ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
தோற்றம்
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.
கல்வி
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
சமயப் பணி
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.
வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.
அச்சுப் பணி
சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தமிழகப் பணி
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
போலியருட்பா மறுப்பு
இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் நிந்தித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.
சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
சைவப் பாடசாலை நிறுவல்
1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.
1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.
ஆறுமுக நாவலரின் உரைத்திறன்
நீதி வெண்பா உரையில்,
நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில்
பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த
அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74)
என்ற பாடற்கதையை நாவலர் பின்வருமாறு விளக்குகின்றார்;-
“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் இரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை, தான்இருக்க இடம்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக் கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக் கொண்டு அம்மலையில் ஏறிக் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான்”.
மொழித்திறன் குறித்த நிகழ்ச்சி
ஆறுமுக நாவலர் ஆங்கிலப் புலமையும் வாய்ந்தவர்.வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க வேண்டியிருந்த போது நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் ஆறுமுக நாவலர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் முணுமுணுத்தபடி தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட, ஆறுமுக நாவலர் உடனே, ’எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட நாவலர் மறுத்து தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மொழிபெயர்த்தார். ’சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்கு அர்த்தம். (எல்லி,ஆழிவரம்பு,கால் ஏற்று,காலோட்டம்,புக்குழி எனும் வார்த்தைகளுக்கு முறையே சூரியன்,கடற்கரை ஓரம்,காற்று வாங்க,சிறுநடை,புறப்பட்டபோது என்று பொருள்)
சாதிப்பிரசாரம்
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.
நகுலேஸ்வரம்
- போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார்.
- நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் உள்ள நாவலர் மணிமண்டபம்
- இலங்கை அரசு வெளியிட்ட அஞ்சல்தலை
நூற்பட்டியல்
1. அகத்தியர்அருளியதேவாரத்திரட்டு (நூல்)
2. அன்னம்பட்டியம் (நூல்)
3. இலக்கணக்கொத்து (நூல்)
4. இலக்கணச்சுருக்கம் (நூல்)
5. இலக்கணவிளக்கச்சூறாவளி (நூல்)
6. இலக்கணவினாவிடை (நூல்)
7. இலங்கைபூமிசாஸ்த்திரம் (நூல்)
8. ஏரெழுபது (நூல்)
9. கந்தபுராணவசனம் (நூல்)
10. கந்தபுராணம்பகுதி1-2 (நூல்)
11. கொலைமறுத்தல் (நூல்)
12. கோயிற்புராணம்(புதியஉரை) (நூல்)
13. சிதம்பரமான்மியம் (நூல்)
14. சிவஞானபோதமும்வார்த்திகமென்னும்பொழிப்புரையும் (நூல்)
15. சிவஞானபோதசிற்றுரை (நூல்)
16. சிவராத்திரிபுராணம் (நூல்)
17. சிவசேத்திராலயமஹாத்ஸவஉண்மைவிளக்கம் (நூல்)
18. சிவாலயதரிசனவிதி (நூல்)
19. சுப்பிரமணியபோதகம் (நூல்)
20. சூடாமணிநிகண்டுமூ.உரை (நூல்)
21. சேதுபுராணம் (நூல்)
22. சைவசமயநெறி (நூல்)
23. சைவதூஷணபரிகாரம் (நூல்)
24. சைவவினாவிடை (நூல்)
25. சௌந்தர்யலகரிஉரை (நூல்)
26. ஞானகும்மி (நூல்)
27. தருக்கசங்கிரகம் (நூல்)
28. தருக்கசங்கிரகதீபிகை (நூல்)
29. தனிப்பாமாலை (நூல்)
30. தாயுமானசுவாமிகள்திருப்பாடல்திரட்டு. (நூல்)
31. திருக்குறள்மூ.பரிமேலழகர்உரை (நூல்)
32. திருக்கைவழக்கம் (நூல்)
33. திருக்கோவையார்மூலம் (நூல்)
34. திருக்கோவையார்நச்.உரை (நூல்)
35. திருச்செந்தூர்நிரோட்டயமகவந்தாதி (நூல்)
36. திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்புராணம் (நூல்)
37. திருத்தொண்டர்புராணம் (நூல்)
38. திருமுருகாற்றுப்படை (நூல்)
39. திருவாசகம்-மூலம் (நூல்)
40. திருவிளையாடற்புராணம்-மூலம் (நூல்)
41. திருவிளையாடற்புராணம்-வசனம் (நூல்)
42. தெய்வயாணையம்மைதிருமணப்படலம் (நூல்)
43. தொல்காப்பியம்சூத்திரவிருத்தி (நூல்)
44. தொல்காப்பியம்சொல்.சேனா.உரை (நூல்)
45. நன்னூல்-காண்டிகைஉரை (நூல்)
46. நன்னூல்-விருத்திஉரை (நூல்)
47. நீதிநூல்திரட்டுமூலமும்உரையும் (நூல்)
48. நைடதஉரை (நூல்)
49. பதினோராம்திருமுறை (நூல்)
50. பாலபாடம்-4தொகுதிகள் (நூல்)
51. பிரபந்தத்திரட்டு (நூல்)
52. பிரயோகவிவேகம் (நூல்)
53. புட்பவிதி (நூல்)
54. பெரியபுராணவசனம் (நூல்)
55. போலியருட்பாமறுப்பு (நூல்)
56. மார்க்கண்டேயர் (நூல்)
57. யாழ்ப்பாணச்சமயநிலை (நூல்)
58. வக்கிரதண்டம் (நூல்)
59. வாக்குண்டாம் (நூல்)
60. விநாயககவசம் (நூல்)
இறுதி நாட்கள்
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத் தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
நினைவு நிகழ்வுகள்
- நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971 அக்டோபர் 29 இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
- சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக