வியாழன், 18 ஏப்ரல், 2019

சிலப்பதிகாரத்தில் நாட்டுக் கூறுகள்



            தெய்வங்களையும் மன்னர்களையும் முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டு வந்த காப்பிய நிலையில் இருந்து நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்திக் காட்டவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுந்த காப்பியமே சிலப்பதிகாரம்.  ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மட்டும் முழுக்க முழுக்க மக்கள் காப்பியமாகத் திகழ்கிறது.  இக்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள் அடங்கிய காப்பியம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.  அவற்றை மையப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
பலிக்கொடை
            காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு நகரங்களாக இருந்தன என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எடுத்துரைக்கின்றார்.  கடற்கரையை ஒட்டிய பகுதி பட்டினப்பாக்கம் என்றும், அதனையடுத்த பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் குறிப்பிடுவர்.  மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதி பலிக்கொடைப் பகுதி என்பர்.  இப்பகுதி வளர்ந்துள்ள மரங்களையே தூணாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாள் அங்காடியாகிய பகல் கடைப் பகுதியில், பொருளைக் கொடுப்போர் சத்தமும், வாங்குவோர் சத்தமும் இணைந்து போர்க்களம்போல் ஒலிக்கும் பகுதியாக அமைகிறது.  இங்குக் காவல் பூதம் அமைந்திருக்கிறது.  இந்திரனால் சோழ அரசனுக்குப் புகார் நகரத்தைக் காவல் காப்பதற்கு அனுப்பப்பெற்றது இக்காவல் பூதம். இக்காவல் பூதத்திற்குச் சித்திரை மாதம், சித்திரை நாள், பௌர்ணமியும் அமைந்த நாளில் மன்னனுக்கு வரும் துன்பங்கள் ஒழிப்பாயாக என வேண்டி, பூதத்தின் பலி பீடத்தில், புழுக்கல், நெய்யுருண்டை, நிணச்சோறு, பூ, சாம்பிராணிப்புகை, பொங்கல், கள் ஆகியவற்றைப் படைத்து துணங்கைக் கூத்தும், குரவைக்கூத்தும் ஆடி தெய்வம் ஏறிச் சிலர் வெற்றியையுடைய என் வேந்தன் இன்னும் வெற்றியைப் பெறுவானாக என்று கூறி, தம் கரிய பெருந்தலையை அரிந்து பலிபீடத்தில் வைப்பர்.  இவ்வாறு பலிகளில் உயர்ந்த பலியான நரபலியை மக்கள் உன்னத நோக்கத்திற்காக வழங்கும் நிலையினைச் சிலப்பதிகார இந்திரவிழா ஊரெடுத்த காதையில் காணமுடிகிறது.  நரபலி கொடுக்கும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைக்  கூறாக இங்குக் (சிலப்.இந்திர., வரி.76-88) காணமுடிகிறது. 
            வேட்டுவ வரியிலும் கொற்றவைக்கு வேட்டுவர்கள் பலிக்கொடை கொடுப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.  அதாவது, கொற்றவையை வழிபடுகின்ற வேட்டுவர், கொற்றவைக் கோலத்தை வேட்டுவர் குலத்தில் தோன்றிய குமரிக்கு அணிவித்து, அவளை ஆட்டுவித்துத் தாங்களும் ஆடுகின்றனர்.  வேட்டுவ மக்கள் அயலூர் சென்று வேட்டையாடி ஆநிரையுட்பட பல செல்வங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்க, அவற்றுக்கு உறுதுணையாக இருந்த கொற்றவைக்குச் சிறப்புச் செய்யும் முகத்தான் பலிக்கொடை கொடுக்கின்றனர். முனிவர்க்கும் தேவர்க்கும் அருள் செய்யும் தெய்வமே உன் இணையடி தொழுகின்றோம்.  உனக்குப் பலிக்கடன் கொடுப்பது எங்களின் கடமை என்றவர்கள் எதற்கெல்லாம் பலிக்கடன் கொடுப்பார்கள் என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.
Ø  அடல்வலி எயினர் நின்னை வணங்கித் தரும் பலிக்கடன்.
Ø  நீ தந்த வெற்றிக்கு விலையாக நாங்கள் தரும் தம்முடைய மிடறுக்குருதி.
Ø  நிணத்தில் இருந்து உகுகின்ற குருதி.
Ø  அடுபுலி அன்ன வேடுவர்கள் துடியும் பறையும் கொட்ட நின் அடிக்குச் செலுத்தும் கடன்.
Ø  பலி முகத்தில் இடும் குருதி.
Ø  வழியிடை வருவோர் மிகுதியாகட்டும், அவர்களிடம் பறித்துத் திரட்டும் கொள்ளைகள் பெருகுவது ஆகட்டும் என்று இந்த வேட்டுவர் படைக்கும் மடைப்பலி.
Ø  துடியொடு பகைவர் ஊரில் அடிவைத்து எறிவதற்குக் கொடுக்கும் பலிக்கடன்.
Ø  அமுதுண்டு தேவர்கள் மடிகின்றனர்.  நஞ்சுண்டு நீ வாழ்கின்றாய்.  இது வியப்பாது உள்ளது. உன்னைப் போற்றி மகிழ்கின்றோம். பலி ஏற்று அருள்க.
Ø  அருள் என்பதை நெஞ்சகத்திலிருந்து அகற்றியவர்கள் நாங்கள்.  பொருள் கொண்டு அதற்காக மற்றவர்களைப் புண் செய்வதே எம் பண்பட்ட தொழில்.  நாங்கள் மறவர்கள், நாங்கள் இடும் பலிக்கடனை உண்பாயாக.
என்றெல்லாம் வேட்டுவர்கள் கொற்றவையிடம் தம்முடைய தொழில் தர்மத்தில் உள்ள கடனை – பலிக்கடனை – பலிக்கொடையைக் கொடுத்திருக்கின்றனர்.  இதனை, சிலப்.வேட்., 21-23ஆம்  பாடல்களில் இளங்கோவடிகளால் சுட்டப்பெற்று இருக்கக் காணலாம்.
கனவு
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக விளங்குவது கனவு.  கனவுக்குத் தக்க பலன் உண்டு என்ற நம்பிக்கையுடையோர் நாட்டுப்புற மக்கள்.  நம்பிக்கையின் பாற்கொண்ட இக்கனவினை இளங்கோடிவகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் மற்றும் பாண்டியன் மாதேவியாகிய கோப்பெருந்தேவி ஆகியோருக்கு வருவதாகக் காட்டுகின்றார்.
சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில், கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  கணவனின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகி, மன வருத்தம் கொண்டவளாகக் காணப்படுகிறாள்.  இதனைக் கண்ணுற்ற கண்ணகியின் தோழி தேவந்தி என்பவள், சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய துறைகளில் நீராடி காமதேவனை வழிபட்டால் கணவனை அடையலாம் என்கிறாள்.  அதற்குக் கண்ணகி உடன்படாது, அது பெருமை தராது என்று கூறியவள், முன்னாள் இரவில் தான் கண்ட கனவினை அவளிடம் எடுத்துரைக்கின்றாள்.
நான் கண்ட கனவினை உரைத்தால் நீயே அச்சம் கொள்வாய். அக்கனவினை என் நெஞ்சம் நினைக்கும்தோறும் நடுங்குகிறது.  அக்கனவு பின்வருமாறு:
Ø  என் கணவன் என் கையைப் பிடித்துக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புதியதோர் ஊருக்கு என்னை அழைத்துச் செல்லுதல்.
Ø  அங்கே அவன் பழிச்சொல்லுக்கு ஆளாவது.
Ø  தேளைத் தூக்கி எங்கள்மேல் போட்டதுபோல் அப்பழிச்சொல் இருந்தது.
Ø  அதனைத் தொடர்ந்து கோவலனாகிய என் கணவனுக்குத் தீங்கு நிகழ்வது.
Ø  அதைக்கேள்வியுற்ற நான் காவலன் முன்சென்று வழக்காடுவது.
Ø  அதனைத் தொடர்ந்து காவலனும் அந்நகரும் அழிவு பெற்றது.
Ø  அதன் பின் உயிர் துறந்த என் கணவன் கோவலன் உயிர்பெற்று என்னைச் சந்தித்து பேசினது.
என்றவாறெல்லாம் நான் கனவு கண்டேன் (சிலப்.கனாத்., வரி.44-54) என்கிறாள்.  
அடைக்கலக் காதையில் கோவலனின் கனவு இடம்பெற்றிருக்கிறது.  கோவலன் தன்னுடைய நிலையினை எண்ணி எண்ணி மாடலனிடம் கூறி வருந்தியபோது, மாடலன் கோவலனுக்குத் தக்க ஆறுதல் மொழிகள் பலப்பல கூறித் தேற்றுகின்றான்.  உன்னால், நீ தெரிந்து செய்த பிழைகள் ஏதும் இல்லை.  முற்பிறவியல் நீ பெற்ற தீவினைப் பயனே இப்பிறவியில் அடைந்திருக்கின்றாய் என்று ஆறுதல் கூற, கோவலன் தான் கண்ட கனவினை மாடலனிடம் எடுத்துரைக்கின்றான்.
Ø    கண்ணகி நடுங்கித் துயர் அடைகின்றாள்.
Ø    கோவலனாகிய நான் எருமை மீது ஊர்ந்து செல்கின்றேன். 
Ø    என்னுடைய ஆடைகளை மற்றவர்கள் பறித்துக்கொள்கின்றனர்.
Ø    கண்ணகியும் நானும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டுலகை அடைகின்றோம். 
Ø    மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகின்றாள்.
Ø    மன்மதன் தனலில் அம்பினை வெறும் நிலத்தில் வீசி எறிகின்றான். 
Ø    மணிமேகலை மாபெரும் துறவியாகின்றாள்.
என்பன போன்ற கனவுகளை (சிலப். அடைக்., வரி.95-106) எடுத்துரைக்கின்றான்.  வழக்கு உரைத்தல் காதையில் கோப்பெருந்தேவி ஒரு கனவு காண்கிறாள்.  இதனை முதலில் தன்னுடைய தோழிக்கு எடுத்துரைக்கிறாள்.
Ø    அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை சாய்தல்.
Ø    வாயில் கடையில் வைக்கப்பட்டிருக்கும் மணி ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டிருத்தல்.
Ø    திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்தல்.
Ø    சூரியனை இருள் விழுங்குதல்.
Ø    வானவில் இரவில் தோன்றுதல்.
Ø    பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள்போல் நெருப்பை அள்ளி வீசுதல்.
போன்ற எதிர்மறை செயல்களைக் கண்டேன் என்கிறாள்.  இக்கனவுகளைத் தன்னுடைய கணவன் அரசவையில் உள்ள பாண்டிய மன்னனிடமும் எடுத்துக் கூறுகிறாள் (சிலப். வழக்., வரி.1-7). 
இம்மூன்று வகைப்பட்ட கனவுகளும் எதிர்காலத்தில் நிகழப்போவதை நிகழ்காலத்தில் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.  இது தொன்றுதொட்டு நாட்டுப்புற மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
தீநிமித்தம்
            கனவினைப் போலவே தீநிமித்தம் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகக் கலந்திருக்கிறது.  நடந்திருக்க வேண்டியது நடக்காமல் எதிர்மறையாக இருப்பது தீநிமித்தத்திற்கான அறிகுறிகள்.  இவ்வறிகுறிகள் மக்களை விழிப்படையச் செய்யும் எனலாம்.  வரும்முன் உரைப்பது இத்தீநிமித்தம் ஆகும்.  சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை, மதுரையில் உள்ள ஆயர்சேரியில் காலையில் சில தீய நிமித்தங்கள் மாதரிக்கும் அவளது மகள் ஐயைக்கும் காணப்பட்டதாக எடுத்துரைக்கிறது. 
Ø  குடத்தில் பால் உறையவில்லை.
Ø  காளைகள் கண்ணீர் விட்டன.
Ø  வெண்ணெய் உருகவில்லை.
Ø  ஆட்டுக்குட்டிகள் துள்ளி ஆடவில்லை.
Ø  பசுக்கள் நடுங்கிக் கதறுகின்றன.
Ø  பசுக்களின் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் அறுந்து நிலத்தில் வீழ்ந்தன.
என்பன போன்ற தீநிமித்தங்களை எடுத்துக்காட்டி மதுரைக்கு ஆபத்து வரப்போவதை முன்னரே உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.
தொகுப்புரை
            சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று நாட்டுக்குரிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.  சோழ நாட்டில் தோன்றி, பாண்டிய நாட்டில் வளர்ச்சியுற்று, சேர நாட்டில் நிலைபெற்றது எனலாம்.  இக்காப்பியத்தில் நாட்டு மக்களின் நம்பிக்கைகள் எவ்வளவோ இருப்பினும் பலிக்கொடை, கனவு, தீநிமித்தம் பற்றி மட்டும் இங்கு எடுத்துரைக்கப்படுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக