செவ்வாய், 5 மே, 2020

மேற்கோளும் அடிக்குறிப்பும்


முனைவர் மோ.கோ. கோவைமணி
தலைவர், ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.

       ஆய்வாளர் தன்னுடைய ஆய்வில் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பெற்ற தரவுகளை ஆய்வேட்டின் பகுதிக்குள் பொருத்தமான இடங்களில் எடுத்துக் காட்டும்போது அத்தரவுகள் மேற்கோள் என்றும், அத்தரவுகள் பற்றிய குறிப்பு அடிக்குறிப்பு என்றும், அத்தரவுகள் பெற்ற நூலைப் பற்றிச் சொல்லுவது துணைநூற் பட்டியல் என்றும் கூறலாம்.  இவற்றைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.

மேற்கோள்

 “முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் பொன்னேபோல் போற்றுவம்” என்பது நன்னூல் இலக்கணம் கற்பிக்கும் நெறி.  நமக்குமுன் எத்தனையோ ஆய்வுகள் தோன்றியிருக்கலாம், எத்தனையோ அரிய கருத்துக்கள் புதியதாகச் சொல்லப்பட்டு இருக்கலாம்.  அவை நமக்கு அரணாகவும் முரணாகவும் இருக்கலாம்.  அவற்றையெல்லாம் மேற்கோளாகக் காட்டி அவை குறித்த நம் சிந்தனைகளை வெளிப்படுத்துல் ஆய்வியல் நெறியாகும்.  ஆய்வு என்பதே முன்னோர் செய்த பணிகளிலிருந்து கால்கொள்வதே ஆகும்.  

மேற்கோள்களின் நோக்கம்

    ஆய்வுக் கட்டுரையில் இன்றியமையாது தேவைப்படும் இடங்களில் மட்டுமே மேற்கோளை ஆய்வாளர் பயன்படுத்த வேண்டும்.
  • ஆய்வாளர் சில கருத்துக்களை மிகவும் தெளிவுபடுத்துகின்ற பொழுதும், தனது கருத்துக்களை நிறுவுகின்ற பொழுதும் பிறருடைய கருத்துக்களை மேற்கோளில் காட்டுவர்.
  • ஆய்வுச் சிக்கலை அணுகி, நுணுகி ஆராயும்போது மூல உண்மைக் கூறுகள் பிற அறிஞர்களின் கருத்துக்கள் ஆகியன ஏற்ற இடங்களில் மேற்கோளாகக் காட்டப்படுவதால் ஆய்வுச் சிக்கலைத் தீர்வு காண்பதும் உறுதிப்படுத்துவதும் எளிதாகின்றது.
  • மூல ஆசிரியரின் கருத்துக்களை அப்படியே அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அப்படியே மேற்கோளில் அக்கருத்துக்கள் ஆளப்படுவதுண்டு.

மேற்கோளின் வகைகள்

  மேற்கோள்களை அளவு அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, சிறிய மேற்கோள் (ளுhழசவ ஞரழவயவழைn); மற்றொன்று, பெரிய மேற்கோள் (டுழபெ ஞரழவயவழைn)  என அவை அமையும்.  சிறிய மேற்கோள்கள் நான்கு வரிகள் வரை இருக்கக் கூடியனவாகும்.  பெரிய மேற்கோள்கள் பொதுவாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளுடன் கூடியனவாகும்.

மேற்கோள் தரவுகள் எத்தன்மைத்தன

     ஆய்வாளர் தாம் படிக்கும் ஆய்வு நூல்களில் தம்முடைய ஆய்வுக்குத் தேவையான மேற்கோள் பகுதிகள் எவை என்பதைக் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

  • கூறும் கருத்துக்கு அரணாகும் செய்திகள்.
  • மறுக்கப் பெறும் செய்திகள், பயிலும் நூல்கள், இடங்கள்.
  • சரியான மூலப் பகுதிகள், உரைகள்.
  • இதுகாறும் பிறருக்குக் கிடைக்காக ஆவணப் பகுதிகள்.
  • பாடவேறுபாடுகள்.
  • சொற்பொழிவுகள், நேர்காணல்களில் கிடைத்த தகவல்கள்.
  • புகழ்பெற்ற தொடர்கள், செய்யுட்கள், பழமொழிகள்.
  • வரலாற்றுக் குறிப்புகள், ஆண்டுகள், மாதங்கள், நாள்கள்.
  • புதிய தகவல்கள், செய்திகள், ஆய்வுக் குறிப்புகள்.
  • பொருள் முரண்கள், கூற்று முரண்கள்


இவற்றின் அடிப்படையில் கருத்துக்களை விவாதிக்க மேற்கோள்கள் காட்டப்பெறலாம்.  ஓர் ஆய்வில் மேற்கோள் மிகுதியாகப் பயன்படுத்துதல் தவறு. மிகவும் முக்கியமான இடத்தில் மட்டும் மேற்கோளைப் பயன்படுத்தவேண்டும்.

குறிப்பட்டை

  குறிப்பெடுப்பதற்கும் அட்டைகளைப் பயன்படுத்துதல் நல்லது.  காலங்காலமாகப் பின்பற்றும் நோட்டுப் புத்தகங்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை விடுத்து, ஆய்வாளர் குறிப்பு அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும்.  குறிப்பெடுத்தவற்றை வகைப்படுத்தவோ, மாற்றி அடுக்கவோ அட்டை முறையே துணைசெய்யும்.  குறிப்பெடுப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் ஆய்வின் தலை நாள் தொட்டு நடைபெற வேண்டிய பணியாகும்.  அட்டை அல்லது அந்த அளவிலான சிறு தாள்களை இப்பணி பயன்படுத்துதல் வேண்டும்.  அவை ஒரே வடிவம், அளவு, தன்மை கொண்டவையாக இருத்தல் வேண்டும்.  ஒவ்வொரு மெய்ம்மை அல்லது கருத்து ஒவ்வொரு தனி அட்டையில் குறிக்கப்பட வேண்டும்.  சிக்கனம் கருதி ஒரே அட்டையில் பலவற்றை எழுதுதல் கூடாது.  செய்தியைக் குறித்துக்கொண்டு அதன் கீழே, தனி ஒரு வரியில் அச்செய்தி எந்த நூலில் இருந்து எடுக்கப்பெற்றது.  பக்க எண் எது என்ற விவரங்களைக் குறித்துக்கொள்வது இன்றியமையாதது.  நூல் பற்றிய விவரங்கள் நூற்பட்டியலிற்குரிய அட்டைகளில் இடம்பெற்றுவிடும்.  எனவே, குறிப்பட்டை, நூற்பட்டி அட்டை ஆகிய இரண்டையும் இடைவிடாமல் உருவாக்குவது ஆய்வுப் பயணத்தில் தொடர்ந்து நிகழ வேண்டிய பணிகள் ஆகும்.  எழுத்து மூலச் சான்றிலிருந்து குறிக்காமல் நேரடிச் சான்றின்வழி பெற்றால், குறிப்பின் கீழ்த் தகவலைப் பெற்ற முறையைக் (பேட்டி, வினாநிரல், பட்டியல்) குறித்தல் வேண்டும்.  ஒன்றிற்கு மேற்பட்ட குறிப்பை ஓர் அட்டையில் குறிக்காமல் இருக்க வேண்டும்.  ஓர் அட்டையில் ஒரு குறிப்பை எடுக்கும் முறையினைப் பின்பற்றுவதால், தரவுகளை வகைப்படுத்தவும், மீண்டும் மறுவகை செய்யவும் உதவுவதுடன் குவியலான கருத்துத் தொகுதியைப் பிரித்துப் பகுத்து ஆயவும் அதனைப் பின்னர் தொடர்புடைய பத்திகளுடன் ஒப்பிட்டு ஆராயவும் அவைகளுக்கிடையிலான தொடர்பை வெளிப்படுத்தவும் முடியும்.

       குறிப்பட்டைகள் மிகுதியாக இருக்கும் ஆய்வுகளில் ஆய்வாளர் பல்வேறு வண்ண அட்டைகளைப் பயன்படுத்தலாம்.  ஒவ்வொன்றையும் அந்த வண்ண அட்டையில் மட்டுமே குறிப்பதால் பின்னர் குழப்பம் ஏற்படாது.

  • துணைநூற்பட்டியல் அட்டைகள்
  • நூலிலிருந்து எடுத்த பகுதிகள்
  • கள ஆய்வில் உற்றுநோக்கி நேரடியாகப் பெற்ற தகவல்கள்
  • பேட்டிகளின் வழியே திரட்டிய தகவல்கள்
  • ஆய்வாளரின் எண்ணங்கள், குறிப்புகள்


என்று வகைப்படுத்தி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வண்ண அட்டைகளைப் பயன்படுத்தலாம்.  திட்டமிட்ட ஆய்வுப் பயணத்தில், அறிவியல்நெறி சார்ந்த ஆய்வில் இத்தகைய கடும் உழைப்பும் ஆழ்ந்த படிப்பும் இன்றியமையாதன.  இவற்றோடு அவற்றை வகைப்படுத்துவதும் இன்றியமையாக் கூறு.  இவற்றில் காட்டப்படும் கவனம், ஆய்வைத் திட்டமிட்ட கால எல்லைக்குள் தெளிந்த சிந்தனையுடனும் குழப்பம் எதுவுமில்லாத முறையுடனும் முடிக்க உதவும்.

மேற்கோள் காட்டும் நெறிகள்

        ஓர் ஆய்வேட்டில் மேற்கோள்களைத் தேவை கருதி ஆளப்பெற வேண்டும்.  நேரடி மேற்கோள்கள் பயன்தருவனவாகும்.  மேற்கோள்களில் வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுவது பொருத்தமுடையதாகும்.  ஆய்வேட்டில் பொருத்தமான இடங்களில் மேற்கோள் கையாள வேண்டும்.  மேற்கோளை எவ்வித மாற்றமுமின்றி அவ்வாறே கொடுக்க வேண்டும்.

     மேற்கோளுக்குள் மேற்கோள் வரும்போது முன்னதற்கு இரட்டை மேற்கோட் குறியும் பின்னதற்கு ஒற்றை மேற்கோள் குறியும் இடவேண்டும்.  மேற்கோளைக் காட்ட “. . . . ” இக்குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.  மேற்கோள்களில் மாறுதலோ திருத்தமோ இல்லாமல் அப்படியே எடுத்தாள வேண்டும்.  சிறு மேற்கோளாயினும் காற்புள்ளி (,) மட்டும் இட்டு அவ்வாறே எழுதிச் செல்லலாம்.  பெரியமேற்கோளாயின் முக்காற்புள்ளி (:) இட்டு அப்பகுதியை எழுதவேண்டும்.  பிறமொழி மேற்கோளை மொழி பெயர்த்துத்தான் ஆய்வேட்டின் உடற்பகுதியில் போடவேண்டும்.

       மேற்கோள் பெரியதாக இருப்பின் இடப்புற ஓரத்திலிருந்து நான்கு இடம் உள்ளே தள்ளி அமைதல் வேண்டும்.  இங்கு மேற்கோள் குறியீடு அவசியமில்லை.  அடிக்குறிப்புக்களில் ஆளப்படும் அனைத்து மேற்கோள்களும் குறியீடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.  மேற்கோள் பகுதியில் ஆசிரியர் தந்துள்ள குறிப்பு எழுத்துப் பிழையோ தவறாகவோ இருப்பின் பிழையான பகுதியை அடுத்து ஜளுiஉஸ என்று அடிக்கோடிட்டுச் சதுர அடைப்பினுள் தரவேண்டும்.  அதனையடுத்துத் திருத்தம் இடம்பெற வேண்டும். மேற்கோள் தொடர்ச்சியாகக் காட்டப்படாவிட்டால் . . . . .  பின் தொடரலாம்.

  அடிக்குறிப்புகளில் ஆளப்படும் அனைத்து மேற்கோள்களும் குறியீடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.  மேற்கோளாக எடுத்தாளும் பகுதியில் அறிஞர் பெயரின்றிக் கூட்டுப் பெயராகயிருப்பின் சதுர அடைப்பில் ஜ ஸ ஆசிரியர் பெயர் தருதல் வேண்டும்.  இரண்டு, மூன்று வரிக் கவிதைகளை மேற்கோள் காட்டின் மேற்கோள் குறியீடு அவசியமில்லை.  இடதுபுறம் கொஞ்சம் தள்ளித் தொடங்கலாம்.  

    மேலைநாட்டு ஆய்வேடுகளில் இருவகையான மேற்கோள் நெறிகள் காணப்படுகின்றன.  1. தற்கால அமெரிக்க மொழிக்கழக முறை, 2. அமெரிக்க உளவியல் கழக முறை.  முதல் முறையின்படி கட்டுரையில் இடம்பெறும் மேற்கோளைக் கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

       “இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்து தோன்றுகின்றது” (மறைமலையடிகள் 78) 

   இம்மேற்கோளுக்குப் பின் (மறைமலையடிகள் 78) எனக் குறித்தது நூலாசிரியர் பெயரையும் அவரது படைப்பொன்றின் எழுத்தெட்டாம் பக்கத்தில் இச்செய்தி காணப்படுகின்றது என்று காட்டுவதற்கு ஆகும்.  இது குறித்து முழுவிவரங்கள் ஆய்வேட்டின் இறுதியில் இடம்பெறும் துணைநூற்பட்டியலில் கண்டுகொள்ளக்கூடும்.  ஆய்வேட்டில் நூலாசிரியரின் நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காட்டப்பெறு இருப்பின் (மறைமலையடிகள், முல்லைப்பாட்டு 78) என்று நூற்பெயரின் ஒரு பகுதியையேனும் இணைத்துக் கூறல் வேண்டும்.

அமெரிக்க உளவியல் கழக முறையில் மேற்கோள் காட்டுதலில் ஒரு சிறு வேறுபாட்டைக் காணலாம். 

     “இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்து தோன்றுகின்றது” (மறைமலையடிகள், 1997, ப.78) 

எனக் குறிக்கப்பெறும் நிலையை இங்குக் காணலாம்.  இதில் ஆண்டும், பக்கத்தைக் குறிப்பப் ‘ப.’ என்ற எழுத்தும் சேர்ந்துள்ளன.

மேற்கோள் அறம்

ஒரு நூலிலிருந்து ஒரு செய்தியை எடுத்தாளும்போது அதனை முறையாகக் குறிப்பிடுதல் ஆய்வுத் துறைக்குரிய தலையாய அறமாகும்.  யார் இதனையெல்லாம் காணப்போகின்றார்கள் என்ற போக்கில் மேற்கோள் எனக் காட்டாது விடுவது பல தவறுகளுக்கும் வழிவகுக்கும்.  குறிப்பிட்ட ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலில் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஆளப்பெற்றுள்ளது என்று ஒருவர் எழுதினார்.  உண்மையில் அச்சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய நூலிலேயே ஆளப்பெற்றிருக்கிறது.  பின்பு ஆய்வு செய்த பலரும் இன்னாரால் இச்சொல் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் ஆளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர் எனக் குறிக்காமல் தாங்களாகவே அறிந்ததுபோல் அதனை ஒன்பதாம் நூற்றாண்டிற்குரியது எனக் குறித்துள்ளனர்.  ஆய்வறம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தவறு இவர்கள்பால் நிகழ்ந்ததாகாமல் போயிருக்கும்.

       பல அரிய ஆராய்ச்சி நூல்கள் கிடைக்காமல் போவதுண்டு.  எனினும் அவற்றிலிருந்து சில பகுதிகளைச் சிலர் தம் நூல்களில் மேற்கோளாகக் காட்டியிருப்பர். எடுத்துக்காட்டாகச் சிந்துவெளி அகழ்வாய்வு குறித்துச் சர் ஜான் மார்ஷல், மார்ட்டிமம் வீலர், ஹீராஸ் பாதிரியார் ஆகியோர் ஆய்ந்து எழுதியுள்ள நூல்கள் இன்று மறு அச்சு ஆகவில்லை.  ஆனால் இவற்றிலிருந்து அரிய செய்திகளை மா. இரசமாணிக்கனார், க.த. திருநாவுக்கரசு, கே.கே. பிள்ளை ஆகியோர் தம் நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.  இவர்களிடமிருந்து இப்பகுதியை எடுத்துக்காட்டும் சிலர் தாமே முற்குறித்த நூல்களில் படித்துப் பார்த்து எடுத்துக் கொண்டது போல் குறிக்கின்றனர்.  ஒருவரால் தவறாகக் குறிக்கப்பட்ட பக்க எண்ணைக் கூட அப்படியே குறித்திருப்பது இதற்குச் சான்றாகும்.  ஜான் மார்ஷலின் கருத்தைத் திருநாவுக்கரசு இவ்வாறு எடுத்துரைக்கிறார் என்று காட்டுவதால் ஆய்வாளர் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது. ஒருவர்தம் ஆய்வேட்டில் அச்சுக்கு வராத கையெழுத்துப் படியினை மேற்கோளாகக் காட்டும்போது அது கையெழுத்துப்படி எனக் குறிக்காமல் விட்டுவிட்டார்.  அதனைப் பார்த்து அம்மேற்கோளைக் கையாண்ட மற்றொருவர் அதனை அச்சிட்ட நூல் என்று கருதித் தாமாகவே ஆண்டு, பக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மேற்கோளை நிறைவுடையதாக ஆக்கி இருக்கின்றார்.

மேற்கோளில் சுட்டுப் பெயர்கள்

மேற்கோளில் முதன் முதலாக அவன், அவர், அது, அவை, அவர்கள், அவள் என்ற சுட்டுப் பெயர்கள் வந்தால் அச்சுட்டுப் பெயரை அடுத்த பகர அடைப்புக் குறியினுள் பெயரைச் சுட்டிக் காட்ட வேண்டும். 

“அவர்கள் ஜபரதவர்கள்ஸ ஒரு காலத்தில் பேராற்றல் பெற்றவர்களாத் திகழ்ந்தனர்.  கடற் செலவில் தக்கிருந்த சிறந்த திறமையும், முதிர்ந்த அனுபவமும் அவர்களை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத செல்வர்களாகவும் உயர் தலைமையாளர்களாகவும் விளங்கச் செய்தன”1

   மேற்கண்ட மேற்கோளில் அவர்கள் என்ற சுட்டுப்பெயர் யாரைக் குறிக்கிறது? என்பதை அறியும் வண்ணம் பகர அடைப்புக் குறியினுள் ஜபரதவர்கள்ஸ எனச் சுட்ட வேண்டும்.  அதே மேற்கோளில் மீண்டும் ‘அவர்களை’ என வரும் இடத்தில் சுட்டத் தேவையில்லை.  இவ்வாறு மேற்கோளில் பெயர் குறிக்கப்படாமல் அவன், அவர், அவள், அது, அவர்கள் போன்ற சுட்டுப் பெயர்கள் வரும்போது, சுட்டுப் பெயரை அடுத்து பகர அடைப்பினுள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

செய்யுள் மேற்கோள்

         செய்யுளை மேற்கோளில் ஆளும்போது மூலத்தில் உள்ளபடியே எழுதுதல் வேண்டும்.  இரண்டு அடிகளை மட்டும் மேற்கோளாக ஆண்டால் உடற்பகுதியிலேயே இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுத வேண்டும்.  இரு அடிகளையும் பிரித்துக் காட்ட முதலடியின் முடிவில் ஃ என்றவாறு சாய்வுக்கோடிட வேண்டும்.  அல்லது ,(காற்புள்ளி) இடவேண்டும்.  இரண்டு அடிகளுக்கு மேற்பட்டிருந்தால் ஆய்வு தொடக்க ஓரப்பகுதியிலிருந்து 0.5 இன்ச் தள்ளி நூலிலுள்ளவாறு எழுதுதல் வேண்டும்.  ஆய்வுப் பகுதியிலிருந்து தனித்து எழுதப்படுவதால் மேற்கோள் குறியீடு தேவையில்லை.

      இரண்டு அடிகளாயின், “முதிர்வார் இப்பி முத்த வார்மணல்ஃகதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து”3 என எழுதி மற்ற எழுதித்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட சாய்வெழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்ட வேண்டும்.  இரண்டு அடிகளுக்கு மேற்பட்டிருப்பின்,

ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு நேந்தே
நினவ கூறுவல் எனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதின் பதன்எளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயர்பெற் றோரே4

எனச் சாய்வு எழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்ட வேண்டும்.

உரைநடை மேற்கோள்

     மூன்று வரிகளாக உரைநடை மேற்கோள் அமையுமாயின், அதனை ஆய்வின் உடற்பகுதியிலேயே இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுதவேண்டும். மூன்று வரிகளுக்கு மேற்பட்டிருப்பின் தொடக்க ஓரப்பகுதியிலிருந்து 0.5 இன்ச் தள்ளி பத்தி தொடங்குவதுபோல் தொடங்கி எழுதவேண்டும். இவ்வாறு எழுதுவதால் மேற்கோள் குறியீடு தேவையில்லை.  தற்போது கணிப்பொறியில் ஆய்வேடு உருவாக்குவதால் இம்மேற்கோள் பகுதியை சாய்வெழுத்தாகவோ டீழடன எழுத்தாகவோ காட்டலாம்.  ஜஎ.டு.ஸ சமணர்கள் துறவு பூண்டு பொதுப்பணி புரிந்தனர்.  அவர்களைப் போலவே தமிழ்நாட்டு அந்தணர்களும் துறவு பூண்டு பொதுப்பணி செய்தனர் என்பது மதுரைக் காஞ்சியால் அறியலாகும் புதுச் செய்தியாகும்.  இது பற்றிச் சாமி சிதம்பரனார்,

அக்காலத்திலேயே மதுரையிலே பவுத்த சமணப் பள்ளிகளைப் போல அந்தணர் பள்ளி இருந்ததாக இவ்வாசிரியர் கூறுகிறார்.  இது ஒரு புதிய செய்தி.  சமணத் துறவிகளைப் போலத் தமிழ்நாட்டு அந்தணர்களிலும் துறவிகள் இருந்தார்கள்.  அவர்கள் வேத வேதாந்தங்களைப் போதித்து வந்தார்கள் என்ற உண்மையை இதன் மூலம் காணலாம்3

என்றவாறு அமைக்கலாம்.

அடிக்குறிப்பு

       ஆய்வறிக்கைக்கு அடிக்குறிப்பிடுதல் மிக இன்றியமையாத ஒன்றாகும்.  சான்றுகளின் வழி நடுநிலையோடு அறிவியலாய்வு என்பதைக் காட்டும் நெறி என்பதை மறக்கக் கூடாது.  மூலப் பகுதியில் காட்டப்படும் ஆதாரங்களுக்கான விவரங்கள் அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டும்.  அந்தந்தத் துறைகளில் உழைத்தவர்களின் பெயர்களை அடிக்குறிப்புக்கள் காட்டி விடுகின்றன.  ஆய்வாளர் பிறரிடமிருந்து பெற்றது என்பதை அடிக்குறிப்புகள் காட்டி விடுகின்றன. மறுப்பாளரிடமிருந்து காத்துக் கொள்ளவும் இஃது உதவும்.  ஆய்வேட்டில் பிற இயல்களுடன் மாட்டெறிவதற்கு எதிர்குறிப்பாக இது பயன்படும்.

      எடுத்தாண்ட நூல், கட்டுரை பற்றிய விவரம் அடிக்குறிப்பில் அமைய வேண்டும்.  மேற்கோள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட விவரமும் தௌ;ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.   ஒரு பொருள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களை மிகச் சுருக்கமாக அடிக்குறிப்பில் கொடுக்கலாம்.  ஆய்வேட்டிற்குரிய இன்றியமையாமை அடிக்குறிப்புத் தருவதில் ஏற்படுகிறது.  ஆய்வேட்டில் கூறப்படும் கருத்துக்களுக்கும் முடிவுகளுக்கும் அடிக்குறிப்பே ஓர் அரணாக அமைந்து அழுத்தத்தையும் நிறைவையும் கொடுக்கின்றது.  பிறரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அறிவிக்கப் பயன்படுகின்றது.  சான்று ஆதாரங்களைத் தேடி அடிக்குறிப்பு உறுதுணை புரியும்.  எதிர்க்குறிப்பாகப் பயன்படும்.  ஒருவர் காட்டும் அடிக்குறிப்புக்கள் அவரது புலமையின் பரப்பையும் ஆழத்தையும் காட்டும்.  பிறரது கருத்திலிருந்து தமது சொந்தக் கருத்தைக் காட்டவும் தம்மைத் தாக்காமல் காட்டிக் கொள்ளவும் பயன்படும்.  பிறமொழி மூலத்தை அப்படியே அடிக்குறிப்பில் தந்துவிட்டு அதன் மொழிபெயர்ப்பை ஆய்வேட்டின் உடல் பகுதியில் தரவேண்டும்.  மேற்கோள் முடியும் இடத்தில் எண் இடவேண்டும்.  எண் தொடர்ச்சியாக அமைதல் வேண்டும்.  அந்தந்தப் பக்கத்தில் எண் இடுவதும் உண்டு.  ஆசிரியர் பெயர், நூலின் பெயர், பக்க எண் முதலியவற்றை இடவேண்டும்.  டாக்டர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.  தமிழண்ணல் (இராம. பெரியகருப்பன்) என இடல் வேண்டும்.  பதிப்.ஆ., மொ.ப.ஆ., பொ.ப.ஆ., என இடல் வேண்டும்.  

   நன்கு அறியப்பட்ட மெய்ம்மைகளுக்கு மேற்கோள் காட்டத் தேவையில்லை.  வெளியிடப்பட்ட நூல், கட்டுரை காட்டலாம்.  இன்றியமையாத இடமாக இருப்பின் கையெழுத்துப் படியினைக் காட்டலாம்.  ஒரே கருத்து பலர் கூறியிருந்தால், காலத்தால் முற்பட்டவர் கருத்தைக் காட்ட வேண்டும்.  பிறமொழி மொழபெயர்ப்புத் தரலாம்.  அப்படியே தரவேண்டும் என்றால் அடிக்குறிப்பில் தரவேண்டும்.  தம் கருத்துக்கு அரணான இடங்களில் எடுத்துக்காட்ட வேண்டும்.  புறநடையான கருத்துக்களைச் சுட்டுமிடங்களில் தரலாம்.  அளவாகக் கொடுக்க வேண்டும்.  தருக்க முறையில் யுடிடிசநஎயைவழைn தந்தால் போதுமானது.  அந்தந்தப் பக்கத்தில் அடியிலேயே அமைத்தல் சிறந்த முறையாகும்.  இயல்தோறும் இறுதியில் அமைப்பதும் உண்டு.

       ஒரு நூலின் அடிகளை, வரிகளை, கருத்தை, சாரத்தை, எடுத்து மொழியும் போது அவற்றை மேற்கோள் குறிகள் இட்டுக்காட்டி இறுதியில் எண் கொடுத்து அடிக்குறிப்பில் அந்நூற்பகுதி குறித்த விவரங்களைக் காட்ட வேண்டும்.  ஆராய்ச்சியில் உழைப்பையும் தரத்தையும் காட்டும் பகுதி இது.  ஒவ்வொரு நூலையும் படிக்கும்போதே சரியாகக் குறிப்பெடுத்துக் கொள்வது இவ்வடிக்குறிப்பிடுதலுக்குப் பெரிதும் உதவும்.  பக்கம் குறித்துக் கொள்ள மறந்து போனதால் நூலையே மேற்கோளாகக் காட்ட முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

      ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தனியாகத் தொடர் எண்ணிடும் முறையும் ஒரு இயலுக்கே தொடர்ந்து எண்ணிடும் முறையும் வழக்கத்தில் உள்ளன.  ஆய்வுரை எழுதும்போதே அடிக்குறிப்புக்கான தொடர் எண் முறை பின்பற்றப்பட வேண்டும்.  அடிக்குறிப்புக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் தரவேண்டும்.  பெயர்களைக் குறிப்பிடும்போது முன்னெழுத்துக்களையும் குறிப்பிட வேண்டும்.  அடிக்குறிப்பை ஒரு நூலிலிருந்து முதன் முதலாகத் தரும்பொழுது முழு விவரம் தந்து, பிறகு வரும்போது ஆசிரியர் பெயரும் நூற்பெயரும் தரலாம்.  அதே நூலை மீண்டும் காட்ட நேருமானால் ஆசிரியர் பெயரும் நூற்பெயரும் தந்தால் போதுமானது.

      ஒரு நூலிலிருந்து அடுத்தடுத்து மேற்கோள் காட்ட நேர்ந்தால்  முதலில் ஆசிரியர் பெயர், நூற்பெயர் சுட்டிய பின்னர்ப் பக்கங்களைப் போடவேண்டும்.  ‘மேலது’, ‘மேற்படி’ எனப் போட்டு பக்க எண் குறிப்பிடலாம்.  முற்காட்டிய நூலிலிருந்தே சில பக்கங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் காட்டுதல் நேர்ந்தால், ஆங்கிலத்தில் ழி.உவை. என்று ஆசிரியர் பெயருக்குப் பின் போட்டு ப.2 என எண்ணைக் குறிப்பிட வேண்டும்.  தமிழில் ஆசிரியர் பெயருக்குப் பின் மு.நூ. எனப் போடவேண்டும்.

அடிக்குறிப்பு அமைத்திடும் முறைகள்

     நூலாசிரியர் எழுதிய ஒரு நூலின் பகுதியை மேற்கோளாகக் காட்டும்போது அடிக்குறிப்பு அமைவதைப் பின்வருமாறு காணலாம்.

“தேள்கடி கோடைக் காலத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.  பெரியவர்களிடம், கொட்டிய இடத்தில் மட்டும் வலியும் எரிச்சலும் உண்டாகிறது.  ஆனால் குழந்தைகளிடம் பொதுவான உடல் குறிகளுடன் இரத்த ஓட்ட அயர்வும் ஏற்படுவதனால், தோல் குளிர்ந்து இரத்த அழுத்தம் குறைந்து, நாடி வீழ்ந்து விடுகிறது.  அரிதாக மிகுகாய்ச்சலுடன் இசிவும் ஏற்படலாம்.  சில வேளைகளில் தேக்க இதய அயர்வும் உண்டாகிறது.  எந்த வயதிலும் இக்குறிகள் தேன்றக்கூடும்.”11

மேற்குறித்த பகுதியை எடுத்துக்காட்டும் ஆசிரியர் அடிக்குறிப்பில்,
11. குழந்தை நல மருத்துவம் - தொகுதி 2, ஞா. இராஜராஜேஸ்வரி மற்றும் அ. ஜெகதீசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2003, ப.338 எனக் குறிப்பிடவேண்டும்.

     ஒருவருக்கு மேற்பட்டவரால் ஒரு நூல் எழுதப்பட்டிருப்பின், நூலின் தலைப்பில் நூலாசிரியர்கள் பெயர்கள் எவ்வரிசையில் குறிப்பிடப்பட்டு உள்ளனவோ அவ்வரிசையில் அடிக்குறிப்பிலும் காட்டப்பெறல் வேண்டும்.  “முத்துச் சண்முகன், சு. வெங்கடராமன், இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.111” என்றவாறு இடப்பெற வேண்டும்.  இருவர்க்கு மேற்பட்ட பலர் எழுதிய ஒரு நூலை அடிக்குறிப்பில் இடும்போது முதற்பெயரினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு ‘மற்றும் பிறர்’ எனக் குறிப்பிட வேண்டும்.  எனினும் துணைநூற் பட்டியலில் ஆசிரியர் அனைவர் பெயரையும் நூலிற் காணப்பெறும் வரிசையிலே இடம்பெறச் செய்தல் வேண்டும்.  எ.டு.

ம.ரா.பொ. குருசாமி, சுப. அண்ணாமலை, கதிர் மகாதேவன் (மொ.பெ.), பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, ப.131

இவ்வாறு அடிக்குறிப்பில் எழுதுவதோடு சுருக்கக் குறியீட்டு விளக்கத்தில் மொ.பெ. மொழிபெயர்ப்பு எனக் குறித்தல் வேண்டும்.

ஒரு நிறுவனம், ஓர் அமைப்பு, ஒரு கழகம், ஒரு குழு ஆகியவற்றின் சார்பாக ஒரு நூல் வெளியிடப்பட்டிருப்பின் அடிக்குறிப்பில், “தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், பன்னிரண்டாம் வகுப்புப்பொதுத் தமிழ்ப் பாடநூல், சென்னை 1996, ப.77” என்று குறிப்பிட வேண்டும்.

பலருடைய கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ஒருவரால் பதிப்பிக்கப் பெற்றிருப்பின், “பழந்தமிழ்ப் புதுமை, ச. சிவகாமி, (தொ.ஆ.), உமாமஹேஸ்வரி (பதி.), ப.53” எனக் குறிப்பிட வேண்டும்.

பலருடைய கட்டுரைகள் தொகுக்கப்பெற்ற தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டப்பெற்றிருப்பின், “ஞானத்தின் திருவுரு (கட்.), பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், கரந்தைக் கட்டுரைக் கோவை, ப.14” எனக் குறிப்பிட வேண்டும்.  இங்குக் கட்டுரையை நூலிலிருந்து வேறுபடுத்த நூற்பெயருக்கு அடிக்கோடு இடல்வேண்டும் அல்லது போல்ட் செய்ய வேண்டும்.

கலைக்களஞ்சியம், விவரநூல், அகராதிகள் போன்றவற்றிலிருந்து குறிப்புக்களைத் தந்தால் “கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம் நான்காம் தொகுதி, சமூக அமைப்பு (கட்), ஐராவதி கார்வே, ப.470” என அடிக்குறிப்பில் குறிப்பிட வேண்டும்.  இக்குறிப்பில் கட்டுரையின் பெயர் அடிக்கோடு இடம்பெற்றுள்ளது. “தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை தொகுதி 7, ப.387” என்றும் குறிப்பிடலாம்.

சிறு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள், ஒற்றைத்தாளில் விளம்பரம், செய்தித்தாளின் சிறுபகுதி ஆகியவற்றைக் குறித்துத் தெளிவாக பின்வருமாறு அடிக்குறிப்பு அமைதல் வேண்டும்.
  • சுவடி தாரீர், மோ.கோ. கோவைமணி, தஞ்சாவூர், ப.2.
  • நமது அவசரத் தேவை - மொழிக் கொள்கை, வா.செ. குழந்தைசாமி, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, ப.6.
  • கொள்கை விளக்கக் குறிப்பு, கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை, மானியக் கோரிக்கை எண்.17, 1994, ப.42.
  • ஆசிரியருக்குக் கடிதங்கள், தினமணி, சென்னைப் பதிப்பு, 16.4.1952.
  • சொற்பிறப்பியல் அகரமுதலி பற்றிப் பாவாணரின் கருத்தும் நோக்கமும், அறிக்கை, பெருஞ்சித்திரன், தென்மொழி, சுவடி 17, ஓலை 6-7, ப.7.
  • புத்தக வரலாற்றில் புதிய புரட்டு - விளம்பரம், ஆனந்த விகடன், 30.11.97, ப.47.
  • தொல்லியல் கழக ஆண்டறிக்கை, 2018, ப.42.
  • பாரதியின் கடித இலக்கியம் - இ. சுந்தரமூர்த்தி, தமிழாய்வு இதழிலிருந்து எடுத்து வெளியிடப்பெற்ற துண்டு வெளியீடு, ப.110.
  • புலமை, பல்கலைக் காலாண்டு இதழ், தொகுதி 2, ஏப்ரல்-சூன் 1976, ப.214.

இவ்வாறு அடிக்குறிப்பு இடம்பெறுவதோடு, சிறு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள், ஒற்றைத்தாள் விளம்பரங்கள், செய்தித்தாள்களில் பெட்டிச் செய்திகள் ஆகியவற்றை ஒளியச்சுச் செய்து பின்னிணைப்புக்களில் இணைத்தல் வேண்டும்.

ஆண்டு குறிக்கப்படாத நூல்கள், பக்க எண் குறிக்கப்படாத நூல்கள், வெளியீடுகள் ஆகியவற்றை முறையே “மகர நெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி, ஸ்ரீ.உ.வே. எஸ்.கே. ராமகிருஷ்ணய்யங்கார் (பதி.), ஆண்டு இல்லை, ப.36” என்றும், “என்ன செய்ய வேண்டும், இந்திய அரசு மனித வளமேம்பாட்டுத்துறை வெளியீடு, 1992, பக்கம் இல்லை” என்றும் அடிக்குறிப்பில் குறிப்பிட வேண்டும்.

அச்சிடப்பெறாத கையெழுத்துப்படிகளாயின் அவை சரியான ஆவணங்கள்தாம் என்று அரிய கையெழுத்து வல்ல ஆய்வுத்துறை, தொல்பொருள் துறை போன்றவற்றால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றின் ஒளியச்சுப் படிகளையும் பின்னிணைப்பில் இணைத்தல் வேண்டும்.  அடிக்குறிப்பில், “மனுமுறை கண்ட வாசகம், இராமலிங்க அடிகளாரின் கையெழுத்துப் படி (சான்றளிக்கப்பெற்றது)” என்று குறிப்பிட வேண்டும்.  பதிவு செய்யப்பட்ட பத்திரம், கருவூலச்சீட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் ஆணை ஆகியவற்றின் ஒளியச்சுப் படிகளைப் பின்னிணைப்பில் தருவதோடு அடிக்குறிப்பில் அவற்றின் நாளை மறவாது குறிக்க வேண்டும்.  

      பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெற்றுப் பட்டம் வழங்கப்பட்ட அச்சிடாத ஆய்வேடும் மேற்கோள் காட்டத்தக்கதே.  “சித்த மருத்துவத்தில் நாடி - வெளியிடப்பெறாத ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 1988, பக்.23-34” என்று அடிக்குறிப்பில் ஆய்வேடு அளிக்கப்பெற்ற ஆண்டு, பல்கலைக்கழகத்தின் பெயர் ஆகியவற்றைக் குறிக்க வேண்டும்.
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டும் போது அவை ஒளிபரப்பப்பெற்ற அல்லது ஒலி பரப்பப்பெற்ற நாள் நேரம் தொலைக்காட்சி, வானொலி நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றையும் குறிப்பிடல் வேண்டும்.  “புதுமைப்பித்தன் படைப்பாற்றல், கு.வெ. பாலசுப்பிரமணியன், விஜய் தொலைக்காட்சி, சென்னை, மாலை 5,30, 12.10.1997” என்றும், “தமிழிசைப் பண்கள், ப.சுந்தரேசனார், திருச்சி வானொலி நிலையம், இலக்கியப் பேருரை, இரவு 9.30-10.00, 6.4.1987” என்றும், நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பலராயின், “முனைவர் ஆறு. அழகப்பன் மற்றும் ஐவர்” என்றும் குறித்தல் வேண்டும்.  திரைப்பாடல், ஒலிநாடா ஆகியவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டலாம்.  அவற்றின் பெயர், வெளியீட்டாளர் பெயர், ஆண்டு ஆகியன அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டும்.

அடிக்குறிப்பில் சுருக்கக் குறியீடுகள்

ஆய்வாளர் ஆய்வேட்டில் அடிக்குறிப்பு குறிப்பிடும்போது இடத்திற்கேற்பவும், பொருளுக்கேற்பவும் சுருக்கக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.  அச்சுருக்கக் குறியீடுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பின்வருமாறு அமையும்.
ப.         - பக்கம்
பக்.         - பக்கங்கள்
மேற்படி - அதே இடத்தில்
மேலது - அதுவே
மு.நூ. - முற்காட்டிய நூலிலிருந்து
மு.ப. - முற்காட்டிய பகுதியிலிருந்து
தே.இ. - தேதி இல்லை, வெளியிட்ட ஆண்டு இல்லை
இ.இ. - வெளியிட்ட இடம் இல்லை
பதி. - பதிப்பாசிரியர், பதிப்பு
முதலியவர்கள் - இரண்டிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள்
ப.உ. - பதிப்புரிமை
ஒ.பா. - ஒப்பிட்டுப் பார்க்க
இ.கா. - இணைத்துக் காண்க
எ.டு. - எடுத்துக்காட்டு
தொ. - தொடர்ச்சி
தொடர். - தொடர்ச்சி
அ.பொ. - அதன் பொருளாவது
மு.கு. - முக்கியக் குறிப்பு
தி.ப. - திருத்திய பதிப்பு
மொ.பெ. - மொழிபெயர்ப்பு
பா.         - பாட்டு
பாக். - பாக்கள்
அ.யா. - அஃது யாதெனில்
எதிர். - எதிரான

அடிக்குறிப்பின் பயன்கள்
  • ஆய்வாளர் எந்தெந்த நூல்களிலிருந்து ஆய்வுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார் என்பதை அறியப் பயன்படுகிறது.
  • பிறமொழி நூல்களிலிருந்து மேற்கோளை எடுத்தாண்டால், மொழிபெயர்ப்பை ஆய்வுப் பகுதியில் எழுதிவிட்டு, பிறமொழி நூல் மூலக் கருத்தை அப்படியே தர அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • ஆய்வேட்டின் முன்னும் பின்னும் வெவ்வேறு இடங்களில் கூறிய கருத்துக்களை ஓரிடத்தில் ஒப்பிட்டுக் காட்டவும், உறழ்ந்து காட்டவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • இன்றியமையாத தேவையின்போது மூலத்தை அப்படியே தரவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • சில செய்திகளைத் தெளிவாக ஆய்வுப் பகுதியில் விளக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, விளக்கம் தர இடம் தருவது அடிக்குறிப்பே ஆகும்.
  • ஆய்வுக் கட்டுரையிலுள்ள ஒரு செய்தியே பல இடங்களில் கொடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தெரிவிக்கவும் அடிக்குறிப்பு பயன்படுகிறது.
  • எடுக்கப்படும் மேற்கோள், கருத்துகள், இடம்பெறும் நூலாசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அடிக்குறிப்பு அமைகிறது.
  • ஆய்வாளரின் சிந்தனையோட்டமும், கருத்தோட்டமும தடைபடாமல், சீரான முறையில் தெளிவாகக் கருத்துகளை ஆய்வுப் பகுதியில் எடுத்துக் கூற வழி வகுப்பது அடிக்குறிப்பே ஆகும்.
அடிக்குறிப்பில் ஆய்வாளர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
  • நூலில் உள்ளவாறே ஆசிரியர் பெயரை எழுத வேண்டும்.  டாக்டர், பேராசிரியர், புலவர், கவிஞர், சித்த மருத்துவர், லயன், திரு., திருவாளர், திருமதி போன்ற சிறப்புப் பட்டங்களை அடிக்குறிப்பில் எழுதத் தேவையில்லை.
  • மேற்கோள் எண்களுக்கேற்ப முறைப்படி அடிக்குறிப்பிட வேண்டும்.
  • நூற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.  பகுதி, தொகுதிகள் இருந்தால் அவற்றிற்கும் அடிக்கோடிட வேண்டும்.  இது தட்டச்சு எந்திரம் மூலம் ஆய்வேடு தயார் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முறை.  தற்போது கணிப்பொறியில் தட்டச்சு செய்வதால் Bold Lettersஇல் காட்டலாம்.
  • கட்டுரையாயின் கட்டுரையின் தலைப்பை ‘ ’ என ஒற்றை மேற்கோளுள்ளும், கட்டுரை இடம்பெறும் நூற்பெயரை அடிக்கோடிட்டும் அமைக்க வேண்டும்.  அடிக்கோடிடுதலுக்கு மாற்றாக தற்போது கணிப்பொறியில் Bold Lettersஇல் காட்டலாம்.
  • அடிக்குறிப்பில் மூலப்பகுதியை அமைக்கும்போது, இரட்டை மேற்கோள் குறியீட்டினுள் எழுத வேண்டும்.
  • குறுக்க விளக்கங்களைத் தேவையான இடங்களில் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
  • அடிக்குறிப்பில் விளக்கம் அளிக்க வேண்டியிருப்பின் சுருக்கமாக விளக்கமளிக்க விழைதல் வேண்டும்.
  • அடிக்குறிப்பில் விளக்கம் அதிகமாக அளிக்க வேண்டியிருப்பின் அதைப் பின்னிணைப்பில் எழுதுதல் நன்று.  அடிக்குறிப்பில் இடம்பெற வேண்டிய விளக்கம் பின்னிணைப்பில் இருந்தால், அடிக்குறிப்பில் பின்னிணைப்பைப் பார்க்கவும் எனக் குறிப்பிட்டு, பின்னிணைப்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
  • அடிக்குறிப்பு எழுதும் முறையை முதற்படி எழுதும் போதே தொடங்க வேண்டும்.
  • அடிக்குறிப்பை ஆளும் நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து அடிக்குறிப்புகளும் கையாளப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வேடு முழுமையும் பார்த்துச் சரி செய்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக