள் வகை பற்றியும், பெருந்தேவபாணி என இயலிசை பற்றியும் பெயரெய்திய சிற்றிலக்கியங்கள் நாற்பது அமைந்துள்ளது.

 பதினோராம் திருமுறையில் திருமுகப் பாசுரம், மூத்த திருப்பதிகம், திருவிரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி, சேத்திரத் திருவெண்பா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருகைலாய ஞான உலா, கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம், திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி, சிவபெருமான் திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை, கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவெற்றியூர் ஒருபா ஒருபஃது, திருநாரையூர் விநாயகர் இரட்டைமணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை ஆகிய நாற்பது சிற்றிலக்கியங்கள் அமைந்திருக்கின்றன.  இந்நாற்பதில் சிவபெருமானைப் பற்றி 25 நூல்களும், விநாயகரைப் பற்றி 3 நூல்களும், முருகனைப் பற்றி 1 நூலும், அடியார்களின் பெருமைகளைப் பற்றி 11 நூல்களும் என அமைந்திருப்பதைக் காணலாம்.

வினா விடை உள்ளுறுத்தி வரும் அமைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.  இந்நூலில்  அகப்பொருட்சுவைபட வருவனவும், நெஞ்சிற்கு அறிவுறுத்தி வருவனவுமான பாடல்கள் பலவும், வினாவும் விடையாயுமாக இலக்கிய நயம் சார்ந்த பாடல்கள் பலவும் என இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.  அவற்றுள் சில இங்கு நயத்திற்காகக் காண்போம்.

          இறைவனே! நீரும் நெருப்பும், மதியும் பாம்பும், யோகும் உமையுடனிருக்கையும், உருவும் அருவும், வேங்கையும் மானும், பகலும் இரவும் ஆக நீர் முரண்பட்ட பொருள்களுடன் இருக்கின்றீர்.  இவ்வகையில் இருப்பது, பகை தீர்த்த பண்பன் என உயிர்கள் போற்றி மகிழவோ? என ஒரு பாடலில் வினவி மகிழ்கின்றார்.

பல்லுயிர் பாக முலை தோல்பக லோன்மறல்பெண்

வில்லியோர் வேதியன் வேழ நிரையே பறித்துதைத்துப்

புல்லியுஞ் சுட்டு மறுத்து முரித்துங்கொண் டான்புகழே

சொல்லியும் பாடியு மேத்தக் கெடுநங்கள் சூழ்துயரே. 

என வரும் பாடல் (36) ஒன்று.  இப்பாடலில் பல் முதல் தோல் வரை உள்ள ஆறு பொருள்களாம்.  அடுத்துப் பகலோன் முதல் வேழம் வரை உள்ள பொருள்களும் ஆறாம். இவற்றை இறைவன் அழித்தும் ஆட்கொண்டும் செய்த அருளிச் செயல்களும் ஆறாம்.  அவை பறித்து என்பது முதல் உரித்து என்பது வரை உள்ள ஆறுமாம்.  இவற்றை நிரல் நிறைப்படுத்தி எண்ணும்போது, இடையில் உள்ள பகலோன் முதலியவர்களை முன்னும், முன்னர் உள் பல் முதல் தோல் வரை உள்ள பொருள்களை இடைப்படுத்தியும், மூன்றாவதாக உள்ள பறித்து என்பது முதல் உரித்து என்பது வரை உள்ளனவற்றை வினை முதற்குரிய வினையாக்க் கொண்டும் பொருள்கொள்ளல் வேண்டும்.  அங்ஙனம் கொள்ளில் பல் பறித்தும், மறலி உயிர் உதைத்தும், பெண் பாகம் கொண்டு  புல்லியும், மன்மதன் உடல் கட்டும், வேதியன் தலை அறுத்தும், வேழம் தோல் உரித்தும் புகழ் கொண்டான் என வரும்.  அப்புகழைச் சொல்லியும் பாடியும் ஏத்த நம் துயர் கெடும் எனக் கூறிப் பாடலை நிறைவு செய்கின்றார்.  பறித்தலும், உதைத்தலும், புல்லலும், சுடுதலும், அறுத்தலும், உரித்தலும் கொடுஞ் செயல்களாயினும் அவை அனைத்தும் அவ்வவ் உயிர்களையும் நல்லாற்றுப்படுத்துவதற்கே ஆதலின் அனையனைத்தும் இறைவன் புகழேயாம் என்பது கருத்து. இவ்வகையில் அமைந்த நிரல் நிறைப் பாடல் இலக்கிய உலகில் காண்டல் அரிதாகும்.

          இறைவன் ஐயம் ஏற்றலை அருளாளர்கள் பலரும் கூறி மகிழ்வர் எனினும் இவர் கூறி மகிழும் திறம் பெரிதும் சுவைத்தற்கரியதாய் உள்ளது.  பிச்சாடன மூர்த்தியாகிய சிவபெருமான் ஒரு வீட்டின் முன்பு எழுந்தருளி இரு பொருள்படும்படி கேட்க, அவ்வீட்டில் இருந்த இல்லத்தரசியும் அவ்வாறே இருபொருள்படும்படி பதில் அளித்தாள் என்பது மிக்கு நயத்திற்குக் காட்டாக அமைகிறது.  பிச்சை ஏற்க வரும் பரமன் ஓர் இல்லத்திற்குச் சென்று பலிதா (பிச்சைக்கொடு) என்றானாம்.  அதற்கு அவ்வம்மையார் அதனைச் சூரியனுக்குக் கொடு என்றாளாம்.  பலிதா என்பதைப்பல் இதா எனப் பிரித்துத் தக்கன் வேள்வியில் கதிரவன் பல் உடைந்து இருப்பதால், அவனுக்கு அதைக் கொடு என்ற பொருளில் இவ்வாறு கூறினாள்.  அதைக் கேட்ட பரமன், அன்னம் (சோறு) கொடு என்றானாம்.  அதற்கு அவ்வம்மையார் அது (அன்னப்பறவை) அயன்ஊர்தியாதலின் அவரிடம் கேட்க என்றாலாம்.  அடுத்து அப்பரமன், ஐயம் பெய் (பிச்சை கொடு) என்றானாம்.  அதற்கு அவ்வம்மையார், ஐ அம்பு எய் எனப் பொருள்  கொண்டு அவ்வாறு எய்பவன் மன்மதன் அல்லவோ என்றாளாம்.  மேலும் பரமன் உண்டி இங்க அமைந்த்து (யாம் விருமபியது சோறு) என்றானாம்.  அதுபொழுது தான் அவ்வம்மையார் தம்மிடம் வந்து கேட்டவரது உள்ளத்தைத் தெரிந்து கொண்டாளாம்.  இக்கருத்து அமைந்த பாடல் 33இல்,

பண்டங்கன் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன்

ண்டங் கடந்தவ னன்னமென் றானய னூர்தியென்றேன்

கொண்டிங்கு னையம்பெய் யென்றான் கொடித்தே ரங்கனென்றே

னுண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல வுணர்வுற்றதே. 

என்பதாம்.  இவ்வாறு அமைந்த பாடல்கள் பலவாக இந்நூலுள் இருக்கின்றன. 

          இந்நூல், பல்வேறு ஒலைச்சுவடி நூலகங்களில் இருக்கக் கூடிய பதினொரு ஓலைச்சுவடிகளோடும் பழம்பதிப்புகளோடும் ஒப்பீடு செய்யப்பெற்றிருப்பதால் பெரும்பான்மையான பாடல்களில் பாடவேறுபாடுகள் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. 

          வழக்குச் சொற்கள் (குன்றந் – குண்ணம்; கொன்றை – கொண்ணை; தொலையா - துலையா; போதும் - போழ்தும்; தோன்றவு - தோணவு; பலிக்கென்று – பலிக்கெண்ணு); விகுதி மாற்றச் சொற்கள் (தாழ்சடையோன் – தாழ்சடையான்; தாழ்சடையான் - தாழ்சடையோன்; சோதியென் - சோதியன்; கொண்டான் - கொண்டோன்; மாவணத்தால் – மாவணத்தோன்); பகுதி மாற்றச் சொற்கள் (பொன் பொடியே – யொண்பொடியே, வெண்பொடியே; பல்குண – பால்குண); எழுத்துக் குறைச் சொற்கள் (பலிகொடு – பலிகொண்டு; காட்டிடுஞ் - காட்டிடுமஞ்; வகைத்தே - வைத்தே; விரிகின்ற - விரிக்கின்ற; தெரிகின்ற - தெரிக்கின்ற; சரிகின்ற - சரிக்கின்ற; புரிகின்ற - புரிக்கின்ற; வந்தென் - வந்ததென்; சூடிய – சூடி); சொல் மாற்றச் சொற்கள் (புல்ல – புலக, புல்லக; பன்மலர் சேர் – பண்டிவர்சேர், பண்டிதர்சேர்; கொண்டுங் - கொய்துங்; உடம்பொடு - உடம்படு; நீயென் - சேலென்; மணிநிறந்தோற் - பணிநிறைந்தோர்; கொண்டணிந்த – கொண்டலர்ந்த, சிரமாலை - சிலமாலை;  புண்டம் - துண்டம்; சிற்றடியாய் - சிற்றிடையாய்; மறல்பெண் - மறலி; பிறைச்சடை - பிறையுடை; சாரணை - சாரிகை; மைங்கணை - மைங்கலை; இறையவன் - நிறையவன்; வண்டுறை - வண்டறை; பெறுவது – புகுவது, படுவது); எழுத்து மிகைச்சொற்கள் (செய்யக் -  செயக்; மெலிக்கின்றதே - மெலிகின்றதே; மால்கடல் - மாகடல்; கொண்டுள்ள - கொண்டுள;  காய்சின – காசின); சொல்மிகைச் சொற்கள் (ஒண்களங் – வெண்களங்கன்றுதல்); குறைச்சொற்கள் (களையுநந் தீவினையே – களையுந் தீவினையே); எழுத்து மாற்றச் சொற்கள் (குடமாலிடம் - குடமானிடம்; தவிர்ந்திடு – தவிர்த்திடு) என்பன போன்ற பல வகையில் பலப்பல பாடவேறுபாடுகள் பரவிக் கிடக்கின்றதை  இந்நூல் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் சுட்டிக்காட்டப்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு பல சிறப்புக்கள் அமையப் பதிப்பிக்கப்பெற்ற இப்பதிப்பு பதிப்பு வரலாற்றில் தடம் பதிக்கும் வண்ணம் அமைத்திருப்பதற்கு இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்.