தமிழ் மக்கள் பொருள் தேடுவதற்காகக் கடல் கடந்து
கப்பல் ஏறிச் சென்றுள்ளனர். கடல் கடந்து
செல்வதற்குக் 'கலத்திற் பிரிவு' என்பர். 'திரைகடலோடியும்
திரவியம்தேடு' என்பது பண்டைத் தமிழர் பண்பாட்டுகளுள்
ஒன்று. கடல் தாண்டிச் செல்வதற்குக்
கப்பல்களையும், ஓடங்களையும், கட்டுமரங்களையும்
பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய இலக்கியங்களில்
அம்பி, புணை அல்லது பிணை, திமில்,
நாவாய், வங்கம், கலம்,
ஓடம், மிதவை, பஃறி,
நீரணி மாடம், தோணி ஆகிய கலங்களின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றில்
உப்பங்கழிகளில் செலுத்துவதற்குரிய சிறிய படகுகளும் கடலில் செலுத்துவதற்குரிய பெரிய
கப்பல்களும் அடங்கும். தமிழ் இலக்கியங்களிலும்,
நிகண்டுகளிலும், அகராதிகளிலும் சுமார் 100 கலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் பத்து
வகையான கலங்களை அவற்றின் அமைப்பின்
அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
மிதவை கலன்களை மிதவை, புணை என்றும்; சிறிய மரக்கலங்களைப் பஃறி, ஓடம், திமில், அம்பி, நீரணி மாடம், தோணி என்றும்; பெரிய
மரக்கலங்களை நாவாய், கலம், மரக்கலம்,
வங்கம் என்றும் வகைப்படுத்துவர்.
மிதவை
கலன்கள்
1. மிதவை
மனிதன் முதன் முதலில்
நீரைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட சாதனம் மிதவை ஆகும். நீரில் மரங்கள் மிதப்பதைக் கண்ட தமிழன்
அவற்றில் ஏறி நீரைக் கடக்க முயன்றான்.
பின்னர் தனது திறமையால் மரங்களைச் சீர் செய்து மூன்று அல்லது நான்கு
மரங்களை ஒன்றாக இணைத்துக் கட்டுமரம் போன்ற அமைப்பை உருவாக்கினான்.
'மிதவை' என்பதற்கு மிதக்கக் கூடியது என்று பொருள். கலங்கள் அனைத்தும் மிதக்கக் கூடியனவாக
இருந்தாலும் ஒரு வகையை மட்டுமே பண்டைத் தமிழர் 'மிதவை'
என்றனர். நிகண்டுகளில் 'மிதவை' என்பதற்குத் 'தெப்பம்'
என்று பொருள். இதனைப் பரிபாடல்,
"வெண்கிடை மிதவையர்,
நன்கிடைத் தேரினர்"
(பரி., பா.6:35)
என்கிறது.
2. புணை
புணை என்பது மிதவை
வகையைச் சார்ந்தது. கட்டுமரம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. 'புணை' என்ற சொல்லுக்குத் தெப்பம், கால் விலங்கு, மூங்கில் ஆகிய பெயர்கள் உண்டு.
இவை மட்டுமின்றி, முதன் முதலாக ஆற்றின் ஓரமாக வளர்ந்த
மூங்கில்களைக் கொண்டு புணைகள் அமைக்கப்பட்ட காரணத்தாலும் மூங்கில் என்ற பொருள்
கொண்ட 'புணை' என்ற சொல் மரக்கலத்தின்
பெயராக அமைந்திருக்கின்றது (சங்க இலக்கியங்களில் கலங்கள், பக்.19-20)
என்பர்.
சங்க இலக்கியத்தில் 'புணை' என்னும் கலம் அதிகமாக ஆறுகளில் புனல்
விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பரிபாடலில், வைகை ஆற்றில்
பெண்கள் புனல் விளையாட்டிற்குப் போகும் பொழுது வெள்ளை நெட்டியால் கட்டப்பட்ட
மிதக்கும் பலகையாலான புணை முதலியவைகளைக் கொண்டு சென்றுள்ளனர் என்பர் (நம் நாட்டுக்
கப்பற்கலை, ப.156).
இதனைத் திருக்குறள்,
"காமக் கடும்புனல்
உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும்
புணை"
(குறள்.1134)
என்று
கூறுகிறது. அதாவது, நாணமும் நல்ல வீரமுமாகிய தெப்பங்களைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம்
அடித்துக் கொண்டு போய்விடுகிறது என்பது இதன் பொருள். எனவே, அக்காலத்தில்
நாவாய், மரக்கலம் என்னும் கப்பல்களும் புணை என்னும்
தோணிகளும் இருந்தன என்று தெரிகிறது.
மேலும் அகநானூறு,
"கொழுங்கோல்
வேழத்துப் புணை"
(அகம். 186:8)
என்கிறது. கொழுவிய கோலையுடைய கொறுக்கம் கழியால்
செய்யப்பட்ட தெப்பத்தைத் துணையாகக் கொண்டது என்று இதன் பொருள் அமைகிறது. இதனால் கொறுக்கம் கழியால் தெப்பம் செய்யும்
வழக்கம் காணப்பட்டதாகத் தெரிகிறது.
'புணை' என்னும் கலம் புனல் நீரோட்டத்திற்கு மட்டுமன்றி கடலில் மீன்
பிடித்தலுக்கும் பயன்பட்டள்ளதை அகநானூறு,
"வேழ வெண்புணை”
(அகம். 6:9)
என்று
குறிப்பிடுகிறது. மணிமேகலையில்,
"கரைகாணாப் பௌவத்துக் கலஞ்சிதைந் தாழ்பவன்
திரைதரப் புணைபெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு"
(மணி. 13:64-65)
என்ற
வரிகள் கரை காணாத கடலிலே கப்பல் உடைய விழுந்து மூழ்கியவர், அலை கொண்டு வந்த 'புணை' ஒன்றைப்
பற்றிக் கொண்டு உயிர் தப்பினார் என்கிறது.
முற்காலத்தில் கட்டுமரங்களையே 'புணை' என்ற பெயரில் அழைத்து வந்துள்ளனர்.
சிறிய
மரக்கலம்
மிதவை வகைக் கலங்களைப்
பயன்படுத்தி வந்த மக்கள் மிதவையைத் தவிர சிறிய வகை மரக்கலங்களையும்
பயன்படுத்தியுள்ளனர். மீன் பிடிக்கவும்,
உல்லாசப் பயணத்திற்கும், உப்புகளை ஏற்றிச்
செல்வதற்கும் தங்களது கலங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். அவை பஃறி, அம்பி, திமில், ஓடம், நீரணி மாடம்,
தோணி போன்றவைகளாகும். இவை
சிறிய வகை மரக்கலங்களாகும்.
1. பஃறி
உள்நாட்டு வணிகத்திற்குப்
பயன்படுத்தப்பட்ட கலத்துக்குச் சங்க இலக்கியங்களில் பஃறி என்ற பெயர்
வழங்கப்பட்டுள்ளது. பஃறி என்னும் கலத்தில்
வெள்ளுப்பை ஏற்றிச் சென்று விற்று அதற்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெற்று
வந்திருக்கின்றனர். பஃறி என்று
அழைக்கப்பட்ட கலங்கள் குதிரைச் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் குதிரைகளைப்
போன்று கழி சூழ்ந்த பக்கத்தில் தறிகளில் கட்டப்பட்டு இருக்கும் என்பதைப்
பட்டினப்பாலை,
"வெள்ளை உப்பின்
கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப்
பஃறி
பணைநிலைப் புரவியின்
சுணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக்
கலியாணர்"
(பட்டினப்பாலை, வரி.29-32)
என்கிறது.
2. அம்பி
'அம்பி' என்னும் கலம் சிறிய மரக்கல வகையைச் சார்ந்ததாகும். 'அம்பி' என்பதற்கு 'நீர்', 'கடல்'
என்னும் பொருள்கள் உண்டு. 'அம்பி' என்னும் சொல் சங்க இலக்கியத்தில் அதிகமாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற்கால
இலக்கியங்களில் இச்சொல் குறைவாகவே
காணப்படுகிறது. 'அம்பி' என்னும்
கலம் பண்டைக் காலத்தில் பல்வேறு முகத்தோற்றங்களைக் கொண்டதாக இலக்கியங்கள்
கூறுகின்றன.
சிலப்பதிகாரம் 'அம்பி' என்னும் கலத்தின் முன் பகுதியாகிய அணியத்தின் தோற்றம் குதிரை முகமாகவும்
(பரிமுகம்), யானை முகமாகவும் (கரிமுகம்), சிங்க முகமாகவும் (அரிமுகம்) காணப்பட்டதை எடுத்துரைக்கிறது. இதனைச் சிலப்பதிகாரம்,
"பரிமுக அம்பியும்
கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்
அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற்
பெயரா தாங்கண்"
(சிலப். 3:176-178)
என்கிறது. மீன்பிடித் தொழிலுக்கு 'அம்பி'யைப் பயன்படுத்தியதை நற்றிணை,
"வடிக்கதிர் திரித்த
வல்ஞாண் பெருவலை
இடிக்குரற் புணரிப்
பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி,
காழோர்
சிறைஅருங் களிற்றின்,
பரதவர் ஒய்யும்"
(நற்., 74:1-4)
என்கிறது. மேலும், அம்பியைக் கடலில்
செலுத்தப்பட்டதை நற்றிணை,
"பார்த்துறைப் புணரி
அலைத்தலின், புடைகொண்டு,
முத்து, வினை போகிய முரிவாய் அம்பி,"
(நற்., 315:2-3)
என்கிறது.
3. திமில்
'திமில்' என்னும் கலமும் ஒரு சிறிய மரக்கல வகையைச் சார்ந்ததாகும். தமிழ்ப் பெருஞ்சொல் அகராதி 'திமில்' என்னும் சொல்லுக்குக் கட்டுமரம், கலம் மற்றும் கப்பல் போன்ற பொருள்களைத் தருகிறது. இலக்கியச் சான்றுகளில் 'திமில்'
என்னும் கலம் கட்டுமரத்தையே குறிக்கின்றது. இத்திமில் பெரும்பாலும் மீன்
பிடிப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருகின்றது. இதனை நற்றிணை,
"வெந்திறல் இளையவர்
வேட்டு எழுந்தாங்கு,
திமில் மேற்கொண்டு,
திரைச்சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு
வயமீன் கெண்டி,
நிணம்பெய் தோணியர்
இருமணல் இழிதரும்"
(நற்., 111:5-8)
எனும்
பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம். மேலும்
கலித்தொகையில்,
"இவர்திமில்,
எறிதிரை ஈண்டிவந்து அலைத்தாக்கால்
உவறுநீர் உயர்எக்கர்,
அலவன் ஆடு அளைவரி,
தவல்இல் தண்கழகத்துத்
தவிராது வட்டிப்ப"
(கலி. 136:1-3)
என்றும், அகநானூற்றில்,
"இனிப்புலம் பின்றே
கானலும்; நளிகடல்
திரைச்சுரம் உழந்த
திண்திமில் விளக்கில்"
(அகம். 240:4-5)
என்றும்
திமில் பற்றி அறியமுடிகிறது. திமில்
என்னும் கலம் கடலில் மீன் பிடிப்பதற்காக மட்டுமல்லாமல் சங்கு எடுப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டுத்தியுள்ளனர் என்பதை அகநானூறு,
"இலங்குஇரும்
பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய
வான்திமிற் பரதவற்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்ப,
கல்லென,
கலிகெழு கொற்கை எதிர்கொள,
இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு
ஆங்கண்,
உவக்காண் தோன்றும்,
எம்சிறுநல் ஊரே"
(அகம். 350:10-15)
என்கிறது. திமிலில் விளக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதைப்
புறநானூறு,
"முந்நீர் நாப்பண்
திமில்சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக
விசும்பின்
உச்சி நின்ற உவவு
மதிகண்டு"
(புறம். 60:1-3)
என்கிறது.
ஆழ்கடலில் திமிலில்
மீன்பிடிக்கச் செல்லும் பரதவர் கரைக்குத் திரும்பும் போது தங்களது கரையை எளிதில்
அடையாளம் கண்டு கொள்வதற்குக் கலங்கரை விளக்கைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப்
பட்டினப்பாலை,
"நெடுங்கால மாடத்து
ஒள்எரி நோக்கி,
கொடுந்திமில் பரதவர்
குரூஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்த்தும் நாடகம்
நயந்தும்"
(பட்டினப்பாலை, வரி.111-113)
என்னும்
வரிகள் மூலம் எடுத்துரைக்கின்றன.
4. ஓடம்
ஓடம் என்னும் கலம்
தொன்மையான தமிழகத்தில் நீரைக் கடக்க இருந்து வரும் ஒரு சாதனமாகும். தமிழ் இலக்கியங்களில் ஓடத்தின் பயன்பாடு
குறைவாகவே இருந்துள்ளது. நீரில் வேகமாக
ஓடுவதால் இக்கலத்துக்கு 'ஓடம்' என்று
பெயர் பெற்றிருக்கிறது. அகன்ற
பெருவானமாகிய கடலினைக் கடக்கும் ஓடம்போல பகற்பொழுதில் விண்ணின்று ஒளிர்கின்ற
கதிரவன் அகன்ற பரந்த நீரில் காணப்படும் ஓடத்தைப் போன்று காணப்பட்டான் என்கிறது
அகநானூறு. இதனை,
"அகல்இரு, விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல்கதிர்
ஞாயிற்று"
(அகம். 101:12-13)
என்னும்
வரிகள் உணர்த்துகின்றன.
5. நீரணி மாடம்
நீரணி மாடம் என்பது ஒரு
சிறிய படகு ஆகும். இதுவும் அம்பி போன்று
உல்லாசப் படகுப் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைப் 'பள்ளி ஓடம்'
என்றும் கூறுவர். நீரணி
மாடமானது நடுவே அகன்றும் முன்னும் பின்னும் சுருங்கியும், பின்பக்கம்
முன்பக்கத்தைவிட சற்று உயர்ந்தும் காணப்படும்.
இதன் நடுவே உட்காருவதற்கு ஏற்ற வகையில் சிறு மண்டபமும் மரத்தால் கட்டப்பட்ட
ஒரு மேடையும் அழகாக அமைக்கப்பட்டிருக்கும்.
இதனைப் பரிபாடல்,
"நீரணி காண்போர்
நிறைமாடம் ஊர்குவோர்
பேரணி நிற்போர்
பெரும்பூசல் தாக்குவோர்"
(பரி. 10:27-28)
என்கிறது. புனல் விளையாட்டிற்கும் இக்கலம்
பயன்பட்டுள்ளது.
கோவலனும் கண்ணகியும்
கவுந்தி அடிகளுடன் புகார் நகரை விட்டு மதுரையை நோக்கிச் செல்லும் பொழுது காவிரி
ஆறு குறுக்கிடுகிறது. அவர்கள் ஒரு நீரணி
மாடத்தில் ஏறிக் காவிரியின் தென்கரையை அடைகின்றனர் என்பதை,
"காரணி பூம்பொழில்
காவிரிப்பேர் யாற்று
நீரணி மாடத்து நெடுந்துறை
போகி
மாதரும் கணவரும் மாதவத்
தாட்டியும்
தீது தீர்நியமத் தென்கரை
யெய்தி
போதுசூழ் கிடைக்கை ஓர்
பூம்பொழில் இருந்துழி"
(சிலப். 10:215-218)
என்றும், சீவகசிந்தாமணி,
"நீரணி மாட
வாவி"
(சீவக. பா.2654)
என்றும், பெருங்கதை,
"நீரணி மாடத்து நிலா
முற்றத்து"
(பெருங். 1:40:17)
என்றும்,
"வண்ணம் கொளீஇய
நுண்ணூற் பூம்படம்
எழுதுவினைக் கம்மமொடு
முழுது முதலளை
மென்கிடைப் டோழ்வைச்
சந்திய வாகி
அரிச்சா லேகமும் நாசியு
முகரும்
விரும்பு நிலைத் தானமும்
பிறவுமெல்லாம்
நேர்ந்து வனப்பெய்திய
நீரணி மாடம்"
"நிறைவனை மகளிர்
நீர்பாய் மாடமொடு"
(பெருங். 1:38:75)
என்றும்
நீரணி மாடம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நீரணி மாடத்திற்குத் 'தானக மாடம்' என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளதை
அறியமுடிகிறது. இதனைச் சீவகசிந்தாமணி,
"தானக மாடமேறித்
தையலார் ததும்பப் பாய்வார்"
(சீவக. பா.2658)
என்று
குறிப்பிடுகிறது. தானக மாடம் நீரணி மாடம்
போன்று இருக்கும். ஆனால் நடுவில் அகன்று
இருக்கும் என்பர்.
6. தோணி
'தோணி' என்னும் கலம் ஒரே மரத்தில் குடைந்து செய்யப்பட்டதாகும். தோணியால்
பொருட்கள் கரைக்குக் கொண்டு வரப்பட்ட செய்தியைக்,
"கலம் தந்தபொற்
பரிசம்
கழித்தோணியான், கரை சேர்க்குந்து"
(புறம். 343:5-6)
என்கிறது
புறநானூறு. கடல் ஒலி அடங்கிய போதும், தோணி கடலிற் செல்லாது ஒழிந்த நேரத்தும், மிகுந்த
நீரினையுடைய பெரிய உப்பங்கழியில் சுறா முதலிய கொடிய மீன்கள் செருகிக்
காணப்படுவதைக்,
"கடல்பாடு அவிந்து,
தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக்
கடுமீன் கலிப்பினும்"
(அகம். 50:1-2)
என்கிறது
அகநானூறு. சாந்தைத் தன்னிடத்தே கொண்ட தோணியும், குளிர்ந்த மலர் மாலை
கொண்ட தோணியும், பூவேலை செய்த ஆடை நிறைந்த தோணியும், அணிகலம் கொண்ட தோணியும், கடலில் கலங்கள் போலத்
தம்மில் தாக்கித் திரியும் என்பதைச் சீவக சிந்தாமணி,
"சாந்தகம் நிறைந்த
தோணி தண்மலர் மாலைத் தோணி
பூந்துகி லார்ந்த தோணி
புனைகலம் பெய்த தோணி
கூந்தன் மாமகளிர் மைந்தர்
கொண்டு எறிய வோடித்
தாந்திரை கலங்கள் போலத்
தாக்குபு திரியு மன்றே"
(சீவக. பா.967)
என்கிறது.
பெரிய
மரக்கலம்
நாவாய், கலம், வங்கம் ஆகியவை பெரிய மரக்கல வகையைச்
சார்ந்தவையாகும். இவை பெரும்பாலும்
வணிகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாவாய், கலம், வங்கம் போன்றன
ஆழ்கடலில் அஞ்சாமல் உலகைச் சுற்றி வரும் திறன் படைத்தவை என்பதனால் இவைகளைப் பெரிய
மரக்கல வகையைச் சார்ந்தவை என்பர். நாவாய்,
கலம், வங்கம் போன்றவை கீழை நாட்டிலுள்ள
மணிபல்லவம் என்னும் தீவில் தங்கி அங்கிருந்து நேராகச் சாவகம், கடாரம், மலையம் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தன
என்பதை மணிமேகலை உணர்த்துகிறது.
1. நாவாய்
'நாவாய்' என்னும் தமிழ்ச்சொல் இலத்தீனில் Navis, Navia என்றும்,
ஆங்கிலத்தில் Navy என்றும், கிரேக்க மொழியில் Naus என்றும் வழங்கப்பட்டு
வருகிறது. பெருங்கடலில் ஓடும் பெரிய
கலத்துக்கு 'நாவாய்' என்று பெயர். நாவாய் என்பது மரக்கலம், இரேவதி
நாள், தோணி, நெய்தல் நிலப்பறை என்று
மதுரைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.
இந்த நாவாய் என்னும் கலம்
பண்டைத் தமிழர்களால் அதிகமாகக் கடல் வாணிபத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு
உள்ளது. காற்றின் உதவியால் நாவாய்கள்
செலுத்தப்பட்டன என்றும், அவை வாணிபத்திற்காகப் பல்வேறு
நாடுகளுக்குச் சென்று வருகின்றன என்றும் அறியமுடிகிறது.
பெருங்கடலில் ஓடும் பெரிய
கலத்துக்கு 'நாவாய்' என்று பெயர். புகார்த் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட
நாவாய்கள் அசைந்து செல்லும். அவற்றில்
நாட்டப்பட்டுள்ள பாய்மரத்தின் கம்பங்களின் உச்சியில், கொடிகள்
கட்டப்பட்டிருந்தன. அசையாத கட்டுத் தறியை
அசைக்கும் யானையைப் போல கடல் அலைகளில் மரக்கலங்கள் அசைந்த வண்ணம் காணப்பட்டன
என்பதைத்,
"தீம்புகார்த்
திரைமுன்துறை
தூங்கு நாவாய் துவன்று
இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக்
கொடியும்"
(பட்டினப்., வரி.173-175)
என்கிறது
பட்டினப்பாலை. மன்னன் அமர்ந்த யானை கடல்
நடுவே செல்லும் மரக்கலம் போலவும், விண்மீன்களிடையே செல்லும்
நிலவினைப் போலவும் விளங்குகின்றன என்பதைப் புறநானூறு,
"களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பல்மீன் நாப்பண் திங்கள்
போலவும்"
(புறம். 13:5-6)
என்கிறது. நீர் செறிந்த பெரிய கடலிடத்தே மரக்கலம்
செலுத்தியும்,
அது அசையாத போது காற்றினை ஏவல் கொண்டு அமைந்த வலிமையை உடையவனின்
வழித்தோன்றலே யாகும் என்பதைப் புறநானூறு,
"நளிஇரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்
மருக"
(புறம். 55:1-2)
என்கிறது.
மேலும்,
சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம்
செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலத்தைச் செலுத்த முடியாது என்பதைப்
புறநானூறு,
"சினம்மிகு தானை
வானவன் குடகடல்,
பொலம்தரு நாவாய் ஓட்டிய
அவ்வழி
பிறசலம் செல்கலாது
அனையேம் அத்தை"
(புறம். 126:14-16)
என்கிறது.
நாவாய்கள் மேற்குத்
திசையிலிருந்து வெண்மையான குதிரைகளையும், வடநாட்டின்கண் உள்ள
நுகர்பொருள்களையும் கொண்டு வந்து தருகின்ற மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கும்
பெருமையையுடைய கடற்கரையாகும் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை,
"வால்உளைப்
புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப்
படப்பை"
(பெரும்பாண்., வரி.320-321)
என்கிறது.
நாவாய்களில் இனிய
ஒசையையுடைய முரசம் முழங்கும் பொன்மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில்
உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள்
கரையை அடையும். நெடிய கொடிகள்
பாய்மரத்தின் மேல் ஆடும் இயல்புடையனவாய் அம்மரக்கலங்கள் விளங்கும். கருமேகங்கள் சூழ்ந்த மலை போல, அம்மரக்கலங்கள் கடற்பரப்பில் அசைகின்றன என்பதை,
"பொன் மலிந்த
விழுப்பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற்பெரு நாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு
இருக்கை"
(மதுரைக். வரி.81-85)
என்றும், கொழுவிய மீன்களை அறுத்த, துடியின் கண்போல் அமைந்து
உள்ள உருண்டைத் துண்டுகள் ஆகிய இவற்றை ஏற்றிய சீரிய மரக்கலங்களைப் பெருநீராகிய
கடலில் செலுத்துவதை,
"கொழுமீன் குறைஇய
துடிக்கண் துணியல்,
விழுமிய நாவாய் பெருநீர்
ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து
நன்கலன் உய்ம்மார்"
(மதுரைக். வரி.320-323)
என்றும், வலிமையுடைய பாய்களைக் கட்டிய கயிற்றை அறுத்துப் பாய்களைக் கிழித்து,
பாய்மரத்தின் அடிப்பகுதி முறியும்படி அடித்து, கடிய காற்று நாற்றிசையிலும் சினந்து வீசுவதால் நங்குரக்கல், கயிற்றுடன் மோதி, அசைந்து நெடிய சுழியில் அகப்பட்டு
மரக்கலம் சுழன்று அசையும். அதுபோல்,
முன்னும் பின்னும் சங்குகள் ஒலிக்கச் செய்கின்றதை,
"கூம்புமுதல்
முருங்க எற்றி, காய்ந்துஉடன்
கடுங்காற்று எடுப்ப,
கல்பொருது உரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்
போல,
இருதலைப் பணிலம் ஆர்ப்ப,
சினம் சிறந்து"
(மதுரைக். வரி.377-380)
என்றும்
மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது.
வலிய சக்கரங்களையுடைய
பெரிய தேர்கள் கடலில் ஓட முடியாது.
ஆழ்கடலில் அலைமோதும் நீரினைக் கிழித்துக் கொண்டு ஓடும் நாவாய்கள் நிலத்தில்
ஓட முடியாது என்பதைக்,
"கடலோடா கால்வல்
நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடாம்
நிலத்து"
(குறள்.496)
என்கிறார்
திருவள்ளுவர்.
சீவகசிந்தாமணியிலும்
நாவாய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆடும் கொடிகளை உச்சியில் அணிந்த கூம்பிலே உயர்ந்த பாய்கள் மூன்றைக் காற்று
முகக்குமாறு குழையக் கட்டியதனால் ஒலிக்கும் கடலிலே பிறந்த சங்கும் பறையும் முழங்கா
நிற்பன. வளமிகும் பவளங்களின் கொடிகளை
அறுத்துக் கொண்டு ஓடும் களிறு போல் நன்றாக ஓடியது என்ற செய்தியை,
"ஆடுகொடி யுச்சியணி
கூம்பினுயர் பாய்முன்
தடுபடச் செய்திளைய
ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக்கொழுந்
தாட்பவழங் கொல்லா
வோடுகளி றொப்பவினி
தோடியதை யன்றே"
(சீவக. பா.501)
என்றும், பாய்விரித்தோடும் பெரிய மரக்கலமான நாவாய், கடலில்
காற்றால் கவிழும் போது மக்கள் படுந்துன்பம் நரகத்திலும் கொடியது என்பதை,
"பண்ணார் களிறேபோற்
பாயோங்குயர் நாவாய்
கண்ணார் கடன்பண்டிக்
காற்றிற் கவிழுங்கால்
மண்ணார் மணிப்பூனோய்
மக்களாறுந் துன்ப
நண்ணார் நரகத்தினான்கா
மடியன்றோ"
(சீவக. பா.2793)
என்றும்
சீவக சிந்தாமணி எடுத்துரைக்கிறது.
நாவாய் வணிகத்தின்
பொருட்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்ததை,
"வேறுபல் நாட்டுக்
கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும்
பெருந்துறை"
(நற். 295:5-6)
என்ற
நற்றிணைப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
தாம் இன்பம் அடைவதற்குக்
காரணமான மரக்கலத்தின் வருகையினை விரும்பி எதிர்கொண்டு வரவேற்று மகிழும்
வணிகரைப்போன்று தாம் விரும்புகின்ற வையையாற்றின் புதுநீரை எதிர்கொண்டு வரவேற்கும்
நிலையில் இருந்ததைப் பரிபாடல்,
"தாம் வேண்டும்
பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்
கொளவார் போல்,
யாம் வேண்டும் வையைப்
புனல் எதிர்கொள் கூடல்"
(பரி. 10:38-40)
என்கிறது. நாவாய் அதிக வேகத்தில் செல்லும் என்பதை
நாலடியார்,
"கடுவிசை நாவாய்
கரையலைக்கும் சேர்ப்ப"
(நாலடி. 224:2)
என்கிறது.
2. கலம்
'கலம்' என்னும் சொல் 'பாத்திரம்', 'அணிகள்',
'கப்பல்' முதலியவற்றைக் குறிக்கிறது. முற்காலத்தில் பெரிய பாய்மரக் கப்பல்கள்
மரப்பலகையால் செய்யப்பட்டு இருந்தன.
அவைகளை 'மரக்கலம்' என்றனர். நீரைக் கடக்கப் பயன்படுத்தும் சாதனத்தை 'மரக்கலம்' என்றனர்.
அது நாளடைவில் 'கலம்' என்னும்
பொதுப் பெயரில் அழைக்கத் தொடங்கினர். கலம்,
மரக்கலம் ஆகிய இரு பெயர்களும் ஒன்றையே குறிப்பதாகும். கலங்களைச் செய்பவர்களும் அவற்றைப் பழுது பார்ப்பவர்களும் தமிழகத்தில்
முற்காலத்தில் இருந்துள்ளனர். அவர்களைக் 'கம்மியர்', 'ஓடாவி' என்றழைத்தனர். 'ஓடாவி' என்னும் பெயர் தமிழகத்தின் மேலைக் கடற்கரைப் பகுதியில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கப்பல்களாகிய கலங்களை 'நாவாய்',
'வங்கம்' என்னும் பெயர்களில் அழைத்தது
மட்டுமல்லாமல் 'கலம்' என்னும்
பெயரிலும் தமிழர்கள் அழைத்து உள்ளனர்.
இதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.
கடலில் ஆழ்கின்ற
மரக்கலத்தைப் போலத் தோன்றி மாலைக் காலத்தில் மறையும் என்பதைக் குறுந்தொகை,
"கடல் ஆழ் கலத்தின்
தோன்றி
மாலை மறையும் அவர்
மணிநெடுங் குன்றே"
(குறுந். 240:6-7)
என்கிறது. சங்குகள் கடற்கரைக்கண் வந்து உலவ, கடலில் அலைகள் எழுந்து ஆரவாரிப்ப, ஒலி மிகுந்து
குளிர்ந்த துறையின்கண் கலங்கள் ஓடுமாறு செலுத்தினர் என்பதை ஐங்குறுநூறு,
"கோடு புலம் கொட்ப,
கடல் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனித்துறை
ஓடுகலம் வகைக்கும்"
(ஐங். 192:1-2)
என்கிறது.
பிற நாடுகளிலுள்ள அரிய
ஆபரணங்களைத் தரும் பொருட்டுக் கடல் நீரில் உயர்ந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய
கப்பல் தான் செல்லும் திசைகளிலே திரிந்தாற் போல இருக்கும் என்பதை,
"அருங்கலம் தரீஇயர்,
நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை
திரிந்தாங்கு"
(பதிற். 52:3-4)
என்றும், பெரிய கடலில் நீந்திய மரக்கலத்தைப் பழுது பார்த்து அதற்கு வன்மையைச்
சேர்க்கும் பண்டங்களை விலைக்கு விற்கின்றதைப்,
"பெருங்கடல் நீந்திய
மரம்வலி யுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல,
புண்ணஒரிஇ"
(பதிற்.76:4-5)
என்றும்
பதிற்றுப்பத்து எடுத்துரைக்கிறது.
ஓடும் பாய்மரக் கப்பலை
ஓட்டுதற்குரிய பசைப்பொருளைக் கொண்டு சீர்திருத்தி அக்கலத்தினுள் இருப்போர்
அச்சத்தைப் போக்கும் திசையறிந்து கலத்தைச் செலுத்தும் வல்லமையுடைய நீகானுடைய செயலை
ஒத்திருந்தது என்பதைப் பரிபாடல்,
"இதையும் கயிறும்
பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப்
பயினான் திருத்தும்
திசைஅறி நீகானும்
போன்ம்"
(பரி. 10:53-55)
என்கிறது.
தாம் சென்ற இடங்களில்
தமக்கொரு கேடு ஏதுமின்றிக் காரியமும் வாய்த்துச் சிறப்பெய்திய பின், மரக்கலங்கள் பலவும் துறையிடத்தே நெருங்கியிருக்கும் தெளிந்த கடலை உடைய
தண்ணிய சேர்ப்பனே எனக் கூறப்பட்டதைச்,
"சிதைவு இன்றிச்
சென்றுழிச் சிறப்பு எய்தி, வினைவாய்த்து
துறைய கலம்வாய் சூழும்
துணிகடல் தண் சேர்ப்ப"
(கலி. 132:6-7)
என்றும், கரை காண முடியாத நடுக்கடலிலே, மரக்கலத்தைக் கேட்டு
அழுந்துகின்றதைக்,
"கரை காணாப் பௌவந்து,
கலம் சிதைந்து ஆழ்பவன்"
(கலி. 134:24)
என்றும்
கலித்தொகை சுட்டுவதைக் காணலாம்.
யவனர்கள் கொண்டு வந்த
நல்ல மரக்கலம், பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து
விட்டு மிளகை ஏற்றிச் சென்றதை,
"யவனர் தந்த
வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு
பெயரும்"
(அகம். 149:9-10)
என்றும், ஒலிக்கின்ற நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு
உரியவன், அப்பட்டினத்தில் செல்வத்தைக் கொண்டு வந்து தரும்
நல்ல மரக்கலம் உடையுமாறு கூட்டமாகத் திரண்டு வந்து தாக்கும் இறால் மீன் போல்,
திரண்ட படையுடன் வந்து தாக்குகின்றவன் என்பதை,
"இரக்குநீர்ப்
பரப்பின் கானல்அம பெருந்துறை
தனம்தரு நன்கலம் சிதையத்
தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை
அன்ன"
(அகம். 152:6-8)
என்றும்
அகநானூறு எடுத்துரைப்பதைக் காணும்போது அகநானூற்றில் மரக்கலம் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றதையும், மரக்கலத்தைப் படையுடன்
வந்து தாக்குகின்றனர் என்பதையும் உணரமுடிகிறது.
பெரிய கடலின் மிகுந்த
ஆழமுடைய பரப்பிடத்தில், காற்றால் செலுத்தப்பட்ட மரக்கலம்
நீரை விலக்கி முன்னேறும். அதுபோல, ஆண்யானை போர் மேல் சென்று போர்க்களத்தின் இடத்தை அகலமாக்குகின்றதை,
"நளிகடல் இரும்
குட்டத்து
வளி புடைத்த கலம் போல
களிறு சென்று களன்
அகற்றவும்"
(புறம். 26:1-3)
என்றும், கூம்பு மேல் விரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன்
சுமையையும் குறைக்காமல் ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெரிய மரக்கலம் வந்தன என்பதை,
"ஒளித்த துப்பினை
ஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர்,
புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது,
மிசைப்பரம் தோண்டாது"
(புறம். 30:10-12)
என்றும், சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம்
செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியாத நிலையைச்,
"சினம்மிகு தானை
வானவன் குடகடல்
பொலம்தரு நாவாய் ஓட்டிய
அவ்வழி,
பிறசலம் செல்கலாது
அனையேம் அத்தை"
(புறம். 126:14-16)
என்றும், பெரிய மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட பொன்னால் ஆகிய பரிசப்
பொருள்கள், உப்பங் கழிகளில் உள்ள தோணிகளின் உதவியால் கரையில்
கொண்டு சேர்க்கப்பட்டன என்பதைக்,
"கலம் தந்த பொற்
பரிசம்
கழித் தோணியான், கரை சேர்க்குந்து"
(புறம். 343:5-6)
என்றும், கரையில் பிணிக்கப்பட்டு உலர்ந்து காணப்படும் மரக்கலம் கடல் போலக் காட்சி
அளிக்கும் கலன்களைக் 'கலம்' என்னும்
பெயரில் வழங்கப்பட்டிருந்தன என்பதை,
"பிணங்கு
கதிர்க்கழனி நாப்பன் ஏமுற்
றுணங்கு கலன் ஆழியிற்
றோன்றும்"
(புறம். 338:10-11)
என்றும்
புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம்.
இரவு நேரத்தில் கொளுத்திய விளக்குச்சுடர், திசைதப்பிப் பெருங்கடற் பரப்பிலே ஓடும் மரக்கலங்களை அழைக்கும், நீர்ப்பாயல் துறைமுகம் பின்னே கிடக்க, அங்கிருந்தும்
செல்கின்றதைப் பெரும்பாணாற்றுப்படை,
"இரவில் மாட்டிய
இலங்குசடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து
ஓடுகலம் கரையும்
துறைபிறக்கு ஒழியப்
போகி"
(பெரும்பா. வரி.349-351)
என்கிறது. மேலைநாட்டுக் குதிரைகள் மரக்கலங்களில் வந்து
இறங்குதலை,
"நனந்தலைத் தேஎத்து
நன்கலன் உய்ம்மார்,
புணர்ந்து, உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்"
(மதுரைக். வரி.322-323)
என்றும், ஒல்லென எழும் ஓசையைப் போல, குட்டத்தினின்றும்
பண்டங்கள் வருகின்ற மரக்கலங்களில் ஏற்றும் ஓசை அதிகமாகக் காணப்படுகின்றது என்பதை,
"ஒல்லென இமிழ்
இசைமான, கல்லென
நனந்தலை வினைஞர் கலம்
கொண்டு மறுக"
(மதுரைக். வரி.538-539)
என்றும்
மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது.
3. வங்கம்
'வங்கம்' என்று அழைக்கப்படும் கலமும் ஒரு பெரிய மரக்கல வகையைச் சாரும். தமிழ்ப் பெருஞ்சொல் அகராதி வங்கத்திற்குப்
பெரிய கப்பல் என்றும், 'அலை', 'கடல்'
என்றும் பொருள் தருகிறது. 'நாவாய்', 'கலம்' போன்று 'வங்கத்'திற்கும் இலக்கியங்களில் சான்றுகள் பல
உள்ளன. 'வங்கம்'
பற்றிய சான்றுகள் மணிமேகலை, சிலப்பதிகாரம்
போன்ற காப்பியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
வங்குக் கால்களால் கட்டப்பட்ட பெரிய மரக்கலத்துக்கு 'வங்கம்'
என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பிற்காலத்தில் வங்குக் கால்கள் வைத்துக் கட்டப்பட்ட பிற பெரிய மரக்கலங்களுக்கு
வெவ்வேறு பெயர்கள் தோன்றியுள்ளன.
'வங்கம்' என்று அழைக்கப்பட்ட கலம் பூம்புகார் பட்டினத்திலிருந்து மக்களை ஏற்றிக்
கொண்டு மணிபல்லவத் தீவில் தங்கி பழுது பார்க்கப்பட்டு பின் சாவகம் போய் மீண்டதாக
மணிமேகலை குறிப்பிடுகிறது. இதனைப்
பார்க்கும்போது நீர்ப்போக்குவரத்திற்கு வங்கம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
கங்கைப் பெருநதியைக்
கடப்பதற்கு வேண்டுவனவாகிய மிகுதியான ஓடங்களை அமைத்தனர் என்பதைக்,
"கங்கைப் பேர்யாறு
கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க
தாமெனச்"
(சிலப். 26:164-165)
என்றும், நூற்றுவர் கன்னரிடம் பெற்ற மரக்கலத் திரள்களான் கங்கைப் பெருநதியின்
வடகரையில் அமைந்துள்ளன என்பதைக்,
"கங்கைப்பே
ரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங்
கெய்தி"
(சிலப். 26:175-176)
என்றும்
சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது.
கடலில் செல்லாது தங்கிய
கப்பலில் அமைந்த பாய்மரத்தில் சென்று தங்கும்.
'வங்கம்' என்னும் கலமும்
பாய்மரத்தினால் கடலில் செலுத்தப்பட்ட ஒரு கலமாகும் என்பதை நற்றிணை,
"தூங்கல் வங்கத்துக்
கூம்பில் கேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து
அன்ன, இவள்"
(நற். 258:8-9)
என்கிறது.
காற்றின் துணையுடன் செலுத்தப்பட்ட கலமாகிய வங்கத்தில் பிற நாடுகளிலிருந்து அரிய
பொருள்கள் கொண்டு வரப்பட்டன என்ற செய்தியைப் பதிற்றுப்பத்து,
"பெருங்கலி வங்கம்
திசை திரிந்தாங்கு"
(பதிற். 52:4)
என்கிறது. பிறநாட்டு மரக்கலங்கள் தாங்கள் கொண்டு வந்த
பொருள்களை இறக்குதலும்,
இந்நாட்டுப் பொருள்களைப் பிறநாட்டு மரக்கலங்களில் எடுத்துச்
செல்லுதலும் பற்றிப் பதிற்றுப்பத்திலும், மதுரைக்காஞ்சியிலும்
ஒரே மாதிரியான வாணிபம் நடைபெற்றதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இதனை,
"வால்இதை எடுத்த
வளிதரு வங்கம்,
பல்வேறு பண்டம் இழிதரும்
பட்டினத்து"
(மதுரைக். வரி.536-537)
என்கிறது
மதுரைக்காஞ்சி. உலகமே கிளர்ந்து எழுந்தாற்
போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமாக வீசும்
இயல்பினதாய்க் காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக
ஓரிடத்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப்பரப்பைக்
கிழித்துக் கொண்டு சென்றது; நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளி பொருந்திய விளக்கினால் செல்லும் இடமறிந்து சேருகிறான் என்ற செய்தியை
அகநானூறு,
"உலகுகிளர்ந் தன்ன
உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல்
நீர்இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு
இன்று ஆகி,
விரைசெலல் இயற்கை வங்கூழ்
ஆட்ட,
கோடுஉயர் திணிமணல்
அகன்துறை, நீகான்
மாட ஒள்எரி மருங்கு
அறிந்து ஒய்ய"
(அகம். 255:1-6)
என்கிறது.
இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களில் கப்பல்
பற்றிய செய்திகளின் அவற்றின் வகைகளையும் அவை பயன்படுத்தப்பெற்ற நிலைகளையும் தெள்ளென
அறிய முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக