சங்க இலக்கியம் தொடங்கி இன்று வெளிவரக்கூடிய
புத்திலக்கியங்கள் வரையிலான பல்வேறு இலக்கிய வடிவங்களில் வாகைத்திணைக் கூறுகள்
முழுமையாகவோ பகுதி பகுதியாகவோ இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, பதிற்றுப்பத்து,
புறநானூறு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, களவழி நாற்பது, திருக்குறள், நாலடியார்,
வில்லிபாரதம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, பெரியபுராணம்
என்னும் திருத்தொண்டர் புராணம், சிற்றிலக்கிய வகைகளான
கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, பரணி போன்றவற்றில் வாகைத்திணைச் செய்திகள் இடம்பெற்று இருக்கின்றன.
இவற்றில் களவழி நாற்பது வாகைத்துறைகளில் ஒன்றான
களவழியைக் குறித்த தனிநூலாக சங்கம் மருவிய காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது.
வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமையும் வாகைத்
திணையின் களவேள்வித் துறையே பிற்காலத்தில் தனியொரு சிற்றிலக்கிய வகையான பரணி
இலக்கியமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் அஞ்ஞவதைப் பரணி, இரணியன்வதைப் பரணி,
கஞ்சவதைப்பரணி, கலிங்கத்துப்பரணி, கலிங்கப்பரணி கூடல், சங்கமத்துப்பரணி, கொப்பத்துப் பரணி, சீனத்துப்பரணி, சூரன்வதைப் பரணி, தக்கயாகப் பரணி, தமிழ்ப்பரணி, திருக்கலைசைச் சிதம்பரேசர் பரணி,
திருச்செந்தூர்ப் பரணி, பாசவதைப்பரணி
(தத்துவராயர்), பாசவதைப்பரணி (வைத்தியநாத தேசிகர்), போர்ப்பரணி, மோகவதைப்பரணி, வங்கத்துப்பரணி
போன்ற பரணி நூல்கள் காலங்காலமாகத் தோன்றின/தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
கீழ்க்கணக்கு மற்றும் மேல்கணக்கு நூல்களில் புறநானூற்று வாகைத் துறைகளான அரசவாகை, ஏறாண் முல்லை, களவழி, களவேள்வி,
சால்பு முல்லை, தாபத வாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை, மூதின் முல்லை, வல்லாண் முல்லை ஆகிய பத்துத் துறைப்
பாடல்களில் ஏறாண் முல்லை, தாபத வாகை, மூதின்
முல்லை, வல்லாண் முல்லை ஆகிய நான்கு துறைகளைத் தவிர்த்து
ஏனைய துறைப்பாடல்கள் இப்பகுதியில் ஆய்வு செய்யப்படுகிறது.
அரசவாகை
ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்குதல், குடியோம்புதல்
ஆகிய ஐந்து தொழில்களும் அரசர்க்குரியன என்பர்.
இவ்வைந்து தொழில்களில் மேலோங்கி நிற்பது அரசவாகையாகும்.
களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரன் மீது காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய பதிற்றுப்பத்து நாலாம்
பத்தில்,
“இருங்களிற்று யானை
இலங்குவால் மருப்பொடு
நெடுந்தேர்த் திகிரி
தாயவியன் களத்து,
அளகுடைச் சேவற் கிளைபுகா
ஆர
தலைதுமிந்து எஞ்சிய
மெய்ஆடு பறந்தலை”
(பதிற்றுப்பத்து, 35:3-6)
என்னும்
வரிகள் படைகளின் அழிவையும் போர்க்களக் காட்சியின் கொடுமையையும் கூறி அவனின்
வெற்றியைப் புகழ்வதாக அமைந்திருக்கின்றது.
இதே பத்தில்,
“கறுத்த தெவ்வர்
கடிமுனை அலற
எடுத்து
எறிந்து இரங்கும் ஏவல் வியன்பணை
உரும்என
அதிர்பட்டு முழங்கி செருமிக்கு
அடங்கார்
ஆர்அரண் வாடச் செல்லும்
காலன் அனைய, கடுஞ்சின முன்ப
வாலிதின்
நூலின் இழையா நுண்மயிர் இழைய
பொறித்த
போலும் புள்ளி எருத்தின்
புன்புறப்
புறவின் கணநிரை அலற
அலந்தலை
வேலத்து உலவைஅம் சினை”
(பதிற்றுப்பத்து, பா.39:4-12)
என்னும்
வரிகளில் இம்மன்னனின் போர்த் திறத்தையும் பகைவர் அரண்வாடச் செல்லும் அவனின்
சினத்தையும் தக்கவாறு எடுத்துக்கூறி அவனின் வெற்றியை உணர்த்துகின்றதைக்
காணமுடிகிறது.
திருக்குறளில்
அரசனுக்குரிய இலக்கணங்கள் இருபத்தைந்து அதிகாரங்களில் கூறப்பெற்றுள்ளன. இவற்றில் அரசனுக்குரிய ஓதல், ஈதல், படைவழங்குதல், குடியோம்புதல்
ஆகியன சுட்டப்பெற்றுள்ளன. குறிப்பாக,
“அஞ்சாமை ஈகை அறிவூக்கம்
இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு”
(குறள்.382)
“தூங்காமை கல்வி
துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள்
பவர்க்கு”
(குறள்.383)
“கொடையளி செங்கோல்
குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்
கொளி”
(குறள்.390)
எனவரும்
பாடல்களைச் சுட்டலாம். அரசர்க்குரிய
தொழில்களில் ‘வேட்டல்’ என்பதைச் சுட்டவில்லை.
எனவே,
அரசர்க்கு ‘வேட்டல்’ தொழில் இன்றி ஏனைய ஓதல், ஈதல்,
படைவழங்குதல், குடியோம்புதல் ஆகிய நான்கும்
உரியனவாகத் திருவள்ளுவர் கருதுகின்றார் எனலாம்.
களவழி
போர்க்கள வெற்றியை
நெற்களப் புனைவிலோ பிறவாறோ பாடுவதைக் களவழி என்று தொல்காப்பியமும், மறக்களவழி என்று புறப்பொருள் வெண்பா மாலையும் குறிப்பிடும் இத்துறை
தனியொரு துறையாக இருந்து களவழி நாற்பது என்னும் நூல் வழி நூலாக வளர்ச்சி பெற்ற
நிலையைக் காணமுடிகிறது. புறநானூறு
தவிர்த்து பதிற்றுப்பத்தில் ஒரு பாடல் களவழி குறித்து இடம்பெற்றுள்ளது.
“வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகும் மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு
வம்புஅமர்க் கடந்து
செருமிகு முன்பின்
மறவரொடு தலைச்சென்று
பனைதடி புனத்தின் கைதடிபு
பலஉடன்
யானைபட்ட வாள் மயங்கு
கடுந்தார்
மாவும் மாக்களும்
படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி
எருத்தின்
புன்புற எருவைப்
பெடைபுணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு
கிழக்குஇழிய
நிலம்இழி நிவப்பின்
நீள்நிரை பலசுமந்து
உருஎழு கூளியர் உண்டு
மகிழ்ந்து ஆட
குருதிச் செம்புனல் ஒழுக
செருப்பல செய்குவை,
வாழ்கநின் வளனே”
(பதிற்றுப்பத்து, பா.36)
என்னும்
பாடலில்,
யானைகள் வீழ்ந்து கிடத்தல், மாவும் மாக்களும்
உண்ணல், பறவைகள் நிலமிழிந்து ஊன் உண்ணல், கூனியர் உண்டு மகிழ்ந்து பாடல், குருதிச் செம்புனல்
ஒழுகல் ஆகிய போர்க்களக் கொடுமையைக் காட்டிப் பாடப் பெற்றுள்ளதைக்
காணமுடிகிறது. இப்பாடல் போர்
முடிந்தவிடத்து பாடப்பட்டதாகத் தெரியவில்லை.
போர் முடிந்த பிறகு போர்க்கொடுமையைப் பாடுவதாக அமைந்திருக்கிறது என்பர் கோ.
சிவகுருநாதன் (வாகைத்திணை, ப.178).
உழவுப் புனைவு அன்றிக்
களம் பாடியதற்குப் பொய்கையாரின் ஒரு மிகைப்பாடலுடன் 42
பாடல்களைக் கொண்ட களவழி நாற்பது சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. புறநானூற்றில் பாடப்பெற்ற பொருநன் கூற்றில்
கொடை நோக்கில் உழவுப் புனைவு என்னும் பொருண்மை நோக்கம் இதில் இடம்பெறவில்லை. சேரனுக்கும் சோழனுக்கும் நடந்த போரில் சோழன்
வெற்றிபெற சேரன் தோற்ற நிலையில் இந்நூற் பாடல்கள் பொய்கையாரால்
பாடப்பெற்றிருக்கின்றன. இதில் களத்து நிகழ்வுகள் மிக விரிவாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூறாக
விரித்துச் செல்லும் பாங்கு இந்நூல் முழுக்க வெளிப்படுகிறது. யானைச்சாவு, குதிரைச்சாவு
எனப் பிரித்ததுடன் வெட்டுண்டு வீழ்ந்த துதிக்கை நிலமிசைப் புரளல் பற்றியும்,
துதிக்கை துண்டிக்கப்பெற்றுக் குருதிசோரல் பற்றியும், காலாள் சோடு அற்ற கழற்கால் பற்றியும், கேடகத்தோடு
அற்ற தடக்கை முதலிய உறுப்புச் சிதைவுகள் பற்றியும் தனித்தனியாக தனித்தனிப்
பாடல்களில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
களவேள்வி
போர்க்களத்து வீழ்ந்த
மன்னர்களின் மூளையஞ் சோற்றை அவர்களின் அறுந்து வீழ்ந்த கையையே துடுப்பாகக் கொண்டு,
வென்ற மன்னன் பேய்க்குக் கூழாக்கிக் கொடுத்து ஊட்டியமையே களவேள்வி
என்னும் துறைக்குறிப்பு ஆகும்.
களவேள்வியின் ஒரு கூரான கூழூட்டும் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பரணி
இலக்கியம் தனியொரு இலக்கிய வகையாக வளர்ந்துள்ளது.
தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனின் களம் வேட்ட செய்தியை மாங்குடி மருதனார்,
“உலகம் கோட்ட களிற்றுக்
குழும்பின்
நிணம்வாய்ப் பெய்த பேய்
மகளிர்
இணைஒலி இமிழ் துணங்கைச்
சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சு வந்த போர்க்
களத்தான்”
(மதுரைக்காஞ்சி, வரி.24-28)
என
விரிவாக எடுத்துக்காட்டுகின்றார்.
இவ்வரசனின் களவேட்டச் செய்தியை இவர் புறநானூறு 26லும் எடுத்தியம்பியிருக்கின்றார்.
இவ்வரசன் களவேட்ட செய்தியை அகநானூறு,
“சேரல் செம்பியன்
சினம்கெழு திதியன்
போல்வல் யானைப் பொலம்பூண்
எழினி
நார்அரி நறவின் எருமை
யூரன்
தேம்கமழ் அகலத்துப்
புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான்
இயல்தேர்ப் பொருநன்,என்று
எழுவர் நல்வலம் அடங்க
ஒருபகல்
முரைசொடு வெண்குடை
அகப்படுத்து உரைசெல
கொன்று களம்வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர்
ஆர்ப்பினும் பெரிதே”
(அகம்.36:15-23)
என்று
மதுரை நக்கீரனார் குறிப்பிடுகின்றார்.
பாண்டியன் மறவனாகிய பண்ணி என்பார் களம் வேட்டதை,
“வள்வாய் அம்பின் கோடைப்
பொருநன்
பண்ணி தைஇய பயம்கெழு
வேள்வியின்
விழுமிது நிகழ்வது
ஆயினும்”
(அகம்.13:10-12)
என்று
பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.
முருகப் பெருமானின் ஒரு முகம் களம் வேட்ட செய்தியினை நக்கீரரின்
திருமுருகாற்றுப்படை,
“. . . . . . . . . . . . . . .
ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட் டன்றே”
(திருமுருகாற்றுப்படை, வரி..98-100)
என்று
கூறுகின்றது.
சால்பு
முல்லை
சான்றோர் தம்முடைய
இயல்பில் உறுதியாக நிற்றலைச் சால்பு முல்லை என்று குறிப்பிடுவர். சான்றோர் கடனிலை
குன்றார் என்பதை நற்றிணை,
“நாடல் சான்றோர் நம்புதல்
பழிஎனின்
பாடுஇல கலுழும் கண்ணொடு
சாஅய்ச்
சாதலும் இனிதே காதல்அம்
தோழி
அந்நிலை அல்ல ஆயினும்
சான்றோர்
கடன்நிலை குன்றலும்
இலர்”
(நற்றிணை, பா.327:1-5)
என்பதால்
உணர்த்தும். திருவள்ளுவப் பெருந்தகையின்
திருக்குறள் பல அரிய தத்துவப்பொழிலாக விளங்கும் நூலாகும். இதில் சான்றோர்தம் அதிகாரங்களின் வரன்முறைகள்
என்ன?
அவர்தம் பண்பு நலன்கள் என்ன? அவர்களின் ஊழி
கூறினும் பண்புநிலை மாறாத் தன்மையர் என்றவாறு சான்றாண்மை (அதிகாரம்.39) என்னும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.
பார்ப்பன
முல்லை
போர் நிறுத்தும்
முயற்சியினை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.
அதாவது, தகுந்த போரை நிறுத்துதல் என்றும், தகாத போரை நிறுத்துதல் என்றும் அவை அமையும். தகுந்த போரை நிறுத்துதல் என்பது வாகைத்
திணைக்குட்பட்ட பார்ப்பன முல்லைத் துறையைத் சார்ந்ததாகவும், தகாத
போரை நிறுத்துதல் என்பது துணைவஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கொள்வர்.
பார்ப்பன முல்லையைக்
கலித்தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு,
குறிஞ்சிப்பாட்டு போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. இருபெரும் பகை மன்னர்கள் போரில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும்போது வெற்றி யார் பக்கம் நிகழும் என்பதிலேயே நோக்கமாகக்
கொண்டிருப்பர். இருப்பினும் சில வேளைகளில்
போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து போர் நிறுத்தம் பெற்றும், போர் நிறுத்தம் பெறாமலும் இருந்திருக்கின்றதைப் பல்வேறு இலக்கியங்கள்
சுட்டிக்காட்டுகின்றன.
“வலிமிகு வெகுளியால்
வாளுற்ற மன்னரை
நயனாடி நட்பாக்கும்
வினைவர் போல்”
(கலித்.46:7-8)
“யான்கென் றுரைப்பவுந்
தேறார் பிறரும்
சான்றோ ருரைப்பத்
தெளிகுவர் கொல்லென”
(பதிற்றுப்பத்து, வா.73:14-15)
“இகன்மீக் கடவு மிருபெரு
வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர்
போல”
(குறிஞ்சிப்பாட்டு, வரி.27-28)
என்றவாறெல்லாம்
இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது போர்க்களத்தில்
வீற்றிருக்கும் இருவேந்தர்களையும் சமாதானப்படுத்தி போர் ஒழித்த செயலைக்
காணமுடிகிறது. இங்குத் தூது சென்றவர் யார்
எனச் சுட்டாமல் வேந்தரின் செயலாகவே காட்டப்பெற்றுள்ளமை உணரமுடிகிறது. ஆனால்,
“கணநிரை யன்ன பல்கரற்
குறும்பொறைத்
தூதொய் பார்ப்பான் மடிவௌ¢
ளோலைப்
படையுடைக் கையர் வருதொடர்
நோக்கி
உண்ணா மருங்கு லின்னோன்
கையது”
(அகம்.337:6-9)
என்னும்
அகநானூற்றுத் தொடர்கள் பார்ப்பனன் ஒருவன் பனையோலை கொண்டு பாலைவழி சென்றதைக்
காட்டுகின்றது. இதே நிலையினைப்
புறநானூறும்,
“வயலைக் கொடியின் வாடிய
மருங்குல்
உயவ லூர்திப் பயலைப்
பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது
புக்குச்
செல்லிய சொல்லோ சிலவே
அதற்கே
ஏணியுஞ் சீப்பும் மற்றி
மாண்வினை யானையு மணிகளைந்
தனவே”
(புறம்.305)
என்று
குறிப்பிடுவதைக் காணும்போது போர் நிறுத்த முயற்சியில் பார்ப்பனர் ஈடுபட்டுள்ளனர்
என்பது தெரிகின்றது. எனவே, தூது செல்வதற்குப் பார்ப்பனரை ஏற்றவராகக் கொண்டிருந்தனர் எனலாம்.
பார்ப்பன
வாகை
“ஓதுதற்குரிய நூல்களையும்
கலைகளையும் சாத்திரங்களையும் குறைவறப் பயிலுதலும், குறைவறப்
பிறர்க்குச் சொல்லிக் கொடுத்தலும், மறை விதித்த வேள்விகளைத்
தாம் புரிதலும், பிறரைப் புரியச் செய்தலும், இரப்போர்க்குக் கரவாது ஈகை புரிதலும், வேள்விக்களம்,
அரசவை முதலிய இடங்களில் ஈகை நிகழும் பொழுது விலக்காது ஏற்றலும் ஆகிய
ஆறு தொழில்களில் முனைந்து நிற்றலைப் பார்ப்பன வாகை” (புறத்திணை வாழ்வியல், பக்.219-20) என்பர். பார்ப்பனரின் திறன்களில் ஒன்றாகக் கருதத்தக்கது
ஈதல். இப்பண்பு எப்படி இருக்கவேண்டும்
என்பதைத் திருவள்ளுவர்,
“இலனென்னும் எவ்வம்
உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள”
(குறள்.223)
என்னும்
குறள் வழி விளக்குகின்றார்.
இவ்வாறாக அரசவாகை,
களவழி, களவேள்வி, சால்பு
முல்லை, பார்ப்பன முல்லை, பார்ப்பன
வாகை ஆகிய ஆறு வாகைத்துறைப் பாடல்கள் பதினெண்கீழ்க்கணக்கின் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை,
பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக்காஞ்சி போன்றவற்றிலும், பதினெண் மேற்கணக்கில்
திருக்குறள் மற்றும் களவழி நாற்பதிலும் அமைந்திருப்பதைப்
பார்க்கமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக