திருப்புகழ்த் தேசிகன்
என்று வழங்கும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திருமகனார் திருப்புகழ் சரபம்
செந்தினாயகம் அவர்கள் தண்டபாணி சுவாமிகள் பாடிய கௌமாரத் தொகை (காப்பு – வெண்பா 1, நூல்
12, நூற்பயன் 1, பதிகக் கவிகளின் முதற்குறிப்புக்கவி 1) 15 பாடல்களை அடியொற்றி கௌமாரர்
அந்தாதி (காப்பு 1, நூல் 115, நூற்பயன் 1) 117 பாடல்களிலும், கௌமாரர் புராணம் பாயிரம் 13 உள்பட நூல் 2229 பாடல்களிலும் பாடிப்
பரவியிருக்கின்றார். இந்நூல்கள் எதுவும் இதுவரை
அச்சேறவில்லை. முதலது ஓலைச்சுவடியாகவும், பின்னைய
இரண்டும் கையெழுத்துப் பிரதியாகவும் கோவை கௌமார மடாலயத்தில் பாதுகாக்கப்பெற்று வருகிறது. இவற்றில் கௌமாரர் புராணத்தை அறிமுகம் செய்யும் நோக்கில்
இங்கு இப்பகுதி அமைந்துள்ளது.
கௌமாரர் புராணமானது பாயிரம், கந்தமாதனப்
படலம், பூமகள் படலம், போகமுனிப் படலம், புளிமரப் படலம், காத்தபெருமாள் படலம், பெருகுலகப்
படலம், சாமிநாதப் படலம், கலையொன்று கொண்ட படலம், ஆபத்தோத்தாரணப் படலம், நஞ்சணிந்த படலம்,
அறுபத்துமூவர் படலம், நீறுமிகப்புனை படலம், அதிட்டானப் படலம் ஆகிய பதின்மூன்று படலங்களில்
102 சருக்கங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றில்
96 முருகடியார்களைப் பற்றிய வரலாறு எடுத்தோதப் பெற்றுள்ளது.
இவற்றில் 15ஆவது சருக்கமாக பாலையமுனிச் சருக்கம்
அமைந்துள்ளது. பதினைந்து பாடல்களாலானது இச்சருக்கம். 14ஆவது சருக்கத்தின் இறுதிப் பாடல் அடுத்த சருக்கத்தில்
யாரை விவரிக்கப்படும் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இச்சருக்கம் 14ஆவது ஆறுமுகமுனிச் சருக்கத்தில் இறுதிப்
பாடல் (12ம் பாடல்) 1ம், பாலையமுனிச் சருக்கத்தில் இறுதிப்பாடல் தவிர்த்த 14 பாடல்களும்
எனப் பதினைந்து பாடல்களானது. இங்குப் பாடலெண் வரிசைப்படுத்தப் பெற்றுள்ளது. இந்நூற்
பகுதி எங்கும் அச்சில் இல்லாததால் ஆய்வு நோக்கில் அல்லாமல் பதிப்பு நோக்கில் உள்ளது
உள்ளபடி இங்குப் பதிப்பிக்கப் பெறுகிறது.
நிட்டையி னல்ல நுபூதி யெனூல்மு
னிகழ்த்தி யிவன்பிரியா
வுட்டயை தோய்முரு கோனு லகத்தி
லுறுங்கதி மேவினனால்
சட்டமு ணர்த்து மிவன்கதை யிவ்வகை
சாற்றுபு பாலையன்றான்
சிட்டர் களிக்க வியற்றிய வாடல்கள்
செப்புவ னொருசிறிதே.
(1)
(வேறு)
கயிலை யங்கிரி வாழ்சங்கு கன்ன னற்கலை
யாயந்நாள்
சயில வில்லுடை யான்சொல்லாற் சகத்திடை
சலதி மீது
வெயிலவ னெனவே தோற்றி மிக்கமெய்
யருட்சீர் நாட்டி
யயிலவன் றன்பா லின்பா ரருந்தவன்
பால சித்தன்.
(2)
கள்ளியின் சொடிய பாலைக் கறந்துநல்
லுணவாய் மாந்தி
நள்ளிய வடியார் சூழ நலங்கொள் பொம்மைய
புரத்தி
லொள்ளிய செல்வங் கல்வியு ரியமெய்
ஞானம் பல்லோர்
உள்ளிய வாறே நல்கு முரவன் மாகுரவன்
மாதோ.
(3)
அவனு ணும்பாற் சேடம்பெற் றம்மவைப்
பெயரா ளுண்ணத்
தவமலி சுதனா வந்தோன் றகுபால சித்தன்
றொண்டே
யுவகையொ டியற்றி
வாழ்ந்தா னொப்பில் வேற்குமர னோர்நாள்
குவலயத் திடைதன் காட்சி கொடுத்துமெய்
யருளா னோக்கி.
(4)
தவத்திரு வேடத் தோடு சார்குருத்
துவமு நல்கி
யுவப்புறு மரிய தன்னோ ரொண்கலை யமையச்
செய்து
நவச்சிவ ஞான தேசி கப்பெயர் ஞாலங்
கூறப்
பவத்தொடர் பறுமெய்ய
வாழ்வு பலர்கொளப் புரியென் றானே.
(5)
அவ்வணம் புரிந்து வீர வாகம நெறியும்
பேணிச்
செவ்வணக் குகன்ப திட்டை திகழ்தனோர்
மடத்திற் செய்து
பவ்வநீர்க் கரைச்செந் தூர்போற்
பகர்பொம்ம புரத்தில் வைகி
யொவ்வரும் பலவூர்
சென்றே யொப்பிலா லாடல்கள் செய்திட்டான்.
(6)
கச்சியி லொருவ னெய்துங் கட்செவி
விடத்தை நீக்கல்
மெச்சிய மிலேச்சன் பன்னி மேவுவெஞ்
சூலை மாற்றல்
குச்சித முடையோ ருய்த்த குடமணல்
குளமாச் செய்தல்
நச்சியே தில்லை யாதி நற்சிவ தலங்கள்
போற்றல்.
(7)
கூடலிற் றையல் வேலை குயிற்றுவோன்
கயற்க ணம்மை
நீடரு ளுரையாற் றந்த நிறைதிரு விளையாட்
டார்ந்த
பீடமை படாம்பெற் றன்னோன் பிரியம்போன்
மகப்பே றெய்த
நாட ருட்டிரு நீறித லாதிய நடத்தி
மீண்டான்.
(8)
ஆசிரியன் போற்றா னுமருங் கள்ளிப்
பாலே யுண்டு
வீசிய கடனீர்ப் பாரில் வேலவ னருள்வி
ளக்கிப்
பேசிடத் தகுமைஞ் னூறாண் டிருந்தனன்
பிழைதீர் ஞான
தேசிக னாகு மின்னோன் பெருமையார்
செப்பற் பாலார்.
(9)
புள்ளிமா மயிற்சே யன்பு பொருந்திமெய்ச்
சிவஞா னிப்பேர்
நள்ளிசைப் பாலை யன்றா னரலையி னொலிமா
றாச்சீர்
வெள்ளிதழ்த் தாழை மீது வியனிறான்
மதுப்பெய் மேன்மை
வள்ளிமை துலங்கும் பொம்ம மாபுர
மடத்தில் வாழ்நாள்.
(10)
செஞ்சி யென்றிடு மூராளுந் திரியம்
பகப்பேர் வேந்தன்
வஞ்சிநேர் புதல்வி கூந்தல் வாய்ந்தவெண்
ணரைதான் மாற
நெஞ்சினு ணினைந்து நீறு நெற்றியிற்
சிரத்தி லிட்டான்
மஞ்சினுங் கறுத்து நீண்டு வயங்கிடல்
பலருங் கண்டார்.
(11)
வேறு
அரசனும் பிறரு முனிவனை வணங்கி
யளவறப் புகழ்ந்தன ரதுகண்
டுரகநேர் சினத்த னொருவன் மாந்திரி
கனுவரியி லவனையு மெனையும்
விரவிடக் கொடுவீழ்த் துதிகரை சேர்வோர்
விழுமியோ ரென்றதா லந்தப்
புரவலன் முனியினி சைவுணர்ந் தவரைப்
ஹபணரியி னிடைவிழப் புரிந்தான்.
(12)
மாயையாங் கடலைக் கடந்தருண் ஞான
வண்கரை சேர்சிவ ஞானி
பேயைநேர் மனத்தன் புணர்ப்பினால்
வருமிப்
பெருங்கடல் கடந்திட லரிதோ
சேயைநா டியவண்மை யிலதிவி ரைவாய்த்
திண்கரை சேர்ந்தனன் மற்றோன்
வீயவோர் மீனுண் டதுபுர வலன்றான்
வேண்டலா லவனைமீட் டளித்தான்.
(13)
அரச னுஞ்செல்வி நிறைவினர் சிலரு
மளவில்பொற் றொகையி னான்மடமும்
பரவு பூமிகளும் பணிகளும் வேண்டும்
பரிசனஞ் சிவிகை யாதியவும்
விரவிட விளக்கி வணங்கின ரங்கு
மேவிமெய் யருளநு பூதி
கரவற வமைந்து கவினுநாள் தமிழ்த்தேர்
கவித்துவச் சிவப்பிர காசன்.
(14)
என்னுநற் புலவன் றனைக்குக னருளா
லினிதிரு னாட்கொண்டு நற்றுதிப்பாப்
பன்னுற வினவி யன்னவற் றவனாப்
பண்ணியங் கவனொடு பலநாள்
பொன்னுல கிறைவன் போற்றுசீர் மயிலப்
பொருப்பினும் பொம்மைய புரத்தும்
மன்னுபு தரும வகைகள் செய்தடியார்
மனமல
ரகலரு மயிலோன். (15)