புறத்திணை ஏழினுள் வாகைத்திணையின்
இலக்கணங்களையும் அவை அமையப் பெற்றிருக்கும் இலக்கண நூல்களையும் வாகைத் துறைகளையும்
பற்றிக் கூறுவதாக ‘’இலக்கணங்களில் வாகைத்திணை’’ என்னும் இவ்வியல் அமைகின்றது.
புறத்திணை கூறும் இலக்கண நூல்கள்
தொல்காப்பியப் புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை,
வீரசோழியம், இலக்கண விளக்கம், முத்துவீரியம், தொன்னூல் விளக்கம், அறுவகை இலக்கணம், சுவாமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் புறத்திணை தொடர்பாகப் பேசப்படுவையாகும்.
தொல்காப்பியர் புறத்திணைகளை வெட்சி, கரந்தை,
வஞ்சி,
உழிஞை,
தும்பை,
வாகை,
காஞ்சி என ஏழாகப் பகுத்ததைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்
ஐயனாரிதனார் வெட்சி,
கரந்தை,
வஞ்சி,
காஞ்சி,
நொச்சி,
உழிஞை,
தும்பை,
வாகை,
பாடாண்,
பொதுவியல்,
கைக்கிளை,
பெருந்திணை எனப் பன்னிரண்டாக எண்ணியிருக்கின்றார்.
தொல்காப்பியத்திற்கு முன்னதான
பன்னிரு புலவர்களின் பன்னிரு படத்தின் பன்னிரு திணைகளைத் தொல்காப்பியர் சுருக்கி ஏழாக்கினார்
என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். பன்னிரு படலத்தின் திணைகளைத் தொல்காப்பியத்திற்குப்
பின்னெழுந்த புறப்பொருள் வெண்பாமாலை "பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு
படத்தைப் பழிப்பின் றுணர்ந்தவர்"1 என்று வெண்பாமாலையின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. புறப்பொருள்
வெண்பாமாலை பன்னிரு படலத்தின் வழிநூல் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர். தொல்காப்பியம் குறித்துள்ள பதினெட்டு துறைகளை புறப்பொருள்
வெண்பாமாலையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஒருதுறை பலதுறைகளாகப் பகுத்துரைக்கப்பட்டுள்ளன. சில தொல்காப்பியத் துறைகள் புறப்பொருள் வெண்பாமாலையில்
வேறுபொருள் குறிக்கின்றன. புறப்பொருள் வெண்பாமாலையில்
புறத்திணைத் துறைகளாக எண்பத்து நான்கு துறைகள் புதியனவாகக் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறியுள்ள புறத்துறைகளுள் பதினேழு
புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்படவில்லை. இவற்றில் உழிஞைத் திணைக்குரிய துறைகள் எட்டும், வாகைத் திணைக்குரிய துறைகள் எட்டும் அடங்கும்.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்
தோன்றியது வீரசோழியம். இந்நூல் பொருட்படலத்தை
நான்கு வகையாகப் பகுக்கிறது. அதாவது, அகப்பொருள்,
அகப்புறப் பொருள், புறப்பொருள், புறப்புறப் பொருள் என அவை அமையும். இவற்றுள் வெட்சி, கரந்தை, வஞ்சி,
குறிஞ்சி,
உழிஞை,
நொச்சி,
தும்பை ஆகிய ஏழும் புறமென்றும்; வாகை, பொதுவியல்,
பாடாண் ஆகிய மூன்றும் புறப்புறமென்றும் பகுக்கப்பெற்றிருப்பதைக்
காணமுடிகிறது. இந்நூல் பதினான்கு வாகைத்துறைகளைக்
கூறுகின்றது. இவற்றில் “ஒற்றுமை” என்னும் புதுத்துறை ஒன்று காணப்படுகிறது. “ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கு” என்னும் தொல்காப்பிய
வாகைத் துறையை இவர் “ஒற்றுமை” என்று கருதி இத்துறையை அமைத்திருக்கவேண்டும் என்கின்றார்
கு.வெ. பாலசுப்பிரமணியன்.2
திருவாரூர் வைத்தியநாத தேசிகரின்
இலக்கண விளக்கம் எனும் நூலானது திணைப் பகுப்பில் தொல்காப்பியத்தையும் துறைப்பகுப்பில்
புறப்பொருள் வெண்பாமாலையையும் அடியொற்றியதாகக் கருதப்படுகிறது.
வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம்
ஐந்திலக்கண நூல்களில் ஒன்றாகும். இவர் இயல்பு, வகை,
பொது,
சிறப்பு,
உவமை,
புறநிலை,
எதிர்நிலை,
கருவி,
காரியம்,
காரகம்,
முன்னவை,
பின்னவை என அகத்திணைகளைப் பன்னிரண்டாக்குவர். அகம் என்பது மனமகிழ்ச்சி என்றும், இதற்கு உணர்ச்சிகள் புறநிலையில் சான்றுகாட்டி விளக்கப்படலே புறத்திணை என்றும் கூறுகின்றார். இப்போக்கு புதுமையானதாகத் தோன்று கின்றது. எனினும், புறப்பொருளாவன ஒழுக்கம்,
வழக்கு,
தண்டம் எனக் கூறும் இவர் மரபுவழி வரும் ஏழு புறத்திணைப் பகுப்பையும்
கைவிடவில்லை.
“வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிகை தும்பையேழ் புறத்திணை”3
எனக் கூறப்பெற்றுள்ளமையைக் காணலாம். இவர்
வாகைத் திணையைக் கூறவில்லை. ஆனால், திரிசிரபுரம் உறையூர் முத்துவீர உபாத்தியாயர் யாத்த முத்துவீரியம் வீரமாமுனிவர்
கூறாத வாகையை இறுதியாக அமைத்து புறத்திணைகள் எட்டாக்குகின்றார்.
“வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிகை தும்பை வாகை
எச்சப் படலமோ டிவையென மொழிப”4
என்னும் நூற்பாவால் இதனை உணரலாம்.
சுவாமிநாதக் கவிராயரின் சுவாமிநாதம்
தொல்காப்பியத்தைப் பின்பற்றி புறத்திணைகள் ஏழினையும், புறப்பொருள்
வெண்பாமாலையைப் பின்பற்றிப் பொதுவியலையும், சிற்றிலக்கியங்களுக்கு உரிய துறைகள் பலவற்றையும் சேர்த்துத் தொண்ணூற்றாறு துறைகளைக்
கூறுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலை கூறும்
சில துறைகளைப் பலவாகப் பகுத்தும் சிற்சில இடங்களில் புறப்பொருள் வெண்பாமாலையோடு வேறுபட்டும்
துறைகளை இந்நூலாசிரியர் அமைத்துள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் “அறுவகை இலக்கணம்” புறத்திணை கூறும் ஓர் இலக்கண நூலாகத்
திகழ்கிறது. இது எழுத்து, சொல்,
பொருள்,
யாப்பு,
அணி,
புலமை என்ற ஆறினையும் எடுத்துக்காட்டுவதாகும். புறப்பொருட் பிரிவில் இவ்வாசிரியர் ஐவகை நிலத்தியல்பு
கூறுவது தொல்காப்பியரின் மரபோடு முற்றிலும் மாறுபடுவதாக அமைந்துள்ளது. நிலமும் பொழுதும் முதலென வகுத்து, அகத்திணையியற்கண் சுட்டும் பண்டைய நெறி முற்றிலும் மாறிவிட்டதை இந்நூலாசிரியர்
குறிப்பிடுகின்றார். போர்க்களம் குறித்த செய்திகளை ஒரே ஒரு நூற்பாவில் தண்டபாணி சுவாமிகள்
சுட்டிக் காட்டுகின்றார்.
“கவந்தமும் காளியும் களியும் அலகைத்
திரளும் ஆடலும் செந்நீர் ஆறு
நிணமிதந் தோடலும் நிறைமணி முடிமுதற்
கலனெலா மிதிபடும் காட்சியும் நரிநாய்
கழுகொடு பருந்தும் காக்கையும் படர்தலும்
வென்றியும் தோல்வியும் வேறுபல் இயல்பும்
பொருகளச் சீரெனப் புகன்றனர் புலவோர்”5
என்று கூறும் நூற்பாவானது பரணி நூல்களில் காணப்படும் களக்காட்சியைப் புனைவது போல
இருக்கின்றதே தவிர போர்க்குரிய திணை நெறிகளைக் கூறுவதாக அமையவில்லை.
“பிறவா வீடே பெறமுயன் றிருப்பார்க்கு
உடம்பும் புறமென உரைத்தனர் உயர்ந்தோர்”6
என்று கூறியிருப்பதைக் காணும்போது சமயவுணர்வு பெருகிய கால கட்டத்தில் அகப்பொருள்
மற்றும் புறப்பொருள் இலக்கணமும் மாற்றமடைந் திருப்பதை இவர் உணர்த்துகின்றார்.
வாகைத்திணை கூறும் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில்
வாகைத்திணை குறித்து நான்கு நூற்பாக்களும்,7 புறப்பொருள் வெண்பாமாலை வாகை இலக்கணமும் வாகைத்துறைகளுமாக முப்பத்து
நான்கு கொளுக்களும்,
அவற்றிற்கான வெண்பாக்களும், ஒழிபுப் பகுதியில்
சிலவும்,8 வீரசோழியம் புறத்திணைகளைக் கூறுமிடத்து வாகைத்திணையை எண்ணுவதும், இலக்கண விளக்கம் வாகைத் திணையை ஒரு நூற்பாவிலும்,9 வாகைத் துறைகளை ஒரு நூற்பாவிலும்,10 தொன்னூல் விளக்கம் அகத்திணை மற்றும் புறத்திணைகளை ஒரே நூற்பாவிலும்,11 முத்துவீரியம் புறத்திணைகளின் வகைகளை ஒரு நூற்பாவிலும்,12 வாகைத்திணையை ஒரு நூற்பாவிலும்,13 சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் வாகைத்
துறைக்குட்பட்ட களக்காட்சி எடுத்துரைக்கும் களவேள்வியை ஒருநூற்பாவிலும்14 கூறப்பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது.
இலக்கண நூல்களில் வாகை பெறும் இடம்
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை,
முத்துவீரியம், இலக்கண விளக்கம் ஆகிய இலக்கண நூல்கள் வாகைத் திணையை தும்பைக்குப்
பின்னர் கூறியிருக்க வீரசோழியம் மட்டும் தும்பைக்கு முன்னர் அமைத்திருக்கின்றது. போர்த்திணைகளின்
ஈற்றில் வாகைத்திணை இடம் பெறல் இயல்பு. ஆனால்
இம்முறை மாற்றம் இலக்கண நூல் பதிப்பாசிரியர் களிடத்தே ஒரு குழப்பத்தை உருவாக்கி இருக்கின்றது.
வாகை- விளக்கம்
‘’வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப’’15
என்று வாகையின் பொது இலக்கணத்தைத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. இதற்குப் பொருள்கூறப் புகுந்த உரையாசிரியர்கள் பல்வேறு
விளக்கங்களைத் தருகின்றனர்.
‘’அதுகேடில்லாத
கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ளே இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல்’’16 என்று இளம்பூரணரும், ‘’வலியும் வருத்தமுமின்றி
இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தாரும் அறிவரும் தாபதர் முதலியோருந் தம்முடைய
கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப் படுத்தலென்று
கூறுவர் ஆசிரியர் என்றவாறு?’’17 என்று நச்சினார்க்கினியரும், குற்றமற்ற
கோட்பாட்டளவில் மக்கள் அவரவர் துறையில் வகைபட விஞ்சும் விறலை வாகையென்பர் புறநூற்புலவர். இழிவொடு பழிபடு மெல்லாத் துறையும் வெறுத்து விலக்க
வேண்டுமாதலின்,
அவற்றை நீக்கத் தாவில் கொள்கை என்றடைகொடுத்துப் புரை தீர் திறலெதுவும்
வாகைக் குரித்தென வரையறுத்துத் தெளித்த செவ்வி வியத்தற் குரியது’’18 என்று டாக்டர் பாரதியாரும், ‘’குற்றமற்ற
கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினின்றும்
வேறுபடமிகுத்து மேம்படுதல் வாகைத்திணையாகிய ஒழுகலாறாம்’’19 என்று வெள்ளைவாரணாரும், ‘’குறையாத முயற்சியையுடைய
ஒவ்வொருவருடைய தொழில்களையும்,
ஒழுக்கத்தையும் பல கூறுபடச் சிறப்பித்துக் கூறுதல் வாகைத்திணை. தொழிலையும் ஒழுக்கத்தையும் சிறப்பித்தல் அவற்றின்
வெற்றியேயாகலின் வாகையென்பது வெற்றியாயிற்று’’20 என்று புலவர் குழந்தையும் கூறுகின்றனர்.
மேலும், ‘’பிறர்க்குத் தீங்கு தராது,
தமக்குரிய திறன்களை உயர்நிலைகளில் வளர்த்துக் கொள்வதே வாகை எனப்படும்’’21 என்றும்,
தாம் கொண்டுள்ள வாழ்வியற் குறிக்கோள் குற்றமற்றதாக இருத்தல்
வேண்டும்’’22 என்றும் டாக்டர் இலக்குவனும், ‘’தாவில் கொள்கைத்
தத்தம் கூற்றை என்று எல்லா மாந்தர்க்கும் பொதுப்படக் கூறினார். யாராயினும் அவர் தொழில் மேம்பாடு வாகை எனப்படும். மிகுதிப்படுத்தல் என்ற பிற வினையால் பிறர் உணருமாறு
பிறரினும் மேம்படத் தன் ஆற்றலை வெளிப்படக் காட்டல் வேண்டும் என்பது பொருளாயிற்று’’23 என்று டாக்டர் வ.சுப. மாணிக்கமும், ‘’வாகையென்பது
கொள்கைகள் ஆற்றல் மிகுந்து வெற்றியுறுதலைக்
குறிக்கும். எனவே, கொள்கைகளின்
வெற்றிப்பேறே வாகைத் திணைக்கண் எடுத்து விளக்கற்பாலதாம். கொள்கைகளும் அக்கொள்கைகளையுடைய ஒழுக்கங்களுமான மக்களின்
நிகழ்ச்சி இருவகைப்படும். இவ்விரண்டனுள் கொள்கைகளே
முதன்மையாவன’’24 என்று இளவழகனாரும், ‘’வெற்றியாவது
தனக்கு ஒத்தது என ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கையில் ஒரு ஒழுக்கத்தில் அக்கொள்கையும் ஒழுக்கமும்
உடைய பிறரைக் காட்டிலும் தானே உயர்ந்தவனாம் என்ற சிறப்புடையமையாகும்’’25 என்று புலவர் கோவிந்தனும், ‘’கொள்கைப்
பிடிப்புடன் ஒரு கூற்றில் (தன்மையில், திறமையில்) தன் இன்றைய நிலையினின்றும் முழுநிறைவை இலக்காகக்
கொண்டு ஆள்வினையால் மிகுதியாதல் வாகையாகும்’’26 என்று கோ. சிவகுருநாதனும் கூறுகின்றனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
வாகைத் திணையானது,
கொள்கைப் பிடிப்புடைய ஒருவன் தன்னுடைய கூற்றில் மேன்மையடைதலும், அதைப் பிறர் புகழப்படுதலுக்கு உரிதலுமாகவும் அமைவது வாகைத்திணை என்றாகிறது.
தொல்காப்பியக் கருத்திணை அடியொற்றி
இலக்கண விளக்கம்,
‘’வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப’’27
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’அலைகடற் றானை யரசட் டிறையோ
னிகல்புனை வாகை சூடலும்’’28
என்றும் குறிப்பிட்டுள்ளது. புறப்பொருள்
வெண்பாமாலையானது,
‘’சூடினான் வாகைச் சுடர்தெரியல் சூடுதலும்
பாடினார் வெல்புகழைப் பல்புலவர் - கூடார்
உடல்வேல் அழுவத் தொளிதிகழும் பைம்பூண்
அடல்வேந்தன் அட்டார்த் தரசு’’29
என்றும்,
முத்துவீரியமானது,
‘’மாற்றா ரோட வருத்தி வெல்வது
வாகை யெனப்பெயர் வைக்கப் படுமே’’30
என்றும் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.
வாகை வகைகள்
‘’அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையால்
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்’’31
என்னும் நூற்பாவைப் பார்க்கும் போது தன்மை நோக்கில் ஒருமை நடையைக் கையாளும் தொல்காப்பியர்
மாந்தர்களைக் கூறும்போது பன்மை நடையைக் கையாண்டிருப்பது புலப்படுகின்றது. ஆக, ஒரு நிலையில் மட்டும் மேலோங்கும் மாந்தரை முழுமாந்தர் என்று
ஏற்றுக்கொள்வதில்லை. பல நிலைகளில் உயர்ந்து
நின்று அப்பல நிலைகளில் ஒரு நிலையில் மிக்குயர்ந்து நிற்றலைப் போற்றுவதே வாகைத்திணை
ஆகும்.
ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல்,
வேட்பித்தல், ஈதல்,
ஏற்றல் ஆகிய ஆறும் அந்தணர்க்கு (பார்ப்பனர்) உரியனவாகவும்; ஓதல்,
வேட்டல்,
ஈதல்,
படை வழங்குதல், குடியோம்பல் ஆகிய ஐந்தும் அரசர்க்குரியனவாகவும்; ஓதல்,
வேட்டல்,
ஈதல்,
உழவு,
வாணிகம்,
நிரையோம்பல் ஆகிய ஆறும் வணிகர்க்குரியனவாகவும்; உழவு,
உழவொழிந்ததொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு,
வேதமொழிந்த கல்வி என்ற ஆறும் வேளாளர்க்குரியனவாகவும்; ஆகாயத்தில் நிகழக்கூடிய நுண்ணிய செய்திகளான வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும்
மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்து மூவகைக் காலமும் கூறுவது அறிவனாகிய
கணியனுக்குரியனவாகவும்;
ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்டபம் பொறுத்தல், இடம் வரையறுத்தல்,
ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு
மொழிதல்,
வாய்வாளாமை ஆகிய எட்டும்
தவஞ்செய்வோர்க்குரியனவாகவும்;
விற்போர்,
வாள்போர்,
வேற்போர்,
தாக்கும் போர், தடுக்கும் போர் ஆகிய போர்களைப் புரிவது பொருநர் ஆகிய வீரர்க்குரியனவாகவும்; பார்ப்பனர்,
அரசர்,
வணிகர் மற்றும் வேளாளர், அறிவர், தாபதர்,
பொருநர் ஆகியோரின் தொழில்களன்றி பிறவகை தொழில்களைச் செய்வோரை
ஏழாவது வகையாகவும் கொண்டு மாந்தரை வகைப்படுத்திப் பார்த்திருக்கின்றனர். இவ்வேழு வகை மாந்தரின் குணங்களில் மிக்குயர்ந்த
குணத்தைப் பற்றிக் கூறுவதே வாகையின் வகைகளாக அமைகின்றது.
தொல்காப்பியத்தில் வாகைக்குரிய
மாந்தர்களாக பார்ப்பர்,
அரசர்,
வணிகர்,
வேளாளர்,
அறிவர்,
தாபதர்,
பொருநர் எனப் பொதுவாகக் குறிப்பிட்டதைப் புறப்பொருள் வெண்பாமாலையானது
இம்மாந்தர்களைத் துறைவகைக்குள் அடக்கிக் காண்கின்றது. அதாவது, அரச வாகை, பார்ப்பன வாகை,
வேளாண் வாகை, வணிக வாகை,
அறிவன் வாகை, தாபத வாகை,
பொருந வாகை எனக் காண்கின்றது.
வாகைத் துறைகள்
வாகைத் துறைகளைப் பற்றி வாகைத்திணை
கூறும் இலக்கண நூல்கள் அனைத்திலும் ஒருசேர இடம்பெறவில்லை. சில நூல்களில் கூறப்பெற்ற
வாகைத் துறைகள் பிற இலக்கண நூல்களில் சில விடுத்தும் சில புதின சேர்ந்தும் சில வேறு
பெயர் பெற்றும் காணப்படுகின்றன.
தொல்காப்பியத்தில் கூதிர் மற்றும் வேனில் பாசறைகள், களவழி,
முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பெரும்பகை தாங்கும் வேல்,
அரும்பகை தாங்கும் ஆற்றல், வல்லாண் பக்கம், அவிப்பலி,
ஒல்லார் இடவயின் புல்லியபாங்கு, பகட்டானும்
ஆவினானும் துகள்தீர்ந்த சான்றோர் பக்கம், கடிமனை நீத்தபால்/கட்டில் நீத்தபால், எட்டுவகை நுதலிய அவையம்,
கட்டமை ஒழுக்கம், வண்புகழ்க்கொடை, பிழைத்தோர்த்தாங்கும் காவல், பொருளொடு
புணர்ந்த பக்கம்,
அருளொடு புணர்ந்த அகற்சி, காமம் நீத்தபால்
ஆகிய பதினெட்டு துறைகளும்;
புறப்பொருள் வெண்பாமாலையில் கூதிர் பாசறை , வாடை பாசறை,
வேனில் பாசறை, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, வல்லாண் பக்கம்,
அவிப்பலி,
வேளாண் வாகை, வாணிக வாகை, அவைய முல்லை, பொருளொடு புணர்ந்த பக்கம், அருளொடு புணர்ந்த
அகற்சி,
வாகையரவம்,
அரசவாகை,
முரசவாகை,
களவேள்வி,
பார்ப்பன வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை,
அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, காவன் முல்லை, பேராண் முல்லை, மறமுல்லை,
குடைமுல்லை, கண்படைநிலை, சால்பு முல்லை, கிணைநிலை ஆகிய முப்பத்திரண்டு துறைகள்32 இடம்பெற்றிருக்கின்றன,
பன்னிரு படலத்தில் கணிவன் முல்லை என்ற துறை மட்டும் காணப்படுகிறது.
வீரசோழியத்தில் நாற்குலப் பக்கம், முக்காலம், களவழி,
குரவை,
ஆற்றல்,
வல்லாண் பக்கம், அரும்பொருள், காவல்,
துறவு,
கொடை,
படையாளர் பக்கம், வேட்கையாளர் பக்கம், மேன்மை, ஒற்றுமை ஆகிய பதினான்கு துறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை வீரசோழியம்,
"நாற் குலப்பக்கம் முக்காலம் களவழி நற்குரவை
ஆற்றல் வல்லாண்
வேட்கையாளர்பக்கம் மேன்மை அரும்பொருளே
தோற்றிய காவல்
துறவு கொடை படையாளர் பக்கம்
மாற்றிய ஒற்றுமையோடு மற்றும் இவை வாகையிலே"
(வீரசோழியம்,
நூ.102)
புறப்பொருள் வெண்பாமாலையில் வாகை அரவம், அரச வாகை, முரச வாகை,
மறக்களவழி,
களவேள்வி,
முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை,
கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின்முல்லை, ஏறாண் முல்லை, வல்லாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மறமுல்லை,
குடைமுல்லை, கண்படை நிலை, அவிப்பலி,
சால்பு முல்லை, கிணைநிலை,
பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் ஆகிய
32 துறைகளும்,33 ஒழிபுப் பகுதியில் வாணிகவென்றி, மல்வென்றி, உழவன்வென்றி,
ஏறுகொள் வென்றி, கோழிவென்றி, தகர்வென்றி, யானைவென்றி, பூழ்வென்றி, சிவல்வென்றி, கிளிவென்றி, பூவைவென்றி, குதிரைவென்றி, தேர்வென்றி, யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல்வென்றி, பாடல்வென்றி, பிடிவென்றி ஆகிய பதினெட்டு ஒழிபுத் துறைகளும்34 இடம்பெற்றிருக்கின்றன.
பகை அரசனைக் கொன்று பகையை ஒழித்துவிடும் வெற்றியே வாகை எனவும், போர் முடித்து வாகைப்பூ சூடுதலும், மாயையினையும் கச்சினையும்
கழலினையும் இனி அணிந்து கொள்வோம் என்றும் கூறுதலும், சிறந்த அரசனது
தன்மையைக் கூறும் அரச வாகையும்,
முரசினுடைய தன்மையைக் கூறும் முரசு நிலையும், அரசனை உழவன் என்று சிறப்பித்துக் கூறும் மறக்களவேள்வியும், போர்க்களத்தில் பேய்கள் கூடுதலும், பார்ப்பாரது தன்மைக் கூறும் பார்ப்பன வாகையும், வாணிக வாகையும்,
வேளாளர் வாகையும், உன்புகழ் மிகுதியாக இருப்பதனால் பிறரை இகழாமல் இரு என்று கூறும்
பொருந வாகையும்,
மூன்று கால நிகழ்சி¬யும் அறிந்து
சொல்லும் அறிஞரின் தன்மையைக் கூறும் அறிஞ வாகையும், தபோதன வேடத்தார்
தன்மையைக் கூறும் தாபத வாகையும்,
கூதிர் காலத்துப் பிரிவாற்றாமையால் வருந்தும் கூதிர்ப்பாசறையும், வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் வாடைப் பாசறையும், அரசனுடைய
தன்மையைக் கூறும் அரச முல்லையும்,
பார்ப்பன முல்லையும், எட்டுவகை
நெறியைப் பின்பற்றி நடுவு சொல்லும் சான்றோர் தன்மையைக் கூறும் அவைய முல்லையும், சோதிடரால் வல்லவனது கீர்த்தியைக் கூறும் கணிவன் வாகையும், வீரத்தின் சிறப்பைச் சிறிய பேதையர்க்கு எடுத்துக் கூறும் மூதின் முல்லையும், இடத்தினையும் இயல்பினையும் சொல்லி அரசனை உயர்த்திக் கூறும் வல்லாண் முல்லையும், அரசன் பாதுகாத்தலைச் சிறப்பிக்கும் காவன்முல்லையும், அரசன் பாதுகாத்தலின்
தகுதியைக் கூறுதலும்,
அரசன் போர்க்களத்தைக் கொண்ட சிறப்பைக் கூறும் பேராண் முல்லையும், மன்னன் கொடுத்ததை விரும்பாத வீரனின் தன்மையைக் கூறும் மறமுல்லையும், குடையைப் புகழும் குடை முல்லையும், போரில் அவிப்பலி கொடுத்தலையும், சான்றோரின்
பெருமையைக் கூறுதலும்,
தத்துவத்தின் பயன் உணர்ந்து மெய்ப்பொருள் அறிதலும், உலகத்துத் துயரத்தை உணர்ந்து அருள் காரணமாகப் பற்றை ஒழித்தலும் ஆகிய முப்பத்தொரு
வாகைத் துறைகளைச் சுவாமிநாதம்35 குறிப்பிடுகின்றது. அதாவது,
". . . . . .
. . . . . . . . . . . . . பாலைக்கு
ஆள்வுறமே
வாகைபகை முடித்திடும்வெற் றியதாம்;
அமர்முடித்து வாகைசூடி தல்இகன்றோர்
கண்ணி
தாள்கழல்கச்சு
இனிப்புனைவோம் எனல் அரசவாகை
முரசுநிலை, இறையுழவன் எனும் மறக்கள வழியே.
களத்தில்பேய்க்
கூட்டர்பார்ப் பார்வாகை,
வணிகர்
காண்வாகை, வேளாளர் வாகையாரை யுஞ்சீர்
வளத்தினால்இக
ழேல்என்றி டும்பொருந வாகை,
மரபுஅறிஞர் வாகைதா பதவாகை, கூதிர்
துளித்தபாச
றைவாடைப் பாசறைவேந்து இயல்பு
சொல்அரச முல்லைபார்ப் பான்முல்லை, எட்டாய்த்
தெளிக்கும்
அவைமுல்லைகணி வன்வாகை மறத்தைச்
சிறியபேதை யர்க்கு உணர்த்து(ம்)
மூதின்முல்லை இயல்பே.
இயல்புஇடஞ்சொற்
றிறையைஉயர்த் தியவல்லாண் முல்லை
இறைகாவன் முல்லைகா வல்தகுதி கூறல்
உயிர்இறைவன்
களங்கொள்பே ராண்முல்லை,
கொடுத்து
உவந்திடாம றமுல்லை, குடைபுகழு முல்லை
துயிர்நிலைபோர்
அவிகொடுத்தல்,
சால்புமுல்லை, கிணைவன்
சூழ்ந்துளவற் புகழ்ந்திடுகள்
வழியேகத் துவத்தின்
பயனுணர்தல், உணர்ந்து அருளால் நீங்கண்முப்பா னொன்னும்
பரித்தவாகைத் திணைக்குஎன்று ரைப்பர்பெரி
யோரே."
என்றவாறு சுவாமிநாதம் சுட்டுகின்றது.
தொல்காப்பியத்தில் காணப்பெறாத
சில துறைகள் புறப்பொருள் வெண்பாமாலையிலும், தொல்காப்பியத்திலும்
புறப்பொருள் வெண்பா மாலையிலும் கூறப்பெறாத சில துறைகள் வீரசோழியத்திலும் குறிப்பிடப்பெற்றுள்ளன. தொல்காப்பியம், புறப்பொருள்
வெண்பாமாலை ஆகியவற்றில் மட்டும் உள்ள சில துறைகள் காணப்படுகின்றன. புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பெற்ற அனைத்துத்
துறைகளும் இலக்கண விளக்கத்தில் கூறப்பெற்றுள்ளன. புறப்பொருள் வெண்பா மாலையிலும் இலக்கண
விளக்கத்திலும் ஒருசேரக் கூறப்பெற்ற வாகைத் துறைகள் எளிய நடையில் சாமிக்கவிராயரின்
சுவாமிநாதத்தில் கூறப்பெற்றிருக்கின்றன. ஆகப் புறப்பொருள்வெண்பாமாலை, இலக்கண விளக்கம்,
சுவாமிநாதம் ஆகிய மூன்று இலக்கண நூல்களிலும் கூறப்பெறும் வாகைத்துறைகள்
ஒரே தன்மை கொண்டனவாக அமைந்திருக்கின்றன எனலாம். வாகைத்துறை வேறுபாடு என்பது தொல்காப்பியம், வீரசோழியம்,
ஒத்த மூன்று இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கண விளக்கம்,
சுவாமிநாதம் ஆகியவற்றிற்கிடையே விடுபாடும் சேர்க்கையும் மாற்றமும்
நிகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
அரச முல்லை
பெரும்பகையை வருத்தும் சிவந்த
சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய நிலவுலகத்தைக் காக்கும் அரசனுடைய தன்மையை
இத்துறை எடுத்துக் கூறுகின்றது. அதாவது, மன்னனது இயல்புமிகுதியைக் கூறுவதாக இத்துறை அமைகின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி
மயிர்க்கண் முரச முழங்க - வுயிர்க்கெல்லா
நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
காவலன் சேறல் கடன்”36
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’தண்ணளி பெருகத் தரையகம் புரக்கு
மண்ணலியல் புரைத்த வரச முல்லையு’’37
என்றும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர்
சுட்டிய "ஐவகை மரபின் அரசர் பக்கம்" என்ற அரசர்தம் வகைப்பாட்டினை புறப்பொருள்
வெண்பாமாலை ஆசிரியரும்,
இலக்கண விளக்க ஆசிரியரும் அரச முல்லையாகவும் அரச வாகையாகவும்
குறிப்பிட்டிருக்கின்றனர். தொல்காப்பியர் சுட்டிய
அந்தணர்,
அரசர்,
வணிகர்,
வேளாளர் ஆகியோர்களை வீரசோழியம் "நாற்குலப் பக்கம்"38 என்று குறிப்பிடுகின்றது.
அரசவாகை
நுகத்திற் பகலாணி போன்ற நடுநிலைச்
சொல்லினையுடைய மாறுபாட்டாற் சிறந்த மன்னனது தன்மையைச் சொல்வது இத்துறை. இதனைப் புறப்பொருள்
வெண்பாமாலை,
‘’காவல் அமைந்தான் கடலுலகங் காவலாய்
ஆவல் அறியா துயிர்க்குவகை - மேவருஞ்சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு
வெந்திறல் தண்ணளியெம் வேந்து’’39
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’ஐவகை மரபி
னரச வாகை’’40
என்றும் கூறக் காணலாம். தொல்காப்பியர்
கூறிய "ஐவகை மரபின் அரசர் பக்கம்" என்பதின் உட்கூறாக இத்துறையை ஐயனாரிதனார்
கையாண்டிருக்கின்றார்.
அரும்பகை தாங்கும் ஆற்றல்
படைவீரர்களின் பல்வேறு ஆற்றல்களான
படைக்கலம் அற்றவழிச் சுற்றுச் சூழலில் படைக்கலம் பெறும் உற்றுழி அறிவு, பகைவர் படைக்கலம் தடுக்கும் காப்பு, படைக்கலமற்றவழி பாழ்கொளும் உடல் வன்மை, தோல்வி கண்டு பின்னிடாத உளஉரன், யானை குதிரை முதலியன ஊர்ந்து போரிடும் முறை முதலானவற்றை விளக்குவது
இத்துறை. அதாவது, படைவீரரின்
முழுமையான ஆற்றலை விளக்குவதாக இத்துறை அமைந்திருக்கும். இத்துறையினைத் தொல்காப்பியம்,
‘’அரும்பகை தாங்கும் ஆற்ற லானும்’’41
என்று சுட்ட ஏனைய இலக்கண நூல்கள் சுட்டப்பெறாமை உணரத்தகும்.
அருளொடு புணர்ந்த அகற்சி
முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப்
பார்த்துப் பற்றையொழித்ததைக் கூறுவது இத்துறை.
உள்ளத்துணர்வு கொண்டு இறைவனைத் தெளிவதும், இவ்வுலக வாழ்க்கையில்
நிகழும் துன்பத்தை உணர்ந்து அதன்கட் பற்று நீங்கியதையும் இத்துறை விளக்கும். தொல்காப்பியர் அருளொடு புணர்ந்த அகற்சியை42 ஏனைய இரு இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பா மாலை,
‘’கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை
யியக்கிய யாக்கை யிறாமுன் - மயக்கிய
பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை
யுட்படாம் போத லுறும்’’43
என்றும்,
இலக்கண விளக்கம்
‘’கவ்வைநோ யாக்கை கழியுமுன் னுலகத்
தவ்விய னோக்கி யருளொடு நீங்கலும்’’44
என்றும் கூறுவதால் அருளொடு நீங்கல் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
அவிப்பலி கொடுத்தல்
தெளிந்த வாட்பூசலிடத்துச் செஞ்சோற்றுக்
கடனன்றி நினையாத மறவர் உயிரைப் பலியாகக் கொடுத்ததை இத்துறை எடுத்துரைக்கும். அதாவது, போர் தொடங்குவதற்கு
முன் பகைவர் நாணும்படியும்,
உயர்ந்தோர் பாராட்டும் படியும் இதைச் செய்யவில்லை யானால் இன்னதாக
ஆவேன் என்று தான் கூறிய வஞ்சிய மொழியை நிலைநாட்டும் பொருட்டுத் தொன்று தொட்டுவரும்
தன் உயிரைப் போர்க்களத்தில் உயிரைப் பலியாகக் கொடுக்கும் தன்மையை இத்துறை விளக்கும். இதுவொரு வகையான போர்ச்சாவு பற்றியதாகும். பகைவரின் கருவி பட்டுச் சாவதினும் வேறாவது. வெளிப்படப் போர்க்களத்தில் பொரும் மறவர் வெற்றியும்
பெறாது வீரச்சாவும் பெறாது ஒரு நிலையும் அமைதல் கூடும். அப்பொழுது பகைவர்களும் வெட்குற உயிர் போற்றாது தீப்பாய்ந்து
உயிர்விடும் வீரரும் உளர். இதனைத் தொல்காப்பியம்,
‘’ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்த்துத்
தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி
யானும்’’45
என்றும்,
புறப்பொருள் வெண்பாமாலை,
‘’சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலு
ளாருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
வீரியரெய் தற்பால் வீடு’’46
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’அடல்தெழு
மறவ ரவிப்பலி கொடுத்தலும்’’47
என்றும் கூறுவதைக் காணலாம்.
அவைய வாகை
அவை மாந்தரின் இயல்புகளான குடிப்பிறப்பு, கல்வி,
ஒழுக்கம்,
வாய்மை,
தூய்மை,
நடுவுநிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை என்ற எட்டுப் பண்புகளில் மேம்பட்டு விளங்குவதைக் குறிப்பதாக
இத்துறை அமைகிறது. இதனைத் தொல்காப்பியம்,
‘’எட்டுவகை
நுதலிய அவையகத் தானும்’’48
என்றும்,
புறப்பொருள் வெண்பாமாலை,
‘’தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை யூழிவை தோலாத் - தொடைவேட்
டழிபட லாற்ற லறிமுறையென் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை’’
‘’குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை
நடுச்சொல்லு நல்லணி யாக்கங் - கெடுக்கு
மழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டு
மிழுக்கா வவையின்க ணெட்டு’’49
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’எட்டுவகை
நுதலிய வவைய முல்லையும்’’50
என்றும் கூறக் காணலாம்,
இவற்றைப் பார்க்கும்போது தொல்காப்பியர் கூறும் அவை கற்றோர் அவையைக்
கூறும் அவைய வாகை என்றும்,
புறப்பொருள் வெண்பாமாலை மற்றும் இலக்கண விளக்கம் கூறும் அவை
நடுவுநிலைமை கூறும் அவைக்களத்துச் சான்றோர் தன்மையைச் சொல்லும் அவையமுல்லை என்றும்
வேறுபட்டு நிற்பதைக் காணமுடிகிறது.
அறிவன் வாகை
தன் கீர்த்தியைச் சொல்ல மூன்று
கால நிகழ்ச்சியையும் அறியும் அவன் தன்மையைச் சொல்வது ‘அறிவன் வாகை’ ஆகும். இதனை வீரசோழியம்
"முக்காலம்" என்று சுட்டுகின்றது. இறப்பு நிகழ்வு எதிர்வென்றும் முக்கால
நிகழச்சிகளையும் உணர்ந்து கூறும் அறிவனுடைய தன்மையைக் கூறுவதாக இத்துறை அமையும் எனலாம்.
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போ
லம்மூன்று முற்ற வறிதலாற் - றம்மி
னுறழா மயங்கி யுறழினு மென்றும்
பிறழா பெரியார்வாய்ச் சொல்”51
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’முக்கால நிகழ்வு முறையுளி யறியுந்
தக்கோ னிலைபுக லறிவன் வாகையு’’52
என்றும் குறிப்பிடக் காணலாம்..
ஏறாண் முல்லை
எதிரி இன்றியே ஓயச் சினமிகும் மேன்மேலேறா நின்ற ஆண்மைத் தன்மையினை
உடைய குடியொழுக்கத்தினை உயர்த்திச் சொல்வது ‘ஏறாண் முல்லை’ ஆகும். அதாவது, மறப்பண்பு
மேலும் மேலும் வளரும் இயல்புடைய மறக்குடியின் ஒழுக்கத்தை எழுத்துக் கூறுவதாக இத்துறை
அமையும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் - பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
யெய்போற் கிடந்தானென் னேறு’’53
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’அருஞ்சமம் வழிவழி யாற்றியே றுண்ட
விருங்குடி மறம்புக லேறாண் முல்லையும்’’54
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியர்
சுட்டிய "வல்லாண் பக்கம்" என்பதின் ஒரு கூறாக இவ் ஏறாண் முல்லை அமைந்திருக்கின்றது
எனலாம். தொல்காப்பியம் சுட்டியவாறே வீரசோழயமும் "வல்லாண் பக்கம்" என்று குறிப்பிடக்
காணலாம்.
ஒல்லார் இடவயின் புல்லியபாங்கு
பகைவரிடம் போர் ஒழிவதை விளக்குவதே
இத்துறை. அதாவது, பகைவராயினும்
அவர் சுற்றத்தாராயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போன்றவற்றை வேண்டியக்கால்
அவர்க்கு அவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலாகும். இதனைத் தொல்காப்பியம்,
‘’ஒல்லார் இடவயிற்
புல்லிய பாங்கினும்’’55
என்று கூறுகின்றது.
ஒற்றுமை
அலைபாயும் மனத்தை ஒருவழிப்படுத்துவதை
சுவாமிநாதம் ஒற்றுமை என்ற துறையாகச் சுட்டுகின்றது. இதற்கு உரை வரைந்த பெருந்தேவனார், "சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறுபாட்டிற் கழிமனத்தை ஒற்றுமை கொள்ளல்" என்கின்றார். இத்துறை சுவாமிநாதத்தில் மட்டுமே சுட்டப்பெறுவது
குறிப்பிடத்தக்கது.
கடிமனை நீத்தபால்/கட்டில் நீத்தபால்
பிறன்மனை நயவாய் பேராண்மையை இத்துறை
சுட்டுகின்றது. இதனைத் தொல்காப்பியம்,
‘’கடிமனை நீத்த பாலின் கண்ணும்
எட்டுவகை நுதலிய அவையகத் தானும்’’56
என்று கூறுகின்றது. இத்துறையைக் கட்டில்
நீத்தபால் என்றும் அழைப்பர். அரசன் கட்டில்
துறப்பது இத்துறை கருத்தாகும்.
கட்டமை ஒழுக்கம்
புலன்வழி வாழும் இல்லற வாழ்வில்
வாழ்க்கையைப் புலன் ஆட்சி செய்யாதவாறு கட்டுப்படுத்துவது ‘கட்டமை ஒழுக்கம்’ என்னும்
இத்துறையின் கருத்தாக அமைகிறது. இதனைத் தொல்காப்பியம்,
‘’கட்டமை ஒழுக்கத்துக்
கண்ணுமை யானும்’’57
என்று கூறுகின்றது.
கணிவன் முல்லை
நிச்சயித்துப் பலவுமறியும் பழைய
கேள்வி ஞானத்தினையுடைய சோதிட நூல் வல்லவனது கீர்த்தியைக் கூறுவது ‘கணிவன் முல்லை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி’’58
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’பனியும் வெயிலுங் கூதிரு மயர்வுந்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்தித்
துணிவற் றகழ்ந்த கணிவன் முல்லையும்’’59
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியர்
சுட்டிய "மறுவில் செய்தி ... ... அறிவன்தேயம்"
என்னும் தொடருக்கு உரையாசிரியர்கள் உரை வரையும் போது தொல்காப்பியர் சுட்டிய அறிவன்
முல்லையே ஐயனாரிதனாரின் கணிவன் முல்லை என்றும் குறிப்பிடுகின்றனர். இது ஆய்வுக்குரிய ஒரு பகுதியாகத் திகழ்கின்றது.
கண்படை நிலை
போரில் வெற்றி கண்ட அரசன் துயில்கொள்வதைக்
கூறுவது ‘கண்படை நிலை’ ஆகும். இதனைப் புறப்பொருள்
வெண்பாமாலை,
‘’கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும்
வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தர்க்குப் - பொங்கு
புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக்
கனலா துயிலேற்ற கண்’’60
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’கண்படை நிலையும்’’61
என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.
களவழி
ஏர்த்தொழில் புரிபவராகிய உழவர்
விளையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும்
வென்றி குறித்தமைவது ‘களவழி’ எனும் துறையாகும்.
இதனைத் தொல்காப்பியம்,
‘’ஏரோர் களவழி அன்றித் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந்’’62
என்று குறிப்பிடுகின்றது. வீரசோழியம் "களவழி" என்கின்றது. புறப்பொருள் வெண்பாமாலை,
‘’பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
யகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட
வின்றுபோ மெங்கட் கிடர்’’63
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’மலிவய லுழவனை வறுமைதீர் பெருவளம்
பொலிகெனக் கிணைவன் புகழ்ந்த களவழியு’’64
என்றும் கூறுவதைக் காணும்போது தொல்காப்பியம் சுட்டிய களவழியை மறக்களவழி, களவேள்வி என்ற துறைகளாகக் காண்கின்றன. செங்கோண் மன்னனை உழவனாக உருவகித்துப் பாராட்டுவது
மறக்களவழி என்றும்,
வாகை சூடிய வேந்தன் களவேள்வி செய்ததைக் களவேள்வி என்றும் குறிப்பிடுவர்.
முழவுபோலத் திரண்ட புயத்தினையுடையானை
உழும் வேளாளனாக மிகுத்துச் சொல்வது ‘மறக்களவழி’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ் விளைக்கும் - செஞ்சுடர்வேற்
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் நல்கலான்
எங்கட் கடையா இடர்’’65
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’மன்னனை யுழவனெனு
மறக்கள வழியும்’’66
என்றும் கூறக் காணலாம்.
களவேள்வி
சொல்லும் வலியினையுடைய பேய், வயிறார உண்ணப் பரந்த வலியினையுடையான் களவேள்வி வேட்டதைக் குறிப்பதாக ‘களவேள்வி’
எனும் துறை அமைந்துள்ளது. இதனைப் புறப்பொருள்
வெண்பாமாலை,
‘’பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடிப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து’’67
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’அன்னவ னணங்கா
ரடுகளம் வேட்டலும்’’68
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியரின்
"ஏரோர் களவழி"யின் ஒரு கூறாக களவேள்வி அமைந்திருக்கின்றது.
காமம் நீத்தபால்
காமம் நீக்கி வாழும் நிலையைக்
குறிப்பதாக இத்துறை அமைகிறது. காமம் நீக்கி வாழ்வது இல்லறத்திற்கில்லை. ஆதலால் இத்துறை துறவுக்கு உரியதாகலாம். இதனைத் தொல்காப்பியம்,
‘’காமம் நீத்த
பாலி னானும்’’69
என்கின்றது.
குடைபுகழ் முல்லை
பூசலைத் தடுத்து உரத்தாலுயர்ந்த
தோளினையுடைய மட்டஞ் செய்த மலையான் குடையைப் புகழ்வது ‘குடைபுகழ் முல்லை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டந்
தாய புகழான் றனிக்குடைக்குத் - தோய
மெதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு’’70
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’குடைபுகழ்
முல்லையுங்’’71
என்றும் குறிப்பிடக் காணலாம்.
கூதிர், வாடை, வேனிற் பாசறைகள்
கூதிர்(குளிர்), வேனிற் (கோடை) காலத்திலும் பாசறையில் போர் மேற்கொண்ட காதலுடன் தலைவன் தங்குவதை
இத்துறைகள் குறிப்பிடுகின்றன. இது தலைவனின் உளத்திண்மையைக் காட்டுவதாக அமைகின்றது.
இத்துறைப் பொருள் ஒன்றாயினும் காலத்தின் அடிப்படையில் கூதிர், வாடை,
வேனில் என மூன்றாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் கூதிர், வேனில் என்ற
இரண்டை மட்டும் "இருவகைப் பாசறை"72 என்று குறிப்பிட புறப்பொருள் வெண்பாமாலை,
‘’கவலை மறுகிற் கடுங்கண் மறவ
குவலைசெய் கூரை யொடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாண் முயக்கு’’
‘’வாடை நலிய வடிக்கணா டோணசைஇ
யோடை மழகளிற்றா னுள்ளான்கொல் - கோடன்
முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
பகையொடு பாசறையு ளான்’’73
என்று குறிப்பிடுவதையும்,
இலக்கண விளக்கம்
‘’கூதிர் வாடை யென்றிரு பாசறைக்
காதலி னொன்றிக் கண்ணிய நிலைமையுந்’’74
என்று குறிப்பிடுவதையும் காணும்போது கூதிர் பாசறையை கூதிர், வாடை என இரண்டாகப் பிரித்து பாசறையை மூன்றாக்கிக் காண்கின்றன எனலாம்.
சால்பு முல்லை
ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்த
சான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்வது ‘சால்பு முல்லை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’உறையார் விசும்பி னுவாமதி போல
நிறையா நிலவுத லன்றிக் - குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் வான்மையார் சால்பு’’75
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’வான்றோய் புகழொடு வயங்குமொரு நிலைமைச்
சான்றோர் நெறிபுகல் சால்பு முல்லையு’’76
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியர்
சுட்டும் "சான்றோர் பக்கம்" என்னும் துறையானது சால்பு முல்லை என்ற துறையுடன்
தொடர்புபடுத்திக் காணத்தக்க வகையில் அமைந்திருக்கிறது எனலாம்.
தாபத வாகை
தபோதன வேடத்தார் புண்ணியத்தோடு
தழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்வது ‘தாபத வாகை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’நீர்பலகாண் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் கூடரோம்பி - யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி”77
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’நாலிரு வழக்கிற்
றாபத வாகையுங்’78
என்றும் குறிப்பிடும். இதனைத் தொல்காப்பியம், ‘நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்’ என்கின்றது.
தொல்காப்பியர் சுட்டிய "நாலிரு வழக்கின தாபதப்பக்கம்" என்பதற்கு இத்துறை
ஒத்தமையக் காணலாம்.
பார்ப்பன முல்லை
செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த
மாலையினையுடைய வீரக்கழலாற் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர் மாறுபாட்டைக்
கெடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன் நன்மைமிக்க செப்ப முறைமையைச் சொல்வது ‘பார்ப்பன
முல்லை’ ஆகும். அதாவது,
வேந்தர்களின் மாறுபாட்டை விலக்கிச் சந்து செய்விக்கும் அந்தணனது
தன்மையைச் சொல்வது எனலாம். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - செல்லலும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
யென்றன்றி மீண்ட திலர்’’79
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’நண்புறு பொருட்டா நடூவுநிலை யரசற்குப்
பண்புறச் சொல்லும் பார்ப்பன முல்லையும்’’80
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியர் "அறுவகைப்பட்ட பார்ப்பணப் பக்கம்"
என்பதில் பார்ப்பணரின் ஆறு தொழில்களைச் சுட்டி அவற்றில் மேன்மையடைதலைக் குறிப்பிடுகின்றார். இக்கருத்தினை அடியொற்றி ஐயனாரிதனார் பார்ப்பன முல்லை
என்றொரு துறைப்பிரிவை உருவாக்குகின்றார். வீரசோழியமோ
"நாற்குலப் பக்கம்" என்ற நூற்பாவிற்குள் அந்தணர், அரசர்,
வணிகர்,
வேளாளர் ஆகியோரின் தனித்தன்மைகளை எடுத்துரைக்கின்றது.
பார்ப்பன வாகை
கேட்கக் கடவன கேட்டுத் தலைமை
பெற்றவனையாகத் தான் வெற்றியைப் பெருக்கியதைக் குறிப்பது ‘பார்ப்பன வாகை’ ஆகும். அதாவது, மறைகேட்டுச்
சிறப்பெய்திய பார்ப்பனனுடைய வெற்றியைக் கூறுவதாக இத்துறை அமைகிறது. இதனைப் புறப்பொருள்
வெண்பாமாலை,
‘’ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினில்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கு - மேதஞ்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து’’81
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’அறுவகைப்
பட்ட பார்ப்பன வாகையும்’’82
என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். பார்ப்பன முல்லையைத் தொல்காப்பியமும் வீரசோழியமும்
சுட்டியது போலவே பார்ப்பன வாகையையும் இவ்விரு நூல்கள் சுட்டியிருப்பதைக் காணமுடிகிறது.
பிழைத்தோர்த் தாங்கும் காவல்
தமக்குத் தீங்கு செய்தாரைப் பொறுத்துக்
கொண்டு,
தீங்கு செய்தாருக்குத் துன்பம் வராது காக்கும் தன்மையை இத்துறை
விளக்கும். இதனைத் தொல்காப்பியம்,
‘’பிழைத்தோர்த்
தாங்குங் காவ லானும்’’83
என்று கூறுகின்றது.
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பா
னொருநாண் மடியி னுலகின்மே னில்லா
திருநால் வகையா ரியல்பு’’
‘’ஊறின் றுவகையுள் வைக வுயிரோம்பி
யாறிலொன் றானா தனித்துண்டு - மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலுந்
தான்காவல் கொண்ட றகும்’’84
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’தொடுகட லுலகினைத் துளங்கா திறைதன்
கடனெனக் காத்த காவன் முல்லையுந்’’
‘’தக்கன் பிறபிற
சாற்றுமக் கூற்றொடு’’85
என்றும் குறிப்பிடக் காணலாம்.
பின்தேர்க்குரவை
போருடற்றும் வேந்தர், தேர் ஊர்ந்து சென்று போரிட்டு வெற்றி பெற்ற பின் தேருக்குப் பின் கூழுண்ட கூளிச்சுற்றம்
ஆடுவது ‘பின்தேர்க்குரவை’ ஆகும். இதனைத் தொல்காப்பியம்,
‘’ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்’’86
என்றும்,
வீரசோழியம் "குரவை" என்றும் குறிப்பிடுகின்றன. புறப்பொருள்
வெண்பாமாலை,
‘’வஞ்சமிலாக் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரும் ஆடுபவே - வெஞ்சமரில்
குன்றேர் மழகளிறும் கூந்தற் பிடியும்போல்
பின்தேர்க் குரவை பிணைந்து’’87
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’பெய்கழல் வேந்தன் பிறங்கொலித் தேர்ப்பின்
மொய்வளை விறலியர் வயவரோ டாடலும்’’88
என்றும் கூறக் காணலாம்.
பெரும்பகை தாங்கும் வேல்
வீரர்களின் ஆற்றலைப் படைக்கலனோக்கிலும்
காண்டல் வேண்டும். போர்க்கருவி என ‘வேல்’ கூறப்பெறினும்
இத்துறை பிறவகையான அம்பு,
வாள்,
துப்பாக்கி, பீரங்கி போன்ற பிற கருவிகளையும் கருதியதாகக் கொள்ளப்படுகிறது. இதனைத் தொல்காப்பியம்,
‘’பெரும்பகை
தாங்கும வேலி னானும்’’89
என்கின்றது.
பேராண் முல்லை
வேந்தன் தன் வீரமேம்பாட்டினால்
போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டமையைக் கூறுவது ‘பேராண் முல்லை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’ஏந்துவாட் டானை யிரிய வுறைகழித்துப்
போந்துவாண் மின்னும் பொருசமத்து - வேந்த
ரிருங்கனி யானை யினமிரிந் தோடக்
கருங்கழலான் கொண்டான் களம்’’90
என்றும்,
இலக்கண விளக்கம்
‘’மிக்ககள மரசுகொள்
பேராண் முல்லையும்’’91
என்றும் கூறுகின்றதைக் காணலாம். தொல்காப்பியர்
சுட்டிய "பொருநர் பக்க"மே பேராண் முல்லையாகத் திரிந்திருக்கின்றது என்பர்.
பொருந வாகை
நின் கீர்த்தியோடு மிகுதியைப்
பார்த்து யாவரையும் எள்ளுதலைப் பரிகரியென்று உயர்த்திச் சொல்லுவது ‘பொருந வாகை’ ஆகும்.
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’வெள்ளம்போற் றானை வியந்து விரவாரை
யெள்ளி யுணர்த லியல்பன்று - தெள்ளியா
ராறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
நீறுமேற் பூத்த நெருப்பு”92
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’புகழொடு பெருமையு நோக்கி யாரையு
மிகழே லென்ற பொருந வாகையு’’93
என்றும் குறிப்பிடக் காணலாம். தொல்காப்பியர்
சுட்டிய "பொருநர் பக்கம்" பெயர் ஒற்றுமை கருதி எண்ணத்தக்கதாக உள்ளது.
பொருளொடு புணர்ந்த பக்கம்
அரசன் தனக்குரிய படை, குடி,
கூழ்,
அமைச்சு,
நட்பு,
அரண் முதலியவற்றைப் பெறுவதையும்; உலகியல் மாந்தர்
புதல்வரைப் பெறுதல் போன்றவற்றைப் பெறுவதையும் இத்துறை எடுத்துக் கூறும். இதனைத் தொல்காப்பியம்,
‘’பொருளொடு
புணர்ந்த பக்கத் தானும்’’94
என்றம்,
புறப்பொருள் வெண்பாமாலை,
‘’ஆமினி மூப்பு மகன்ற திளமையுந்
தாமினி நோயுந் தலைவரும் - யாமினி
மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த
வையைந்து மாய்வ தறிவு’’95
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’மெய்யில் வையகத்து விழவினை யறுத்துப்
பொய்யிறத்துவப் பொருளொடு புகறலுங்’’96
என்றும் கூறுகின்றதைக் காணும்போது தொல்காப்பியம் ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்பதை
மற்ற இரு நூல்களும் ‘பொருளொடு புகலல்’ என்று கூறியிருப்பதை இங்குச் சுட்டிக்காட்டலாம்.
மறமுல்லை
வேந்தன் வீரனுக்கு அவன் விரும்பும்
பொருளைக் கொடுத்தும்,
வீரன் அவற்றில் கருத்தைச் செலுத்தாது, வீரவுணர்வுபட வீரவுரைகள் கூறி நிற்பது ‘மறமுல்லை’ ஆகும். அதாவது, வீரனின் உணர்வு
நிலையை விளக்குவதாக இத்துறை அமைந்துள்ளது எனலாம்.
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’வின்னவி றோளானும் வேண்டிய கொள்கென்னுங்
கன்னவி றிண்டோட் கழலானு - மன்னன்மு
னொன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
நின்றா னெடிய மொழிந்து’’97
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவுங்
கொள்ளாது மறவன் கொதித்தமற முல்லையுங்’’98
என்றும் கூறக் காணலாம்.
முரசவாகை
ஆரவாரிக்கும் வீரக்கழலினையுடையானது
பரந்த மாளிகையிடத்துப் பலியைப் பெறும் முரசினையுடைய தன்மையைச் சொல்வது ‘முரச வாகை’
ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்குந் தடக்கையான் வான்தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு’’99
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’மொய்கழ லான்பதி
முரசுநிலை யிரைத்தலும்’’100
என்றும் குறிப்பிடக் காணலாம்.
முன்தேர்க்குரவை
போருடற்றும் வேந்தர், தேர் ஊர்ந்து சென்று போரிட்டு வெற்றி பெற்றபின், தேருக்கு
முன் வெற்றி பெற்றோன் பலருடன் இணைந்து மகிழ்ச்சியில் ஆடுவது ‘முன்தேர்க்குரவை’ ஆகும். இதனைத் தொல்காப்பியம்,
‘’தேரோர், வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்’’101
என்றம்,
புறப்பொருள் வெண்பாமாலை,
‘’உலவா வளஞ்செய்தான் ஊழிவாழ் கென்று
புலவாய புன்தலைப் பேயாடும் - கலவா
அரசதிர நூறி அடுகளம் வேட்டான்
முரசதிர வென்றதேர் முன்’’102
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’வென்ற வேந்தன் மிளியந் தேர்முன்
னின்றுபே யாட னிகழ்த்திய குரவையும்’’103
என்றும் குறிப்பிடக் காணலாம்.
மூதின் முல்லை
சொல்லும் வேலினையுடைய வீரர்க்கல்லாது
அந்த மறக்குடியில் மடப்பத்தினையுடைய அரிவைமார்க்கும் சினத்தைச் சிறப்பித்தல் ‘மூதின்
முல்லை’ ஆகும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’வந்த படைநோனாள் வாயின் மூலைபறித்து
வெந்திற லெஃக மிறைக்கொளீஇ - முந்தை
முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றான் போர்க்கு’’104
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’ஏதமி லாடவர்க் கன்றி யிகன்மறம்
பேதையர்க் கும்புகன் மூதின் முல்லையும்’’105
என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேன்மை
தன்னளவில் மேம்பாட்டினையும் மேன்மைப் பண்புகளை இத்துறை குறிக்கின்றது.
இத்துறையினைச் சுவாமிநாதம் குறிப்பிடுகின்றது.
என்றாலும்,
இந்நூலுக்கு உரை வரைந்த பெருந்தேவனார், "பெரும்பகை தாங்கும் மேன்மை;
அது அருளொடு புணர்ந்த அகற்சியாம்" என்ற விளக்கம் தரப்பெற்றுள்ளதைப்
பார்க்கும் போது இத்துறை தொல்காப்பியர் கூறிய,
"பெரும்பகை தாங்கும் வேலி னானும்
அரும்பகை தாங்கும் ஆற்ற லானும்"106
என்னும் துறையோடு ஒத்து வருதலைக் காணமுடிகிறது.
வண்புகழ்க்கொடை
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப்
போக்குவதற்கு செல்வம் மிக்க ஒருவன் பிறருக்குக் கொடுத்தலைக் குறிப்பதாக இத்துறை அமைந்துள்ளது. இதனைத் தொல்காப்பியம்,
‘’இடையில் வண்புகழ்க்
கொடையி னானும்’’107
என்று கூறுகின்றது.
வல்லாண் முல்லை
இல்லையும் ஊரையும் இயல்பினையுஞ்
சொல்லி அழகிய ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்வது ‘வல்லாண் முல்லை’ ஆகும். இதனைத் தொல்காப்பியம்,
‘’புல்லா வாழ்க்கை
வல்லாண் பக்கமும்’’108
என்றும்,
வீரசோழியம் "வல்லாண் பக்கம்" என்றும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் சுட்டிய வல்லாண் பக்கம் என்பதை ஏறாண்
முல்லை,
வல்லாண் முல்லை என்ற இரு துறைகளாகப் பகுத்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பாமாலை,
‘’வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறாஅர்
முன்முன் முயலுகளு முன்றிற்றே - மன்முன்
வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி
யுரைமாலை சூடினா னூர்’’109
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’இல்லும் பதியு மியல்புங் கூறி
வல்லோனை மிகுத்த வல்லாண் முல்லையுந்’’110
என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.
வாகை அரவம்
வெள்ளிமலையினையும் வலிய வீரக்கழலினையும்
சிவந்த கச்சினையும் அழகியதாக அணிந்தமை பற்றி கூறுவது ‘வாகை அரவம்’ ஆகும். போர் வெற்றிக்கு அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதையும், கழல் வீக்குவதையும்,
கச்சனிவதையும் வாகையரவம் குறிப்பிடும். அதாவது, வெற்றி பெற்றவனின்
கண்ணி,
கழல்,
கச்சு ஆகிய மூன்றையும் புனைந்துரைத்தல் வாகை அரவம் எனப்படுகிறது. இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’அணைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக்கவலை யில்லை - புனைக
அழலோ டிமைக்கும் அணங்குடைவாள் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு’’111
என்றும்,
இலக்கண விளக்கம்,
‘’இகன்றோர்,
வெண்கண்ணி யொடுகருங் கழல்செங் கச்சினிப்
புண்டவிர்ந் தாமெனப் புனைதரு
மரவமும்’’112
என்றும் எடுத்துக்கூற ஏனைய இலக்கண நூல்கள் குறிப்பிடவில்லை.
வாணிக, வேளாண் வாகை
உழவரும் வணிகரும் தம் தொழிலில்
தலைநிற்றல் வாணிக,
வேளாண் வாகைத் துறைகளாகும்.
‘’பகட்டி னானும் மாவி னானுந்
துகட்டபு சிறப்பின் சான்றோர் பக்கமும்’’113
என்பதால் தொல்காப்பியம் வாணிக, வேளாண் வாகையைச் "சான்றோர் பக்கம்" என்று கூறி சான்றோரை
வணிகராகவும் வேளாளராகவும் காண்கின்றது. வணிகரையும்
வேளாளரையும் புறப்பொருள் வெண்பாமாலையும் இலக்கண விளக்கமும் தனித்தனியே காண்கின்றது.
வாணிக வாகையைப் வாணிக வாகையைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
வோதி யழல்வழிபட் டோம்பாத வீகையா
னாதி வணிகர்க் கரசு’’114
என்பதால் 'வணிகர்க்குரிய அறுவகைத் தொழிற் சிறப்பையும் விதந்து கூறும் தன்மையது என்று கூறுகின்றது. இதனையே இலக்கண விளக்கம்
‘’இருமூன்று மரபி னேனோர் வாகையும்’’115
என்று எடுத்துரைக்கின்றது.
வேளாண் வாகையைப் புறப்பொருள் வெண்பாமாலை,
‘’மூவரு நெஞ்சமர முற்றி யவரவ
ரேவ லெதிர்கொண்டு மீண்டுரையா - னேவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலு
ளுழுவா னுலகுக் குயிர்’’116
என்பதால் 'அந்தணர்,
அரசர்,
வணிகர் ஆகிய மூவரும் பெரிதும் விரும்பும்படி அவர் ஏவற்கண் நின்று
ஒழுகிய தன்மையது என்று கூறுகின்றது.
வேட்கையர் பக்கம்
விருந்தோம்புதலும் அழல் ஓம்புதலும்
உள்ளிட்ட எண்வகைப் பக்கம் உடையது வேட்கையர் பக்கம் என்னும் துறை. இத்துறையினைச் சுவாமிநாதம் குறிப்பிடுகின்றது.
தொல்காப்பியம் - புறப்பொருள் வெண்பாமாலை துறை ஒப்பீடு
தொல்காப்பியர் வாகையைப் பொதுப்படக்
கூறி வாகைக்குரிய மாந்தர்களைத் தனியாகச் சுட்டுகின்றார். புறப்பொருள் வெண்பாமாலையோ வாகைக்குரிய மாந்தர்களாகத்
தொல்காப்பியர் சுட்டுவதை அவர்களுக்குரிய துறைகளாக்கிப் பார்க்கின்றார். இவ்வகையில் அரசர் அரச வாகையாகவும், பார்ப்பனர் பார்ப்பன வாகையாகவும், வணிகர் வாணிக வாகையாகவும், வேளாளர் வேளாண்
வாகையாகவும்,
அறிவன் அறிவன் வாகையாகவும், தாபதர் தாபத
வாகையாகவும் எண்ணப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
அரசரைப் பற்றிக் கூறும் வாகையில்
புறப்பொருள் வெண்பாமாலைத் துறைகள் விரிவடைகின்றன.
அதாவது,
அரசர்க்குரியனவாக அரச வாகை, முரச வாகை, பொருந வாகை,
அரச முல்லை, காவன் முல்லை, குடைமுல்லை ஆகிய ஆறு துறைகளைச் சுட்டுவதைக் காணமுடிகிறது.
அரசர்க்குரிய தொழிலாக போர்வெற்றியும்
நாடு காவலும் எண்ணப்படும். அரசர்க்குரிய ஐந்து
தொழில்களைத் தொல்காப்பியர் எடுத்துக் கூற புறப்பொருள் வெண்பாமாலையானது துறைகளை விரிவுபடுத்துகிறது.
அரச வாகையுள் காவலும் வீரமும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. காவல் தொழிலை அடிப்படையாகக் கொண்டு அரச முல்லை, காவன் முல்லை,
குடை முல்லை எனப் பிரிகிறது. அதாவது, அரச வாகையில்
ஒன்றான காவலின் அரச முல்லையானது காவன் முல்லையாகவும்
குடைமுல்லையாகவும் விரிவு கொண்டிருக்கின்றது.
அரச வாகையில் ஒன்றான வீரம், பொருந வாகையாகவும் முரச வாகையாகவும் விரிவு கொண்டிருக்கின்றது.
தொல்காப்பியத்தில் கூறப்பெறாத
துறைகளான அரச வாகை,
முரச வாகை,
பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை,
அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, காவன் முல்லை, குடைமுல்லை, சால்பு முல்லை ஆகிய பதினான்கு துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை
கூடுதலாகக் கூறுகின்றது. இப்பதினான்கு துறைகளுள்
மாந்தர் நோக்கில் ஆறு துறைகளும்,
அரச வாகையின் விரிவாக ஐந்து துறைகளும், அறிவன் வாகையின் விரிவாகக் கணிவன் முல்லை என்ற ஒரு துறையும் ஆகப் பன்னிரண்டு துறைகள்
தொல்காப்பியரால் கருதப்பெற்றனவாகவே இருக்கின்றன. ஏனைய பார்ப்பன முல்லையும் சால்பு முல்லையும்
மட்டுமே புறப்பொருள் வெண்பாமாலையில் புதியனவாகக் கூறப்பெற்றவையாகக் கருதலாம். இருப்பினும் துறை அமைப்பை நோக்கும் போது துறைகள்
அனைத்தும் தனித்தியங்கக் கூடியவை என்பதால் அவற்றையெல்லாம் வாகைத் திணையின் தனித்தனித்
துறைகளாகக் கொள்ளப்பட்டு ஆராய்வதும் சால்புடைத்தாகும்.
நிறைவுரை
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
வாகைத் திணையின் வகைகளும் துறைகளும் காலந்தோறும் தோன்றும் இலக்கண நூல்களில் சில சேர்ப்பும்
சில விடுப்பும் சில தொடர்ந்தும் சில விரிந்தும் இடம்பெற்றுள்ளமை உணரப்படுகின்றது. ஒரே
துறை இரண்டு மூன்றாவதும்,
பெயர் மாற்றம் பெற்றிருப்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும், பிற புறத்திணைகளில்
வாகைத் துறைகள் கலந்திருப்பதும்,
வாகைத்துறைகளில் பிற புறத்திணைக் கூறுகள் கலந்திருப்பதும் புறத்திணை
பற்றிக் கூறும் இலக்கண நூல்களைக் கண்ணுறும்போது தெளிவாகிறது. இவற்றையெல்லாம் ஆராயின் ஆய்வு விரியும் என்பதால்
இவற்றைப் பின்னாய்வுக்கு விட்டுச் செல்ல முற்படுகிறது.
அடிக்குறிப்புகள்
1, புறப்பொருள் வெண்பாமாலை, சிறப்புப்
பாயிரம்,
வரி.5-6
2. சங்க இலக்கியத்தில் புறப்பொருள், ப.59
3. தொன்னூல் விளக்கம், நூ.199
4. முத்துவீரியம், நூ.820
5. அறுவகை இலக்கணம், நூ.76
6. அறுவகை இலக்கணம், நூ.110
7. தொல்.பொருள்.புறத். நூ.15-18
8. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், நூ.8
9. இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூ.14
10. இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூ.15
11. தொன்னூல் விளக்கம், நூ.
12. முத்துவீரியம், நூ.820
13. முத்துவீரியம், நூ.828
14. அறுவகை இலக்கணம், நூ.76
15. தொல்.பொருள்.புறத். நூ.15
16. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், ப.109
17. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பகுதி 1, ப.208
18. தொல்காப்பியம், பொருட்படலம், புத்துரை,
புறத்திணையியல், ப.123
19. தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், திரு.க. வெள்ளைவாரணன்,
ப.101
20. தொல்காப்பியம், பொருளதிகாரம், குழந்தையுரை, பக்.482-83
21. Tholkappiyam with Critical Studies. Dr.S. Ilakkuvanar, p.168
22. தொல்காப்பிய ஆராய்ச்சி, திரு.சி.
இலக்குவனார்,
ப.225
23. புறத்திணை,
டாக்டர் வ.சுப. மாணிக்கம், ப.24 (அச்சுப்பெறாதது)
24. பண்டைத்தமிழர் பொருளியல் வாழ்க்கை, இளவழகனார், ப.112
25. பண்டைத்தமிழர் போர்நெறி, புலவர் கா.
கோவிந்தன்,
ப.250
26. வாகைத்திணை, கோ. சிவகுருநாதன், ப.20
27. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.14
28. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.1-2
29. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.1
30. முத்துவீரியம், பொருளதிகாரம்,அகவொழுக்கவியல், நூ.60
31. தொல்.பொருள்.புறத். நூ.16
32. தொல்.பொருள். புறத். நூ.17
33. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், நூ.8
34. புறப்பொருள் வெண்பாமாலை, பெருந்திணைப்
படலம்,
நூ.18
35. சுவாமிநாதம்,நூ.11-13
36. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.17
37. இலக்கண விளக்கம், பொருள். புறத்.15.23-24
38, வீரசோழியம், நூ.102
39. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.3
40. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.6
41. தொல்.பொருள்.புறத். நூ.17.8
42. தொல்.பொருள்.புறத். நூ.17.22
43. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.34
44. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.51-52
45. தொல்.பொருள்.புறத். நூ.17.10-12
46. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.30
47. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.44
48. தொல்.பொருள். புறத். நூ.17.17
49. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.19,
20
50. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.27
51. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.13
52. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.18-19
53. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.22
54. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.33-34
55. தொல். பொருள்.புறத். நூ.17.13
56. தொல். பொருள். புறத். நூ.17.16-17
57. தொல். பொருள். புறத். நூ.17.18
58. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.20
59. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.28-30
60. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.29
61. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.43
62. தொல். பொருள். புறத். நூ.17.3-4
63. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.32
64. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.47-48
65. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.5
66. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.8
67. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.6
68. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.9
69. தொல்.பொருள்.புறத். நூ.17.23
70. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.28
71. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.43
72. தொல்.பொருள்.புறத். நூ.17.1-2
73. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.15,
16
74. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.21-22
75. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.31
76. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.45-46
77. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.14
78. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.20
79. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.18
80. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.25-26
81. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.9
82. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.14
83. தொல்.பொருள்.புறத். நூ.17.20
84. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.24,
25
85. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.37-39
86. தொல்.பொருள்.புறத். நூ.17.6
87. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.8
88. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.12-13
89. தொல்.பொருள்.புறத். நூ.17.7
90. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.26
91. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.40
92. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.12
93. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.16-17
94. தொல்.பொருள்.புறத். நூ.17.21
95. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.33
96. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.49-50
97. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.27
98. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.41-42
99. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.4
100. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.7
101. தொல்.பொருள்.புறத். நூ.17.4-5
102. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.7
103. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.10-11
104. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.21
105. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.31-32
106. தொல்.பொருள்.புறத்.நூ.17.7-8
107. தொல்.பொருள்.புறத். நூ.17.19
108. தொல்.பொருள்.புறத். நூ.17.9
109. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.23
110. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.35-36
111. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.2
112. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.2-5
113. தொல்.பொருள்.புறத். நூ.17.13-14
114. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.10
115. இலக்கண விளக்கம், பொருள். புறத். நூ.15.15
116. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், பா.11