தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்ற 15.09.1981ஆம் நாளிலேயே சுவடிப்
புலத்தின் ஒரு துறையாக ஓலைச்சுவடித்துறை உருவாக்கப்பெற்றது. இத்துறையின் ஒரு அங்கமாக ஓலைச்சுவடித்துறை உருவாக்கப்பெற்றது. தொடக்கத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இலவசமாகச்
சுவடிகளைப் பெற்ற நிலை மாறி 1988இல் விலைக்குச் சுவடிகளைப் பெறும் நிலை மாறியது. நல்ல நிலையில் உள்ள ஒரு நாட்டுப்பனை ஏட்டிற்கு குறைந்தபட்சமாக
40 பைசாவாகவும், கூந்தற்பனை ஏட்டிற்கு குறைந்தபட்சமாக 75 பைசாவாகவும் நிர்ணயம் செய்து
(நீள அகலங்களுக்கு ஏற்ப இவற்றின் விலையில் மாற்றம் இருக்கும்) சுவடிச் சேகரிப்புப்
பணி நடைபெற்றது. இவ்வாறு சேகரிக்கப்பெற்ற ஓலைச்சுவடிகளைக்
கண்ணாடிக் கதவு பொருத்திய 15 பேழைக்குள் அடுக்கி வைக்கப்பெற்றது. பேழைக்கு மிஞ்சிய ஓலைச்சுவடிகளை எஃகு அடுக்குகள்
கொண்ட பேழையில் அடுக்கி வைக்கப்பெற்றது. அரண்மனை
வளாகத்தில் இருந்து ஒலைச்சுவடித்துறையானது புதிய வளாகத்திற்குத் தனிக் கட்டிடத்தில்
1987இல் வந்தது.
சுவடிகளின் எண்ணிக்கையினைப் பொருத்து தரைத்தளம், மேல்தளம் என அமைந்த
ஒரு கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஓலைச்சுவடித்துறை இயங்கியது. அத்தளத்தில் இருந்த பெரிய அறையில் ஒலைச்சுவடிக்கெனத்
தனி நூலகம் அமைக்கப்பெற்றது.
ஓலைச்சுவடிச் சேகரிப்பினால் சுவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க
இடப்பற்றாக்குறை நிலவியது. மேல்தளத்தில் இருந்த அரிய கையெழுத்துச் சுவடித்துறையை புதிய
வளாகத்தின் வேறுவொரு இடத்திற்கு மாற்றியதன் பிறகு முழுமையாக அக்கட்டடம் ஓலைச்சுவடித்துறையின்
வசமானது. இடம் கிடைத்தாலும் அவற்றை முறையாக
அடுக்கி வைப்பதற்கான அடுக்குகளோ பேழைகளோ இல்லாத சூழ்நிலை இருந்தது. இருப்பினும், இருக்கும்
இடத்திற்கு ஏற்ப ஓரளவு பாதுகாப்பு உணர்வோடு சுவடிகள் வைக்கப்பெற்றிருந்தன.
நான் ஓலைச்சுவடித்துறைக்குப் 18.09.1989இல் திட்ட உதவியாளராக பணியில்
சேரும்போது மேலது நிலை நிலவி இருந்தது.
நான் வந்ததன் பிறகு ஓலைச்சுவடிகள் சேகரிப்பு அதிகரிக்கத் தொடங்கின. வைப்பிடப் பற்றாக் குறையினால் கண்ணாடிக் கதவு பொருந்திய
பேழையின் மேல் பகுதியில் அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனைப் போக்க என்ன என்ன செய்யலாம் என்று துறைத்தலைவர்
பேராசிரியர் முனைவர் த.கோ. பரமசிவம் அவர்களிடம் கலந்துரையாடினேன். உன்னுடைய விருப்பப் படி என்ன செய்ய முடியுமோ அதைச்
செய். ஆனால் பல்கலைக்கழகத்தில் இருந்து நிதி
கோர முடியாது என்று எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் பணியில் சேர்ந்தது முதல் ஓலைச்சுவடிகளுக்கான
பதிவேடுகளும், ஓலைச்சுவடிகளைக் கையாளும் உரிமையும் உன்னதமாக எனக்கு வழங்கினார்.
புத்தகங்களை அடுக்குவதற்கு உகந்த வகையில் புத்தக எஃகு அடுக்குகள் இருந்தன. ஓலைச்சுவடித்துறை இருந்த கட்டடத்தில் இரண்டு சமையல்
அறைகள் இருந்தன. சமையல் அறையில் இருந்த அடுக்குகளில்
புத்தகங்களை அடுக்கிவிட்டு, அந்த எஃகுத் தட்டுகளைத் தனியனாக தனித்தனியாகப் பிரித்து
ஓலைச்சுவடிகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் ஆறு இன்ச் இடைவெளியில் தட்டுகளை மாற்றி அடுக்கி
அதில் சுவடிகளை அடுக்கி வைத்தேன். அதாவது,
அக்கட்டடத்தின் பின்பகுதியில் இருந்த ஒரு அறை உயரம் கூடுதலாக இருந்தபடியால் இரண்டு
எஃகு 13 அடி உயரம் கொண்ட 26 அறைகள் கொண்ட நான்கு எஃகுப் பேழைகளை உருவாக்கி அவற்றில்
ஓலைச்சுவடிகளை முறைப்படுத்தி சுவடிப் பராமரிப்பு முறைப்படி அடுக்கி வைத்தேன்.
சுவடி நூலகம் குளிரூட்டப்பட்ட அறையாக மாற்றப்பட்ட போது பதினைந்து கண்ணாடிக்
கதவு கொண்ட பேழையில் இருந்த கதவுகள் அகற்றப்பட்டு
சுவடி நூலகம் தேவைக்குத் திறக்கப்படுவதாக மாற்றம் செய்யப்பெற்றது.
இதுபோன்றதொரு எஃக்குப் பேழைகள் ஆவணச் சுருணைகள் அடுக்குவதற்கும் வேண்டும்
என்று பல்கலைக்கழகத்திடம் துறைத்தலைவர் வழியாக முறையீடு செய்தேன்.
பல ஆண்டு சுவடிகள் சேகரிப்பினால் 3000க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய
மருத்துவத் தமிழ்ச் சுவடிக் கட்டுகள் சேர்ந்த நிலையிலும், 1000க்கும்மேற்பட்ட பிறமொழிச்
சுவடிக் கட்டுகள் சேர்ந்த நிலையில் மீண்டும் இடப்பற்றாக்குறை உண்டானது. மேலும், 1300க்கும் மேற்பட்ட ஆவணச் சுருணைகளை முறைப்படி
அடுக்குவதற்கும் இடப்பற்றாக்குறை நிலவியது.
01.07.2012இல் நான் துறைத்தலைவர் பொறுப்புக்கு வந்தேன். இந்நிலையில் தான் புதிய “நா” வடிவக் கட்டடம் உருவானது. இவற்றில் துணைக்கால் முழுக்க ஓலைச்சுவடித்துறைக்கு
வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். ஆனால், இரண்டு
பெரிய அறைகளும், ஐந்து சிறிய அறைகளும் என ஏழு அறைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிடைத்த இடத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்
என்ற எண்ணத்தில் அறை எண்.3யைத் தமிழ் மற்றும் பிறமொழிச் சுவடிகளுக்கும், அறை எண்.5யைத்
தமிழ்ச் சுவடிகளுக்கும், அறை எண்.14யை ஆவணச் சுருணைகளுக்கும் என ஒதுக்கீடு செய்து,
ஓலைச்சுவடி பராமரிப்புப் பணிகளுக்காக அறை எண்.13யையும், திட்டப் பணிகளுக்காக அறை எண்.12யையும்,
மாற்றுப் பணிகளுக்காக அறையெண்.2, 4 மற்றும் 7யையும் பயன்படுத்திக் கொண்டேன். சுவடி வைப்பறைகளுக்கு (அறை எண்.3, 5 மற்றும்
14) இரண்டு டன் கொண்ட இரண்டிரண்டு குளிரூட்டுப் பெட்டி வைத்து முறையாக இயக்கிச் சுவடிகளுக்குத்
தேவையான தட்பவெப்ப நிலையைப் பராமரித்தேன்.
எப்போதோ ஆவணச் சுருணைகள் அடுக்குவதற்கு கேட்கப்பெற்ற எஃகுப் பேழைகள்
புதிய கட்டடத்திற்கு வந்த பிறகு அலுவலகத்திலிருந்து வாங்கித் தரப்பெற்றன. ஒரு தட்டில் இரண்டு வரிசை என்ற முறையில் குவியலாக
இருந்த ஆவணச் சுருணைகளுக்கு விடுதலை கிடைத்து ஒய்யாரமாக அடுக்குகளில் அமர்த்தினேன். இலக்கண இலக்கியச் சுவடிகளை ஆறரை அடி உயர எஃகு அரையடி
இடைவெளியில் இருக்கக் கூடிய எஃகுத் தட்டுகளாக தனியனாகப் பிரித்து மாற்றி உருமாற்றம்
செய்து அவற்றை அறையெண்.3இல் வைத்துத் தமிழும் பிறமொழிச் சுவடிகளையும் அடுக்கி வைத்தேன். அறை எண்.5இல் மர அடுக்குகள் 15 இருந்த நிலையில்
மேலும் 4 மர அடுக்குகள் அரையடி இடைவெளியில் தயாரித்து 19 மர அடுக்குகளில் சுவடிகளைப்
பக்க வாட்டில் அடுக்கி வைத்தேன். இப்போது சுவடிகள்
ஒன்றன் மீது ஒன்று இல்லாமலும், ஒரு கட்டின் ஒருவோலை மற்றொரு ஓலையின் மீன் அழுத்தம்
கொடுக்காமலும் இருக்கும் வகையில் புதிய கயிறு மாற்றி முறைப்படி கட்டி (ஒரு டைமண்ட்,
டிபுள் டைமண்ட்) அழகான முறையில் அடுக்கி வைத்தேன்.
மேலும் பல சுவடிகளுக்குக்
காப்புச் சட்டங்கள் இல்லாததால் புதிய தேக்குச் சட்டங்களை வாங்கி காப்புச் சட்டங்கள்
இல்லாத சுவடிகளுக்குக் காப்புச் சட்டங்கள் போட்டேன். அக்காப்புச் சட்டங்களின் மேல் ஓலைச்சுவடி எண் பொருத்தினேன். ஏற்கெனவே ஓலைச்சுவடியின் மீது காகிதத்தில் எழுதி
ஒட்டப்பட்டிருந்த நிலையை மாற்ற, வெள்ளோலைகளை வாங்கி வந்து நான்கு இன்ச் நீளத்தின் ஓரத்தில்
துளை இட்டு, தட்டச்சுப் பொறியின் உதவியால் ஸ்டென்சில் பாய்ண்ட்டில் வைத்து இடது கை
விரல்களில் ஓலையைப் பிடித்துக் கொண்டு வலது கை விரல்களில் சுவடி எண்ணையும் நூற் பெயரையும்
தட்டச்சு செய்து சுவடியின் மேற்புறம் வைத்துக் கட்டிப் பாதுகாத்தேன்.
2009-10
தமிழக அரசின் பகுதி 2
திட்டத்தின் (ரூ.20,00,000) கீழ்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாமக்கல், திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி
மாவட்டங்களில் 2010 சனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் களப்பணி மேற்கொண்டு 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சமஸ்கிருதச் சுவடிகள்
திரட்டப்பெற்று ஓலைச்சுவடித்துறை நூலகத்தினை விரிவு
செய்திருக்கிறேன்.
2013-14
தமிழக அரசின் பகுதி 2
திட்டத்தில் ரூ.5,15,000/-இல்
ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்தல் மற்றும் அட்டவணைபடுத்துதலில் நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 2013ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், 2014ஆம் ஆண்டு சனவரி, பிப்ரவரி
மற்றும் மார்ச்சு மாதங்களில் களப்பணி மேற்கொண்டு 400க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம்
மற்றும் சமஸ்கிருதச் சுவடிகள் திரட்டப்பெற்று ஓலைச்சுவடித்துறை விரிவாக்கம்
செய்திருக்கிறேன்.
ஓலைச்சுவடிகளைத்
திரட்டிப் பட்டியலிட்டுப் மின்னணுப் பதிவாக்கிப் பாதுகாத்தல், தமிழக அரசின் 2009-10ஆம்
ஆண்டுத் திட்டத்தில் எஞ்சிய 9,77,057 தொகையில் ஜுலை 2015
முதல் ஏப்ரல் 2016வரை
ஓலைச்சுவடித்துறையில் உள்ள 1,50,000
ஓலைகள் Elcot நிறுவனத்தின் மூலம் மின்னணுப் பதிவாக்கம்
செய்தேன்.
ஏப்ரல் 2018இல் தேசியச் சுவடிகள் இயக்ககத்தின் (National Mission for Manuscripts-NMM)தேசியச் சுவடிகள் பாதுகாப்பு
மையம் (Manuscript Conservation Center-MCC) உருவாக்கி ஓலைச்சுவடியைப் பாதுகாப்பதற்குப்
பல்கலைக்கழகத்தின் நிதியைக் கோருவதைப் போக்கி NMM-MCC வழியாக ஆண்டு தோறும் நிதியைப்
பெற்றுச் சுவடிகளைப் பாதுகாத்தேன். இதன் ஒருங்கிணைப்பாளராகச்
செயற்பட்டேன். முறைப்படியான சுவடிப் பாதுகாப்பாளர்களை (சுவடிப் பாதுகாப்பாளர்-1, உதவி
சுவடிப் பாதுகாப்பாளர்-2)ப் பணிக்கமர்த்தி ஓலைச்சுவடிகளைச் சுத்தம் செய்து லெமன்கிராஸ்
எண்ணெய் தடவியும், செல்லரித்த, உடைந்த, கிழிந்த ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பு செய்தேன். மணப்பொருள்
முடுச்சு தயாரித்து கால முறைப்படி அவற்றை வைத்தும் பராமரிப்புப் பணி செய்தேன்.
இந்நிலையில் 2019இல் இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்தின் அழிந்து வரும்
அரும்பொருட்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் (Digitization, Cataloguing and Preservation of Palmleaf
Manuscripts in the Tamil University,
Endangered Archives Programme (EAP), British Library, London, November 2019 to
April 2023.) 51,040 பவுண்ட் நிதியைப் பெற்று 4150 தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகளில்
உள்ள 6825 தமிழ்ச் சுவடி நூல்களை மின்னணுப் பதிவாக்கம் செய்தேன். இவற்றில் 3088 ஓலைச்சுவடி நூல்கள் பிரிட்டிஷ் நூலக
இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
நான் பணியில் சேர்ந்தது முதல் ஓலைச்சுவடித்துறையில் இருந்த அச்சு நூல்களின்
நூலகத்தையும் பராமரிக்கும் கையாளும் பொறுப்பினைப் பெற்று சிறப்பாகப் பணியாற்றினேன். அச்சு நூல்களைத் துறையினர் பயன்படுத்துவது நின்றுவிட்ட
நிலையில் அவற்றை 2022இல் பொது நூலகத்திற்குத் திருப்பி விட்டேன்.
கொரோனா தீநுண்மீ காலத்தில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியில் தனியனாக
தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குள் காலையில் வந்து ஓலைச்சுவடி நூலக அறைகளில் இருக்கக் கூடிய
குளிரூட்டிகளை இயங்கச்செய்து மாலையில் வந்து அவற்றை நிறுத்திச் சீரான வெப்ப நிலையில்
ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியில் மாண்புநிறை துணைவேந்தர் அவர்களின் வாய்மொழி அனுமதியின்
பேரில் ஈடுபட்டேன். மேலும், பல்கலைக்கழகப்
பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற உயர் பதவிகளை வகித்த காலத்திலும்
ஓலைச்சுவடித்துறை நூலகத்தினை பராமரிக்கும் பொறுப்பினால் காலை 6.00 மணிக்கெல்லாம் ஓலைச்சுவடித்துறைக்கு
வந்து ஓலைச்சுவடித்துறை நூலக அறைகளில் இருக்கக் கூடிய குளிரூட்டிகளை இயங்கச் செய்து
EAP & MCC திட்டப் பணியில் அன்று செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிடச் செய்து,
9.00மணிக்கு வீடு திரும்பி குளித்து சிற்றுண்டி அருந்திவிட்டு 9.45க்கெல்லாம் திட்டப்
பணியாளர்கள் வரும்முன் துறைக்கு வந்து அன்றைய பணிக்கான ஓலைச்சுவடிகளை வழங்கிவிட்டு,
மாலையில் வீடு திரும்பும் முன் இரவு 8.00 ஆனாலும் அன்றைய திட்டப் பணியில் செய்த பணிகளைச்
சரிசெய்து, பின் குளிரூட்டியை நிறுத்திச் சீரான வெப்பநிலையில் ஓலைச்சுவடிகளைப் பராமரித்திருக்கிறேன்.
ஓலைச்சுவடித்துறை நூலகத்தில் இருக்கக் கூடிய தமிழ் ஓலைச்சுவடிகளுக்கு
விளக்க அட்டவணை தயாரிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்ச் சுவடி விளக்க
அட்டவணை தொகுதி 6 முதல் 10 வரை தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் 500 சுவடி நூல்களுக்கான சுவடி
விளக்க அட்டவணை அமைந்திருக்கும். இவற்றில்
தொகுதி 6-8 அச்சான நிலையில், தொகுதி 9 மற்றும் 10 ஆனது அச்சாகும் நிலையில் பதிப்புத்துறையில்
இருக்கிறது. மேலும் 1-5000 தமிழ் ஓலைச்சுவடி
நூல்களுக்கான அட்டவணையும் தயாரிக்கப்பெற்று பதிப்புத்துறையின் வெளியீட்டிற்காக உள்ளது.
நான் ஓலைச்சுவடித்துறையிலிருந்து பணி ஓய்வின் பொருட்டு 21.07.2023இல்
ஓலைச்சுவடித்துறை நூலகத்தை ஒப்படைக்கும்போது பினவரும் நிலைகளில் ஓலைச்சுவடிகள் இருந்தன.
1.
தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள் = 4967
2.
கிரந்த ஓலைச்சுவடிக் கட்டுகள் =
1203
3.
தெலுங்கு,கன்னட ஓலைச்சுவடிக் கட்டுகள் = 0102
4.
மலையாள ஓலைச்சுவடிக் கட்டுகள் = 0012
5.
நாகரி ஓலைச்சுவடிக் கட்டுகள் = 0009
6.
கணக்கு மற்றும் சாதக ஓலைச்சுவடிக் கட்டுகள் = 0067
7.
செங்கற்பட்டு ஓலை ஆவணச் சுருணைகள் =
0182
8.
செங்கோட்டை ஓலை ஆவணச் சுருணைகள் = 0173
9.
புதுக்கோட்டை ஓலை ஆவணச் சுருணைகள் = 0899
10.
தஞ்சாவூர் ஓலை ஆவணச் சுருணைகள் = 0015
11.
நாகப்பட்டினம் ஓலை ஆவணச் சுருணைகள் = 0081
12.
விருதுநகர் ஓலை ஆவணச் சுருணைகள் = 0096
13.
உதிரி ஏடுகள் =
0004 அட்டைப் பெட்டிகள்
14.
தூள் ஏடுகள் =
0002 அட்டைப் பெட்டிகள்
ஒட்டு மொத்தமாகச் சொல்லப்போனால் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில்
இருக்கக் கூடிய எந்தவொரு சிறிய பொருளானாலும் என்னுடைய கைரேகை இல்லாமல் இருக்காது என்ற
நிலையில் ஓலைச்சுவடித்துறையோடும் ஓலைச்சுவடி நூலகத்தோடும் ஒன்றி பணியில் சேர்ந்த காலம்
முதல் 21.07.2023வரை (பணி ஓய்வுக் காலம்) சுவடியும் நானுமாக இருந்திருக்கிறேன். சுவடி நூலகம் எப்படியெல்லாம் முன்மாதிரி நூலகமாக
இருக்க வேண்டுமோ அந்த நிலையில் எல்லோரும் (வெளிநாட்டினரும்) போற்றும் முதன்மை நூலகமாகத்
தமிழ்ப் பல்கலைக்கழக ஒலைச்சுவடித்துறை நூலகம் முன்மாதிரி நூலகமாகச் சிறந்து விளங்கச்
செய்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக