திங்கள், 11 மே, 2015

ஓலைச்சுவடியியல் - நூல்

             
 ஓலைச்சுவடியியல் எனும் புத்தகம் முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்களால் தஞ்சாவூர் பாமொழி பதிப்பகத்தின் வழி திசம்பர் 2013இல் வெளியிடப்பட்டது.  முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்களின் 25ஆண்டுக்கால சுவடியியல் அனுபவத்தை இந்நூலில் கொட்டித்தீர்த்துள்ளார்.  இது இவரின் இருபத்தைந்தாவது வெளியீடாகும்.  
            இந்நூலில் பழங்கால எழுதுபொருட்கள், ஏடு தயாரித்தலும் எழுதுதலும், சுவடிகளில் எழுத்துக்களும் குறியீடுகளும், சுவடி திரட்டுதல், சுவடிகளைப் பாதிக்கும் காரணிகள், சுவடிகளைச் செப்பனிடும் முறைகள், சுவடிகளைப் பாதுகாக்கும் கருவிகள், சுவடிகளைப் பாதுகாக்கும் மருந்துகள், சுவடி நூலகங்கள், சுவடி நூலகப் பாதுகாப்பு முறைகள், பழந்தமிழ் நூல் உரையாசிரியர்கள், பழந்தமிழ் நூற்பதிப்பு முன்னோடிகள், மூலபாடமும் பாடவேறுபாடும், சுவடிகளின் காலம் அறியும் முறைகள், காலக்குறிப்பால் அறியத்தகும் பழக்க வழக்கங்கள், சுவடியியல் கலைச்சொற்கள் போன்ற பதினாறு தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
         இந்நூலுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ம. திருமலை அவர்கள் அணிந்துரையும், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கியுள்ளனர்.  அவர்களின் கூற்றாகவே இந்நூலை அறிமுகப்படுத்துகிறேன்.  பேராசிரியர் முனைவர் ம. திருமலை அவர்கள்,
            "ஒண்டமிழ்த்தாய்ச் சிலம்படியின் முன்னேற்றம்
                               ஒச்வவொன்றும் உன்முன் னேற்றம்!
            கண்டறிவாய்! எழுந்திருநீ! இளந்தமிழா!
                               கண்விழிப்பாய்! இளந்தொ ழிந்த
            பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை
                               அனைத்தையும் நீபடைப்பாய்! இந்நாள்
             தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும்
                               துறைதோறும் துடித்தெ ழுந்தே!
எனத் தமிழுணர்ச்சி பெருகப் பாடிய பாவேந்தர் 'இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம்' என்று கூறியதற்கு ஏற்ப தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைத் தலைவர் முனைவர் மோ.கோ. கோவைமணியின் ஓலைச்சுவடியியல் என்னும் இந்நூல் அவரின் இருபத்தைந்து ஆண்டுக்கால சுவடியியல் அறிவின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
       தமிழ்ப் புலவர்கள் இல்லையேல், தமிழ் சுட்டிக்காக்கப்படாமல் தறிகெட்டுப் போயிருக்கும்! தான்தோன்றிகள் தலைமிஞ்சி நின்றிருப்பர்! அவர்கள் ஆரவாரமின்றிச் செய்த செயற்கரிய செயல்களினால்தான் தமிழ்மொழி செம்மொழித் தரத்திற்கு உயர்ந்துள்ளது.
      இவ்வாறு தமிழ் இன்று நிலைகொண்டு இருப்பதற்கு ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கண இலக்கியங்களே ஆகும்.  உலகம் போற்றும் தமிழருடைய அடையாளங்கள் பல்வேறு பதிவுகளில் நிலைகொண்டிருப்பதுபோல் ஓலைச்சுவடிகளில் இலக்கணம், இலக்கியம், சித்த மருத்துவம், சோதிடம், கணிதம், மாந்திரீகம்,ஆவணம், அரசாங்க ஆணை, அரசாங்கக் குறிப்பு, வீட்டுக்குறிப்பு போன்ற இன்னோரன்ன செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
      ஓலைச்சுவடியியலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முழுமையான ஒரு நூல் இதுவரை இல்லையே என்கிற குறையை இந்நூல் போக்குகின்றது.  பண்டைக் காலத்தில் ஓலைச்சுவடித் தோற்றம் தொடங்கி இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இதன் பஃஙகளிப்பு முதலாக பலப்பல கருத்தாழம் மிக்க கருத்துக்களை இந்நூலாசிரியர் இவற்றில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
     தமிழ்ச் சுவடிகளைப் படிப்பதற்குத் தமிழெழுத்தின் வரிவடிவங்கள் ஓலைச்சுவடிகளில் எவ்வாறு எழுதப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டால் எளிதில் ஓலைச்சுவடிகளைப் படித்துவிடலாம் என்றும், தமிழெழுத்தின் வரிவடிவமைப்பை மூன்று நிலைகளாகப் பிரித்து அவ்வெழுத்துக்களை ஓலையில் எழுதும்போது எவ்வாறு அமைகிறது என்றும், இவ்வாறு எழுதப்பெற்ற ஓலைச்சுவடியைப் படிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கான காரணங்களை முறைப்படுத்திக் கூறி அவற்றைக் களைவதற்கு எடுத்துரைக்கும் பாங்கு இந்நூல் முழுமையையும் உடனடியாக படிக்கத் தூண்டுகிறது.
     அக்காலம் முதல் இக்காலம் வரை ஓலைச்சுவடிப் பாதுகாப்பு முறைகள் எவ்வாறு அமைக்கப்பெற்றிருக்கின்றன, இன்று உலகெங்கும் ஓலைச்சுவடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன,  சுவடியியல் கலைச்சொற்கள் போன்ற பல தகவல்கள் இந்நூலில் பொழியப்பட்டுள்ளன.
      ஓலைச்சுவடியியலைப் பற்றி அறிந்துகொள்வார்க்கு இந்நூல் பாட நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
       உண்மைத் தமிழனுக்குத் தமிழின் மீது உள்ள பற்றைப்போல் இவருக்கு ஓலைச்சுவடியின்பால் உள்ள ஈடுபாட்டை இந்நூல் தெளிவாக்குகிறது, பாராட்டுகிறேன்" என்கிறார்.   தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் சுவடிப்புலத் தலைவரும் முன்னாள் ஓலைச்சுவடித்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள்,
        "தமிழ் ஓலைச்சுவடிகள் தமிழரின் பல்வேறுபட்ட அறிவினை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.  ஓலைச்சுவடிகளின் தோற்றம் தொடங்கி அச்சு நூல்கள் வரையுள்ள பல்வகைப் பொருண்மைகளை எடுத்துக் கூறும் ஓலைச்சுவடியியல் பற்றி விளக்கும் இந்நூல் இத்துறையில் வெளிவருவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.  இந்நூலினை முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்கள் அரிதின் முயன்று தொகுத்து வெளியிட்டுள்ளார்.  சுவடியியலைப் பற்றிய அடிப்படைச் செய்திகள் அறிய விழையும் ஆர்வலர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுடையதாகும்.
     பழங்கால எழுதுபொருள்கள் எவையெவை என்பது பற்றியும் ஏடுகள் தயாரித்தலும் எழுதுதலும் பற்றியும் முதலில் இவர் விளக்குகிறார்.  அடுத்து, ஓலைச்சுவடிகளில் எழுத்துக்களும் குறியீடுகளும் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார்.  காலந்தோறும் சுவடிகள் திரட்டும் பணிகள் குறித்தும் போற்றும் இவர் சுவடிகள் திரட்டுதலின் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துரைக்கின்றார்.
      நீண்ட காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிவிற்குள்ளாவதைச் சுட்டிக்காட்டி அவற்றை இயற்கை அழிவு, செயற்கை அழிவு, அறியாமை அழிவு என வகைப்படுத்தியுள்ளார்.  இவ்வாறு அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்ட சுவடிகளைச் செப்பனிடும் முறைகள் குறித்தும் விவரிக்கின்றார்.
     சுவடிகளைப் பாதுகாக்கும் நவீன கருவிகள் பற்றிய விவரங்களை இந்நூலாசிரியர் தொகுத்துத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  ஓலைச்சுவடிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு நூலகங்களிலும், ஆய்வுக் கூடங்களிலும்,  வீடுகளிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மருந்துப் பொருள்களைக் குறிப்பிட்டிருப்பது அனைவருக்கும் பயனுடையதாகும்.
     இந்தியச் சுவடி நூலகங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களைத் திரட்டி அளித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.  இத்தகைய சுவடி நூலகப் பாதுகாப்பு முறைகளை மரபுவழிப் பாதுகாப்பு, அறிவியல் வழிப் பாதுகாப்பு எனத் தெளிவாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
     பழந்தமிழ்நூல் உரையாசிரியர்களான இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர்களின் சிறப்புகளையும் பழந்தமிழ் நூற்பதிப்பு முன்னோடிகளின் சிறப்புகளையும் இந்நூலில் சேர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    சுவடிகள் பற்றிய அரிய தகவல்களை அறிவதற்கு இந்நூல் பெருந்துணையாகும் என நம்புகிறேன்.  நூலாசிரியர் இவ்வகையில் மேலும் பல நூல்களை உருவாக்கியளிக்க வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன்" என்கின்றார்.
       இந்நூல் 2014ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் பரிசைப் பெற்றுள்ளது.  இப்பரிசை 14.04.2015அன்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் மாண்புமிகு துறை அமைச்சர் கே.சி. வீரமணி அவர்கள் அளித்தார்.


        இப்பரிசினைப் பெற்றதைப் பாராட்டும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப் புலத்தில் 30.4.2015 அன்று பதிவாளர் முனைவர் கணேஷ்ராம் அவர்கள் தலைமையிலும், நிதி அலுவலர் திரு. பார்த்திபன் அவர்கள் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெற்றது.  இதில் முன்னாள் சுவடிப் புலத்தலைவர் முனைவர் ந. அதியமான், இன்னாள் சுவடிப்புலத்தலைவர் முனைவர் சு. இராசவேலு, ஓலைச்சுவடித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.கலாஸ்ரீதர், கல்வெட்டியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

       
இந்நூல் சுவடியியல் படிக்கும் மாணவர்களுக்கு பாட நூலாக பல கல்லூரிகளில் வைத்துள்ளனர்.

1 கருத்து:

  1. தங்களின் நூல் பரிசு பெற்றமையறிந்து மகிழ்ச்சி. நூலைப் பற்றிய அறிமுகம் அருமையாக உள்ளது. ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு