வெள்ளி, 8 ஜூலை, 2016

முத்துநாச்சி சண்டை

முத்துநாச்சி சண்டை

       வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தியை மையமாக வைத்த 892 வரிகளைக் கொண்ட கதைப்பாடல் சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் காணப்படுகிறதுஇச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார்.

       தென்னிந்தியாவில் ஆர்க்காட்டு நவாபுக்குப் பல குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தி வந்தனர்நவாப் புரிந்த போர்களில் ஆங்கிலேயர்கள் படை உதவி செய்த காரணத்தால் தம் ஆட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆர்க்காடு நவாவு ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.  ஆங்கிலேயரிடம் பண வலிமையும், பீரங்கி மற்றும் துப்பாக்கி முதலிய நவீன கருவிகளும், படை வலிமையும் இருந்ததால் பல குறுநில மன்னர்கள் பயந்தனர்தென்னாட்டில் கட்டபொம்மன் மற்றும் சிவகங்கை மருதுசகோதரர்கள் தவிர மற்ற எல்லா பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களுக்குப் பணிந்துவிட்டனர்

கட்டபொம்மனும் ஆங்கிலேயரும்

       பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் கட்டபொம்மன் ஆட்சி செய்து வந்தான்.  1791இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து நிர்வாகப் பொறுப்பைக் கட்டபொம்மன் ஏற்று திறம்பட நடத்திக்கொண்டு இருந்தான்குடிமக்கள் அனைவருமே கட்டபொம்மனைத் தெய்வமாக வழிபட்டனர்வெள்ளையரின் வெறித்தனமான செயல்களை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்அதனால் மக்கள் தங்கள் மன்னருக்கு உறுதுணையாக விளங்கினார்கள்வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்பான ட்சியின் போது அவனை வீழ்த்துவதற்குச் சில குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்கரர்கள் முயன்றனர்.  
 
   வெள்ளையர்கள் மக்களை அமைதியற்ற நிலைக்கு உள்ளாக்கும் நோக்கத்தின் முதல் கட்டமாக வரியை உயர்த்தினார்கள்சில பாளையக்காரர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கப்பம் கட்டினர்அப்படிப்பட்ட பாளையக்காரர்களுக்கு மேல்நாட்டு மதுபானம் பரிசாகக் கொடுத்தனர்இவர்கள் நம் சொற்படி கேட்கும்போது கட்டபொம்மன் மட்டும் எதிராக செயற்படுவது அவர்களுக்கு அவமானமாகப்பட்டதுகட்டபொம்மன் மீது கோபங்கொண்ட வெள்ளையர்கள் சில குறுநில மன்னர்களின் ஆதரவுடன் கட்டபொம்மனைப் பணிய வைக்க முயன்று தோற்றுப் போயினர்.

       ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முற்றிலும் வெறுத்த கட்டபொம்மன், எங்கள் தாய் நாட்டின் மீது அந்நியரான நீங்கள் வரி விதிக்க என்ன உரிமை இருக்கிறது? எங்களது தமிழ் மண்ணில் ரோமானியர், சீனர், பாரசீகர் போன்றோரெல்லாம் கடல் கடந்து வந்து நட்புக் கொண்டு வாணிகம் செய்தனர்அவர்களிடம் நாங்கள் அன்பாகத்தான் வாணிகம் செய்தோம்ஆனால் பரங்கியரான நீங்கள் வியாபாரம் செய்ய வந்து அதிகாரம் செய்து எங்களை அடிமைகளாக்க நினைக்கின்றீர்கள்நாங்கள் என்ன அந்நியரான உங்களிடம் அடிமைச் சாசனமா எழுதிக் கொணடுத்துவிட்டோம்தன்மானம் கொண்ட தமிழர்கள் நாங்கள்தலைக்கனம் பிடித்த உங்களுக்கு எந்நாளும் தலை தாழோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்போரில் புறங்காட்டி ஓடாமல் எதிர்த்து நின்று போராடி மார்பில் வேல் பாய்ந்து மடிந்த மறவர் குலத்தோர் நாங்கள் என்று வீர முழக்கமிட்ட கட்டபொம்மன் ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான்அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர்மண் கோட்டையிலிருந்து வாளும் வில்லும் கொண்டு சிறிய படையோடு பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும்படையை எதிர்ப்போராடினான் கட்டபொம்மன்.

பாஞ்சாலங்குறிச்சிப் போர்

       கட்டபொம்மனின் முதற் போரில் தளபதி காலிசென்ஸ் இறந்தான்கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் அப்போரில் இறந்தான்வெள்ளையர் படை சிதறியது.  1799இல் மறுபடியும் பெரும்படையோடு மேஜர் பானர்மேன் என்பவர் தலைமையில் கி.பி.1799 செப்டம்பர் 5இல் வந்த படையினரைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் நுழைய விடாமல் ஊமைத்துரை முறியடித்தான்எனினும் சென்னையிலிருந்து பானர்மேனுக்கு உதவிட மேலும் படை வரவே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை ஆகியோர் கோட்டையை விட்டு வெளியேறினர்ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த புதுக்கோட்டை மன்னால் நயவஞ்சகமாகக் காட்டிக் கொடுக்க கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சிறைப்பட்டனர்.

       கட்டபொம்மனைச் சிறைபிடித்த பானர்மேன் உடனடியாக அவர்களைத் தூக்கிலிட்டால் மக்கள் கலகம் செய்வார்கள் என்றெண்ணி அவர்கள் மீது பல குற்றங்களைச் சொல்லி அவர்களைச் செயலற்றுப் போகும்படி செய்ய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டான்அதன்படி பாளையக்காரர்களைக் கயத்தாற்றில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைத்து பல கட்டளைகளை இடுகிறான்அதன்படி பாளையக்காரர் ஆயுதம் தாங்கும் உரிமையை இழந்தனர்ஆயுதம் தாங்குதல் சட்டவிரோதமாக்கப்பட்டதுஅனைவரது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது கோட்டைகள் ஆங்கிலேயரை எதிர்க்கும் பாசறைகளாக மாறிவிடக்கூடும் என்றஞ்சி கோட்டைகள் இடிக்கப்பட்டனபாளைய நிர்வாகத்திற்காக செலவிடப்படும் தொகை பற்றிய கணக்குகள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டதுஇவற்றை பாளையக்காரர்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவற்றைச் செயற்படுத்தினர்இவ்வாறு அராஜகமாகச் செயற்பட்டு பாளையக்காரர்களை அடக்கி அக்டோபர் 10ம் தேதி 1799இல் நீதி விசாரணையின் முடிவில் வீரபாண்டியனாகிய கட்டபொம்மனைக் குற்றவாளியாக்கிக் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிட்டனர்ஊமைத்துரை சிறையில் அடைக்கப்பட்டான்.

    கட்டபொம்மன் மறைவுடன் பாஞ்சாலங்குறிச்சிப் போர் முற்றுப்பெறவில்லைஊமைத்துரையும் மற்ற வீர்ர்களும் பாளையங்கோட்டையில் சிறைப்பட்டிருந்தனர்அவர்களைப் புலிக்குத்தி நாயக்கன் என்பவன் 1801 பிப்ரவரி 2இல் சிறையிலிருந்து மீட்டான்சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலில் பாளையங்கோட்டை சிறையை இடித்துத் தரைமட்டமாக்கினான்ஒட்டப்பிடாரத்தில் 4 நாட்களில் வலிமையான மண்கோட்டையை எழுப்பினான்.  1801ஆம் ஆண்டு மே மாதம் 24ந் தேதி ஆங்கிலேயர்கள் கோட்டை மீது குண்டுகள் வீசினர்அதில் நிலவறை தீப்பிடித்துக் கொண்டதுஅங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் புகையால் மூச்சுவிட முடியாமல் தினறிக் கொண்டிருந்தனர்பல தாய்மார்கள் ஆங்கிலேயர்களால் தீண்டப்பெறக் கூடாது என்பதற்காகவே தீயில் விழுந்து உயிர் துறந்தனர்கும்பினிப்படை கோட்டைக்குள் புகுந்ததுபோர் வீர்ர்களுடன் பெண்களும், உலக்கை, முறம், மூங்கில் கம்பு முதலியவற்றை ஏந்திப் போர் புரிந்தனர்இதனைக் கண்ட ஊமைத்துரை பெண்களின் கற்பு நெறிக்கு ஊறு விளைந்திடக்கூடாது என்னும் அச்சத்தில் தன் வாளைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்கிய காட்சியையும் அதைத் தொடர்ந்து பெண்கள் போரில் இறங்கிய நிலையையும் அவர்கள் மானத்தைக் காக்க ஊமைத்துரை பெண்களை வெட்டிச் சாய்த்த காட்சிகளையும் கட்டபொம்மன் வரலாறு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

       இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன், ஊமைத்துரை வரலாற்றைக் கூறும் நூல்களில் பெண்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட செய்திகள் காணப்படுகின்றனஇத்தகையதொரு இக்கட்டான சூழலில் முத்துநாச்சியும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்இவள் இரண்டு நாள்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்தம் சகோதரர்கள் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை போலவே முத்துநாச்சியும் தன் பங்குக்கு ஆங்கிலப் படையில் பெரும் சேதத்தை உண்டு பண்ணி பின்னரே உயிர்விட்டிருக்கிறாள்இவளது அஞ்சா நெஞ்சமும், வீரதீரமும், செயல் திறமையும், மனவலிமையும் பற்றியெல்லாம் முத்துநாச்சி சண்டை எடுத்துரைக்கிறதுமுத்துநாச்சி பற்றி இதுவரை தனி நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் சுவடி தரும் செய்திகளின் அடிப்படையில் அவளது பிறப்பு, வளர்ப்பு, வீரம், விடாமுயற்சி, அஞ்சாநெஞ்சம், எதிரிகளை எதிர்த்துப் போரிடும் பாங்கு, செயல்திறன் போன்றவற்றை இக்கதைப்பாடலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்துநாச்சி

       முத்துநாச்சி கி.பி.1760இல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகளாவாள்இவது தாயார் பெயர் ஆறுமுகத்தம்மாள்இவள் கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவளாவாள்வரலாற்று நூல்களில் முத்துநாச்சி பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லைஎனினும் கட்டபொம்மனுடன் பிறந்தோர் ஊமைத்துரை, துரைசிங்கம் எனும் இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு எனும் இரு சகோதரிகளும் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது

       முத்துநாச்சி போர்க்கோலத்துடன் தனது அண்ணன் வெள்ளையையாவைக் காணச் சென்றபோது அவளை அடையாளம் புரியாத நிலையில் நீ யார்? என வினவ, அதற்கு முத்துநாச்சி,
              எந்த வூரு யினம் எந்தச் சீர்மை என்று
                     என்னை நீ கேட்டாயே வெள்ளை அய்யா
              இருக்குறது னான் பாஞ்சாலங் கோட்டையும்
                     என் பேருமே முத்துநாச்சி அய்யா
எனக் கூறுவதிலிருந்து இவள் கட்டபொம்மன் சகோதரர்களுக்கும் நேர் இளையவள் என்பது பெறப்படுகிறதுஇவளது போர்க்கோலம் கண்ட வெள்ளையையா மிகுந்த வருத்தத்துடன் மேலும் கூறும் மொழிகள், இவள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து உணர்த்தும் வாயிலாக அமைகிறது.
              கட்டிக் குடுத்துமே முத்துநாச்சி உன்னை
                     கண்ணாலே பார்க்கலா மென்றிருந்தேன்
              மச்சினன் முத்தையனுக்குக் கொடுத்துனான்
                     வாழ்வையும் பார்க்கலா மென்றிருந்தேன்
              ஆணுக்கினிண்ணமு நாங்களடி யம்மா
                     அடிக்கிளைக்கிப் பெண்ணில்லை என்று
              பேச்சி வரத்திலே நீ பிறந்து முத்துநாச்சி
                     என்றுனக்கு பேருமிட்டு
              பெண்ணென்று சொல்லி  வளத்தின மானாலே
                     புத்தி குறைச்சலாய்ப் போகுமென்று
              ஆணென்று சொல்லியேதான் வளர்த்து உன்னை
                     அச்சினம் பழக்கி வைத்திட்டமே
என்னும் வரிகளால் பெண் குழந்தை இல்லாத நிலையில் தெய்வத்திடம் வேண்டிப் பிறந்தவள் என்பதும், ஆண்பிள்ளை போல மிகுந்த வீரத்துடன் புத்திசாலியாகவும் வளர்க்கப்பட்டாள் என்பதும், தன் தங்கை சீரும் சிறப்புமாக மணவாழ்க்கை வாழவேண்டும் என்றும் நினைக்கும் வெள்ளையையாவின் கூற்று சான்றாகிறது.

முத்துநாச்சி சண்டை கதைச்சுருக்கம்

       பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற ஊமைத்துரையும் அவனது வீர்ர் ஆயிரம் பேரும் காயமுற்று பாஞ்சாலங்கோட்டையில் இருக்கின்றனர்அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு சின்னாபின்னமாகக் கூடுமே, இழிவு ஏற்படுமே எனும் கவலையில் தாமே அவர்களைக் கொன்றுவிடுதல் நலமென நினைத்து அடப்பக்காரனை அனுப்பி தமது சிறியதாயார் நால்வரையும், கட்டபொம்மன் மனைவியர் மூவரையும், கட்டபொம்மன் வைப்பு மற்றும் வெள்ளையையா கட்டிய மூவரையும் ஆக பதினொரு பேர்களைத் தம் குலதெய்வம் சக்காதேவி முன் வைத்து பலியிட்டு விடுகின்றான்பிறகு பேறுகாலத்திற்காகத் தகப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கும் தமது மனைவியை வெட்டப்புகும்போது அவள் தம் வயிற்றில் பட்டத்திற்குரியவன் பிறக்க இருப்பதைக் காட்டி தம்மை விட்டுவிடக் கூற அவளை விடுத்து பின் தங்கை முத்துநாச்சியை வெட்டப் புறப்படுகிறான்.

       தம்மை வெட்ட வந்த தமையன் ஊமைத்துரையைப் பார்த்து முத்துநாச்சி வீணே இப்பொழுது வெட்டிப் போடுவதைக் காட்டிலும் போர்க்களத்தில் மாண்டால் மிகுந்த சிறப்பாகும்உன் போல புலியின் கூடப்பிறந்த எனக்கு மட்டும் வீரமில்லாது போகுமோ எனப் பலவாறு வாதிடுகிறாள்.  இதனை,
              கன்னிகழி யில்லை உந்தன் தங்கைவேற
                     கருமிச மொன்றுங் கண்ட தில்லை
              புத்தி யறிந்து பதினஞ்சு னாளின்னம்
                     பேதக மொன்று மறிந்த தில்லை
              பூமியைப் பார்த்து நடந்த கண்ணால்ப்
                     புகள்மானத்தைப் பார்த்து நடந்த தில்லை
              புலியின் கூடப்பிறந்து போட்டே யின்னம்
                     பூனையாய்ப் போவேனோ தங்கையரும்
              சிங்கத்தின் கூடப்பிறந்து போட்டு யின்னம்
                     சிறுவ னாவனோ உன்பிறப்பு
              நீயு மிருந்து பிறந்த வயிற்றிலே
                     நானு மிருந்து பிறந்த னண்ணே
              உனக்கு முள்ள சவுரியமு மின்னம்
                     எனக்கில் லாமலிருந் திடுமோ
              நீயுங் குடித்த தாய்முலைப் பாலிலே
                     நானுங் குடித்து வளர்ந்த னண்ணே
              உனக்கு வார்த்த்தோர் சங்கிலே கொஞ்சம்
                     எனக்கு மெத்தவே வாத்திருப்பார்
              முகத்திலே யுனக்கு மீசையடா அண்ணே
                     முழங்காலி லெனக்கு மீசையடா           (வரி.52-61)
என்று வாதிட்டு போர்க்களம் போக முடிவெடுத்ததைக் கூற, ஊமைத்துரை அவளை விடுத்து வந்து சேர்கிறான்நடந்த அனைத்தையும் கேள்வியுற்ற வெள்ளையையா தானாதிபதி மால்பத்திரப் பிள்ளையை அழைத்து வெட்டப்பட்ட பெண்களைக் கானத்துறையில் எரியூட்டி வரும்படி கூறுகிறான்இச்சமயம் முத்துநாச்சி தாதிமார்களைப் பார்த்துத் தலைக்குவிட தண்ணீர் கொண்டுவரச் செய்து, தீட்டு கழித்த பின்பு, தாம்  அச்சமயம் அணிந்திருந்த நகைகளைக் களைத்து, பின்பு பொக்கிஷ வீட்டைத் திறந்து பெட்டியை எடுத்து தன் முன்னே வைத்து நிலைக்கண்ணாடியையும் வைத்து நகைகளைப் பூட்டிக் கொள்கிறாள்சரிகைத் தலைப்பாவை வரிந்து கட்டி, காதில் முத்து வைத்த சேரை ஒட்டுகளும், கடுக்கனும், வாவிலிமுருகு, குறடாசங்கிலி, மோகன மாலை, சோபன மாலை, முதாரி, முறுக்குவளை, கண்டிமணி, மங்கலக்கட்டு, மோதிரம், கைகளுக்கு வைரப்பாசி அணிந்து கச்சைகட்டி மார்பில் வைரப் பதக்கமும் அணிந்து பின் பொக்கிஷ வீட்டைப் பூட்டி தம் குலதெய்வமான சக்காதேவி கோவிலுக்குச் செல்கிறாள்.  அங்கு சக்காதேவியிடம்,
              வடக்கு முகமேதான் விழுந்து தங்கை
                     வடவாசல் நோக்கிய கையெடுத்தாள்
              தெற்கு முகமேதான் விளுந்து தங்கை
                     தெண்டனிட்டாள் குலதெய்வமதை
              ஆண்டவளே லோக னாயகியே என்னை
                     ஆதரிக்குஞ் சக்காதேவி யம்மாள்
              சத்தி கெவுரி மகமாயி சிவசங்கரியே
                     சக்கா தேவி யம்மாள்
              கம்பள மொன்பது சிவகார்ருக்கு
                     கைவிளக்காய் நின்ற சக்காதேவி
              பில்லிக் குடையவள் சக்காதேவி யிந்த
                     பிணத்தைத் தின்கிற தேவதையே
              பாஞ்சாலங் கோட்டையில் சக்காதேவி யின்னம்
                     படைவெட்டுங் கட்டமன் பொம்மன் தெய்வம்
              கட்டமனுண் டென்று கையெடுக்கவனை
                     காட்டி குடுத்தாய் கயத்தாற்றில்
              அப்படிப் போலவே அண்ண னூமையனை
                     அச்சினம் ஒப்புக் கொடுத்திட்டாயே
              உந்தனுடைய உறுதியை நம்பியே
                     உற்ற கும்பினியைப் பகைசெய்தாற்
              இந்த விசைக்கிநீ ஊக்கு முனை கொடுத்து
                     எங்களை ரட்சியுஞ் சக்கா தேவி
              ஆறாயிரம் பேரு மங்கலியங்களை
                     அறுக்க வைத்தாயே சக்காதேவி
              ஆறாயிரம் பேரும் போனபின்பு உன்னை
                     ஆரடி வந்துனைக் கையெடுப்பார்
              ஒப்புக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
                     ஒதுங்கி நிக்காதே சக்கா தேவி
              காட்டிக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
                     கடக்க நிக்காதே மாதாவே          (வரி.105-119)
என்று முறையிடுகின்றாள்.  அதாவது, தம் குலதெய்வம் சக்காதேவியின் கோயிலுக்குச் சென்று அத்தெய்வத்தின் சிறப்புக்களைப் பலவாறு பேசி நீ துணையிருக்கும் தைரியத்திலேயே அண்ணன் கும்பினியைப் பகைத்தார்அவரை இப்படி ஒப்புக்கொடுத்துவிட்டாயேஎங்களைக் காப்பாற்றியருள்வாய்ஆறாயிரம் பேர்களை மாங்கல்யங்களை அறுக்கவைத்துவிட்டாயேஇனி உன்னை யார் வந்து வணங்குவர்இன்னமும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காதே. இப்போது சர்ச்சத்துரையுடன் போரிட நான் செல்கிறேன்எனது வலதுபுறத்தில் நீ உதவியாக வருதல் வேண்டும்நான் கன்னி கழியாதவள், குற்றம் எதுவும் இல்லாதவள், இதுவரை நிமிர்ந்து பார்த்து நடக்காதவள், மைத்துனன் முத்தையன் மீது சற்றே என் மனம் இருந்தது. அதை இந்த நிமிடத்திலிருந்து மனதில் இருந்து விலக்கிவிட்டேன்இனி அவர் என் உடன்பிறப்பு எனத் தன் மனத்திலிருந்து அத்தனையும் கூறிவிட்டு சக்காதேவியைத் தமக்கு உதவியாக வரும்படி வேண்ட அச்சமயம் சகுனங்கள் மூலமாக தெய்வத்திடமிருந்து உத்தரவு கிடைக்க கோயிலைவிட்டுப் புறப்படுகிறாள் முத்துநாச்சி.

       கோயில்விட்டு வந்த முத்துநாச்சி வெள்ளையையாவிடம் செல்ல அவருக்கு முத்துநாச்சியின் போர்க்கோலம் கண்டு அடையாளம் புரியாமல் தம்பி உனக்கு எந்த ஊர் என்று வினவ அவள் அதற்கு என் பெயர் முத்துநாச்சிஎன் ஊர் பாஞ்சாலங்கோட்டைகட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா ஆகியோருக்கு நேரிளையாள் எனக் கூறுகிறாள்.  இதனைக் கேட்ட வெள்ளையையா அவளை வாரியணைத்து மடியிலமர்த்தி உனக்கென்ன பைத்தியமா? உன்னை மைத்துனன் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்து கண்குளிர பார்க்கலாமென்றிருந்தேன்நீ இப்படி போர்க்கோலம் பூண்டு விட்டாயே என்று கூறி, பெண் வேண்டும் எனத் தெய்வங்களை வேண்டி வரம் பெற்றுப் பிறந்தவள் நீ என்பதையும், பெண்போல பொத்தி வளர்த்தால் புத்தியின்றி போய்விடும் என ஆண்போல வீரத்துடன் வளர்த்ததையும் கூறி, இப்படி அவளது அருமை பெருமைகளைக் கூறி அவளைப் போருக்குப் போக வேண்டாமெனத் தடுக்கிறான்அதற்கு முத்துநாச்சி வெள்ளையையாவைச் சமாதானப்படுத்தி நான் அன்றும் இன்றும் என்றும் ஆண்பிள்ளையே என்று கூறி சர்ச்சத்துரையை வெட்டி செயங்கொண்டு வருகிறேன் என்று கூறுகிறாள்.

       வெள்ளையையாவும் மிகுந்த கலக்கத்துடன் தங்கைக்கு விடைகொடுக்கிறான்அடுத்து இக்கோலத்துடன் முத்துநாச்சி ஊமைத்துரையைக் கண்டு வணங்கி விடைபெறுகிறாள்அண்ணன்மார்கள் இருவர் இருந்தும் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என மிகவும் மனம் கலங்குகிறான் ஊமைத்துரைதாம் கலங்கினால் தங்கை மனம் கலங்கும் என மனதைத் திடப்படுத்தியவாறு அடப்பக்காரனை அழைத்து கட்டபொம்மனின் பட்டத்து பட்டாவைக் கொண்டு வரச் செய்து அதனைத் தங்கையிடம் தருகிறான்அத்துடன் முன்மடியில் சொருகுவதற்குக் கட்டாரி, பட்டாக்கத்தி, தங்கப் பூப்போட்ட கேடயம் போன்றவற்றைக் கொடுத்து எதிரியை வெட்டி செயங்கொண்டு வா என வாழ்த்தி விடையளிக்கிறான்.

       இவ்வாறே முத்துநாச்சி அரண்மனையை விட்டு ஆசாரசாவடி கடந்து கடைவீதி முன்பாக வந்தபோது எதிரில் போரில் இறந்த ஆராயிரம் பேர்களுடைய மனைவிமார்களும், கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதற்கு முடிவெடுத்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள்எதிரில் வந்த முத்துநாச்சியைப் பார்த்து ஊமைத்துரை, வெள்ளையையா, முத்தையன் இவர்களைவிட துரைமார்கள் இங்கு யாருமில்லையே அப்படி இருக்க நீ யார் என அடையாளம் புரியாமல் வினவுகின்றார்கள்அதுகேட்டு லேசாக சிரித்த முத்துநாச்சியை அடையாளம் கண்டுகொண்டு உனக்கெதற்கு போர்க்கோலம் என வினவுகின்றார்கள்எனினும் அங்கிருந்த கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதைவிட போர்க்கோலம் கண்டு போரில் குண்டடிபட்டு சாவது மேலெனக் கூறி முத்துநாச்சியின் பின் வருகின்றனர்மேலும் மற்றவர்களிடமும் எடுத்துக் கூறி அவர்களைப் போருக்கு அழைக்க இரண்டாயிரம் பெண்கள் போருக்குத் தயாராகி, உலக்கை, தடிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள்.  இதனை,
              உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
                     உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
              இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
                     இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
              என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
                     இச்சினம் பின் ஓடி வந்து
              ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
                     முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
              என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
                     இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
              தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
                     தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
              புருசனுடைய யீட்டிகளெடுத்து
                     புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
              வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
                     வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
              உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
                     ஓடி வாங்களடி சண்டை செய்ய
              கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
                     கனமரியாதைத் தானுமுண்டோ
              என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
                     இச்சினமே யந்த பெண்டுகளும்
              அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
                     அச்சினம் வெளியில்ப்பட்டு மங்கே
              இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
                     எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
              பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
                     பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
              இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
                     இறந்து போவது உத்தமந்தான்             (வரி.201-215)
என்றவர்கள் கோட்டைக்கு வாயு வேகத்தில் வந்து முத்துநாச்சியை வணங்கினர்அவர்களைப் பார்த்து முத்துநாச்சி ஏன் இங்கு  வந்தீர்கள் என வினவ உனக்குப் போரில் உதவவே வந்தோம் என்கின்றனர்இதைக்கேட்டு முத்துநாச்சி இப்படி எல்லோரும் சென்றால் சச்சரன் கண்டு கொள்ளக்கூடும் எனக் கூறிவிட்டு அண்ணனின் அரண்மனைக்கு ஓடி வருகிறாள்ஊமைத்துரையைப் பார்த்து அங்கலக்காரணம், கேப்பை மாவு, முறங்கள், சூட்டு அடுப்புகள், நவபாண்டம், விறகு போன்றவை வேண்டும் எனக் கேட்கிறாள்ஊமைத்துரை, ஆள் அனுப்பி தங்கை கேட்டவற்றைத் தரும்படி ஆணையிடுகிறான்.  அனைத்தையும் கோட்டைக்கு உடனே கொண்டு போக உத்தரவிடப்பட்டதுஅச்சமயம் ஒட்டப்பிடாரத்தில் உளவு சொல்வோன் கோட்டைக்கு ஓடி வந்து எதிரிப்படைகள் வந்திறங்குவதைப் பதற்றத்துடன் கூறுகிறான்.  அச்சமயம் எட்டமன் ஏணிகள், வைக்கோல் கட்டுகளை வண்டியிலேற்றி வருகிறான்கோட்டைக்குப் படைகள் வந்ததை உணர்த்தும் விதமாக மூன்று வேட்டுச் சத்தங்கள் முழங்க அடப்பக்காரனும், உளவு செல்வோனுமாக முத்துநாச்சியைக் கண்டு விவரம் கூறி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுகின்றனர்.

       நடுசாம நேரத்தில் பட்டாளம் புறப்படுகிறதுஅச்சமயம் முத்துநாச்சி ஆயிரம் பெண்களைக் கோட்டைக்கு வரவழைத்து அவர்களை எட்டெட்டு பேர்களாகப் பிரித்து நிற்வைக்கிறாள்இச்சமயம்  சச்சரனது பட்டாளம் கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றி வந்து விட்டதுஅதன்பின் ஏணிகள் வந்து இறங்கினஇதைக் கண்டதும் முத்துநாச்சி ஆயத்தமாக எழுந்து நிற்கிறாள்படைகள் வந்திறங்கியதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்விடிய ஒரு சாமம் இருக்கும் வேளையில் முத்தையன், குப்பையாண்டித்தேவன் இவர்கள் கொத்தளத்தில் வைத்து கூழைக் காய்ச்சும்படி கள்ளச்சிகள் ஏழுபேருக்கும் கூறுகிறாள்அதுபோல தும்பிச்சி மேட்டில் கொள்ளை வறுத்துக் கொட்டும்படி சொல்கிறாள்இவ்வாறு பெண்கள் பாதிபேரிடம் கூழ் காய்ச்சும் படியும் பாதிபேரிடம் கொள் வறுத்துக்கொட்டும் படியும் கூறி ஏனைய ஆயிரம் பெண்களை உலக்கைத்தடி ஏந்தி தலை தெரியாது இருந்தபடி சண்டை செய்யும் படியும் கூறுகிறாள்.

       நீங்கள் பெண்கள் என்று கண்டு கொண்டால் பீரங்கி போட்டு விடுவான்அதனால் மறைந்து நின்று தாக்குங்கள் என்று கூறுகிறாள்மேலும் அவர்களுக்கு தைரியமளிக்கும் வகையில் நாமும் மனிதர்கள், அவர்களும் அவ்வாறேஅதனால் பயப்பட வேண்டாமெனக் கூறுகிறாள்இவ்வாறிருக்கையில் எச்சரிக்கை வேட்டு கிளம்புகிறதுஅனைவரையும் உஷார் நிலையிலிருக்கக் கூறித் தானும் உஷாருடனிருக்க மற்றொரு வேட்டுச் சத்தம் எழுப்பி கோட்டைமேல் ஏணியைச் சாத்துகிறான் சர்சத்துரைமற்றுமொரு வேட்டு கிளம்ப கேப்டனும் கோட்டை மேல் ஏறி வந்து விட்டான்அதனைக் கண்ட முத்துநாச்சி பெண் தெய்வங்களை வரிசையாக வேண்டியவாறு நிற்க, கேப்டனும் அருகில் வர, தெய்வங்களுக்கு நரபலி எனக் கூறி அவன் தலையை வெட்ட, அது கோட்டைக்குள்ளே விழுகிறதுஅதைத் தொடர்ந்து ஆப்புசேர், நாயக்கமார் என அனைவரும் வர அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துகிறாள் முத்துநாச்சிபிறகு சுபையதார், கும்மந்தான் இன்னும் பலரும் வெட்டுப்பட சச்சரன் இருவர் இருவராக அனுப்ப அனைவரையும் வெட்டி வெள்ளரிக்காய்களைப் போல வீழ்த்துகிறாள்.  மேலும் அவள் சச்சரனைப் பார்த்து எட்டையபுரத்து சச்சரனே ஊமைத்துரையும் ஆராயிரம் பேர்களும் காயமுற்று இருப்பார்கள் என நினைத்து கோட்டைமேல் ஏறி வந்தாயோ? கயத்தாற்றில் தூக்கில் விழுந்த கட்டபொம்மன் திரும்பி வந்துவிட்டானடா கோட்டைக்கு எனக் கூறியவாறு கோட்டைக்குள் இறங்கிச் செல்கிறாள் முத்துநாச்சி.

       சச்சரத்துரையும் படைகளை நான்கு வகையாகப் பிரித்து அனுப்பி கோட்டைமேல் ஏறி விட்டான்முத்தையன் கொத்தளத்தின் மீது ஏற அச்சமயம் கள்ளச்சிகள் ஏழு பேரும் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்அதில் சிறிது பட்டாளம் இறந்ததுதும்பிச்சி மேட்டிலும் கொள்ளை வறுத்துக் கொட்டினர்சூட்டு அடுப்புகளையும் தலைமேலெறிந்தனர்சாம்பலுடன் தணலை வாரித் தலையில் போட்டனர்பட்டாளத்தில் பலர் இறந்தனர்தொடர்ந்து கூழ் சட்டிகளும் சிப்பாய்கள் மீது வந்து விழுந்தனஅதனால் சிப்பாய்கள் கண்கள் ஒழுகி வெள்ளரிப் பழம் விரிவது போல் விரிந்தனர்இப்படியாக சண்டை தொடர்ந்ததுமீதமுள்ள பட்டாளங்களும் வந்து சேர்ந்தனஇதைக்கண்ட பெண்கள் ஆயிரம் பேரும் உலக்கை தடிகளுடன் ஆயத்தமாகி அவர்களைத் தாக்க சிப்பாய்களின் தலைகள் பருப்புச்சட்டியும் தயிர்ச்சட்டியும் உடைவது போல சிதற நாக்குகள் தள்ள, இரத்தம் சொட்ட இப்படி பலவாறாகத் தாக்கப்பட்டு பட்டாளம் முழுதும் இறந்து போகின்றனர்சச்சரனும் உடன் குதிரைக்காரர்கள் ஏழு பேர்களுமே மிஞ்சி கூடாரத்தில் இருக்கின்றனர்அப்போது எட்டையபுரத்து தானாபதி அதிகாரத்துடன் ஊமைத்துரையும் அவள் உற்ற துணைகளும் வீர்ர்களும் காயமுற்றிருக்கும்போது யார் இப்படி போர் செய்வது என வினவ, ஊமைத்துரையின் அண்ணன் தம்பியல்ல, மாமன் மைத்துனனும் அல்ல, யாரோ புதிதாகத் தெரிகிறது என முத்துநாச்சியை ஆண் என்று எண்ணிப் பேசிக் கொள்கின்றனர்பிறகு அவளை நன்கு கவனித்து நோக்கி ஆணோ, பெண்ணோ, பேயோ, பிசாசோ, காத்தோ, கருப்போ, சக்காதேவியோ தெரியவில்லை என்றெண்ணி பேசிக் கொள்கின்றனர்மீண்டும் ஒரு முறை சீனிக்கண்ணாடி கொண்டு சோதிக்க அது சக்காதேவியே என்று கூறி தப்பித்துப் போக முயற்சித்து குதிரைக்காரனை அழைத்து குதிரையைக் கொண்டு வரப் பணித்தான் சச்சத்துரை.

       அச்சமயம் முத்துநாச்சியும் இருளாயி என்பவளை அழைத்து நீலா என்னும் வெள்ளைக் குதிரையை விரைவாகக் கொண்டு வருமாறு பணித்தாள்சுற்றிப்போய் குதிரை ஏற நாழியாகும் என்பதால் ஏணி வழியாக இறங்கி வருகிறாள் முத்துநாச்சிஅவளுடன் கள்ளச்சிகள் ஏழு பேரும் இறங்கி வருகின்றனர்முத்துநாச்சி ஏணி வழி இறங்கி குதிரை ஏறச் செல்கிறாள்அதற்கு முன்பாக சச்சரனும் குதிரைக்காரர்கள் ஏழு பேரும் ஆக எட்டு பேர்களும் குதிரையேறி வாயு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்அப்பொழுது தாகத்திற்காக இடும்பன் தெப்பக்குளத்தில் எல்லோரும் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வெட்டில் இறங்கி முத்துநாச்சி சச்சரை வெட்ட கள்ளச்சி குதிரையைக் குத்துகிறாள்இவ்வாறாக அனைவரையும் வெட்டி செயங்கொண்டு கத்தியைக் கழுவும் போது ரத்தக்கறைகள் தாக்க மயங்கி விழுகிறாள் முத்துநாச்சிஅதனைக் கண்ட கள்ளச்சிகள் அவளை எடுத்து மார்போடணைத்து மயக்கம் தெளிவிக்கின்றனர்

       இச்சமயம் முத்தைய நாயக்கன் 30 பேருடன் முத்துநாச்சியைத் தேடி வருகிறான்தன்னைக் கண்டதும் பேசாது காதவழி ஓடியொலியக் கூடிய மெலியளாகிய முத்துநாச்சி இன்று எதிரிலிருப்பதைக் கண்டு மிகுந்த வருத்தத்துடன் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருமாறு அழைக்க, அதற்கு முத்துநாச்சி வீணே வருந்த வேண்டாம்நீயே கணவன், நானே மனைவி என்று நிச்சயம் செய்திருந்த காலம் ஒன்றுண்டுஉனக்கு என்னைக் கொடுப்பதென்று ராச்சியம் முழுதும் அறிந்ததுண்டுஇவ்வளவு நாட்கள் நீ எனக்கு அத்தை மகன்இப்பொழுது உடன்பிறப்பு. என் மீது இனி எள்ளளவும் ஆசை வேண்டாம்எனக்கு பதிலாய் பெரியப்பன் மகள் இருக்கிறாள்அவளை மணந்துகொள் என்று கூற அதைக் கேட்டு ஆசார சாவடிக்கு விரைந்து வருகிறான் முத்தையன். அங்கே அமரக்காரர்களுடன் ஊமைத்துரையும், வெள்ளையையாவும் இருந்தனர்அவர்கள் முன்பாக விழுந்து அழுகிறான் முத்தையன்அவனை எழுப்பி ஏன் அழுகிறாய்? தங்கைக்கு என்ன ஆயிற்று என்று அவர்கள் கேட்க தன் விதியை நினைத்து அழுவதாகக் கூற, விஷயமறிந்த சகோதரர்கள் முத்துநாச்சியை நிச்சயமாக விவாகம் செய்து தருகிறேன் என்று கூற முத்தையனும் மகிழ்ச்சியுடன் வெட்டி செயம் கொண்டு, உந்தன் தங்கையங்கை வீற்றிருக்கிறாள் என்று கூறுகிறான்

       அச்சமயம் தானாபதி மகன் மால்பத்திரப் பிள்ளையை அழைத்து தங்கையை அழைத்து வர பல்லக்கும் கள்ளச்சிகள் ஏழுபேருக்குக் குதிரையும் அனுப்உத்தரவிடுகிறான்தானாபதியும் சோடித்த பல்லக்குடனும், பதினெட்டு மேள வாத்தியங்களுடன் ஒட்டப்பிடாரம் வந்து கொட்டு முழக்குடன் முத்துநாச்சியைக் கூட்டி வருகின்றனர் கோட்டைக்கு

       அச்சமயம் அங்கிருந்த ஆயிரம் பெண்களும் ஆரத்தி எடுத்து திட்டி கழித்து திலகம் மையணிவிக்க ஆசாரச் சாவடி வந்து அண்ணனை வணங்கி எழ வெள்ளையையா அவளைத் தூக்கி நிறுத்தி எனக்குத் தாயார் சக்காதேவி தங்கை முத்துநாச்சிஇந்த அளவிற்கு எங்களுக்கு ஊக்கம் கொடுத்து காப்பாற்றினாய் சக்காதேவியேஇவ்வாறு கூறிவிட்டு இனி எப்போதும் போல் பெண்பிள்ளையாக மாறிவிடம்மா என முத்துநாச்சியிடம் கூறும் பொழுது முத்தையன்தான் முத்துநாச்சிக்காகவே காத்திருந்த விதத்தையும் இலவுகாத்த கிளிபோல ஆன தன் நிலை பற்றியும் தன்னிரக்கத்துடன் பேசுகிறான்இதைக் கேட்ட வெள்ளையையாவும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய 15ஆம் தேதி முத்தையனை மணக்க வேண்டும் என முத்துநாச்சியிடம் கூறுகிறான்

       கத்தி பிடித்து சச்சரனை வெட்டிய கையை இனி முத்தையனுக்குக் கொடுப்பேனோ, களப்போர் கண்ட நான் தாலிகட்ட கழுத்தை நீட்டுவேனோ என்று மறுக்கிறாள் முத்துநாச்சி.

       அச்சமயம் வெள்ளையையா சேவகரை அழைத்து பெண்கள் போடும் நகைகளைக் கொண்டு பெட்டியைக் கொண்டுவரச் சொல்போரில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி எனக் கொடுக்கிறான்அப்பெட்டியில் நெற்றிச் சுட்டிகள், திருவாம்பிரை, கொன்றைமாலை, கொப்புப் பிடிகள், ராக்கடி, சிமிக்கி பவழ வடம், அட்டிகை, கோதுமை மணி, தோள்வளை, பாடகம், தண்டை சிலம்பு காலுக்கு பீலி, ரவிக்கை, சேலை ஒட்டியாணம் என அனைத்தும் இருந்தனஇதைக் கண்டு வெகு கோபமுற்ற முத்துநாச்சி போர்க்கோலம் கண்ட நான் இனியும் இவற்றையணிவேனோ எனக் கூறி அவற்றை நிராகரித்து நகைகள் மிகுதியாக இருந்தால் அவற்றை நாய்க்குப் போடும் என்று கோபிக்கிறாள்

       அவளது சீற்றமும் கண்டிப்பும் கண்டு ஊமைத்துரை, ஆண்கள் போடும் நகைகளைக் கொண்டு வரக் கூறி மேலும் முத்தையனிடம் தனது சித்தப்பன் மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறான்ஊமைத்துரை பிறகு ஆண்களுக்குரிய நகைகளை எடுத்து முத்துநாச்சிக்குப் பூட்டிவிடுகிறான்பிறகு முத்துநாச்சிக்கும் கள்ளச்சிகள் ஏழு பேர்களுக்கும் வேண்டிய உணவைச் சமைத்துப் பரிமாறுகிறான்மேலும் நீ ஆணாகப் பிறந்திருந்தால் அரசாள்வாய்ஆகவே இனி என் பட்டத்தை நீ ஆள்வாய் எனக் கூற அதற்கு அவள் அண்ணா நீ ஆய்கிற பட்டம்மான் இனி எனக்கு ஏற்குமோநானும் மேரக்காரருடன் சேர்ந்து நானும் ஒரு மேல்மரமே எனக் கூறுகிறாள்இத்துடன் முதல் நாள் சண்டை முடிவடைகிறது.

       முத்துநாச்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்ட எட்டையபுரத்தான் அதனைக் கடிதம் மூலம் துரைமார்களுக்குத் தெரிவிக்க இனி எத்தனை நாளுக்கு இந்த துக்கம்இனி எவ்வாறு ஊமையனை வெற்றி கொள்வது என யோசித்து எட்டு தரைகளுடன் எட்டு பட்டாளம் தம்பூர், புல்லாங்குழல், சாரட் வண்டி, பல்லக்கு குதிரை தளவாடங்கள் போன்றவற்றோடு சீவலப்பதி வந்திறங்கியதுவிடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் கூடாரம் பிடித்தார்.  இச்சமயம் உளவு சொல்வோன் ஓடிவந்து பட்டாளங்கள் வந்து இறங்கியதை ஊமைத்துரையிடம் கூறுகிறான்இதைக் கேட்டு ஊமைத்துரை சாரி போவதற்காக நகாடிக்கச் சொல்கிறான்அச்சத்தம் கேட்டு முத்துநாச்சி மீண்டும் உடனே கள்ளச்சிகளுடன் போருக்கு ஆயத்தமாகிறாள்அதைக் கண்டு ஊமைத்துரை எங்கே செல்கிறாய் என வினவ, சாரி போவதாக முத்துநாச்சி பதிலளிக்க ஊமைத்துரை ராணுவத்தினர் 3000 பேரை உதவிக்குப் போகுமாறு கூறினான்ராணுவத்தினர் 3000 பேர் ஒரு பிரிவாகவும் செல்கிறார்கள்தாக்குதலில் பட்டாளம் முறிந்துவிட்டதுதேவர்சனத்தில் 25 பேரும் சிப்பாய்களில் இருபது பேரும் இறந்து விட்டனர்இறந்த 25 பேரை பாடையிலேற்றி ஊர் வந்து சேர்கிறாள் முத்துநாச்சிகானத்துறையில் அவர்களை எரியூட்ட சொல்கிறாள்

       இச்சமயம் போர் பற்றிய செய்திகள் சென்னைக்குக் கடிதம் வாயிலாகச் செல்ல மேலும் பட்டாளம் வந்திறங்கியதுஇதனை ஊமைத்துரையிடம் உளவு சொல்வோன் வந்து கூற அவ்வேளையில் ஆயிரம் பேரும் காயமாறி இருக்கிறபோது நகாரடிக்கச் சொல்கிறான்

       அச்சமயம் நித்திரைக்குப் போன முத்துநாச்சி நகாரு சத்தம் கேட்க ஊமையன் சாரி போவதைக் கேள்வியுறுகிறான்அதைக்கேட்டு முத்துநாச்சி நிலைகுலைந்த நிலையில் ஊமையன் அங்கு வர முத்துநாச்சி நான் உயிரோடு இருக்க நீ சாரி போவது எப்படி எனக் கேட்க இன்றைக்குச் சண்டைக்குப் போக வேண்டாம் என ஊமைத்துரை பலவாறு தடுத்தும் கேளாமல் முத்துநாச்சி போருக்குப் புறப்படுகிறாள்கட்டபொம்மன் குதிரையைக் கொண்டு வரச் செய்து கள்ளச்சிகள் கூட புறப்படுகிறாள்.   வெடிச்சத்தம் கேட்டால் உன்னை முன்னே கொண்டு போய்விடும் என எச்சரித்தும் கேளாமல் புறப்படுகிறாள்.


       சூரியோதய வேளையில் போர் மூண்டதுஇச்சமயம் கம்பெனிக்கு உதவியாக எட்டையபுரத்தான் குத்துச்சண்டையில் இறங்கினான்இச்சமயம் குபீரென்று குதிரை பாய்ந்து கூடாரம் முன்பாக வந்ததும் முத்துநாச்சியை வேகமாக வீசிட அவளும்கீழே விழுந்துவிட்டாள்தாக்குதலில் கள்ளச்சிகள் மாண்டு விட்டனர்எதிரிகள் முத்துநாச்சியைக் பிடித்துக் கூடாரம் கொண்டு வந்து சேர்த்தனர்அச்சமயம் துரை சாராய மயக்கத்திலிருக்க அவனை இரண்டு துண்டாக வெட்டி பின் கூடாரம் விட்டு வெளியேறுகிறாள்வெளியில் பாராக்காரர்களை வெட்டி வீழ்த்துகிறாள்அச்சமயம் வக்கப்பட்டி தானாபதி மகன் தனது தந்தையை வெட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஐநூறு பேருடன் முத்துநாச்சியைச் சுத்தி வளைத்தான்சிறிதும் தளராமல் அவனையும் வெட்டி வீழ்த்துகிறாள்இப்படி அவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஈட்டுகளும் வேலும் மார்பில் பாய அவள் உயிர் பிரிந்த்துஇச்சமயம் அவளது குதிரையும் லாயம் வந்தடைவதைக் கண்டு ஊமைத்துரைக்குச் சேதி வர ஊமைத்துரை ராணுவத்தைத் தயார்படுத்தி முத்தையன் வெள்ளையையாவுடன் ஒட்டப்பிடாரம் வந்து குத்துச் சண்டையில் கலந்து கொண்டான்பலரை வெட்டி வீழ்த்திப் பிறகு தங்கையையும் கள்ளச்சிகளையும் வந்து பார்க்கின்றனர்தேடினாலும் கிட்டாத அரிய பிறப்பே இனி உன்னை என்றைக்குக் கண்பேனோ என்று அவளது அருமை பெருமைகளை எல்லாம் பேசி தங்கை மேல் விழுந்து முட்டிக் கொண்டழுதனர்பிறகு அவளை அலங்கரித்த பல்லக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல அம்பலக்காரன் சாமையன்மேல் அருள் வந்து ஆட அதன் வாயிலாக தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூற அதன்படி அவளை எரியூட்டி அந்த இடத்தில் எட்டு நாட்களுக்குள் காரைக்கட்டுக் கோவில் கட்டி வைத்தனர்கன்னிகழியாத தன்னையும் கள்ளச்சிகளையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள்வந்து கூற உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் கள்ளச்சிகளின் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்பிறகு ஊமைத்துரை வெள்ளைஅய்யாவை கோட்டைக்கு அனுப்பிவிட்டு 5000 பேர்களுடன் வக்கப்பட்டியான் மற்றும் பலலையும் வெட்டிச் சாய்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பிகிறான்இவ்வாறாக முத்துநாச்சி சண்டை முடிவடைகிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சுவடியியல் கலைச்சொற்கள்

ஒவ்வொரு துறைக்கும் எனத் தனியானதொரு கலைச்சொற்கள் விளங்குவது இயல்பு.  அவ்வகையில் சுவடியியலுக்கு என அமைந்திருக்கக் கூடிய கலைச்சொற்களை இங்குக் காண்போம்.

அசல் பிரதி  - ஓலையில் எழுதிய முதற்படி.
அசை - சுவடித்தூக்கு.
அச்சடியோலை - முத்திரை இடப்பெற்ற ஓலைப்பத்திரம்.
அச்சுநூற் சுவடி - அச்சு நூலைப் பார்த்தெழுதிய ஓலைச்சுவடி.
ஆண்பனை - காயாப்பனை.
ஆதம் - கூந்தற்பனை.
ஆதியெழுத்து - மூலவெழுத்து.
ஆலேகணி - எழுத்தாணி.
ஆவணக்களம் - ஆவணக்களரி, பத்திரப்பதிவுச் சாலை.
ஆவணம் - ஓலை, உரிமைப்பத்திரம்.
ஆவணர் - உரிமைப்பத்திரம் எழுதுவோர், 
ஆளோலை - அடிமைச்சீட்டு.
இசையோலை - ஒப்பந்த ஓலை.
இணக்கோலை - உடன்படிக்கைப் பத்திரம்.
இணாட்டு - ஓலைத்தளிர், ஓலைத்துண்டு.
இதழ் - ஏடு, ஓலை.
இராசியெழுத்து - குறியீட்டெழுத்து.
இராமபாணம் - சுவடியை அழிக்கும் ஒருவகைப் புழு.
இருப்பு நாராசம் - ஓலைகளைக் கோர்க்க உதவும் ஒருவகை இரும்புக் கம்பி.
இருவிள - பனையோலை.
இலிகிதம் - எழுத்து, கடிதம்.
இலிகிதன் - எழுத்தாளன்.
இலிபி - எழுத்து.
இலிபித்தல் - எழுதுதல்.
இலேககன் - எழுதுவோன், சித்திரக்காரன்.
இலேகனம் - எழுத்து, பூர்ஜ மரத்தின் மேலூரி.
இலேகனி - எழுத்தாணி, எழுதுகோல்.
இலேகை - எழுத்து.
இழவோலை - இறப்புச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை.
இளம்பாலாசிரியன் - குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியன்.
இளவெழுத்து - திருந்தாவெழுத்து, கிறுக்கலெழுத்து, தெளிவில்லாவெழுத்து.
ஈரம்பனை - கூந்தற்பனை.
ஈர்க்கு - ஓலை நரம்பு.
ஈர்க்குல் - ஓலை நரம்பு.
உருவெழுத்து - வரிவடிவம் கொண்ட எழுத்து.
உரைகாரர் - உரையாசிரியர்.
உரைக்கோள் - உரைகாரர் கருத்து.
உரைச்செய்யுள் - கட்டுரை.
ஊக ஆதாரப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊகத் திருத்தம் - ஊகித்தறியும் உண்மைப்பாடம்.
ஊக மூலப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊக மூலப்பிரதி - ஊகித்தறியும் மூலச்சுவடி.
ஊசி - எழுத்தாணி.
எண் சுவடி - நெடுங்கணக்கு எழுதப்பெற்ற சுவடி.
எண்ணெய்க்காப்பு - சுவடி பாதுகாப்பதற்காக மருந்தெண்ணை பூசுதல்.
எழுதுகோல் - எழுத்து வரையும் கோல்.
எழுத்தாணி - ஓலையில் எழுதப்  பயன்படும் ஒரு வகைக் கருவி.
எழுத்தாணிப் பூச்சி - சுவடிகளில் காணப்படும் ஒருவகைப் பூச்சி.
எழுத்தாடுதல் - கைச்சாத்திடுதல், கையெழுத்திடுதல்.
எழுத்து வாங்குதல் - கையெழுத்து வாங்குதல்.
எழுத்துக்குத்து - எழுத்து மூலமான சாட்சியம்.
எழுத்துக் குறியீடு - எழுத்தைக் குறிக்கும் குறியீடு.
எழுத்தூசி - எழுத்தாணி.
ஏடகம் - பலகை, பனை.
ஏடாசிரியன் - குருவின் துணையின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்பவன்.
ஏடு - பனையோலை, இதழ், சுவடி.
ஏடு சேர்த்தல் - பனையோலைகளை ஏடுகளாகச் சீவிச் சுவடிக் கட்டாக்குதல்.
ஏடு திருப்புதல் - படி எடுத்தல்.
ஏடு தூக்கி - சுவடிகளைச் சுமப்பவன்.
ஏடு பிறழ்ச்சி - சுவடிக் கட்டுக்குள் ஏடுகள் முன்பின்னாக மாறியிருத்தல்.
ஏடு வாருதல் - பனையோலைகளைச் சீவுதல்.
ஏடெழுதுதல் - புதுச் சுவடி எழுதுதல்.
ஏடெழுதுவிப்போர் - ஏடெழுதுபவரைக் கொண்டுசுவடியை எழுதச் சொல்பவர்.
ஏடெழுதுவோர் - சுவடி எழுதுபவர்.
ஏட்டுச்சுவடி - ஓலைச்சுவடி
ஏட்டுப்பொறி - ஓலையில் பதிந்த முத்திரை.
ஒற்றுதல் - பனையோலைகளில் முத்திரையிடுதல்.
ஓலை - செய்தி தாங்கிய ஓலை, ஓலைச்சுருள், ஓலைக்குடை, கடிதம், திருமுகம், முடங்கல்.
ஓலை எழுதுதல் - ஏடெழுதுதல்.
ஓலைக்கணக்கர் - பள்ளியிற் படிப்போர், ஓலையில் கணக்கெழுதுபவர்.
ஓலைக்கண் - ஓலைச்சட்டத்தில் விழும் துளை.
ஓலைச்சட்டம் - ஓலையிலான காப்பேடு.
ஓலைச்சிறகு - நரம்பு பிரிக்கப்பட்ட பனையோலையிதழ், இதழ், ஏடு.
ஓலைச்சுருள் - ஓலைக்கடிதம்.
ஓலைச்சுவடி - எழுதிய ஓலைக்கட்டு.
ஓலை தீட்டுதல் - ஓலையில் எழுதுதல்.
ஓலை தீட்டும் படை - எழுத்தாணி.
ஓலைத்தூக்கு - சீட்டுக்கவி.
ஓலைநாயகம் - தலைமை அமைச்சர்.
ஓலை போக்குதல் - ஓலையில் செய்தி அனுப்புதல்.
ஓலைப் பாசுரம் - கடிதச் செய்தி, ஓலைப்பாயிரம்.
ஓலை முத்திரை - ஓலையின் முகப்பிலிடும் முத்திரை.
ஓலை முறி - ஓலைச்சீட்டு.
ஓலையாள் - செய்தி கொண்டு போவோன்.
ஓலையெழுதுவிப்போர் - ஏடெழுதுவிப்பவர்.
ஓலையெழுதுவோர் - ஏடெழுதுபவர்.
ஓலை வாசித்தல் - திருமண அறிக்கை வெளியிடல்.
ஓலை வாரி - ஓலை சீவுங் கத்தி.
ஓலை வாருதல் - எழுவதற்கேற்ற அளவில் ஓலையை நறுக்குதல்.
ஓலை வெட்டுப்பனை - ஓலையைத் தவிர வேறெந்த பயனும் தராத பனை வகை.
கணக்காயர் - நூலோதுவிப்போர்.
கணக்குச் சுருணை - கணக்கோலைக் கட்டு, கணக்குச் சுருள்.
கணக்குச் சுருள் - கணக்குச் சுருணை.
கணக்கோலை - கணக்கு எழுதப்பெற்ற ஏடு.
கண்டம் - எழுத்தாணி.
கதம்பை - எழுதுவதற்குப் பனையோலையை வாரிக் கழிக்கப்பட்ட பகுதி.
கம்பை - சுவடிச்சட்டம்.
கம்பை கட்டுதல் - சுவடி கட்டுதல்.
கயிறு சாத்துதல் - ஆரூடச் சுவடியினுள் கயிறிடுதல்.
கரம் - ஓலைக்கொத்தின் திரள்.
கரம் பதிவுக்கணக்கு - வரிப்பதிவுச் சுவடி.
கரிக்காப்பு - மைக்காப்பு, ஓலையில் எழுதப்பெற்ற எழுத்து தெரிய கரி பூசுதல்.
காவோலை - முற்றினவோலை.
கான்சிபட் சுவடி - அகர் மரப்பட்டையில் மசி கொண்டு எழுதப்பெற்ற சுவடி.
காணாட்டு - ஓலை நறுக்கு.
கிரந்த தானம் - சுவடியைத் தானமாகக் கொடுத்தல், புத்தக தானம்.
கிரந்தம் - ஒரு வகை எழுத்து, ஒற்று நீக்கி உயிரும் மெய்யுமாகப்பட்ட 32 எழுத்தின் கூட்டம்.
கிளி மூக்கு - சுவடிக் கட்டில் ஏடு உதிராமல் தடுக்கும் ஒருவகை ஓலையீர்க்குத் துண்டு.
கிளிமூக்கெழுத்தாணி - தலைப்பக்கம் கிளிமூக்கு போன்ற கத்தியமைப்புடைய எழுத்தாணி.
குடவெழுத்தாணி - குண்டெழுத்தாணி.
குடைப்பனை - தாளிப்பனை.
குருத்தோலை - குருத்தாயுள்ள பனையோலை.
குறிப்போலை - கணக்கு எழுதிய ஓலை.
கூட்டெழுத்து - ஓன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்தெழுதுமெழுத்து.
கூந்தற்பனை - தாளிப்பனை.
கூர்ச்சிகை - எழுதுகோல்.
கூர்னிபாம் - ஓட்டுச்சில்லில் எழுத்தாணியால் கீறியெழுதும் எழுத்து.
கூளிப்பனை - தாளிப்பனை.
கைமுறி - ஓலைமுறி, ஓலைச்சீட்டு.
கோணோலை - அரசாணை எழுதப்பெற்ற ஓலை.
சட்டோலை - சட்டம் எபதுவதற்குரிய ஓலை.
சட்டம் வாருதல் - எழுதுஞ்சட்டம் சித்தம் செய்தல்.
சந்திரகம் - ஓலையின் உறைச்சுருள்.
சந்திரிகை - ஓலைச்சுருள்.
சபாது - படி எடுத்தல்.
சரசுவதி பண்டாரம் - சுவடிச்சாலை.
சரசுவதி பீடம் - சிக்குப்பலகை.
சரவை - தெளிவற்ற எழுத்து, எழுத்துப்பிழை, மூலத்தோடு ஒப்பிடாத சுவடி.
சரவையெழுத்து - திருத்தப்பெறாத மூலச்சுவடி.
சரவையிடுதல் - ஓலைச்சுவடியிலுள்ள எழுத்துப் பிழையைத் திருத்தம் செய்தல்.
சலாகை - சிறிய நாராசம்.
சாரோலை - முதிராத குருத்தோலை.
சார்வோலை - முதிர்ந்த குருத்தோலை.
சிக்குப் பலகை - சுவடிகள் வைத்துப் படிப்பதற்கென ஒன்றுக்குள் ஒன்றாகச் சிக்கியிருக்கும்         
                                    ஒருவகைப் பலகை.
சிதிலவேடு - சிதைந்த சுவடி.
சிதைவேடு - செல்லரித்த சுவடி.
சீட்டுக் கவி - ஓலைப்பாசுரம்.
சீதாளம் - கூந்தற்பனை, தாளிப்பனை, குடைப்பனை, தாளபத்ரம்.
சீதாளவேடு - எழுதுதற்குரிய கூந்தற்பனையேடு, எழுதுதற்குரிய தாளிப்பனையேடு.
சீதாளி - சீதாளப்பனை.
சுகஸ்த லிகிதம் - தன் கையாலெழுதிய சுவடி.
சுத்த பாடம் - பிழையற்ற மூலபாடம்.
சுத்தப்பிரதி - திருத்தச்சுவடி.
சுரி - ஏட்டுத்துளை, பனையேட்டில் துளையிடும் கருவி, சுரியூசி.
சுரிப்புறம் - பனையேட்டின் துவாரமுள்ள பக்கம்.
சுரியாணி - கம்பை, நாராசம்.
சுரியூசி - பனையேட்டில் துளையிடும் கருவி, சுரி.
சுருணை - கணக்கெழுதப்பெற்ற ஓலைச்சுருள்.
சுருதி - மூல நூலாசிரியரிடம் நேரிடையாகக் கற்ற கல்வியைப் பிறிதொருவருக்கு 
                    நேரிடையாகச் சொல்லுதல், வாய்மொழிப் பாடம்.
சுவடி - பனையேட்டுச் சுவடி.
சுவடி சேர்த்தல் - ஏடு சேர்த்தல், சுவடி நூலகம், சுவடிச்சாலை.
சுவடியெழுதுதல் - அட்சரம் எழுதப் பழகுதல்.
சுவடி கட்டுதல் - படிப்பை நிறுத்துதல், சுவடி திரட்டுதல், சுவடி வரவுப் பதிவேடு, 
                                    சுவடி வேறுபாடு, சுவடி விளக்க அட்டவணை.
சுவிமியம் - சுள்ளாணி, சுள்ளாணித்தலை.
செந்திருக்கும் - ஓலைக்கடிதத்தின் முழுச்சுருள், ஓலையை அடைக்குஞ் சுருள்.
சோற்றுப்பனை - வயிரமற்ற பனை.
தமிழ் வராகன் - இறையிலி நிலம் பெற்று சுவடிகளைப் புதுப்பிப்பவன்.
தலப்பம் - தாளிப்பனை.
தலை நறுக்கு - ஓலையின் முன்பாகம்.
தளிர்பனை - குட்டைப்பனை.
தற்குறி - எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்.
தற்குறி மாட்டெறிதல் - பெயரெழுதத் தெரியாவன்,
                                                  கைக்கீறல் இதுவென்று எழுதிச் சாட்சி போடுதல்.
தாயேடு - மூலயேடு.
தாலம் - கூந்தற்பனை, பனை, மூன்று பிடிகொண்ட நீட்டலளவு.
தாளிப்பனை - கூந்தற்பனை.
திருகூசி - ஓலையில் துளையிடும் ஒரு கருவி.
திருக்கைக்கோட்டி - கோயில்களில் சுவடிகள் வைத்துக் காக்கப்படும் கோயில் மண்டபம்.
திருமந்திர ஓலை நாயகம் - தலைமை அமைச்சர்.
திருமந்திர ஓலை - அரசவையில் செய்தி வாசிப்போன்.
தூக்குத் தூக்கி - சுவடித்தூக்கைத் தூக்குபவன்.
தூரிகை - எழுதுகோல், எழுதுமிறகு, தூவல், தூலிகை.
தேரெழுத்தாணி - தேருருவக் கொண்டையுள்ள எழுத்தாணி.
நகல் - படி.
நகலேடு - படியேடு.
நறுக்கு - ஓலைச்சீட்டு, ஓலைத்துண்டு.
நாராசமேற்றுதல் - ஓலையில் துளையிடுதல்.
நாராசம் - கம்பை, ஏடுகளைக் கோர்க்க உதவும் ஓர் உலோகக் கருவி.
நாராயம் - எழுத்தாணி.
நீட்டு - திருமுகவோலை.
நீட்டோலை - திருமுகவோலை, ஊர் நடவடிக்கைகளை அறிவிப்பவர்.
நுணுக்கெழுத்து - பொடிப்பொடியாக எழுதும் எழுத்து,மிகச்சிறிய எழுத்து.
நெடுமை - நெட்டெழுத்து.
நெட்டோலை - திருமுகம்.
பகர்த்துதல் - பெயர்த்து எழுதுதல், படியெடுத்தல்.
பகர்ப்பு - நகல்.
பச்சோலை - காயாத ஓலை.
படியோலை - மூலவோலையின் நகலோலை.
பட்டோலை - எழுதுவதற்குகந்த ஓலை. அரசரின் செயல் நடவடிக்கைகளை எழுதுபவர்.
பட்டோலை கொள்ளுதல் - பெரியோர் கூறியதை எழுதுதல்.
பட்டோலை போடுதல் - மூலத்திற்கு நகல் எடுத்தல்.
பதம் பார்த்தல் - பனையோலை எழுதுவதற்குகந்த நிலையிலிருக்கிறதா எனச் சோதித்தல்.
பதித்தெழுதுதல் - அழுந்த எழுதுதல், மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல்.
பனையேடு - பனையோலை, ஓலைச்சுவடி.
பாடம் பண்ணுதல் - எழுதுவதற்கேற்ப ஓலையைப் பக்குவதப்படுத்துதல்.
பிடியெழுத்தாணி - மடக்கெழுத்தாணி.
பிரதி செய்தல் - படியெடுத்தல்.
புடை நூல் - சார்பு நூல்.
புத்தக தானம் - கிரந்த தானம், சுவடியைத் தானமாகக் கொடுத்தல்.
பெண்பனை - காய்க்கும் பனை.
பெயர்த்தெழுதுதல் - நகலெழுதுதல்.
பையோலை - பச்சோலை.
பொறியொற்றோலை - முத்திரையோலை.
மஞ்சள் காப்பு - வெள்ளெழுத்தின் மீது மஞ்களை மைக்காப்பு செய்தல்.
மடக்கெழுத்தாணி - கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணி.
மடக்கோலை - எழுதி மடக்கிய ஓலை.
மடிப்பெழுத்தாணி - கைப்பிடியுள் மடங்கும் எழுத்தாணி.
முகரியோலை - முடங்கின பனையோலை.
முகரீர் - முத்திரை.
முகர் வைத்தல் - முத்திரையிடுதல்.
முடங்கல் - சுருளோலை, செய்தி தாங்கிய ஓலை.
முத்திரித்தல் - முத்திரையிடுதல்.
முறி - கொழுத்தோலை.
முறிப்பத்திரம் - ஓலைப்பத்திரம்.
முறியோலை - முகரிவோலை.
மூலயேடு - நூலாசிரியர் எழுதிய முதலேடு, முகரியோலை.
மூலக்காரன் - நூலாசிரியன்.
மூலம் - மூலபாடம்.
மூலவெழுத்து - மூலாக்கரம்.
மூலவோலை - மூல சாஸனம்.
மேலெழுத்து - காட்சிக் கையெழுத்து.
மைக்காப்பு - எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுச் சுவடிக்கு மை தடவுதல்.
மையாடல் விழா - ஆண்டுக்கொருமுறை குறிப்பிட்டதொரு நாளில் (சரஸ்வதி பூஜை) 
                                          சுவடியில் மை தடவிப் பாதுகாக்கும் விழா.
மையூட்டுதல் - ஓலைக்கு மை தடவுதல்.
மையெழுத்து - மையால் எழுதும் எழுத்து.
மையோலை பிடித்தல் - கற்கத் தொடங்கும் போது மை தடவிய எழுத்துள்ள ஓலையைக் 
                                                     கைக்கொள்ளுதல்.
மோடி - மராட்டியர் எழுத்து.
மோடியெழுத்து -இராயசவெழுத்து.
வடிவெழுத்து - ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து.
வரி - எழுத்து.
வாசகச் சுவடி - உரைநடை நூல்.
வெள்ளேடு - வெற்றேடு, எழுத்தெழுதா ஏடு.
வெள்ளோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை, முத்திரையிடப்பெறாத ஓலை.
வெற்றோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை.






வியாழன், 30 ஜூலை, 2015

இவர்தான் அப்துல்கலாம்...


  • தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்.
  • இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. 
  • ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
  • நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்படச் செய்தவர். 
  • ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
  • நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ளததுபோல் திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தவர் அப்துல் கலாம்.
  • இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகள் பிரதிபலித்தது.
  • மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
  • ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர்.
  • ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
  • அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
  • அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
  • நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. 
  • சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தவர்.
  • ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தவர்.
  • எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
  • எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
  • இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
  • உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
  • அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
  • அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
  • ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
  • அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
  • அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
  • அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
  • அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
  • திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
  • யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
  • ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
  • அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
  • அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
  • சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
  • இராமேஸ்வரத்தில் உள்ள இலட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
  • அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
  • 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
  • 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
  • 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
  • இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
  • இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
  • போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
  • தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
  • இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
  • குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தியவர்.
  • இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வுப் பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தவர்.
  • அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுபவர்.
  • அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
  • இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
  • பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
  • அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
  • சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
  • அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
  • ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும் 27.07.2015 ஆம் நாளன்று இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
                                                                                           

புதன், 22 ஜூலை, 2015

தமிழும் விசைப்பலகையும் - நூல்

தமிழும் விசைப்பலகையும் - நூல் 

(ஆசிரியர் : முனைவர் மோ.கோ. கோவைமணி)


   மோ.கோ. கோவைமணி அவர்களால் 2000இல் தஞ்சை பாமொழி பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு நூல் தமிழும் விசைப்பலகையும்.  இந்நூல் பற்றிய அறிமுகம் இங்குச் செய்யப்படுகிறது.

     பண்டைக்கால வரலாற்று மொழிகளுள் தமிழும் ஒன்று. சைகையில் தோன்றி ஓசையில் வளர்ந்து கருவியில் நிலைபெற்றது தமிழ்மொழி.  தமிழ் மொழியின் எழுத்தும் வரலாறு கொண்டதுதான்.  காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாறுபாடடைந்து வந்திருக்கிறது.  நிலைபெற்ற எழுத்துவடிவம் இதுதான் என்று எதையும் சொல்ல முடியவில்லை.    மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் எழுத்திற்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை.  இலக்கணம் இல்லாததினாலேயோ என்னவோ காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாற்றங்கொண்டுள்ளது.  இதனைத் தடுக்கும் முகத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம்முடைய அறுவகை இலக்கணம் எனும் நூலில் எழுத்தின் வரிவடிவிற்கு இலக்கணம் வகுத்தார்.  இவ்விலக்கணத்திற்குப் பிறகு திராவிட இயக்கம் வலுப்பெறும்வரை எவ்வித மாற்றமும் இல்லாமலிருந்தது.  திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றபோது பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் ணா, றா,னா, ணை, லை, ளை, னை ஆகிய ஏழு எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களை இன்றைய பழகு முறையில் தமிழக அரசு மாற்றிவிட்டது.

     
      இதனைத் தொடக்கமாகக் கொண்டு தமிழை வளர்க்கும் தமிழறிஞர்கள் தமிழ் எழுத்தின் வரிவடிவில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய முற்படுகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மொழியை அச்சு கோப்பதற்கும் சிறார்கள் எளிதில் புரிந்துகொள்வதற்கும் எழுத்துருவாக்கக் கருவிகளின் எளிமைக்கும் எனப் பலவாறு கூறுகிறார்கள். மொழிக்குத் தக்கவாறு கருவிகளை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர கருவிக்குத் தக்கவாறு மொழியைத் திருத்திக் கொள்வது எந்த விதத்தில் சரி?

      கருவிக்குத் தக்கவாறு மொழியை மாற்றாமல் மொழிக்குத் தக்கவாறு கருவியை மாற்றம் செய்யவேண்டுவதே முக்கியம்.  இக்கருத்தின் அடிப்படையில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழி எழுத்துக்களையும் ஒரே கருவியில் இணைக்கும் முயற்சியின் விளைவே இந்நூல்.  இதில் தமிழ்மொழியின் தனித்தன்மைகள் என்ன என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை அமைப்பானது எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றியும், தமிழ்த் தட்டச்சுப்பொறியின் விசைப்பலகையானது தொல்காப்பிய எழுத்திலக்கணத்திற்கு எவ்வாறு பொருத்தமுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியும், பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தத்தினால் விசைப்பலகை மாற்றம் பெற்றதையும், பாரதி விசைப்பலகை அமைப்பினைப் பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  அடுத்து, தமிழும் ஆங்கிலமும் தனித்தனி இயந்திரங்களாக இல்லாமல் ஒரே இயந்திரமாக்கும் முயற்சியில் தேன்மொழி தமிழாங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதனையுமடுத்து தட்டச்சுப் பொறியின் உறுப்புகளைப் பற்றியும் அவ்வுறுப்புகளின் பயன்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   மேலும், இதில் ஓர் உறுப்பு பழுதடைந்துவிட்டால் அதற்கு மாற்று உறுப்புகள் எவையெவை என்பது பற்றியும் எப்படியெல்லாம் பழுதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாகத் தட்டச்சுப்பொறிக் கலைச்சொற்களைத் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகியவற்றின் அகரவரிசையில் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

      கணினி வளர்ச்சி பெற்றுவரும் அந்தக் காலகட்டத்தில் இதனுடைய தேவை என்ன என்ற வினா எழும்?  என்னதான் கணினி அதிவேகமாக வளர்ச்சி பெற்றாலும் தட்டச்சுப் பொறியின் தேவை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  கணினியின் தேவைகளைத் தட்டச்சுப்பொறியில் உருவாக்கிக் கொண்டால் இதன்தேவை இன்னும் அதிகமாகும் என்பது உறுதி.  காலத்திற்குத் தக்கவாறு பழையவற்றில் மாற்றங்கொள்வதும் புதியவற்றின் பாதிப்பு பழையவற்றில் ஏற்படுத்துவதும் புதியது ஒன்றும் அல்ல.  இதைத்தான் காலங்காலமாக அறிவியல் செய்து வருகிறது.  இவ்வெண்ண வெளிப்பாடாக இந்நூல் எழுந்துள்ளது.  இந்நூலுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.  அவ்வணிந்துரை பின்வருமாறு இங்கே தரப்படுகிறது.

சில விநாடிப் பொழுதில் உலகளாவிய நிலையில் செய்திப் பரிமாற்றம் நடைபெறும் காலமிது.  பொத்தானை அமுக்கினால் இணையம் வழி எந்தச் செய்தியையும் நிகழ்வையும் உடனுக்குடன் அறிய முடிகிறது.  இவ்வகை அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் தட்டச்சுப்பொறியின் பயன்பாடு குறைவுதான்.  எனினும், விசைப்பலகையின் தேவை உள்ளது.  கணினியில் வன்பொருள் - மென்பொருள் அமைப்பிலும் இது இடம்பெறுகிறது.  இவற்றில் இடம்பெறும் எழுத்துக்களின் வடிவம் பற்றிய ஆய்வு உலகெங்கும் பலமொழிகளில் நடந்து வருகிறது.
ரோமன் எழுத்து, தேவநாகரி எழுத்து, தமிழ் (வட்டெழுத்து) எழுத்து, படஎழுத்து எனப் பலவகை எழுத்துக்கள் நடைமுறையில் உள்ளன.  இவற்றுள் தட்டச்சுக்கு/கணினிக்கு ஏற்ற எழுத்து வகை பற்றிய உரையாடல்கள் தொடர்கின்றன.  தமிழுக்கு ரோமன்/தேவநாகரி எழுத்து வடிவைத் தந்து பொதுமைப்படுத்தலாம் என ஒரு சாரார் முழக்கமிட, மற்றொரு சாரார் ஒரு சிறு மாற்றத்தோடு தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்கின்றனர்.  ஒரு இனத்தின் அடையாளமாக அவனது மொழி கருதப்படும் சூழலில், அந்த மொழிக்கென உள்ள எழுத்து வடிவஃகளை யாரும் விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள்.  எனவே, தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டு, அதைச் செயல்படுத்தலாம் என்கிற விவாதம் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  1970களில் அரசு ஆணை வெளியிட்டதோடு, சில எழுத்துக்களில் சீர்த்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இருப்பினும், உகர ஊகார, ஐகார, ஔகார, ஒகர ஓகார எழுத்துக்களில் இன்னும் ஒரு சீரான மாற்றம் ஏற்படவில்லை.  பலரும் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.  தமிழ் உகர ஊகார கிரந்த எழுத்துக்களுக்குப் பயன்படுத்தப்படும் (ஜு, ஜூ) குறிகளை ஏனைய உகர ஊகார வரிசை எழுத்துக்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கருத்து.  ஐ வகை எழுத்துக்களை லை, னை, கை, ணை என ஒரு சாராரும், லய், னய், கய், ணய் என இன்னொரு சாராரும் எழுதக் காண்கிறோம்.  இவற்றை இரண்டு ஒற்றைக்கொம்புடன் ல, ன, க, ண என எழுதலாம் என்பார் பேரா. தெ.பொ.மீ. அவர்கள் (மலையாளத்தில் இதுதான் நடைமுறை).
இந்த எழுத்துமாற்றம் தமிழில் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. பானை, ஓலை, கல்வெட்டு என எழுதுபொருள்கள் மாறியதற்கேற்ப, எழுத்து, வடிவங்களிலும்  மாற்றம் ஏற்பட்டது.  இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் அதற்கேற்ப மாற்றம் தேவை என்கின்றனர்.  கணினிக்கு ஏற்ப எழுத்துக்களின் மாற்றம் என்கின்றனர்.  எழுத்துக்களில் மாற்றம் செய்யாது அவற்றைக் கணினி பயன்படுத்தவேண்டும்; மொழிக்குத்தான் தொழில்நுட்பம் உதவ வேண்டுமே அல்லாது, மொழி தொழில்நுட்பத்துக்கு அடிபணியக் கூடாது (கோவைமணிக்கும் இக்கருத்து உடன்பாடு) என்கிற கருத்தும் உண்டு.  இன்றைய கணினி வல்லுநர்கள் தமிழ்க் கணினிக்கு ஏற்ற எழுத்தமைப்பைக் கொண்டுள்ளது.  மாற்றம் தேவையில்லை என்கின்றனர்.  கல்வெட்டில் காணப்படும் பல சிதைந்த எழுத்துக்களைக்கூட, அதேநிலையில் கணினியில் பதிவு செய்ய முடிந்ததையும், சில குறியீடுகளைக் கணினியில் எழுத முடிந்ததையும் நேரில் பார்த்தபோது, கணினி எதையும் சாதிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது.  டெல்லிதர்பார் என்ற திரைப்படத்தில் மம்முட்டி கணினி வழி உண்மையான கொலையாளியைக் கண்டுபிடித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.  எனவே, வன்பொருள்-மென்பொருள் சிக்கல் தமிழைப் பொருத்தவரை இல்லை.  ஒருவேளை, யாருடைய மென்பொருள் சிறந்தது என்பதில் வேண்டுமானால் சிக்கல் வரலாம்.  பொறுப்புடன் செயல்பட்டால், இச்சிக்கலும் தீரும்.
கணினிக்கு உள்ள இந்த வசதிகள் தட்டச்சுப்பொறிக்கு இல்லை.  தட்டிய எழுத்துதான் தட்டச்சில் பதிவாகும்.  கட்டளை கொடுத்து எழுத முடியாது.  எனவே, தட்டச்சுப்பொறியில் எழுத்துக்களை அமைக்கும்போது ஏற்பட்ட, ஏற்படும் சிக்கல்களையும் தீர்வுகளையும் வரலாற்று ரீதியாக கோவைமணி இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.  அறுவகை இலக்கணம் என்ற நூல் தமிழ் எழுத்து வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுவது இன்றைய எழுத்தியல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும்.  இது தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சுட்டுகிறார்.  தட்டச்சு விசைப்பலகை வல்லுநர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு சீர்மை செய்து உதவலாம்.
தட்டச்சுப்பொறி தொடர்பான கலைச்சொற்களும் அவற்றிற்கான விளக்கமும், அவற்றை ஒட்டிய கலைச்சொல் பட்டியல்களும் இந்த நூலின் சிறப்பான பகுதியாகும்.  தமிழின் கலைச்சொல் வளத்துக்கு இது எடுத்துக்காட்டாக அமைகிறது.  நிறைய கலைச்சொற்களைத் தொகுத்துள்ள ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.
கோவைமணி பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஓலைச்சுவடியில் முகம்பதிக்கும் மணி தட்டச்சுப்பொறி, கணினி ஆகியவற்றிலும் கைபதிப்பது அவரது வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைகிறது.  அவரது தமிழ்ப்பணி சிறக்கும் வண்ணம் இன்னும் பல நூல்களை அவர் படைக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்கிறார்.






வெள்ளி, 17 ஜூலை, 2015

முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றிப் பேராசிரியர் தெய்வசுந்தர நயினார்

பேராசிரியர் தெய்வசுந்தரநயினார் அவர்கள் தன்னுடைய முகநூலில் முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றி 17.07.2015 அன்று ஒரு இடுகையை இட்டுள்ளார்.  அதனை இங்குப் பகிர்கிறேன்.

தமிழறிஞர்கள்பற்றி (74)





முனைவர் மோ.கோ.கோவைமணி (1963) …. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தம் போன்ற பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 1989 முதல் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது அத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள், ஐக்கூ ஐநூறு, பதிப்புலகத் தூண்கள், நாடி மருத்துவம், செம்புலப்பெயல் நீர், எண்ணும் எழுத்தும், ஓலைச்சுவடியியல் ஆகிய நூல்கள்; வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆய்வுமாலை, குமரகுருபரர் ஆய்வுமாலை, முருகன் இலக்கிய ஆய்வுமாலை, திருக்குறள் ஆய்வுமாலை, செவ்வியல் தமிழ்ச்சுவடிகள் போன்ற தொகுப்பு நூல்கள் என 30க்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். இவரின் ஓலைச்சுவடியியல் என்னும் நூலுக்குத் தமிழ்நாடு அரசு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியுள்ளது. சுவடியியல், இலக்கியம், நாட்டுப்புறவியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். பல கருத்தரங்கங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டவர். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னை தொலைக்காட்சியிலும் உரையாற்றியவர். மலேசியா சென்று மலேசியா பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுவடிப்பயிற்சி அளித்தவர். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்து பாதுகாத்து வருபவர். தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுவடி எழுதும் பயிற்சியை மூன்று மணி நேரத்திற்குள் எளிய முறையில் அளிக்கும் வல்லமை பெற்றவர். இவர் சிறந்த ஐக்கூக் கவிஞரும் ஆவார். இவருடைய மின்னஞ்சல் முகவரி - paamozhi@gmail.com இவருடைய இணையதளம் -http://kovaimani-tamilmanuscriptology.blogspot.in/