புதன், 22 நவம்பர், 2023

பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும் - அணிந்துரை

 

பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும்

அணிந்துரை

முனைவர் மோ.கோ. கோவைமணி

பேராசிரியர் (ப.நி)

ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

 

எழுத்தியல், சொல்லியல், இனவியல் பற்றி எடுத்துரைக்கும் பாட்டியல் நூல்கள் தமிழில் பல உள்ளன.  அவற்றில் அறுபத்தொரு பா இனங்களை எடுத்துரைக்கும் பன்னிரு பாட்டியல் சிறப்பானதாகக் கருதப்பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயரும்  காலமும் மதமும் தெரியவில்லை.  எனினும்  "அவை, பண்டைச் சான்றோர்களால் செய்யப்பட்டன அல்ல; பிறராற் செய்யப்பட்டு, அவற்றிற்கு மேன்மை தோன்றற் பொருட்டுப் பண்டையச் சான்றோர்களால் இயற்றப்பட்டவை எனக் கற்பனையாக வழங்கப் பட்டனவாகவேனும், பிற்காலத்து அப்பெயர் கொண்டிருந்தவர்களாற் இயற்றப்பட்டனவாகவேனும் இருக்கும்" என்கின்றனர். இவ்வாறு  கூறுவதற்கான முக்கிய  காரணங்கள் இரண்டாகக்  காணலாம்.

1. பாட்டியல் நூல்களில் உள்ள முதல் சீரானது முக்கியமானதாகக் கருதுகின்றனர். அதில் அறியப்படும் பொருத்தங்கள் யாவும் வடமொழி நூல்களின் மரபைத் தழுவி இருந்தாலும் தமிழுக்கே உரிய செந்தமிழ் வழக்கைக் கொண்டே பாடலை இயற்றினார்கள் பழந்தமிழ் புலவர்கள். இதனால் வடமொழி நூலைத் தழுவி இயற்றினார்கள் என்னும் கருத்தை ஏற்கபடமாட்டாது

2. பண்டைச் சான்றோர்கள் இயற்றிய பாடல்கள் அனைத்தும் தொகை நூல்களில் சேர்த்துள்ளனர். இத்தகைய புலவர்கள் இயற்றியதாகக் காணப்படும் நூற்பாக்களின் நடை வேறுபட்டிருக்கின்றன. இதனால் அப்புலவர்கள்தான் இந்நூற்பாக்களை இயற்றினார்கள் என்பது ஏற்கவியலாது.

சிலருடைய செய்யுள்கள்   யாவும் ஒரே நடையில் அமைந்திருக்கும். ஆனால் சிலரது  நடை வன்மை, மென்மை பொருந்தியதாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் அறியலாகும் கபிலரின் பாடல்களை நூற் பயிற்சியாளரும் பன்முக  நோக்கம் கொண்டவரும்   காணும்போது கடுமையாக இருக்க, அவர் இயற்றிய  இன்னா நாற்பது கற்பதற்கு எளிமையாக இருக்கின்றது. அதைப் போலவே எட்டுத் தொகையில் காணப்படும் சீத்தலைச் சாத்தனார் பாடல்கள் வன்மை உடையதாக இருக்க,  அவர் இயற்றிய மணிமேகலை எளிய நடையைக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்நூல்களில் உள்ள நடைக்கும் அதே புலவர்கள் இயற்றிய தொகை  நூல்களின் உள்ள நடைக்கும் வேறுபாடு உண்டு. எனவே, நடை வேறுபாட்டைக்  அப்புலவர்கள் இந்த நூல்கள் இயற்றவில்லை என்னும் கருத்தை ஏற்கவியலாது

இந்நூலை இயற்றியவர் சிறந்த புலமை உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்நூலில் சிறப்புப்பாயிரம் இல்லாததால் நூலாசிரியர் பெயர், காலம், மதம் போன்ற விவரம் தெரியாத நிலை இருக்கிறது.  இந்நூற் பதிப்பானது திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது. 

வெண்பாப்பாட்டியல் போன்ற வேறு சில பாட்டியல் நூல்களில் பொன், பூ முதலிய மங்கலச் சொற்கள்  இடம்பெறுவதை மங்கலப் பொருத்தம் எனவும், மூன்று முதலிய எழுத்துக்கள் வருவதை எழுத்துப் பொருத்தம் எனவும்  பொருள் தரும் சொற்களை ஈறு திரிதல் வகையில் இடம்பெறாமல்  அமைப்பதைச் சொற் பொருத்தம் எனவும் அமைத்துக் கூற இப்பன்னிரு பாட்டியல் மேற்குறிப்பிட்ட யாவும் ஒரே பொருத்தமாக மங்கலப் பொருத்தத்தில் வைத்துச் சிறப்பித்துக் கூறியிருப்பது நோக்குதற்கு ரியதாகும்.

பாப்பொருத்தத்தில் சாதிக்கேற்பப் பாக்களை அமைக்குமாற்றைச் சொல்லும் நூற்பாவில்,

 “தவிர்ந்தனர் வரையார்”

என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அந்தச் சாதிக்கு உரிய பாவே அந்தந்தச் சாதிக்கு அமைத்தல் வேண்டும். கவிஞர் ஒரு சாதியினருக்குரிய பாவினை மற்றொரு சாதியினருக்குப் பாடினாலும் புவர்கள் ஏற்றுக்கொள்வார்.  இங்குத் தவிர்ந்தனர், வரையார் என்று இரண்டு அர் விகுதிகள் இடம்பெற்றிருப்பது  என்பது சொற்பொருள் பொருந்துவதாக இல்லை.  எனவே, 'தவிர்ந்தன வரையார்' என்று இருந்திருக்க வேண்டும் என்று கா.ர. கோவிந்தராச முதலியார் தன்னுடைய பன்னிரு பாட்டியல் உரையில் எடுத்துரைத்திருக்கின்றார். 

அதேபோல், பிள்ளைப்பாட்டின் காப்பிற்குரிய கடவுளர் பற்றி எடுத்துரைக்கும் நூற்பாவில்,

“எழுவகை மங்கையர் இந்திரர் சாத்தன்”

என்றிருப்பதில் இந்திரர் என்பது இந்திரன் என்றிருக்க வேண்டும் என்று கா.ர. கோவிந்தராச முதலியார் தன்னுடைய பன்னிரு பாட்டியல் உரையில் எடுத்துரைத்திருக்கின்றார். அவரது கருத்திற்கு ஏற்ப இந்நூற்பாக்கள் இச்சுவடியில் அமைந்திருப்பது இப்பதிப்பின் சிறப்பாகக் கருதலாம்.

       அறுபத்தொரு பா இனங்களை எடுத்துரைக்கும் இப்பன்னிரு பாட்டியலின் இனங்கள் இன்னவை என்பதை எடுத்துரைக்கும் “மேதகு சாதகம்” எனத் தொடங்கும் நூற்பாவில் 58 இனங்கள் மட்டுமே கூறப்பெற்றிருக்க இன விளக்கத்தில் சாதகம் முதல் கையறுநிலை இறுதியாக 61 இனங்களை மேலது நூற்பாவில் கண்டதுபோல் வரிசைப்படுத்தி விளக்கி இருக்க, சொல்லிய எனத் தொடங்கும் இடத்தில் வரவேண்டிய செந்தமிழ் மாலையும்,  செருக்கள வழியை அடுத்து வரவேண்டிய மறக்கள வஞ்சி, செருக்கள வஞ்சி ஆகியனவும் மேலது தொகுப்பு நூற்பாவில் விடுபட்டிருக்கின்றன.  இவற்றைக் கா,ர. கோவிந்தராச முதலியார் இடைச்செருகலாகச் சேர்த்திருக்க இப்பதிப்பில் அடிக்குறிப்பில் சுட்டிச் சென்றிருப்பது பதிப்பாசிரியரின் பதிப்பு நேர்மையைச் சுட்டுகிறது.

'பணைமுலை நயனம்' என்பதை இரண்டாகப் பிரித்து பணைமுலை, நயனம் என்று பத்துப் பத்தாகச் சேர்த்து 'பணை முலை பத்து, நயனப்பத்து என்றானது. இரண்டு நூலாக இருப்பதை பத்து என்பதை நோக்கி ஒன்றாகச் சேர்த்துள்ளனர். விருத்த வகையில் பணைமுலை பத்து, பயோதரப் பத்து எனக் கூறியுள்ளனர்.  ஆக, ஒரே தலைப்பில் இரண்டு இலக்கிய வகைகளைச் சுட்டியிருப்பது நோக்கத்தக்கது.

'திங்கள்' என்று கூறாமல் 'ஆன்ற திங்கள்' என்றது, பிள்ளைப் பாட்டை ஒற்றைப்படை எண்களில்   உள்ள மாதங்களில் கேட்க வேண்டும் என்பதும் அதேபோல் ஒற்றைப்படையான மூன்று, ஐந்து, ஏழு ஆண்டுகளில் கேட்டாலும் பிழையாகாது என்ற வச்சணந்திமாலை மற்றும் இலக்கள விளக்க நூற்பாக்களின் கருத்தை இப்பாட்டியல் எடுத்துரைத்திருப்பாது நோக்கற்பாலது.

முன்னைய பதிப்புக்களில் இல்லாத சில நூற்பாக்களும் சில மேற்கோள் நூற்பாக்களும் இச்சுவடியில் இடம்பெற்று இருக்கின்றதைப் பதிப்பாசிரியர் அடிக்குறிப்பில் எடுத்துரைத்திருக்கின்றார்.  குறிப்பாக, உண்டி மற்றும் பால் பகுதிகளில் இல்லாத பின்வரும் மேற்கோள் நூற்பாக்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

43. நஞ்செனப் படுபவை நாடுங் காலை

   யரல ஆஓ வியைந்தவு மளபுங்

   குறுகிய வொற்றெழுத் திரண்டுங் கொளலே.   

44. நஞ்செனப் படுபவை பெயரொடு கிற்பிற

   றுஞ்சல் கெடுதல் சொல்லினர் புலவர்.  

46. ஆண்பெண லியென நின்ற மூன்றே

    பாலென மொழிந்தனர் நூலறி புலவர்.

என்னும் நூற்பாக்கள் மேற்கோள் நூற்பாக்களாக சுவடியில் இடம்பெற்றிருக்கின்றன. முன்னைய பதிப்புக்களில்

நெடிலேழ் இருவகை பெண்பால் என்ப

என்ற 49ஆம் நூற்பாவானது சுவடியில்,

        ஆணெழுத் தென்ப க்கரமோ டைங்குறில்

       நெடிலே ழிருவகை பெண்பா லென்ப

என அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம். அதேபோல்,

        ஒற்றும் ஆய்தமும் அலியெனப் படுமே

என்ற 50ஆம் நூற்பாவானது சுவடியில்,

        நெட்டெழுத் தேழும் பெண்னெப் படுமே

       ஒற்று மாய்தமு மலியெனப் படுமே

என அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.  முன்னையப் பதிப்புக்களில் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப்பெற்ற சில நூற்பாக்கள் இச்சுவடியில் நூற்பாவாகக் காட்டப்பெற்றுள்ளன.  குறிப்பாக,

       இயற்பெயர்முத லெழுத்துப் பால னாக

நால்வகை யெழுத்தினும் வட்ட மாக

முறைநட் புதாசீனம் பகை வரும்.

என வரும் தொடர் நூற்பா எண்.60யைக் குறிப்பிடலாம்.

இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க

என்னும் முன்னையப் பதிப்புக்களில் இந்திர காளியாரின் மேற்கோள் நூற்பாவாகக் கொள்ளப்பட்டது சுவடியில் நூற்பாவாக, தொடர் நூற்பா எண்.75ஆகக் காட்டப்பெற்றுள்ளது. அதேபோல்,

        தேவப் பிரணாம மெனும்வட மொழியைத்

தேவ பாணியெனத் திரித்தனரே.

என்னும் தொடர் நூற்பா எண்.198ஆனது செயிற்றியனாரின் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப் பெற்றது முன்னைய பதிப்புக்களில் நூற்பாவாக பதியப்பெற்றுள்ளது.

முன்னைய பதிப்புக்களில் இல்லாத சில மேற்கோள் நூற்பாக்கள் சுவடியில் இடம்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக,

        ஈகாரம் பகை யென்றறி

எனும் தொடர் நூற்பா எண்.68 இச்சுவடியில் மட்டுமே இருக்கிறது. முன்னையப் பதிப்புக்களில் இரண்டு நூற்பாக்களை சுவடியில் ஒரு நூற்பாக்கிப் பார்த்ததையும் காணமுடிகிறது. குறிப்பாக,

 

“நன்மை செய்கட னாடி னவற்றிற்குத்

தொன்னெறி மரபி னின்மை யானே”.

“நாலசைச் சீரு மேலோ ரொழித்தனர்”.

ஆகிய இந்திரகாளியாரின் இரண்டு மேற்கோள் நூற்பாக்கள் சுவடியில் ஒரே மேற்கோள் நூற்பாவாகக் காட்டப்பட்டு உள்ளது. முன்னைய பதிப்புக்களில் நூற்பாவாகவும்  மேற்கோள் நூற்பாகவும் சுட்டப் பெற்றது சுவடியில் நூற்பாவாகவே சுட்டப்பெற்று உள்ளது.  குறிப்பாக,

 

       நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்

பால்வகைப் படுமே முதலன விரண்டின்

புணர்ச்சி மருட்பாப் பொருந்திய வருணம்.

நாளு மோரையு நலந்தகு நிலனும்

விரையுஞ் சாதியு நிறனுங் குணமு 

முரைபெறும் பாணற் குடைய வென்ப.

என்னும் தொடர் நூற்பா எண்.157ஆனது முதல் மூன்று வரிகள் நூற்பாவாகவும் இறுதி மூன்று வரிகள் கல்லாடனாரின் மேற்கோள் நூற்பாவாகவும் முன்னைய பதிப்புக்களில் இருக்க சுவடியில் இரண்டையும் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப் பெற்றிருக்கிறது. அதேபோல், முன்னைப் பதிப்புக்களில் காட்டப்பெற்ற ஒரே நூற்பாவாகக் காட்டியதைச் சுவடியில் தொடர் நூற்பா எண்.216 மற்றும் 217 என இரண்டு நூற்பாக்களாக்கிக் காட்டியதையும் காணமுடிகிறது.  குறிப்பாக,

 

216. மலையு மாறு நாடு மூருந்

     பரியுங் களிறுங் கொடியு தாரும்

     முரசும் பெயரு மெனத்தெரி பத்துஞ்

     சொல்லு மெல்லையின் முதற்குறட் கண்ணே.

217. சின்னத் தொழிலை மன்னவை வைத்துப்

     பின்னர்க் குறளிற் பாட்டுடைத் தலைவ

     ரியற்பெயரை வைத்தவர்க் குரிமை தோன்றுஞ்

     செயல் பெற வைப்பது சின்ன மதுவே

     யாதிப் பாவி னதனினம் வருமே.

என்னும் இரண்டும் முன்னைப் பதிப்புக்களில் ஒரே நூற்பாவாக உள்ளது.

       முன்னையப் பதிப்புக்களில் நூற்பாவாகக் காட்டப் பெற்றதை சுவடியில் மேற்கோள் நூற்பா வாகவும், மேற்கோள் நூற்பாவை நூற்பாவாகவும் காட்டப்பெற்றதையும் காணமுடிகிறது.  குறிப்பாக,

     வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர்

     மாந்தர் கலிவெண் பாவிற் குரியர்.

    நாலு வருணமு மேவுத லுரிய

    வுலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர். 

என்னும் தொடர் நூற்பா எண்.214 மற்றும் 215ஆனது சுவடியில் 214ஆவது நூற்பா அவிநயனாரின் மேற்கோள் நூற்பாவாகவும், 215ஆவது நூற்பா நூற்பாவாகவும் அமைந்துள்ளது. இதில் ஆசிரியரின் நூற்பாதான் முதலில் இடம்பெறவேண்டும்.  ஆனால் மேற்கோள் நூற்பா முதலில் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நரகரும் விலங்கும் வரைவ ரீண்டே (33) என்னும் நூற்பாவில் நரகர் என்பவர் மக்களைக்  குறிக்கும். ஆனால் பாடவேறுபாடாக நரகும் என்று தவறுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர்க்குறி னான்கொடு கசதப நமவ

மயக்கற வழுதெழுத் தாகு மென்ப  (37)

என்னும் நூற்பாவில் வழுதெழுத்து என்பதற்குப் பாடவேறுபாடாக அமுதெழுத்து அமைந்திருக்கிறது.  மேற்கோள் நூற்பாவில் “அமுதென மொழிப” என்று வருவதால் சுவடி படியெடுத்தோரின் எழுத்து மயக்கத்தால் இப்பிழை நேர்ந்திருக்கலாம் எனலாம்.  ஆக, இங்கு வழுதெழுத்து என்பதை அமுதெழுத்து எனலே சரியாகும்.

“குறியதன் முன்வைத்தப் புள்ளி

யுயிரெனப் புணர்ந்த வல்லாறன் மிகைத்தே”

என்னும் 41வது தொடர் நூற்பா எண்ணில் வரும் தொடர்கள் கழகப் பதிப்பில் இல்லை.  இது சுவடியில் கூடுதலாகக் கிடைத்ததாகும்.  மேலது வரிகள் உயிரளபெடையை உணர்த்தியதால் இவ்வரிகள் ஒற்றளபெடையை உணர்த்தி நின்றது எனலாம்.  இவ்வரிகளால் இவ்விலக்கணத்திற்கு இச்சுவடி கூடுதல் செய்தியைத் தந்திருக்கிறது எனலாம்.

       கன்னல் (நாழிகை) மற்றும் புள் (பறவை) என்னும் இரண்டு பொருத்தங்களைத் தொடர் நூற்பா எண்.71 முதல் 77வரை உள்ள நூற்பாக்களில் நூற்பாவாகவும் மேற்கோள் நூற்பாவாகவும் வந்துள்ளவை பற்றி வேறெந்த பாட்டியல் நூல்களும் கூறாதபோது பன்னிரு பாட்டியல் மட்டும் எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும்.

“நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்

பால்வகைப் படுமே முதலன விரண்டின்

புணர்ச்சி மருட்பாப் பொருந்திய வருணம்”.

என்னும் நூற்பா எண்.157இல் மருட்பாவுக்கு வெண்பாவும், ஆசிரியப்பாவுமாகிய பாக்களின் சேர்க்கையால் உண்டாகும் பா என்பதால் அதற்கும் வருணம் பொருந்தும் என்ற கருத்து முன்னைய பதிப்பில் வருணம் பொருந்தா எனக் குறிப்பிடப்பெற்றுள்ளதை ஆராய வேண்டும்.

       “திருமகள் திருமதி யென்றிவ ரெல்லா”

என்பது,

       “திருமக ணாமக டிகழ்மதி யென்ப”

என்று பாடவேறுபாடகக் காட்டப்பெற்றுள்ளது.  இங்குத் திருமகளுக்கு அடுத்து நாமகள், திகழ்மதி (திருமதி) என வந்திருப்பது சுட்டத்தகும்.

       “காட்டிய முறையே நாட்டிய வாண்டாற்”

என்னும் நூற்பா எண்.211இல் வரியானதில் நாட்டிய வாண்டாற் என்பது நாட்டிய ஆண்பால் என்றிருக்க வேண்டும்.  இங்கு ஆண்பாற்குரிய பருவங்கள் குறிப்பிடுவதால் நாட்டிய வாண்டாற் என்பது தவறாக சுவடியில் இடம்பெற்றிருக்கிறது எனலாம்.

“முன்னர்க் காண்டல் செருக்கள மதனி

லடுகூழ் வார்த்த லின்னன் பிறவுந்

தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே”

என்னும் நூற்பா எண்.220இல் வரக்கூடிய இவ்வரிகள்,

       மரபினி துரைத்தன் மறக்களங் காண்டல்

       செருமிகு களத்திடை யடுகூழ் வார்த்தல்

       பரவுத லின்ன வருவன பிறவுந்

       தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே”

என்று பாடவேறுபாடாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

       “தத்த மினத்தி லொற்றுமுறை பிறழ்ந்து”

என்னும் நூற்பா எண்.244இல் வருவது பாட வேறுபாடாக,

       “தத்த மினத்தி லோப்புமுறை பிறழாது”

என்றமைந்துள்ளது.  இங்குப் பொருள் அடிப்படையில் இவ்விடத்தில் பிறழாது என்றே இருக்க வேண்டும்.  ஆனால் சுவடியில் பிறழ்ந்து என்று தவறுதலாக உள்ளதை அறிய முடிகிறது.

       இவ்வாறு பல சிறப்புக்கள் அமையப் பதிப்பிக்கப்பெற்ற இப்பதிப்பு பதிப்பு வரலாற்றில் தடம் பதிக்கும் வண்ணம் அமைத்திருப்பதற்கு இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்.

 

தஞ்சாவூர் – 10                                        - மோ.கோ.கோவைமணி

31.10.2023

 

 

 

 

-

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக