தமிழ்ச் சுவடியியல் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளையும் என்னுடைய இருபத்தைந்து ஆண்டுக்கால சுவடியியல் அனுபவங்களையும் இவ்வலைப்பதிவில் வெளியிட எண்ணியுள்ளேன்.
மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றிலிருந்து தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்குப் பரப்பி, பதிவு செய்யத் தொடங்கினான். இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று தமிழின் வளர்நிலையை மூன்றாக்குவர். சைகை மொழியில் நாடகத்தமிழ் பிறந்தது, ஒலிப்பு மொழியில் இசைத்தமிழ் வளர்ந்தது, எழுத்து மொழியில் இயற்றமிழ் நின்றது. சைகையில் பிறந்து நாடகத்தில் வளர்ந்து இயலில் நின்ற தமிழ்மொழி இன்று அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் என ஐந்தமிழாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
இயற்றமிழாக உருவெடுத்த நாள் தொடங்கி சுவடியியல் கால் பதிக்கத் தொடங்கியது எனலாம். மனிதன் தன்னுடைய எண்ணங்களைத் தனக்காகவோ பிறருக்காகவோ சிலபல செய்திகளைப் பனையோலை, இலை, மரப்பட்டை, மிருகத்தின் தோல், கல், செம்பு, தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற பொருள்களில் பதிவு செய்யத் தொடங்கினான். இவற்றில் எளிதில் இடம் பெயர்க்கக் கூடியது பனையோலையே. எனவே, பனையோலையில் இலக்கியம், இலக்கணம், சோதிடம், மருத்துவம், மாந்திரீகம், வான சாஸ்திரம், ஜாதகம், வீட்டுக்கணக்கு, விளைச்சல் கணக்கு, பத்திரப் பதிவுகள் போன்ற பல்வேறு செய்திகளை எழுதிப் பாதுகாத்தான். இவ்வாறு எழுதப்பெற்ற பனையோலைகள் குறைந்தது முந்நூறு முதல் நானூறு ஆண்டுகள் வாழக்கூடியதாக இருக்க, அவற்றைப் படியெடுத்து படியெடுத்து அடுத்த தலைமுறைக்கு நம்மவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இப்பனையோலைகளில் இடம்பெற்றுள்ள பொருண்மைகள், அவற்றின் வகைப்பாடுகள், அவை இருக்குமிடங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், மக்களிடத்தில் அவை குறித்த எண்ணம், தமிழறிஞர்கள் சுவடியியல் மீது கொண்ட பற்றும் மதிப்பும் பதிப்பும், அடுத்த தலைமுறைக்குப் பனையோலைச் செய்திகளைக் கொண்டு செல்லும் உத்திகள் போன்ற பல செய்திகள் குறித்து முறையாக உங்களிடம் உரையாடி உறவாட வருகின்றேன். வாழ்த்துங்கள். குறைகளைச் சுட்டுங்கள் வளர்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக