புதன், 21 பிப்ரவரி, 2024

ஓலைச்சுவடி தயாரிப்பில் அறிவியல் சிந்தனைகள்

 


புறக்கா ழனவே புல்லென மொழிப

அகக்கா ழனவே மரமென மொழிப (தொல்.மரபு. நூ.86)

என்னும் தொல்காப்பிய மரபின் படி புறவயிரம் உடைய பனை, தென்னையைப் புல்வகை எனவும், உள்வயிரம் உடைய தேக்கு, வேம்பை மர வகை எனவும் சுட்டுகின்றனர்.  ஆனால், புல் வகையான பனையை மர வகையாக அழைக்கும் மரபு நம்மிடம் இன்று நிலவுகின்றது. 

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்

புல்லோடு வரும்எனச் சொல்லினர் புலவர்   (தொல்.மரபியல், நூ.87)

என்னும் தொல்காப்பிய நூற்பா புல் வகையின் பல்வேறு உறுப்புக்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.  பனை தமிழர்களின் வாழ்வோடு பண்டு தொட்டே நெருங்கிய உறவுடையதாக இருந்துள்ளது.  தமிழ் நாட்டின் தேசிய மரமாகப் பனை மரம் உள்ளது.    

இவ்வகையான பனையைத் தாவர வகைப்பாட்டில் Borassus என்றும், ஆங்கிலத்தில் Palmyra Palm என்றும் வழங்கப்படுகிறது.  பனையில் நாட்டுப் பனை (ஆண்பனை, பெண்பனை), கூந்தல்பனை, தாளிப்பனை போன்ற பல்வேறு வகையான பனைகள் இருக்கின்றன.  இவற்றில் எழுதுவதற்கு உதகந்ததாக நாட்டுப் பனையில் ஆண்பனையும், கூந்தல்பனை, தாளிப்பனை போன்ற பனைகளில் இருந்து பெறப்படும் பனையோலைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.  இவ்வோலைளில் எழுத்துப் பொறிப்புக்களைப் பன்னெடுங் காலமாக எழுத்தாணி கொண்டு கீறல் முறையில் பல்வேறு பொருண்மைகளைப் பதிவு செய்து வந்துள்ளனர்.  இவைகளே ஓலைச்சுவடிகள் ஆகும்.

எழுத்துக்களைக் கீறுவதற்கு உகந்த நாட்டுப் பனையில் ஆண் பனையை ஏற்றைப் பனை என்றும், எழுத்துக்களை கீறுவதற்குப் பயன்படுத்தாத நாட்டுப் பனையில் பெண்பனையை பெண்ணை என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.  எழுத்துக்களைக் கீறுவதற்கு உகந்தவாறு ஆண்பனையின் ஓலைகளைப் பகுக்குவப் படுத்துவதற்குப் பல நடைமுறைகள் இருக்கின்றன (கோவைமணி, 2013, ப.21).  இந்நடைமுறைகளில் அறிவியல் சிந்தனைகள் அடங்கியிருக்கின்றன. 

ஏடுகள் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் பனைமட்டையை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, முதிர்ச்சி யடைந்த பனையோலையில் நார்த்தன்மை அதிகம் பெற்றிருப்பதால் ஓலை வளையும் தன்மை குறைவாகப் பெற்றிருக்கும். முதிர்ச்சியடையாத குருத்து ஓலையில் நார்த்தன்மை குறைந்து இருப்பதால் ஓலையின் உறுதித் தன்மை குறைவாகப் பெற்றிருக்கும்.  எனவே, இவ்விரு நிலைகளில் இல்லாத இடைப்பட்ட நிலையிலான பனையோலையையே எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.  அதாவது, ஆறு மாதம் வளர்ந்த ஓலைகள் எழுத்துக்களைக் கீறுவதற்கு உகந்த நிலையில் அமைந்திருக்கும். 

எழுத்தாணியைக் கொண்டு கீறல் எழுத்து உருவாக்குவதற்கு முதலில் ஓலையைப் பதப்படுத்த வேண்டும்.  பதப்படுத்தும்போது ஓலைகளின் இருபுறமும் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்ப பக்குவப்படுகிறது.  பதப்படுத்தாத ஓலையாயின் எழுத்தாணி கொண்டு எழுதும் பொழுது ஓலையில் உள்ள நரம்புகள் சேதமடைந்து எழுத்துக்களை எழுத்தாணி கொண்டு கீற முடியாத நிலையினை உருவாக்கும்.  எனவே, எழுத்துக்களைக் கீறுவதற்கு உகந்த வெள்ளோலையைப் பதப்படுத்துதல் என்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.  நாட்டிற்கு நாடு, இடத்திற்கு இடம் ஓலைகளைப் பதப்படுத்தும் முறைகள் வேறுபட்டிருக்கின்றன.  என்றாலும், பனையோலைகள் நீண்ட நாள் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக ஓலைகளைப் பதப்படுத்தும்போது நிகழ்த்தப்பெறும் சில நடைமுறைகள் அறிவியல் சிந்தனையோடு செயற்படுத்தப்பெற்று இருப்பதை அறிய முடிகிறது.

கீறலுக்கு உகந்த நிலையில் உள்ள பனை மட்டைகளைத் தேர்வு செய்து, அவற்றை வெட்டி எடுத்து, மட்டையின் ஓலைப் பகுதிகளைத் தலையோலைகளின் குறுகிய அடி நுனிகளையும், ஓலைகளின் நரம்புகளையும் நீக்கிவிட்டு ஒரே அளவாக ஓலைகளை வெட்டிக் கொண்டு சுருள் சுருளாகச் சுற்றிக் கொண்டு பனையோலையில் இருக்கக் கூடிய பச்சையத்தை நீக்கும் முறை கையாளப்பட்டுள்ளது.

பச்சையத்தை ஒளிச்சேர்க்கையின் மூலம் வெளியேற்றாமல் பின்வரும் பல்வேறு நடைமுறைகளில் வேக வைத்து பச்சையத்தை நீக்கியுள்ளனர். 

1.    1.     பனை ஓலைகளை நீராவியில் வேக வைத்தல்.
2.    பனை ஓலைகள் அதிகம் காயாத வைக்கோல் போரினுள் வேக வைத்தல்.
3.    பனை ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் ஓரிரு மணி நேரம் வேக வைத்தல்.  
4.    பனை ஓலைகளை ஈர மண் அல்லது மணலில் புதைத்து வேக வைத்தல்.
5.    பனை ஓலைகளை வீடுகளுக்குப் பின் உள்ள ஈரமுள்ள மண்ணில் புதைத்து வேக வைத்தல். 
6.    நான்கு அல்லது ஐந்து நாட்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட பனை ஓலைகளைச் சுத்தம்         செய்து தானியங்கள் பாதுகாக்கும் குதிரினுள் உள்ள நெல்லுடன் வைத்து வேக வைத்தல்.
7.    பனை ஓலைகளை மஞ்சள் நீர் அல்லது அரிசிக் கஞ்சியுடன் 1/2 மணி முதல் 1 மணி நேரம்         வேக வைத்தல். 
8.   வெட்டப்பட்ட பனை ஓலைகளை நல்ல மரச்சட்டங்களுக்கு இடையில் 50 ஓலைகள் கொண்ட         கட்டாகக் கட்டி 24 மணி நேரம் சூளையில் வேக வைத்தல்.
9.   வெட்டி எடுக்கப்பட்ட பனை ஓலைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி மிதமான வெப்பத்தில்        மூன்று முதல் நான்கு மணி நேரம் நோச்சி மற்றும் அன்னாசி மர இலைகளைச் சேர்த்து வேக         வைத்து மூன்று நாள் இரவுப் பனியில் வைத்தல்.
10.   பனை ஓலைகளை நிழலில் காய வைத்துப் பின் அவ்வோலைகளைப் பசுவின் சாணம் கலந்த     நீரில் முக்கி வேக வைத்துப் பின் காய வைத்தல்

போன்ற பல்வேறு முறைகளில் பனையோலைகளை வேக வைக்கும்போது பனையோலையில் இருக்கக் கூடிய பச்சையத்தின் தன்மையை இழக்கச் செய்து, பனையோலையின் உறுதித் தன்மையை மேம்படுத்தி உள்ளதை அறிய முடிகிறது.

பச்சை (Chloros), இலை (Phyllon) என்ற கிரேக்கச் சொற்களின் மூலத்திலிருந்து பச்சையம் (Chlorophyll) என்னும் சொல் உருவாக்கப்பெற்றுள்ளது.  தாவரங்கள், பாசி வகைகள், சில வகையான பாக்டீரியாக்கள் ஆகியவற்றில் உள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமியே பச்சையம் ஆகும். 

'குளோரஃபில்’ என்று கூறப்படும் பச்சையம், தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு மட்டுமின்றி பசுமையாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது. காளான் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர்த்துப் பிற எல்லா தாவரங்களிலும் பச்சையம் உண்டு.  தாவர இலைகளின் அடிப்பகுதியில் சிறுசிறு துவாரங்கள் உண்டு. இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகச் சிறிய நுண்துளைகளாகும். இத்துளைகள் வழியாகக் காற்று உள்ளே நுழைகிறது. இலைகளில் உள்ள பச்சையம் காற்றிலுள்ள கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கிறது. வேரிலிருந்து வரும் நீருடன் இக்கரியமிலவாயு கலந்து புதுக் கலவையாகிறது. இக்கலவை சூரிய ஒளியின் உதவியால் வேதியியல் முறையில் மாற்றமடைந்து சர்க்கரைப் பொருளாகவும் மாவுப் பொருளாகவும் மாற்ற முடிகிறது. இச்செயலே 'ஒளிச்சேர்க்கை' ஆகும் (மணவை முஸ்தபா, 1995, ப,200).

ஒளிச்சேர்க்கையின் முதல் படியாக பச்சையத்தின் மீது ஒளி விழுகிறது.  இதன் மூலம் அது அயனாக்கம் (Ionise) ஆகிறது.  இதில் விளையும் வேதியல் ஆற்றலை ஏ.டி.பி. மூலக்கூறுகள் (Molecules) உள்வாங்கி, பின்னர் அதைப் பயன்படுத்திக் கரியமில வாயுவையும் நீரையும் கார்போஹைட்ரேடாக வேதி மாற்றம் செய்கின்றது.  மின்காந்த அலை நிறமாலையின் (Specturm) சிவப்பு மற்றும் நீல நிறக் கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையமானது பச்சை வண்ணமாக் காணப்படுகிறது. 

குளோரின் நிறமியான பச்சையம் ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது.  குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (Ion) உள்ளது.  பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (Phytyl) சங்கிலி இருக்கும்.  இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது.  பச்சையும் வெண்மையும் கொண்ட பனையோலையிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்தப் பனையோலையைச் சிறிது நேரம் வெயிலில் வைத்து, அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம்.  இதன் மூலம் ஒளிச்சேர்க்கைக்குப் பச்சையம் இன்றியமையாதது என அறியலாம்.

பச்சையான இடங்களில் மட்டுமே ஒளிச்சேர்க்கையில் மூலம் மாவுச் சத்து இருப்பதை உணர்ந்தவர்கள் இம்மாவுச் சத்து பனையோலை முழுவதும் விரவி இருந்தால்தான் உறுதியுடன் இருக்கும் என்ற காரணத்தால் ஒளிச்சேர்க்கையில் பச்சையத்தை மாற்றாமல் மேலது நிலைகளில் சூரிய ஒளி இல்லாமல் மறைமுகமான வெப்பமாக்கலில் பச்சையத்தை நீக்கிய அறிவியல் சிந்தனை வெளிப்படுகிறது. 

மேலும், மஞ்சள் நீர், அரிசிக் கஞ்சி, நொச்சி மற்றும் அன்னாசி மர இலைகளைச் சேர்த்து வேக வைக்கும்போது இவற்றில் உள்ள பூச்சி எதிர்ப்புச் சக்திகள் பனையோலைக்குள் இணைந்து நீண்ட நாள் பயன்படுத்தத்தக்க உறுதித் தன்மைக்கு வழி வகுத்ததையும் அறிய முடிகிறது.

இவ்வாறு வேக வைத்த பனையோலைகளை நிழலில் காய வைக்கவேண்டும். வெயிலில் நேரிடையாகக் காய வைக்காமல் நிழலில் காய வைத்த நடைமுறையில் பழந்தமிழரிடம் அறிவியல் சிந்தனை வெளிப்பட்டிருக்கிறதை அறிய முடிகிறது.  அதாவது, வெயியிலில் காய வைத்தால் ஒரே அளவான காய்ச்சல் நுனி முதல் அடி வரையிலான ஏட்டின் முழுமைக்கும் கிடைக்காமல் சூரிய ஒளிபடும் இடங்களில் உள்ள ஈரப்பதம் படிப்படியாக வெளியேறுவதற்கு ஏற்ப ஏடு வளைந்து கொண்டே போய் இறுதியில் திருகலான நிலையினை எட்டும் என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் நேரடி சூரிய ஒளியில் காய வைப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள் எனலாம்.

அதன் பின்னர், ஓலையின் இருபக்கமும் எழுத்தாணி கொண்டு கீறல் முறையில் பதிவுகளை உருவாக்குவதற்கு ஓலைகளில் உள்ள லிக்னின் என்னும் பொருள் ஓலை முழுவதும் பரவியிருக்கச் செய்திருக்கின்றனர்.  பனையோலையானது மேல், இடை, கீழ் என்ற மூன்று பகுதிகளில் இடைப்பகுதியில் லிக்னின் என்ற பொருள் உள்ளது.

லிக்னின் ஒரு வகையான "எலும்புக்கூடு" அல்லது "முதுகெலும்பாக" பனையோலையில் செயல்படுகிறது, இது பனையோலையின் கட்டமைப்பையும் உறுதித் தன்மையையும் வழங்குகிறது.  லிக்னின் என்பது ஒரு கிளைப் பொருளாகும்,  இது பனையோலையில் உள்ள செல்களை ஒன்றாக இணைத்து, பனையோலையின் கட்டமைப்பை நிலையானதாக வைத்திருக்க உதவுகிறது.  லிக்னின் என்பது ஒரு கார்போஹைட்ரேட்.   இதன் மூலக்கூறு அமைப்பானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ளது.  இது வறண்ட நிலையில் பனையோலையை விட்டு வெளியேறும் தண்ணீரைத் தடுக்க ஒரு தடையாக செயல்படுகிறது, மேலும் இது பூச்சிகள், பூஞ்சை மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகிறது.

பனையோலையில் உள்ள லிக்னின், பனையோலைகளின் செல் சுவர்களிலும் இடையிலும் காணப்படுகிறது, இச்செல் சுவர்களில் உள்ள வெற்றிடங்களில் உள்ள காற்று உள்ள நிலையில் எழுத்தாணி கொண்டு பனையோலையைக் கீறும் போது காற்று உள்ள இடங்களில் குத்தல்களோ ஓட்டைகளோ விழுந்துவிடும்.  இந்நிலையில் பனையோலையில் குத்தல்களோ ஓட்டைகளோ விழாதவாறு எழுத்துக்கள் அமைவதற்கு இந்த லிக்னின் பனையோலை முழுவதும் பரவலாகவும் சமமாகவும் இருக்க வேண்டும் என்ற அறிவியல் சிந்தனையின் அடிப்படையில் வழவழப்பான கல் அல்லது சங்கு கொண்டு ஒரு முகமாகவும் ஒரே பக்கமாகவும் தேய்த்து, செல்களுக்குள் இருந்த காற்றை வெளியேற்றி எல்லா இடங்களிலும் லிக்னின் நிரவி இருக்குமாறு செய்திருக்கின்றனர்.

தற்போது ஓலைகளை வழவழப்பாக்குவதற்குக் கரும்பு பிழியும் எந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.  இதுபோன்று தேய்க்கப்பட்ட ஓலைகளைத் தேவையான அளவு இருபலகைக்கிடையில் வைத்துக் கட்டி ஓலைகளின் இருபுறமும் வளைவாக இருக்குமாறு வெட்டப்படவேண்டும்.  இவ்வாறு வெட்டப்படும் முறையை ஓலை நறுக்குதல் என்பர்.

ஒரே அளவாக வெட்டப்பட்ட ஓலைகளை ஒன்றாகக் கட்டி வைக்கத் துளையிடவேண்டும்.  நீளம் குறைவான ஓலைகளாயின் ஓலைகளின் மத்தியிலோ இடது ஓரத்திலோ மேலும் ஒரு துளையிட்டுள்ளனர்.  ஓலைகளின் நீளம் அதிகமாக இருப்பினும், ஓலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் ஓலைகளைக் கட்டிவைக்க சமநிலையிலும் ஒரே வகையான இழுவிசையிலும் பனையோலைகளைக் கட்டாகக் கட்டி வைக்க அறிவியல் சிந்தனையோடு பனையோலையின்ல் நீளத்தில் 1:2:1; 2:3:2 என்ற விகிதாச்சார முறையில் இரண்டு  துளைகளிட்டுள்ளனர்.

துளையிடப்பட்ட ஓலைகளைக் கயிறு கொண்டு கட்டி வைத்துள்ளனர்.  ‘சுவடிகளின் ஓரங்கள் ஒரே வடிவமாக இருக்க ஓரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும் ஓலைகளைச் மிதமாகச் சூடாக்கப்பட்ட இரும்பினைக் கொண்டு சமன்படுத்தப்பெறும்.  அதாவது, பனையோலைகளில் உள்ள ஈர்க்கினைப் பிரித்தெடுக்கும்போது உண்டாகக் கூடிய பிசிருகளால் ஓலையின் இடைப்பகுதியில் இருக்கக் கூடிய செல்களுக்குக் காற்றையோ ஈரப் பதத்தையோ உள்ளீடு செய்யாமல் இருப்பதற்காகப் ஈர்க்குப் பிரிக்கப்பெற்ற ஏடுகளை ஒன்றிணைத்து இருபுறமும் ஏடொத்த அளவுடைய கடினமான கட்டையை வைத்து செல்களில் இருக்கக் கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் ஒரு ஒழுங்கற்ற பினாலிக் கலவையின் துவாரங்களை மூடி எதிர்காலத்தில் ஈரப்பதம் ஏற்காதிருக்கச் செய்த அறிவியல் சிந்தனை பாராட்டுக்குரியது. இவ்வாறு தயாரிக்கப்பெற்ற எழுதப்பெறாத ஓலைகளை வெள்ளோலை என்பர்.

எழுத்துக்களை எழுத்தாணி கொண்டு கீறுவதற்கு ஏற்றவாறும், கீறப்பெற்ற பதிவுகள் பல ஆண்டு காலம் நிலைத்து இருப்பதற்கும் பனையோலைகளை மேலது முறைகளில் தயாரிக்கும்போது பச்சையத்தை போக்குவதற்கும், லிக்னின் சமன்பாட்டையும், ஓலையின் கட்டமைப்புக்கு ஏற்றவாறு துளைகள் இட்டதிலும், பனையோலை ஈர்க்கு நீக்கிய விடத்தில் ஏற்பட்ட பிசிருகளை நீக்குவதற்குக் கையாண்ட முறையிலும் பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் வெளிப்பட்டிருப்பது வெள்ளிடையாக பாராட்ட வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

துணை நூல்கள்

1.     மோ.கோ. கோவைமணி, 2013, ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், தஞ்சை.

2.     ச.வே. சுப்பிரமணியன், (பதிப்.), 1998, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

3.    மணவை முஸ்தபா, 1995, இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக