ஞாயிறு, 7 ஜனவரி, 2024

திருவள்ளுவரின் பெரியர்-சிறியர் யார்?

 

திருவள்ளுவரின் பெரியர்-சிறியர் யார்?


வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளில் மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை அதிகாரத்தின் முதற் குறளில் “ஒழுக்கத்து நீத்தார்” என்பதற்கு தன்னலம் துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியவர் எனப் பொருள் கொள்ளலாம். 

          அறத்தையே தன்னுடைய வாழ்க்கைப் பணியாகக் கொண்டு, அதற்காகவே தம்மை அர்ப்பணித்து தொண்டு செய்து மாந்தர்களின் வாழ்க்கையைச் செப்பமாக்கும் செம்மல்களாக விளங்கும் அப்பெரியவரை வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், தன்னலம் துறந்தார், அறம் பூண்டார், ஐந்தையும் காப்பான், ஐந்து அவித்தான், செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை தெரிவான், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர் என்றெல்லாம் சிறப்பிக்கின்றார்.  

          சமுதாயத்தை இயக்கும் உயர்ந்தோரது தன்னலமற்ற தொண்டு பற்றி எடுத்துரைக்கும் அதிகாரமே நீத்தார் பெருமை ஆகும்.   குறள் கூறும் நீர்தார் என்பவர் துய்த்தலைத் துறந்தவர், மக்களுள் சிறந்தவர், தன்னலம் கடிந்து பிறர் நலம் பேணும் பெற்றியாளர், வாழ்க்கையின் சுமை தாங்கமாட்டாது கசப்புற்று உலகினைத் துறந்தவர் அல்லர்.  வாழ்க்கையை வெறுத்தவர் அல்லர்.  வாழ்வின்பம் துய்த்தோ துய்க்காமலோ வாழ்வும் மனமும் முதிர்ச்சி பெற்று அறநெறி நிற்கும் தூயவர்.  அவர்கள் அறத்தைப் பணியாகக் கொண்டதால் அறவோராயினர்.

அறத்தை அறத்திற்காகவே செய்பவர்கள், தீய நெறிகளை ஒதுக்கி மன உறுதியுடன் ஐம்புலன்களை ஒடுக்கி, விழுப்பமுடைய வினைகளை ஒழுக்கம் வழுவாது ஓம்பி தொண்டாற்றுபவர்.  சமயம், மொழி, இனம், குலம், குடி என்ற வேறுபாடு ஏதுமில்லாமல் யாவரிடமும் கருணை காட்டுபவர். இவர்களின் பெருமையை எடுத்துரைப்பதாக நீத்தார் பெருமை அதிகாரக் குறட்பாக்கள் அமைந்திருக்கின்றன.  இவற்றில், “செயற்கரிய” எனத் தொடங்கும் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரக்கூடிய 26ஆம் குறள் திருவள்ளுவரின் வாக்காக இருக்குமா? என்கிற கருதுகோளை வினாவாக எழுப்பி, திருவள்ளுவப் பெருந்தகையின் உண்மையான வாக்கு, எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

உரையாசிரியர்கள்     

திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பத்துப்பேர் உரையெழுதினர் என்றும், இவர்களின் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் அறிய முடிகின்றது. தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை கண்ட நூல் திருக்குறள்.

இவ்வுரைகளில், “மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.  பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்வது. பரிதியார் உரை பல இடங்களில் நூலறுந்த காற்றாடிபோல் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்பது. காளிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருப்பது. பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருப்பது” என்கிறார் தெ. ஞானசுந்தரம்.

பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே தனிச்சிறப்போடு திகழ்கிறது. அதனை மூலநூலுக்கு இணையாகப் போற்றிப் பரவுவாரும் உண்டு. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்குப் பலப்பல உரைகள் வந்துள்ளன.  குறிப்பாக, நாகை தண்டபாணிப் பிள்ளை, தேவநேயப்பாவாணர் போன்றோரின் புலமையுரையும்,  கா.சு.பிள்ளை, மு.வரதராசனார், இரா.சாரங்கபாணி போன்றோரின் எளியவுரையும், வ.உ.சி., நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை போன்றோரின் காந்தியப் பார்வையில் உரையும், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோரின் பகுத்தறிவுப் பார்வையிலான உரையும், பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு.

கோ.வடிவேலுச்செட்டியார், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் போன்றோர் தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரையும், டாக்டர் மு.வ அவர்களின் கையடக்க உரைப் பதிப்பினையொட்டி வெளிவந்துள்ள அவ்வகைப் பதிப்புகளுக்குக் கணக்கே யில்லை. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது.

தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன. எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம்.  ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன” என்கிறார் தெ. ஞானசுந்தரம். 

கருதுகோள் ஆய்வு

இவை போன்ற உரைகளை உற்று நோக்கும்போது செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர் பெரியோர் என்றும், அவ்வரிய செயல்களைச் செய்யாமல் எளிய செயல்களைச் செய்பவர் சிறியோர் என்றும் கொள்ள முடிகிறது.  இக்கருதுகோல் உரையானது இப்பொழுது நடைமுறையில் உள்ள குறட்பா வரிக்குப் பொருந்துவதாக அமையலாம்.  ஆனால், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இதுவாக இருக்காது என்பதைக் கருதுகோளாக் கொண்டு ஆராயும் போது,

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

          செயற்குரிய செய்கலா தார்.

என்றிருக்க வேண்டும் என்று எண்ணத் துணிய முடிகிறது.  இதற்கான காரணங்களைப் பின்வருமாறு ஆராய முற்படுகிறது இவ்வாய்வு.

ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய எழுத்தமைவுகளைப் பார்க்கும் போது சில எழுத்து வரிவடிங்கள் மயக்க எழுத்துக்களாகத் தோற்றம் அளிக்கும்.  ஓலைகளில் எழுத்தைக் கீறல் முறையில் உருவாக்குகின்றனர். 

கீறல் முறையில் எழுத்தினை உருவாக்கும் போது எழுத்து கீறக் கீற ஓலை எழுத்தின் அளவு ஓலை இடம் பெயர்ந்துவிடும்.  அப்படிப் பார்க்கும் போது கீறப்பெற்ற எழுத்திற்குப் பின்னோக்கி வரக்கூடிய எழுத்து வரி வடிவங்களை இன்று நாம் காண்பது போல் முழுமையாகக் கீற முடியாத அளவுக்கு அமைவதால் குறைபாட்டோடு கீறி முடிப்பர். 

அவ்வாறு கீழ் விலங்கு மற்றும் கீழ் விலங்கு சுழி அமையக் கூடிய கு, டு, மு, ரு, ழு, ளு, டூ, மூ, ரூ, ழூ, ளூ ஆகிய எழுத்துக்களைக் கீறும்போது முதலில் அகர உயிர்மெய் கீறப்பெற்றதின் ஈற்றுப் பகுதியில் இருந்து கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீற வேண்டும்.  அகர உயிர்மெய் எழுத்து கீறி முடிக்கப்பெற்ற பின் அந்த எழுத்து கீறப்பெற்ற அளவுக்கு ஓலை இடம்பெயர்ந்து இருக்கும். 

இந்நிலையில் கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீறும் போது தேவையான அளவுக்குப் பின்னோக்கி வலைத்துக் கீறுவதில் எழுத்து கீறுபவனுக்குச் சிக்கல் ஏற்படும்.  மேலும், எழுத்து எழுதும்போது வெள்ளோலையில் எழுதினைக் கீறுவதால் உருவாகும் எழுத்தானது வெள்ளெழுத்தாக இருப்பதாலும், இவ்வகைப்பட்ட எழுத்துக்களை முழுமையாகக் கீறமுடியாமல் குறைபட்டுக் கீறுவதாலும் வரிவடிவத்தில் எழுத்து மயக்கம் ஏற்படும். 

இவ்வாறு அமையும் போது குகரம் ககரமாக மயங்கி நிற்கும்போது அதைப் படிப்பவரோ படியெடுப்பவரோ அங்கே தோன்றும் வரிவடித்தைப் படிப்பதாலோ படியெடுப்பதாலோ எழுத்து மயக்கத்தால் சொல் மாற்றம் காண்பது இயல்பு.  இந்நிலையில் தான், செயற்குரிய என்ற சொல் செயற்கரிய என்றவாறு படிக்கப்பெற்றும் எழுதப்பெறும் காலப்போக்கில் செயற்கரிய என்றே நிலைத்து விட்டது எனலாம். 

தெய்வப் பெருந்தகை வள்ளுவரால் தோன்றுவிக்கப்பெற்ற இந்நூல் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பெற்ற உரைகள் எழுத்து மயக்கத்தால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான உரைகளையே கண்டிருக்கின்றனர்.  இவ்வெழுத்து மயக்கத்தால் யாப்பு குறைபாடும் (வெண்சீர் வெண்டளை) ஏற்படாததால் இவ்வுரைகள் வள்ளுவரின் உயரிய நோக்கத்தை எடுத்துரைக்காமல் எழுதப்பெற்றிருக்கின்றன எனலாம். 

அதாவது, யாவராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்து முடிப்பவர்கள் பெரியோர் என்றும், அவர்களாலே செய்யத்தக்க செயல்களையும் செய்யமாட்டாதவர்கள் சிறியோர் என்றும் கொண்டால்தான் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாட்டை உணர முடியும்.  செயற்கரிய செயல்களைச் செய்யாதவர் என்பதை விட செயற்குரிய செயல்களைச் செய்யாதவரே சிறியவர் என்று எண்ணிப் பார்த்தால் வள்ளுவரின் உள்ளம் உச்சிமேல் விளக்காகும்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக