ஞாயிறு, 15 மே, 2022

மணக்குடவரில் வ.உ.சி.

 

மணக்குடவரில் வ.உ.சி.

முனைவர் மோ.கோ. கோவைமணி

தலைவர், ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்று வழக்கறிஞர், பேச்சாளர் (சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது), தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப்போராட்ட வீரர், பத்திரிகையாசிரியர் (விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற இதழ்களின் ஆசிரியர்), எழுத்தாளர் (1914இல் மெய்யரம், 1915இல் மெய்யறிவு மற்றும், 1915இல் பாடல் திரட்டு, 1946இல் சுயசரிதை ஆகிய நான்கும் கவிதை நடையில் அமைந்தவை), மொழிபெயர்ப்பாளர் (ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை 1909இல் மனம் போல் வாழ்வு எனவும், ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை 1914இல் அகமே புறம் எனவும், ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" என்ற நூலை 1916இல் வலிமைக்கு மார்க்கம் எனவும், ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" என்ற நூலை 1934இல் சாந்திக்கு மார்க்கம் எனவும் மொழிபெயர்த்துள்ளார்), கட்டுரை ஆசிரியர் (கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ்), ஆராய்ச்சியாளர், உரையாசிரியர் (1917இல் இன்னிலை, 1935இல் திருக்குறள் மற்றும் சிவஞான போதம்), பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை வெளிக்கொணர்ந்த பதிப்பாசிரியர் (1917இல் திருக்குறள் மணக்குடவர் உரை-அறத்துப்பால், 1928இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம்) எனப் பன்முகத் தன்மை வாய்ந்தவராகத் திகழ்ந்திருக்கிறார்.  இவரின் எழுத்து ஆக்கங்களைத் தனியொரு ஆய்வாக மேற்கொள்ளலாம்.  என்றாலும், ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்துள்ள திருக்குறள் அறத்துப்பால் மணக்குடவர் உரைப் பதிப்பில் வ.உ.சி. கொண்ட பதிப்பு நெறிமுறைகள் இங்கு ஆராயப்பெறுகிறது.

ஓலைச்சுவடிகளில் இருந்த வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் கி.பி.1812 முதல் அச்சிட்டுப் பயின்றும் பயிற்றுவிக்கப்பெற்றும் வருகிறது. முதலில் மூலமும் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்த நிலையில், திருக்குறளுக்கு என்று சிறந்ததாகக் கருதப்பெற்ற பதின்மர் உரைகளில் பரிமேலழகர் உரையே பரவலாகப் பயிலப்பெற்ற நிலையில், வ.உ.சி. ஏனைய உரைகளையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டு மணக்குடவர் உரையைக் கண்டு அவற்றில் தோய்ந்து அவற்றை வெளிப்படுத்த எண்ணினார். 

“(திருக்குறள்) பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகர் உரை ஒன்றே.  அவ்வுரையைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன்.  அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று.  அதுமுதல், தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். 

அம்முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று.  அது வள்ளுவர் கருத்துக்களைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பெற்றதாகவும் தோன்றிற்று.  அதுபற்றி, யான் அதனை அச்சிட்டு வெளிப்படுத்த”1 எண்ணிப் பதிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. 

இவரின் பதிப்புப் பணிக்குச் சென்னை அரசாட்சியாரது கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள மணக்குடவ ருரைப்பிரதி ஒன்றும், மஹோபாத்தியாய மகா.ள.ள.ஸ்ரீ. உ.வே. சாமிநாதையரவர்களிடத்தில் உள்ள மணக்குடவருரைப் பிரதி ஒன்றும் ஆக இரண்டு சுவடிகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன.  இவ்விரு சுவடிகளும் படியேடும் வழியேடுமாக இருந்ததை, “அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியில் அதிகாரப் பெயரும் முறையும் பரிமேலழகருரையைப் பின்பற்றி யிருக்கின்றன.  அன்றியும், சில குறள்களின் மூலமும்  உரையும் சிதைந்தும் குறைந்து மிருக்கின்றன.  பின்னர், மஹோபாத்தியாய மகா.ள.ள.ஸ்ரீ. உ.வே. சாமிநாதையரவர்களிடத்தில் உள்ள மணக்குடவருரைப் பிரதியைத் தருவித்துப் பார்த்தேன்.  அது, அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரிந்தது.  ஆயினும், அதனையும் ஸ்ரீசகஜாநந்த சுவாமி யவர்களையும் துணையாகக் கொண்டு, எனது பிரதியில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவருரையை ஒருவாறு பூரணமாக்கி அச்சிற்குக் கொடுத்தேன்”2  என்பதாலும், அஃது அச்சாகி வருங்காலையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான் தி. செல்வகேசவராய முதலியாரவர்களும், சென்னைக் கிரிஸ்டியன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான் த. கனகசுந்தரம் பிள்ளையவர்களும் அதனைப் பலமுறை பார்த்துச் சீர்படுத்தித் தந்தார்கள்”3 என்பதாலும் இப்பதிப்பில் வ.உ.சி. மேற்கொண்ட செயன்மைகள் புலப்படுகின்றன.

பரவலாக பயின்றுவரும் பரிமேலழகர் உரையை விட மணக்குடவர் உரையில் பல மாற்றங்களைக் கண்டுணர்ந்த வ.உ.சி. அவ்வுரையின் சிறப்பைத் தமிழுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்னும் முயற்சியின் விளைவே திருக்குறள் மணக்குடவர் உரைப் பதிப்பு எனலாம்.  “மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையிற் சிறிதும் குறட்பாக்களின் முறையிற் பெரிதும் வேறுபட்டிருப்பதோடு, பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டும், பலபல குறள்களுக்கு வெவ்வேறு பொருள்கள் உரைத்துமுள்ளனர்.  இவ்வேற்றுமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமைகளையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு, குறள்களுக்கு இவருவம் உரைத்துள்ள பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் புதிய பொருள்கள் உரைக்கவும் முயலுவர்.  அவர் அவ்வாறு செய்யவேண்டுமென்னும் விருப்பமே, யான் இவ்வுரையை அச்சிடத் துணிந்ததற்கு முக்கிய காரணம்”4 என்னும் வ.உ.சி.யின் கூற்று இதனை மெய்ப்பிக்கும். 

திருக்குறள் மணக்குடவர் உரை முப்பாலுக்கும் இருக்க, வ.உ.சி. அறத்துப்பாலை மட்டும் வெளியிட்டுள்ளார்.  அதற்கான காரணத்தை அவரே தன்னுடைய பதிப்புரையில் வெளிப்போந்துள்ளார்.  “இந்நூலின் ஒவ்வொரு பாலும் அச்சாகி முடிந்தவுடன் வெளிவருதல் நலமென்று எனக்கு இப்பொழுது தோன்றுவதனால், இன்று வரையில் அச்சாகி முடிந்திருக்கிற அறத்துப்பாலை இப்பொழுது வெளியிடுகிறேன்.  பொருட்பாலும் காமத்துப்பாலும் விரைவில் அச்சாகி வெளிவரும்.  இந்நூலை யான்அச்சிடத் தொடங்கிய பின்னர்க் காகிதத்தின் விலை மிக ஏறிவிட்டதால், இதற்கு முன் குறித்த விலை ரூபா இரண்டை ரூபா மூன்றாக ஏற்றி, அதனை அறத்துப்பாலுக்கு ரூபா 1-0-0ம், பொருட்பாலுக்கு ரூபா 1-1-0ம், காமத்துப்பாலுக்கு ரூபா 1-12-0ம் விதானம் செய்துள்ளேன்”5 என்று சொல்லப்பெற்றுள்ளதைக் காணும்போது முப்பாலையும் தனித்தனியா வெளியிட எண்ணி முதலில் அறத்துப்பாலை 1917இல் வெளியிட்டிருக்கிறார்.  ஏனைய பொருட்பாலும், காமத்துப்பாலும் வெளியிடத் தகுந்த நிலையில் உருவாக்கி இருந்தமையால்தான் அதற்கான விலையையும் தீர்மானித்திருக்கிறார்.  காகித விலையேற்றத்தினாலும் பொருளாதார நெருக்கடியாலும் மூன்று பகுதிகளையும் ஒன்றாக வெளியிடாமல் அப்போது அச்சாகி இருந்த அறத்துப்பாலை மட்டும் வெளியிட்டு, ஏனைய பகுதிகள் வெளிவருங்கால் அதன் விலை மாற்றம் பெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்விரு பகுதிகளும் இன்றுவரை எங்கும் கிடைக்கவில்லை என்பது நெஞ்சு நோகும் செயலாகவே இருக்கிறது. வெளிவந்த அறத்துப்பால் மணக்குடவர் உரையில் வ.உ.சி. எவ்வாறு மிளிர்கிறார் என்பதை இனிக் காண்போம்.

            மூல நூலாசிரியரின் பாடங்களுக்கு உரையாசிரியர்கள் மூலபாட ஆய்வும், பாடவேறுபாடுகளும் சுட்டும் நிலையே சுவடிப்பதிப்பில் காலந்தோறும் பின்பற்றப்பெறுவதை பெரும்பான்மையான சுவடிப் பதிப்புகளில் காணக்கூடிய ஒன்று.  ஆனால், உரையாசிரியரின் உரைகளில் போதிய விளக்கமும் தெளிவும் குழப்பமும் உண்டாகும் காலத்து அவ்வுரையைப் பதிப்பிப்பவர்கள் அவ்வுரையைத் தற்காலத்து மக்களுக்குப் புரியும் வண்ணம் கால மாற்றத்திற்கு ஏற்ப எளிமைப்படுத்திப் பதிப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில்தான் ஒரே பதிப்பாசிரியர் அவர் பதிப்பித்ததின்  இரண்டாம் பதிப்பைப் பதிப்பிப்பதையும், ஒரு பதிப்பாசிரியர் ஒரு நூலைப் பதிப்பித்த பின்னர் வேறொரு பதிப்பாசிரியர் அதே நூலை மீண்டும் பதிப்பிப்பது என்பது அப்பதிப்பிலிருந்து வேறுபட்ட கருத்துக்களை விளக்கிப் பதிப்பிப்பதையும் பதிப்பு நெறியாகக் கொண்டிருக்கின்றனர்.  அவ்வகையில், மணக்குடவரின் உரையில் புரியாத சொற்களை வ.உ.சி. சுருக்கமாகவும், விரித்தும் பல இடங்களில் காட்டியிருக்கிறார்.

Ø சேர்ந்தவரன்றே என்பது சேர்ந்தவரே (குறள்.3) என்று பாடவேறுபாடு சுட்டிக் காட்டி இருப்பதைக் காணமுடிகிறது.

Ø இ.ள்.- அழுக்காற்று அகன்றாரும் இல்லை – அழுக்காற்றினான் செல்வமுடைய ரானாரும் இல்லை;  அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – அழுக்காறில்லாதாராய்ச் செல்வத்தினின்று நீங்கினாரும் இல்லை.  உரையாசிரியர் (மணக்குடவர்) இக்குறட்கு வேறாகப் பொருள் கூறாது, “முன்பு சொன்னதே பொருள்” என்று கூறிச் சென்றார் (குறள்.295) என்று பொருள் கூறாதவிடத்து தாமே உரையாசிரியராக இக்குறட்பாக்கு உரை வரைந்திருக்கிறார்.

Ø “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம், உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்னும் குறட்பாக்கு அழுக்கறுப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறுப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறுப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வுரையாசிரியர் (மணக்குடவர்) உரைத்திருப்பது கவனித்தற்பாலது.  அழுக்கறுத்தல் என்பதனை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர் (குறள்.297) என்று மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையையும் ஒப்புநோக்கிய தன்மை வெளிப்படுகிறது.

Ø வாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை “வாய்மை” யாலும், கடுஞ்சொல்லை “இனியவை கூற”லாலும், குறளையைப் “புறங்கூறாமை”யாலும் விலக்கிப் பயனில் சொல்லை இவ்வதிகாரத்தால் (பயனில சொல்லாமை) விலக்குகின்றார் (அறம். 33ம் அதிகாரம்) என்றும், வாய்மையாதுவது பொய்சொல்லாமை.  அஃதாவது, தீமையில்லாத சொற்களைச் சொல்லுதல்.  இது விருந்தோம்பலின் கண்ணே இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது (91) என்றும் உரைக்கப்பெற்றவற்றைக் காணும்போது அதிகார முறைவைப்பை மணக்குடவர் பார்வையில் வ.உ.சி. பார்த்திருப்பது வெள்ளிடை.

Ø பொறிகள் ஐந்தாவன – மெய், வாய், கண், மூக்கு, செவி.  அவற்றிற்கு நுகர்ச்சியான (அஃதாவது அநுபவமான) ஐந்தாவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை.  அந்நுகர்ச்சியான ஐந்தையும் சொல்லுதலாவது, அவை தன்மனத்தைக் கவராதபடி அவற்றை அடக்கியாளுதல் (குறள்.341) என்றும், தெள்ளியா – அறிவுடையார்.  தெள்ளியராதலும் என்றதனால், திருவினராதலும் என்று கொல்லப்பட்டது (குறள்.378) என்றும் சுட்டப்பெற்றமையைக் காணும்போது வ.உ.சி. மணக்குடவரின் உரையை விளக்கும் பான்மை வெளிப்படும்.

Ø விதானம் பண்ணினவன் – ஒவ்வோர் உயிரின் வினையின் பயனை அஃதஃது அநுபவிக்கும்படி விதித்தவன்.  வினைப்பயன் சடமாதலால் தன்னைச் செய்த உயிரை அறிந்து பொருந்தாது. அதனை அறிந்து பொருந்துவோன் கடவுளென்பது ஆசிரியர்கொள்கை.  “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து, கெடுக உலகியற்றி யான்” என்று பிறாண்டும் கூறியுள்ளார் (குறள்.377) என்பதால் மணக்குடவரின் கொள்கையை விளக்கித் தன்கருத்தினை சுட்டும் பாங்கு வெளிப்படும்.

இலக்கணக் குறிப்பு

மணக்குடவர் உரையில் வரக்கூடிய சொற்களுக்கு வ.உ.சி. இலக்கணக் குறிப்பு சுட்டிச் செல்லும் பான்மை அவரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது.  வணங்காத (10), பிறங்காத (62), இல்லாத (72), புறத்ததாக (82), ஓம்பாத (89), ஒருதலையாக (112, 355), எய்தாத (137), செல்லாத (154), ஆங்கு (196), செய்யாது (210), பொருளாக (261), அறிய (285), உடைய (338), ஊட்டாது (379) போன்ற மூலத்திலும் உரையிலும் வரக்கூடிய சொற்களை அடையாளம் கண்டு அவை ஈறுகெட்டு நின்றிருப்பதை எடுத்துரைக்கிறார்.

மேலும், மணக்குடவர் உரையில் வரக்கூடிய இலக்கணக் குறிப்புக்களை எல்லாம் சுட்டிக் காட்டிய தன்மையைப் பார்க்கும்போது வ.உ.சி.யின் இலக்கணப் புலமை தெள்ளிதின் விளங்குகிறது.  அவர் பொருள் (63) என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை; அனிச்சம் (90) என்பது ஆகுபெயர்; பொய்யாமை (97) என்பது அதனால் வரும் புகழுக்காயினமையால் ஆகுபெயர்; காலத்தினால் (105), பிறப்பு (133) என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்; தவ்வையை (298) என்பன வேற்றுமை மயக்கம்; எழு (107) என்பது வினைத்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றது; ஓரால் (126) என்பது ஆல் விகுதிபெற்ற தொழிற்பெயர்; படுபாக்கு (134) என்பது தொழிற்பெயர்; ஒன்றோ (149), ஓடு (325) என்பன எண்ணுப்பெயர்; எனல் (192, 327-முதல்) என்பன எதிர்மறை வியங்கோள்; எனல் (327-இரண்டாவது) என்பது உடன்பாட்டு வியங்கோள்; கூறுவனாயின் (324), திரண்டால் (333), திரளுமாறு (333) என்பன எச்சம்; அத்து (333) என்பது சாரியை, சேர்ந்தாரைக் கொல்லி (156) என்பது காரணக்குறி; உளர் சிலராகிய காரணம் (279) என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது; நெருநல் உளனொருவன் இன்று இல்லை (336) என்பது உலகத்தார் கூற்றாகக் கூறப்பட்டுள்ளது; பகுதியால் என்பதில் ஆல் (113) என்பது உடனிகழ்ச்சியாய் வந்தது; ஒழுகப்படும் (123), ஓம்பப்படும் (140) என்பதில் வரும் ‘படும்’ என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது போன்ற இலக்கணக் குறிப்புகளைச் சுட்டும் நெறிகளைப் பார்க்கும்போது மணக்குடவர் உரையில் வ.உசி.யின் ஈடுபாடு தெள்ளிதின் வெளிப்படுகிறது.

கெட்டு வந்த சொற்கள்

மணக்குடவர் உரையிலும் திருக்குளிலும் வரும் சொற்களில் கெட்டு வந்த சொற்களை அடையாளம் கண்டு தன்னுடைய பதிப்புப் பாங்கை வ.உ.சி. வெளிப்படுத்துகின்றார். காட்டாக, புரிந்த (55) என்பது ‘ஈற்று அகரம்’ கெட்டும், இல்லவர்க்கு (73) என்பது ‘ல ர ஒற்று’ கெட்டும், நாடாத (78) என்பது ‘ர று’ கெட்டும், கொன்றால் (109), கொண்டற்று (22), தளிர்த்தற்று (72), விளிந்தால் (33) என்பனவற்றில்  ‘ஆல்’ கெட்டும், வாரியினுடைய (16) என்பது ‘யகரம்’ கெட்டும், எச்சத்திற்கும் (120) என்பது ‘உம்மை’ கெட்டும், ஒழுக்காறாக (291) என்பது ‘று’ கெட்டும், பிழையாதது (157) என்பது குறைந்து நின்றது, எனைத்தானும் என்பதில் ஆயினும் (165) என்பது ‘ஆனும் எனக் குறைந்தும்’ நின்றது, கவர்ந்த (260) என்பது ‘ஈற்றகரம் கெட்டு’ நின்றது, ஆகாதது (267) என்பது ‘ஆகாது எனக் குறைந்து’ நின்றது, யாதொன்றானும் (93) என்பது தொகுத்தலாய் யாதொன்றும் என நின்றது, தீதே (322) என்பது ‘தேற்றேகாரம்’ கெட்டும், அஃது (334) என்பது ‘ஆய்தம்’ கெட்டும், நலத்துக்கு (149) என்பது ‘நலக்கு’ எனக் குறைந்தும், கண்டாரே (358), உடம்புகளே (74) என்பனவற்றில் ‘ஏகாரம்’ கெட்டும் வந்தமையை எல்லாம் இடம் சுட்டிக் காட்டுகின்றார்.

அசைச் சொற்கள்

மணக்குடவர் உரையில் அசைச் சொல்லாக இடம்பெற்றவற்றை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார்.  குறிப்பாக, ஏகாரம் (64, 71, 127, 139, 192, 304, 333, 338), கொல் (70, 85, 167, 212, 259, 318, 340, 343), தான் (17, 206), ஆம் (38, 376), ஆல் (185-இரண்டு, 218), மற்று (15, 30, 65, 173, 205, 254, 271, 365), ஓ (31), ஓரும் (361-இரண்டு) ஆகியன அசைச்சொல் என்று வ.உ.சி. இடம்சுட்டிக் காட்டுகிறார்.

ஒருமை பன்மை

“ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி

பன்மைக் காகு மிடனுமா ருண்டே”

என்னும் தொல்காப்பியர் சூத்திரப்படி எனைத்தொன்றும் என்னும் ஒருமைப் பெயர் எவையும் என்னும் பன்மைப் பெயர்க்காயிற்று (92) என்றும், தேரான் என்னும் ஒருமைப் பெயர் தேரார் என்னும் பன்மைப் பெயர்க்காயிற்று (143) என்றும், ஈதல் என்னும் ஒருமைப் பெயர் உள என்னும் பன்மை வினையோடு பொருந்தி நின்றது (223) என்றும் ஒருமையாக சுட்டியவை பன்மைப் பொருளாகி நின்றதை வ.உ.சி. சரியான முறையில் உரையில் விளக்கம் தந்திருக்கிறார். 

மேலும், உணல் என்னும் ஒருமைப் பெயர் இன்னாத என்னும் பன்மைச் சொல்லோடு பொருந்தி நின்றது (227) என்றும், அறிவு என்பது அறிவுடையனாயிருக்குத் தன்மையைக் குறித்து நின்றது (302) என்றும், நட்பு என்பது நட்பின் விடுகையை உணர்த்தி நின்றது (338) என்றும், நின்றானும் என்பது உம்மை தொக்கு நின்றது.  உம்மை உயர்வு சிறப்பும்மை, அஃத, அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் வேறொன்றாலும் கெடான் என்பதனைச் சுட்டி நின்றது (306) என்றும், ஈந்து என்பது வலித்து நின்றது (226) என்றும், கொல் என்பது ஈண்டு ஐயப்பொருளைத் தந்து நின்றது (226) என்றும், பெண்மை என்பது அவளது நலத்தை உணர்த்தி நின்றது (141) என்றும், அவ்வாறு என்பது அவ்வைந்து புலன்களாக. அவற்றின் காரணம் – அவ்வைந்து புலன்களையும் உணரும் அறிவு (24) என்றும் சொல்லப்பெற்றிருக்கிற தொடர்களைப் பார்க்கும்போது மணக்குடவர் உரைத்ததற்கு எளிய முறையில் விளக்கம் சொல்லப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

உரை விளக்கம்

மணக்குடவர் உரையில் விளங்காத, இன்னும் விளக்கம் பெறவேண்டிய இடங்களை அடையாளம் கண்டு காலத்தின் தேவைக்கேற்ப எளிய முறையில் மணக்குடவர் உரைத்ததற்கு உரைத்த உரையாக சில இடங்களில் வ.உ.சி.சி உரை அமைந்திருக்கிறது. வலைபோலத் துன்பத்தைத் தருதலின் பிறப்பினை வலையென்று கூறினார் (348), ஐம்புலம் என்பது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.  அவற்றை வெல்லலாவது, அவற்றைப் பற்றி எழும் அவாவினை ஒழித்தல் (303), அகத்துள் கொள்ளுதலே உணர்தலாதலால், “பொருளென்று உணரும்” என்பதற்குப் “பொருளாகக் கொள்கின்ற” என்று உரைத்தனர் (352), இது , தவத்தினர் வடிவு கண்டு நேர்படாரென்றது தவத்தினர் வடிவை ஒருவன் கொண்டுள்ளதாலேயே (அவன் உண்மையான தவத்தினனென்று கருதி) அவனோடு இணங்கார் அறிவுடையாரென்றது இது (282), வான் அளவும் உயர்ந்த பெருமை உண்டாயினும் என்பது தவத்தினால் மிக வுயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும் (285), மனவறி வின்றி ஐம்பொறி யறிவையுடைய மனித உருவினரை மாக்களென்பர் தொல்காப்பியர் (179), செல்வம் முதலியவற்றின் களிப்பால் பெரும்பாலும் தீவினை நிகழ்வதால் “தீவினை யென்னும் செருக்கு” என்றார் (208), கேட்டவர் அவை இனிதென்று சொல்லார் என்றவாறு (66) என்பவற்றினால் என்று வரும் இடங்களையெல்லாம் பார்க்கும்போது வ.உ.சி.யின் உரைத்திறனை அறியமுடிகிறது. 

முடிவுரை

            பல நூல்களைப் பதிப்பித்து பதிப்பாசிரியர் ஆனோரும், சில நூல்களைப் பதிப்பித்து பதிப்பாசிரியர் ஆனோரும் தமிழுலகில் பெயர் பெற்றிருக்கின்றனர்.  இவர்களில் உரையாசிரியராய் இளம்பூரணரை, பரிமேலழகரைக் கருதுவதுபோல் பதிப்பாசிரியர் என்றாலே உ.வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றோரை எண்ணமிடும் இடத்தில் இரண்டு நூல்களையே பதிப்பித்த வ.உ.சி.யும் அவரின் பதிப்புத் திறனால் முன்னிற்கின்றார் என்றால் அது மிகையில்லை. 

அடிக்குறிப்பு

1. வ.உ.சி., திருக்குறள் மணக்குடவர் உரை, பதிப்புரை, பக்.2-3.

2. மேலது.

3. மேலது,ப.3.

4. மேலது, பக்.4-5.

5. மேலது, பக்.4-5.

குறிப்பு :- அடைப்புக் குறிக்குள் இடம்பெற்றிருக்கும் எண்கள் குறள் எண்ணைக் குறிக்கும்.

பாரதியின் கவிதைத் தேடல்

 

பாரதியின் கவிதைத் தேடல்

முனைவர் மோ.கோ. கோவைமணி

துறைத்தலைவர்

ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் - 613 010

இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் சீனாவில் வடவியீ (கி.பி.386-636) வமிச காலத்தில் பரவத் தொடங்கியது.  சீனாவில் தோன்றிய அனைத்துக் கலைகளும் பின்னாளில் கி.பி.6ம் நூற்றாண்டில் ஜப்பானிலும் செழித்தோங்கச் செய்தன.  சீனக் கலைகளே ஜப்பானியக் கலைகளாயின.  காமாக்கூராக் (கி.பி.1192-1332) காலத்தில் 'ஜென்' என்னும் பௌத்த மதம் ஜப்பானில் தலைமை வகித்தது.  தியானத்திலேயே ஞானமும் முத்தியும் சித்திப்பதாக ஜென்மதம் போதித்தது.  இந்நிலையில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய இலக்கிய வடிவமே ஐக்கூ.  இவ்வடிவம் ஜென் பௌத்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.  ஜென் பௌத்தம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனா சென்ற ஜப்பானிய பௌத்த குருமார்கள், அளவில் சிறியதான சீனக் கதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இதுதான் ஐக்கூவின் தொடக்கம்.

ஐக்கூவில் குறியீடு இல்லை; படிமம், அணி, அலங்காரம் இல்லை.  ஒரு குறிப்பிட்ட மனநிலையைத் தோற்றுவிக்கக் கவிஞன் ஒரு செய்தியைச் சொல்வான். அதோடு கவிஞனின் வேலை முடிந்துவிடும்.  அதன்பிறகு அதிலுள்ள கருத்தாழப் பொருள்களை வாசகனோ கேட்போனோ தோண்டி இறைத்துக்கொள்ள வேண்டும்.  இவ்வகைப்பட்ட ஐக்கூக் கவிதைகள் 17ஆம் நூற்றாண்டு முதல் ஜப்பானில் வளம் சிறந்த இலக்கிய வடிவமாகத் திகழ்ந்து வருகின்றது.

மேலை நாடுகளில் ஐக்கூ

ஜப்பானிய இலக்கிய உலகில் வரலாறு படைத்த ஐக்கூக் கவிதையானது பதினைந்தாம் நூற்றாண்டில் அரும்பி, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து, மணந்து உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது.  மோரிடாகே (1473 - 1549), சோகன் (1465 - 1553) என்பவர்கள் தான் ஐக்கூவின் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.  பாஷோ (1644 - 1694)தான் மிகப் பெரிய ஐக்கூக் கவிஞராகத் திகழ்ந்தார்.  பாஷோவிற்குப் பிறகு ஐக்கூவிற்கு மேன்மையையும் புலனுணர்வையும் எண்ணத்தையும் தந்த பூசன் (1716 - 1784), ஐக்கூவை சாமான்யர்களின் கையில் கொண்டுவந்து கொடுத்த இஸ்ஸா (1763 - 1823) ஐக்கூவில் இயற்கையான, உண்மையான சித்திரங்களையே வரையவேண்டும் என்ற ஷிகி (1867 - 1902) மற்றும் கோஷி (1874 - 1959) ஆகியோர் ஐக்கூக் கவிதையின் பரிணாம வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தோராவர்.

கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜப்பானிய ஐக்கூக் கவிதை வடிவமும் அதன் செறிவும் உள்ளடக்கமும் ஃபிரான்சில் பெரும் வரவேற்பைப் பெற்றது.   இவ்வடிவத் தாக்கத்தின் காரணமாக 1910இல் Anthologie de la Litterature Japanise - Marcel Revon's பிரென்ஞ்சு மொழியில் வெளியிட்டார்.  அதன்பின் 1920இல் பன்னிரண்டு கவிஞர்களின் பிரென்ஞ்சு ஐக்கூக் கவிதைகளைத் தொகுத்து (Nouvelle Rewe Francaise Published) வெளியிடப்பட்டன.  

ஜப்பானிய ஐக்கூக் கவிதைகள் பிரென்ஞ்சு நாட்டில் வரவேற்புப் பெற்ற அதே காலகட்டத்தில் ஆங்கில, அமெரிக்க படிமவியல் வாதிகளின் கவனத்தையும் இக்கவிதை வடிவம் கவர்ந்தது.  தொடக்க காலத்தில் டி.,இ. உற்யூம், எப்.எஸ். ஃபிலிண்ட், அமிலாவல்,  ஜான் கோல்ட் ஃலக்சர்  மற்றும் ஜேம்ஸ் கிர்குப்  ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  

தமிழில் ஐக்கூ

தமிழ்க் கவிதை உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.  அவரின் இலக்கிய ஆர்வம் தமிழுக்குப் பல இலக்கிய வடிவங்களைத் தேடித் தந்திருக்கின்றன.  அவரின் முயற்சியின் விளைவே வசன கவிதை என்னும் புதுக்கவிதை.  ஐக்கூவைப் பற்றிய சிந்தனையையும் முதன் முதலில் அறிமுகம் செய்தவரும் பாரதியார் தான்.  1916ஆம் ஆண்டு உயோநே நோகுச்சி என்னும் ஜப்பானியக் கவிஞர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சுதேசமித்திரன் இதழில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாளில் ஐக்கூக் கவிதையைப் பற்றிய ஜப்பானியக் கவிதை எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.  அக்கட்டுரையில் ஐக்கூக் கவிதை பற்றிய அவரது கருத்துகளையும் எண்ணங்களையும் காணமுடிகிறது.  ஜப்பானியக் கவிதை பற்றி பாரதியின் கூற்றினை அப்படியே இங்குக் காணுவது அவரின் சொல் வண்மையையும் கருத்துத் தெளிவையும் புலப்படுத்தும் என்பதால் பின்வருமாறு தரப்பெறுகிறது.

மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலேயில்லை. எதுகை சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக மிருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

‘‘ஐப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. 'கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிடவேண்டும்’’ என்று ஒரே ஆவலுடன் ‘‘எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை யெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன்-அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு-இவற்றிலே ஈடுபட்டுப்போய் இயற்கையுடனே ஒன்றாக வாழ்பவனே கவி.

‘‘கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் ஹவாஷோமத்ஸுவோ’’ என்னும் புலவரிடம் மூன்று ரியோ (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தானாம். இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம். இவருக்கு காகா  என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய 'வாஷோமத்ஸுவோ’’ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்.

'தீப்பட்டெரிந்தது, வீழுமலரின் அமைதியென்னே!’’

‘‘மலர் தனக்கு வாழுங் காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ, அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகின்றான்.  'வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்” என்று மேலது கவிதைக்கு உரை கண்டிருக்கிறார் பாரதியார்.

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மை’’ யென்று நோகுச்சிப் புலவர் சொல்லுவதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது;  ‘‘கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ‘‘ஹொகூஷி” பாட்டன்று. ‘‘நோக்குச்சி” சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது என்கிறார். 

‘‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் சிறப்புத் தன்மை என்று நோக்குச்சிப் புலவர் சொல்வதாக பாரதியார் குறிப்பிட்டதுடன் ஐக்கூப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும்; படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும் என்கிறார்.  சில கவிதைகளை மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.  பூஸோன் யோஸாவேறா என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும், ஹொகூஷி என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும் முறையே, 

‘‘பருவ மழையின் புழையொலி கேட்பீர்

இங்கென்

கிழச் செவிகளே”  (சுதேசமித்திரன், 18.10.1916)

என்றும்,

‘‘தீப்பட்டெறிந்தது; 

வீழு மலரின்

அமைதியென்னே” (சுதேசமித்திரன், 18.10.1916)

என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

பாரதியின் தொடக்கமும் தமிழர;களின் தொடர;ச்சியும்

பாரதியார; தமிழுக்கு அறிமுகப்படுத்திய இக்கவிதை வடிவம். அவரைப் பின்பற்றியவர;களால் பெரிதும் வளர;க்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  பாரதியாரின் ஐக்கூ மோகத்தைப் பாரதிதாசன், பாரதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி 1960இல் எழுதி கட்டுரை ஒன்றில்,

‘‘மயங்கினேன் முயங்கிலாள், ப்ரீசு

வாய்ந்து - எழில் மறந்திலேன் காவின்

தயங்குபுறவு, தன்பெடை மருவலின்

தளிர்ந்து உயிர், திரும்பிட ஆங்கு

முடிந்த வாழ்வு, இதழ் உணவின் மீண்டது; 

முயங்கிலை; முயங்கினை ஏன்? - என

முயக்க நிலவுக்கு எனப்பினும் முயங்கினாள்” 

(காற்றின் கைகள், ப.12)

என்று குறிப்பிட்டதுமல்லாமல், பாரதியார் மொழிபெயர்த்த 'வெர்க்ஷேஉறரன்' கவிதையை எடுத்துக்காட்டி இருப்பதையும் காணமுடிகிறது.  இப்படியாக பாரதியாரும் பாரதிதாசனும் ஐக்கூக் கவிதைகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில கவிதைகளை மொழிபெயர்த்து முன்மாதிரியாகவும் காட்டித் தத்தம் இலக்கியப் பணியைச் செம்மையாகச் செய்து முடித்திருக்கின்றனர்.

அதன்பின் நீண்ட நெடுங்காலமாக தூங்கிவிட்டு இருந்த ஐக்கூ இலக்கிய வடிவம் சிலரின் முயற்சியால் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து வந்துள்ளதெனலாம்.  இந்தக் கால கட்டத்தில் அப்துல்ரகுமான், சி. மணி, தமிழ்நாடன் போன்ற தமிழ்க்கவிஞர்கள் ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.  தமிழைப் பொருத்த வரையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளே முதலில் தொடங்கின.  அப்துல்ரகுமான், நீலமணி, வைத்தியலிங்கம், கலாப்பிரியா, வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்கள் ஐக்கூ பாணியில் அமைந்த கவிதை வடிவங்களைக் கையாண்டுள்ளனர்.  படிம, குறியீட்டு கவிதைகளும், ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளும் 'எழுத்து’’க் கவிஞர்களின் மனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.  இம்மாற்றத்தினால் தமிழ் இலக்கிய வடிவம் பாதிப்பையும் மாற்றத்தையும் கண்டன.  இதுவரை மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மூலம் வளர்ந்து வந்த ஐக்கூக் கவிதையானது இந்தக் காலகட்டக் கவிஞர்களால் தமிழ் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின.

”ர்நச கநநவ டிநநெயவா hநச pநவவiஉழயவ

டுமைந டவைவடந அiஉந, ளவழடந in யனெ ழரவ”

என்ற ளுரமமடiபெ இன் கவிதையை வைத்தீஸ்வரன் மொழிபெயர்க்கும் போது,

”கிளைக்குத் திரும்பும்

விழுந்த சருகா

பட்டுப்பூச்சி” (வைத்தீஸ்வரன், நடை இதழ்)

என்ற வடிவம் பெற்றிருப்பதைக் காணலாம்.  

மொழிபெயர்க்கும் முயற்சியில் இருந்து 1980க்குப் பிறகே தமிழில் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின.  இந்த ஆரம்பக் காலகட்டத்தில் ஐக்கூவின் இலக்கண வரம்புகளை மீறி, மூன்றடிகளுக்கு உட்பட்டதும் முதல் இரண்டு அடிகள் ஒரு கூறாகவும் ஈற்றடி பிறிதொரு கூறாகவும் கொண்டு பொருளமைதியோடு எழுதியிருக்கின்றனர்.  இந்த நிலையில் முழுமூச்சோடு ஈடுபட்டவர்கள் அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், தமிழன்பன், சாந்தானந்தன், கோவைமணி, மேத்தாதாசன், புதுவை சீனு. தமிழ்மணி,  செருவென்றான், வாவேந்தரன்பன், தாமரைக்கோ, பாரதிவசந்தன், கோ. செந்தமிழன், எஸ். அறிவுமணி, சூலூர் நா. தமிழ்நெஞ்சன், புதுவை தமிழ்நெஞ்சன், திறவோன், தரங்கை பன்னீர்செல்வம், தோழன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

ஐக்கூவின் மரபுத் தன்மையான 5-7-5 அசை அமைப்பினைக் கொண்ட கவிதைகளை டாக்டர் கு. மோகனராசு அவர்கள் முதன் முதலில் எழுதி இருக்கிறார்.  அவரின் கவிதைகள் 'ஒன்றே உலகம்' என்னும் திங்களிதழில் இடம்பெற்றுள்ளன.  அவரைத் தொடர்ந்து இலக்கண வரம்போடு கூடிய கவிதைகளைக் கவிஞர் அமுதபாரதி (காற்றின் கைகள்)யும், மோ.கோ. கோவைமணி (ஐக்கூ ஐநூறு)யும் எழுதியிருக்கின்றனர்.

‘‘இளங்காலைப் பொழுது

மேனி இருட்டையா கழுவும்

நீர் குளிக்கும் காக்கை” (அமுதபாரதி, காற்றின் கைகள், ப.33)

‘‘குடிக்கத் தயாரான

பாலில் வந்து விழுந்ததே ஈ!

திருமணத்தில் ஜாதகம்” (கோவைமணி, ஐக்கூ ஐநூறு, ப.22)

போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்.

‘‘ஜப்பானிய மொழியில் அசை என்பது வெறும் ஒலிக்குறிப்பு, உச்சரிப்பு விதம் மட்டுமே என்றுரைக்கலாம்” (தமிழில் iஉறகூ, ப.50).  ஆனால், தமிழில் அப்படி இல்லை.  தமிழில் ஓரசைச்சொல், ஈரசைச்சொல், மூவசைச்சொல், நான்கசைச்சொல், ஐந்தசைச்சொல் என அமையக் காணலாம்.

பழந்தமிழ்ப் புலவர்கள் நிகண்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அதனால்தான் அவர்களால் சித்திரக் கவிதைகளை எளிதாக யாக்க முடிந்திருக்கிறது.  ஜப்பானிய சீர் எழுத்தைப் போல் நம் புலவர்களும் 'ஓரெழுத்துப்பாட்டு’’ எழுதி இருக்கின்றனர்.  வே.இரா. மாதவன் அவர்கள் தம்முடைய 'சித்திரக்கவி' என்னும் நூலில் தண்டியலங்கார மேற்கோள் பாடலாக,

”காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா”

என்ற நேரிசைச் சிந்தியல் வெண்பாவையும்,

”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது”

என்ற இன்னிசை வெண்பாவையும் பக்கம் 146இல் குறிப்பிடுகின்றார்.  இந்த அமைப்பே ஜப்பானிய ஐக்கூவிலும் இருக்கின்றது.  ஜப்பானிய ஐக்கூ வடிவம் எப்படி இருக்கிறது என்பதை நெல்லை சு. முத்து அவர்கள் 'தமிழில் iஉறகூ' என்னும் நூலில் (ப.51) பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

”ய-தொ-நொ-உற-ரு

ந-னி-மொ-ந-கி-கொ-ஸொ

ந-னி-மொ-அ-ரெ

என்ற யமகுச்சி ஸோடோ எழுதிய இந்த ஐக்கூவின் பொருள்,

வசந்தத்தில் என் குடிசை

பொருள் ஏதுமில்லை - உண்மையில்

பொருளெல்லாம் அதுவே”

என யமகுச்சி ஸோடோ அவர்களின் கவிதை உட்பொருளை மட்டுமே மேலோட்டமாகக் கொண்டு தமிழில் பொருத்தமான வார்த்தைகளில் வடித்து வருகின்றோம் என்கின்றார்.

ஜப்பானிய சீர் எழுத்து ஐக்கூக் கவிதையைத் தமிழில் எழுத முடியுமா என்ற வினா நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வருகிறது.  தமிழின் பழமை, யாப்பமைப்பு, மொழியமைப்பு, சொற்றொடரமைப்பு இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும் போது தமிழிலும் சீர் எழுத்துக் கவிதைகளை ஐக்கூவிற்கு ஒப்ப எழுத முடியும் என்று முயற்சித்துள்ளேன்.

நா-மா-க-தூ-வீ

வை-தீ-க-ம-து-ஆ-வீ

வை-தீ-க-பா-மா

(நா-அயலார்; மா-நிலம், புமி; க-அரசன்; தூ-பகை; வீ-விரும்புதல்; வை-வையகம்; தீ-தீய; க-காற்று; ம-நஞ்சு; து-வளர்தல்; ஆ-பசு,உயிர்; வீ-சாவு; வை-வைக்கோல்; தீ-நெருப்பு; க-காற்று; பா-பரவுதல்; மா-துகள்)

(இ-ள்.) நா-மா-க-தூ-வீ என்பது அயல் நிலத்தரசன் மீது பகைகொண்டு; வை-தீ-க-ம-து-ஆ-வீ என்பது வையகம் முழுவதும் தீய காற்றில் கலந்த நஞ்சு அதிகரித்து உயிர்கள் மடிவது; வை-தீ-க-பா-மா என்பது வைக்கோலில் பட்ட நெருப்பு காற்றில் பரவும் துகள்.

பா-கை-சீ-க-தை 

க-தா-கௌ-சீ-தா-மா-யா

மா-சீ-பூ-கோ-தை

(பா-நெசவு செய்யும் பாவு; கை-படை வகுப்பு; சீ-பெண்; க-உடல்; தை-தைத்துக்கொள்ளல்; க-காமன்; தா-கேடு; கௌ-கொள்ளுதல்; சீ-பெண்; தா-அழிவு; மா-சீலை; யா-இல்லை; மா-வண்டு; சீ-நித்திரை; பூ-மலர்; கோ-இறைவன்; தை-தைத்துக்கொள்ளல்)

(இ-ள்.)  பா-கை-சீ-க-தை என்பது நூலை(இழை)ப் படை வகுத்து நெசவு செய்து துணியாக்கிப் பெண்கள் தங்களின் உடலை மறைக்க ஆடையாக தைத்துக்கொள்ளுதல்;  க-தா-கௌ-சீ-தா-மா-யா என்பது பெண்களின் மீது காமுகன் ஒருவன் கேடு கொள்வானேயாயின் ஆடையால் அழிவைத் தடுக்க முடியுமா?;  மா-சீ-பூ-கோ-தை என்பது வண்டு உறங்கிய(நித்திரை) மலரை இறைவனுக்குச் சூட்டுவதைப் போன்றது.

மகாகவி பாரதியாரால் தமிழுக்கு அறிமுகப்படுத்திய ஐக்கூக் கவிதை வடிவம் இன்று புற்றீசல்போல் பல்கிப் பெருகித் தமிழின் இலக்கிய வளத்தைப் பெருக்கி இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர; பாரதியார; என்று பார;க்கும்போது பெருமைப்பட வைக்கிறது.


செவ்வாய், 5 மே, 2020

மேற்கோளும் அடிக்குறிப்பும்


முனைவர் மோ.கோ. கோவைமணி
தலைவர், ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.

       ஆய்வாளர் தன்னுடைய ஆய்வில் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பெற்ற தரவுகளை ஆய்வேட்டின் பகுதிக்குள் பொருத்தமான இடங்களில் எடுத்துக் காட்டும்போது அத்தரவுகள் மேற்கோள் என்றும், அத்தரவுகள் பற்றிய குறிப்பு அடிக்குறிப்பு என்றும், அத்தரவுகள் பெற்ற நூலைப் பற்றிச் சொல்லுவது துணைநூற் பட்டியல் என்றும் கூறலாம்.  இவற்றைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.

மேற்கோள்

 “முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் பொன்னேபோல் போற்றுவம்” என்பது நன்னூல் இலக்கணம் கற்பிக்கும் நெறி.  நமக்குமுன் எத்தனையோ ஆய்வுகள் தோன்றியிருக்கலாம், எத்தனையோ அரிய கருத்துக்கள் புதியதாகச் சொல்லப்பட்டு இருக்கலாம்.  அவை நமக்கு அரணாகவும் முரணாகவும் இருக்கலாம்.  அவற்றையெல்லாம் மேற்கோளாகக் காட்டி அவை குறித்த நம் சிந்தனைகளை வெளிப்படுத்துல் ஆய்வியல் நெறியாகும்.  ஆய்வு என்பதே முன்னோர் செய்த பணிகளிலிருந்து கால்கொள்வதே ஆகும்.  

மேற்கோள்களின் நோக்கம்

    ஆய்வுக் கட்டுரையில் இன்றியமையாது தேவைப்படும் இடங்களில் மட்டுமே மேற்கோளை ஆய்வாளர் பயன்படுத்த வேண்டும்.
  • ஆய்வாளர் சில கருத்துக்களை மிகவும் தெளிவுபடுத்துகின்ற பொழுதும், தனது கருத்துக்களை நிறுவுகின்ற பொழுதும் பிறருடைய கருத்துக்களை மேற்கோளில் காட்டுவர்.
  • ஆய்வுச் சிக்கலை அணுகி, நுணுகி ஆராயும்போது மூல உண்மைக் கூறுகள் பிற அறிஞர்களின் கருத்துக்கள் ஆகியன ஏற்ற இடங்களில் மேற்கோளாகக் காட்டப்படுவதால் ஆய்வுச் சிக்கலைத் தீர்வு காண்பதும் உறுதிப்படுத்துவதும் எளிதாகின்றது.
  • மூல ஆசிரியரின் கருத்துக்களை அப்படியே அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அப்படியே மேற்கோளில் அக்கருத்துக்கள் ஆளப்படுவதுண்டு.

மேற்கோளின் வகைகள்

  மேற்கோள்களை அளவு அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, சிறிய மேற்கோள் (ளுhழசவ ஞரழவயவழைn); மற்றொன்று, பெரிய மேற்கோள் (டுழபெ ஞரழவயவழைn)  என அவை அமையும்.  சிறிய மேற்கோள்கள் நான்கு வரிகள் வரை இருக்கக் கூடியனவாகும்.  பெரிய மேற்கோள்கள் பொதுவாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளுடன் கூடியனவாகும்.

மேற்கோள் தரவுகள் எத்தன்மைத்தன

     ஆய்வாளர் தாம் படிக்கும் ஆய்வு நூல்களில் தம்முடைய ஆய்வுக்குத் தேவையான மேற்கோள் பகுதிகள் எவை என்பதைக் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

  • கூறும் கருத்துக்கு அரணாகும் செய்திகள்.
  • மறுக்கப் பெறும் செய்திகள், பயிலும் நூல்கள், இடங்கள்.
  • சரியான மூலப் பகுதிகள், உரைகள்.
  • இதுகாறும் பிறருக்குக் கிடைக்காக ஆவணப் பகுதிகள்.
  • பாடவேறுபாடுகள்.
  • சொற்பொழிவுகள், நேர்காணல்களில் கிடைத்த தகவல்கள்.
  • புகழ்பெற்ற தொடர்கள், செய்யுட்கள், பழமொழிகள்.
  • வரலாற்றுக் குறிப்புகள், ஆண்டுகள், மாதங்கள், நாள்கள்.
  • புதிய தகவல்கள், செய்திகள், ஆய்வுக் குறிப்புகள்.
  • பொருள் முரண்கள், கூற்று முரண்கள்


இவற்றின் அடிப்படையில் கருத்துக்களை விவாதிக்க மேற்கோள்கள் காட்டப்பெறலாம்.  ஓர் ஆய்வில் மேற்கோள் மிகுதியாகப் பயன்படுத்துதல் தவறு. மிகவும் முக்கியமான இடத்தில் மட்டும் மேற்கோளைப் பயன்படுத்தவேண்டும்.

குறிப்பட்டை

  குறிப்பெடுப்பதற்கும் அட்டைகளைப் பயன்படுத்துதல் நல்லது.  காலங்காலமாகப் பின்பற்றும் நோட்டுப் புத்தகங்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை விடுத்து, ஆய்வாளர் குறிப்பு அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும்.  குறிப்பெடுத்தவற்றை வகைப்படுத்தவோ, மாற்றி அடுக்கவோ அட்டை முறையே துணைசெய்யும்.  குறிப்பெடுப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் ஆய்வின் தலை நாள் தொட்டு நடைபெற வேண்டிய பணியாகும்.  அட்டை அல்லது அந்த அளவிலான சிறு தாள்களை இப்பணி பயன்படுத்துதல் வேண்டும்.  அவை ஒரே வடிவம், அளவு, தன்மை கொண்டவையாக இருத்தல் வேண்டும்.  ஒவ்வொரு மெய்ம்மை அல்லது கருத்து ஒவ்வொரு தனி அட்டையில் குறிக்கப்பட வேண்டும்.  சிக்கனம் கருதி ஒரே அட்டையில் பலவற்றை எழுதுதல் கூடாது.  செய்தியைக் குறித்துக்கொண்டு அதன் கீழே, தனி ஒரு வரியில் அச்செய்தி எந்த நூலில் இருந்து எடுக்கப்பெற்றது.  பக்க எண் எது என்ற விவரங்களைக் குறித்துக்கொள்வது இன்றியமையாதது.  நூல் பற்றிய விவரங்கள் நூற்பட்டியலிற்குரிய அட்டைகளில் இடம்பெற்றுவிடும்.  எனவே, குறிப்பட்டை, நூற்பட்டி அட்டை ஆகிய இரண்டையும் இடைவிடாமல் உருவாக்குவது ஆய்வுப் பயணத்தில் தொடர்ந்து நிகழ வேண்டிய பணிகள் ஆகும்.  எழுத்து மூலச் சான்றிலிருந்து குறிக்காமல் நேரடிச் சான்றின்வழி பெற்றால், குறிப்பின் கீழ்த் தகவலைப் பெற்ற முறையைக் (பேட்டி, வினாநிரல், பட்டியல்) குறித்தல் வேண்டும்.  ஒன்றிற்கு மேற்பட்ட குறிப்பை ஓர் அட்டையில் குறிக்காமல் இருக்க வேண்டும்.  ஓர் அட்டையில் ஒரு குறிப்பை எடுக்கும் முறையினைப் பின்பற்றுவதால், தரவுகளை வகைப்படுத்தவும், மீண்டும் மறுவகை செய்யவும் உதவுவதுடன் குவியலான கருத்துத் தொகுதியைப் பிரித்துப் பகுத்து ஆயவும் அதனைப் பின்னர் தொடர்புடைய பத்திகளுடன் ஒப்பிட்டு ஆராயவும் அவைகளுக்கிடையிலான தொடர்பை வெளிப்படுத்தவும் முடியும்.

       குறிப்பட்டைகள் மிகுதியாக இருக்கும் ஆய்வுகளில் ஆய்வாளர் பல்வேறு வண்ண அட்டைகளைப் பயன்படுத்தலாம்.  ஒவ்வொன்றையும் அந்த வண்ண அட்டையில் மட்டுமே குறிப்பதால் பின்னர் குழப்பம் ஏற்படாது.

  • துணைநூற்பட்டியல் அட்டைகள்
  • நூலிலிருந்து எடுத்த பகுதிகள்
  • கள ஆய்வில் உற்றுநோக்கி நேரடியாகப் பெற்ற தகவல்கள்
  • பேட்டிகளின் வழியே திரட்டிய தகவல்கள்
  • ஆய்வாளரின் எண்ணங்கள், குறிப்புகள்


என்று வகைப்படுத்தி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வண்ண அட்டைகளைப் பயன்படுத்தலாம்.  திட்டமிட்ட ஆய்வுப் பயணத்தில், அறிவியல்நெறி சார்ந்த ஆய்வில் இத்தகைய கடும் உழைப்பும் ஆழ்ந்த படிப்பும் இன்றியமையாதன.  இவற்றோடு அவற்றை வகைப்படுத்துவதும் இன்றியமையாக் கூறு.  இவற்றில் காட்டப்படும் கவனம், ஆய்வைத் திட்டமிட்ட கால எல்லைக்குள் தெளிந்த சிந்தனையுடனும் குழப்பம் எதுவுமில்லாத முறையுடனும் முடிக்க உதவும்.

மேற்கோள் காட்டும் நெறிகள்

        ஓர் ஆய்வேட்டில் மேற்கோள்களைத் தேவை கருதி ஆளப்பெற வேண்டும்.  நேரடி மேற்கோள்கள் பயன்தருவனவாகும்.  மேற்கோள்களில் வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுவது பொருத்தமுடையதாகும்.  ஆய்வேட்டில் பொருத்தமான இடங்களில் மேற்கோள் கையாள வேண்டும்.  மேற்கோளை எவ்வித மாற்றமுமின்றி அவ்வாறே கொடுக்க வேண்டும்.

     மேற்கோளுக்குள் மேற்கோள் வரும்போது முன்னதற்கு இரட்டை மேற்கோட் குறியும் பின்னதற்கு ஒற்றை மேற்கோள் குறியும் இடவேண்டும்.  மேற்கோளைக் காட்ட “. . . . ” இக்குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.  மேற்கோள்களில் மாறுதலோ திருத்தமோ இல்லாமல் அப்படியே எடுத்தாள வேண்டும்.  சிறு மேற்கோளாயினும் காற்புள்ளி (,) மட்டும் இட்டு அவ்வாறே எழுதிச் செல்லலாம்.  பெரியமேற்கோளாயின் முக்காற்புள்ளி (:) இட்டு அப்பகுதியை எழுதவேண்டும்.  பிறமொழி மேற்கோளை மொழி பெயர்த்துத்தான் ஆய்வேட்டின் உடற்பகுதியில் போடவேண்டும்.

       மேற்கோள் பெரியதாக இருப்பின் இடப்புற ஓரத்திலிருந்து நான்கு இடம் உள்ளே தள்ளி அமைதல் வேண்டும்.  இங்கு மேற்கோள் குறியீடு அவசியமில்லை.  அடிக்குறிப்புக்களில் ஆளப்படும் அனைத்து மேற்கோள்களும் குறியீடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.  மேற்கோள் பகுதியில் ஆசிரியர் தந்துள்ள குறிப்பு எழுத்துப் பிழையோ தவறாகவோ இருப்பின் பிழையான பகுதியை அடுத்து ஜளுiஉஸ என்று அடிக்கோடிட்டுச் சதுர அடைப்பினுள் தரவேண்டும்.  அதனையடுத்துத் திருத்தம் இடம்பெற வேண்டும். மேற்கோள் தொடர்ச்சியாகக் காட்டப்படாவிட்டால் . . . . .  பின் தொடரலாம்.

  அடிக்குறிப்புகளில் ஆளப்படும் அனைத்து மேற்கோள்களும் குறியீடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.  மேற்கோளாக எடுத்தாளும் பகுதியில் அறிஞர் பெயரின்றிக் கூட்டுப் பெயராகயிருப்பின் சதுர அடைப்பில் ஜ ஸ ஆசிரியர் பெயர் தருதல் வேண்டும்.  இரண்டு, மூன்று வரிக் கவிதைகளை மேற்கோள் காட்டின் மேற்கோள் குறியீடு அவசியமில்லை.  இடதுபுறம் கொஞ்சம் தள்ளித் தொடங்கலாம்.  

    மேலைநாட்டு ஆய்வேடுகளில் இருவகையான மேற்கோள் நெறிகள் காணப்படுகின்றன.  1. தற்கால அமெரிக்க மொழிக்கழக முறை, 2. அமெரிக்க உளவியல் கழக முறை.  முதல் முறையின்படி கட்டுரையில் இடம்பெறும் மேற்கோளைக் கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

       “இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்து தோன்றுகின்றது” (மறைமலையடிகள் 78) 

   இம்மேற்கோளுக்குப் பின் (மறைமலையடிகள் 78) எனக் குறித்தது நூலாசிரியர் பெயரையும் அவரது படைப்பொன்றின் எழுத்தெட்டாம் பக்கத்தில் இச்செய்தி காணப்படுகின்றது என்று காட்டுவதற்கு ஆகும்.  இது குறித்து முழுவிவரங்கள் ஆய்வேட்டின் இறுதியில் இடம்பெறும் துணைநூற்பட்டியலில் கண்டுகொள்ளக்கூடும்.  ஆய்வேட்டில் நூலாசிரியரின் நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காட்டப்பெறு இருப்பின் (மறைமலையடிகள், முல்லைப்பாட்டு 78) என்று நூற்பெயரின் ஒரு பகுதியையேனும் இணைத்துக் கூறல் வேண்டும்.

அமெரிக்க உளவியல் கழக முறையில் மேற்கோள் காட்டுதலில் ஒரு சிறு வேறுபாட்டைக் காணலாம். 

     “இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்து தோன்றுகின்றது” (மறைமலையடிகள், 1997, ப.78) 

எனக் குறிக்கப்பெறும் நிலையை இங்குக் காணலாம்.  இதில் ஆண்டும், பக்கத்தைக் குறிப்பப் ‘ப.’ என்ற எழுத்தும் சேர்ந்துள்ளன.

மேற்கோள் அறம்

ஒரு நூலிலிருந்து ஒரு செய்தியை எடுத்தாளும்போது அதனை முறையாகக் குறிப்பிடுதல் ஆய்வுத் துறைக்குரிய தலையாய அறமாகும்.  யார் இதனையெல்லாம் காணப்போகின்றார்கள் என்ற போக்கில் மேற்கோள் எனக் காட்டாது விடுவது பல தவறுகளுக்கும் வழிவகுக்கும்.  குறிப்பிட்ட ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலில் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஆளப்பெற்றுள்ளது என்று ஒருவர் எழுதினார்.  உண்மையில் அச்சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய நூலிலேயே ஆளப்பெற்றிருக்கிறது.  பின்பு ஆய்வு செய்த பலரும் இன்னாரால் இச்சொல் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் ஆளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர் எனக் குறிக்காமல் தாங்களாகவே அறிந்ததுபோல் அதனை ஒன்பதாம் நூற்றாண்டிற்குரியது எனக் குறித்துள்ளனர்.  ஆய்வறம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தவறு இவர்கள்பால் நிகழ்ந்ததாகாமல் போயிருக்கும்.

       பல அரிய ஆராய்ச்சி நூல்கள் கிடைக்காமல் போவதுண்டு.  எனினும் அவற்றிலிருந்து சில பகுதிகளைச் சிலர் தம் நூல்களில் மேற்கோளாகக் காட்டியிருப்பர். எடுத்துக்காட்டாகச் சிந்துவெளி அகழ்வாய்வு குறித்துச் சர் ஜான் மார்ஷல், மார்ட்டிமம் வீலர், ஹீராஸ் பாதிரியார் ஆகியோர் ஆய்ந்து எழுதியுள்ள நூல்கள் இன்று மறு அச்சு ஆகவில்லை.  ஆனால் இவற்றிலிருந்து அரிய செய்திகளை மா. இரசமாணிக்கனார், க.த. திருநாவுக்கரசு, கே.கே. பிள்ளை ஆகியோர் தம் நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.  இவர்களிடமிருந்து இப்பகுதியை எடுத்துக்காட்டும் சிலர் தாமே முற்குறித்த நூல்களில் படித்துப் பார்த்து எடுத்துக் கொண்டது போல் குறிக்கின்றனர்.  ஒருவரால் தவறாகக் குறிக்கப்பட்ட பக்க எண்ணைக் கூட அப்படியே குறித்திருப்பது இதற்குச் சான்றாகும்.  ஜான் மார்ஷலின் கருத்தைத் திருநாவுக்கரசு இவ்வாறு எடுத்துரைக்கிறார் என்று காட்டுவதால் ஆய்வாளர் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது. ஒருவர்தம் ஆய்வேட்டில் அச்சுக்கு வராத கையெழுத்துப் படியினை மேற்கோளாகக் காட்டும்போது அது கையெழுத்துப்படி எனக் குறிக்காமல் விட்டுவிட்டார்.  அதனைப் பார்த்து அம்மேற்கோளைக் கையாண்ட மற்றொருவர் அதனை அச்சிட்ட நூல் என்று கருதித் தாமாகவே ஆண்டு, பக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மேற்கோளை நிறைவுடையதாக ஆக்கி இருக்கின்றார்.

மேற்கோளில் சுட்டுப் பெயர்கள்

மேற்கோளில் முதன் முதலாக அவன், அவர், அது, அவை, அவர்கள், அவள் என்ற சுட்டுப் பெயர்கள் வந்தால் அச்சுட்டுப் பெயரை அடுத்த பகர அடைப்புக் குறியினுள் பெயரைச் சுட்டிக் காட்ட வேண்டும். 

“அவர்கள் ஜபரதவர்கள்ஸ ஒரு காலத்தில் பேராற்றல் பெற்றவர்களாத் திகழ்ந்தனர்.  கடற் செலவில் தக்கிருந்த சிறந்த திறமையும், முதிர்ந்த அனுபவமும் அவர்களை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத செல்வர்களாகவும் உயர் தலைமையாளர்களாகவும் விளங்கச் செய்தன”1

   மேற்கண்ட மேற்கோளில் அவர்கள் என்ற சுட்டுப்பெயர் யாரைக் குறிக்கிறது? என்பதை அறியும் வண்ணம் பகர அடைப்புக் குறியினுள் ஜபரதவர்கள்ஸ எனச் சுட்ட வேண்டும்.  அதே மேற்கோளில் மீண்டும் ‘அவர்களை’ என வரும் இடத்தில் சுட்டத் தேவையில்லை.  இவ்வாறு மேற்கோளில் பெயர் குறிக்கப்படாமல் அவன், அவர், அவள், அது, அவர்கள் போன்ற சுட்டுப் பெயர்கள் வரும்போது, சுட்டுப் பெயரை அடுத்து பகர அடைப்பினுள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

செய்யுள் மேற்கோள்

         செய்யுளை மேற்கோளில் ஆளும்போது மூலத்தில் உள்ளபடியே எழுதுதல் வேண்டும்.  இரண்டு அடிகளை மட்டும் மேற்கோளாக ஆண்டால் உடற்பகுதியிலேயே இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுத வேண்டும்.  இரு அடிகளையும் பிரித்துக் காட்ட முதலடியின் முடிவில் ஃ என்றவாறு சாய்வுக்கோடிட வேண்டும்.  அல்லது ,(காற்புள்ளி) இடவேண்டும்.  இரண்டு அடிகளுக்கு மேற்பட்டிருந்தால் ஆய்வு தொடக்க ஓரப்பகுதியிலிருந்து 0.5 இன்ச் தள்ளி நூலிலுள்ளவாறு எழுதுதல் வேண்டும்.  ஆய்வுப் பகுதியிலிருந்து தனித்து எழுதப்படுவதால் மேற்கோள் குறியீடு தேவையில்லை.

      இரண்டு அடிகளாயின், “முதிர்வார் இப்பி முத்த வார்மணல்ஃகதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து”3 என எழுதி மற்ற எழுதித்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட சாய்வெழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்ட வேண்டும்.  இரண்டு அடிகளுக்கு மேற்பட்டிருப்பின்,

ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு நேந்தே
நினவ கூறுவல் எனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதின் பதன்எளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயர்பெற் றோரே4

எனச் சாய்வு எழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்ட வேண்டும்.

உரைநடை மேற்கோள்

     மூன்று வரிகளாக உரைநடை மேற்கோள் அமையுமாயின், அதனை ஆய்வின் உடற்பகுதியிலேயே இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுதவேண்டும். மூன்று வரிகளுக்கு மேற்பட்டிருப்பின் தொடக்க ஓரப்பகுதியிலிருந்து 0.5 இன்ச் தள்ளி பத்தி தொடங்குவதுபோல் தொடங்கி எழுதவேண்டும். இவ்வாறு எழுதுவதால் மேற்கோள் குறியீடு தேவையில்லை.  தற்போது கணிப்பொறியில் ஆய்வேடு உருவாக்குவதால் இம்மேற்கோள் பகுதியை சாய்வெழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்டலாம்.  ஜஎ.டு.ஸ சமணர்கள் துறவு பூண்டு பொதுப்பணி புரிந்தனர்.  அவர்களைப் போலவே தமிழ்நாட்டு அந்தணர்களும் துறவு பூண்டு பொதுப்பணி செய்தனர் என்பது மதுரைக் காஞ்சியால் அறியலாகும் புதுச் செய்தியாகும்.  இது பற்றிச் சாமி சிதம்பரனார்,

அக்காலத்திலேயே மதுரையிலே பவுத்த சமணப் பள்ளிகளைப் போல அந்தணர் பள்ளி இருந்ததாக இவ்வாசிரியர் கூறுகிறார்.  இது ஒரு புதிய செய்தி.  சமணத் துறவிகளைப் போலத் தமிழ்நாட்டு அந்தணர்களிலும் துறவிகள் இருந்தார்கள்.  அவர்கள் வேத வேதாந்தங்களைப் போதித்து வந்தார்கள் என்ற உண்மையை இதன் மூலம் காணலாம்3

என்றவாறு அமைக்கலாம்.

அடிக்குறிப்பு

       ஆய்வறிக்கைக்கு அடிக்குறிப்பிடுதல் மிக இன்றியமையாத ஒன்றாகும்.  சான்றுகளின் வழி நடுநிலையோடு அறிவியலாய்வு என்பதைக் காட்டும் நெறி என்பதை மறக்கக் கூடாது.  மூலப் பகுதியில் காட்டப்படும் ஆதாரங்களுக்கான விவரங்கள் அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டும்.  அந்தந்தத் துறைகளில் உழைத்தவர்களின் பெயர்களை அடிக்குறிப்புக்கள் காட்டி விடுகின்றன.  ஆய்வாளர் பிறரிடமிருந்து பெற்றது என்பதை அடிக்குறிப்புகள் காட்டி விடுகின்றன. மறுப்பாளரிடமிருந்து காத்துக் கொள்ளவும் இஃது உதவும்.  ஆய்வேட்டில் பிற இயல்களுடன் மாட்டெறிவதற்கு எதிர்குறிப்பாக இது பயன்படும்.

      எடுத்தாண்ட நூல், கட்டுரை பற்றிய விவரம் அடிக்குறிப்பில் அமைய வேண்டும்.  மேற்கோள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட விவரமும் தௌ;ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.   ஒரு பொருள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களை மிகச் சுருக்கமாக அடிக்குறிப்பில் கொடுக்கலாம்.  ஆய்வேட்டிற்குரிய இன்றியமையாமை அடிக்குறிப்புத் தருவதில் ஏற்படுகிறது.  ஆய்வேட்டில் கூறப்படும் கருத்துக்களுக்கும் முடிவுகளுக்கும் அடிக்குறிப்பே ஓர் அரணாக அமைந்து அழுத்தத்தையும் நிறைவையும் கொடுக்கின்றது.  பிறரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அறிவிக்கப் பயன்படுகின்றது.  சான்று ஆதாரங்களைத் தேடி அடிக்குறிப்பு உறுதுணை புரியும்.  எதிர்க்குறிப்பாகப் பயன்படும்.  ஒருவர் காட்டும் அடிக்குறிப்புக்கள் அவரது புலமையின் பரப்பையும் ஆழத்தையும் காட்டும்.  பிறரது கருத்திலிருந்து தமது சொந்தக் கருத்தைக் காட்டவும் தம்மைத் தாக்காமல் காட்டிக் கொள்ளவும் பயன்படும்.  பிறமொழி மூலத்தை அப்படியே அடிக்குறிப்பில் தந்துவிட்டு அதன் மொழிபெயர்ப்பை ஆய்வேட்டின் உடல் பகுதியில் தரவேண்டும்.  மேற்கோள் முடியும் இடத்தில் எண் இடவேண்டும்.  எண் தொடர்ச்சியாக அமைதல் வேண்டும்.  அந்தந்தப் பக்கத்தில் எண் இடுவதும் உண்டு.  ஆசிரியர் பெயர், நூலின் பெயர், பக்க எண் முதலியவற்றை இடவேண்டும்.  டாக்டர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.  தமிழண்ணல் (இராம. பெரியகருப்பன்) என இடல் வேண்டும்.  பதிப்.ஆ., மொ.ப.ஆ., பொ.ப.ஆ., என இடல் வேண்டும்.  

   நன்கு அறியப்பட்ட மெய்ம்மைகளுக்கு மேற்கோள் காட்டத் தேவையில்லை.  வெளியிடப்பட்ட நூல், கட்டுரை காட்டலாம்.  இன்றியமையாத இடமாக இருப்பின் கையெழுத்துப் படியினைக் காட்டலாம்.  ஒரே கருத்து பலர் கூறியிருந்தால், காலத்தால் முற்பட்டவர் கருத்தைக் காட்ட வேண்டும்.  பிறமொழி மொழபெயர்ப்புத் தரலாம்.  அப்படியே தரவேண்டும் என்றால் அடிக்குறிப்பில் தரவேண்டும்.  தம் கருத்துக்கு அரணான இடங்களில் எடுத்துக்காட்ட வேண்டும்.  புறநடையான கருத்துக்களைச் சுட்டுமிடங்களில் தரலாம்.  அளவாகக் கொடுக்க வேண்டும்.  தருக்க முறையில் யுடிடிசநஎயைவழைn தந்தால் போதுமானது.  அந்தந்தப் பக்கத்தில் அடியிலேயே அமைத்தல் சிறந்த முறையாகும்.  இயல்தோறும் இறுதியில் அமைப்பதும் உண்டு.

       ஒரு நூலின் அடிகளை, வரிகளை, கருத்தை, சாரத்தை, எடுத்து மொழியும் போது அவற்றை மேற்கோள் குறிகள் இட்டுக்காட்டி இறுதியில் எண் கொடுத்து அடிக்குறிப்பில் அந்நூற்பகுதி குறித்த விவரங்களைக் காட்ட வேண்டும்.  ஆராய்ச்சியில் உழைப்பையும் தரத்தையும் காட்டும் பகுதி இது.  ஒவ்வொரு நூலையும் படிக்கும்போதே சரியாகக் குறிப்பெடுத்துக் கொள்வது இவ்வடிக்குறிப்பிடுதலுக்குப் பெரிதும் உதவும்.  பக்கம் குறித்துக் கொள்ள மறந்து போனதால் நூலையே மேற்கோளாகக் காட்ட முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

      ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தனியாகத் தொடர் எண்ணிடும் முறையும் ஒரு இயலுக்கே தொடர்ந்து எண்ணிடும் முறையும் வழக்கத்தில் உள்ளன.  ஆய்வுரை எழுதும்போதே அடிக்குறிப்புக்கான தொடர் எண் முறை பின்பற்றப்பட வேண்டும்.  அடிக்குறிப்புக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் தரவேண்டும்.  பெயர்களைக் குறிப்பிடும்போது முன்னெழுத்துக்களையும் குறிப்பிட வேண்டும்.  அடிக்குறிப்பை ஒரு நூலிலிருந்து முதன் முதலாகத் தரும்பொழுது முழு விவரம் தந்து, பிறகு வரும்போது ஆசிரியர் பெயரும் நூற்பெயரும் தரலாம்.  அதே நூலை மீண்டும் காட்ட நேருமானால் ஆசிரியர் பெயரும் நூற்பெயரும் தந்தால் போதுமானது.

      ஒரு நூலிலிருந்து அடுத்தடுத்து மேற்கோள் காட்ட நேர்ந்தால்  முதலில் ஆசிரியர் பெயர், நூற்பெயர் சுட்டிய பின்னர்ப் பக்கங்களைப் போடவேண்டும்.  ‘மேலது’, ‘மேற்படி’ எனப் போட்டு பக்க எண் குறிப்பிடலாம்.  முற்காட்டிய நூலிலிருந்தே சில பக்கங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் காட்டுதல் நேர்ந்தால், ஆங்கிலத்தில் ழி.உவை. என்று ஆசிரியர் பெயருக்குப் பின் போட்டு ப.2 என எண்ணைக் குறிப்பிட வேண்டும்.  தமிழில் ஆசிரியர் பெயருக்குப் பின் மு.நூ. எனப் போடவேண்டும்.

அடிக்குறிப்பு அமைத்திடும் முறைகள்

     நூலாசிரியர் எழுதிய ஒரு நூலின் பகுதியை மேற்கோளாகக் காட்டும்போது அடிக்குறிப்பு அமைவதைப் பின்வருமாறு காணலாம்.

“தேள்கடி கோடைக் காலத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.  பெரியவர்களிடம், கொட்டிய இடத்தில் மட்டும் வலியும் எரிச்சலும் உண்டாகிறது.  ஆனால் குழந்தைகளிடம் பொதுவான உடல் குறிகளுடன் இரத்த ஓட்ட அயர்வும் ஏற்படுவதனால், தோல் குளிர்ந்து இரத்த அழுத்தம் குறைந்து, நாடி வீழ்ந்து விடுகிறது.  அரிதாக மிகுகாய்ச்சலுடன் இசிவும் ஏற்படலாம்.  சில வேளைகளில் தேக்க இதய அயர்வும் உண்டாகிறது.  எந்த வயதிலும் இக்குறிகள் தேன்றக்கூடும்.”11

மேற்குறித்த பகுதியை எடுத்துக்காட்டும் ஆசிரியர் அடிக்குறிப்பில்,
11. குழந்தை நல மருத்துவம் - தொகுதி 2, ஞா. இராஜராஜேஸ்வரி மற்றும் அ. ஜெகதீசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2003, ப.338 எனக் குறிப்பிடவேண்டும்.

     ஒருவருக்கு மேற்பட்டவரால் ஒரு நூல் எழுதப்பட்டிருப்பின், நூலின் தலைப்பில் நூலாசிரியர்கள் பெயர்கள் எவ்வரிசையில் குறிப்பிடப்பட்டு உள்ளனவோ அவ்வரிசையில் அடிக்குறிப்பிலும் காட்டப்பெறல் வேண்டும்.  “முத்துச் சண்முகன், சு. வெங்கடராமன், இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.111” என்றவாறு இடப்பெற வேண்டும்.  இருவர்க்கு மேற்பட்ட பலர் எழுதிய ஒரு நூலை அடிக்குறிப்பில் இடும்போது முதற்பெயரினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு ‘மற்றும் பிறர்’ எனக் குறிப்பிட வேண்டும்.  எனினும் துணைநூற் பட்டியலில் ஆசிரியர் அனைவர் பெயரையும் நூலிற் காணப்பெறும் வரிசையிலே இடம்பெறச் செய்தல் வேண்டும்.  எ.டு.

ம.ரா.பொ. குருசாமி, சுப. அண்ணாமலை, கதிர் மகாதேவன் (மொ.பெ.), பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, ப.131

இவ்வாறு அடிக்குறிப்பில் எழுதுவதோடு சுருக்கக் குறியீட்டு விளக்கத்தில் மொ.பெ. மொழிபெயர்ப்பு எனக் குறித்தல் வேண்டும்.

ஒரு நிறுவனம், ஓர் அமைப்பு, ஒரு கழகம், ஒரு குழு ஆகியவற்றின் சார்பாக ஒரு நூல் வெளியிடப்பட்டிருப்பின் அடிக்குறிப்பில், “தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், பன்னிரண்டாம் வகுப்புப்பொதுத் தமிழ்ப் பாடநூல், சென்னை 1996, ப.77” என்று குறிப்பிட வேண்டும்.

பலருடைய கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ஒருவரால் பதிப்பிக்கப் பெற்றிருப்பின், “பழந்தமிழ்ப் புதுமை, ச. சிவகாமி, (தொ.ஆ.), உமாமஹேஸ்வரி (பதி.), ப.53” எனக் குறிப்பிட வேண்டும்.

பலருடைய கட்டுரைகள் தொகுக்கப்பெற்ற தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டப்பெற்றிருப்பின், “ஞானத்தின் திருவுரு (கட்.), பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், கரந்தைக் கட்டுரைக் கோவை, ப.14” எனக் குறிப்பிட வேண்டும்.  இங்குக் கட்டுரையை நூலிலிருந்து வேறுபடுத்த நூற்பெயருக்கு அடிக்கோடு இடல்வேண்டும் அல்லது போல்ட் செய்ய வேண்டும்.

கலைக்களஞ்சியம், விவரநூல், அகராதிகள் போன்றவற்றிலிருந்து குறிப்புக்களைத் தந்தால் “கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம் நான்காம் தொகுதி, சமூக அமைப்பு (கட்), ஐராவதி கார்வே, ப.470” என அடிக்குறிப்பில் குறிப்பிட வேண்டும்.  இக்குறிப்பில் கட்டுரையின் பெயர் அடிக்கோடு இடம்பெற்றுள்ளது. “தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை தொகுதி 7, ப.387” என்றும் குறிப்பிடலாம்.

சிறு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள், ஒற்றைத்தாளில் விளம்பரம், செய்தித்தாளின் சிறுபகுதி ஆகியவற்றைக் குறித்துத் தெளிவாக பின்வருமாறு அடிக்குறிப்பு அமைதல் வேண்டும்.
  • சுவடி தாரீர், மோ.கோ. கோவைமணி, தஞ்சாவூர், ப.2.
  • நமது அவசரத் தேவை - மொழிக் கொள்கை, வா.செ. குழந்தைசாமி, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, ப.6.
  • கொள்கை விளக்கக் குறிப்பு, கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை, மானியக் கோரிக்கை எண்.17, 1994, ப.42.
  • ஆசிரியருக்குக் கடிதங்கள், தினமணி, சென்னைப் பதிப்பு, 16.4.1952.
  • சொற்பிறப்பியல் அகரமுதலி பற்றிப் பாவாணரின் கருத்தும் நோக்கமும், அறிக்கை, பெருஞ்சித்திரன், தென்மொழி, சுவடி 17, ஓலை 6-7, ப.7.
  • புத்தக வரலாற்றில் புதிய புரட்டு - விளம்பரம், ஆனந்த விகடன், 30.11.97, ப.47.
  • தொல்லியல் கழக ஆண்டறிக்கை, 2018, ப.42.
  • பாரதியின் கடித இலக்கியம் - இ. சுந்தரமூர்த்தி, தமிழாய்வு இதழிலிருந்து எடுத்து வெளியிடப்பெற்ற துண்டு வெளியீடு, ப.110.
  • புலமை, பல்கலைக் காலாண்டு இதழ், தொகுதி 2, ஏப்ரல்-சூன் 1976, ப.214.

இவ்வாறு அடிக்குறிப்பு இடம்பெறுவதோடு, சிறு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள், ஒற்றைத்தாள் விளம்பரங்கள், செய்தித்தாள்களில் பெட்டிச் செய்திகள் ஆகியவற்றை ஒளியச்சுச் செய்து பின்னிணைப்புக்களில் இணைத்தல் வேண்டும்.

ஆண்டு குறிக்கப்படாத நூல்கள், பக்க எண் குறிக்கப்படாத நூல்கள், வெளியீடுகள் ஆகியவற்றை முறையே “மகர நெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி, ஸ்ரீ.உ.வே. எஸ்.கே. ராமகிருஷ்ணய்யங்கார் (பதி.), ஆண்டு இல்லை, ப.36” என்றும், “என்ன செய்ய வேண்டும், இந்திய அரசு மனித வளமேம்பாட்டுத்துறை வெளியீடு, 1992, பக்கம் இல்லை” என்றும் அடிக்குறிப்பில் குறிப்பிட வேண்டும்.

அச்சிடப்பெறாத கையெழுத்துப்படிகளாயின் அவை சரியான ஆவணங்கள்தாம் என்று அரிய கையெழுத்து வல்ல ஆய்வுத்துறை, தொல்பொருள் துறை போன்றவற்றால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றின் ஒளியச்சுப் படிகளையும் பின்னிணைப்பில் இணைத்தல் வேண்டும்.  அடிக்குறிப்பில், “மனுமுறை கண்ட வாசகம், இராமலிங்க அடிகளாரின் கையெழுத்துப் படி (சான்றளிக்கப்பெற்றது)” என்று குறிப்பிட வேண்டும்.  பதிவு செய்யப்பட்ட பத்திரம், கருவூலச்சீட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் ஆணை ஆகியவற்றின் ஒளியச்சுப் படிகளைப் பின்னிணைப்பில் தருவதோடு அடிக்குறிப்பில் அவற்றின் நாளை மறவாது குறிக்க வேண்டும்.  

      பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெற்றுப் பட்டம் வழங்கப்பட்ட அச்சிடாத ஆய்வேடும் மேற்கோள் காட்டத்தக்கதே.  “சித்த மருத்துவத்தில் நாடி - வெளியிடப்பெறாத ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 1988, பக்.23-34” என்று அடிக்குறிப்பில் ஆய்வேடு அளிக்கப்பெற்ற ஆண்டு, பல்கலைக்கழகத்தின் பெயர் ஆகியவற்றைக் குறிக்க வேண்டும்.
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டும் போது அவை ஒளிபரப்பப்பெற்ற அல்லது ஒலி பரப்பப்பெற்ற நாள் நேரம் தொலைக்காட்சி, வானொலி நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றையும் குறிப்பிடல் வேண்டும்.  “புதுமைப்பித்தன் படைப்பாற்றல், கு.வெ. பாலசுப்பிரமணியன், விஜய் தொலைக்காட்சி, சென்னை, மாலை 5,30, 12.10.1997” என்றும், “தமிழிசைப் பண்கள், ப.சுந்தரேசனார், திருச்சி வானொலி நிலையம், இலக்கியப் பேருரை, இரவு 9.30-10.00, 6.4.1987” என்றும், நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பலராயின், “முனைவர் ஆறு. அழகப்பன் மற்றும் ஐவர்” என்றும் குறித்தல் வேண்டும்.  திரைப்பாடல், ஒலிநாடா ஆகியவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டலாம்.  அவற்றின் பெயர், வெளியீட்டாளர் பெயர், ஆண்டு ஆகியன அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டும்.

அடிக்குறிப்பில் சுருக்கக் குறியீடுகள்

ஆய்வாளர் ஆய்வேட்டில் அடிக்குறிப்பு குறிப்பிடும்போது இடத்திற்கேற்பவும், பொருளுக்கேற்பவும் சுருக்கக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.  அச்சுருக்கக் குறியீடுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பின்வருமாறு அமையும்.
ப.         - பக்கம்
பக்.         - பக்கங்கள்
மேற்படி - அதே இடத்தில்
மேலது - அதுவே
மு.நூ. - முற்காட்டிய நூலிலிருந்து
மு.ப. - முற்காட்டிய பகுதியிலிருந்து
தே.இ. - தேதி இல்லை, வெளியிட்ட ஆண்டு இல்லை
இ.இ. - வெளியிட்ட இடம் இல்லை
பதி. - பதிப்பாசிரியர், பதிப்பு
முதலியவர்கள் - இரண்டிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள்
ப.உ. - பதிப்புரிமை
ஒ.பா. - ஒப்பிட்டுப் பார்க்க
இ.கா. - இணைத்துக் காண்க
எ.டு. - எடுத்துக்காட்டு
தொ. - தொடர்ச்சி
தொடர். - தொடர்ச்சி
அ.பொ. - அதன் பொருளாவது
மு.கு. - முக்கியக் குறிப்பு
தி.ப. - திருத்திய பதிப்பு
மொ.பெ. - மொழிபெயர்ப்பு
பா.         - பாட்டு
பாக். - பாக்கள்
அ.யா. - அஃது யாதெனில்
எதிர். - எதிரான

அடிக்குறிப்பின் பயன்கள்
  • ஆய்வாளர் எந்தெந்த நூல்களிலிருந்து ஆய்வுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார் என்பதை அறியப் பயன்படுகிறது.
  • பிறமொழி நூல்களிலிருந்து மேற்கோளை எடுத்தாண்டால், மொழிபெயர்ப்பை ஆய்வுப் பகுதியில் எழுதிவிட்டு, பிறமொழி நூல் மூலக் கருத்தை அப்படியே தர அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • ஆய்வேட்டின் முன்னும் பின்னும் வெவ்வேறு இடங்களில் கூறிய கருத்துக்களை ஓரிடத்தில் ஒப்பிட்டுக் காட்டவும், உறழ்ந்து காட்டவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • இன்றியமையாத தேவையின்போது மூலத்தை அப்படியே தரவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • சில செய்திகளைத் தெளிவாக ஆய்வுப் பகுதியில் விளக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, விளக்கம் தர இடம் தருவது அடிக்குறிப்பே ஆகும்.
  • ஆய்வுக் கட்டுரையிலுள்ள ஒரு செய்தியே பல இடங்களில் கொடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தெரிவிக்கவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • எடுக்கப்படும் மேற்கோள், கருத்துகள், இடம்பெறும் நூலாசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அடிக்குறிப்பு அமைகிறது.
  • ஆய்வாளரின் சிந்தனையோட்டமும், கருத்தோட்டமும தடைபடாமல், சீரான முறையில் தெளிவாகக் கருத்துகளை ஆய்வுப் பகுதியில் எடுத்துக் கூற வழி வகுப்பது அடிக்குறிப்பே ஆகும்.
அடிக்குறிப்பில் ஆய்வாளர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
  • நூலில் உள்ளவாறே ஆசிரியர் பெயரை எழுத வேண்டும்.  டாக்டர், பேராசிரியர், புலவர், கவிஞர், சித்த மருத்துவர், லயன், திரு., திருவாளர், திருமதி போன்ற சிறப்புப் பட்டங்களை அடிக்குறிப்பில் எழுதத் தேவையில்லை.
  • மேற்கோள் எண்களுக்கேற்ப முறைப்படி அடிக்குறிப்பிட வேண்டும்.
  • நூற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.  பகுதி, தொகுதிகள் இருந்தால் அவற்றிற்கும் அடிக்கோடிட வேண்டும்.  இது தட்டச்சு எந்திரம் மூலம் ஆய்வேடு தயார் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முறை.  தற்போது கணிப்பொறியில் தட்டச்சு செய்வதால் Bold Lettersஇல் காட்டலாம்.
  • கட்டுரையாயின் கட்டுரையின் தலைப்பை ‘ ’ என ஒற்றை மேற்கோளுள்ளும், கட்டுரை இடம்பெறும் நூற்பெயரை அடிக்கோடிட்டும் அமைக்க வேண்டும்.  அடிக்கோடிடுதலுக்கு மாற்றாக தற்போது கணிப்பொறியில் Bold Lettersஇல் காட்டலாம்.
  • அடிக்குறிப்பில் மூலப்பகுதியை அமைக்கும்போது, இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுத வேண்டும்.
  • குறுக்க விளக்கங்களைத் தேவையான இடங்களில் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
  • அடிக்குறிப்பில் விளக்கம் அளிக்க வேண்டியிருப்பின் சுருக்கமாக விளக்கமளிக்க விழைதல் வேண்டும்.
  • அடிக்குறிப்பில் விளக்கம் அதிகமாக அளிக்க வேண்டியிருப்பின் அதைப் பின்னிணைப்பில் எழுதுதல் நன்று.  அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டிய விளக்கம் பின்னிணைப்பில் இருந்தால், அடிக்குறிப்பில் பின்னிணைப்பைப் பார்க்கவும் எனக் குறிப்பிட்டு, பின்னிணைப்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
  • அடிக்குறிப்பு எழுதும் முறையை முதற்படி எழுதும் போதே தொடங்க வேண்டும்.
  • அடிக்குறிப்பை ஆளும் நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து அடிக்குறிப்புகளும் கையாளப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வேடு முழுமையும் பார்த்துச் சரி செய்தல் வேண்டும்.