புதன், 22 ஜூலை, 2015

தமிழும் விசைப்பலகையும் - நூல்

தமிழும் விசைப்பலகையும் - நூல் 

(ஆசிரியர் : முனைவர் மோ.கோ. கோவைமணி)


   மோ.கோ. கோவைமணி அவர்களால் 2000இல் தஞ்சை பாமொழி பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு நூல் தமிழும் விசைப்பலகையும்.  இந்நூல் பற்றிய அறிமுகம் இங்குச் செய்யப்படுகிறது.

     பண்டைக்கால வரலாற்று மொழிகளுள் தமிழும் ஒன்று. சைகையில் தோன்றி ஓசையில் வளர்ந்து கருவியில் நிலைபெற்றது தமிழ்மொழி.  தமிழ் மொழியின் எழுத்தும் வரலாறு கொண்டதுதான்.  காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாறுபாடடைந்து வந்திருக்கிறது.  நிலைபெற்ற எழுத்துவடிவம் இதுதான் என்று எதையும் சொல்ல முடியவில்லை.    மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் எழுத்திற்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை.  இலக்கணம் இல்லாததினாலேயோ என்னவோ காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாற்றங்கொண்டுள்ளது.  இதனைத் தடுக்கும் முகத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம்முடைய அறுவகை இலக்கணம் எனும் நூலில் எழுத்தின் வரிவடிவிற்கு இலக்கணம் வகுத்தார்.  இவ்விலக்கணத்திற்குப் பிறகு திராவிட இயக்கம் வலுப்பெறும்வரை எவ்வித மாற்றமும் இல்லாமலிருந்தது.  திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றபோது பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் ணா, றா,னா, ணை, லை, ளை, னை ஆகிய ஏழு எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களை இன்றைய பழகு முறையில் தமிழக அரசு மாற்றிவிட்டது.

     
      இதனைத் தொடக்கமாகக் கொண்டு தமிழை வளர்க்கும் தமிழறிஞர்கள் தமிழ் எழுத்தின் வரிவடிவில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய முற்படுகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மொழியை அச்சு கோப்பதற்கும் சிறார்கள் எளிதில் புரிந்துகொள்வதற்கும் எழுத்துருவாக்கக் கருவிகளின் எளிமைக்கும் எனப் பலவாறு கூறுகிறார்கள். மொழிக்குத் தக்கவாறு கருவிகளை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர கருவிக்குத் தக்கவாறு மொழியைத் திருத்திக் கொள்வது எந்த விதத்தில் சரி?

      கருவிக்குத் தக்கவாறு மொழியை மாற்றாமல் மொழிக்குத் தக்கவாறு கருவியை மாற்றம் செய்யவேண்டுவதே முக்கியம்.  இக்கருத்தின் அடிப்படையில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழி எழுத்துக்களையும் ஒரே கருவியில் இணைக்கும் முயற்சியின் விளைவே இந்நூல்.  இதில் தமிழ்மொழியின் தனித்தன்மைகள் என்ன என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை அமைப்பானது எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப்பொறியின் விசைப்பலகையானது தொல்காப்பிய எழுத்திலக்கணத்திற்கு எவ்வாறு பொருத்தமுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியும், பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தத்தினால் விசைப்பலகை மாற்றம் பெற்றதையும், பாரதி விசைப்பலகை அமைப்பினைப் பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  அடுத்து, தமிழும் ஆங்கிலமும் தனித்தனி இயந்திரங்களாக இல்லாமல் ஒரே இயந்திரமாக்கும் முயற்சியில் தேன்மொழி தமிழாங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதனையுமடுத்து தட்டச்சுப் பொறியின் உறுப்புகளைப் பற்றியும் அவ்வுறுப்புகளின் பயன்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   மேலும், இதில் ஓர் உறுப்பு பழுதடைந்துவிட்டால் அதற்கு மாற்று உறுப்புகள் எவையெவை என்பது பற்றியும் எப்படியெல்லாம் பழுதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாகத் தட்டச்சுப்பொறிக் கலைச்சொற்களைத் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகியவற்றின் அகரவரிசையில் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

      கணினி வளர்ச்சி பெற்றுவரும் அந்தக் காலகட்டத்தில் இதனுடைய தேவை என்ன என்ற வினா எழும்?  என்னதான் கணினி அதிவேகமாக வளர்ச்சி பெற்றாலும் தட்டச்சுப் பொறியின் தேவை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  கணினியின் தேவைகளைத் தட்டச்சுப்பொறியில் உருவாக்கிக் கொண்டால் இதன்தேவை இன்னும் அதிகமாகும் என்பது உறுதி.  காலத்திற்குத் தக்கவாறு பழையவற்றில் மாற்றங்கொள்வதும் புதியவற்றின் பாதிப்பு பழையவற்றில் ஏற்படுத்துவதும் புதியது ஒன்றும் அல்ல.  இதைத்தான் காலங்காலமாக அறிவியல் செய்து வருகிறது.  இவ்வெண்ண வெளிப்பாடாக இந்நூல் எழுந்துள்ளது.  இந்நூலுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.  அவ்வணிந்துரை பின்வருமாறு இங்கே தரப்படுகிறது.

சில விநாடிப் பொழுதில் உலகளாவிய நிலையில் செய்திப் பரிமாற்றம் நடைபெறும் காலமிது.  பொத்தானை அமுக்கினால் இணையம் வழி எந்தச் செய்தியையும் நிகழ்வையும் உடனுக்குடன் அறிய முடிகிறது.  இவ்வகை அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் தட்டச்சுப்பொறியின் பயன்பாடு குறைவுதான்.  எனினும், விசைப்பலகையின் தேவை உள்ளது.  கணினியில் வன்பொருள் - மென்பொருள் அமைப்பிலும் இது இடம்பெறுகிறது.  இவற்றில் இடம்பெறும் எழுத்துக்களின் வடிவம் பற்றிய ஆய்வு உலகெங்கும் பலமொழிகளில் நடந்து வருகிறது.
ரோமன் எழுத்து, தேவநாகரி எழுத்து, தமிழ் (வட்டெழுத்து) எழுத்து, படஎழுத்து எனப் பலவகை எழுத்துக்கள் நடைமுறையில் உள்ளன.  இவற்றுள் தட்டச்சுக்கு/கணினிக்கு ஏற்ற எழுத்து வகை பற்றிய உரையாடல்கள் தொடர்கின்றன.  தமிழுக்கு ரோமன்/தேவநாகரி எழுத்து வடிவைத் தந்து பொதுமைப்படுத்தலாம் என ஒரு சாரார் முழக்கமிட, மற்றொரு சாரார் ஒரு சிறு மாற்றத்தோடு தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்கின்றனர்.  ஒரு இனத்தின் அடையாளமாக அவனது மொழி கருதப்படும் சூழலில், அந்த மொழிக்கென உள்ள எழுத்து வடிவஃகளை யாரும் விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள்.  எனவே, தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டு, அதைச் செயல்படுத்தலாம் என்கிற விவாதம் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  1970களில் அரசு ஆணை வெளியிட்டதோடு, சில எழுத்துக்களில் சீர்த்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இருப்பினும், உகர ஊகார, ஐகார, ஔகார, ஒகர ஓகார எழுத்துக்களில் இன்னும் ஒரு சீரான மாற்றம் ஏற்படவில்லை.  பலரும் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.  தமிழ் உகர ஊகார கிரந்த எழுத்துக்களுக்குப் பயன்படுத்தப்படும் (ஜு, ஜூ) குறிகளை ஏனைய உகர ஊகார வரிசை எழுத்துக்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கருத்து.  ஐ வகை எழுத்துக்களை லை, னை, கை, ணை என ஒரு சாராரும், லய், னய், கய், ணய் என இன்னொரு சாராரும் எழுதக் காண்கிறோம்.  இவற்றை இரண்டு ஒற்றைக்கொம்புடன் ல, ன, க, ண என எழுதலாம் என்பார் பேரா. தெ.பொ.மீ. அவர்கள் (மலையாளத்தில் இதுதான் நடைமுறை).
இந்த எழுத்துமாற்றம் தமிழில் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. பானை, ஓலை, கல்வெட்டு என எழுதுபொருள்கள் மாறியதற்கேற்ப, எழுத்து, வடிவங்களிலும்  மாற்றம் ஏற்பட்டது.  இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் அதற்கேற்ப மாற்றம் தேவை என்கின்றனர்.  கணினிக்கு ஏற்ப எழுத்துக்களின் மாற்றம் என்கின்றனர்.  எழுத்துக்களில் மாற்றம் செய்யாது அவற்றைக் கணினி பயன்படுத்தவேண்டும்; மொழிக்குத்தான் தொழில்நுட்பம் உதவ வேண்டுமே அல்லாது, மொழி தொழில்நுட்பத்துக்கு அடிபணியக் கூடாது (கோவைமணிக்கும் இக்கருத்து உடன்பாடு) என்கிற கருத்தும் உண்டு.  இன்றைய கணினி வல்லுநர்கள் தமிழ்க் கணினிக்கு ஏற்ற எழுத்தமைப்பைக் கொண்டுள்ளது.  மாற்றம் தேவையில்லை என்கின்றனர்.  கல்வெட்டில் காணப்படும் பல சிதைந்த எழுத்துக்களைக்கூட, அதேநிலையில் கணினியில் பதிவு செய்ய முடிந்ததையும், சில குறியீடுகளைக் கணினியில் எழுத முடிந்ததையும் நேரில் பார்த்தபோது, கணினி எதையும் சாதிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது.  டெல்லிதர்பார் என்ற திரைப்படத்தில் மம்முட்டி கணினி வழி உண்மையான கொலையாளியைக் கண்டுபிடித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.  எனவே, வன்பொருள்-மென்பொருள் சிக்கல் தமிழைப் பொருத்தவரை இல்லை.  ஒருவேளை, யாருடைய மென்பொருள் சிறந்தது என்பதில் வேண்டுமானால் சிக்கல் வரலாம்.  பொறுப்புடன் செயல்பட்டால், இச்சிக்கலும் தீரும்.
கணினிக்கு உள்ள இந்த வசதிகள் தட்டச்சுப்பொறிக்கு இல்லை.  தட்டிய எழுத்துதான் தட்டச்சில் பதிவாகும்.  கட்டளை கொடுத்து எழுத முடியாது.  எனவே, தட்டச்சுப்பொறியில் எழுத்துக்களை அமைக்கும்போது ஏற்பட்ட, ஏற்படும் சிக்கல்களையும் தீர்வுகளையும் வரலாற்று ரீதியாக கோவைமணி இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.  அறுவகை இலக்கணம் என்ற நூல் தமிழ் எழுத்து வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுவது இன்றைய எழுத்தியல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும்.  இது தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சுட்டுகிறார்.  தட்டச்சு விசைப்பலகை வல்லுநர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு சீர்மை செய்து உதவலாம்.
தட்டச்சுப்பொறி தொடர்பான கலைச்சொற்களும் அவற்றிற்கான விளக்கமும், அவற்றை ஒட்டிய கலைச்சொல் பட்டியல்களும் இந்த நூலின் சிறப்பான பகுதியாகும்.  தமிழின் கலைச்சொல் வளத்துக்கு இது எடுத்துக்காட்டாக அமைகிறது.  நிறைய கலைச்சொற்களைத் தொகுத்துள்ள ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.
கோவைமணி பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஓலைச்சுவடியில் முகம்பதிக்கும் மணி தட்டச்சுப்பொறி, கணினி ஆகியவற்றிலும் கைபதிப்பது அவரது வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைகிறது.  அவரது தமிழ்ப்பணி சிறக்கும் வண்ணம் இன்னும் பல நூல்களை அவர் படைக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்கிறார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக