நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின்
தன்மையை அடிப்படையாகக் கொண்டு சு. சக்திவேல் தன்னுடைய நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும்
நூலில் எட்டாகப் பிரித்திருக்கின்றார். அதாவது,
தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், காதல் பாடல்கள், தொழில் பாடல்கள், கொண்டாட்டப்
பாடல்கள், பக்திப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், பன்மலர்ப் பாடல்கள் என அவை அமையக்
காணலாம். மேலும், தாலாட்டுப் பாடல் என்பது
தாய்மை உணர்வின் வெளிப்பாடு எனலாம். அப்பாடல்களில்
பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும்.
தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக
வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.
ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும்,
கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள்.
காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால
கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத்தமிழாகவும், தேவர் தேவியர்
தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான
குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.
”தால்” என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி
குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ,
தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ
என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லப்படும்.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ,
ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீலாம்பரி என்ற இம்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப்
பாடல்கள் பெரும்பாலும் பாடப்படுவதுண்டு. எனினும்
யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப்படுகின்றன என்பர். தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன்
விளையாட்டுப் பொருள்கள், மாமன் பெருமை, குலப்பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் உவமை, உருவக அணிகள் பெரும்பாலும்
கையாளப்படுகின்றன.
கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே- என்
கண்மணியே கண் வளராய்
என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும்,
பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை உணரத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனைக் குழந்தையாக பாவித்து
தாலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.
இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ்
செங்காற் குருவி - அரையிரவின்
ஊமன்தா
ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு. (முத்தொள்ளாயிரம், பா.71)
என்று கூறப்பட்டுள்ளதைக் காணலாம். அதாவது, போர் தொடங்கிவிட்டது. பெண்கள் அனைவரும் ஊருக்கு வெளியே உள்ள சோலைகளில்
போய் மறைந்து கொண்டார்கள். அவர்களுடன் கருவுற்ற
மகளிரும் உடன் தங்கி இருந்தார்கள். அங்கே,
அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகள் இலைகள், சருகுகளின் மேல் கிடந்து அழுகின்றன. அச்சமயத்தில் (ஊமன் தாராட்ட உறங்கிற்றுக் குழவி)
தாலாட்டுப் பாடல் கேட்டு குழந்தைகள் தூங்கிவிட்டன என்பதாக அப்பாடல் பொருள் அமைகிறது. இலக்கியத்தில் முதன் முதல் இங்குத்தான் தாலாட்டு
என்பதை தாராட்டு என்று குறிப்பிடுவதைக் குறிப்பிடுவர். கம்பராமாயணத்தில்,
“பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை”
என்று கம்பர் தாலாட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத் திருஞானசம்பந்தர்,
“பண்ணமரும் மென்மொழியார் பாலகரைத் தாலாட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்
இயும்மிழலை யாமே”
என்கின்றார்.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ! வையம்
அளந்தானே தாலேலோ! ”
என்கின்றார்.
குலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டும்போது,
“தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே!
காவேரிநல் நதிபாயும் கணபுறத்தென் கருமணியே!
ஏவரிவெம் சிலைவலவா! இராகவே தாலேலோ”
என்றும் பாடுகின்றார்.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒரு வகையாக இருந்த தாலாட்டுப்
பாடல் சிற்றிலக்கியங்களுக்குள் ஒரு கூறாகியது. குழந்தைகளைத் தாலாட்டுவதாக அமைந்த இத்தாலாட்டு
இறைவன் மீது பாடப்படும்போது இறைவனின் செயற்பாடுகளை உள்ளடக்கிப் பாடப்படுவதாகத் தாலாட்டின்
படிநிலைகள் அமைந்திருக்கின்றன. இந்நிலையில்
குமரன் தாலாட்டு என்பது முருகப் பெருமானின் செயற்பாடுகளை எடுத்துரைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலாட்டில் நாட்டுப்புற இலக்கியங்களில் உள்ள
தாலாட்டுக் கூறுகள் எதுவும் இல்லை. முருகனின்
வீரதீரச் செயற்பாடுகளையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் எடுத்தியம்பும் நோக்கிலேயே இந்நூல்
அமைக்கப்பட்டுள்ளது. பெயரளவில் தாலாட்டு என்று
இருந்தாலும் இவற்றில் தாலாட்டுக் கூறுகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இனி, குமரன் தாலாட்டு என்னும் நூலைப் பற்றிக் காண்போம்.
சிவன்-பார்வதியின் இரண்டாவது திருமகனாக அவதரித்த குமரனின்
பெருமைகளைச் சொல்லுவதாக காப்பு வெண்பா ஒன்றுடன் நாற்பத்தைந்து கண்ணிகளில் அமைந்துள்ளதே
குமரன் தாலாட்டு. இந்நூல் இன்னும் அச்சாகவில்லை. இந்நூல் கொண்ட சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக
ஓலைச்சுவடித்துறையில் சுவடி எண்.334இல் உள்ளது.
இந்நூலின் பிற்குறிப்பில் “சார்வரி வருஷம் அற்பசி மாதம் 26ந் தேதி கோரால் கிராமத்திலிருக்கும் ராமலிங்கப் பிள்ளை குமாரன்
அருணாசல பிள்ளை குமரதாலாட்டு எழுதி முடிஞ்சது முற்றும்” என்று இருக்கிறது. இதனைக் கொண்டு பார்க்கும் போது இந்நூல் ஆசிரியர்
பெயர் அருணாசலம் பிள்ளையா? அல்லது இச்சுவடியை எழுதியவர் பெயர் அருணாசலம் பிள்ளையா?
என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நூல் சிறியதே யானாலும் முருகப்பெருமானின் பலப்பல
செயற்பாடுகளை எடுத்துரைக்கப்பட்டு உள்ளதைக் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
சூரசம்ஹாரம்
காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கித் தவமிருந்து
இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணல் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும்
பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக
தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களில் இருந்து
பிறந்த ஆறு நெருப்புப் பொறிகளை வாயு பகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி தேவி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது
அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம்
வேலைப் பெற்ற முருகப் பெருமான் தன்னுடைய பன்னிரண்டு கைகளால் அசுரர்களின் சேனைகளை எல்லாம்
விளையாட்டாகப் போரிட்டு இரண்டு கூறாக்கி வேறோடு அழித்தான். இப்போர்ச் செய்தியை,
ஆறிரண்டு கைத்தலத்தில் அசுரர்தங்கள் சேனையெல்லாம்
வேறிரண்டு கூறாகி விளையாடி வந்தாரோ. (பா.4)
என்றும், திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை வதம்
செய்வதற்கு வேலுடன் வாளையும் ஏந்திப் போரிட்டவன் என்பதை,
வேலுடனே வாளெ(டு)த்து வெத்திச் சிலைஎடுத்து
சூரன்மணி மார்பன் துளைந்தபிரான்
வந்தாரோ. (பா.7)
என்றும், திருச்செந்தூர் கடற்கரை மணலில் வள்ளி மயங்கி
விழும்பொழுது தன்னுடைய கையில் உள்ள வேலை எறிந்து தடுத்த செய்தியை,
தெள்ளி மணல்கொழுத்து செந்திப் பதியுடனே
வள்ளி மழங்கிவிழ வடிவே லெறிந்தாரோ. (பா.6)
என்றும் கூறப்பட்டுள்ளதால் முருகப்பெருமானின் போர்ச்செய்திகள்
வெளிப்படுகின்றன.
அருணகிரியை ஆட்கொண்டது
அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில்
இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார்,
சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார்
நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல
கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய
வயதில் திருமணமும் ஆகியது. இவருக்கு முற்பிறவியின்
பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர;பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில்
பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும்
இழந்து வந்தார;. எந்நேரமும் காமத்திலே மூழ்கித்
திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல் பெருநோயும் வந்து சேர்ந்தது. என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை
தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர்
சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய
செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே
வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார்.
அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து
மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி,
குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு
இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம்
குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம்.
முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன
செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு
முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக்
கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார்.
இந்நிலையினை மனதில் கொண்ட இந்நூலாசிரியர; அருணகிரிநாதர்
தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தினைப் போக்கத் தன்னுடைய உயிரைத் துறப்பதற்கு திருவண்ணாமலை
கோபுரத்தின் உச்சியில் ஏறி நிற்பதற்கு நீ வள்ளியம்மையுடன் மயில் மீது வந்து காப்பாய்
என்ற துணிச்சலோ என்பதை,
வருண மயிலேறி வள்ளியம்மை தன்னுடனே
அருணகிரி கோபுரத்தில் அஞ்சாமல்
நின்றாரோ. (பா.10)
என்று அருணகிரிநாதரை ஆட்கொண்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற பலப்பல செய்திகள் அடங்கிய இந்நூல் பின்வருமாறு
அமைந்திருக்கக் காணலாம்.
காப்பு
வானு மயிலும் வடிவேலும் பன்னிரண்டுந்
தோளுந் துணையாக தோன்றுமே - மாலின்
மருகா அறுமுருகா வள்ளிமண வாளா
முருகாவென் றோதுவார்முன் வேலுமயி லும்துணை.
நூல்
குமராவு னைத்தொழுவேன் குன்றெரிந்த வேல்முருகா
அமரா பதியார்க்கு மாறிரண்டு தோளோனே. (1)
கச்சை யாடையசைய காலசைய வேலசைய
முத்து வடவசைய முன்வந்து நின்றாரோ! (2)
குயில்கூவ மயிலாட கோவில் திருசங்கூத
அழகான மயிலேறி உலகாள வந்தாரோ! (3)
ஆறிரண்டு கைத்தலத்தில் அசுரர்தங்கள் சேனையெல்லாம்
வேறிரண்டு கூறாகி விளையாடி வந்தாரோ. (4)
இரண்டுமலைத் திரண்டுருள இருகையிலும் வேல்வாங்கி
இரண்டுமலை நாலாக எழுந்தருளு வந்தாரோ. (5)
தெள்ளி மணல்கொழுத்து செந்திப் பதியுடனே
வள்ளி மழங்கிவிழ வடிவே லெறிந்தாரோ. (6)
வேலுடனே வாளெ(டு)த்து வெத்திச் சிலைஎடுத்து
சூரன்மணி மார்பன் துளைந்தபிரான் வந்தாரோ. (7)
வௌ¢ளையிரு கொம்புடைய வேழத்தின் பின்பிறந்து
வள்ளிமயங் கிவிழ வடிவே லெறிந்தாரோ. (8)
வம்பவிழத் சோலை வயலருணை மானகரில்
கும்பமுலை வள்ளி குறத்தியர்க்கு வாய்த்தாரோ. (9)
வருண மயிலேறி வள்ளியம்மை தன்னுடனே
அருணகிரி கோபுரத்தில் அஞ்சாமல் நின்றாரோ. (10)
முன்னைப் பிறவிதனை முக்காலும் செட்டியென்று
பின்னை மறைக்கிழவன் ஞானபிரான் வந்தாரோ. (11)
தேன்மருவும் சோலை தென்னருவி மானகரில்
வாரார்கள் வந்துதொழ வரமளித்து நின்றாரோ. (12)
ஆருமில்லா அன்பர்தனை அஞ்சாதே என்றழைத்து
சீர்பாதங் காட்டி தெளிய வுரைத்தாரோ. (13)
வார்பெரு முலையாள் வள்ளியம்மை தன்னுடனே
வீரத் திருப்பதியில் மேவும் பெருமாளோ! (14)
காட்டிய கையோனோ கண்ணார்ந்த கற்பகமே
ஓட்டி யசுரர்களை உயிர்க்கழவில் வைத்தாரோ. (15)
தண்டுடனே சூலமது தப்பாமல் கைத்தலத்தில்
கொண்டருணை சேனையெல்லாம் குறும்பறுக்க வந்தாரோ. (16)
செங்காட்டில் நின்று செறுத்தொண்டன் தன்மகளை
மங்காமல் கார்த்த வள்ளல் மகனாரோ. (17)
தேவாதி தேவன் திருச்செவியைத் தானதிர்ந்து
மூவாதி மந்திரத்தை மொழிந்தபிரான் வந்தாரோ. (18)
கோலக் குறவர் குறமகனைத் தான்தேடி
காவல்த் தினைப்புனத்தில் காற்கும் பெருமாளோ. (19)
சங்கையர்ப் பொய்கை சரவணையில் வந்துதித்து
மங்கையுமையாள் தனக்கு வாழ்த்தும் பெருமாளோ. (20)
கண்ணா ரமுதத்தின் கழலிணையை போத்திசெய்து
உண்ணா முலையாள் உகந்தெடுத்த உத்தமனோ. (21)
வேலர்பு கணத்திருந்து வேடர்தனைக் காத்திருந்து
கோலக் குரவர் குரமகளைக் கொண்டாரோ. (22)
யென்துயரந் தீர எழுந்தருளி மாமலைமேல்
வந்து வரமளித்து வாழும் பெருமாளோ. (23)
பொல்லாத நாயெடியேன் பூந்தலைமேல் பாதம்வைத்து
எல்லோருங் காண எழுந்தருளி வந்தாரோ. (24)
ஒன்று மனையானோ யீறாறு தோளானோ
மன்றுசிறு வள்ளியர்க்கு வாய்த்த மணவானே. (25)
பச்சை மயிலேறி பழுத்துக் கொறுநோயில்
செச்சை முழங்க தேசவலம் வந்தாரோ. (26)
கண்ணிரெண்டு நீர்சொரிய கைக்குவித்து நின்றவற்கு
பன்னிரெண்டு கண்ணும் வரமளித்து நின்றாரோ. (27)
பன்னமருஞ் சோலை பழஞ்சொரியு மானகரில்
வரண்மயி லேறி வாழும் பெருமாளோ. (28)
செஞ்சொல் மயிலை சீரியா பிராயத்தில்
விஞ்சர மவுணர்க்கும் வேரறுக்க வந்தாரோ. (29)
ஆகா மனத்தென்னை அஞ்சாதென் றழைத்து
சீர்பாதம் காட்டி தெளிய வுரைத்தாரோ. (30)
ஏழை யடியார்கள் எப்போ தழைத்தாலும்
வாழ மயிலேறி வந்துவினை தீர்த்தாரோ. (31)
மாத்தான் படைநடுங்க மாமயிலேறி வந்து
மாத்தான் சிரந்துணிய வடிவே லெறிந்தாரோ. (32)
நடன மயிலேறி நான்மறையி னுட்பொருளை
படிற்று வுமையவள்க்குப் பாடல்செய்து நின்றாரோ. (33)
யேளங்க ளாலேலோ யென்றழைத்த வாய்மொழிக்கி
மானை முகம்பார்த்து மயங்கிப்போய் நின்றாரோ. (34)
வேங்கை மரமாகி மெல்லியற்குத் தானெழலா
ஓங்கி வளந்தெழுந்த வுத்தமரைச் சொன்னாரோ. (35)
கிள்ளைக ளாலேலோ என்றழைத்த வாய்மொழிக்கி
உள்ள முருகி உறவுசெய்து நின்றாரோ. (36)
நினந்தவிடந் தோறும் நிலமயி லேறிவந்து
மனத்துக் கவலையெல்லாம் மாத்தும் பெருமாளோ. (37)
குன்றமெறிந் தானே கோழிக் கொடியானோ
மன்றிசிறு வள்ளியர்க்கு வாய்த்தமண வாளனோ. (38)
காலில்செறு சதங்கை கட்டவொண்ணா காலத்தே
பாலித்த வெண்ணிரும் பரப்பிய பாலகனோ (39)
வென்று மயிலேறி வேல்வாங்கி வில்லெடுத்து
சென்றுதிசை வென்றுவருஞ் சேவுகரைச் சொன்னாரோ. (40)
வந்தேன் மனமகிழ்ந்தேன் வன்க்குரவர் தெண்டநிட்ட
சந்தோஷ மாகவள்ளி தன்னைமணஞ் செய்தாரோ. (41)
செய்தேன் மனம்புனந்து திருத்தணி சாரலிலே
வைய்போக மாக வள்ளிமண மகிழ்ந்தாரோ. (42)
குமரகுரு தாலாட்டை குறுப்புடனே யான்படிக்க
அமராபதி கார்க்கும் அரளபத்தது செயிதாரோ. (43)
சத்திவேல் தானெடுத்து தாளவரை சங்கறித்து
முத்திபெற மோஷ்சம் முனிவர்க் களித்தாரோ. (44)
குழந்தை வடிவாகி கோலமயி லேறிவந்து
தவிழ்ந்து விளையாடுஞ் சண்முகரைச் சொன்னாரோ. (45)
முற்றும்.
சார்வரி வருஷம் அற்பசி மாதம் 26ந் தேதி கோரால் கிராமத்திலிருக்கும் ராமலிங்கப் பிள்ளை குமாரன்
அ ருணாசல பிள்ளை குமரதாலாட்டு எழுதி முடிஞ்சது முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக