தங்களின் எண்ணங்களைப் பதிவு
செய்யவேண்டும் என்று மனிதன் நினைத்தானோ அன்றே எழுத்து வடிவங்கள் தோன்றலாயின. இவ்வெழுத்து வடிவங்கள் காலந்தோறும் மாறிமாறி
வந்துள்ளன. அதேபோல் எழுதுபொருள்களும்
காலந்தோறும் மாறிமாறி வந்துள்ளன.
எழுதப்படும் செய்தியின் பாதுகாப்பு கருதியும் வாழ்நாள் கருதியும்
எழுதுபொருள்கள் வேறுபட்டு இருக்கின்றன.
அரசாங்கச் செய்திகளைச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளிலும்; இலக்கணம், இலக்கியம், மருத்துவம், மாந்திரீகம் மற்றும்
சோதிடச் செய்திகளைப் பனையோலை மற்றும் சீதாள ஓலைகளிலும் எழுதி இருக்கின்றனர். பெரும்பாலும் இலக்கண இலக்கியச் செய்திகளை சீதாள
ஓலைகளிலேயே எழுதியிருக்கின்றனர் என்று அறியமுடிகிறது.
எழுத்தாணி கொண்டு பனையோலை மற்றும்
சீதாள ஓலைகளில் எழுதப்படுவதை ஏடெழுதுதல் என்றும், ஓலையெழுதுதல்
என்றும் சொல்வர். இவ்வோலை எழுதுவோரை ஏடெழுதுபவர்
என்றழைப்பர். ஏடெழுதுபவரால் அக்காலத்தில்
(அச்சு நூல்கள் தோன்றுவதற்கு முன்) மூன்று நிலைகளில் ஏடுகள் எழுதப்பெற்று
இருக்கின்றன. அவை,
1. மூல ஏடெழுதுதல்
2. நகலேடு எழுதுதல்
3. திருத்திய ஏடெழுதுதல்
என்பனவாகும்.
1. மூல ஏடெழுதுதல்
எழுதப்படும்
முதற்படியே மூல ஏடாகும். மூல
ஏடெழுதுதல் என்பது, நூலாசிரியர் தனக்காகத் தானாகவோ தன் தலைமாணாக்கனைக் கொண்டோ தன்
மகனைக் கொண்டோ ஏடெழுதுவதில் வல்லானைக் கொண்டோ முதன் முதல் எழுதுவதாகும். மூல நூலும் மூல நூலிற்கு வரைந்த உரையும் முதற்
நூலாகும். மூல ஏட்டில் உருவான இலக்கண
இலக்கியம், மருத்துவம் போன்றன பல தலைமுறைகள் வாய்மொழியாக வளர்ந்து பின்னரே ஏட்டில்
பழங்காலத்தில் எழுதியிருக்கின்றனர்.
இலக்கண உரைகள், இலக்கிய உரைகள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவ நூல்கள்,
நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் போன்றன இதில் அடங்கும். இவற்றில் சில மட்டுமே நூலாசிரியர் சொல்லச்
சொல்ல பிறர் எழுதியவையாகவோ நூலாசிரியர் எழுதியவையாகவோ இருக்கின்றமையைக்
காணமுடிகிறது. குறிப்பாக, இறையனார்
அகப்பொருள் உரை ஒன்பது தலைமுறை வாய்மொழியாக வழங்கி வந்து ஏட்டில்
எழுதப்பெற்றிருக்கிறது. இதனை, “மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார். அவர் தேனூர்க்கிழார்க்கு உரைத்தார். அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார். அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார். அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப்
பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார். அவர்
மாதளவனார் இளநாகர்க்கு உரைத்தார். அவர்
திருக்குன்றத்தாசிரியர்க்கு உரைத்தார்.
அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்” என்ற இறையனார் அகப்பொருள் உரைக்குறிப்பால் அறியமுடிகிறது.
“தர்மபரிபாலன
நாராயணன் செட்டியார் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பனானவர் நூற்கப்பட்ட இராமாயணக்கதை
விருத்தத்துக்குப் பொருள் விளக்குவதரிதென்று பெரியோர்கள் சொல்லுவதாகிய கதைக்குத்
தெரிந்த மாத்திரம் கிட்கிந்தா காண்டம் ஒரு காண்டத்திற்கு உரைசெய்து அதற்கு
இலக்கணச் சொல்லுமெழுது வேணுமென்று சொன்ன படியினாலே எழுதி முடிந்தது” என்பதில் உரையாசிரியர் தானே ஏடெழுதியமையும்,
“பாலபாரதி வெங்கிடாசலமய்யன் குமாரன் காமாட்சி அய்யன், புதுக்கோட்டையில் இருக்கும்
பூமன் செட்டியார் குமாரன் திருப்பூமன் செட்டியாருக்குச் சொல்ல தேரூர்ந்தபுராணம்
எழுதி நிறைந்தது” என்பதில் ஒருவர் சொல்ல
பிறிதொருவர் ஏடெழுதியமையையும் அறியமுடிகிறது.
கோவைமொழி - 1. நாம் வளர, பிறரை வளர்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக