திங்கள், 1 அக்டோபர், 2018

சிறுவர்-சிறுமியர் விளையாட்டுகள்

நாட்டுப்புறவியல் பல வகைகளைத் தன்னகத்தே கொண்டது.  அவற்றுள் ஒன்றே நாட்டுப்புற விளையாட்டு.  நாட்டுப்புற விளையாட்டுகள் எண்ணற்றன.  வட்டத்திற்கு வட்டம் பகுதிக்குப் பகுதி மக்களுக்கு மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் இருப்பிடத்திகு ஏற்பவும் நாட்டுப்புற விளையாட்டுகள் மாறுகின்றன.  நாட்டுப்புற விளையாட்டுகளைப் பொதுவாக இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை,

1.  பொதுவான நாட்டுப்புற விளையாட்டு
2.  வட்டார நாட்டுப்புற விளையாட்டு

என்பனவாகும்.  பொதுவான நாட்டுப்புற விளையாட்டு என்பது, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாடும் விளையாட்டைக் குறிக்கும்.  வட்டார நாட்டுப்புற விளையாட்டு என்பது, நாட்டின் ஏதாவதொரு வட்டத்தில் மட்டும் விளையாடும் விளையாட்டைக் குறிக்கும்.  மேலும், இவ்விளையாட்டை விளையாடும் நபர்களைக் கொண்டும் இவற்றைப் பாகுபடுத்தலாம்.  அவ்வகையில்,

  1. சிறுவர்-சிறுமியர் நாட்டுப்புற விளையாட்டு
  2. பெரியவர்கள் நாட்டுப்புற விளையாட்டு
  3. ஆண்கள் நாட்டுப்புற விளையாட்டு
  4. பெண்கள் நாட்டுப்புற விளையாட்டு
  5. ஆண்கள்-பெண்கள் நாட்டுப்புற விளையாட்டு

எனப் பொதுவாக ஐந்து நிலைகளாகப் பகுக்கலாம்.  இங்கு, பள்ளிப்பட்டு வட்டாரம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் மட்டும் காண்போம்.  இவ்வாய்வாளன் இவ்வூரைச் சார்ந்தவன் என்பதால் இங்குக் குறிப்பிடப்பெறும் விளையாட்டுகள் அனைத்துக்கும் தகவலாளியும் இவரேயாவர்.  மேலும் இங்குக் குறிப்பிடப்பெறும் விளையாட்டை இவ்வாளன் சிறுவயதில் விளையாடியதாகும்.

பொதட்டூர்பேட்டை

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை அமைந்துள்ளது.  இவ்வூர் தமிழகத்தின் வடவெல்லையில் அமைந்துள்ளது.  மேற்கே ஆறுமுகமலையையும், கிழக்கே 22 கி.மீ. தொலைவில் திருத்தணிகையையும், வடக்கே 5 கி.மீ. தொலைவில் குசஸ்தலை ஆற்றையும், தெற்கே 20 கி.மீ. தொலைவில் சோளிங்கபுரத்தையும் கொண்டு இவ்வூர் அமைந்துள்ளது.  ஊரின் தென்மேற்கில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது.  இவ்வூரில் சிவன் கோயில், பிள்ளையார் கோயில்(தெருதோறும் அமைந்திருக்கும்), ஆறுமுகமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் கோயில், மலை உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில், சுப்பிரமணியர் கோயில், கெங்கையம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், பெருமாள் கோயில், கிருத்துவக் கோயில்(சர்ச்சு), இசுலாமியர் கோயில் (மசூதி) எனத் தனித்தனியாக ஊரினுள்ளும் ஊரைச் சுற்றியும் எழில்மிகு தோற்றத்துடன் காணப்படுகின்றன.

இவ்வூரில் சிறுவர்-சிறுமியர் விளையாட்டுகள் பல உள்ளன.  அவை, கோட்டிப்பந்து விளையாட்டு, கோட்டி விளையாட்டு, புளியங்கொட்டைத் தாயவிளையாட்டு, கில்லு விளையாட்டு, நொண்டி விளையாட்டு, சில்லு விளையாட்டு, கண்கட்டு விளையாட்டு, தொடு விளையாட்டு, ஒளிதல் விளையாட்டு, கோலி விளையாட்டு, இரயில் விளையாட்டு, சொப்பு விளையாட்டு, நீர்மேல் கல்லெறி விளையாட்டு போன்ற விளையாட்டுகள் ஆகும்.  இவ்விளையாட்டுகள் எல்லாவற்றையும் கூறின் ஆய்வு விரியும்.  இன்று பழக்கத்தில் இல்லாத கோட்டிப்பந்து விளையாட்டு, கோட்டி விளையாட்டு, புளியங்கொட்டைத் தாயவிளையாட்டு ஆகியவற்றை மட்டும் இங்கு ஆராயப்பெறுகிறது.

1.  கோட்டிப்பந்து விளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் சிறுவர்களால் விளையாடப்பட்டதாகும்.  இன்று இவ்விளையாட்டை யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டு மறைந்துபோன ஒரு விளையாட்டாகத் திகழ்கின்றது.  இவ்விளையாட்டை விளையாட இரு அணிகள் வேண்டும்.  ஒவ்வொரு அணியிலும் குறைந்தது இரண்டு பேராவது இருக்கவேண்டும்.  அதிகப்படியாக எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால், இவ்வணியில் இடம்பெறுபவர்கள் எல்லோரும் சற்றேறக்குறைய ஒத்த வயதினர்களாக இருக்கவேண்டும்.  இவ்விளையாட்டிற்குப் பந்தும் கோட்டியும் தேவைப்படும்.  அதாவது, இரப்பராலோ அல்லது நூலாலோ செய்யப்பட்ட சிறிய பந்து ஒன்றும், மூன்று விரல் அகலமும், ஒரு விரல் நீளமும், 1 முதல் 1லு அடி உயரமும் கொண்ட கோட்டி ஒன்றும் தேவைப்படும்.

அ.  விளையாட்டுக்களம்

20-30 கால் அளவு (இரண்டு பாத அளவே ஒரு கால் அளவு) இடைவெளி கொண்ட ஒரு நேர்க்கோட்டின் ஒரு பக்கம் இரண்டு காலளவு கொண்ட ஒரு கோடும் எதிர்ப்பக்கம் நான்கு காலளவு கொண்ட ஒரு கோடும் காலால் போடப்படும்.  இந்த அளவு தோராயமானதாகும்.  விளையாடும் இடத்தைப் பொருத்து அளவு மாறும்.  பந்து விளையாடுபவர் இரண்டு காலளவு கோடுபோட்ட பக்கத்திலும் எதிர் அணியினர் நான்கு காலளவு போட்ட பக்கத்திலும் இருப்பர்.  எதிர் அணியினர் கோட்டிற்கு வெளியே அங்கங்கே பிரிந்து (இன்றைய கிரிக்கெட் விளையாட்டில் எதிர் அணியினர் பிரிந்து நிற்பதுபோல்) நிற்பர்.  இவ்வாறு விளையாட்டுக் களம் அமைக்கப்படும்.  இக்களம் தெருவிலோ, தோப்பிலோ, மைதானத்திலோ அமையும்.

ஆ.  விளையாடும் முறை

முதலில் எந்த அணியினர் விளையாடுவது என்று முடிவு செய்யவேண்டும்.  அதற்குப் பல முறைகளைக் கையாள்வர்.  அவற்றுள் சில:

  1. கண்ணை மூடிக்கொண்டு விரலெண்ணிக்கையைச் சொல்லல்
  2. காசைச் சுண்டிவிட்டு பூவா? தலையா? பார்த்தல்
  3. கண்ணை மூடிக்கொண்டு காயா? பழமா? (உள்ளங்கையைப் பழமாகவும், மேற்புறம் காயாகவும் கருதுவர்.  அதாவது, இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை இணைத்தால் காய் என்றும், இடது உள்ளங்கையின் மேல் வலது கையின் பின்புறம் (கருமை நிறப்பகுதி) வைத்தால் பழம் என்றும் கொள்வர்) சொல்லல்

இந்த மூன்று முறைகளில் முதல் முறையில் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னால் அந்த அணி விளையாடும்.  மற்ற இரண்டு முறைகளில் ஒவ்வோர் அணியும் பூவா? தலையா? என்பதையும், காயா? பழமா? என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்து பின்னர் தேர்வு செய்யத்(மேற்கூரிய முறையில்) தொடங்குவர்.  வெற்றி பெற்றவர் முதுலில் ஆட்டத்தைத் தொடங்குவர்.

அடுத்து, இவ்விளையாட்டின் கோட்டியளவு நிர்ணயிக்கப்படுகிறது.  அதிக நேரம் விளையாட எண்ணுபவர்கள் கோட்டியளவை 1000 என்றும், குறைந்த நேரம் விளையாட எண்ணுபவர்கள் கோட்டியளவை 100 என்றும் வைத்துக்கொள்வர்.  இந்த அளவு விளையாடும் கால அளவைப் பொருத்து மாறுபடும்.  ஒரு கோட்டி அளவு என்பது விளையாடுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தட்டையான அலகு-கோட்டியே அளவுகோலாகும்.

முதலில் விளையாடும் அணியினர் தங்கள் அணியில் யார் முதலில் விளையாடுவது என்று தீர்மானிப்பர்.  அவ்வாறு தீர்மானிக்கப்பட்டவர் பந்தையும் கோட்டியையும் எடுத்துக்கொண்டு விளையாட்டுக் களத்திற்கு வருவார்.

முதலில் விளையாடுபவர் பந்தையும் கோட்டியையும் எடுத்துக்கொண்டு இரண்டு காலளவு கோடுபோட்ட இடத்தில் பந்தை வைத்து பந்திற்குப் பின்புறம் பந்தையொட்டி கோட்டியை அகல வாக்கில் வைத்து கோட்டியின் மேற்புறத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால் தட்டுவர் (இடது கைப்பழக்கம் உள்ளவர் வலது கையால் பிடித்துக்கொண்டு இடது கையால் தட்டுவர்).  அவ்வாறு தட்டும் போது பந்து தரையோடும் தூக்கியும் போகும்.  தரையில் படாமல் தூக்கிப் போகும் பந்தை எதிர் அணியில் உள்ளவர்கள் கோட்டிற்கு முன்வந்தும் பின்சென்றும் பிடித்துவிட்டால் பந்தடித்தவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  அவ்வாறு பிடிக்காமல் போனால், எதிர் அணியில் உள்ளவர்கள் தட்டிய பந்தைத் தடுக்கவேண்டும்.  எந்த இடத்தில் பந்தைத் தடுத்தார்களோ அந்த இடம் குறிக்கப்படும்.

இப்பொழுது பந்தைத் தட்டியவர் கோட்டியை இரண்டு காலளவு கோடுபோட்ட இடத்தில் நீள வாக்கில் நிற்கவைத்து மேல் நுனிப் பகுதியில் தன்னுடைய வலதுகை விரலால் பிடித்திருக்கவேண்டும்.  இடதுகை ஆட்டக்காரர்கள் இடதுகை விரலால் பிடித்திருப்பர்.  இந்த நிலையில் கோட்டியை வைத்த பிறகு எதிர் அணியில் இருந்து ஒருவர் (திறமையானவர்) கோட்டியைப் பார்த்துப் பந்தை எறிவார்.  எறிந்த பந்து கோட்டியின் மீது பட்டுவிட்டால் பந்து விளையாடுபவர் ஆட்டம் இழப்பார்.  அப்படி இல்லையாயின் அவர் ஆட்டத்தைத் தொடருவார்.

ஆட்டம் இழக்காமல் விளையாடும் ஒருவர் அடுத்த கட்டமாகப் பந்தை எடுத்துக்கொண்டு வேறொரு முறையில் பந்தைத் தட்டுவார்.  அதாவது, இடது கையில் பந்தையும் வலது கையில் கோட்டியையும் எடுத்துக்கொண்டு எதிர் அணியினர் நின்று கொண்டிருக்கும் பக்கம் நோக்கிப் பந்தடிக்கத் தயார் நிலையில் இருப்பார்.  இந்த நேரத்தில் எதிர் அணியினர் தங்களுடைய கள வியூகத்தை மாற்றி அமைத்துக்கொள்வர்.  இப்பொழுது பந்தாடுபவர் பந்தைச் சற்றுத் தூக்கி எறிந்து கோட்டியால் பந்தைத் தட்டவேண்டும்.  இவ்வாறு தட்டும் போது கோட்டி பந்தில் பட்டு விரைவாகச் செல்லும்.  இவ்வாறு செல்லும் பந்து தரையில் படாமல் மேலே சென்று அதை எதிர் அணியினர் ஒருவர் பிடித்துவிட்டால் விளையாடுபவர் ஆட்டம் இழக்கநேரிடும்.  அடித்த பந்து எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் செல்லலாம்.  ஏதாவதொரு இடத்தில் எதிர் அணியினர் பந்தைத் தடுப்பர்.  தடுக்கும் அந்த இடம் குறிக்கப்படும்.  இப்பொழுது எதிர் அணியினர் 'எவ்வளவு கோட்டி' என்று கேட்பர்.  பந்தை அடித்தவரோ அல்லது அவர் அணியைச் சேர்ந்தவரோ ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சொல்லவேண்டும்.  இங்கு எண் என்பது எத்தனை கோட்டியளவு என்பதையே குறிக்கும்.  விளையாடுபவர் சொல்லும் எண்ணை எதிர் அணியிர் ஏற்றுக்கொண்டால் விளையாடுபவர் மீண்டும் தனது ஆட்டத்தை முதலில் இருந்து தொடங்குவர்.  ஏற்றுக்கொள்ளவில்லையாயின் பந்தைத் தடுத்த இடத்திலிருந்து கோட்டியால் அளப்பர்.  இவ்வளவை,  அவர்கள் விளையாடும் பகுதிவரை அளப்பர்.  விளையாடுபவர் சொன்ன எண், அளக்கும் போது இல்லையென்றாலும் விளையாடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  எண் அளவு  சரியாகவோ கூடுதலாகவோ இருந்தால் அடுத்த சுற்று ஆட்டத்தைத் தொடருவர்.  அப்போது குறிப்பிட்ட எண்ணளவு அவ்வணிக்குக் கிடைத்த கோட்டியளவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் ஆட்டம் நிகழும்.  ஆட்டம் இழக்கவேண்டிய முறைகளில் அணியினர் எல்லோரும் ஆட்டம் இழந்தாலோ அல்லது முதலில் குறித்த எண்ணை (கோட்டியளவு) எடுத்துவிட்டாலோ அவர்கள் எதிர் அணியை விளையாட அழைப்பர்.

எதிரணியினரும் முன் சொன்ன முறைப்படி விளையாடுவர்.  ஆட்டம் இழக்க வேண்டிய முறைகளில் அணியினர் எல்லோரும் ஆட்டம் இழந்தால் (எண்ணைப் பெறாத நிலையில்) முதலில் விளையாடியவர்கள் எண்ணைப் பெறாத போது மீண்டும் விளையாடுவர்.  முதலில் விளையாடியவர்கள் எண்ணைப் பெற்றிருந்தார்கள் என்றால் இரண்டாவது விளையாடியவர்கள் எண்ணைப் பெறாத நிலையில் தோற்றவர்களாகக் கருதப்படுவர்.  எண் அளவை முதலில் தீர்மானம் செய்யாமல் முதலில் முதல் ஆட்டத்தில் எடுக்கும் எண்ணே (கோட்டியளவே) அளவாகக் கருதி விளையாடுவர்.  எதிரணியினர் முதல் அணியினர் எடுத்த கோட்டியளவை அளவாகக் கொண்டு விளையாடத் தொடங்குவர்.  முதல் ஆட்டம் இழப்பதற்குள் முதல் அணியினரின் கோட்டியளவை எதிரணியினர் எடுத்துவிட்டால் முதல் அணியினர் தோற்றதாகவும், எடுக்காவிட்டால் எதிரணியினர் தோற்றதாகவும் கருதப்படுவர்.  

இரு அணியினரும் குறித்த கோட்டியளவை முதல் ஆட்டத்திலேயே எடுத்துவிட்டார்கள் என்றால் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி போட்டியை சமனில் முடிப்பர்.  இறுதியில் வெற்றி பெற்றவர்கள் என்று தீர்மானித்த பிறகு தோற்றவர்கள் அவர்களைப் பொதி சுமக்கவேண்டும்.  தங்களை யார் பொதி சுமக்கவேண்டும் என்பதைத்  தாங்களே முடிவு செய்வர்.  பொதி சுமக்கும் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவதாக எல்லையை வகுத்துக்கொள்வர்.  இது, வீட்டைச் சுற்றியோ, தெருவைச் சுற்றியோ, கிராமத்தைச் சுற்றியோ இருக்கும்.

2.  கோட்டி விளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் சிறுவர்களால் விளையாடப்பட்டதாகும்.  இன்று இவ்விளையாட்டை யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டு மறைந்துபோன ஒரு விளையாட்டாகத் திகழ்கின்றது.  இதற்குப் பந்தும் (இரப்பராலோ நூலாலோ ஆன பெரிய பந்து), கோட்டியும் (அலகு), இரண்டு ஒத்த அளவுடைய செவ்வக வடிவான கற்களும் தேவை.  இவ்விளை யாட்டிற்கு இரண்டு அணிகள் தேவை.  ஒரு அணியில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பர்.  ஒவ்வொரு அணியிலும் ஏறக்குறைய ஒத்த வயதுடையவர்கள் இடம்பெறுவர்.  அணிகள் இரண்டிலும் சம எண்ணிக்கை யோடு இருப்பர்.

அ.  விளையாட்டுக்களம்

இவ்விளையாட்டைத் தெருவிலோ, தோப்பிலோ, மைதானத்திலோ விளையாடுவர்.  முதலில் இடத்தைத் தேர்வு செய்த பின் இரண்டு பெரிய செவ்வக வடிவமான கருங்கல்லோ, செங்கல்லோ கோட்டின் (ஒரு மீட்டர் நீளம் கொண்டது) இருமுனையும் பதியத்தக்க அளவில் நேர்க்கோட்டில் வைக்கவேண்டும்.  பின்னர் அவ்விரு கல்லின் மீது கோட்டியை வைக்க வேண்டும்.  பிறகு சம இடைவெளியில் இரண்டு பக்கமும் அளந்து (சுமார் 20-30 காலளவு) கோடு போட்டுக்கொள்வர்.  

தரைக்கும் கோட்டிக்கும் இடையே உள்ள வாயிலைச் சரிபார்ப்பர்.  அதாவது, விளையாட எடுத்துக்கொள்ளும் பந்து வாயிலின் வழியே மிக எளிதாக நுழைந்து செல்லத்தக்கவாறு தரைக்கும் கோட்டிக்கும் இடையே இடைவெளியை அமைத்துக்கொள்வர்.

ஆ.  விளையாடும்முறை

முதுலில் எந்த அணியினர் விளையாடுவது என்று முடிவு செய்யவேண்டும்.  இதனைக் கோட்டிப்பந்து விளையாட்டில் தேர்வு செய்த அதே முறைகளில் தேர்வு செய்வர்.  ஒவ்வோர் அணியினரும் தங்கள் அணிப்பக்கம் போடப்பட்ட கோட்டில் நின்றுகொண்டிருப்பர்.  விளையாடுபவர் பந்தை எடுத்து கோட்டியின் மீது எறிவார்.  பந்து கோட்டியின் மீது பட்டு கோட்டி கீழே விழுந்தது என்றால் அந்த அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும்.  மீண்டும் அவர் பந்தை எடுத்து கோட்டி மீது எறிவார்.  தொடர்ந்து கோட்டி விழுந்துகொண்டே இருந்தால் அந்த அணிக்குப் புள்ளிகள் கூடிக்கொண்டே போகும்.  பந்து எறியும் போது, பந்து கோட்டியின் மீது படாமல் போனாலோ கோட்டியின் மீது பட்டு ஒருபக்கம் மட்டும் கோட்டி தரையில் விழுந்தாலோ விளையாடுபவர் ஆட்டம் இழக்கநேரிடும்.  இம்முறையில் முதலில் விளையாடுபவர் ஆட்டம் இழந்த பின் எதிர் அணியில் ஒருவர் விளையாடுவார்.  அவரும் ஆட்டம் இழந்த பின் முதலில் விளையாடிய அணியில் மற்றவர் விளையாடுவார்.  

இப்படியாக ஒவ்வொரு அணியிலும் முறையே ஒவ்வாருவராக ஆடி முடித்தபிறகு எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுத்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.  வெற்றி பெற்றவர்களைத் தோல்வியுற்றவர்கள் பொதி சுமக்கவேண்டும்.  தங்களை யார் பொதி சுமக்க வேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்வர்.  பொதி சுமக்கும் தொலைவு ஓர் இடத்தில் தொடங்கி அந்த இடத்தில் முடியுமாறு இருக்கும்.  இது தெருவைச் சுற்றுவதாகவோ, ஊரைச் சுற்றுவதாகவோ, வீட்டைச் சுற்றுவதாகவோ அமையும்.

3. புளியங்கொட்டை தாயவிளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் கோடை காலத்தில் மட்டும் விளையாடும் விளையாட்டாகத் திகழ்கின்றது.  இக்காலத்தில்தான் புளியம்பழம் அதிகமாகக் கிடைக்கும்.  எனவே இவ்விளையாட்டை சிறுவர்- சிறுமிகள் இக்காலத்தில் மட்டுமே விளையாடுகின்றனர்.  இவ்விளையாட்டை இன்று இவ்வூரில் யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டிற்கு நான்கு முழு புளியங்கொட்டை தேவைப்படும்.  இந்த நான்குப் புளியங்கொட்டையையும் தரையில் தேய்த்து கருப்பு-வௌ¢ளை என ஆக்கிக் கொள்வர்.  இப்போது நான்குப் புளியங்கொட்டையில் நான்குப் பக்கம் கருப்பும் நான்கு பக்கம் வௌ¢ளையும் என அமைந்திருக்கும்.  இவ்விளையாட்டிற்குக் குறைந்தது இரண்டுபேர் அவசியம் தேவைப்படுவர்.  அதற்குமேல், உட்காரும் இடத்தைப்பொருத்து 3,4,5,6 என அமைவர்.

விளையாடும் முறை

இருவர் விளையாட்டாகவும் குழுவிளையாட்டாகவும் இவ்விளையாட்டை விளையாடுவர்.  இருவர் விளையாட்டில் ஒருவர் மாறி ஒருவர் விளையாடுவர்.  குழு விளையாட்டில் 1,2,3,4,5,6 என்ற முறையில் முறையே விளையாடவேண்டும்.  இவ்விளையாட்டு குழுவிளையாட்டாக அமையும் போது அது தொடர்விளையாட்டாகத் திகழும்.  விளையாடத் தொடங்கும் போது முதலில் விளையாட்டின் நிறைவிற்கு எத்தனைப் புள்ளிகள்(எண்கள்) எடுக்கவேண்டும் என்பதை எல்லோரும் ஒன்று கூடி முடிவு செய்வர்.  இப்புள்ளி 50, 100, 150, 200 என அமையும்.  புள்ளியைத் தீர்மானம் செய்த பின் யாராவது ஒருவர் விளையாடத் தொடங்குவர். இதில் முதலில் விளையாடுபவரைத் தேர்வு செய்யும் முறை இல்லை.  

முதலில் விளையாடுபவர் நான்குப் புளியங்கொட்டையையும் எடுத்துக் குலுக்கித் சோழி போடுவது போல் தரையில் போடுவார்.  அவ்வாறு போடும் போது நான்குப் புளியங்கொட்டையும் கருமை நிறத்துடன் அமைந்தால் அவருக்கு எட்டுப் புள்ளிகளும், வெண்மை நிறத்துடன் அமைந்தால் அவருக்கு நான்கு புள்ளிகளும் கிடைக்கும். 

இவ்விரு முறைகளிலும் அமையாமல் புளியங்கொட்டை அமைந்திருந்தால் ஒரு புளியங்கொட்டையை மற்றொரு புளியங்கொட்டையால் ஆள்காட்டி விரலைக் கொண்டு தள்ளவேண்டும்.  புளியங்கொட்டையைத் தள்ளுவதற்கு முன் எந்தப் புளியங்கொட்டையுடன் மோதச் செய்யவேண்டும் என்பதை விளையாடுபவர் முடிவு செய்துவிட்டு அவ்விரு புளியங்கொட்டைக்கு மிடையே சுண்டு விரலின் நுனியளவு இடைவெளியாவது இருக்கவேண்டும் என்பதற்காகச் சுண்டுவிரலின் நுனியை இவ்விரு புளியங்கொட்டையையும் மோதப் போகிறேன் என்பதற்கு அடையாளமாக விரல் நுனியைத் தரையில் தேய்த்துக் காட்டிப் பின் ஆள்காட்டி விரலால் புளியங்கொட்டையைத் தள்ளவேண்டும்.  அவ்வாறு தள்ளும் போது புளியங்கொட்டை குறிப்பிட்ட புளியங்கொட்டை மீது மோதினால் விளையாடுபவர் புள்ளி பெறுவார்.  அதாவது, கருப்பும் கருப்பும் மோதினால் இரண்டு புள்ளிகளும், வௌ¢ளையும் வௌ¢ளையும் மோதினால் ஒரு புள்ளியும், வௌ¢ளையும் கருப்பும் - கருப்பும் வௌ¢ளையும் மோதினால் ஒரு புள்ளியும் முறையே பெறுவர்.

புளியங்கொட்டையைப் போடும் போது ஒன்றன் மீது ஒன்று ஒட்டி அமைவதும் உண்டு.  அவ்வாறு ஒட்டி அமையும் போது விளையாட்டில் இடம்பெற்றிருக்கும் மற்றொருவர் வேறொரு தனியாக உள்ள புளியங்கொட்டையை எடுத்து அதன்மீது போட்டு ஒட்டியுள்ளதை விலக்கிவிடுவர்.  எட்டும், நான்கும், இரண்டும், ஒன்றும் எனப் புள்ளிகளை எடுத்துக்கொண்டே செல்வர்.  

பெரும்பாலும் இரண்டு மற்றும் ஒரு புள்ளி எடுக்கும் போது மட்டுமே, விளையாடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  காய்களை மோதவைக்கும் போது மோதவில்லை என்றாலும், சுண்டுவிரலைத் தேய்க்கும் போது புளியங்கொட்டையின் மீது பட்டுவிட்டது என்றாலும் ஆடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  இவ்வாறு ஒவ்வொருவரும் ஆட்டம் இழந்தபிறகு அடுத்து முறையில் உள்ளவர் ஆடத்தொடங்குவர்.  இப்படியே சுற்றுகள் வந்துகொண்டே இருக்கும்.

குழு விளையாட்டில் குறிப்பிட்ட புள்ளிகள் (முதலில் நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகள்) எடுத்தவர் முதலில் ஆட்டத்தில் இருந்து நீங்குவார்.  மீண்டும் சுற்றுகள் பழைய புள்ளிகளுடன் மற்றவர்கள் தொடருவர்.  இப்படியே ஒவ்வொருவராகப் புள்ளிகள் எடுத்து நீங்குவர்.  இறுதியாக விளையாடும் இருவரில் ஒருவர் தோற்றவராகக் கருதப்படுவர்.  தோற்றவர் வெற்றி பெற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவர்.

மேலும், தோற்றவர் வெற்றி பெற்றவரின் கைக்குத்தைத் தண்டனையாகப் பெறவேண்டும்.  கைக்குத்து என்பது, தோற்றவர் இடது கையையோ வலது கையையோ தரையில் ஊன்றுவார்.  வெற்றி பெற்றவர்கள் ஒவ்வாருவராக அவர் கையைக் குத்துவதையே இது குறிக்கும்.  இவ்வாறு குத்தும் போது குத்து வாங்குபவர் குத்து வாங்கக் கூடாது என்று கையைப் பாதுகாப்பாக எடுப்பர்.  அப்படியும் குத்துபவர் குத்திவிட்டால் மேலும் மேலும் குத்திக்கொண்டே இருப்பார்.  குத்திலிருந்து தப்பும்வரை  குத்து வாங்குபவர் குத்துத்தண்டனை பெறுவார்.  இப்படியாக தோற்றவர் ஒவ்வொருவரிடமும் குழுவிளையாட்டால் தோற்றவர் தண்டனை பெறுவார்.

இவ்வாறாக இந்த மூன்று நாட்டுப்புற விளையாட்டுகளும் இவ்வூரில் விளையாடப்பெற்றதாகும்.  முதல் இரண்டு விளையாட்டை ஆண்கள் மட்டும் விளையாடுவர்.  மூன்றாவது விளையாட்டான புளியங்கொட்டைத் தாய விளையாட்டை இருபாலரும் விளையாடுவர்.  இவை தவிர வேறுபல விளையாட்டுகளும் இவ்வூரில் விளையாடினர்.  அவைகளையும் தொகுத்து வைத்து பாதுகாப்பது இன்றைய தேவையாகிறது.



சிறுத்தொண்டன் கதை - வில்லுப்பாட்டு

இலக்கியங்களை இரண்டாக்கி செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் எனப் பிரிப்பர்.  இவ்விரு இலக்கியங்களும் காலங் காலமாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாகவே இருக்கின்றன. நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து செவ்விலக்கியங்கள் (இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற் புராணம், திருத்தொண்டர் புராணம், அரிச்சந்திர புராணம்) முகிழ்ந்ததையும்; செவ்விலக்கியங்களில் இருந்து நாட்டுப்புறக் கூறுகள் (அம்மானை, கும்மி, சிந்து, குறவஞ்சி, தாலாட்டு, நாடகம், பள்ளு, வில்லுப்பாட்டு) முகிழ்ந்ததையும் முகிழ்வதையும் காண்கின்றோம்.    கோவலன் - கண்ணகி - மாதவி ஆகியோரின் கதையைக் குன்றக் குறவர்கள் கூறக்கேட்ட இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரம்' என்னும் அழியாக் காவியம் ஒன்றைப் படைத்துள்ளார்.  இவ்வாறே, நாட்டு மக்களின் வாய்மொழியாக வழங்கிவந்த இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளும் தகுதி மிக்கவர்களால் காப்பியமாக ஆக்கப் பெற்றிருக்கின்றன எனலாம்.  நாயன்மார்களின் சிறுகுறிப்பான திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதியைக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் 'திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்' பாடியருளினார்.

ஏட்டுருவம் பெற்ற இக்கதைகள் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  எனவேதான் இக்கதைகளுள் வரும் துணைக் கதைகள் நாட்டு மக்களிடையே தனிக் கதைகளாக உருவெடுத்து வளர்ந்துள்ளதைக் காணமுடிகிறது.  குறிப்பாக கோவலன் கதை, இராமாயணக் கதை, அரிச்சந்திரன் கதை, மகாபாரதக் கதை, நளன் கதை என உரைநடையாக இக்கதைகளை வார்த்தெடுத்துள்ளனர் எனலாம்.

இக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு நம் புலவர் பெருமக்கள் சிற்றிலக்கிய வகைகளில் பல நூல்களைப் பாடியுள்ளனர்.  அவ்வகையில் தருமர் அசுவமேத யாகம், அரிச்சந்திரன் அம்மானை, அரிச்சந்திரன் கும்மி, இராமாயண அம்மானை, இராமாயணக் கும்மி, இராமாயணக் கண்ணி, இராமாயணச் சிந்து, இராமாயணப் பதம், இராமாயண கௌஸ்துபம், இராமாயண வில்லுப்பாட்டு, இராமாயண வெண்பா, பாரத அம்மானை, மாவிந்தம், பாரத வெண்பா, திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணச் சாரம், திருத்தொண்டர் அகவல், திருத்தொண்டர் அடிமைத்திறம், திருத்தொண்டர் சதகம், திருத்தொண்டர் திருநாமக்கோவை, திருத்தொண்டர் தோத்திரப்பா, திருத்தொண்டர் மாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இப் பெருங்கதைகளுக்குள் இடம்பெற்றிருக்கும் காப்பிய நாயகர்களைக் கொண்டும், புராண நாயகர்களைக் கொண்டும் இலக்கிய வகைகள் முகிழ்ந்திருக்கின்றன.  அவ்வகையில் நளதமயந்தி கும்மி, நளன் அம்மானை, அல்லி அரசாணி மாலை, அல்லி அரசாணி அம்மானை, அல்லி அரசாணி ஊஞ்சல், ஆரவல்லி அம்மானை, இரணியன்வதைப் பரணி, திருஞானசம்பந்தர் ஆனந்தக் களிப்பு, திருஞானசம்பந்தர் தாலாட்டு, திருஞானசம்பந்தர் துதி, திருஞானசம்பந்தர் தோத்திரக் கீர்த்தனை, திருஞானசம்பந்தர் பதிகம், திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், திருநீலகண்டர் குறவஞ்சி, திருநீலகண்டர் பள்ளு, சிறுத்தொண்டர் யட்சகானம், சிறுத்தொண்டர் உலா, சிறுத்தொண்டர் கும்மி, சிறுத்தொண்டன் சிந்து, சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இப்படியாக செவ்விலக்கியத்துள் நாட்டுப்புறக் கூறுகளும்; நாட்டுப்புறக் கூற்றைச் செவ்விலக்கியமாக்கும் தன்மைகளும் நம்மிடையே காலந்தோறும் இருந்து வந்துள்ளமையைக் காண்கிறோம்.  தஞ்சை மாவட்டத்து நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டரைப் பற்றிய கதைகள் செவ்விலக்கியங்களாகவும், நாட்டுப்புற இலக்கியங்களாகவும் பல நம்மிடையே இன்று இருக்கின்றமை கண்கூடு.  அதாவது,  திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் அகவல், திருத்தொண்டர் புராணச் சாரம், திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் மாலை ஆகிய செவ்விலக்கிய நூல்களில் சிறுத்தொண்டரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றமையையும்; சிறுத்தொண்டர் கதை, சிறுத்தொண்டர் நாடகம், சிறுத்தொண்டர் யட்சகானம், சிறுத்தொண்டர் கும்மி, சிறுத்தொண்டர் சிந்து, சிறுத்தொண்டர் வில்லுப்பாட்டு ஆகிய நாட்டுப்புற நூல்கள் சிறுத்தொண்டரைப் பற்றிய நூல்களாகவே இருக்கின்றமையையும் காணமுடிகின்றது.  மேற்கூறப்பெற்ற இந்நூல்கள் அனைத்தும் ஓலைச்சுவடியில் எழுதப் பெற்றிருக்கின்றவையே யாகும்.  இந்நூல்கள் பல்வேறு கால காட்டங்களில் பதிப்பிக்கப்பெற்றும் உள்ளன.

புராணச் சிறுத்தொண்டர்

சிறுத்தொண்டரைப் பற்றிச் செவ்விலக்கியங்கள் கூறும் பகுதியைக் காணும் போது நம்முடைய இலக்கிய அருளாளர்களின் கவித்துவம் வெளிப்படுகிறது.  ஒரு நீண்ட வரலாற்றை எப்படியெல்லாம் தொகை-வகை செய்யவேண்டும் என்பதற்கு இதுவொரு சான்றாக அமைதலைக் காணலாம்.  சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையில்,

"செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கும் அடியேன்"

என்றும், நம்மியாண்டார் நம்பிகளது திருத்தொண்டர் திருவந்தாதியில்,

"புலியி னருளுடைப் புண்ணியற் கின்னமுதாத் தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணத்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத்தொண் டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண் செங்காட்டங் குடியவர் மன்னவனே"

என்றும், உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இயற்றியருளிய திருத்தொண்டர் புராணச் சாரத்தில்,

"பல்குமருத்துவர் அதிபர் செங்காட்டங் குடிவாழ்
படைத்தலைவர் அமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்
செல்வமிகு சிறுத்தொடர் காழிநாடன் திருவருள்
சேர்ந்தவர் வளருஞ் சீராளன் தன்னை
நல்குதிரு வெண்காட்டு நங்கை சமைத்திடப்பின்
நன்மதிச் சந்தனத்தாதி தலைக்கறி யிட்டுதவப்
புல்கவரும் வயிரவர்தாம் மகிழ்ந்து மகவருளப்
போற்றியவர் சிவனருளே பொருந்தி னாரே"

என்றும், கயிலைக் குமாரபாரதி அவர்கள் இயற்றிய திருத்தொண்டர் மாலையில்,

"காய்கறி வேறொன்று தொடக்கள்ள வயிரவர்க்கோர்
சேய்கறி செய்திட்டார் 'சிறுத்தொண்டர்' - வாய்க்கினிதாய்,
'இன்னா திரக்கப் படுதலி ரந்தவரின்
இன்முகங் காணு மளவு"

என்றும், சேக்கிழார் சுவாமிகள் யாத்தருளிய திருத்தொண்டர் புராணத்தில், "உருநாட்டுஞ் செயல்காமன் ஒழியவிழி பொழிசெந்தீ" எனத் தொடங்கும் பாடல் தொடங்கி "ஆறுமுடிமேல் அணிந்தவருக் கடியார் என்று கறியமுதா" எனத் தொடங்கும் பாடல் இறுதியாக உள்ள 88 பாடல்களிலும் சிறுத்தொண்டரின் வரலாறு சுட்டப் பெற்றுள்ளமையை அறியலாம்.

சிறுத்தொண்டரின் 'ஊர்'

சோழ நாட்டில் காவிரியின் தென்கரைப் பகுதியில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊர் உள்ளது.  இவ்வூர் நன்னிலம் இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே ஆறு மைல்கல் தொலைவில் அமைந்துள்ளது.  இவ்வூரை 'கணபதீச்சுரம்' என்றும் அழைப்பர்.  சிறுத்தொண்ட நாயனார் திருப்பணி செய்ததும் இவ்வூரே.  இது  கயமுகாசுரனைக் கொன்ற கணபதி பூசித்த தலமாகும்.  கயமுகாசுரன் உதிரம் பெருகிய காடாதலால் செங்காடெனப் பெயர் பெற்று திருச்செங்காட்டங்குடி என்றானது.  தஞ்சை மாவட்டத்தில் இதுபோல் பல புண்ணியத் திருத்தலங்கள் மிகவே உண்டு.  பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் சித்தர்களும் அவதரித்து வாழ்ந்தது இத் தஞ்சை மாவட்டமாகும்.  சிறுத்தொண்ட நாயனார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகின்றார்.  இவருடைய வரலாற்றை மக்கள் நாட்டுப்புறக் கூறுகளோடு இணைத்து - வடித்து இரசித்திருக்கின்றனர்.  நாட்டு மக்களிடையே நாட்டுப் பாடல்களாக வழங்கி வந்து ஏட்டில் எழுதப் பெற்றவற்றுள் குறிப்பிடத்தக்கது 'சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டு' ஆகும்.  நாட்டுப்புறக் கூறுகள்-வகைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, இவர்தம் கதையை எவ்வாறு அமைத்திருக்கின்றது என்பதை இனிக் காண்போம்.

சிறுத்தொண்டன் கதை வில்லுப்பாட்டு

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலந்து, இன்றுவரை நின்று நிலவும் தமிழக நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றே 'வில்லுப்பாட்டு'.  இக்கலைக்கு முதன்மைக் கருவியாக அமைவது வில்.  இதற்குத் துணையாக உடுக்கை, குடம், தாளம், கட்டை ஆகிய கருவிகள் பயன்படுகின்றன.  இக்கருவிகளின் துணையோடு நாட்டுப்புறக் கதைகளை அமைத்துச் சுவையோடு பாடுவது வில்லுப்பாட்டு ஆகும்.  வில்லுப்பாட்டை வில், வில்பாட்டு, வில்லு, வில்லடி, வில்லடிப் பாட்டு, வில்லடிச்சான் பாட்டு என்று பலவாறாக அழைப்பதுண்டு.  இவ்வில்லுப்பாட்டுக் கதைகள் நெடுங்காலமாக வாய்மொழி இலக்கியங்களாகவே வாழ்ந்து வரினும் அருகிய நிலையில் பாமர மக்களின் மொழியறிவுக்கு ஏற்றவாறு ஏடுகளிலும் எழுதி வைக்கப் பெற்றன.  தற்காலம் இவை ஏட்டுச் சுவடிகளாகவும் கையெழுத்துப் படிகளாகவும் காணப்படுகின்றன.  அண்மைக் காலத்தில் சில அச்சு வடிவிலும் வெளிவந்துள்ளன.  இன்னும் பல வில்லுப்பாட்டுக் கதைகள் அச்சேறாமல் இருக்கின்றன.  அவற்றுள் ஒன்றே இச்சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதை.

பா அமைப்பு

நெடுங்காலமாகவே பாமர மக்களிடையே வழங்கி வந்த தெம்மாங்கு, தாலாட்டு, உலக்கைப் பாட்டு, ஒப்பாரி போலும் நாட்டுப்பாடல் வடிவத்தினையே மேற்கொண்டு நெடும்பாட்டாக அமைக்கப்பெற்றவையே வில்லுப்பாட்டுக் கதைகள் எனக் கருதலாம். இருசீர் அடிகள் இரண்டிரண்டாகத் தொகுத்து வர, இரண்டாம் அடியில் அடிமோனை அமைய முதலடி இரண்டாம் சீருக்குப் பின் இசைக்கேற்றவாறு தனிச்சொல் கொண்டு அமைவதான ஓர் பா அமைப்பிலேயே வில்லுப்பாட்டுக் கதைகள் ஆரம்ப காலத்தில் பாடப்பட்டன என அறியமுடிகின்றது.  கால வளர்ச்சியில் இத்தகைய பாடல்களுக்கிடையே கிளிக்கண்ணி, சிந்து, கும்மி, விருத்தம், மகுடி எனப்படும் பாம்பிசை, தரு மற்றும் பல்லவி, சரணம் முதலான அமையும் கீர்த்தனைகள் ஆகிய பல்வேறு பா அமைப்புகள் இடம்பெறலாயின என்கிறார் தி.சி. கோமதிநாயகம் அவர்கள் (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.20).  இச்சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் பாடலமைப்பானது விருத்தம் மற்றும் கண்ணி, சிந்து வகைகளில் அமைந்துள்ளது.  இப்பாடலமைப்பினைக் காணும்போது இச்சுவடியானது அண்மைக் காலத்தில் எழுத்து வடிவம் பெற்றிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

சுவடி அமைப்பு

சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதை எனும் இச்சுவடி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் (சுவடி எண்.1842) பாதுகாக்கப்பெற்று வருகிறது.  47 செ.மீ. நீளமும், 3.5 செ.மீ. அகலமும் கொண்ட இச்சுவடி ஏழு ஏடு - பதினான்கு பக்கங்களைக் கொண்டது.  பக்கத்திற்கு மூன்று பத்தியாகவும் பத்திக்கு எட்டு வரியாகவும் என எழுதப்பட்டுள்ள இச்சுவடி தெளிவான கையெழுத்துடனும் நல்ல நிலையிலும் முழுமையாகவும் இருக்கின்றது.  இச்சுவடியை அச்சிட்டால் ஏறத்தாழ டெம்மி அளவில் 12 பக்கங்கள் வரும்.

சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் வசன நடை எதுவும் இல்லை.  முழுக்க முழுக்க பாடல் அமைப்பிலேயே இக்கதையைச் சுவடியில் எழுதி இருக்கின்றனர்.  வில்லுப்பாட்டில் கதையைக் கூறும் போது இடையிடையே வசன நடை அமைவது இயல்பு.  ஆனால் இக்கதையில் வசன நடை இல்லாமல் இருக்கிறது.  வசன நடையினை வில்லுப் பாட்டுக்காரன் தன்னுடைய கற்பனையில் அமைத்துக் கொள்வதாகலின் சுவடியில் எழுதுவதை விட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.  இதே கருத்தினை தி.ச. கோமதிநாயகம் அவர்கள், "இக்காலத்தில் கிடைக்கப்பெறும் கதைகளை நோக்கினால் அவை இருவகையாக, இடையிடையே உரைநடை அமைந்து நெடும் பாட்டாகக் காணப்படுவனவாகவும் உரைப்பகுதியினை இடையிலே பெறாமல் அமையும் நெடும்பாட்டாகவும் காணப்படுவனவாகவும் உள்ளன. எழுதப்பெற்றுள்ள அல்லது அச்சிடப்பெற்றுள்ள நிலையிலேயே அவை இவ்வாறு காணப்படினும் வில்லடியில் பாட்டாகப் பாடப்பெறும் நிலையில் அவ்வப்போது உரிய உரைவிளக்கங்கள் தரப்பட்டு புலவர்களால் பாடப்படுகின்றன.  எனவே உரைப்பகுதியினைப் புலவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, பாடும்போது இடையே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் அவை வரையறுத்து எழுதப்படாமல் விடப்பட்டன எனக் கொள்ளலாம்.  மேலும், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பாட்டுப் பகுதிகளே என்பதால் அப்பகுதிகளை மட்டும் தொடர்ச்சியாகத் தொகுத்து வைத்துக்கொண்டனர் எனலாம்" (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.19) என்கின்றார்.

சிறுத்தொண்டன் கதையில் கட்டமைப்பு

கதைப்பொருளின் அடிப்படையில் வில்லுப்பாட்டுக் கதைகள் பல்வேறு வகையினவாக அமையினும், அவை அனைத்தும் பொதுவானதோர் கட்டமைப்பினைப் பின்பற்றியே உருவாகியிருத்தலைக் காணலாம்.  அக்கட்டமைப்பு முறையினைக் கீழ்வருமாறு குறிப்பிடுவார் தி.ச. கோமதிநாயகம் அவர்கள்.

1.  காப்பு விருத்தம்
2.  வருபொருள் உரைத்தல்
3.  குருவடி பாடுதல்
4.  அவையடக்கம்
5.  நாட்டுவளம் அல்லது கயிலைக்காட்சி
6.  கதைத்தலைவன் அல்லது தலைவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச்
சுவைகள் பலவும் அமைய எடுத்துக் கூறிக் கதையின் உச்சநிலையில்
அவர்தம் தலைமைச் சிறப்பு மேலோங்கிடுமாறு காட்டி முடித்தல்
7.  வாழி பாடுதல்

என அமையும் (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.23) என்பார்.  ஆனால் சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் இம்முறையான கட்டமைப்பு காணமுடியவில்லை.  காப்பைத் தொடர்ந்து போற்றியும், நூலும் தொடங்கி வாழியுடன் முடிவடைகின்றது.  நூலுக்கு முன் ஓரேட்டில் மட்டும் காப்புப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.  இதனை அடுத்து நூல் தொடங்குகின்றது.  இடையில் இருக்க வேண்டிய குருவடி பாடுதல், அவையடக்கம், நாட்டு வளம் அல்லது கயிலைக் காட்சிகள் இடம்பெறவில்லை.  இதற்கு என்ன காரணம் என்று ஆராயும்போது, இக்கதை ஏற்கெனவே பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதும் பெரியபுராணத்துள் இடம்பெற்று இருப்பதுமாகும்.  ஆகவே, இக்கதையை வில்லுப்பாட்டில் எழுதியவர் மேற்காண்பனவற்றை விடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.  வருபொருள் உரைத்தல் மட்டும் காப்புப் பாடலிலேயே சேர்த்திருப்பதைக் காணமுடிகின்றது.

சிறுத்தொண்டன் கதை

சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் வேள்வியாளர் குலத்தில் பரஞ்சோதியார் பிறந்தார்.  இவர் இளமையில் வில் வித்தை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் போன்ற வித்தைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.  சோழ அரசபையில் சேனாபதி பட்டம் வகித்தார். பரஞ்சோதியாரின் படைத்தலைமையில் உத்தரவாதாபியை வென்றுவந்தார். இதனைக் கண்ட சோழமன்னன், மகிழ்ந்து, வியப்பு மேலிட, இத்துஷ்டனை எப்படி இவ்வளவு எளிதில் வென்றீர் என வினவ, மற்ற அமைச்சர்கள் 'இதுவென்ன மன்னா, இவருக்கு ஈசுர கடாக்ஷம் மிகவே உண்டு; ஏறூர்ந்தோனடியருக்கு இவர் எப்பொழுதும் திருத்தொண்டு செய்பவர்' அதனால் இவ்வெற்றி இவருக்கொன்றும் கடினமல்ல என்றனர்.  மேலும் பரஞ்சோதியாரின் புகழை 'நெருப்பினில் புழுப்பற்றுமோ' என்று உயர்த்திக் காட்டினர்.  இதனைக் கேட்ட மன்னன் இறையடியாரின் நிலை தெரியாமல் பிழை செய்துவிட்டேனே என்று வருந்துகின்றார்.  இத்தவற்றுக்கு வழிகால் எதுவோ என நினைத்தவனாய் பரஞ்சோதியாரிடம் மன்னிப்புக் கேட்டு 'நீர் இறையடியவர், இறைவனுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர், தாங்கள் இங்கிருப்பதோ' எனக் கூறி நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து தினந்தினம் இறைத்தொண்டு செய்ய பணித்துக்கொண்டான்.

அதன் பின்னர் பரஞ்சோதியார் வீடு வந்து மகனீச்சரத்தில் குடியிருக்கும் நீலகண்டப் பெருமானை மனத்திலிருத்தி திருவெண்காட்டு நங்கையுடன் திருத்தொண்டு ஆற்றி வரலானார்.  தினமும் சிவனடியார்க்கு அமுதளித்த பின்பே தாமுண்ணும் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாகச் செயலாற்றியும் வரலானார்.  சிவனடியார்களுக்குத் தினந்தினமும் தொண்டு செய்வதால் பரஞ்சோதியார் சிறுத்தொண்டரானார்.  இவ்வாறு இருக்கையில் திருவெண்காட்டு நங்கை இறைவனின் திருவருளால் அழகான ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்து, சீராளன் எனப் பெயரிட்டு அகமகிழ்ந்து வளர்த்து வரலாயினர்.  சீராளனுக்கு ஐந்து வயதான போது ஆசானை அழைத்து சீராளனுக்குக் கல்வி கற்பிக்கச் செய்தனர்.  பரஞ்சோதியாரும் திருவெண்காட்டு நங்கையும் மனமொருமித்து இறைத்தொண்டு புரிந்துவரும் வேளையில், சிவபெருமான் தன்னுடைய இயல்பான வடிவைப் போக்கி பைரவர் வடிவுதாங்கி கயிலைமாமலையினை விட்டு திருச்செங்காட்டங் குடியில் இருக்கும் சிறுத்தொண்டன் இல்லத்திற்கு வருகின்றார்.

அப்போது சிறுத்தொண்டன் வீட்டிலில்லை.  சிவனடியாரை அழைக்க வீட்டைவிட்டுச் சென்றிருந்தார்.  அந்நேரம் சிவனடியார் சிறுத்தொண்டன் வீட்டிற்குமுன் நின்று 'சிறுத்தொண்ட பக்தனைக் காண வந்தோம் அவருண்டோ' என்கின்றார்.  திருவெண்காட்டு நங்கை வெளிப்பட்டு வந்திருந்த சிவனடியாரைப் பார்த்து வணங்கியவள், 'சிவனடியாரை அழைக்கச் சென்றவர் விரைவில் வந்துவிடுவார்.  தாங்கள் இல்லத்துள் வந்து அமுதுண்ண வேண்டும்' என்கிறாள்.  சிவனடியாரோ 'பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குச் செல்லமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்' என்கிறார். அமுதுண்ணாது சிவனடியார் சென்றுவிடுவாரோ என்று எண்ணியவள் 'என்னுடைய மன்னவர் இறையடியார்க்கு என்றும் அமுது செய்விப்பார்; தவறொன்றுமில்லை' என்று கேட்டுக்கொண்டாள்.  சிவனடியாரோ 'நான் சிறுத்தொண்டனைக் காணவந்தேன்.  காணாமல் செல்லமாட்டேன்.  மாதரசே! யாங்கள் சென்று கணபதீச்சரத்தில் திருவாத்தியின் கீழ் அமர்ந்திருப்போம். அடிகள் வந்ததும் எனைக் காணச்சொல்' என்று சொல்லிவிட்டு விரைந்து வந்து திருவாத்தியின் கீழ் வந்து அமரலானார்.

சிறுத்தொண்டர் சிவனடியார் எங்கும் காணாது கவலையுடன் வீடு வருகிறார்.  அப்போது, நங்கையவள் சொல்வாள், 'உத்தர தேசத்தில் இருந்து பைரவர் ஒருவர் வந்தார்.  அமுதுண்ணச் சொன்னேன்.  ஆடவரில்லா இல்லத்துள் நான் வரமாட்டேன் என்று ஆத்தியின் கீழமரச் சென்றிருக்கின்றார்' என்கிறாள்.  இதைக் கேட்ட சிறுத்தொண்டன் மிக்க மகிழ்ச்சி கொண்டு உடனடியாக கணபதீச்சரத்தில் ஆத்தியின் கீழமர்ந்திருக்கும் சிவனடியாரைக் காணச் செல்கிறான்.  அடியவரைத் தொழுது நின்ற சிறுத்தொண்டனைப் பார்த்து பைரவர் 'நீர்தாம் சிறுத்தொண்டனா' என்று வினவுகின்றார்.  'சிவனடியார் கருணையினால் என்னை அவ்வாறழைப்பர்' என்றவர், 'இன்று சிவனடியார் எவரையும் காணாது தவித்த எனக்குத் தங்களின் வருகை  மகிழ்விக்கச் செய்கிறது.  தாங்கள் திருவமுதுண்ண எங்கள் இல்லம் எழுந்தருள வேண்டும் என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவரோ, எனக்கு அமுதுசெய்ய உம்மாலியலாது என்கிறார்.  'தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் சொன்னால் செய்ய சித்தமாக இருக்கிறேன், கட்டளையிடுங்கள்' என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவரோ, 'நான் ஆறு மாதத்துக்கொரு தடவைதான் உண்பேன். இன்று அந்த நாள்' என்கிறார்.  'அப்படியா, மிக்க மகிழ்ச்சி.  தாங்கள் உண்ணும் வகையதைச் சொன்னால் உடனடியாக பாகம் பண்ண ஏதுவாகும் என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவர் 'நாம் உண்பது நரபசுவாகும்.  ஐந்து வயது நிறைந்த வீட்டுக்கு ஒரு பிள்ளையாகவும் இருக்கவேண்டும்.  அவ்வாறுள்ள பிள்ளையை அன்புடன் தாயார் மடிமீது வைத்து மகிழ்வுடன் தந்தையார் கத்திகொண்டு தலையை அறுத்துக் கறியாக்கிச் சமைத்து விருந்திட்டால் உண்பேன்' என்கிறார். 'அப்படியா, அப்படியேயாகட்டும், சீக்கிரம் சமைத்துவிட்டு வந்தழைக்கின்றேன்' என்று புறப்படுகின்றார் சிறுத்தொண்டர்.

சிவனடியோரோடு வருவார் எனக் காத்திருந்த திருவெண்காட்டு நங்கைக்குக் கணவன் தனியாக வருவதைக் கண்டு 'அடியார் என்ன சொன்னார்' என்று கேட்கிறாள். அடியாரின் விருப்பத்தைச் சொன்னவுடன் இதற்கு வழி ஏதுவென வினவினாள்.  அதற்குச் சிறுத்தொண்டர் 'பணங்கொடுத்து விலைக்குப் பிள்ளையை வாங்கிவிடலாம். ஆனால் அன்புடன் தாய் மடிமீது உட்காரவைத்து தந்தை மகிழ்வுடன் அறுத்துக் கொடுப்பாருண்டோ' என்கிறார். மேலும், இவ்வகையில் இசைவார் எவரும் இருக்கமாட்டார்.  எனவே தேவி, 'நம்முடைய சீராளனை அறுத்துக் கறிசமைப்போம்' என்று கூற, நங்கையவளும் முழுமனதுடன் சம்மதித்து பள்ளிக்கூடத்தில் இருக்கும் மகனை அழைத்து வாருங்கள் என்கிறாள்.

பள்ளிக்கூடத்தில் இருந்து சிறுத்தொண்டன் சீராளனைத் தோள்மீது வைத்துக் கொண்டு வந்து வீட்டில் நீராட்டி கலங்கமில்லா மனதுடன் தாய் மடிமீது அமரச் செய்து இறைவன் திருநாமம் கூறிய சிறுத்தொண்டன் சீராளனின் சந்ததி கண்டம் மற்றும் மற்றமற்ற உறுப்புக்களைத் தனித்தனியாக அறுத்து கறிசமைத்தான்.  அதன்பின் சிறுத்தொண்டன் பைரவரிடம் மகிழ்வுடன் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அமுதுண்ண அழைத்தார்.  பைரவர் மகிழ்வுடன் எழுந்து சிறுத்தொண்டனின் வீடு வந்து சேர்ந்தார்.  சிவனடியாருக்கு விருந்துவைக்க சிறுத்தொண்டரும் நங்கையும் தயாரானார்கள்.  சிவனடியார் முன் சமைத்த கறி வகைகளை வைத்தனர்.  சிவனடியார் இறைச்சியில் குறைவொன்றுள்ளதே என்ன, தாதியானவள் சமையலுக்கு ஆகாதெனத் தள்ளிய தலைக்கறியையும் கொண்டுவந்து வைத்தாள்.

குழந்தையை அறுத்து கறிவைத்து விருந்து வைக்கும் சிறுத்தொண்டனே, நான் தனியாக உண்ணமாட்டேன்; யாராவது ஒரு தவசியைக் கூட்டி வாரும் என்கிறார் பைரவர்.  பைரவரின் சொல்படி விபூதியணிவாரை விரைவாகத் தேடப் போன சிறுத்தொண்டன் யாரும் காணாது வீடு திரும்பி அடியவரை வணங்கி அமுதுண்ண வேண்டுகிறார். பைரவர் உன்னைவிட விபூதியணிவாரை யான் கண்டதில்லை. நீரே என்னுடன் அமுதுண்ணலாமே என்ன, மிக்க மகிழ்ந்த சிறுத்தொண்டன் உடனமர்ந்து உத்தமியை அன்னமிடச் செய்தான்.  அன்பனே, நான் ஆறு மாதத்துக்கோர் தடவை உண்பவன்.  'நான் அருந்துமுன் உண்ணவந்த பக்தனே, உன்னுடைய அன்பு மகனையும் கூட்டிவா' என்கிறார் பைரவர். இதனைக் கேட்ட சிறுத்தொண்டன் எழுந்து மனைவியுடன் உள்ளே சென்று 'என்மகனே! சீராளா!! வா' என்றனர்.  இவர்கள் அழைத்தவுடன் சீராளன் பள்ளியிலிருந்து வீடு வருவதுபோல் வருகின்றான்.  சீராளனை அழைத்துக்கொண்டு இருவரும் விருந்துண்ணும் இடத்திற்கு வருகின்றனர்.  அங்கு பைரவருமில்லை இலையில் வைத்த கறியுமில்லை.  ஐயோ நான் என்ன தவறு செய்தேனோ என்று சிறுத்தொண்டன் இறைவனிடம் வேண்ட இறைவன் இடபவானத்தில் உமாதேவியுடனும் விநாயகப் பெருமானுடனும் முருகப் பெருமானுடனும் எழுந்தருளி, சிறுத்தொண்டன்-திருவெண்காட்டுநங்கை-சந்தன நங்கை மற்றும் சீராளன் ஆகிய நால்வருக்கும் காட்சிதந்து கயிலைக்குக் கூட்டிச் செல்கின்றார்.

இவ்வாறமையும் இக்கதை, சிவத்தொண்டில் ஈடுபடுபவர் எவரும் நான், எனது என்ற கொள்கை இல்லாதவராகவும்; எல்லாம் இறைவனுடையதே என்னும் கருத்தினை உடையவராகவும் இருப்பதைச் சிறுத்தொண்டன் மூலம் உணர்த்துகின்றது எனலாம்.

காப்பு

நூல் தொடங்குவதற்கு முன் நூலாசிரியர் இந்நூல் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்று இறைவனை நினைத்துக் காப்புச் செய்யுள் ஒன்றைப் பாடுவதியல்பு.  இக்காப்புச் செய்யுள் நூலாசிரியர் காப்புக்கு அழைக்கும் இறைவனின் புகழைப்பாடி இவ்வகைப்பட்டவரே இந்நூல் சிறக்கக் காப்பாயாக என்பர்.  ஆனால் சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் 'விநாயகரை'க் காப்புக் கடவுளாகக் கொண்டு இருந்தாலும், விநாயகப் பெருமானைப் பற்றியொன்றும் சொல்லாது சிறுத்தொண்டனின் கதைச்சுருக்கத்தினைக் கூறி, இக்கதையைப் பாட சங்கரன் மைந்தன் காப்பாம் என்கிறார் நூலாசிரியர்.  இதனை அவரது பாடல்கள் வழிக் காண்போம்.

"காலனை வென்றோன் பாதம் கண்ணுற வன்னதானம்
சீலமாய்த் தினமுஞ் செய்த சிறுத்தொண்டன் வெண்காட் டாளும்
கோலமாம் வைர வர்க்குக் குணமுடன் படித்து வந்த
பாலனை யறுத்துப் பொங்கிப் பரிவுடன் சனமிட் டாரே. (1)

இட்டதோ ரடிசில்ப் பையன் இயல்தலை கறிகா ணாது
தட்டுச்செய் ததினா லன்னம் சாப்பிட மாட்டே னென்ன
சட்டென சமைத்த தாதி சந்தன நங்கை தானும்
கட்டுட னிறைச்சி தன்னை கலத்தினிற் படைத்தா ளன்றே. (2)

படைத்திட வைர வர்தான் பாலனை எழுப்பி மாயத்
திடத்துடன் தர்மஞ் செய்த சிறுத்தொண்டன் வெண்காட் டாளும்
முடக்கமாய் நிற்க ஈசன் மூவர்க்கும் முத்தி ஈய்ந்த
தடிதனில் கதையைப் பாட சங்கரன் மைந்தன் காப்பாம்" (3)

என்னும் காப்புப் பாடல்களில் வருபொருளைச் சுட்டிய தன்மையைக் காணமுடிகின்றது.

சிறப்புக் கூறுகள்

சிறுத்தொண்டன் கதையில் பல்வேறு வகையான சிறப்புக் கூறுகள் இடம்பெற்று இருக்கின்றன.  சிறுத்தொண்டனை மனிதனாகவும். பக்தனாகவும் தொண்டனாகவும் இறைவனாகவும் காணமுடிகின்றது.  அதேபோல், இக்கதையில் வரும் திருவெண்காட்டு நங்கையும், தாதியும், சீராளனும் கூட அவ்வவர்களுடைய மனநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலையில் இறைத்தன்மை பெற்றுள்ளமையை உணரலாம்.  இவற்றையெல்லாம் ஆயின் ஆய்வு விரிவும்.  எனவே, இச்சிறுத்தொண்டன் கதையில் இடம்பெற்றிருக்கும் சில கூறுகளை மட்டும் இங்குக் காண்போம்.

அ. சிறுத்தொண்டரில் சிறுத்தொண்டர்

சிறுத்தொண்டர் என்னும் இக்கதையில் சிறுத்தொண்டரைப் பற்றிப் பலரும் பல விதங்களில் குறிப்பிடுகின்றனர்.  சோழமன்னன் உத்தரவாதாவியை உன்னால் எப்படி எளிதாக வென்றுவர முடிந்தது என்று வியப்பு கலந்த மகிழ்வோடு கேட்கும் போது, உடன் இருந்த அமைச்சர்கள் இதுவென்ன பெரிதோ மன்னா, "ஏறூர்ந்தோ னடியருக்கு இவர், எப்பொழுதுந் திருத்தொண்டு செய்பவர்" என்று இவரை மன்னவருக்கு அறிமுகப்படுத்துகன்றனர்.  சிவனடியாராகக் கொண்ட சிவபெருமான் சிறுத்தொண்டரைப் பார்த்து,

"குழந்தையை அறுத்துக் கறிசமைத் தசனந் தந்த பக்தா"

 என்றும்,

"ஆசாரஞ் செய்த சிறுத்தொண்ட பக்தனே" 

என்றும், 

"உன்னைப்போல் விபூதியிடும் நபரையானுங் கண்டதில்லை" 

என்றும், 

"........ நானடியன் அருந்துமுன் உண்ணவந்த பக்தா" 

என்றும் பலவாறாகக் குறிப்பிடுகிறார்.  மேலும், இக்கதையில் இவரைச் "சிறு ஈகையன்" என்றும், "சிறுத்தொண்ட பக்தன்" என்றும், "தொண்டருக்கும் தொண்டர்" என்றும், "எங்கள் ஆண்டவன் பக்தன்" என்றும், "ஈசுரன் தொண்டர்க்குத் தொண்டனான சிறுத்தொண்டன்" என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆ. சிவனடியார் நெறி

"ஓழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஒப்ப சிவனடியார்கள் பல ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி ஒழுகுவராவர்.  குறிப்பாக, பிறர் மனம் நோகாமல் நடப்பதையே முக்கிய நெறியாகக் கொண்டவர்கள் சிவனடியார்கள்.  தன்னால் பிறருக்கு எத்துன்பமும் வாராமல் பார்த்துக்கொள்வர்.  இச் சிறுத்தொண்டன் கதையில் சிவனடியார்தம் நெறியாக "ஆணில்லா வீட்டில் புகாத" தன்மை வெளிப்படுகின்றது.  அதாவது, 

"ஆடவர்களில்லா அகந்தனிலே யாங்கள் சென்று
அமர்ந்திருக்க மாட்டோம்"

என்றும்,

"பெண்கள் தனியாக இருக்கும் மனையகஞ் செல்லேன்"

என்றும்,

"காளையில்லா மனைதனிலே களிப்புடனே நானும்
  கௌவையில்லா துள்ளேவந்து பொம்மலுண்ண மாட்டோம்"

என்றும் பல இடங்களில் பைரவரின் வாக்காக இந்நெறி வெளிப்படுகின்றது.

இ. சிறுத்தொண்டரின் இறைபக்தி

சிவனடியார்கள் தாமாற்றும் செயல்கள் எல்லாம் இறைவன் செயல்களே என்று எண்ணும் கருத்து கொண்டவர்கள்.  சிவனடியார்கள் ஆடுபொருளே.  தம்மை ஆட்டும் பொருள் சிவபெருமானே என்பதில் உறுதியாக இருப்பவர்கள். 'எல்லாம் அவன் செயல்' என்று நித்தம் தொண்டாற்றுபவர்கள்.  இதனால் எத்துன்பம் வந்தாலும் அத்துன்பம் தனக்கு வந்ததாகக் கருதமாட்டார்கள்.  எல்லாம் சிவனுக்கே என்பதால் எத்துன்பமும் சிவனடியார்க்கு இல்லை என்றாகிவிடுகிறது.  இதனால்தான் பிள்ளைக்கறி சமைத்து விருந்துவைத்த சிறுத்தொண்டருக்குத் தன்னுடைய ஐந்து வயதுப் பாலகனை இழந்த துன்பம் பெரியதாகத் தெரியவில்லை.  சிவன் செயலாகவே இதைச் செய்திருக்கின்றார் என்று கூறுதலே சிறப்பு.

"அகத்துக்கொரு பாலக னாக வேணும்
அங்ஙன முள்ள மகனை அன்புடனே 
தாயாரும் அணைத்து மடிமீதிலே இருத்தி
சந்தோஷமாய்ப் பிடித்திருக்க தந்தை கையில் 
கத்திகொண்டு தலைதனை யறுத்துக் கறியாக்கி"

என்று பைரவர் சிறுத்தொண்டரிடம் விருந்து வகைதனைக் கூறும்போது எவ்விதத் தயக்கமும் சலனமும் இல்லாமல் அப்படியே சீக்கிரம் விருந்து சமைத்து வருகிறேன் என்கின்றார்.  பைரவர் சொன்ன - கேட்ட விருந்து வகைகளைத் தன் இல்லாளுடன் சொல்லும்போது,

"..............   ..............  ஓர்குடிக்கோர் பிள்ளை
ஐந்துவயசுப் பிராயம் அவயவப் பழுதில்லாத
அன்புடைய பிள்ளைதனை அன்னை அணைத்து
மடிமீ திருத்தி அகமகிழ்ச்சி யுடனிருக்க
அப்பனும் அவ்வண்ணம் வந்தறுத்து
அறுத்துக் கறிசமைத்து"

விருந்து வைக்கவேண்டும் என்கிறார்.  இதனைச் சொல்லும் போது சிறுத்தொண்டருக்குத் தயக்கம் ஏதும் தோன்றவில்லை.  பைரவரின் விருந்துக்கு ஏற்றவன் தன் மகனே என்று நினைத்த சிறுத்தொண்டர் மனைவியிடம்,

"அள்ளிப் பணங்கொடுத்த துண்டால் ஆண்மகவை வாங்கிடலாம்
அன்னை பிடித்தப்ப னறுப்பானோ?"

என்கின்றார்.  இத்தன்மை சிறுத்தொண்டர்க்கன்றி வேறு யார்க்கு வரும்.  இறைத்தொண்டர்க்குப் பிள்ளைக்கறி சமைத்துவிட்டு பைரவர் விருந்துக்குப் பிள்ளையை அழைத்துவா என்றபோது சிறுத்தொண்டரும் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கையும் பூசை அறைக்குச் சென்று சுவாமியிடம் வேண்டுகிறார்களே!  இவற்றையெல்லாம் பார்க்கும்போது "எல்லாம் அவன் செயலே" என்று செயல்படுவது விளங்குகின்றது.

ஈ. சிறுத்தொண்டரின் நெறி

சிவத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு நெறியில் பிழையேற்படாது வாழ்ந்து வருபவர்கள்.  எத்துன்பம் வந்தாலும் கொண்ட நெறியில் வழுவாதவர்களாக வாழ்ந்து வந்தனர், வாழ்ந்து வருகின்றனர்.  சிறுத்தொண்டர் சிவனடியார்க்குத் தினமும் அமுதிட்ட பிறகு தானுண்ணும் நெறியைக் கொண்டவராக இருந்தார்.  இதனை இக்கதையில், 

"........     ........  அன்பர்க் கமுதிட்டல்லால்
திண்ணாதிருந்து அடியருண்ட பின்பு
தேவியுடனிருந் தன்னமுண்பார்"

எனும் தொடர் இவரின் நெறியை விளக்குகின்றது.  மேலும் சிறுத்தொண்டர் அடக்கத்தின் உருவமாகவே காணப்படுகிறார்.  பைரவர் சிறுத்தொண்டனைப் பார்த்து, "நீர்தாமோ சிறுத்தொண்டன்" என்று கேட்கும் போது அவர்,

"சிவனடியார் கருணையினாலெனை இப்படிச் சொல்வர்
திருவருளா லெந்தனுக்கு அப்பெருமையில்லை"

என்று கூறுகிறார்.  இத்தன்மை வேறு யாருக்கு வரும்.

இதுபோன்ற பல கூறுகள் இக்கதையில் வெளிப்படுகின்றது.  வில்லுப்பாட்டுக் கதைக்கான கட்டமைப்பு முழுமையாக இதிலில்லை.  ஆனால், வில்லுப்பாட்டுப் பாடுவோர் அவைகளை நிவர்த்தி செய்துகொள்வர் என்ற நியதி இருப்பதால் இவைகளை ஓலையில் எழுதாமல் விட்டிருக்கின்றனர் எனலாம்.  ஓலைச்சுவடியின் முதலேட்டில் காப்புப் பாடலிலும், இறுதியேட்டில் வாழிப் பாடலிலும் வில்லுப்பாட்டு என்று குறிப்பிடுவதைக் கொண்டே இக்கதைப்பாட்டு 'வில்லுப்பாட்டுக் கதை' என்று உறுதி செய்யப்பெற்றுள்ளது.  வாழிப் பாட்டு பின்வருமாறு அமையும்.

"சிறுத்தொண்டன் பக்தன் காதை செவியிலே கேட்ட பேரும்
மறுவில்லா தவனைப் போலே மண்ணினில்த் தர்மஞ் செய்து
கறுவியா தடிய ருக்கு கண்ணியஞ் செய்த பேரும்
வறுமையில் லாது வாழ்ந்து வைகுந்தஞ் சாரு வாரே".

முடிவுரை

பல்வேறு வகையான புராணங்களிலும் காவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடிய நாயகர்கள் எல்லோரையும் பட்டியலிட்டு இதுபோல் வெளிவந்திருக்கக் கூடிய நூல்களை எல்லாம் தொகுத்து ஆய்வு செய்தால் புராணங்களில் - காவியங்களில் இவர்களின் பங்கு என்னவென்று தெரியவரும்.  இவ்வாறான கதை நாயகர்களை  மாவட்டம்-வட்டம் வாரியாகப் பிரித்துக்கொண்டும் ஆய்வு செய்யலாம்.  இதனால் யார்யார் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? அப்பகுதி மக்கள் அவர்களை ஏன்? எப்படி? எதற்கு? போற்றி வந்தார்கள் என்பனவற்றிற்கெல்லாம் விடை காணமுடியும்.  புராண நாயகர்களும் நாட்டுப்புறக் கதைமாந்தர்கள் தான்; நாட்டுப்புறக் கதைமாந்தர்களும் புராண நாயகர்கள் தான் என்பது இக்கதையின் மூலம் வெள்ளிடைமலை.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்

1. தமிழ் வில்லுப்பாட்டுகள், தி.ச. கோமதிநாயகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1979.

துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்களின் பதிப்புகள்

துறைமங்கலம் சிவப்பிரகாசர் 34 நூல்களையும் 15 தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.  இவற்றில் செய்யுள் நூல்கள் 33ம் உரைநடை நூல் ஒன்றும் அடங்கும். கொச்சகக் கலிப்பா, தலவெண்பா ஆகிய இருநூல்கள் முற்றிலும் கிடைக்கவில்லை.  ஏசுமத நிராகரணம் எனும் பிறசமய மறுப்பு நூல் மட்டும் இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.  ஆக முழுமையாகக் கிடைத்த நூல்கள் 31 ஆகும்.  இந்நூல்களின் பதிப்புகளைத் தனிநூல் பதிப்பு, திரட்டு நூல் பதிப்பு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

தனிநூல் பதிப்பு

ஒவ்வொரு நூலும் தனித்தனியாகப் பதிப்பிப்பதைத் 'தனிநூல் பதிப்பு' என்பர்.  இத்தனிநூல் பதிப்பு மூலப்பதிப்பு, உரைப்பதிப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  மூலம் மட்டும் கொண்ட பதிப்பை 'மூலப்பதிப்பு' என்றும், மூலமும் அதனுடன் உரை/குறிப்புரை/விளக்கவுரை/பதவுரை/ பொழிப்புரை கொண்ட பதிப்பை 'உரைப் பதிப்பு' என்றும் குறிப்பிடலாம்.  துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நூல்களில் மூலப்பதிப்பாக கூவப்புராணம், சதமணிமாலை, சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவநாம மகிமை, சோணசைல மாலை, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருவெங்கைக் கோவை, நன்னெறி, நால்வர் நான்மணிமாலை, பழமலையந்தாதி, பிட்சாட நவமணிமாலை, பிரபுலிங்க ல¦லை, பெரியநாயகி கலித்துறை, பெரியநாயகி விருத்தம் போன்ற நூல்களும்; உரைப்பதிப்பாக இஷ்டலிங்கவபிக்ஷேக மாலை, கூவப்புராணம், சித்தாந்த சிகாமணி, சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவப்பிரகாச விகாசம், சோணசைல மாலை, திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி, திருவெங்கைக் கோவை, நன்னெறி, நால்வர் நான்மணிமாலை, பழமலையந்தாதி, பிரபுலிங்க ல¦லை, வேதாந்த சூளாமணி போன்ற நூல்களும் வெளிவந்திருக்கின்றன. 

திரட்டுநூல் பதிப்பு

ஒரு நூலாசிரயர்/வெவ்வேறு நூலாசிரியரின் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் திரட்டிப் பதிப்பிப்பதைத் 'திரட்டுநூல் பதிப்பு'  என்பர்.  துறைமங்கலம் சிவப்பிரகாசரின் திரட்டுநூல் பதிப்புகளை அமைப்புநிலைப் பதிப்பு, அளவுநிலைப் பதிப்பு, பொருள்நிலைப் பதிப்பு, திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.  அமைப்புநிலைப் பதிப்பு

அமைப்புநிலையில் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்களை மூலப்பதிப்பு, உரைப் பதிப்பு என இரண்டாகப் பகுத்துக் காணலாம்.  திரட்டு மூலப்பதிப்பாக இஷ்டலிங்கவபிக்ஷேக மாலை முதலிய பிரபந்தங்கள்(1885, 1890, 1904), சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள் (1877), சிவஞானபாலை தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள் (1887), சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும் (1934), சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு (1890, 1907), சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் (1944), சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு (1916, 1941), சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (1885, 1906), திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா (1890, 1906), நன்னெறி (1874, 1875, 1877,1878,1879), நால்வர் நான்மணிமாலை முதலியன (1872, 1873, 1876, 1890, 1909), ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் கீர்த்திமாலைத் திரட்டு போன்றனவும்; திரட்டு உரைப்பதிப்பாக சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு (1972, 1978), சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு (1916, 1941), சோணசைல மாலை & சிவநாம மகிமை (1899), சோணசைல மாலை - நால்வர் நான்மணிமாலை & நன்னெறி (1993), நன்னெறி (1869,1883, 1885,1887) போன்றனவும் வெளிவந்திருக்கின்றன.

2. அளவுநிலைப் பதிப்பு

சிவப்பிரகாசர் நூல்களில் பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிறுநூல் திரட்டு, பெருநூல் திரட்டு, சிறு மற்றும் பெருநூல் திரட்டு என மூன்று வகைகளாகப் பிரித்துக் காணலாம்.

அ. சிறுநூல் திரட்டு

சிவப்பிரகாசர் நூல்களில் 40 பாடல்களுக்குக் குறைவான நூல்களைச் சிறுநூல்கள் எனலாம்.  இவ்வகை நூல்களின் திரட்டைச் 'சிறுநூல் திரட்டு' என்கின்றோம்.  இவ்வகையில் இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள் (நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை); நால்வர் நான்மணிமாலை முதலியன (பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, பிட்சாடன நவமணிமாலை) ஆகியன இடம்பெறுகின்றன.

ஆ. பெருநூல் திரட்டு

சிவப்பிரகாசர் நூல்களில் 40 பாடல்களுக்கு மேற்பட்ட நூல்களைப் பெருநூல்கள் எனலாம்.  இவ்வகை நூல்களின் திரட்டைப் 'பெருநூல் திரட்டு' என்கின்றோம்.  இவ்வகையில் திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா ஆகிய இரண்டு நூல்களின் திரட்டு மட்டும் இடம்பெறுகின்றது.

இ. சிறு மற்றும் பெருநூல் திரட்டு

சிவப்பிரகாசர் நூல்களில் சிறுநூல் மற்றும் பெருநூல் ஆகிய இரண்டு நிலைகளும் கலந்த திரட்டு நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.  இவ்வகையில் சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள் (தாலாட்டு, கலம்பகம், திருப்பள்ளியெழுச்சி, நெஞ்சுவிடு தூது, பிள்ளைத்தமிழ்); சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும்; சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு ஆகிய மூன்று திரட்டுகளிலும் சிவப்பிரகாசரின் பிரபந்த நூல்கள் 22ம் கருணைப்பிரகாசரின் இட்டலிங்க அகவலும் மற்றும் திருவெங்கை மான்மியமும் இடம்பெற்றுள்ளன.

சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் எனும் திரட்டு நூலில் சிவப்பிரகாசர் நூல்கள் அனைத்தும் வரிசைப்படி வரிசையெண் பெற்று வெளிவந்துள்ளன. இவர்தம் நூல்களில் கிடைக்காத நூல்களுக்கும் அந்நூலுக்கான வரிசையெண் கொடுத்து 'இந்நூல் இதுவரை கிடைக்கவில்லை' என்ற குறிப்போடு இத்திரட்டு வெளிவந்துள்ளது.

சோணசைல மாலையும் சிவநாம மகிமையும்; சோணசைல மாலை நால்வர் நான்மணிமாலை நன்னெறியும்; சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி, பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கலித்துறை, நன்னெறி); ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்திமாலைத் திரட்டு (சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, பிட்சாடன நவமணிமாலை,இஷ்டலிங்கவபிஷேக மாலை, நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சதமணி மாலை) போன்ற சிறு மற்றும் பெருநூல் திரட்டுகளும் வெளிவந்திருக்கின்றன.

3.  பொருள்நிலைப் பதிப்பு

பொருள்நிலையில் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்கள் பாட்டுடைத்தலைவர் பற்றியதாகவும், பாடல்பெற்ற தலத்தைப் பற்றியதாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.  சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள், சிவஞான பாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும் ஆகிய இரண்டு திரட்டுகளும் பாட்டுடைத்தலைவராகிய சிவஞானபாலையரைப் பற்றியதாகவும்; திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா ஆகிய திரட்டு திருவெங்கை எனும் தலம் பற்றியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

4.  திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு

பல்வேறு காலகட்டங்களில் ஒரே அளவாக, ஒரே பதிப்பாசிரியரால் வெளியிடப்பெற்ற திரட்டு நூல்களின் தொகுப்பாகவும் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்கள் அமைந்திருக்கின்றன.  சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (1885), திருவெங்கைக்கோவை (1890), திருவெங்கைக் கலம்பகம்  & திருவெங்கையுலா (1890), இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள் (1888), சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள் (1887), கருணைப்பிரகாசரின் இஷ்டலிங்க அகவல் (1890) ஆகிய தனித்தனித் திரட்டு நூல்கள் அனைத்தையும் முறையாகக் கொண்டு சிவப்பிரகாசரின் சரித்திரம் (1890) எனும் நூலை முன்னதாகக் கொண்டு 'சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு'(1890) எனும் திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு வெளிவந்துள்ளது.  முதற்பதிப்பின் முறைவைப்பிலேயே இவற்றின் மறுபதிப்பும் வெளிவந்துள்ளது. அதாவது முதற்பதிப்பில் வெளிவந்த திரட்டுகளின் முறைவைப்பானது 1906, 1906, 1906, 1904, 1904, 1906ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரட்டுகளைத் தொகுத்து 1906ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.

முடிவுரை

இப்பதிப்பு வகைகளையெல்லாம் பார்க்கும்போது துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நூல்கள் மூலம் மட்டும் கொண்ட தனிநூல் பதிப்பாகவும், மூலமும் உரையும் கொண்ட தனிநூல் பதிப்பாகவும், அமைப்புநிலைத் திரட்டுப் பதிப்பாகவும், அளவுநிலைத் திரட்டுப் பதிப்பாகவும், பொருள்நிலைத் திரட்டுப் பதிப்பாகவும், திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பாகவும் எனப் பல நிலைகளில் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றமை தெளிவு.  ஒரு நூலாசிரியரின் நூல்கள் இவ்வளவு வகைகளில் பதிப்பாகி இருப்பது சிவப்பிரகாசர் நூல்களுக்கான தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்களின் பதிப்பு விவரம்

அ.  தனிநூற் பதிப்பு

  1. இட்டலிங்க அபிடேகமாலை பழைய உரையுடன், மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1965
  2. கூவப்புராணம், ஞானசுந்தர ஐயர் & எம். வீராசாமிச் செட்டியார், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1880
  3. திருக்கூவப்புராணம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), சிதம்பரம் ஈசானிய மடம், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1884
  4. கூவப்புராணம், க.வ. திருவேங்கட நாயுடு(குறிப்புரை), எஸ். மூர்த்தி & கோ வெளியீடு, கபாலி அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1908
  5. கூவப்புராணம், குமாரச்சேரி சுப்பராய முதலியார்(பதி.), 1969
  6. கைத்தலமாலை, சிவநாம மகிமை, மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1969
  7. திருக்கூவப்புராணம் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீனம், மயிலம், 1999
  8. சதமணி மாலை, சரஸ்வதி பிரஸ், பாதிரிப்புலியூர், 1938
  9. சித்தாந்த சிகாமணி உரையுடன், நாகி ரெட்டியார்(உரை), கலாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1910
  10. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
  11. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1992 
  12. சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1993
  13. சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
  14. சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, சிவஞானபாலைய சுவாமிகள் வெளியீடு, ஆனந்தா பிரஸ், புதுவை, 1949
  15. ஸ்ரீசிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது மூலமும் குறிப்புரையும், பொம்மபுர ஆதீனம், மயிலம், 1965
  16. சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, பொம்மபுர ஆதீனம், மயிலம், 1995
  17. சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், இராமலிங்க சுவாமிகள்(பதி.), ஆறுமுகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1887
  18. சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும், பொம்மபுர ஆதீன வெளியீடு, உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1968
  19. சிவநாம மகிமை, க.வ. திருவேங்கட நாயுடு(பதி,), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1899
  20. சிவநாம மகிமை, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1969
  21. ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1998
  22. சிவப்பிரகாச விகாசம், அடிகளாசிரியன்(பதி.), 1939
  23. சிவப்பிரகாச விகாசம்-பாட்டும் சிற்றுரையும், அடிகளாசிரியன்(உரை&பதி.), சரஸ்வதிமகால் நூலக வெளியீடு, தஞ்சை, 1977
  24. சீகாளத்திப்புராணம், அரங்கநாத முதலியார் & அருணாசலக் குருக்கள்(பதி.), கலாசாகர அச்சுக்கூடம், புதுவை, 1861
  25. சீகாளத்திப்புராணம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1888
  26. சீகாளத்திப்புராணம் உரையுடன், இராமானந்தயோகி(உரை), பூ. சண்முக முதலியார்(பதி.), மதராஸ் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1916
  27. சோணசைல மாலை, சி.பெருமாள் நாடார்(பதி.), சின்னயநாயர் அச்சுக்கூடம், 1888
  28. சோணசைல மாலை, வே.கி. வேலு முதலியார்(பதி.), 1891
  29. சோணசைல மாலை, கொ. லோகநாத முதலியார்(பதி.), மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902
  30. சோணசைல மாலை, லோகநாத முதலியார்(பதி.), 1915
  31. சோணசைல மாலை உரையுடன், இராமலிங்கத்தம்பிரான்(உரை), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925
  32. சோணசைல மாலை, நா. கதிரைவேற்பிள்ளை(பதி.), பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932
  33. சோணசைல மாலை உரையுடன், க.வ. திருவேங்கடநாயுடு(உரை), ஆறுமுக நாவலர் அச்சுக்கூடம், சென்னை, 1961
  34. சோணசைல மாலை உரையுடன், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1994
  35. சோணசைல மாலை, சிவனடியார் திருக்கூட்ட வெளியீடு, காஞ்சி, 1994
  36. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவபிள்ளை(பதி.), வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம், சென்னை, 3ம் பதிப்பு, 1868
  37. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவ பிள்ளை & ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 4ம் பதிப்பு, 1873
  38. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவபிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 5ம் பதிப்பு, 1886
  39. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவ பிள்ளை(பதி,), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 6ம் பதிப்பு, 1887
  40. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, இராமலிங்கசுவாமி(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1888
  41. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி உரையுடன், ஆறுமுக நாவலர்(உரை), பொன்னம்பலபிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, 9ம் பதிப்பு, 1913
  42. திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, பழமலை அந்தாதி மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1994
  43. திருவெங்கைக் கலம்பகம் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1997
  44. திருவெங்கைக் கோவை, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியாலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
  45. திருவெங்கைக் கோவை, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
  46. திருவெங்கைக் கோவை உரையுடன், இராமானந்த யோகிகள்(உரை), ரிப்பன் பிரஸ், சென்னை, 1909
  47. திருவெங்கைக் கோவை, சிதம்பர முதலியார்(பதி.), 1934
  48. திருவெங்கைக்கோவை உரையுடன், இராமானந்த யோகிகள்(உரை), ரிப்பன் பிரஸ், சென்னை, 2ம் பதிப்பு, 1938
  49. திருவெங்கையுலா மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1938
  50. நன்னெறி உரையுடன், ஊ. புஷ்பரதச் செட்டியார்(பதி.), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1868
  51. நன்னெறிப் பதவுரை, சரவணபுரம் சண்முக முதலியார்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1875
  52. நன்னெறி உரையுடம், ஊ. புஷ்பரதச் செட்டியார்(பதி.), கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 6ம் பதிப்பு, 1876
  53. நன்னெறி உரையுடன், சி. மாணிக்க முதலி & கோ., மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1877
  54. நன்னெறி மூலமும் உரையும், அருணாசல முதலியார்(உரை), கலைக்கியான முத்திராஷர சாலை, சென்னை, 1882
  55. நன்னெறி மூலமும் உரையும், சுப்பிரமணிய சுவாமி(பதி.), மாதவ நிவாச அச்சுக்கூடம், சென்னை, 1883
  56. நன்னெறி, ஆறுமுக நாவலர் & சதாசிவ பிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1889
  57. நன்னெறி, முத்து சிதம்பரம்பிள்ளை(பதி.), எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1895
  58. நன்னெறி, ஈ. மார்ஸ்டன்(பதி.), எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1897
  59. நன்னெறி, கா. நமசிவாய முதலியார் & சிவஞானம் பிள்ளை(பதி.), குமாரசாமி நாயுடு & சன்ஸ், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1904
  60. நன்னெறி, எஸ். சுப்பிரமணிய ஐயர்(பதி.), ஆ. கோவிந்தராஜூலு நாயுடுவின் வெஸ்ட் அண்ட் கம்பெனி, சென்னை, 1905
  61. நன்னெறி, சி.ஆர். நமசிவாய முதலியார்(பதி.), சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1906
  62. நன்னெறி, ஈ. மார்ஸ்டன்(பதி.), மாக்மில்லன் கம்பெனி, எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1908
  63. நன்னெறி, சி.வை. தாமோதரம்பிள்ளை(பதி.), மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1909
  64. நன்னெறி மூலமும் உரையும், சி. குமாரசாமி நாயுடு சன்ஸ்,சென்னை, 1943
  65. நன்னெறி உரையுடன், ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1962
  66. நன்னெறி உரையுடன், ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 6ம் பதிப்பு, 1972
  67. நால்வர் நான்மணிமாலை உரையுடன், முருகேச முதலியார்(உரை), ஊ. புஷ்பரதஞ் செட்டியார், கலாரத்னாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1878
  68. நால்வர் நான்மணிமாலை விருத்தியுரையுடன், இராமலிங்க சுவாமிகள்(உரை), ஆறுமுக விலாச அச்சுக்கூடம், சென்னை, 1896
  69. நால்வர் நான்மணிமாலை உரையுடன், ச. சிவகாமி அம்மையார்(உரை), மாதர் கழகம், தூத்துக்குடி, 1950
  70. நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள் (விருத்தியுரை), தருமையாதீன  வெளியீடு, தருமபுரம், முதற்பதிப்பு 1955, இரண்டாம் பதிப்பு 1973
  71. நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள்(விருத்தியுரை), செந்தமிழ் நூற்பதிப்புக்கழக வெளியீடு, சிதம்பரம், 1962
  72. நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள்(விருத்தியுரை), திருஐயன்பெருமாள் கோனார்(பதி.), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1966
  73. நால்வர் நான்மணிமாலை, குமரன் செந்தமிழ் நூற்கழக வெளியீடு, 1970
  74. நால்வர் நான்மணிமாலை, திருஞானசம்பந்தர் கம்பெனி வெளியீடு, சென்னை, 1995
  75. நால்வர் நான்மணிமாலை உரையுடன், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1995
  76. நால்வர் நான்மணிமாலை, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை
  77. நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில் மூலமும் உரையும், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1967
  78. நிரஞ்சனமாலை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1990
  79. பழமலையந்தாதி, ஊ. புஷ்பரதஞ் செட்டியார்(பதி.), கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 1868
  80. பழமலையந்தாதி மூலமும் உரையும், அருணாசல குருக்கள்(உரை), லக்ஷ்மி விலாச சாலை, 1871
  81. பிட்சாடன நவமணிமாலை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1873
  82. பிட்சாடன நவமணிமாலை, வி. சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
  83. பிட்சாடன நவமணிமாலை, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை
  84. ஸ்ரீபிட்சாடன நவமணிமாலை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1996
  85. பிரபுலிங்க ல¦லை, இராமசாமி சுவாமியார்(பதி.), ஜீவரட்சாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1830
  86. பிரபுலிங்க ல¦லை, கல்வி விளக்கம் பிரஸ், சென்னை, 1846 
  87. பிரபுலிங்க ல¦லை உரையுடன், கந்தசாமி ஐயர்(உரை),& சரவணப் பெருமாளையர்(உரை), கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1847
  88. பிரபுலிங்க ல¦லை, ஆறுமுக நாவலர்(பதி.), 1864
  89. பிரபுலிங்க ல¦லை, ஏழுமலைப்பிள்ளை(பதி.), 1875
  90. பிரபுலிங்க ல¦லை, ஏழுமலைப்பிள்ளை(பதி.), 1882
  91. பிரபுலிங்க ல¦லை, பாரிப்பாக்கம் முனியப்ப முதலியார்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1875
  92. பிரபுலிங்க ல¦லை, சரவண பண்டிதர்(பதி.), 1880
  93. பிரபுலிங்க ல¦லை, சுப்பராய நாயக்கர்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1882
  94. பிரபுலிங்க ல¦லை, அ. சச்சிதானந்தம் பிள்ளை(பதி.), சென்ட்ரல் பிரஸ், சென்னை, 1885
  95. பிரபுலிங்க ல¦லை, டி, முருகேச முதலியார்(பதி.), சென்ட்ரல் பிரஸ், சென்னை, 1885
  96. பிரபுலிங்க ல¦லை, கண்ணலூர் கிருஷ்ணப்பச் செட்டியார்(பதி.), சகலகலா நிலைய அச்சுக்கூடம், சென்னை, 1888
  97. பிரபுலிங்க ல¦லை, நாராயண சரணர்(பதி.), ஸ்ரீகிருஷ்ண விலாச அச்சியந்திர சாலை, தஞ்சை, 1899
  98. பிரபுலிங்க ல¦லை, சொக்கலிங்க முதலியார்(பதி.), 1900
  99. பிரபுலிங்க ல¦லை, சாம்பசிவம் பிள்ளை(பதி.), 1901
  100. பிரபுலிங்க ல¦லை விருத்தியுரையுடன், ஈசூர் கணக்கு சச்சிதானந்தம் பிள்ளை (விருத்தியுரை), ஸ்ரீசச்சிதாநந்த சுவாமிகள் தர்மபரிபாலன சபை வெளியீடு, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1905
  101. பிரபுலிங்க ல¦லை உரையுடன், கந்தசாமி ஐயர்(உரை), கல்வி விளக்கம் பிரஸ், சென்னை, 1906
  102. பிரபுலிங்க ல¦லை குறிப்புரையுடன், யாழ்ப்பாணம் நா. கதிரவேல் பிள்ளை (குறிப்புரை), வித்தியாரத்தினாகர அச்சுக்கூடம், சென்னை, 1909
  103. பிரபுலிங்க ல¦லை, டி.சி. பார்த்தசாரதி(குறிப்புரை), பூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1930
  104. பிரபுலிங்க ல¦லை மூலமும் உரையும்-பகுதி 1, எஸ். துரைசாமி ஐயர்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1950
  105. பிரபுலிங்க ல¦லை மூலமும் உரையும்-பகுதி 2, எஸ். துரைசாமி ஐயர்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1953
  106. பிரபுலிங்க ல¦லை, சு.அ. இராமசாமிப் புலவர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1954, மறுபதிப்புகள் 1961, 1963, 1966, 1969, 1974
  107. பிரபுலிங்க ல¦லை, ருக்மணி அம்மையார்(பதி.), ஆதிசேஷ ஐயர் வெளியீடு, 1975
  108. பெரியநாயகியம்மை கலித்துறை, ஆறுமுக நாவலர் (பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1873
  109. பெரியநாயகியம்மை கலித்துறை, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1876
  110. பெரியநாயகியம்மை கலித்துறை, வி.சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
  111. பெரியநாயகியம்மை கலித்துறை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1995
  112. பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 3ம் பதிப்பு, 1873
  113. பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், வி. சுந்தர முதலியார் (பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
  114. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும, அருணாச்சல சுவாமிகள்(உரை), பாரிப்பாக்கம் முனியப்ப முதலியாரது மெய்ஞ்ஞான விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861
  115. வேதாந்த சூளாமணி, அருணாச்சல சுவாமிகள்(பதவுரை), ஈசூர் கணக்கு சச்சிதானந்த பிள்ளை(பொழிப்புரை), த. கோவிந்தசாமி ஆச்சாரியார்(பதி.), சிவாநந்த நிலைய அச்சுக்கூடம், 2ம் பதிப்பு 1882
  116. வேதாந்த சூளாமணி, பிறைசை. அருணாசல சுவாமிகள்(விரிவுரை), கோ. வடிவேலு செட்டியார்(குறிப்புரை), சி.பொ. சுப்பிரமணிய பிள்ளை(பதி.), ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908
  117. வேதாந்த சூடாமணி மூலமும் சந்தோஷதாயிநி உரையும், ஸ்ரீகாசிகாநந்த ஞாநாச்சாரிய சுவாமிகள்(உரை), பூவணநாதர் புத்தகாலயம், மதுரை,.
  118. ஆ.   திரட்டுப் பதிப்பு
  119. இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள் (பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1885
  120. இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், வி. சுந்தர முதலியார் (பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
  121. இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள் (பதி.), கலாரத்நாகரஅச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு 1904
  122. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள், சேயூர் ப. கந்தசாமி தம்பிரான் (பதி.), சபா மாணிக்கம் பிள்ளை அச்சுக்கூடம், புதுவை, 1977
  123. சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
  124. சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும், சிவஞானபாலைய சுவாமிகள் வெளியீடு, ஜெகநாதம் பிரஸ், புதுவை, 1934
  125. ஸ்ரீசிவஞானபாலைய தேசிகர் நூற்றிரட்டு, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 2000
  126. சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியாலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
  127. சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு,  1907
  128. ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்திமாலைத் திரட்டு, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1999
  129. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சு. இராமசாமிப் புலவர் (விளக்கக்குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1972
  130. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சு. இராமசாமிப் புலவர் (விளக்கக்குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,  மறுபதிப்பு 1978
  131. சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள், மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, ஸ்ரீஷண்முக அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர், 1944
  132. சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு, சுவாமிநாத பண்டிதர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1916
  133. சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு, சுவாமிநாத பண்டிதர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மறுபதிப்பு 1941
  134. சோணசைல மாலை, சிவநாம மகிமை உரையுடன், க.வ. திருவேங்கட நாயுடு (உரை), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1899
  135. சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, நன்னெறி, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1993
  136. சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1885
  137. சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
  138. திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
  139. திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
  140. நன்னெறி-மூதுரை-நல்வழி, அண்ணாசாமி முதலியார்(பதி.), ஆ.ம.து.வே. ஆரியர் முத்தமிழ் வாணி பீடம் பிரஸ், சென்னை, 1869
  141. நன்னெறி-வாக்குண்டாம்-நல்வழி, டி. பரசுராம முதலியார்(பதி.), பரப்பிரம்ம முத்திராசாலை, சென்னை, 1874
  142. நன்னெறி-மூதுரை-நல்வழி, பி.எஸ். கிருஷ்ணசாமிப் பிள்ளை(பதி.), சென்னை, 1875
  143. நன்னெறி(நீதிமஞ்சரித் திறவுகோல்), பு. தெய்வசிகாமணி முதலியார்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1877
  144. நன்னெறி (செய்யுள் திரட்டு), த. செய்யப் முதலியார்(பதி.), ஸ்ரீநிதி பிரஸ், சென்னை, 1878
  145. நன்னெறி (நீதி மஞ்சரித் தருப்பணம்), முருகேச முதலியார்  & ஊ. புஷ்பரதஞ் செட்டியார்(பதி.), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1879
  146. நன்னெறி (நீதிநூற்றிரட்டு), பு.பெ. கிருஷ்ணசாமி நாயகர் & நமசிவாயம் பிள்ளை (பதி.), பரப்பிரம்ம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1879
  147. நன்னெறி மூலமும் உரையும் (வாக்குண்டாம், நல்வழி), சுப்பிரமணிய சுவாமி (பதி.), மாதவ நிவாச அச்சுக்கூடம், சென்னை, 1883
  148. நன்னெறி (நீதி மஞ்சரி), நமசிவாயம்பிள்ளை(உரை), மதராஸ் ஸ்கூல் புக் அண்ட் லிட்ரரி சொசைட்டி, சென்னை, 1884
  149. நன்னெறி (நீதி மஞ்சரி), நவசிவாயம் பிள்ளை(உரை), கல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை, 1885
  150. நால்வர் நான்மணிமாலை முதலியன, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1876
  151. நால்வர் நான்மணிமாலை முதலியன, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானு பாலன யந்திரசாலை, சென்னை, 1872 & 1873
  152. நால்வர் நான்மணிமாலை முதலியன, வ. சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
  153. நால்வர் நான்மணிமாலை முதலியன, சதாசிவம் பிள்ளை(பதி.), 1909
  154. பழமலையந்தாதி - திருப்புகலூரந்தாதி-தில்லைக் கலம்பகம் மூலமும் உரையும், நெற்குன்றவான முதலியார் & அருணாசல குருக்கள்(பதி.), லக்ஷ்மி விலாசபிரஸ், 
  155. ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் கீர்த்திமாலைத் திரட்டு, 






சித்தார்த்த 'சே' குவேரா சிறுகதைகளின் உள்ளடக்கம்

'கண்ணில் தெரியுது வானம்' (2001) எனும் தொகுப்பு நூலில் சித்தார்த்த 'சே' குவேரா அவர்களின் சிறுகதைகள் நான்கு (பக்.463-498) இடம்பெற்றுள்ளன.  இவற்றில் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகள் மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாக அமைகிறது.  இச்சிறுகதைகளின் அமைப்பு, பாத்திர அமைப்பு, மொழியமைப்பு, குவேராவின் மனநிலை, அமெரிக்கரின் மனநிலை, அமெரிக்கச் சிகை சிரைப்பு நிலைய அமைப்பு, குவேராவின் தத்துவக் கருத்துகள், குவேராவின் உவமைகள், குவேராவின் காக்கையாராய்ச்சி என்பன பற்றியெல்லாம் இங்கு ஆராயப்பெறுகின்றது.

கதை அமைப்பு

குவேராவின் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகளும் தன்னுணர்வுச் சிறுகதைகளாகத் திகழ்கின்றன.  அதாவது, ஆசிரியர் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாகவே இக்கதைகள் அமைந்திருக்கின்றன எனலாம்.  பள்ளிப் பருவம் முதல் 'காகங்கள்' எனும் கதை எழுதத் தொடங்கும் காலம் வரை 'காக்கை'கள் குறித்துத் தாம் ஆராய்ந்து குறித்து வைத்திருந்த ஆராய்ச்சிக் கருத்துகளின் தொகுப்பாக 'காகங்கள்' அமைந்துள்ளது.  ஒருமுறை சிகை சிரைப்பு நிலையத்திற்குச் சென்று சிகை சிரைப்பு செய்துகொண்டு வீடு திரும்பும் வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக 'சிகை சிரைப்பு' அமைந்துள்ளது.  எட்டு வயதில் எழுதத் தொடங்கி சிறந்த எழுத்தாளனாகத் தன்னை உலகு ஏற்றுக்கொண்டது வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக 'தோற்பை' அமைந்துள்ளது. 

பாத்திர அமைப்பு

குவேராவின் சிறுகதைகளில் ஆசிரியர் தாமே ஒரு பாத்திரமாக நின்று செயல்பட்டு இருக்கின்றார்.  இவரின் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகளும் தன்னுணர்வுக் கதைகளாகத் தமிழுலகில் வளம் வந்திருக்கின்றன.

காகங்கள்                - குவேரா மற்றும் காக்கை
சிகை சிரைப்பு -       குவேரா, குவேராவின் மனைவி, குவேராவின்                                                                      நண்பன் 'பில்', சிகை சிரைப்புக்காரர் 'பாபா                                                                       பொயிட்'
தோற்பை   - குவேரா மற்றும் 'பெட்டிக்கடை' எழுத்தாளர்
என்ற வகையில் பாத்திரங்கள் அமைந்துள்ளன.  இப்பாத்திரங்கள் அனைத்தும் குவேராவை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன எனலாம்.  இம்முறையினை இவரின் ஒவ்வொரு சிறுகதையிலும் காணமுடிகிறது.  குவேராவைத் தவிர வேறு பாத்திரங்கள் இருந்தாலும் அப்பாத்திரங்கள் அனைத்தும் குவேரா கதை சொல்லும் வாயிலாகவே வெளிப்படுகின்றார்.  உரையாடலில் எவரும் இடம்பெறவில்லை.

குவேராவின் மனநிலை

காகங்கள் எதற்காகப் பறக்கின்றன? ஒற்றை இலக்கக் காகத்தின் நிலை என்ன? காகங்கள் கரைவதின் நோக்கம் யாது? அதன் உணவுமுறை எப்படி? பறப்பும் நடப்பும், இரையும் இறையும், காகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் போன்றவற்றையெல்லாம் காக்கையோடு பரிமாறிக்கொண்டிருந்த குவேரா இறுதியில் 'போய் வருகிறேன்' என்று விடைபெறும் போது, அக்காக்கை இதுவரை தன்னுடன் பழகிய நினைவு சிறிதும் இல்லாமல் தான் கவ்வி வைத்திருந்த இரையை உண்ணுவதிலேயே குறியாக இருந்தது.  இதனைக் குவேரா அவர்கள், "போய் வருகிறேன் என்று அக்காக்கையிடம் சொன்னேன்.  குரல் மதித்து, என் கூற்றுக்குப் பதில் அது சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை.  அந்தப் பொழுதிலே, அதற்கு நான் ஒரு கடந்த காலத்தில் 'கா' அரிசிக் காக்கை.  முற்கணம் அழிக்கப்பட்ட புதுக்கரும்பலகை இக்கணப் புத்தி.  அதிலே ஒரு செத்த மண்புழுவின் சிதிலச் சதை மட்டும் 'வா வா' என்றரற்றிச் சுற்றிச் சுழன்றுகொண்டு" (பக்.468) என்று கூறுகிறார்.  அன்றையிலிருந்து காகங்களைப் பற்றி உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்பெழுதிக் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டு வேறு சிந்தனையில் ஈடுபட்டேன் என்றும் கூறுகின்றார்.

காகங்கள் இரையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க மனிதனாகிய நாம் மட்டும் ஏன் இரையில் மட்டும் குறிக்கோளின்றி அலைகின்றோம் என்று ஆராயத் தொடங்குகின்றார்.  தன்னைப் புறக்கணித்த காக்கையைத் தானும் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தவர், மனதில் 'காக்கையைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் தம்முடைய பழைய நினைவலைகள் வரத்தான் செய்கின்றன' என்று கூறுவதிலிருந்து அவரின் மனித மனம் வெளிப்படுகின்றது.

ஒருமுறை குவேரா சிகை சிரைப்பு நிலையத்திற்குச் சென்று, சிகை சிரைப்பு செய்து கொள்கிறார்.  அப்போது வெட்டுக்கூலி பன்னிரண்டு டொலர் என்றதும், 'நண்பர்க்குப் பாத்து; எனக்குப் பன்னிரண்டா' என்று அதிர்ச்சி அடைகின்றார்.  நாம் அயல்நாட்டுக்காரர், வேற்றினத்தவர் என்பதற்காக பாபாபொயிட் நம்மிடம் கூடுதலாக இரண்டு டொலர் கேட்கிறார் என்று நினைத்து டிப்ஸ் கொடுக்காமல் வெட்டுக்கூலி மட்டும் கொடுத்துவிட்டு வெளியேறுகின்றார்.  வெளியில் அறிவிப்புப் பலகையில் 'தை மாதம் முதல் வெட்டுக்கூலி இரண்டு டொலர் அதிகப்பட்டிருக்கின்றது' என்று கண்ட குவேரா மனவேதனை அடைகின்றார்.  டிப்ஸ் இரண்டு டொலர் கொடுக்காமல் வந்துவிட்டோமே, பாபாபொயிட் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று குமுறுகின்றார்.  இதனை விடுவித்துக்கொள்ளாத குவேரா அடுத்த முறை சிகை சிரைக்க பாபாபொயிட்டிடம் செல்லாமல் வேறொருவரிடம் சென்று சிகை சிரைத்துக்கொண்டதைப் பார்க்கும் போது குவேராவின் மனம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணரமுடிகிறது.

அமெரிக்கரின் மனநிலை

குவேராவின் சிறுகதைகளில் அமெரிக்கரின் மனநிலை படம்பிடித்துக் காட்டப்பெற்று உள்ளது.  பாபாபொயிட் மற்றும் பில் ஆகியோரின் மனநிலை 'சிகை சிரைப்பில்' தெளிவாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  பாபாபொயிட் குவேராவை 'வருக, கதிரையிலே (இருக்கை) அமர்ந்திருந்து பத்திரிகை காண்க' என்பதிலிருந்து சிகை சிரைப்பு நிலையத்திற்கு வருகை தருவோரை வரவேற்கும் பாபாபொயிட்டின் அன்புமனம் வெளிப்படுகிறது.  "அதிகமா, குறைவா, இடையா?" என்று முடியினைக் குறைக்க வேண்டிய அளவினைக் கேட்கும் பாபாபொயிட், வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்படும் விதம் புலப்படுகிறது.

மேலும், சிகை சிரைக்க 'பில்' வெட்டுக்கூலி பத்து டொலரும் டிப்ஸ் இரண்டு டொலரும் கொடுத்துச் சென்றதைக் கண்டவர், தனக்கு வெட்டுக்கூலி பன்னிரண்டு டொலர் என்று சொன்னதும், "நான் இந்த நாட்டுக்காரன் இல்லை என்பதை அறிந்து கிழவர் என்னை ஏமாற்றுகிறாரா அல்லது என் நிறத்துக்காக எனக்கு மட்டும் இந்த கூலியா?" என்று நினைத்த குவேரா வெட்டுக்கூலி மட்டும் கொடுக்க, அதை மனம் கோணாமல் வாங்கி, "மேசை இழுப்பறைக்குள்ளே வைத்துவிட்டு, அடுத்து, காத்திருந்தவரை அழைத்தது, நான் நடக்கும் திசையிலே இருக்கும் கண்ணாடியிலே தெளிவாகத் தெரிந்தது" என்பதைப் பார்க்கும் போது டிப்ஸ்க்காக ஏங்கும் மனிதர் பாபாபொயிட் இல்லை என்று சுட்டப்பெற்றிருப்பதை உணர முடிகின்றது.

சிகை சிரைப்புக் கூலி ஏற்றப்பட்டிருப்பதைக் கண்ட குவேரா மனம் நொந்தார்.  என்றாலும் 'பில்'லுக்குப் பத்து டொலர் தனக்குப் பன்னிரண்டு டொலர் என்றதும் டிப்ஸ் கொடுக்காததற்குச் சமாதானம் அடைகிறார்.  மறுநாள் குவேரா 'பில்'லைப் பார்த்துச் சிகை சிரைப்புக் கூலி நீ குறைத்துக் கொடுத்தது தவறல்லவா என்று கேட்க, 'பில்'லோ நான் குறைத்துக் கொடுக்கவில்லை பழைய பாக்கியை இந்த முறை கழித்துக்கொண்டேன் என்கிறார்.  அமெரிக்கர் பண வகையறாவில் சரியாக இருப்பவர்கள் என்பது இதனால் வெளிப்படுகிறது.

அமெரிக்கர் எவரும் முத்தம் இட்டுக்கொள்வதை அருவெறுப்பாக நினைப்பது இல்லை.  மாறாக, முத்தமிட்டுக்கொள்வதில் அதிக ஆர்வமிக்கவர்களாக இருக்கிறார்கள்.  இன்னொருவருடைய எச்சில் தாம் எடுத்துக்கொள்கின்றோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாதவர்கள்,  "ரொட்டித் துண்டைக் கொத்தித் திண்ணும் காகங்கள் மற்றதின் எச்சில் உள்ளதே என்று நினைப்பதில்லை.  அதுபோலத்தான் நாங்களும் அன்பைப் பரிமாறிக்கொள்ள வாய்முத்தம் இட்டுக்கொள்கின்றோம்"(ப.464) என்னும் குவேராவின் கூற்று அமெரிக்கரின் முத்தமிட்டுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்காவில் சிகையலங்கார நிலையம்

நமது நாட்டில் சிகை அலங்கார நிலையங்கள் இருப்பது போலவே அமெரிக்க நாட்டிலும் அமைந்திருக்கின்றது என்பதைக் குவேராவின் 'சிகை சிரைப்பு' எனும் கதை வாயிலாக அறியமுடிகிறது.  இதனைக் குவேரா பின்வருமாறு சுட்டுகின்றார்.

"கடை, நடைபாதைத் தாழ்வாரத்துக்கு வலது புறமாக, இரண்டு பிரிவுகளாகத் தடுப்பினாலே பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதலாவது (வயதுபோன) பெண்களுக்கு......... அடுத்ததாக, ஆடவருக்கானது ......... மேசையிலே மாசிகையும் தாளிகையும் மாதமிரு பத்திரிகையும் அறுபதாம் ஆண்டிலிருந்து முந்தாநாள் வரைக்குமாக தொடர்ச்சியில்லாது, இலவச 'ஒன்றெடுத்தால் இரண்டு இனாம்' போட்டிக் கட்டங்கள் கத்தரிக்கோலே படாது கைவரிசைக்குக் கிழிக்கப்பட்டு, பின்னர், நிலம் முழுவதும் மயிரிடையே, இராணுவம் புகுந்து சோதனை செய்த வீட்டுப்பொருட்களாக எறிந்துகிடந்தன. 'நஷனல் எஸ்குயரர், த குளோப், தஸ்ரார், «உறாம் கார்டினிங் செவன்ரீன், ஸாரா பெர்குஸ்ஸன் அன்ருவின் மார்பகம் வெனீஸ் ஓடத்திலே வெளிச்சத்திலே வெண்மையாகத் தெரிகின்றது' போன்ற படங்கள் கண்ணாடி போட்டு மாட்டப்பெற்றிருந்தன.  மேலும் வானொலியில் லூயிஸ் ஆம்ஸ்ரோங்கின் 'ஜாஸ்' குரலிலே ஒலித்துக்கொண்டிருந்தது ............... கிறிஸ்மஸுக்கு வைத்த மரம் இன்னமும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் கழற்றப்படாமலே ஒரு மூலையிலே சாத்திக் கிடந்தது ......... அறை முழுவதும், ஐம்பது அறுபதாம் ஆண்டுக் காலப் பாடர்களினது படங்கள், கறுப்பர்-வௌ¢ளையர் பேதமில்லாது, கண்ணாடி தவிர்த்த அனைத்துப் பிரதேசங்களிலும் பெரிய அளவுகளிலே ஒட்டப்பட்டிருந்தன".  இவற்றையெல்லாம் படிக்கும் போது நம்நாட்டுச் சிகையலங்கார நிலையத்தைப் பற்றிய உணர்வு ஏற்படுவதை உணரலாம்.

குவேராவின் தத்துவங்கள்

குவேராவின் சிறுகதைகளில் பல தத்துவக் கருத்துகள் இடம்பெற்றிருக் கின்றன.  அவற்றுள் சில:-
  • அழுக்கு மூட்டையைச் சுமந்தாற்றான் வெளுக்க முடிகின்றது.  அழுக்கு நீரை   வடித்தாற்றான், துலக்க முடிகின்றது (ப.464)
  • பறப்பும் நடப்பும் ஒரே காரியத்தினைச்செய்து முடிப்பதற்கான வெவ்வேறு செயலூடங்கள்.  ஒரு காக்கை தத்திச் சென்றும் இன்னொரு காக்கை இறகெத்தி, இறங்கி, கொத்திச் செல்வதும் இயல்பு.  இதிலே எத்துணை இலகுவாக இரையைக் கௌவிக்கொள்கின்றதுதான் முக்கியம் (ப.466)
  • எந்த இடமும் வாழ்வசதி கூடினால், தேவைப்படின், எந்த உயிரியினதும் இருப்பிடமாகக் கூடும் (ப.467)  
  • சில நோய்கள் பெண்களுக்கு வராது.  ஆனால், அவர்களின் மரபணுக்களூடாக, ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் (ப.470)
  • எந்தப் படைப்புக்கும் அதன் படைப்பாளியின் நோக்குக்கு அப்பாலும் அவன் அறியாத பல பயன்பாடுகள் உண்டு (ப.486)
  • தீவிரமாக வாசிப்பது, எழுதுவதிலும்விட மிகவும் அதிகப் படியான படைப்புத் தன்மை வாய்தது (ப.483)
  • உன்னளவிலே உன் எழுத்தின் தரத்தைக் கண்டுகொள்ள, ஓரிரண்டு வாரம் எழுதுமுன் சிந்தனையை ஊறப்போடு, நீருக்கும் ஆகாரத்துக்கும் மலமூத்திரத்துக்குமாய் வேண்டி நிறுத்தாமல் எழுது, எழுதியபின் எழுதியதை ஊறப்போடு ...... ஊறப் போட்டதை அந்த எழுத்துக்கான உன் உத்வேகம் வடிந்தபின்னர் வாசி.  அப்போதும் அஃது எழுத்துத்தான் என்று உனக்குப்பட்டால், அஃது எழுத்துத்தான் (ப.488)
  • எழுத்தாளன் வாழும்போது கிடைக்காத மரியாதை, அவனது மறைவிற்குப் பிறகே பெரும்பாலும் கிடைக்கின்றது (ப.485)
  • பலரின் உற்சாகமான பாராட்டுக் கிடைக்காமல் இருப்பதும் குறை கூறலும் கருத்துக்கள் வெளிவராமலே இருப்பதுவும் உனது எழுத்து எந்தளவுக்கு நீ தரமாக எழுதிக்கொண்டிருக்கின்றாய் என்பதற்கு ஓர் அறிகுறி (ப.489)
  • உன் படைப்பு கிணற்றில் போட்ட கல்லாயிருப்பதும் எழுத்துலகிலே உனக்கான இடத்தை நீ பிடித்துவிட்டாய் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி (ப.489)
  • பேசுகின்ற வாசகரோடு அவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஊடாடிக் கருத்தைப் பதியவைக்கின்றதே மகிழ்வூட்டும் கலையின் நோக்கு இதுபோன்ற தத்துவக் கருத்துகள் குவேராவின் சிறுகதைகளில் நிரம்பக் கிடக்கின்றன.  இவற்றினைப் பார்க்கும் போது குவேரா ஒரு தத்துவ ஆசிரியராக இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.


குவேரா கதைகளில் உவமை

குவேரா சிறுகதைகளில் சில உவமைகளும் இடம்பெற்றிருக்கின்றன.  அவையாவன,

  • கரையில் வந்தடிக்கும் ஆற்றடைசல் (ப.465)
  • நீர் நிலைத்துத் தூங்கிய குளத்திலிட்ட ஒற்றைக் கூழாங்கல் எழுப்பிப் பரப்பும் ஒரு தொகுதிச் சலன வட்டம் (ப.468)
  • வேலையில்லாத வேலிக்கு சாட்சிசொல்ல வாலில்லாத ஓணான்கள் (ப.471)
  • இருக்கும் இடத்திற்கேற்ப கட்டிடம் எழுப்பும் கொத்தனார் (ப.484)

இதுபோன்ற உவமைகள் குவேராவின் சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.

குவேராவின் காக்கையாராய்ச்சி

காக்கையோடு தாம் நிகழ்த்திய ஆராய்ச்சி முடிவுகளைக் 'காகங்கள்' என்னும் சிறுகதை வாயிலாகப் பலவிடங்களில் வெளிப்படுத்துகின்றார்.  அவ்வாராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு:-
  • காகங்கள் மற்ற காகங்களின் எச்சில்களுக்காக வெட்கப்பட்டுக் கொள்கிறதில்லை.
  • காகங்கள் இரைக்காகப் பறக்கின்றனவா, அல்லது பறக்கின்றதற்காக இரையை ஓர் எய்-இலக்காக எண்ணிக் குறிக்கின்றனவா?
  • காகங்கள் தமக்குப் பெயரிட்டுக் கொள்கின்றவை இல்லை.
  • காகங்கள் பெருமூச்சு விடக்கூடியவை.
  • காகங்கள் அருகருகே இல்லாத பட்சத்திலே, அடுத்ததன் இருப்பையும் இல்லாமையையும் பற்றி ஏதும் குறைவாகவோ நிறைவாகவோ பேசிக்கொள்வதில்லை.
  • காகங்கள் எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பேசிக்கொள்கின்றன என்கின்றதால், தம் இருப்பிற்கான ஏற்பாடுகளை மட்டுமே பேசிக்கொள்கின்றன.
  • தமது தொழிலின் நெளிவு சுழிவுகளை மாற்று உயிரினம் ஒன்று கற்றுத் தெளிவதை மானுடர்கள் போலவே காகங்களும் கூட விரும்புவதில்லை.
  • ஒற்றைப்பட காகவுயிரிகள், தனிப்படவே ஒதுக்கப்பட்டு வாழ்வது வழக்கம்.
  • மூன்று காகங்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பட்சத்திலே, அருகிலிருக்கும் காகம் 'கா' என்றும், அதற்கடுத்த காகம் 'காகா' என்றும் சொல்லிக் கொள்ளப்படும்.  அந்தக் காகங்கள் அடுத்த கணத்திலே ஒரு சிறுவனின் கல்லெறிக்குப் பயந்து, கிளையிலே இடம்மாறிக் கொள்ளும் கணத்திலே 'கா' எனப்பட்ட காகம் 'காகா' எனவும், மற்றது  'கா' எனவும் அழைக்கப்படலாம்.


இதுபோன்ற ஆராய்ச்சிக் கருத்துகளைக் காணும் போது குவேரா ஓர் சிறந்த ஆராய்சியாளராக இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

குவேராவின் மொழியமைப்பு

குவேராவின் சிறுகதைகளில் அமைந்துள்ள மொழிநடைக்கு ஒரு சிறப்புண்டு. வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.  இதனை யமுனா ராஜேந்திரன் அவர்கள், "இசைக் குறிகளின் இடையில் உறைந்திருக்கும் மௌனகதை ஊடறுப்பதில் தோன்றும் லயம் போல் அவரது மொழி மென்மேலாக மன அடுக்குகளாக விரிகிறது" (கண்ணில் தெரியுது வானம், ப.462) என்கின்றார்.  இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, "கடைசி நேரத்திலே, அவரின் சிறுநீரகக் கோளாறு காரணமாக, செயற்கை முறையிலே உடற்கழிநீர் வெளியேற்றம் அவருக்கு நிகழ்ந்து கொண்டிருந்தபோது, வைத்தியசாலையில் அவரைச் சந்திக்க நான் சென்றிருந்த போது, ஏதோ சிறு செலவுக்குப் பணம் நான்தான் தந்திருந்தேன் என்கின்றதை அவரின் சிறுமகள் அவரிடம் பதட்டத்திலே, நான் இருக்கும்போதே கூறிவிட்டாள்" (ப.485) என்ற தொடரால் இவரின் மொழியமைப்பு பற்றித் தெளிவாக உணரலாம்.

முடிவுரை

குவேராவின் சிறுகதைகளில் குவேராவை முழுவதுமாகக் காணமுடிகிறது.  இவரின் சிறுகதைகள் ஒருமுறை மட்டும் படித்தால் புரியக்கூடியதல்ல.  பலமுறை படித்துப் படித்துத்தான் மனதில் நிறுத்த முடிகிறது.  குவேராவின் சிறுகதைகளில் தன்னையொரு ஆராய்ச்சியாளராகவும், தத்துவ ஆசிரியராகவும், நிகழ்காலத்தைப் படம் பிடிக்கும் ஒளியூடகராகவும் விளக்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.