பன்னெடுங் காலமாக தமிழில் இலக்கண இலக்கியங்கள்
வரிவடிவில் எழுதத் தொடங்கியுள்ளனர். நூற்றாண்டு தோறும் தமிழ் எழுத்தின் வரிவடிவில்
மாற்றங்கள் பெற்று, வளர்ச்சி பெற்று இன்று
வழங்கும் தமிழ் வரிவடிவம்
நிலைகொண்டாலும் அவற்றிலும் கணிப்பொறியின் உதவியால் பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றன. கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை
தமிழ் வரிவடிவில் பலப்பல
மாற்றங்கள் பெற்றாலும் கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப்
பிறகு தமிழ் வரிவடிவில் பெருமளவில் மாற்றம் நிகழவில்லை என்றே சொல்லலாம். அப்படி நிகழ்ந்த சில மாற்றங்கள் நம்மால்
இன்று உணரக்கூடிய
நிலையிலேயே இருக்கின்றன.
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பெற்ற தமிழ் எழுத்து வரிவடிவங்களை மூன்று
நிலைகளாகப் பிரிக்கலாம். அவை,
1. வீரமாமுனிவர் காலத்திற்கு
முந்தைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் (ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டுக்களில்
உள்ள வரிவடிவம்), 2. வீரமாமுனிவர்
காலத்திற்குப் பிந்தைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம், 3. தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்ததிற்குப்
பிந்தைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் (அண்மைக்கால வரிவடிவம்) என்று பிரிக்கலாம்.
உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய்யெழுத்துக்கள் 216, ஆய்தவெழுத்து 1 ஆகத் தமிழெழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் உயிரெழுத்துக்கள் 12ம், மெய்யெழுத்துக்கள்
18ம் ஆக 30 எழுத்துக்கள் முதலெழுத்துக்கள் என்றும்;
உயிர்மெய் எழுத்துக்கள் 216ம், ஆய்தவெழுத்து 1ம் ஆக 217 எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்றும் குறிப்பிடுவர்.
பொதுவாக உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம்,
குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ("உட்பெறு புள்ளி வுருவா
கும்மே" என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவானது மகரக்
குறுக்கத்திற்கு எழுத்து வரிவடிவம் குறிப்பிட்டாலும் இன்று இவ்வடிவம்
வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது), ஆய்தக்குறுக்கம் என்று சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
இச்சார்பெழுத்துக்கள் பத்தில்
உயிர்மெய் எழுத்துக்களும் ஆய்தவெழுத்தும் மட்டுமே வரிவடிவம் கொண்டவை.
ஏனைய சார்பெழுத்துக்கள் எட்டும் வரிவடிவம்
இல்லாத ஒலிவடிவ எழுத்துக்கள் ஆகும். ஆகத் தமிழ் எழுத்தில் வரிவடிவ எழுத்துக்கள் என்றும்,
ஒலிவடிவ எழுத்துக்கள் என்றும் இரண்டு நிலைகளில்
எழுத்துக்கள் இருப்பது தெளிவு.
முழு வரிவடிவம் என்பது, சேர்க்கைகளோ இணைப்புக்களோ ஏதுமின்றி தனித்து நின்று
சுட்டக் கூடிய வரிவடிவமே முழு வரிவடிவமாகும். இந்நிலையில் அ, இ, ஈ,
உ, எ, ஐ,
ஒ ஆகிய உயிரெழுத்துக்கள் 7ம்;
ஃ
என்ற ஆய்தவெழுத்து 1ம்; க, ங,
ச, ஞ, ட,
ண, த, ந,
ப, ம, ய,
ர, ல, வ,
ழ, ள, ற,
ன ஆகிய அகரமேறிய உயிர்மெய்
எழுத்துக்கள் 18ம் ஆக 26
எழுத்துக்கள் முழு வரிவடிவ எழுத்துக்கள் ஆகும்.
சார்பு வரிவடிவம் என்பது, முழு வரிவடிவ எழுத்தின் மேலோ கீழோ முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ சேர்ந்தும் இணைந்தும்
உருவாகக் கூடிய வரிவடிவமாகும். தமிழெழுத்து 247இல்
முழு வரிவடிவம்
கொண்ட எழுத்துக்கள் 26
தவிர்த்து ஏனைய எழுத்துக்கள் எல்லாம் சார்பு வரிவடிவ
எழுத்துக்களாகும். அதாவது, உயிரெழுத்தில்
ஆ, ஊ, ஏ, ஓ, ஔ ஆகிய ஐந்தும்,
மெய்யெழுத்தில் க், ங், ச், ட்,
ண், த், ந்,
ப், ம், ய்,
ர், ல், வ்,
ழ், ள், ற்,
ன் ஆகிய 18ம், ஆகார
உயிர்மெய் எழுத்துக்கள் 18ம்,
இகர உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஈகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், உகர உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஊகார
உயிர்மெய் எழுத்துக்கள் 18ம்,
எகர உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஏகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஐகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஒகர
உயிர்மெய் எழுத்துக்கள் 18ம்,
ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம் ஆகச் சார்பு வரிவடிவ எழுத்துக்கள் 221 ஆகும்.
முழு வரிவடிவங்களுடன் சார்பு வரிவடிவக்
குறியீடுகள் இடையில் அல்லது ஈற்றில் இணையும் போதும், முன்னோ அல்லது பின்னோ சேரும் போதும், முன்னும் பின்னும் சேரும் போதும் உருவாக்கப்படும்
வரிவடிவங்களே சார்பு வரிவடிவங்களாகும். சார்பு வரிவடிவக் குறியீடுகள் தனித்து நின்றால் பொருள் தராது.
முழு வரிவடிவ
எழுத்துக்களுடன் சேரும் அல்லது
இணையும் போதுதான் முழு வரிவடிவங்களின் மாற்று வரிவடிவங்கள் உண்டாகின்றன.
இவ்வாறு முழு வரிவடிவங்களின் மாற்று வரிவடிவங்களே
சார்பு வரிவடிவங்கள் என்கிறோம்.
சார்பெழுத்துக் குறியீடுகள்
"மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்"
என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா 15இன்படி தமிழ்மொழியில் உள்ள 18 மெய்யெழுத்துக்களும் மேற்புள்ளி (சுழி) பெற்று இருந்தன என்பது தெளிவாகிறது. ஆகவே, மெய்யெழுத்துக்கள் 18ம் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களின் முழு வரிவடிவத்தின் மேல் நடுவில் வைக்க புள்ளி (சுழி) 1ம்; ஆகார, ஒகர மற்றும் ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்குப் பின்னொட்டு உயிர்மெய்க்குறி 'பக்கப்புள்ளி எனும் கால்' 1ம் (பழைய எழுத்தில் ணாகாரம், றாகாரம், னாகாரம், ணொகரம், றொகரம், னொகரம், ணோகாரம், றோகாரம், னோகாரம் ஆகியன துணைக்கால் பெறாது. பின்னொட்டாக அமையக்கூடிய பக்கப்புள்ளி எனும் காலுக்குப் பதிலாக 'கீழ்விலங்கு' போன்ற அமைப்பு அகரமேறிய உயிர்மெய் எழுத்தின் ஈற்றில் இணையும்); எகர, ஒகர, ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னொட்டு உயிர்மெய்க்குறி 'கோடு எனும் ஒற்றைக் கொம்பு' 1ம்; ஏகார, ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னொட்டு உயிர்மெய்க்குறி 'இரட்டைக்கோடு எனும் இரட்டைக் கொம்பு' 1ம்; இகர உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய் எழுத்தின் மேல்விலங்கு போன்ற குறியீடு 1ம்; ஈகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய்யெழுத்தின் மேல்விலங்கு இறுதியில் சுழித்தல் போன்ற குறியீடு 1ம் தேவைப்படுகின்றன.
என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா 15இன்படி தமிழ்மொழியில் உள்ள 18 மெய்யெழுத்துக்களும் மேற்புள்ளி (சுழி) பெற்று இருந்தன என்பது தெளிவாகிறது. ஆகவே, மெய்யெழுத்துக்கள் 18ம் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களின் முழு வரிவடிவத்தின் மேல் நடுவில் வைக்க புள்ளி (சுழி) 1ம்; ஆகார, ஒகர மற்றும் ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்குப் பின்னொட்டு உயிர்மெய்க்குறி 'பக்கப்புள்ளி எனும் கால்' 1ம் (பழைய எழுத்தில் ணாகாரம், றாகாரம், னாகாரம், ணொகரம், றொகரம், னொகரம், ணோகாரம், றோகாரம், னோகாரம் ஆகியன துணைக்கால் பெறாது. பின்னொட்டாக அமையக்கூடிய பக்கப்புள்ளி எனும் காலுக்குப் பதிலாக 'கீழ்விலங்கு' போன்ற அமைப்பு அகரமேறிய உயிர்மெய் எழுத்தின் ஈற்றில் இணையும்); எகர, ஒகர, ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னொட்டு உயிர்மெய்க்குறி 'கோடு எனும் ஒற்றைக் கொம்பு' 1ம்; ஏகார, ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னொட்டு உயிர்மெய்க்குறி 'இரட்டைக்கோடு எனும் இரட்டைக் கொம்பு' 1ம்; இகர உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய் எழுத்தின் மேல்விலங்கு போன்ற குறியீடு 1ம்; ஈகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு அகரமேறிய உயிர்மெய்யெழுத்தின் மேல்விலங்கு இறுதியில் சுழித்தல் போன்ற குறியீடு 1ம் தேவைப்படுகின்றன.
உகர உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்குப்
கீழ்விலங்கு போன்ற குறியீடும், அகர ஈறும், ஞகர ஈற்றை மேற்கொணராது அகரம் எழுதுவது போல் எழுதி அகர ஈற்றைக் கீழ்க் கொணராது
எழுதுதல் போன்ற மூன்று குறியீடுகள் தேவைப்படுகின்றன (கீழ்விலங்கு என்ற குறியீட்டைப் பயன்படுத்தி க, ட, ம, ர,
ள, ழ ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களை கு,
டு, மு, ரு,
ளு, ழு என்ற உகர உயிர்மெய் எழுத்துக்களாகவும், அகர ஈறு என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ங,
ச, ப, ய,
வ ஆகிய அகரமேறிய உயிர்மெய்
எழுத்துக்களை ஙு, சு, பு, யு, வு
என்ற உயிர்மெய் எழுத்துக்களாகவும், ஞகர ஈற்றை மேற்கொணராது அகரம் எழுதுவது போல் எழுதி அகர ஈற்றைக் கீழ்க்
கொணராது எழுதுதலாகிய குறியீட்டைப் பயன்படுத்தி ஞ, ண, த,
ந, ல, ற,
ன ஆகிய அகரமேறிய உயிர்மெய்
எழுத்துக்களை ஞு, ணு, து, நு, லு,
று, னு என்ற உயிர்மெய் எழுத்துக்களாகவும் உருவாக்குகின்றனர்).
ஊகார உயிர்மெய் எழுத்துக்கள் உருவாவதற்கு கீழ்விலங்குக் குறியீடு பெற்ற உகர உயிர்மெய் எழுத்தின்
ஈற்றில் சுழிப்புக் குறியும், அகர
ஈறு பெற்ற உகர உயிர்மெய் எழுத்தின் ஈற்றில் ஆகார உயிரெழுத்தின் ஈறும், ஞகர ஈற்றை மேற்கொணராது அகரம் எழுதுவது போல்
எழுதி அகர ஈற்றைக் கீழ்க் கொணராது எழுதிய உகர உயிர்மெய் எழுத்தின் ஈற்றில் ஈறு பற்றி வலப்பக்கம்
ஈர்த்து அக்கோடு தூண்போல் கீழ் இழுத்தல் என்ற குறியீடும் ஆகிய மூன்று
குறியீடுகள் தேவைப்படுகின்றன (கீழ்விலங்கு ஈற்றுச் சுழித்தல் முறையில் டு, மு, ரு, ளு, ழு என்ற உகர உயிர்மெய் எழுத்துக்கள் டூ, மூ, ரூ, ளூ,
ழூ என்ற ஊகார உயிர்மெய் எழுத்துக்களாகவும்,
அகர ஈறு கொண்ட ஙு, சு, பு,
யு, வு ஆகிய உகர உயிர்மெய் எழுத்துக்களின் ஈற்றில் ஆகார ஈற்று
உயிர்க்குறி இணைந்து ஙூ,
சூ, பூ, யூ,
வூ என்ற ஊகார உயிர்மெய்
எழுத்துக்களாகவும், ஞகர ஈற்றை மேற்கொணராது
அகரம் எழுதுவது போல் எழுதி அகர ஈற்றைக் கீழ்க் கொணராது எழுதிய உகர உயிர்மெய்யெழுத்தின்
ஈற்றில் ஈறு பற்றி வலப்பக்கம் ஈர்த்து அக்கோடு தூண்போல் கீழ் இழுத்தல் என்ற
முறையில் ஞு, ணு, து, நு,
லு, று, னு
என்ற உகர உயிர்மெய் எழுத்துக்கள் ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ,
னூ என்ற ஊகார உயிர்மெய் எழுத்துக்களாகவும்
உருவாக்குகின்றனர்).
ஐகார உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குவதற்கு 'இணைகோடு எனும் இணைகொம்பு' என்ற
உயிர்மெய்க்குறி 1ம்; ஔகார உயிர்மெய் எழுத்துக்களை
உருவாக்குவதற்கு முன்னொட்டாக கோடு எனும் ஒற்றைக்கொம்பும், பின்னொட்டாக ள என்ற குறியீடு 1ம் தேவைப்படுகிறது. ஊகார உயிரெழுத்தை உருவாக்குவதற்கும் 'ள' என்ற இவ்வுயிர்மெய்க்குறி
தேவைப்படுகிறது. ஆகச் சார்பு
வரிவடிவ எழுத்துக்களை உருவாக்குவதற்கு
14 வகைக் குறியீடுகள் தேவைப்படுகின்றன.
தமிழெழுத்துக்களை
வரிவடிவில் உருவாக்குவதற்கு முழு வரிவடிவ எழுத்துக்கள் 26ம், அவற்றுடன்
சார்பு வரிவடிவக்
குறியீடுகள் 14ம் ஒட்டியோ
இணைந்தோ 221 சார்பு
வரிவடிவங்களை உருவாக்குகின்றனர். ஆக முழு வரிவடிவ எழுத்துக்களையும் குறியீடுகளாகக் கொண்டால் தமிழெழுத்துக்கள் 30 எழுத்துக் குறியீடுகளே எனலாம்.
ஒட்டுவகை எழுத்துக்கள்
முழு வரிவடிவ எழுத்தை அடிப்படையாகக் கொண்டு சார்பு
வரிவடிவக் குறியீடுகளின் உதவியுடன் நான்கு நிலைகளில் ஒட்டுக்கள் அமைகின்றன. இவ்வொட்டுக்கள் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ, முன்னொட்டும் பின்னொட்டும் இணைந்தோ, மேல் நடுவொட்டாகவோ அமையும்.
முழு வரிவடிவ எழுத்தை அடிப்படையாகக் கொண்டு
முன்னொட்டாக 'ஒற்றைக்கோடு எனும்
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கோடு இரட்டைக்
கொம்பு, இணைகோடு எனும் இணைகொம்பு' என்ற சார்பு வரிவடிவக் குறியீடுகள் சேர்ந்த எழுத்துக்களை
முன்னொட்டு எழுத்துக்கள் என்றும்,
முன்னொட்டாக 'ஒற்றைக்கோடு எனும் ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கோடு எனும் இரட்டைக்கொம்பு' என்ற சார்பு வரிவடிவக் குறியீடுகளும், பின்னொட்டாக 'பக்கப்புள்ளி எனும் கால், ளகரம்'
என்ற சார்பு வரிவடிவக் குறியீடுகளும்
சேர்ந்த எழுத்துக்களை முன் மற்றும் பின்னொட்டு எழுத்துக்கள் என்றும், பின்னொட்டாக 'பக்கப்புள்ளி எனும் கால், ளகரம்' என்ற சார்பு வரிவடிவக் குறியீடுகள் சேர்ந்த எழுத்துக்களைப் பின்னொட்டு எழுத்துக்கள்
என்றும், மேல் நடுவொட்டாக
'மேற்புள்ளி(சுழி)' என்ற சார்பு வரிவடிவக் குறியீடுகள் சேர்ந்த
எழுத்துக்களை மேல் நடுவொட்டு எழுத்துக்கள் என்றும் அழைக்கலாம்.
1. முன் ஒட்டெழுத்துக்கள்
முழு வரிவடிவங்களான க, ங, ச, ஞ,
ட, ண, த,
ந, ப, ம,
ய, ர, ல,
வ, ழ, ள,
ற, ன ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18இன் முன்னொட்டாக முறையே ஒற்றைக்கோடு எனும் ஒற்றைக் கொம்பு மற்றும் இரட்டைக்கோடு எனும் இரட்டைக் கொம்பு என்ற சார்பு
வரிவடிவக் குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் கெ, ஙெ, செ,
ஞெ, டெ, ணெ,
தெ, நெ, பெ,
மெ, யெ, ரெ.
லெ, வெ, ழெ, ளெ, றெ,
னெ என்ற 18 எகர உயிர்மெய் எழுத்துக்களும்; கே, ஙே, சே,
ஞே, டே, ணே,
தே, நே, பே,
யே, ரே, லே,
வே, ழே, ளே,
றே, னே என்ற 18 ஏகார உயிர்மெய் எழுத்துக்களும் உண்டாகின்றன.
வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரை எகர ஏகார உயிர்மெய் குறியீட்டெழுத்தாக
ஒற்றைகோடு எனும் ஒற்றைக்கொம்பு என்ற வரிவடிவமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. தொல்காப்பியர்
மெய்யெழுத்துக்களும், எகர
எழுத்தும் புள்ளி பெற்று வரும்
என்றார். ஆனால்
ஓலைச்சுவடியில் புள்ளி எழுத்துக்கள் இல்லாததால் எகர ஏகார உயிர்மெய் எழுத்துக்களின்
வரிவடிவமானது குறில்-நெடில் வேறுபாடு இன்றி எகர உயிர்மெய் எழுத்துக்களாகவே
எழுதப்பட்டடு இருத்தலைக் காணமுடிகிறது.
2. முன் மற்றும் பின் ஒட்டெழுத்துக்கள்
முழு வரிவடிவங்களான க, ங, ச, ஞ,
ட, ண, த,
ந, ப, ம,
ய, ர, ல,
வ, ழ, ள,
ற, ன ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18இன் முன்னொட்டாக ஒற்றைக்கோடு எனும் ஒற்றைக்கொம்பு மற்றும் இரட்டைக்கோடு எனும் இரட்டைக்கொம்பு என்ற சார்பு வரிவடிவக்
குறியீடுகளும், பின்னொட்டாக மேற்புள்ளி(சுழி) என்ற சார்பு வரிவடிவக்
குறியீடும் முறையே சேர்வதன் மூலம் கொ, ஙொ, சொ, ஞொ, டொ, ணொ,
தொ, நொ, பொ,
மொ, யொ, ரொ,
லொ, வொ, ழொ,
ளொ, றொ, னொ
என்ற 18 ஒகர உயிர்மெய் எழுத்துக்களும்,
கோ, ஙோ, சோ,
ஞோ, டோ, ணோ,
தோ, நோ, போ,
மோ, யோ, ரோ,
லோ, வோ, ழோ,
ளோ, றோ, னோ
என்ற 18 ஓகார உயிர்மெய்
எழுத்துக்களும் உண்டாகின்றன. இவற்றில் ணொ, றொ, னொ, ணோ, றோ, னோ ஆகிய ஆறு வரிவடிவங்கள் தந்தை பெரியாரின் எழுத்துச்
சீர்திருத்தங்களால் உருவானவை. இவ்வெழுத்துக்களில் முன்னொட்டு தவிர்த்த நிலையில் உள்ள
ணா, றா, னா என்ற வடிவங்களுக்கு ண, ற, ன என்ற அகரமேறிய உயிர்மெய்யெழுத்தின் ஈற்றில் கீழ்விலங்கு சேர்ந்தது போல் காணப்படும். இதுவே ஓலைச்சுவடிகளில் உள்ள
எழுத்துக்களாகும். அண்மைக்கால
எழுத்து வடிவங்கள் ஓலைச்சுவடிகளில் இல்லை.
வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரை ஒகர
ஓகார முன்னொட்டு உயிர்மெய்க் குறியீட்டெழுத்தாக ஒற்றைக்கோடு எனும் ஒற்றைக்கொம்பும் பின்னொட்டு உயிர்மெய்க் குறியீட்டெழுத்தாக பக்கப்புள்ளி எனும் காலும் என்ற இரு வரிவடிவங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தொல்காப்பியர் மெய்யெழுத்துக்களும்,
ஒகர எழுத்தும் புள்ளி பெற்று வரும் என்றார். ஆனால் ஓலைச்சுவடியில் புள்ளி எழுத்துக்கள்
இல்லாததால் ஒகர ஓகார உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவமானது குறில்-நெடில்
வேறுபாடு இன்றி ஒகர உயிர்மெய் எழுத்துக்களாகவே எழுதப்பட்டு இருத்தலைக் காணமுடிகிறது.
முழு வரிவடிவங்களான க, ங, ச,
ஞ, ட, ண,
த, ந, ப,
ம, ய, ர,
ல, வ, ழ,
ள, ற, ன
ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18இன் முன்னொட்டாக ஒற்றைக்கோடு எனம் ஒற்றைக்கொம்பு என்ற சார்பு வரிவடிவக் குறியீடும், பின்னொட்டாக ளகரம் என்ற உயிர்மெய்க்
குறியீடும் முறையே சேர்வதன் மூலம் கௌ, ஙௌ, சௌ,
ஞௌ, டௌ, ணௌ,
தௌ, நௌ, பௌ,
மௌ, யௌ, ரௌ,
லௌ, வௌ, ழௌ,
ளௌ, றௌ, னௌ
என்ற 18 ஔகார உயிர்மெய்
எழுத்துக்கள் உண்டாகின்றன.
4. மேல்நடு ஒட்டெழுத்துக்கள்
முழு வரிவடிவங்களான க, ங, ச, ஞ,
ட, ண, த,
ந, ப, ம,
ய, ர, ல,
வ, ழ, ள,
ற, ன ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18இன் நடுப்பகுதியின் மேற்புள்ளி (சுழி) வைப்பதன் மூலம் க், ங், ச், ஞ்,
ட், ண், த்,
ந், ப், ம்,
ய், ர், ல்,
வ், ழ், ள்,
ற், ன் என்ற 18 மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன.
மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் புள்ளிபெற்று வரும்
என்பதை தொல்காப்பியர், 'மெய்யின்
இயற்கை புள்ளியொடு நிலையல்' என்று
எழுத்ததிகார நூற்பா 15இல்
குறிப்பிடுகின்றார். அடுத்த நூற்பாவில், 'எகர ஒகரத் தியற்கையும் அற்றே' என்று எகர ஒகரங்களின் நிலையை
எடுத்துரைக்கின்றார். மெய்யெழுத்துக்கள் எவ்வாறு எழுத்தின்மேல் புள்ளி பெற்று வருமோ
அதேபோல் எகர ஒகர எழுத்துக்களும்
எழுத்தின்மேல் புள்ளி பெற்று வரும் என்கிறார். புள்ளி பெறாத எகர ஒகர எழுத்துக்களை ஏகார
ஓகார எழுத்துக்களாகக் கொண்டார் எனலாம். மெய்யெழுத்துக்கள் 18ம், உயிரெழுத்துக்கள் 2ம் ஆக 20 எழுத்துக்கள் புள்ளி பெற்றன என்றாலும் ஓலைச்சுவடியில் இவ்வெழுத்துக்கள்
வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரை புள்ளி இன்றியே எழுதப்பெற்று இருத்தலைக்
காணமுடிகிறது.
முழு வரிவடிவங்களான உ, ஒ ஆகிய இரண்டு உயிரெழுத்துக்களில் முறையே
மேல் ஒட்டாகவும், பின்னொட்டாகவும்
ளகரம் என்ற சார்பு வரிவடிவக் குறியீடு சேர்ப்பதன் மூலம் முறையே ஊ, ஔ ஆகிய இரண்டு உயிர் நெடிலெழுத்துக்கள்
உண்டாகின்றன. இவற்றில் ஊ
என்ற உயிர் நெடிலானது ஓலைச்சுவடியில் 'உள' என்றே
எழுதப்பெற்றிருத்தலைக் காணமுடிகிறது.
மேற்காணும் நான்கு ஒட்டு வகைகள் மூலம் மேற்புள்ளி, ளகரம், பக்கப்புள்ளி எனும் கால், மேல்விலங்கு மற்றும் கீழ்விலங்கு, ஒற்றைக்கோடு எனும் ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கோடு எனும் இரட்டைக்கொம்பு, இணைகோடு
எனும் இணைகொம்பு என்ற ஆறு சார்புக் குறியீடுகளைக் கொண்டு 146 அண்மைக்கால தமிழ் வரிவடிவ எழுத்துக்களை
உருவாக்கலாம். இவற்றில்
ணா, றா, னா, ணை, லை,
ளை, னை, ணொ,
றொ, னொ, ணோ,
றோ, னோ ஆகிய 13 வரிவடிவங்கள் ஓலைச்சுவடிகளில் இல்லாதவை. இவ்வெழுத்துக்களில் ணா, றா, னா
ஆகிய ஆகார உயிர்மெய்
எழுத்துக்களும், ணொ, றொ, னொ, ணோ,
றோ, னோ ஆகிய ஒகர ஓகார உயிர்மெய் எழுத்துக்களின் முன்னொட்டு
தவிர்த்த உயிர்மெய் எழுத்துக்கள் ண, ற, ன என்ற அகரமேறிய
உயிர்மெய் எழுத்தின் ஈற்றில் பிறை தொட்டாற்போல் அமைந்த எழுத்துக்களும்; ணை, லை,
ளை, னை ஆகிய ஐகார உயிர்மெய் எழுத்துக்கள் ண, ல, ள, ன
ஆகிய அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களின் முன்னிணைப்பாக உகர உயிரெழுத்தின் தொடக்கப்
பகுதியை இணைத்து எழுதிய எழுத்துக்களும் ஆகிய எழுத்துக்கள் ஓலைச்சுவடியில்
காணப்படுவன. ஆக அண்மைக்கால தமிழ் எழுத்தின் ஒட்டுவகை எழுத்துக்கள் 146 என்றும், ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள ஒட்டுவகை எழுத்துக்கள் 133
(146-13=133) என்றும் கொள்ளலாம்.
ஓலைச்சுவடியில் ஒட்டுவகை எழுத்துக்கள்
ஓலைச்சுவடியில், தொல்காப்பியரின் கூற்றுப்படி எகரமும் ஒகரமும் புள்ளி
பெற்று வரும் என்பதால், அதன்
எகர உயிர்மெய்களும் ஒரக உயிர்மெய்களும் புள்ளி பெற்று வரும் என்பதாகக் கருதலாம்.
ஓலையில் புள்ளி எழுத்துக்கள்
இல்லாததால் எகரமும் ஒகரமும் முறையே ஏகாரமாகவும் ஓகாரமாகவும் வரிவடிவில் ஒன்று
போலவே அமைதலைக் காணமுடிகிறது. இவ்வகையில் பார்க்கும் போது தமிழில் தொல்காப்பியரின்
கூற்றுப்படி, உயிரெழுத்துக்கள்
12ம், மெய்யெழுத்துக்கள் 18ம் இணைந்த முதலெழுத்து 30இல் 20 எழுத்துக்களும்; வரிவடிவம் கொண்ட சார்பெழுத்துக்கள் 216இல் 36 எழுத்துக்களும்; ஆய்தவெழுத்து 1ம் ஆக 57 எழுத்துக்கள் புள்ளி(சுழி) எழுத்துக்களாக இருந்துள்ளன. அதாவது, உயிரெழுத்தில் எகரம், ஒகரம் ஆகிய 2ம்; மெய்யெழுத்துக்கள்
18ம்; உயிர்மெய் எழுத்தில் எகர உயிர்மெய்
எழுத்துக்கள் 18ம்; ஒகர உயிர்மெய் எழுத்துக்கள் 18ம்; ஆய்தவெழுத்து 1ம் ஆக 57 எழுத்துக்கள் புள்ளி (சுழி)
பெறும் எழுத்துக்களாக இருந்துள்ளன. இவற்றில் ஆய்தவெழுத்து நீங்களாக ஏனைய 56 எழுத்துக்களும் மேற்புள்ளி (சுழி) என்ற ஒரு குறியீட்டினால் உருவாக்கப்பெற்ற
ஒட்டுவகை எழுத்துக்களாக அமைகின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் வரிவடிவ
எழுத்துக்களில் எழுத்துக்களின் மேல்நடு ஒட்டாக புள்ளி வைக்கும் வழக்கம்
ஒழிந்திருக்கிறது. கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பெற்ற
ஓலைச்சுவடிகளே இன்று நமக்குக் கிடைக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் ஓலைச்சுவடிகளின் காலம்
ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளாக இருக்க, அக்காலத்தில்
எழுதப்பெற்ற தமிழ் எழுத்து வரிவடிவில் புள்ளி நீக்கப்பெற்றிருக்கும் போது அதற்குப்
பிறகு எழுதப்பெற்ற ஓலைச்சுவடி எழுத்துக்களில் புள்ளி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
ஓலைச்சுவடியில் புள்ளி எழுத்துக்கள்
இல்லாததற்குப் பலர் பல காரணங்களைச் சொல்கின்றனர்.
அவை
பற்றியும் பிறவும் பின்வரும் வாரங்களில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக