ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

இந்திய காலக்கணிதம் (கி.பி.700-1999)


இந்திய காலக்கணிதம் எனும் நூல் மோ.கோ. கோவைமணி அவர்களால் டிசம்பர் 1997இல் தஞ்சாவூர் பாமொழி பதிப்பகத்தின் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1998, 2000இல் வெளிவந்துள்ளது.

இந்நூலின் முதலில் இந்திய ஆண்டுகள் என்னும் தலைப்பில் இந்தியாவில் பெருவழக்காக வழங்கப்பெற்று வரும் கலியுகம், விக்கரம சகம், சாலிவாகன சகாப்தம், திருவள்ளுவராண்டு, கொல்லம், பசலி, சுழற்சி ஆண்டு (வடக்கு மற்றும் தெற்கு) போன்றன ஆய்வு செய்யப்பெற்றுள்ள.  மேலும் இவ்வாண்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதையும் ஆங்கில ஆண்டோடு எவ்வாறு கணக்கிடவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

      இந்திய காலக்கணிதம் என்னும் பகுதியில் இந்நூல் அமைப்பு விளக்கப்பட்டுள்ளது.  இந்நூல் ஆறு வகையான அட்டவணைகளைக் கொண்டுள்ளது.  இவ்வட்டவணைகளின் தேவையும் பயனும் இப்பகுதியில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

      காலம் கணக்கிடும் முறைகள் என்னும் பகுதியில் அட்டவணை 6ஐப் பயன்படுத்தி முன் மற்றும் பின் தமிழ்-ஆங்கில மாதங்களைக் கணக்கிடும் முறைகளை எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் இந்திய காலக்குறிப்பிலிருந்து இந்திய காலக்குறிப்பையும் அறிய இப்பகுதியில் வகை செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து நான்கு வகையான நிலைகளும், இந்நான்கு நிலைகளைக் கொண்டு முன் மற்றும் பின் மாதங்களைக் கணக்கிடத் தேவையான கட்டங்கள் நான்கும், இறுதியாக ஆறு வகையான அட்டவணைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நூலுக்குப் பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்கள் அணிந்துரையும், பேராசிரியர் முனைவர் செ. இராசு அவர்கள் ஆய்வுரையும், வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் K.V. இராமன் அவர்கள் ‘The Hindu’ நாளிதழில் மதிப்புரையும் வழங்கியுள்ளனர்.

பேராசிரியர் முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள் தம்முடைய அணிந்துரையில், "இந்திய காலக்கணிதத்தில் அருஞ்சாதனைகள் நிகழ்த்திய L.D.சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள An Indian Ephemeris என்ற நூல் வரிசையினை அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாற்றாசிரியர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்துள்ள மன்னர்களின் கால வரிசையினை வரையறை செய்து எழுதியிருத்தல் இங்குக் கருதத்தக்கது.  ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டிலும் தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றுத் துறையிலும் நிறைந்த பயிற்சியும் புலமைத்திறமும் கொண்ட இளம்பேராசிரியர் கோவைமணி அவர்கள் இந்நூலினைத் திறம்பட எழுதியிருத்தல் பாராட்டத்தக்கது.  இந்நூலின் முன்னுரைப் பகுதியில் இந்திய நாட்டில் வழங்கிய பல்வேறு கணித சித்தாந்தங்கள் பற்றிய விளக்கமும், நாள் திங்கள் ஆண்டு முதலியன வடநாட்டிலும் தென்னாட்டிலும் எவ்வாறு கணிக்கப்பெற்றன என்ற விளக்கமும், சாலிவாகன  சகாப்தம், விக்ரம சகாப்தம், திருவள்ளுவராண்டு முதலிய தொடராண்டுகள் பற்றிய தெளிவும் குறிக்கப்பெற்றுள்ளன.  தமிழாண்டுக்கு ஒப்பான ஆங்கில ஆண்டுக் கணிதமும் சுட்டப்பெற்றுள்ளது.  கி.பி.700 முதல் கி.பி.1999  வரையுள்ள  இந்திய - ஆங்கில தொடராண்டுகள் பற்றிய பல்வேறு அட்டவணைகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் இந்நூலாசிரியரால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள் யாவர்க்கும் பயன்படும் வகையில் அமைந்த இந்நூல் தமிழறிஞர்களால் ஏற்று போற்றத்தக்கது. திருமிகு.மோ.கோ. கோவைமணி அவர்களின் ஆர்வத்தையும் ஆராய்ச்சித் திறத்தையும் பாராட்டி வாழ்த்துகிறேன்" என்று கூறுகின்றார்.

பேராசிரியர் முனைவர் செ. இராசு அவர்கள், "தமிழகக் காலக்கணக்கீட்டு அறிஞர் எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் 'இந்தியக் காலக் கணக்கிட்டுமுறை' - An Indian Ephemeris என்ற  நூலை 1915, 1922ஆம் ஆண்டுகள் கணித்து வெளியிட்டார்கள்.  அவை 8 தொகுதிகளாக மிக விரிந்துள்ளன.   அவைகளைப் பெறுவதும், கையாள்வதும் சிரமமாகவே உள்ளது.  இந்நிலையில் எளிமையான முறையில் காலக்கணக்கீட்டை அறிய ஒரு முறை தேவை என்பது காலத்தின் கட்டாயமாகிறது.   யார் இதனைச் செய்வது? பட்டறிவும், ஆழ்ந்த சிந்தனையும், பொறுமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இம்முயற்சிக்குத் தேவை.

இவை அனைத்தும் ஒருங்கே  கூடிய இளைஞர் ஒருவர் இமாலய முயற்சியாக இந்த அரும்பெரும் செயலை ஆற்றி முடித்துள்ளார். அவர்தான் இந்நூலின் ஆசிரியர் நண்பர் திரு.மோ.கோ. கோவைமணி அவர்கள்.  இந்நூலின் ஒவ்வொரு தொடலிலும், ஒவ்வொரு பக்கத்திலும் கோவைமணி அவர்களின் உழைப்பை - அறிவின் புலப்பாட்டைக் காணுகிறோம்.  எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்களின் காலக்கணக்கீட்டுக் கடலில் மூழ்கி முத்தெடுத்தது போல் முத்தான இந்த அறிய நூலைக் கோவைமணி அவர்கள் படைத்தளித்துள்ளார்கள்.  இன்றைய இளைஞர் உலகிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் கோவைமணி அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட துறையில் துடிப்பும், ஆர்வமும், நுண்ணறிவும் மிக உடையவர்.  பல்துறை ஓலைச்சுவடியியல் ஆய்வுகளுடன் தொகுப்பியல் முயற்சியில் முறைப்படி ஈடுபட்டுத் தாம் கண்டறிந்தனவற்றைச் சிறந்த கட்டுரையாக்கி உரியஇடத்தில் உரிய முறையில் பலரும் பாராட்ட வெளியிடுவதில் அவர் மிக வல்லவர். கோவைமணி அவர்கள் தமக்களித்த பணிகளைச் சிரமம் பாராமல் இன்முகத்துடன் ஆற்றி முடிக்கும் திறன் உடையவர்.  அனைத்து ஆய்வாளர்கட்கும் மிகச் சிறந்த எளிய காலக்கணக்கீட்டுக் கையேடாக இந்நூல் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.  ஆய்வாளர்கள் கோவைமணி அவர்களின் விளக்கமான முன்னுரையைக் கருத்தூன்றிப் படித்து எளிய முறையில் அட்டவணைகளைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய காலக் கணக்கீட்டை அறியலாம்.

ஆய்வுலகின் சார்பில் இச்சிறந்த நூலை உருவாக்கிய கோவைமணி அவர்களுக்கு என்  மனப்பூர்வமான பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதுபோல் பயனுடைய பல நூல்களை உருவாக்கித் தமிழன்னைக்கு மாலையாகச் சூட்டக் கோவைமணி அவர்களை வாழ்த்துகிறேன்" என்று தம்முடைய ஆய்வுரையில் குறித்துள்ளார். 

Chronological systems : In the field of Indian ephemeris, the services of the late L.D. Swamikannupillai are indeed unforgettable.  With his indepth knowledge of astronomy, literature and epigraphy, he wrote his monumental work Indian Ephemeris in eight volumes and they serve as a standard reference work for chronological calculations.

The author of this volume states that his work is a short summary of the famous work, rendered in Tamil for easy reference and reckoning.  In the first chapter, he gives a list of all the eras or chronological systems that were used in India at various times like Kali, Salivahana or Saka,  Vikrama, Kollam, Hijira, Fasli, etc. and explains their basis and corresponding year in the Christian Era.

He explains the 60-year cyclical systems followed in North and South  India and states how the former starts with the year Viyaya, and the latter with Prabhava and due to some gaps in the former, exact correlation between the two poses problems.

He has given a table, a ready reckoner, to correlate the two calendar systems and also the corresponding Chrisitan era from 700 A.D. to 1999 A.D. i.e. 1300 years. The tables show the days, the month and the year according to the different eras and systems followed in India and the corresponding dates in the Christian era.

This would enable us to correlate the different chronological systems and also find their corresponding date, month, year, etc.  The book will be a useful guide  for epigraphists, historians and chronologists" என்று K.V. Raman (The Hindu, 18.8.1998) குறித்துள்ளார்.

"எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளையவர்கள் எழுதிய An Indian Ephemeris எனும் நூலின் அடிப்படையில் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இந்திய காலக்கணிப்பு முறைகளான கலியுகம், விக்கிரம சகாப்தம், திருவள்ளுவராண்டு, பசலி ஆண்டு மற்றும் கொல்லமாண்டு ஆகியன பற்றிய குறிப்பு தரப்பட்டு அவற்றை ஆங்கில ஆண்டோடு எவ்வாறு கணக்கிடுவது என்பதும் விளக்கப்படுகிறது.  ஒரு காலக்கணிப்பினை மற்ற ஆண்டுகளோடு தொடர்புபடுத்தத் தேவையான அட்டவணைகள் நூலின் பின்பறுதியில் தரப்பட்டுள்ளன.  இந்தியக் காலக் கணக்கீட்டு முறையை சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்" என்று முனைவர் ந. அதியமான் அவர்கள் (ஆவணம், இதழ், 10, 1999) குறித்துள்ளார்.

"வரலாற்றாசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உதவும் எளிய காலக்கணக்கீட்டுக் கையேடு" என்று தினமணி- நாளிதழ் (மதுரை), 4.6.1998இல் குறிப்பிட்டுள்ளது.

"காலம் என்பது கணித எல்லைகளில் கட்டுப்படுத்த  முடியாத ஒன்று.  ஆயினும் மனித குலத்தின் தொன்மச் சிறப்புகளை அளந்தறியக் காலக்கணித வரைமுறைகள் மிகமிக அவசியம்.  வரலாறு என்றவுடன் காலக்கணிதம் தான் நம் முன் எழுந்து நின்று மருட்டும்.  யுகங்கள் என்றும், சகாப்தங்கள் என்றும் எளிதாகச் சொல்லிவிடலாம்.  ஆனால், துல்லியமாக  எதையும் அறுதியிட்டுக் கூறவியலாது.  ஹீஜ்ர, கொல்லம், பசலி, திருவள்ளுவராண்டு என எத்தனை குறிப்பிட்டாலும் அதற்கு நாம் கி.பி., கி.மு., என்ற அளவு கோள்களையே நாட வேண்டிய நிலை.  இருப்பினும் காலத்தை அளக்கும் சிந்தனை நம்மவர்களுக்கு அறவே இருந்ததில்லை என்று கூறிவிட முடியாது.  தமிழர்கள் கணிதத் துறையில் வல்லவர்களாகத் திகழ்ந்தமைக்கு தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் சான்று பகர்கின்றன.  அந்த வகையில் காலக்கணிதம் பற்றிய விளக்கநூல் தமிழில் ஏதுமில்லை என்ற குறையைப் போக்க எழுதப்பட்டுள்ள சிறந்த நூல்தான் இது.  இதன் ஆசிரியர் தஞ்சை தமிழ்ப் பல்கலையின் ஓலைச்சுவடித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிபவர்.  ஆழ்ந்த புலமையோடு இந்த நூலை எழுதியுள்ளார்.  தமிழ் ஆண்டுகளுக்கு ஒப்பான  ஆங்கில ஆண்டுக்கணக்கும், பல்வேறு அட்டவணைகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் தெளிவாக உள்ளன.  வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும் நூல் இது" என்று கௌதம நீலாம்பரன் (தினமலர், திருச்சி, 10.02.1999) அவர்கள் குறித்துள்ளார்.





வியாழன், 13 பிப்ரவரி, 2014

கோவை-வடவள்ளி ஒலைச்சுவடிகள்

பேராசிரியர் எஸ். இராமமூர்த்தி அவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் திரட்டப்பட்டுள்ளன.  அவர் பற்றியும் அவை பற்றியும் பின்னர் தெரிவிக்கப்பெறும்.





வியாழன், 23 ஜனவரி, 2014

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்

அருணாசலம் பிள்ளை என்கிற தேவசகாயத்திற்கும் ஞானப்பூவிற்கும் 07.09.1774இல் திருநெல்வேலியில் வேதநாயக சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார்.  1794இல் தரங்கம்பாடியில் அருட்தந்தை சுவார்ட்சு அவர்கள் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.  சிறந்த கவிஞர், கிறித்துவ போதனை நூல்கள் பலவற்றை அரங்கேற்றியவர்.   தஞ்சை இரண்டாம் சரபோஜிக்கு இவர் நெருங்கிய நண்பராக விளங்கினார்.  சரபோஜி மன்னர் இவருக்கு ஆண்டு தோறும் 50 வராகன் கொடுத்துள்ளார்.  சரபோஜியின் அரண்மனைக்கு இவர் வந்து செல்ல தனியாக பல்லக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.  தாம் இறந்தால் கவிஞர் வேதநாயகம் சாத்திரியார் வந்து பாடல் பாடிய பின்புதான் தம் சடலத்தை அரண்மனையிலிருந்து எடுக்க வேண்டும் என்று சரபோஜி மன்னர் சொல்ல அவ்வாறே அவர் இறந்த காலத்து சாஸ்திரியார் நேரில் வந்து பாடல் பாடியவர்.

அண்ணாவியார், ஞானதீபக் கவிராயர், சுவிசேடக் கவிராயர் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.

பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டினப் பிரவேசம், ஆரணாதிந்தம், சாத்திரக்கும்மி, ஞான அந்தாதி, ஞான உலா, ஞான ஏற்றப்பாட்டு, ஞானபதக் கீர்த்தனைகள், தோத்திரப்பாடல்கள், பராபரமாலை,  பாலசரித்திரம், பேரின்பக் காதல், வண்ண சமுத்திரம், சாத்திரக்கும்மி, ஞானதச்சன் நாடகம், ஞான நொண்டி நாடகம், சுவிசேட நாடகம் போன்ற இயல் இசை நாடக நூல்களை யாத்த பெருமைக்குரியவர்.

தொண்ணூறு ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து இறைத்தொண்டாற்றிய இவர் 24.01.1864இல் மறைந்தர்.  இவரின் 150ஆம் நினைவுநாள் 24.01.2014இல் வருகிறது.  இந்நினைவு நாளைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் மறைந்த பெரியவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாளில் கருத்தரங்கு, சொற்பொழிவு நடத்தும் என்னத்தில் 24.01.2014இல் தஞ்சாவூர் சி.நா.மீ. அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரின் தொண்டினைப் போற்றும் வகையில் இவரது இந்த 150ஆம் நினைவு ஆண்டில் சிறப்பாக ஒரு மாநாடு  நடத்தி தமிழுலகம் இவருக்குப் பாராட்டுச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தை இதன் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

சனி, 30 நவம்பர், 2013

சிவகங்கை மாவட்டம் - களப்பணி

          கடந்த வாரம் 23.11.2013 முதல் 30.11.2013 வரை சிவகங்கை மாவட்டத்தில் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் ஈடுபட்டேன்.  இம்மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கக் கூடிய ஓலைகள் வீட்டுக் கணக்குகளாகவும்,கோயில்  கணக்குகளாகவும், நில உரிமைப் பத்திரங்களாகவும், விழாக்காலங்களில் கோயில் சபையில் அமர்ந்தவர்களின் பெயர்களாகவும், கோயில் விழாக்களின் போது எழுதப்பட்ட வரவு செலவுகளாகவும், கோயில் முறையுடையோரின் பெயர்களாகவும், ஜாதகங்களாகவும் இருக்கின்றன.  சிலரிடம் மட்டும்  மருத்துவம், நாட்டுப்புற இலக்கியம் போன்ற சுவடிகள் காணப்படுகின்றன.  

          பலரிடம் இருந்த சுவடிகள் இன்று இல்லை.  காரணங்களை வினவிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  அத்தகவல்களை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பலர் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும்போது வீட்டில் தேவையில்லாமல் இருக்கிறது என்று வெளியில் வைத்துவிட்டோம்.  அவை கரையானுக்கும் செல்லுக்கும் இரையாவரைக் கண்டு அந்தக் காலத்தில் ஆற்றில் சுவடிகளை விட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  அதனால் இவ்வாறு வீணாவதைப் பார்க்க முடியாமல் ஆற்றில் விட்டுவிட்டோம் என்கின்றனர்.

1954ஆம் ஆண்டு சிவகங்கைப் பகுதியில் பலத்த புயல் வந்ததாகவும், அப்போது குடிசை வீடுகள் எல்லாம் அடித்துச் சென்றதாகவும், அவ்வீடுகளில் இருந்த சுவடிகள் அவ்வீடுகளோடு அழிந்து விட்டமாகவும் தெரிவிக்கின்றனர்.

ஓலைச்சுவடிகளை இம்மாவட்ட மக்கள் ஓலைமுறி என்கின்றனர்.  ஓலை எழுதுதலையும் ஓலைமுறி என்கின்றனர்.  இன்றும் சில இடங்களில் ஓலைமுறி எழுதுகின்றனர் என்கின்றனர்.

பெரும்பாலான செட்டியார்கள் அயல்நாடுகளிலும், அயலூர்களிலும் குடியேறி விட்டதால், அவர்களிடம் உள்ள சுவடிகளைக் காணமுடியவில்லை.  அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அவர்கள் பிறந்த வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுகின்றனர்.  பொங்கலுக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை எல்லோரும் தங்கள் பிறந்த ஊருக்கு வந்து செவ்வாய்ப்பொங்கல் வைப்பது வழக்கமாகக் கொண்டுடிருக்கின்றனர் என்றனர்.  அவர்களின் இந்தச் செவ்வாய்ப்பொங்கல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.   வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரியையோ அல்லது தெரிந்தவர்களைக் கொண்டோ செவ்வாய்ப் பொங்கல் வைக்கச் சொல்லுவர் என்கின்றனர்.

ஏனைய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்....


ஞாயிறு, 3 நவம்பர், 2013

செம்மொழித்தமிழ் இலக்கியங்களில் கிரகணம்

கிரகணம் பற்றி பலவாறான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  பாம்பு நிலவை விழுங்குகிறது என்றும்,  அந்நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், கிரகணம் முடிந்தவுடன் கோயிலுக்குச் சென்று சாமியைக் குப்பிட்ட பிறகுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் சொல்லும் செய்திகளைக் கேட்டிருக்கின்றோம்.  கிரகணம் என்பதன் அறிவியல்  உண்மை இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  நிலவும் பூமியும் நேர்க்கோட்டில் வரும் போது நிலவின்  வீச்சு பூமியில் தெரியாது.  அந்த நேர்க்கோடு வரும் போது நிலவு மறையவும், விலகும் போது நிலவு தெரியவும் செய்யும்.  இந்த நேரம் பூமியின் இயல்புகளில் சற்று மாறுதல் நேரிடும்.  எனவேதான், இந்த நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்றெல்லாம் கூறுவர். கோயில்களில் அந்நேரத்தில் நடை அடைப்பதும் உண்டு.
     
        கிரகணம் பற்றிய செய்தி செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதா என்று ஆயப் புகும் போது, எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு மற்றும் நீதி இலக்கியங்களில் தலைசிறந்ததான திருக்குறளில் இதுபோன்ற செய்திகள் இருப்பதைக் காணமுடிகிறது.   

         கேளாய், எல்ல! தோழி! வேலன்
         வெறிஅயர்  களத்துச் சிறுபல தாஅய
          விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
         உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
         அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
         சிறுபுள் மாலையும் உள்ளார், அவர்என... (அகம்.114.1-6)

என்னும் பாடலில் தலைவன் தலைவியை நினைக்காததைத் தோழி கூறுவதாக அமைந்த இப்பாடலில்,  ஏண்டி தோழி, யான் கூறுவதைக் கேட்பாயாக, வேலன் வெறியாடும் களத்தில் பரவிக் கலந்து கிடக்கும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும். வலியினையுடைய ஞாயிறு, தன் வெம்மை குறைந்து பாம்பு விழுங்கும் நிலவினைப் போல மேற்கு மலையினைச் சேர்ந்து மெல்ல மெல்ல மறையும். அத்தகைய சிறிய புல்லிய மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைக்கவில்லையே என்று கூறுகின்றதாக இப்பாடல் அமைந்துள்ளது.  திருக்குறளில், 

        கண்டது மன்னும் ஒருநாள்  அலர்மன்னும்
        திங்களைப் பாம்புகொண் டற்று.   (குறள்.1146)

இடையீடுகளானும் அல்லகுறியானுந் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள்  அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவுகடாயதாக இப்பாடல் அமைந்துள்ளது.  யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது  ஒருஞான்றே, அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போன்று உலகெங்கும் பரந்தது என்பதாக இப்பாடல் பொருள் அமைகிறது.

இவ்விரு பாடல்களால் நிலவைப் பாம்பு விழுங்கும் செய்தி பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணும் போது சங்க காலந்தொடங்கி இச்செய்திப் பரவல் நம் தமிழரிடையே நீடித்து நிலைத்திருக்கிறது என்பது உண்மை.


வியாழன், 24 அக்டோபர், 2013

ஆழ்வார் திருநகரியில் - சுவடிகள் களப்பணி

ஆழ்வார் திருநகரியில் பெரியன்  வெ. நா. சீனிவாச ஐயங்கார் அவர்களின் பயன்பாட்டில் இருந்த 85 ஓலைச்சுவடிக் கட்டுகளை அவரது மகன் பெரியன் வெ.சீ. அழகியநம்பி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளார்கள்.  அவர்களைப் பற்றிச் சிறிது இங்குக் கூறவேண்டும். வெ.நா. சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் திருஞானமுத்திரைப் பிரசுராலயம் ஒன்றை வைத்து அதன் மூலம் பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளார்.  குறைந்தது 20க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  குறிப்பாக கம்பராமாயணம் காண்டம் காண்டமாக பதிப்பித்துள்ளார்.  சுவாமி நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு, சடகோபன் திவ்ய சரிதம், சடகோபன் சந்திர கலாமாலை, இராமாணம், துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் சந்திர காலமாலை, நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ், திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம், குருகூர்ப்பள்ளு, ஆழ்வார்கள் வைபவம், தெந்திருப்பேரை திருக்கோளூர் திருப்பணிமாலை, திருவைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம் பாலகாண்டம், தெய்வச்சிலையார் விறலிவிடுதூது, கம்பராமாயணம் பால காண்டம் ஆழ்வார்திருநகரிப் பிரதிகளின்படி, கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கம்பராமாணயம் ஆரண்யா காண்டம், கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம், கம்பராமாயணம் சுந்தர காண்டம், கம்பராமாயணம் யுத்த காண்டம், கம்பராமாயணம் உத்தர காண்டம், பராங்குச நாடகம், குருகாஷேத்திர மகாத்மியம், திருக்குருகூர் திருப்பணிமாலை போன்ற பல நூல்களைப் பதிப்பித்த பெருமைக்குரியவர். அவர்  வெளியிட்ட பல நூல்கள் இன்னும் முற்றிலும் விற்பனை ஆகாமல் ஆழ்வார் திருநகரியில் திரு. அழகிய நம்பியிடம் இருக்கின்றன.  தமிழன்பர்கள் அவரிடம் +914639273039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவையன்றி பல அரிய நூல்களையும் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.  பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கின்றார்.  பல பழம் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பழக்கம் வைத்திருந்திருக்கின்றனர்.



செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆத்திசூடித் திறவுகோல்


    மக்களிடம் அதிகமாகப் புழக்கத்திலுள்ள ஒரு நூல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கியங்களாக முகிழ்வதும், இலக்கியங்களில் இடம்பெறுவதும் இயல்பு.  ஒரு நூலின் சிலபல பாடல்களைக் கொண்டோ, அனைத்துப் பாடல்களைக் கொண்டோ அவற்றுக்கு விளக்கம் தரும் வகையில் பல செய்யுள் நூல்கள் காலந்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.  முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, திருத்தொண்டர் வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருக்குறள் குமரேச வெண்பா, திருத்தொண்டர் மாலை போன்றவை திருக்குறளுக்கு விளக்க நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.  இந்நூல்களில் திருக்குறள் அல்லது திருக்குறள் கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும்.
      திருக்குறளுக்கு அடுத்த நிலையில் ஔவையாரின் ஆத்திசூடிக்கும் விளக்க நூல்கள் பல எழுந்திருக்கின்றன.  ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி), ஆத்திசூடி வெண்பா (ஆசிரியர் பெயர் தெரியவில்லை), ஆத்திசூடி அந்தாதி, ஆத்திசூடிச் சிந்து, ஆத்திசூடிப் புராணம், ஆத்திசூடித் திறவுகோல் போன்றவை ஆத்திசூடிக்கு விளக்க நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.  இவ்வகையான விளக்க நூல்கள் செய்யுள் நடையில் அமைந்திருக்கின்றன.  இவைகளைச் செய்யுள் நடையில் அமைந்த உரை நூல்கள் என்றே கூறலாம்.  இங்கு ஆத்திசூடித் திறவுகோல் குறித்துக் காண்போம்.
ஆத்திசூடித் திறவுகோல்
      குருமுனியின் ஆத்திசூடித் திறவுகோல் 13 விருத்தப்பாக்களாலானது.  ஆத்திசூடியின் உயிர்வருக்க எழுத்துக்களுக்கு மட்டும் திறவுகோலாக உரையாக இந்நூல் அமைந்துள்ளது.  அதாவது, அறஞ்செய விரும்பு முதல் அஃகம் சுருக்கேல் வரையுள்ள 13 ஆத்திசூடிச் சொற்களுக்குப் பொருள் கூறும் முகமாக ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு விருத்தம் என்ற முறையில் 13 விருத்தங்களாக இந்நூல் அமைந்துள்ளது.  அத்திசூடியின் ஏனைய உயிர்மெய் வருக்கங்களுக்கு இந்நூலாசிரியர் எழுதினாரா என்று தெரியவில்லை.  13ஆவது பாட்டின் இறுதியில் ஆத்திசூடி குருமுனித் திறவுகோல் உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும் என்று எழுதப் பெற்றிருக்கின்றது.  இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது உயிர்மெய் எழுத்துக்களுக்கான ஆத்திசூடித் திறவுகோல் தனியாக எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.  ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கவில்லை.  இதுவரை கிடைத்த உயிரெழுத்துக்களுக்கான ஆத்திசூடித் திறவுகோல் பாடல்களில் ஆசிரியர்தம் நோக்கும் போக்கும் உரைத்திறனும் வெளிப்படுவதைக் காணலாம்.  இந்நூல் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியை ஆதாரமாகக் கொண்டு அந்நூலகப் பருவஇதழ்த் தொகுதி 2, பகுதி 1, 1949இல் வ.ரா. கல்யாணசுந்தரம் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது.
நூலமைப்பு
      ஔவையின் நீதிவாக்கம் முதலிலும் இதன்பொருள் (இ-ள்) என்ற முறையில் ஒவ்வொரு சொல்லிற்கும் முறையே அமைந்திருக்கின்றது.  இதனுள் அண்டத்தன்மை, சித்தர்கள்-யோகிகள், இறைவன், இறையடியவர்கள், மனிதர்கள் போன்றோரின் தன்மைகள் பலவாறாக எடுத்தோதி, பொருத்தமுடைய வாக்கியங்களுக்கு மேற்கோளாக எடுத்துக் காட்டப்பெற்றிருக்கின்றது.
      ஆறுவது சினம் என்ற வாக்கியத்திற்குக் கோபம் தனியத் தகுவதாகும் என்பர். இதற்குக் குருமுனி அவர்கள் சிறந்ததொரு எடுத்துக்காட்டுடன் இவ்வாக்கியப் பொருளைத் தருகின்றார்.  மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான்.  அப்போது அவன் ஆயுட் காலம் முடிகின்றது.  இதனால் இயமன் பாசக் கயிற்றினை மார்க்கண்டேன் மீது வீசுகின்றான்.  அக்கயிறு, மார்க்கண்டேன் வழிபாடு நிகழ்த்திக் கொண்டிருந்த சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது.  இதனால் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து, சிவபெருமான் வெளிப்பட்டு காலனைக் காலால் மிதித்து காலாரி என்னும் வடிவம் தாங்குகின்றார். சிவபூசையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் மீது பாசக்கயிறு வீசக்கூடாது என்பது பொதுவிதி.  ஆனால் அதையும் மீறி இயமன் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசுகின்றான்.  அக்கயிறு இறைவன் மீதும் பட, இறைவனாகிய எனக்கே பாசக்கயிறு வீசுகின்றாயா! என்று சினங் கொண்டு காலதேவனைக் காலால் மிதித்து வைத்துக்கொள்கின்றார்.  இதனால் நாட்டில் உயிரிழப்பு இன்றி மக்கள்தொகை அதிகரித்துவிடும் என்றஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டுகின்றனர்.  அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் காலனை விடுவித்தார் என்பது புராணக்கதை.  சிவபெருமான் சினம் தணிந்ததால் தான் இயமன் தன்பணி தொடர முடிந்தது என்ற கருத்தை மையமாக்கிப் பொருள் கொண்டிருக்கின்றார்.
      அதேபோல், அறுமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர், இறைவடியவர்க்கு அமுதினை முன்னூட்டிப் பின்னுண்ணும் பழக்கத்தினை உடையவர்.  எத்துன்பம் வந்திடினும் அடியவர்க்கு அமுதூட்டும் நிலையில் சிறிதும் வழுவாதவர்.  தன் பிள்ளையின் கறி சமைத்து பைரவர்க்கு அமுதூட்டும் போதும் நிலைதடுமாறாதவர்.  அவரின் இச்செயலையும் ஒவையின் ஐயமிட்டுண் என்னும் வாக்கியத்தையும் இந்நூலாசிரியர் தொடர்புபடுத்திப் பொருள் கொண்டிருக்கின்றார்.  இதுபோல் இந்நூல் முழுமைக்கும் பொருள் அமைந்திருப்பதைக் காணலாம்.
      ஒவையின் ஆத்திசூடி வாக்கியங்களை மூலமாகக் கொண்டு குருமுனி அவர்கள் தன்னுடைய உயரிய எண்ணங்களை மக்கள் மத்தியில் சென்றடைய இந்நூலின் மூலம் வழி செய்திருக்கின்றார் எனலாம்.  உயரிய சித்தாந்தக் கருத்துக்களை அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் விதமாக ஔவையின் வாக்கினைத் துணைக்கழைத்திருக்கும் குருமுனியின் போக்கு பாராட்டுக்குரியதே.  ஓர் பாலபாட நூலுக்கும் சித்தாந்தக் கருத்துக்கள் உண்டு என்பதை இந்நூலாசிரியர் எடுத்தியம்பியிருப்பது பாராட்டுக்குரியது என்றால் அது மிகையன்று.  மேலும், இந்நூலைச் சுவடிப்போர் சுவைப்பதற்காக இங்கு அவ்வாறே தரப்படுகிறது.
1. அறஞ்செய விரும்பு
      அரனென்ற பொருளல்லா லுககிலண்
            டருண்குத்தான் முனிவருமே காணா சூக்ஷ்மம்
      சரமென்றும் பெயர்பெற்று வுலகில்தானும்
            தனக்குள்ளே தானாகி யண்டமாகிப்
      பரமென்ற கீர்த்தியுள்ள சித்தர்யோகி
            பரிவாக பஷ்டரித்தும் நமனைவெல்வார்
      குருவென்றுஞ் சீஷரென்றுங் கற்பமென்றுங்
            குவலயத்தி லறஞ்செய்ய விரும்புமாச்சே.
2. ஆறுவது சினம்
      ஆருவது ஆரு(று)தலம் நிலையைக்கண்டு
            அனுதினமு மிருபத்தெட் டக்ஷரத்தினாலே
      பேருபெற வோம்நமசி வாயத்திற்குப்
            பிறவிதனை மாற்றிவிடப் பெருமைபெற்றுக்
      கார்சொரியுஞ் சரமாரி பழக்கஞ்செய்து
            காலனைக்கா லாலுதைத்துக் கருணைகொண்டு
      சீருடனே சின்மயத்தைத் தியானஞ்செய்து
            தீருவதுதா னாறுவதுசினம் நமக்குள்ளாச்சே.
3. இயல்வது கரவேல்
      தாராத வித்தையை யெடுத்துவிட்டாலிடி
            தானே யுன்தலையில் விழுமேபாரு
      புவிதனிலே யின்னதென் றறிந்தறஞ்செய்தாய்
            புண்ணியனே யுனக்குவசம் புனிதவாழ்வு
      கயமான மிலகுங் கருத்துந்தோணுங்
            காணாத சிலம்பொலியின் காக்ஷிகாணுஞ்
      சுயம்புலிங்க மாகவேநீ யாவாயல்லோ
            சடுதியாய்நீ யியல்வதை மறந்திடாதே.
4. ஈவது விலக்கேல்
      ஈவதுதா னாதவிந்து பூதியத்தில்
            இனிதாக்குந் தினந்தினமு மருச்சித்தாக்கால்
      கெவனமதில் தூக்கிவிடும் கிருபையோடு
            கம்பீரம் பெற்றுச்சில யோகியாவாய்
      மௌனமது கைகூடும் யுகாந்தகாலம்
            வச்சிரம்போல் தேகமது வாசிநிற்குங்
      கவனமா யீவதுதான் விலக்கிவிட்டால்
            சண்டாள நற்கதியைச் சாருவாயோ.
5. உடையது விளம்பேல்
      அண்டசத்துக்களின் சங்கதிகளைக் கல்லாதா
            னொருத்தனுக்கு நீயுரைத்தால் மூழ்கிப்போவா
      யுடைவன்தான் மூதண்டங் கண்டுகொள்வா
            னொருவனுமே தானருந்தித் தாயைக்கண்டு
      படைமுகத்தில் வில்லெடுப்பான் சுரம்தொடுத்துப்
            பாழான வொன்பதுபத் தாறுபேரை
      விடவிடென நடுக்கமது செய்துவைத்து
            விருதாக வுடையவனே விளம்பானைய்யா.
6. ஊக்கமது கைவிடேல்
      ஊக்கமது அண்டவிந்த யெனவாறுந்தா
            னுற்பனமா யிருதயத்தி லிருத்திக்கொண்டு
      ஆக்கையதை யழிக்காமல் நடேசர்பாத
            மனுதினமு மர்ச்சித்து அருளைப்பெற்று
      வாக்குமன மொன்றாகச் சமாதிபூண்டு
            மயிற்பால மீதினிலே மனக்கண்சாத்தித்
      தேக்கில்லா  வமுதமதைக் கொண்டுநித்தம்
            சின்மயத்தி னூக்கமதைக் கைவிடாதே.
7. எண்ணெழுத்திகழேல்
      எண்ணெழுத்தைக் கைப்பற்றிக் கொண்டுந்தா
            னிருந்துவிளை யாடிடுவா யஷ்டசித்தும்
      கண்ணெழுத்தாற் கருவிகளைச் சுட்டறுத்துக்
            கருணையுள்ள தண்டியின்மே லேறியாடி
      வண்ணனைத்தான் மாடாக்கிச் சமைத்துவுண்டு
            மார்க்கமதைக் கருத்தாலே யறிந்துகொண்டு
      திண்ணமுள்ள எண்ணெழுத்தை மாய்ப்பாயானால்
            தெரித்துவிடு முன்சிரசு சித்தமாமே.
8. ஏற்பதிகழ்ச்சி
      ஏப்பதுதா னாரென்று லானைக்கல்லை
            யில்லறத்தை வைத்தவன் பூசியாத
      கார்த்திகையா மருச்சுனன்றான் கண்டெத்த
            கருத்தனை யறியாத கசட்டுமாக்கள்
      பார்த்திருந்தும் பெண்டுபிள்ளை பெண்ணைத்தேடிப்
            பாழான நரகத்தி லழுந்திநிற்கும்
      போற்றியதோர் பொருளறிந்து தின்பானானா
            லெக்காலும் மாய்ப்பதில்லை யிகழ்ச்சியாமே.
9. ஐயமிட்டுண்
      ஐயயமிட்டான் சிறுத்தொண்டன் பிண்டத்தாலே
            ஆத்தாளுங் கருணைவைத்துக் கடாக்ஷித்தாள்தான்
      பைய்யரவமே கொண்டான் காரமான
            பாவையைத்தான் சிரசில்வைத்தான் பரிசில்தேகம்
      மெய்யதனை நீக்கிவிட்டான் மகாரத்தாலே
            மேதினியி லவனுமொரு சித்தனானான்
      வைய்யகத்து மயக்கமதை நீக்கிவிட்டு
            மருவிஐய மிட்டுண்ண மகிழுந்தானே.
10. ஒப்புரவொழுகு
      ஒப்புரவய்ப் பூதியத்தைச் சீர்படுத்தி
            யுயர்ந்திருக்குந் தாம்பரத்தைத் தகடுதட்டிக்
      கப்பில்லாப் பூபதியை மேலேயேற்றிக்
            கருவான தேய்வினிலே கதிக்கவாட்டித்
      தப்பில்லா யெருவாலே புடத்தைப்போட்டுத்
            தருவான விருதுருத்தி கொண்டுவூதி
      அப்பனே உருக்கியபின் ஆ,ஊநாடி
            அழகான வொப்புரவா யழகுசெய்யே.
11. ஓதுவதொழியேல்
      ஓதுவ தண்டபிண்டம் நந்திபிண்ட
            மொருக்காலும் மறந்துவிட்டா லாண்டுபாழாம்
      சேதமது செய்யாமல் செய்தாயானால்
            திருமகளே ஆண்டுக்கு முன்னூறாகும்
      பாதமதை பின்னதென்று பூசைசெய்து
            பண்பான வரியென்று பகர்வாயானால்
      காதமது போய்விடு மோதுவதில்
            கலங்காதே தோளிலேதான் கண்டுகொள்ளே.
12. ஔவியம் பேசேல்
      ஒளவியமது இருந்தநீ பேசுவாயாகி
            லைந்திருந்துங் காலாகி மடித்துப்போவாய்
      ஔவியமதை விட்டுநீ யாதிதன்னை
            யஞ்சலித் தடிதொழுது அமர்ந்துநின்றால்
      ஔவியத்தால் கூக்குரல்கள் ரொம்பவுண்டு
            ஆறிரண்டு பன்னிரெண்டி லடங்குஞ்சோதி
      ஔவியத்தை யின்னதென் றறிந்தாயானா
            வண்டரண்ட முன்வசமே யாகுந்தானே.
13. அஃகஞ் சுருக்கேல்
      சுருக்குவது மயிர்ப்பால மீதில்தானுந்
            தூண்டாத தீபம்போ லிருக்கவேணும்
      பழகச்சே தெரியுமல்லோ காயின்போகம்
            பலிதமா மில்லையென் றறிந்துகொள்ளு
      பெருக்கவே போசனமு நீருமுண்டால்
            பேதைகளே மனிதருக்குச் சாவுமுண்டோ
      உருக்கலந்த போதேதா னெல்லாமாச்சு
            ஊஅக்கஞ் சுருக்கமழை யுன்னிப்பாரே.
ஆத்திசூடி குருமுனித் திறவுகோல் உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும்.

கோவைமொழி : உண்மை பேசி மென்மையாய் இருந்தால் நன்மைகள் பல     
                        தானே விளையும்.