ஞாயிறு, 24 நவம்பர், 2019

கோயில் வழிபாட்டு நெறிமுறைகள்


        
            முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்                (குறள்.388)
என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப பழங்காலத்தில் அரசனை இறைவனாகக் கருதிய காலத்தில் அரண்மனை கோயிலாகத் திகழ்ந்தது.  அரசர்களே தனியாக கோயிலைக் கட்டி அவற்றில் இறைவனை வைத்துப் பூசித்தபோது இறைவன் இருக்கும் இடம் கோயிலாகத் திகழ்ந்தது.  இந்நிலை இன்றுவரை நிலைபெற்றிருக்கிறது.  வழிபாடும், வழிபாடு செய்யும் இடமும் காலப்போக்கில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன.  வழிபாட்டிற்குத் தெய்வத் திருமேனிகளை நிருவியும், சிவலிங்கங்களை அமைத்தும் கட்டடங்கள்  கட்டப்பெற்றன.  அக்கட்ட்டங்களைக் கோயில்கள் என்றும் கோட்டங்கள் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடக் காண்கிறோம்.  புறநானூற்றில்,
            வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் (புறம்.241:3)
            அணங்குடை முருகன் கோட்டத்து                 (புறம்.299:6)
என்று கோயில், கோட்டம் குறித்துக் குறிப்பிடுவதனைக் காணலாம். தேவாரத்தில் திருநாவுக்கரசர்,
            பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
                                                                        (தேவாரம், 6:71:5)
என்ற பாடல் மூலம் பெருங்கோயில், கரக்கோயில், மாடக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் ஆகிய எட்டு வகையான கோயில்களில் சிவபெருமான் உறைந்திருப்பான் என்கின்றார்.
இவ்வாறமைந்த கோயில்கள், மன்னர்கள் காலத்தில் ஒரு வழிபாட்டிற்கு உரிய இடமாக மட்டும் இல்லாமல் ஆடல் பாடல் போன்ற கலைகளை வளர்க்கும் ஒரு இடமாகவும் இருந்தன. காலங்கள் மாறியதால் நம்முடைய கலாச்சாரமும் படிப்படியாக மாறி இப்போது கோவில் என்பது முழுக்க முழுக்க வழிபாட்டுத் தளமாகவே மாறியுள்ளது. வழிபாட்டுத் தலமான கோவிலில் தெய்வங்களை வழிபடும்போது கடைபிடிக்கவேண்டிய சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவோருக்கு இந்நெறிமுறைகள் தெரியாமலேயே சிலர் வழிபட்டு வருகின்றனர்.  அந்நெறிமுறைகளை எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
சிவன் கோவிலில் வழிபடும் முறை
கோயிலின் முகப்பில் நவகிரக சந்நிதி இருந்தாலும் அவர்களை இறுதியாக தான் வழிபட வேண்டும். கோயிலைப் பொறுத்தவரை கடவுளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆகையால் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பிறகு இறுதியாக நவகிரகங்களை வழிபடுவது சிறந்தது.
சிவன் கோயிலை அடைந்த உடன்சிவாய நாமஎனக் கூறி இராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயிலின் உள்ளே சென்றதும் விநாயகப் பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியைத் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு அவரிடம், “நந்தி தேவரே நான் சிவபெருமானைத் தரிசிக்க வந்துள்ளேன். எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன்என்று கூறி அவரின் அனுமதியைப் பெற வேண்டும்.
நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஓதுவது சிறந்ததுஅதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில்ஓம் நம சிவாயஎன்னும் மந்திரத்தைக் கூறி வழிபடுவது நல்லதுசிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.  
ஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும்.  மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய தனித்துவமான ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவறு இல்லை.   அம்மனை வணங்கிய பின்னர் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்தச் சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது. அதன் பிறகு கோயிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வளம் வருவது நல்லது. வளம் வருகையில்ஓம் நமசிவாயஎன்று மந்திரத்தை ஓதியவாறே வளம் வரவேண்டும்.
சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாகத் தெரியும் ராஜகோபுரத்தைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்குள் வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்குச் சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்கச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது கொடிக்கம்பமாகும். இந்தக் கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக் காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள்.
அதற்கு அடுத்துச் சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்திருக்கும்.   இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்கச் செல்ல வேண்டும். சன்னதியின் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.  இறுதியாக இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையைக் கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று இரு கைகளையும் மெதுவாகத் தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும்.
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், அதன்படி வரம் கொடு எனப் பிரார்த்தனை செய்துக்கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
சிவன் கோயிலிற்கும் பெருமாள் கோயிலிற்கும் செல்கையில் சில நுணுக்கங்களைக் கடைபிடிப்பது அவசியம். சிவன் கோயிலைப் பொறுத்தவரை சிவனை வணங்கிய பிறகே அம்மனை வணங்கவேண்டும். ஆனால் பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அதன் பிறகே பெருமாளை வணங்க வேண்டும்.
பொதுவாக ராகு காலத்தில் யாரும் எந்த நல்ல காரியத்தையும் செய்வது கிடையாது. ஆனால் இந்த விதி கோயிலில் பொருந்தாது. செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் துர்கை பூஜையில் கலந்துகொள்வது மிகவும் நல்லது.
கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
கோயிலுக்குச் செல்லும் பொழுதும், கோயிலுக்குள் இருக்கும் பொழுதும், சுவாமி தரிசனத்திற்கு முன்னும் பின்னும், கோயிலுக்கு வெளியியேயும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகள் உண்டு.  அவை பின்வருமாறு:
கோயிலுக்குச் செல்லும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Ø  கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.
Ø  வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.
Ø  பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.
Ø  பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.
Ø  குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.
Ø  சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.
Ø  கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.
Ø  கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.
கோயிலுக்குள் இருக்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Ø  நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.
Ø  சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
Ø  விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
Ø  ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதிப் பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
Ø  கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
Ø  மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.
Ø  நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.
Ø  நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
Ø  கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.
Ø  விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
Ø  பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
Ø  பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
Ø  நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
Ø  நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.
Ø  கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
Ø  பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.
Ø  நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ,  தியானத்தையோ  கெடுக்கக்  கூடாது.
Ø  கோயிலின் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.
Ø  வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
Ø  வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.
தரிசனத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Ø  கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
Ø  தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
Ø  தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
Ø  கோயிலுக்குள் உறங்கக் கூடாது.
Ø  கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.
கோயிலுக்கு வெளியே கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Ø  கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் செய்ய வேண்டும்.
Ø  கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்.
Ø  ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக்  கூடாது.
Ø  அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Ø  கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
Ø  கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.
Ø  கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
இதுபோன்ற வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்தால் இறைவனின் அருள் பெறலாம்.  எல்லோரும் இம்முறையினைப் பின்பற்றி நடப்போமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக