புதன், 17 ஜனவரி, 2024

பழந்தமிழரின் கலன்கள்

 

பழந்தமிழரின் கலன்கள்


         உணவுகளைச் சமைப்பதற்கும் உண்பதற்கும், கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்கும், உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் எனப் பல்வேறு வகையான பொருள்களைப் பழந்தமிழர் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. 

பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைத்த இலைகள், மரம், மண், இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்யப்பெற்ற கலன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  தற்போது வெண்கலம், தங்கம், வெள்ளி, மரம் போன்றவற்றால் செய்யப்பெற்ற கலன்கள் வழக்கிழந்து காட்சிப் பொருளாகி இருக்கிறது எனலாம்.  கலம் என்பது உள்ளீடற்ற குப்பி போன்று அமைந்திருக்கும்.  இதனைப்,

புரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப,

‘வெம்பாதாக, வியல்நில வரைப்பு! (பரி.11:79-80)

ஆயர் கறவைக்கலம் வைத்த உறியையும் கழு

சூட்டுக்கோல் முதலியன இட்டுச் சுருக்கிய தோற்பையையும்

கொன்றையங் குழலையும் உடையரா யிருத்தல் (கலி.108:30-32)

பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே        (கம்ப. இரணிய. 112).

          பால் கறக்கும் ஏனம்                                    (சீவக. 69, உரை.)

போன்ற இலக்கியச் சான்றுகள் மூலம் பொலம்கலம், கறவைக்கலம், பொற்கலம், பால் கறக்கும் ஏனம் ஆகியன இருந்ததை அறியலாம்.  மேலும், சங்க இலக்கியங்களில் கலம் (கலி.106), குழிசி (அகம்.393), சாடி (நற்.341), தாலம் (புறம்.120) போன்ற சொற்களால் கலன் பற்றி எடுத்துரைக்கும் சொற்களாகும்.

அடுத்தல் என்பது சமைத்தல் என்ற பொருளில் சமையல் சமைக்கும் இடத்தை அடுக்களை என்று அழைக்கிறோம். அதைபோன்று சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் கலன்களை ‘அடுகலம்’ என்பர். இதனை,

“கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவ னென்றோ”        (புறம். 32: 1-2)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறியலாம். சமைத்த உணவுகளை மூடியுள்ள கலன்களில் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தும் வழக்கத்தையும் நம் முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். இதனை,

“அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி”      (பெரும். 475-477)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. சங்ககால மக்கள் பயன்படுத்திய கலன்களை இயற்கை கலன்கள் என்றும், செயற்கை கலன்கள் என்றும் பிரித்துப் பார்க்கலாம். 

இயற்கை கலன்கள்

பழந்தமிழ் மக்கள் இயற்கையில் கிடைக்கும் வாழை இலை, தேக்கு இலை, ஆம்பல் இலை, பனையோலை, மூங்கில் ஆகியவற்றை இயற்கை கலன்களாகப் பயன்படுத்தி உணவு உண்டுள்ளனர்.

வாழையிலை

பழந்தமிழரின் பாரம்பரியத்திலும், விருந்தோம்பலிலும் 'வாழையிலை' எல்லா வகை மக்களாலும் சிறப்பு உண்கலமாக எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணம் மற்றும் சிறப்பு விருந்தின் போது வாழையிலையில் உணவு வழங்கும் மரபு இன்றும் காணப்படுகின்றது. பழந்தமிழர்கள் வாழையிலையின் பயனை அறிந்து அதனை உண்கலமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்கள்”     (நற். 120: 5-6)
“செமுங்கோள் வாழையகலிலைப் பகுக்கும்”(புறம். 168:13)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. 

வாழை இலையில் எவ்வாறு உணவு பரிமாற வேண்டும் என்ற நியதியையும் அறிவியல் தன்மையில் கண்டுபிடித்தவர்கள் பழந்தமிழர்கள்.   முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம் போன்றவற்றைப் பரிமாற வேண்டும். அதன் பக்கத்திலேயே மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு, ரசம், குழம்புகளை ஊற்றி, பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக, சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டுமாம். வாழையிலையில் உண்பதால் ஆயுள் கூடும் என்பர்.

வாழையிலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள் உள்ளன. இவைகள் கண்களைப் பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடற்புண்களை ஆற்றும் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே ஆகியவை வாழையிலையில் உள்ளன.

ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும். சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். இத்தனையும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னிப்பிணைந்துள்ளன.

வாழையிலையின் மேல் முதலில் நீரைத் தெளித்து வாழை இலையைக் கழுவி, அதன் மேல் நெய்யைத் தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளைக் கூட்டுகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்தச் சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவையாம். அதுமட்டுமல்லாமல், வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்குப் பேருதவி புரிகின்றன. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை விரைவில் வாடாது. பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால்கூட, அதை வாழை இலையில் தான் கட்டித்தருவார்கள். ஆகமொத்தம், இந்த வாழை என்றுமே நம்மை வாழையடி வாழையாக வாழ வைக்கும்.

தேக்கிலை

தேக்கு மரத்தின் இலையைப் பயன்படுத்தி உணவு உண்ணும் வழக்கம் பழங்காலந்தொட்டு அண்மைக் காலம் வரை கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களிடம் காணப்படுகின்றது. சங்க கால மக்கள் தேக்கிலையை உண்கலமாகப் பயன்படுத்தினர். இதனை,

“சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக் கயரு முன்றில்”     (அகம். 315: 15-17)

என்ற அகநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகிறது. மேலும், பயணம் மேற்கொள்ளும்போது வழியில் உணவு உண்ணத் தேக்கிலை கலமாக இருந்துள்ளது. இதனை,

“தேய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇக் . . . . . “  (பெரும்: 105)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடி சான்று பகர்கின்றது.

தற்போது, தேக்கிலையில் உள்ள ஊறுகாய் அதிக சுவையுடையதாக இருப்பதாலும், நீண்ட நாள்கள் கெடாமலிருப்பதாலும் தேக்கிலையில் வைத்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேக்கிலைகளின் சாறு இரத்தத்தை அதிகரிக்கும், இரத்தக் கசிவைத் தடுக்கும் மற்றும் சிறிய இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.  புதிய இலைகளின் சாறு புண்கள் மற்றும் வெட்டுக்களை ஆற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பனையோலை

         பனையோலையை உணவு உண்ணும் கலனாகப் பயன்படுத்தி உள்ளனர்.  பனையோலையை வெயிலில் உலர வைத்தால் உடைந்து விடும். எனவே மாலை நேரத்தில் நிழலில் உலர்த்தி ‘குடைபோன்ற வடிவில் கலனை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். மன்னன் வழங்கும் உணவினை இரவலர்கள் பனையோலையில் அமைந்த குடையிலே பெற்று உண்டனர் என்பதை,

வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய

ஈரும்பனங் குடையின் மிசையும்

பெரும்புலர் வைகறைச்சீர் சாலாதே (புறம். 177: 15-17).

என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

ஆம்பலிலை

ஆம்பலிலையினையும் உணவு உண்ணுவதற்கு பயன்படுத்தி உள்ளனர். தலைவி தனது கணவனுக்கு ஆம்பலின் அகன்ற இலையில் சோற்றுடன் பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பான பழத்தினைப் பெய்து இடுகின்ற அழகினை,

“ஆம்பல் இலைய வமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை யிடுஉமுர”        (அகம். 196: 5-7)

என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் நயம்படச் சுட்டுகிறது. இதனை திடப் பொருட்களை மட்டுமின்றித் திரவப் பொருட்களை உண்ணவும் பயன்படுத்தியுள்ளனர். உழவர்கள் அகன்ற ஆம்பலிலையில் கள்ளினை ஊற்றி உண்டிருக்கின்றனர் என்பதனை,

“கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியன் மாந்தி”      (புறம். 209: 3-9)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.  மேலும், ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

மூங்கில்

இயற்கையில் கிடைக்கும் மற்றொரு பொருள் மூங்கில். இதனையும் கலன் போன்று பயன்படுத்தி உள்ளனர். இன்னும் கிராமப்புறத்தில் மூங்கிலின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மாடுகளுக்கு மருந்து கொடுப்பதற்கு மூங்கிலைக் கணுவின் மேற்பகுதியில் வெட்டிப் பயன்படுத்துகின்றனர். பழந்தமிழர்கள் மூங்கில் குப்பிகளிலே மதுவினை நிரப்பி முற்ற வைத்து பின் எடுத்து உண்டு விட்டு குரவைக் கூத்தினைக் கண்டு களித்துள்ளனர். இதனை,

“வாங்கமை பழனிய நறவுண்டு
வேங்கை மூன்றிற் குரவையும் கண்டே”   (நற். 276: 9-10)

என்ற நற்றிணைப் பாடலடிகள் மூலம் அறியலாம்.  இதிலிருந்து கள் போன்ற மதுப்பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மூங்கில்களைப் பயன்படுத்தி உள்ளமை புலனாகிறது.

செயற்கை கலன்கள்

பழந்தமிழர்கள் உலோகங்களின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தமையினால் பல்வேறு விதமான கலன்களைப்  பயன்படுத்தியுள்ளனர். இவ்வகையில் மண் கலன்கள், பொன், வெள்ளி, இரும்பு, செம்பு, அலுமினியம், சில்வர், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட கலன்கள் செயற்கை கலன்கள் எனலாம்.

மட்கலன்கள்

பழந்தமிழர்கள் மண்ணின் பயன்பாட்டை அறிந்து அதனைப் பயன்படுத்தித் தனக்குத் தேவையான மட்பாண்டங்களைச் செய்துள்ளனர். இவ்வகையில் அளவு, பயன்பாடு, அடிப்படையில் தாழி, பானைகள், தசும்பு, குழிசி, காடி, கன்னல், குப்பி, தடவு, உடைந்த கலம் போன்ற மண்ணால் செய்யப்பெற்றவற்றையும், காடி, தாலம், பிழா, வள்ளம், செம்புப்பானை, தூதை, குடம், சட்டி போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.

தாழி

இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாகப் புதைப்பதற்குப் பண்டையத் தமிழர்கள் மண்ணால் செய்யப்பட்ட பெரிய தாழிகள் செய்து அதனுள் வைத்ததை ‘முதுமக்கள் தாழி’ என்று அழைக்கப்பட்டது. இதனை,

“கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ . . . . . . . . . . . .” (புறம், 256: 1-6)

என்ற புறநானூற்றுப் பாடடிகள் மூலம் இருவருடைய உடலை வைக்கும் அளவிற்கு பெரிய அளவிலான முதுமக்கள் தாழி இருந்துள்ளமையை அறிய முடிகின்றது.  தற்போது மக்களிடையே தானியங்களைப் பாதுகாத்து வைக்கும் கூனிப்பானைகள் புழக்கத்தில் காணப்படுகின்றன. இதனை, “அகழாய்வில் எடுக்கப்பட்ட தாழிக்கும் தற்போது உள்ள கூனிப்பானைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஏறத்தாழ இரண்டும் ஒன்று போல இருப்பதால் முன்னோர்கள் இறந்தவர்களை பூமிக்குள் பாதுகாக்கப் பயன்படுத்திய அதே மட்பாண்டத்தை அதன் பின்னர் தானியங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தி இருக்கலாம். இது கால மாற்றத்தாலும், நாகரீக முன்னேற்றத்தாலும் ஏற்பட்டிருக்கலாம்” என்பர். மேலும் இத்தாழி மண்ணால் செய்து சுடப்பட்டதை,

“கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த”    (புறம், 238: 1)

என்ற புறநானூற்றுப் பாடலடி மூலம் அறிய முடிகிறது.

தசும்பு

இப்பானையானது பால், தயிர், கள் போன்றவற்றை நிறைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கை
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்”      (பதிற்று, 42: 10-12)

என்ற பதிற்றுப்பத்துப் பாடலடிகள் மூலம் ‘கள்’ நிறைத்து வைக்கும் தசும்புகளை மலர் மாலையாலும், இஞ்சி மாலையாலும் அலங்கரித்து மண்மீது வைத்து அதன் மேற்புறத்தைச் சந்தனத்தால் பூசி வைக்கப்பட்டமை கூறப்பட்டுள்ளது.  இன்றும் பல கிராமங்களில் இவ்வாறு பால், தயிர் நிறைத்து வைப்பதற்குத் தசும்பு போன்ற மட்பாணை பயன்படுத்துவதைக் காண முடிகிறது.

குழிசி

வீட்டில் உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்ணால் செய்யப்பட்ட பானையினை ‘குழிசி’ என்பர். இதனை,

“மான்றடி பழுக்கிய புலவுநாறு குழிசி”      (புறம். 165:6)

“கயறு பிணிக் குழிசி”              (அகம். 77:7)

“முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி”     (பெரும். 99)

போன்ற பாடலடிகள் மூலம் உணர முடிகிறது.

காடி

பக்குவப்படுத்தி செய்யப்பட்ட நெல்லிக்காய், எலுமிச்சை, புளியங்காய், மாங்காய் முதலிய ஊறுகாய்களை மண்ணால் செய்யப்பட்ட காடிகளில் அடைத்து வைக்கின்றனர். இது அவை கெடாமல் இருப்பதற்குப் பயன்படுகின்றது. இதனை,

“காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்” (பெரும். 57-58)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

கன்னல்

தண்ணீர் எடுத்து வைக்கும் மட்பானையினைக் ‘கன்னல்’ என்பர். இரண்டு விதமான கன்னல் பானைகள் உள்ளன. அவை ‘தொகுவாய்க் கன்னல்’, ‘குறுநீர்க் கன்னல்’ என்பனவாகும். குவிந்த வாயையுடைய தண்ணீர் வைக்கும் மண் பாத்திரம் தொடுவாய்க் கன்னல் ஆகும். இதனை,

“தொடுவாய்க் கன்னற் றண்ணி ருண்ணார்
பகுவாய்த் தடவிற் செந் நெருப்பார”       (நெடுநல். 65-66)

என்ற நெடுநல்வாடைப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

குறுநீர்க் கன்னல் என்பது மட்பானையில் தண்ணீர் விட்டு அதன் அடியில் சிறுதுளை வழியாக அத்தண்ணீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அத்தண்ணீனை அளந்து காணும் கருவியாகலின் குறுநீர்க் கன்னல் ஆகும். இதனை,

“ஏறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப” (முல்லை. 57-58)

என்ற முல்லைப்பாட்டுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

தடவு

பழந்தமிழர்கள் குளிர்காலத்தில் நீரை சூடாக்கிக் குளித்துள்ளனர். எனவே, அதற்கென்று பெரிய மண்தாழிகளைப் பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய பெரிய மண்பானையினைத் தடவு என்று அழைக்கப்பட்டு உள்ளது. இதனை,

“பகுவாய்த் தடவிற் செந்றெருப் பயர”    (நெடுநல். 66)

என்ற நெடுநல்வாடைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது. மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்கள் செந்நிறத்திலும், கருப்பு நிறத்திலும் செய்துள்ளனர். இதனை,

“செந்தாழிக் குவிபுறந் திருந்த”        (புறம். 238:1)

“பெருங்கட் குறுமுயல் கருங்கலன்”    (புறம். 322:5)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

உடைந்த கலம்

மண்ணால் செய்யப்பட்ட கலன்கள் உடைந்த பின்பும் பயன்பாட்டைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு உடைந்த கலத்தினை ‘ஓட்டைப்பானை’ என்பர். இப்பானையின் உடைந்த கழுத்துப் பகுதியைச் செடிகளைப் பாதுகாப்பாக நட்டு வைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். பெரிய பானைகள் உடைந்தால் அதன் ஓட்டினைப் பயன்படுத்தி புளியங்கொட்டை, கொல்லாங்கொட்டை, வேர்க்கடலை, சோளப்பொரி, அரிசிப்பொரி போன்றவற்றை வறுத்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். மேலும், புகையிலை தயார் செய்யவும் இவ் ஓட்டினைப் பயன்படுத்துகின்றனர். உடைந்த ஓடுகளின் சிறிய துண்டுகளைப் பயன்படுத்தி வட்டுக்கழித்தல், மாசம் வைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். வட்டுக்கழித்தலைக் குறித்து,

“வட்டு உருட்டு வல்லாய்”        (பரி. 18:42)

“கல்லாச் சிறா அர்நெல்லி வட்டாடும்”    (நற். 3:4)

என்ற பாடலடிகள் மூலம் பண்டையத் தமிழர்கள் உடைந்த பானை ஓட்டினைப் பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது.

சாடி

திரவப் பொருட்களை வைப்பதற்குச் சாடிகளைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது கீழ்ப்பாகம் தரையில் நன்கு அழுத்தும்படி தட்டையாகவும், கழுத்துப்பகுதி நீண்டும், நடுப்பகுதி நன்கு பருத்த அமைப்பினதாகவும், மேற்புறம் மூடியினால் மூடப்படும் வகையிலும் இருந்துள்ளது. கள்ளினைக் காய்ச்சுவதற்கும், அதனைப் பதப்படுத்தி எடுத்து வைப்பதற்கும் இச்சாடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை,

“வல்வாய்ச் சாடியின் வழைச்சுற விளைந்த”      (பெரும். 280)
“நன்மரம் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாள் அரிந்தகோஓ யுடைப்பின்”(அகம். 166: 1-2)

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், இச்சாடி அழகிய கலை நயத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்தன என்பதைக்,

“கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்”(நற். 295:7)

என்ற பாடலடி சான்று பகர்கின்றது.

தாலம்

நாக்கு போன்று தட்டையான விரிந்த பரப்பினைக் கொண்டதாக இருப்பது தாலம் என்று வழங்கப்படும். உணவுப் பொருட்களை உண்பதற்குத் தட்டு போன்று பயன்படுத்திய கலன் தாலம் ஆகும். தாலம் என்பதற்குப் பனை என்றும் பொருள் உண்டு. எனவே, இது பனையோலை போன்று விரிந்த வடிவில் இருந்துள்ளமையால். பழந்தமிழர்கள் தாலத்தில் உணவு உண்ணப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

“நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
பெருந்தோ டாலம் பூசன் மேவர”     (புறம். 120: 14-15)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

பிழா

உணவு உண்ண பயன்படுத்தும் அகன்ற வாயினை உடைய தட்டினைப் பிழா என்பர். கொழியலரிசிக் கஞ்சியினை உண்பதற்கு அகன்ற வாயினை உடைய பிழாவினைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தி உள்ளனர்.  இதனை,

“அவையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி”    (பெரும். 275-276)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

வள்ளம்

கிண்ணம் போன்று உட்பகுதி குழிந்து வட்ட வடிவில் உள்ள கலனே வள்ளம் ஆகும். இதனை ‘வட்டில்’ என்று கூறுவதுண்டு. இது பால், மோர், கள் போன்ற நீர்மப் பொருட்களை உண்ணுவதற்குப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளர் என்பதைப்,

“பால்பெய் வள்ளஞ் சால்கை பற்றி
எம்பா டுண்டனை யாயின்”      (அகம். 219: 5-6)

“கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண்கமழ் நறுந்தேறல் உண்பான் முகம்போல” (கலி. 73: 3-4)

என்ற பாடலடிகள் சான்று பகர்கின்றன. இவ்வாறு, தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட கலன்களையும் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

“பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப” (நற். 297:1)

என்ற நற்றிணைப் பாடலடி தெளிவுறுத்துகிறது.

செம்புப் பானை

பழந்தமிழர்கள் செம்பு என்ற உலோகத்தின் பயனை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், கம்மியர்கள் செம்பினை வார்த்து செம்புப் பானையினைச் செய்துள்ளனர். இதனை,

“. . . . . . . . . . . கம்மியர்
செம்புசொரி பானை”       (நற். 153: 2-3)

என்ற நற்றிணைப் பாடடிகள் மூலம் அறிய முடிகிறது.

தூதை

மரத்தினால் செய்யப்பட்ட சிறிய பானையே தூதை. சிறு பெண்கள் மரத்தினால் செய்த தூதைகளை வைத்து விளையாடியுள்ளனர் என்பதைச்,

“சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப்பெய்த அழகமை”(கலி. 59: 5-6)

என்ற கலித்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

பொன், வெள்ளி

பொன், வெள்ளியினால் செய்யப்பட்ட கலன்கள் பொற்கொல்லர் கைவண்ணத்தால் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததை,

“ஆசில் கம்மியன் மாசறப்புனைந்த
பொலஞ் செய் பல்காசு அணிந்த அல்குல்”          (புறம். 353: 1-2)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

குடம்

வாய் குறுகிய பாத்திரம் குடம் என்று வழங்கப்படுகிறது. குடம் செய்வதற்குப் பயன்படுத்தும் உலோகத்தை வைத்து மட்குடம், செம்புக் குடம், சில்வர்க் குடம், அலுமினியக் குடம், தகரக் குடம், பிளாஸ்டிக் குடம் என்று அழைக்கப்படுகின்றது.  பல்வேறு அளவில் செய்யப்பெற்ற குடங்கள் புழக்கத்தில் காணப்படுகின்றன.  குடங்களை உபயோகத்தின் அடிப்படையில் தண்ணீர்க்குடம், தயிர்க்குடம், மோர்க்குடம், நெய்க்குடம், எண்ணெய்க்குடம், புட்டுக்குடம், அக்கானிக்குடம் என்பர். கிராமங்களில் கிணற்றுநீர், ஊற்றுநீர், ஆற்றுநீர், குழாய்நீர் போன்றவற்றை எடுத்து வருவதற்குக் குடங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

விவசாய நிலங்களில் பயிர்களுக்கு நீர் விடவும் பெரும்பாலும் குடங்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.  தம்பு, மிடா என்னும் சொற்களும் குடத்தைக் குறிப்பிடுகின்றன.

பலாப்பழம் போன்று குடம் (அகம். 352) இருந்ததாகவும், ஆய் மகளிர் பால், தயிர் போன்றவற்றை வைப்பதற்கு குடங்களைப் (புறம். 33, 276; மலை.462) பழந்தமிழர்கள் பயன்படுத்தியதை அறிய முடிகிறது.

சட்டி

உணவு சமைப்பதற்கும், வேக வைத்த உணவை வைப்பதற்கும், உணவுப் பண்டங்களைச் சேகரித்து வைப்பதற்கும் சட்டிகளைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். புளிப்பான ஊறுகாய், தேறல் போன்றவற்றை வைப்பதற்குக் காடிச் சட்டியினைப் (பெரும்.310) பயன்படுத்தியதாக அறிய முடிகிறது.  இன்று மண்சட்டிகள் மறைந்து வருகின்ற நிலையில் அலுமினியம், பித்தளை, சில்வர் போன்ற உலோகங்களான பல்வேறு வடிவிலான பாத்திரங்கள் புழங்குப் பொருள்களாக வந்து கொண்டிருக்கின்றன.

வாய் அகன்று விரிவாக உள்ளவை சட்டிகள் எனப்படுகின்றன. இவை செய்யப்படும் உலோகத்தின் அடிப்படையில் மண்சட்டி, அலுமினியச் சட்டி, வெண்கலச் சட்டி, பித்தளைச் சட்டி, இரும்புச் சட்டி, ஈயச்சட்டி, சில்வர்ச்சட்டி என்பர். இச்சட்டிகளில் சமைக்கும் பொருட்களை வைத்துக் கறிச்சட்டி, கூட்டுச்சட்டி, மீன்சட்டி, இறைச்சிச்சட்டி, பருப்புச்சட்டி, சாம்பார்ச்சட்டி, பால்சட்டி, தயிர்ச்சட்டி, மோர்ச்சட்டி, மாவுச்சட்டி, பணியாரச்சட்டி, குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச்சட்டி, இட்லிச்சட்டி, காப்பிச்சட்டி, குழம்புச்சட்டி, தவிட்டுச்சட்டி, எண்ணெய்ச்சட்டி, சீனிச்சட்டி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து சாறு சேகரிப்பதற்குப் பயன்படும் சட்டியைக் கலயச்சட்டி என்றும் தேங்காயைப் பக்குவம் செய்து எண்ணெய்க் காய்க்கின்றவர்கள் பயன்படுத்தும் சட்டியை நெய்ச்சட்டி அல்லது உருக்கெண்ணெய்ச்சட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

அதைப் போன்றே அரிசி மாவை வறுப்பதற்கு வாய் விரிவான மாவுச்சட்டியை உபயோகிக்கின்றனர். சமையற் கூடங்களில் அரிசியிலிருக்கும் கல்லை நீக்குவதற்குப் பயன்படுத்தும் சட்டியை அரிச்சட்டி என்றும் உணவு உண்பதற்குப் பயன்படும் கிண்ணம் போன்ற அமைப்புடைய சட்டியைக் கும்பாச்சட்டி என்றும் மருந்துப் பொருட்களைப் பக்குவம் செய்வதற்குரிய வாய் விரிவான சட்டியை மருந்துசட்டி என்றும் செடி வைப்பதற்குப் பயன்படும் சட்டியைச் செடிச்சட்டி என்றும் குறிப்பிடுகின்றனர்.

சங்க கால மக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி கலன்களை வடிவமைத்து பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது. இக்கலன்கள் அனைத்தும் சங்க கால மக்களின் பண்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளன. இன்று சில கலன்கள் மக்களின் வாழ்வில் இருந்து வழக்கிழந்து காட்சிப் பொருளாக விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கதாகும். 

 

         

 

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

திருவள்ளுவரின் பெரியர்-சிறியர் யார்?

 

திருவள்ளுவரின் பெரியர்-சிறியர் யார்?


வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளில் மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை அதிகாரத்தின் முதற் குறளில் “ஒழுக்கத்து நீத்தார்” என்பதற்கு தன்னலம் துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியவர் எனப் பொருள் கொள்ளலாம். 

          அறத்தையே தன்னுடைய வாழ்க்கைப் பணியாகக் கொண்டு, அதற்காகவே தம்மை அர்ப்பணித்து தொண்டு செய்து மாந்தர்களின் வாழ்க்கையைச் செப்பமாக்கும் செம்மல்களாக விளங்கும் அப்பெரியவரை வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், தன்னலம் துறந்தார், அறம் பூண்டார், ஐந்தையும் காப்பான், ஐந்து அவித்தான், செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை தெரிவான், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர் என்றெல்லாம் சிறப்பிக்கின்றார்.  

          சமுதாயத்தை இயக்கும் உயர்ந்தோரது தன்னலமற்ற தொண்டு பற்றி எடுத்துரைக்கும் அதிகாரமே நீத்தார் பெருமை ஆகும்.   குறள் கூறும் நீர்தார் என்பவர் துய்த்தலைத் துறந்தவர், மக்களுள் சிறந்தவர், தன்னலம் கடிந்து பிறர் நலம் பேணும் பெற்றியாளர், வாழ்க்கையின் சுமை தாங்கமாட்டாது கசப்புற்று உலகினைத் துறந்தவர் அல்லர்.  வாழ்க்கையை வெறுத்தவர் அல்லர்.  வாழ்வின்பம் துய்த்தோ துய்க்காமலோ வாழ்வும் மனமும் முதிர்ச்சி பெற்று அறநெறி நிற்கும் தூயவர்.  அவர்கள் அறத்தைப் பணியாகக் கொண்டதால் அறவோராயினர்.

அறத்தை அறத்திற்காகவே செய்பவர்கள், தீய நெறிகளை ஒதுக்கி மன உறுதியுடன் ஐம்புலன்களை ஒடுக்கி, விழுப்பமுடைய வினைகளை ஒழுக்கம் வழுவாது ஓம்பி தொண்டாற்றுபவர்.  சமயம், மொழி, இனம், குலம், குடி என்ற வேறுபாடு ஏதுமில்லாமல் யாவரிடமும் கருணை காட்டுபவர். இவர்களின் பெருமையை எடுத்துரைப்பதாக நீத்தார் பெருமை அதிகாரக் குறட்பாக்கள் அமைந்திருக்கின்றன.  இவற்றில், “செயற்கரிய” எனத் தொடங்கும் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரக்கூடிய 26ஆம் குறள் திருவள்ளுவரின் வாக்காக இருக்குமா? என்கிற கருதுகோளை வினாவாக எழுப்பி, திருவள்ளுவப் பெருந்தகையின் உண்மையான வாக்கு, எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

உரையாசிரியர்கள்     

திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பத்துப்பேர் உரையெழுதினர் என்றும், இவர்களின் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் அறிய முடிகின்றது. தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை கண்ட நூல் திருக்குறள்.

இவ்வுரைகளில், “மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.  பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்வது. பரிதியார் உரை பல இடங்களில் நூலறுந்த காற்றாடிபோல் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்பது. காளிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருப்பது. பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருப்பது” என்கிறார் தெ. ஞானசுந்தரம்.

பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே தனிச்சிறப்போடு திகழ்கிறது. அதனை மூலநூலுக்கு இணையாகப் போற்றிப் பரவுவாரும் உண்டு. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்குப் பலப்பல உரைகள் வந்துள்ளன.  குறிப்பாக, நாகை தண்டபாணிப் பிள்ளை, தேவநேயப்பாவாணர் போன்றோரின் புலமையுரையும்,  கா.சு.பிள்ளை, மு.வரதராசனார், இரா.சாரங்கபாணி போன்றோரின் எளியவுரையும், வ.உ.சி., நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை போன்றோரின் காந்தியப் பார்வையில் உரையும், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோரின் பகுத்தறிவுப் பார்வையிலான உரையும், பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு.

கோ.வடிவேலுச்செட்டியார், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் போன்றோர் தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரையும், டாக்டர் மு.வ அவர்களின் கையடக்க உரைப் பதிப்பினையொட்டி வெளிவந்துள்ள அவ்வகைப் பதிப்புகளுக்குக் கணக்கே யில்லை. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது.

தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன. எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம்.  ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன” என்கிறார் தெ. ஞானசுந்தரம். 

கருதுகோள் ஆய்வு

இவை போன்ற உரைகளை உற்று நோக்கும்போது செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர் பெரியோர் என்றும், அவ்வரிய செயல்களைச் செய்யாமல் எளிய செயல்களைச் செய்பவர் சிறியோர் என்றும் கொள்ள முடிகிறது.  இக்கருதுகோல் உரையானது இப்பொழுது நடைமுறையில் உள்ள குறட்பா வரிக்குப் பொருந்துவதாக அமையலாம்.  ஆனால், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இதுவாக இருக்காது என்பதைக் கருதுகோளாக் கொண்டு ஆராயும் போது,

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

          செயற்குரிய செய்கலா தார்.

என்றிருக்க வேண்டும் என்று எண்ணத் துணிய முடிகிறது.  இதற்கான காரணங்களைப் பின்வருமாறு ஆராய முற்படுகிறது இவ்வாய்வு.

ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய எழுத்தமைவுகளைப் பார்க்கும் போது சில எழுத்து வரிவடிங்கள் மயக்க எழுத்துக்களாகத் தோற்றம் அளிக்கும்.  ஓலைகளில் எழுத்தைக் கீறல் முறையில் உருவாக்குகின்றனர். 

கீறல் முறையில் எழுத்தினை உருவாக்கும் போது எழுத்து கீறக் கீற ஓலை எழுத்தின் அளவு ஓலை இடம் பெயர்ந்துவிடும்.  அப்படிப் பார்க்கும் போது கீறப்பெற்ற எழுத்திற்குப் பின்னோக்கி வரக்கூடிய எழுத்து வரி வடிவங்களை இன்று நாம் காண்பது போல் முழுமையாகக் கீற முடியாத அளவுக்கு அமைவதால் குறைபாட்டோடு கீறி முடிப்பர். 

அவ்வாறு கீழ் விலங்கு மற்றும் கீழ் விலங்கு சுழி அமையக் கூடிய கு, டு, மு, ரு, ழு, ளு, டூ, மூ, ரூ, ழூ, ளூ ஆகிய எழுத்துக்களைக் கீறும்போது முதலில் அகர உயிர்மெய் கீறப்பெற்றதின் ஈற்றுப் பகுதியில் இருந்து கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீற வேண்டும்.  அகர உயிர்மெய் எழுத்து கீறி முடிக்கப்பெற்ற பின் அந்த எழுத்து கீறப்பெற்ற அளவுக்கு ஓலை இடம்பெயர்ந்து இருக்கும். 

இந்நிலையில் கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீறும் போது தேவையான அளவுக்குப் பின்னோக்கி வலைத்துக் கீறுவதில் எழுத்து கீறுபவனுக்குச் சிக்கல் ஏற்படும்.  மேலும், எழுத்து எழுதும்போது வெள்ளோலையில் எழுதினைக் கீறுவதால் உருவாகும் எழுத்தானது வெள்ளெழுத்தாக இருப்பதாலும், இவ்வகைப்பட்ட எழுத்துக்களை முழுமையாகக் கீறமுடியாமல் குறைபட்டுக் கீறுவதாலும் வரிவடிவத்தில் எழுத்து மயக்கம் ஏற்படும். 

இவ்வாறு அமையும் போது குகரம் ககரமாக மயங்கி நிற்கும்போது அதைப் படிப்பவரோ படியெடுப்பவரோ அங்கே தோன்றும் வரிவடித்தைப் படிப்பதாலோ படியெடுப்பதாலோ எழுத்து மயக்கத்தால் சொல் மாற்றம் காண்பது இயல்பு.  இந்நிலையில் தான், செயற்குரிய என்ற சொல் செயற்கரிய என்றவாறு படிக்கப்பெற்றும் எழுதப்பெறும் காலப்போக்கில் செயற்கரிய என்றே நிலைத்து விட்டது எனலாம். 

தெய்வப் பெருந்தகை வள்ளுவரால் தோன்றுவிக்கப்பெற்ற இந்நூல் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பெற்ற உரைகள் எழுத்து மயக்கத்தால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான உரைகளையே கண்டிருக்கின்றனர்.  இவ்வெழுத்து மயக்கத்தால் யாப்பு குறைபாடும் (வெண்சீர் வெண்டளை) ஏற்படாததால் இவ்வுரைகள் வள்ளுவரின் உயரிய நோக்கத்தை எடுத்துரைக்காமல் எழுதப்பெற்றிருக்கின்றன எனலாம். 

அதாவது, யாவராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்து முடிப்பவர்கள் பெரியோர் என்றும், அவர்களாலே செய்யத்தக்க செயல்களையும் செய்யமாட்டாதவர்கள் சிறியோர் என்றும் கொண்டால்தான் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாட்டை உணர முடியும்.  செயற்கரிய செயல்களைச் செய்யாதவர் என்பதை விட செயற்குரிய செயல்களைச் செய்யாதவரே சிறியவர் என்று எண்ணிப் பார்த்தால் வள்ளுவரின் உள்ளம் உச்சிமேல் விளக்காகும்.         

பார் போற்றும் பாவலரேறு

 பார் போற்றும் பாவலரேறு


அமைதியின் சொரூபமாய்

ஆண்மையின் விளக்காய்

இன்பத்தின் தூணாய்

ஈகையின் வீரனாய்

உவகையின் சொந்தமாய்

ஊடியவர் உறவாய்

எழுத்தெல்லாம் கல்வெட்டாய்

ஏற்றமே தனியாளாய்

ஐந்நிலம் வாசமாய்

ஒன்றினாய் அறவோனாய்

ஓங்கிய தமிழனாய்

ஔதகம் போற்றினாய்

எழுத்தாய்வில் ஊன்றினாய்

எழுதுகோல் நாயகனாய்

கற்கையில் சிறந்தாய்

காப்பதில் முந்தினாய்

சொல்லாய்வில் திளைத்தாய்

தொல்லியம் பேசினாய்

நல்லியல்பு விளைத்தாய்

பாவலரேறு பாவலனாய்

பொருளாய்வில் புத்தனாய்

பழுதில்லா சிற்பியாய்

வழுவில்லா வளவனாய்

பார்போற்ற வாழ்ந்தவரே.


என்னில் வாழ் குமர குருபரா

 என்னில் வாழ் குமர குருபரா


கொங்குதேச மெங்குமிளிர் குமர குருபரா!

செங்கோட்டை யில்நடந்த குமர குருபரா!

எங்கெல்லாம் தமிழாண்டாய் குமர குருபரா!

அங்கெல்லாம் கோமகனாய் குமர குருபரா!

எங்கெல்லாம் குடமுழுக்கோ குமர குருபரா!

அங்கெல்லாம் கோலோச்சும் குமர குருபரா!

இங்கிதமாய்த் தைப்பூசம் குமர குருபரா!

இனிதாக விடுப்பிட்டாய் குமர குருபரா!


கொங்குதமிழ் நாக்கினிலே குமர குருபரா!

கோடியர்ச்சனை விளைவிக்கும் குமர குருபரா!

எங்கைமேல் கைவைத்த குமர குருபரா!

ஏணிப்படி வாழ்க்கையில் குமர குருபரா!

தங்காத சுழல்விழியால் குமர குருபரா!

அரசாட்சி செலுத்துகின்ற குமர குருபரா!

மங்காத தமிழ்ப்பேச்சு குமர குருபரா!

பணிந்திட்டேன் உனதடியில் குமர குருபரா!

கருவிலேயே கருணைகொண்ட குமர குருபரா!

கௌமார தழைத்தோங்கும் குமர குருபரா!

உருவிலேநீ குமரனாக குமர குருபரா!

திருவினிலே கருணைக்கடலாய் குமர குருபரா!

கிருபைக்கு விளக்கமானாய் குமர குருபரா!

சிறுமைக்கு விலக்கானாய் குமர குருபரா !

கருத்தரங்க நாயகரே குமர குருபரா!

கடைக்கண்ணால் கட்டுண்டேன் குமர குருபரா!