தமிழ் மக்களின்
வாழ்க்கைக்கு ஒப்பற்ற வழிபாட்டு நூலாகத் திகழ்வது திருக்குறள். இந்நூல் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கும்
வழிகாட்டியாக விளங்குவதால் உலகப்பொதுமறை என்கின்றோம்.
“வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு”
என்று பாரதியார் பாடியது முற்றிலும் உண்மை. வள்ளுவரது நெஞ்சமும் உலக மக்களின் வாழ்வியலும் ஒரே
தராசில் சம எடையாக நிறுத்தளந்த்துபோல் ஒரே சீராக நிற்பதைக் கண்டவர் பாரதியார். அதனால்தான் அவர் இவ்வாறு வள்ளுவரைக் குறிப்பிடுகின்றார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக,
“எல்லாப்
பொருளும் இதன்பால்உள; இதன்பால்
இல்லாத எப்பொளும் இல்லையால்”
என்று திருவள்ளுவ மாலை எடுத்துரைக்கின்றது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக வள்ளுவப் பெருந்தகை
கூறிய திருக்குறள் கருத்துக்களைப் பின்னர் வந்த தமிழ்ப் புலவர்கள் தம்முடைய நூல்களில்
பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
பல நூல்களுக்கு வழிகாட்டியாக அமைந்த முதல் நூலாகத் திருக்குறள் விளங்குகின்றது. திருவள்ளுவர் வகுத்துத் தந்த வழியினைப் பின்பற்றிப்
பிற்காலத்தில் பல அறநூல்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் தோன்றியுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியில் தோன்றிய முதல் தமிழ்க்
காப்பியம் என்றும், முத்தமிழ்க் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படும்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் போக்கில் ஆங்காங்கே
திருவள்ளுவரின் கருத்துக்களைச் செருகி வள்ளுவத்தைக் கற்பக மரமாக வளர்த்துள்ளமை வெள்ளிடை.
“அரசியல்
பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து
ஊட்டும் என்பதூஉம்”
(சிலப்.பதிகம்,
55-57)
அரசியலில் குற்றம் செய்தவர்களை அறமே யமனாகிக் கொல்லும், புகழ்
பொருந்திய பத்தினியை உயர்ந்தோர் புகழ்வர். ஊழ்வினை காலம் வரும்போது வடிவெடுத்து வந்து
தன் பயனைத் தரும் ஆகிய மூன்று நியதிகளை அடிப்படையாகக் கொண்டது சிலப்பதிகாரம். இந்நியதிகளை எழுதுவதற்கு இளங்கோவடிகளுக்குத் திருக்குறள்
ஆதாரமாக அமைந்திருக்கிறது எனலாம். இம்மூன்று
நியதிகளையும் திருக்குறளோடு ஒப்பிட்டு எழுதின் விரியும் என்பதால் ‘ஊழ்வினை உருத்துவந்து
ஊட்டும்’ என்ற நியதிக்கு இளங்கோவடிகள் திருக்குறளை எவ்வாறு பயன்படுத்தியிருக்கின்றார்
என்பதை விளக்குவதாக ‘வள்ளுவச் சிலம்பு’ என்னும் இக்கட்டுரை அமைகிறது.
“ஊழிற்
பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்” (குறள்.380)
என்று திருவள்ளுவர் ஊழின்வலியைக் கூறுகின்றார். அதாவது, தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர்
உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுயாபமே யானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின்
முற்பட்டு நிற்கும். அதனால் ஊழ்போல் மிக்க
வலிமையுடையது வேறு எது வும் இல்லை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
ஊழ்வினை இரண்டு
வகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும். இதனை ஆகுஊழ், போகுஊழ் என்பர்.
ஒரு மனிதனின்
வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்குக் காணரம் அவனது முற்பிறவியின் பயனே என்கிறது
திருக்குறள்.
ஒருவர் வாழ்க்கையில்
இன்பம் துன்பம் ஆகிய முன்வினையின் தொடர்ச்சியாகவே இப்பிறவியில் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்தப் பிறவியல் ஒருவர் இன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா
அல்லது துன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா என்பதை அவரின் முற்பிறவிப் பயனைப் பொறுத்து
அமையும் எனலாம். ஒருவர் செய்த வினை அவரையே
சேருமேயல்லாது மற்றவரைச் சேராது.
“பேதைப்
படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.” (குறள்.372)
ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய
ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனைப் பேதையாக்கும்.
அவனறிவு சுருங்கி இருப்பினும் கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து
அஃததனை விரிக்கும் என்பார் பரிமேலழகர். அதாவது,
தீவினை தோன்றினால் அறிவைக் கெடுத்துவிடும் என்றும், நல்வினை தோன்றினால் அறிவை விரிவுபடுத்தும்
என்றும், செல்வமும், வறுமையும் போல் அறிவீனமும், அறிவுடைமையும் கூட நம்முடைய தீவினை,
நல்வினை மூலம்தான் ஏற்படும் என்றும் வற்புறுத்துகிறது வள்ளுவம்.
“எனைப்பகை
யுற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றடும்”
(குறள்: 207)
எத்துணைப்
பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்.
அவ்வாறன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் என்பர். அதாவது, எத்தகைய கொடிய பகையை உடையவர்களும், அதிலிருந்து
தப்பி வாழ முடியும். ஆனால் தீவினை என்னும்
பகை விடாமல் பின் தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.
ஒருவனுடைய நிழல் அவனைவிட்டு நீங்காமல்
அவனைத் தொடர்ந்து வருதல்போல பிறர்க்குத் தீவினைசெய்தால் அத்தீவினை அவனை நிழல்போல் தொடர்ந்து
வந்து துன்புறுத்தும். தீவினைக்கு என்றும்
மன்னிப்பு என்பது கிடையாது. தீவினை செய்த ஒருவன்
இந்தப் பிறவியில் தண்டனை பெறவில்லை என்றாலும் மறுபிறவியில் நிச்சயம் தண்டனை பெற்றே
தீருவார் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார் வள்ளுவப் பெருந்தகை. இக்கருத்தினை இளங்கோவடிகள் மதுராபதியின் கட்டுரைப்
பகுதியில்,
“உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது” (சிலப்.23:170-171)
எனக்
கூறுகின்றார். அதாவது, முற்பிறப்பிற் செய்த
தீவினை வடிவெடுத்து பயனளிக்க வந்த காலத்து, அக்காலத்துச் செம்மை இல்லாதவர்க்குச் செய்த
தவம் உதவாது. அது அவரைக் காக்கவும் செய்யாது. அத்தீவினைப் பயனை அவர் முற்றிலும் தாமாகவே அனுபவித்தாக
வேண்டும்.
இந்திரவிழாவின் போது கோவலனும் மாதவியும்
மகிழ்ந்து பாடிய கானல் வரிப்பாட்டில் ஊழ் தன் விளையாட்டைத் தொடங்கியது எனலாம். கோவலன் பாடிய பாடலில் தன் மனதில் வேறு மகளிர்பால்
கோவலனுக்கு விருப்பம் சென்றுள்ளது என்பதைக் குறிப்பால் பொருள் கண்ட மாதவி, கோவலனிடம்
இருந்த யாழினைத் தான் வாங்கி, தானும் ஒரு குறிப்பினள்போல் பாடினாள். இவ்விடத்தில்தான் ஊழ்வினை உருத்து வந்து பயனைத்
தரத் தொடங்கியது.
“கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என
யாழ்இசைமேல் வைத்துத் தன்ஊழ்வினை
வந்து உருத்தது ஆகலின்”
(சிலப்.கானல். கட்டுரை. 2-4)
என்பதால்
கோவலன் மாதவியைப் பிரிந்ததற்குக் காரணம் ஊழ்வினைதான் எனக் காண்கின்றோம்.
கானல்வரிப் பாட்டால் மனமுடைந்த கோவலன்
கண்ணகியிடம் திரும்பி வருகின்றான். கண்ணகியை
அழைத்துக் கெண்டு மதுரைக்குப் புறப்படும் எண்ணமே ஊழ்வினையால் விளைந்தது எனலாம். இதனை இளங்கோவடிகள்,
“காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ
உள்ளம் துரப்ப” (சிலப்.10:3-4)
என்பதால்
முன்னைத் தீவினையானது வந்து உருத்தியதன் பயனாக உள்ளம் தன்னைச் செலுத்த கோவலனும் புகாரைவிட்டு
ஏகினான் என்கின்றார். அதுபோல், பாண்டிய மன்னனும்
முன்வினைப் பயனைத் தரும் காலம் என்பதை சற்றும் ஆராயாமல் “கள்வனைக் கொன்று அச்சிலம்பு
கொணர்க” என்பதற்கு,
“வினைவிளை
காலம் ஆதலின் யாவதும்” (சிலப்.16:148)
என்கின்றார்.
“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்” (சிலப்.16:148)
முன்வினைப் பயனைத் தரும் காலம்
ஆதலால் எதையும் ஆராயாமல்
‘கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க’ என்றான் பாண்டியன். இது அவனது முன்வினைப் பயனால் விளைந்தது.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள்.319)
என்ற
திருக்குறள், துறந்தவர் பிறர்க்கின்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கட் செய்வராயின்,
தமக்கின்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும் என்கின்றது.
இக்கருத்தினை அடியொற்றி இளங்கோவடிகள்,
“பரதன்
என்னும் பெயரன்;அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன்
ஆதலின்
“ஒற்றன் இவன்”எனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக்
கொல்வுழி
கொலைக் களப்பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களம் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ? பரதர் முறையோ?
ஊரீர் முறையோ? சேரீயீர் முறையோ?“ (சிலப்.
23:154-161)
என மதுராபுரித் தெய்வத்தின் மூலம் கோவலனுக்கு எதிரி கோவலனே என்பதைச்
சுட்டிக்காட்டி அவன் வினையே அவனை அழித்தது என்பதற்குக் கோவலனின் முற்பிறப்பில் நிகழ்ந்த
நிகழ்ச்சியைக் காட்டுகின்றார் இளங்கோவடிகள்.
முற்பிறவியில்
செய்த தீவினை இப்பிறவியில் தானே வந்து சேரும் என்னும் வள்ளுவரின் கருத்துக்கேற்ப சிலப்பதிகாரத்தில்
இளங்கோவடிகளால் அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, இளங்கோவடிகள்
ஊழின் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் திருவள்ளுவர் வழி நின்று படைத்துள்ளார் என்பதில்
எவ்வித ஐயப்பாடும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக