வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
மாலை மாற்று உரையுடன்
(கலி விருத்தம்)
வாகா வீரா காசா காமோ
தாகா சீரா போகா காரா
ராகா காபோ ராசீ காதா
மோகா சாகா ராவீ காவா.
பதவுரை : வாகா – அழகுடையவரே, வீரா
– வீரத்தன்மையை உடையவரே, காசா – காயாம்பூ நீறத்தையுடைய வள்ளி நாயகியனிதயத்து, காமோ
– விருப்பத்தை உடையவரே, தாகா – தினைப் புனத்தினேரிட்ட பொய்த் தாகத்தை உடையவரே, சீரா
– சிறப்பினை உடையவரே, போகாதாரார் – போகமே வடிவமாகிய தேவர்களுடைய, ஆதா – நெஞ்சத்திலிருக்கின்றவரே,
கா – கற்பகத்தரு போன்றவரே, போர் – யுத்தத்தின்கண், ஆகீ – விஷ்ணுவாதியராற் செய்யப்படுந்
துதிகளையேற்ற, காதா – செவிகளை உடையவரே, போகா – பிரியப்பெரும் பாசத்தை உடையவரே, சாகார்
– மரணமடையாத பெரியோர்களுக்கு, ஆவீ – உயிரா யிருக்கின்றவரே, கா – அடியேனை யிரட்சிப்பீராக,
வர – பிரசன்னமாக வந்தருள்வீராக. காசா – ஆகுபெயர்.
இதன்பொருள் : என்பது,
அழகு உடையவரே! வீரத் தன்மையை உடையவரே! காயாம் பூ நீறத்தை உடைய வள்ளி நாயகி இதயத்தின்
விருப்பத்தை உடையவரே! தினைப் புனத்தில் நேரிட்ட பொய்த் தாகத்தை உடையவரே! சிறப்பினை
உடையவரே! போகமே வடிவமாகிய தேவர்களுடைய நெஞ்சத்தில் இருக்கின்றவரே! கற்பகத்தரு போன்றவரே!
யுத்தத்தின்கண் விஷ்ணு ஆதியரால் செய்யப்படுந் துதிகளை ஏற்ற செவிகளை உடையவரே! பிரியப்பெரும்
பாசத்தை உடையவரே! மரணம் அடையாத பெரியோர்களுக்கு உயிராய் இருக்கின்றவரே! அடியேனை இரட்சிப்பீராக,
பிரசன்னமாக வந்தருள்வீராக என்றவாறு.
(1)
னேச கேருமு தாரவி மாசமோ
தாச ரானத லானிச வாசரா
ராச வாசனி லாதன ராசதா
மோச மாவிர தாமுரு கேசனே.
பதவுரை : நேசகு – தயை செய்வதற்கு, ஏர் – அழகாயிருக்கின்றன,
உம் – தேவரீருடைய, உதாரவி – உதாரத் தன்மையை யுடைய நேத்திரங்கள், மாசமோ – குற்றம் பொருந்திய
யாங்களோ, தாசரானதலால் – தொண்டர்களாயிருப்பது மாத்திரமே யன்றி, நிசவாசரா – சத்தியத்
தன்மையை உடையவர்களா, ராசஆசு – அரசராலுண்டாகுங் குற்றமாகிய, அல – இருளுக்கு, நிலாதன
– சந்திரனைப் போன்று பிரகாசிக்குந் தன்மையையுடைய, ராசதா – ரசோகுணத்தை யுடையவரே, மோசமா
– மோசஞ் செய்யலாமா, விரதா – அடியாயர்களை யிரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவரே, முருகேசனே
– முருகக் கடவுளே.
உதாரவி
நேசகோ – எனக் கூட்டுக. நேசத்துக்கு என்பது
நேசகு என விகாரமாயிற்று.
இதன்பொருள் : தயை செய்வதற்கு
அழகாயிருக்கின்றன, தேவரீருடைய உதாரத் தன்மையை உடைய நேத்திரங்கள். குற்றம் பொருந்திய
யாங்களோ, தொண்டர்களாய் இருப்பது மாத்திரமே யன்றி, சத்தியத் தன்மையை உடையவர்களா? அரசரால்
உண்டாகும் குற்றமாகிய இருளுக்குச் சந்திரனைப் போன்று பிரகாசிக்குந் தன்மையையுடைய ரசோகுணத்தை
உடையவரே! மோசஞ் செய்யலாமா? அடியாயர்களை இரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவரே! முருகக்
கடவுளே! என்றவாறு.
(2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக