திங்கள், 1 அக்டோபர், 2018

சிறுத்தொண்டன் கதை - வில்லுப்பாட்டு

இலக்கியங்களை இரண்டாக்கி செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் எனப் பிரிப்பர்.  இவ்விரு இலக்கியங்களும் காலங் காலமாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாகவே இருக்கின்றன. நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து செவ்விலக்கியங்கள் (இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற் புராணம், திருத்தொண்டர் புராணம், அரிச்சந்திர புராணம்) முகிழ்ந்ததையும்; செவ்விலக்கியங்களில் இருந்து நாட்டுப்புறக் கூறுகள் (அம்மானை, கும்மி, சிந்து, குறவஞ்சி, தாலாட்டு, நாடகம், பள்ளு, வில்லுப்பாட்டு) முகிழ்ந்ததையும் முகிழ்வதையும் காண்கின்றோம்.    கோவலன் - கண்ணகி - மாதவி ஆகியோரின் கதையைக் குன்றக் குறவர்கள் கூறக்கேட்ட இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரம்' என்னும் அழியாக் காவியம் ஒன்றைப் படைத்துள்ளார்.  இவ்வாறே, நாட்டு மக்களின் வாய்மொழியாக வழங்கிவந்த இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளும் தகுதி மிக்கவர்களால் காப்பியமாக ஆக்கப் பெற்றிருக்கின்றன எனலாம்.  நாயன்மார்களின் சிறுகுறிப்பான திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதியைக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் 'திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்' பாடியருளினார்.

ஏட்டுருவம் பெற்ற இக்கதைகள் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  எனவேதான் இக்கதைகளுள் வரும் துணைக் கதைகள் நாட்டு மக்களிடையே தனிக் கதைகளாக உருவெடுத்து வளர்ந்துள்ளதைக் காணமுடிகிறது.  குறிப்பாக கோவலன் கதை, இராமாயணக் கதை, அரிச்சந்திரன் கதை, மகாபாரதக் கதை, நளன் கதை என உரைநடையாக இக்கதைகளை வார்த்தெடுத்துள்ளனர் எனலாம்.

இக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு நம் புலவர் பெருமக்கள் சிற்றிலக்கிய வகைகளில் பல நூல்களைப் பாடியுள்ளனர்.  அவ்வகையில் தருமர் அசுவமேத யாகம், அரிச்சந்திரன் அம்மானை, அரிச்சந்திரன் கும்மி, இராமாயண அம்மானை, இராமாயணக் கும்மி, இராமாயணக் கண்ணி, இராமாயணச் சிந்து, இராமாயணப் பதம், இராமாயண கௌஸ்துபம், இராமாயண வில்லுப்பாட்டு, இராமாயண வெண்பா, பாரத அம்மானை, மாவிந்தம், பாரத வெண்பா, திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணச் சாரம், திருத்தொண்டர் அகவல், திருத்தொண்டர் அடிமைத்திறம், திருத்தொண்டர் சதகம், திருத்தொண்டர் திருநாமக்கோவை, திருத்தொண்டர் தோத்திரப்பா, திருத்தொண்டர் மாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இப் பெருங்கதைகளுக்குள் இடம்பெற்றிருக்கும் காப்பிய நாயகர்களைக் கொண்டும், புராண நாயகர்களைக் கொண்டும் இலக்கிய வகைகள் முகிழ்ந்திருக்கின்றன.  அவ்வகையில் நளதமயந்தி கும்மி, நளன் அம்மானை, அல்லி அரசாணி மாலை, அல்லி அரசாணி அம்மானை, அல்லி அரசாணி ஊஞ்சல், ஆரவல்லி அம்மானை, இரணியன்வதைப் பரணி, திருஞானசம்பந்தர் ஆனந்தக் களிப்பு, திருஞானசம்பந்தர் தாலாட்டு, திருஞானசம்பந்தர் துதி, திருஞானசம்பந்தர் தோத்திரக் கீர்த்தனை, திருஞானசம்பந்தர் பதிகம், திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், திருநீலகண்டர் குறவஞ்சி, திருநீலகண்டர் பள்ளு, சிறுத்தொண்டர் யட்சகானம், சிறுத்தொண்டர் உலா, சிறுத்தொண்டர் கும்மி, சிறுத்தொண்டன் சிந்து, சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இப்படியாக செவ்விலக்கியத்துள் நாட்டுப்புறக் கூறுகளும்; நாட்டுப்புறக் கூற்றைச் செவ்விலக்கியமாக்கும் தன்மைகளும் நம்மிடையே காலந்தோறும் இருந்து வந்துள்ளமையைக் காண்கிறோம்.  தஞ்சை மாவட்டத்து நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டரைப் பற்றிய கதைகள் செவ்விலக்கியங்களாகவும், நாட்டுப்புற இலக்கியங்களாகவும் பல நம்மிடையே இன்று இருக்கின்றமை கண்கூடு.  அதாவது,  திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் அகவல், திருத்தொண்டர் புராணச் சாரம், திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் மாலை ஆகிய செவ்விலக்கிய நூல்களில் சிறுத்தொண்டரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றமையையும்; சிறுத்தொண்டர் கதை, சிறுத்தொண்டர் நாடகம், சிறுத்தொண்டர் யட்சகானம், சிறுத்தொண்டர் கும்மி, சிறுத்தொண்டர் சிந்து, சிறுத்தொண்டர் வில்லுப்பாட்டு ஆகிய நாட்டுப்புற நூல்கள் சிறுத்தொண்டரைப் பற்றிய நூல்களாகவே இருக்கின்றமையையும் காணமுடிகின்றது.  மேற்கூறப்பெற்ற இந்நூல்கள் அனைத்தும் ஓலைச்சுவடியில் எழுதப் பெற்றிருக்கின்றவையே யாகும்.  இந்நூல்கள் பல்வேறு கால காட்டங்களில் பதிப்பிக்கப்பெற்றும் உள்ளன.

புராணச் சிறுத்தொண்டர்

சிறுத்தொண்டரைப் பற்றிச் செவ்விலக்கியங்கள் கூறும் பகுதியைக் காணும் போது நம்முடைய இலக்கிய அருளாளர்களின் கவித்துவம் வெளிப்படுகிறது.  ஒரு நீண்ட வரலாற்றை எப்படியெல்லாம் தொகை-வகை செய்யவேண்டும் என்பதற்கு இதுவொரு சான்றாக அமைதலைக் காணலாம்.  சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையில்,

"செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கும் அடியேன்"

என்றும், நம்மியாண்டார் நம்பிகளது திருத்தொண்டர் திருவந்தாதியில்,

"புலியி னருளுடைப் புண்ணியற் கின்னமுதாத் தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணத்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத்தொண் டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண் செங்காட்டங் குடியவர் மன்னவனே"

என்றும், உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இயற்றியருளிய திருத்தொண்டர் புராணச் சாரத்தில்,

"பல்குமருத்துவர் அதிபர் செங்காட்டங் குடிவாழ்
படைத்தலைவர் அமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்
செல்வமிகு சிறுத்தொடர் காழிநாடன் திருவருள்
சேர்ந்தவர் வளருஞ் சீராளன் தன்னை
நல்குதிரு வெண்காட்டு நங்கை சமைத்திடப்பின்
நன்மதிச் சந்தனத்தாதி தலைக்கறி யிட்டுதவப்
புல்கவரும் வயிரவர்தாம் மகிழ்ந்து மகவருளப்
போற்றியவர் சிவனருளே பொருந்தி னாரே"

என்றும், கயிலைக் குமாரபாரதி அவர்கள் இயற்றிய திருத்தொண்டர் மாலையில்,

"காய்கறி வேறொன்று தொடக்கள்ள வயிரவர்க்கோர்
சேய்கறி செய்திட்டார் 'சிறுத்தொண்டர்' - வாய்க்கினிதாய்,
'இன்னா திரக்கப் படுதலி ரந்தவரின்
இன்முகங் காணு மளவு"

என்றும், சேக்கிழார் சுவாமிகள் யாத்தருளிய திருத்தொண்டர் புராணத்தில், "உருநாட்டுஞ் செயல்காமன் ஒழியவிழி பொழிசெந்தீ" எனத் தொடங்கும் பாடல் தொடங்கி "ஆறுமுடிமேல் அணிந்தவருக் கடியார் என்று கறியமுதா" எனத் தொடங்கும் பாடல் இறுதியாக உள்ள 88 பாடல்களிலும் சிறுத்தொண்டரின் வரலாறு சுட்டப் பெற்றுள்ளமையை அறியலாம்.

சிறுத்தொண்டரின் 'ஊர்'

சோழ நாட்டில் காவிரியின் தென்கரைப் பகுதியில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊர் உள்ளது.  இவ்வூர் நன்னிலம் இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே ஆறு மைல்கல் தொலைவில் அமைந்துள்ளது.  இவ்வூரை 'கணபதீச்சுரம்' என்றும் அழைப்பர்.  சிறுத்தொண்ட நாயனார் திருப்பணி செய்ததும் இவ்வூரே.  இது  கயமுகாசுரனைக் கொன்ற கணபதி பூசித்த தலமாகும்.  கயமுகாசுரன் உதிரம் பெருகிய காடாதலால் செங்காடெனப் பெயர் பெற்று திருச்செங்காட்டங்குடி என்றானது.  தஞ்சை மாவட்டத்தில் இதுபோல் பல புண்ணியத் திருத்தலங்கள் மிகவே உண்டு.  பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் சித்தர்களும் அவதரித்து வாழ்ந்தது இத் தஞ்சை மாவட்டமாகும்.  சிறுத்தொண்ட நாயனார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகின்றார்.  இவருடைய வரலாற்றை மக்கள் நாட்டுப்புறக் கூறுகளோடு இணைத்து - வடித்து இரசித்திருக்கின்றனர்.  நாட்டு மக்களிடையே நாட்டுப் பாடல்களாக வழங்கி வந்து ஏட்டில் எழுதப் பெற்றவற்றுள் குறிப்பிடத்தக்கது 'சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டு' ஆகும்.  நாட்டுப்புறக் கூறுகள்-வகைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, இவர்தம் கதையை எவ்வாறு அமைத்திருக்கின்றது என்பதை இனிக் காண்போம்.

சிறுத்தொண்டன் கதை வில்லுப்பாட்டு

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலந்து, இன்றுவரை நின்று நிலவும் தமிழக நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றே 'வில்லுப்பாட்டு'.  இக்கலைக்கு முதன்மைக் கருவியாக அமைவது வில்.  இதற்குத் துணையாக உடுக்கை, குடம், தாளம், கட்டை ஆகிய கருவிகள் பயன்படுகின்றன.  இக்கருவிகளின் துணையோடு நாட்டுப்புறக் கதைகளை அமைத்துச் சுவையோடு பாடுவது வில்லுப்பாட்டு ஆகும்.  வில்லுப்பாட்டை வில், வில்பாட்டு, வில்லு, வில்லடி, வில்லடிப் பாட்டு, வில்லடிச்சான் பாட்டு என்று பலவாறாக அழைப்பதுண்டு.  இவ்வில்லுப்பாட்டுக் கதைகள் நெடுங்காலமாக வாய்மொழி இலக்கியங்களாகவே வாழ்ந்து வரினும் அருகிய நிலையில் பாமர மக்களின் மொழியறிவுக்கு ஏற்றவாறு ஏடுகளிலும் எழுதி வைக்கப் பெற்றன.  தற்காலம் இவை ஏட்டுச் சுவடிகளாகவும் கையெழுத்துப் படிகளாகவும் காணப்படுகின்றன.  அண்மைக் காலத்தில் சில அச்சு வடிவிலும் வெளிவந்துள்ளன.  இன்னும் பல வில்லுப்பாட்டுக் கதைகள் அச்சேறாமல் இருக்கின்றன.  அவற்றுள் ஒன்றே இச்சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதை.

பா அமைப்பு

நெடுங்காலமாகவே பாமர மக்களிடையே வழங்கி வந்த தெம்மாங்கு, தாலாட்டு, உலக்கைப் பாட்டு, ஒப்பாரி போலும் நாட்டுப்பாடல் வடிவத்தினையே மேற்கொண்டு நெடும்பாட்டாக அமைக்கப்பெற்றவையே வில்லுப்பாட்டுக் கதைகள் எனக் கருதலாம். இருசீர் அடிகள் இரண்டிரண்டாகத் தொகுத்து வர, இரண்டாம் அடியில் அடிமோனை அமைய முதலடி இரண்டாம் சீருக்குப் பின் இசைக்கேற்றவாறு தனிச்சொல் கொண்டு அமைவதான ஓர் பா அமைப்பிலேயே வில்லுப்பாட்டுக் கதைகள் ஆரம்ப காலத்தில் பாடப்பட்டன என அறியமுடிகின்றது.  கால வளர்ச்சியில் இத்தகைய பாடல்களுக்கிடையே கிளிக்கண்ணி, சிந்து, கும்மி, விருத்தம், மகுடி எனப்படும் பாம்பிசை, தரு மற்றும் பல்லவி, சரணம் முதலான அமையும் கீர்த்தனைகள் ஆகிய பல்வேறு பா அமைப்புகள் இடம்பெறலாயின என்கிறார் தி.சி. கோமதிநாயகம் அவர்கள் (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.20).  இச்சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் பாடலமைப்பானது விருத்தம் மற்றும் கண்ணி, சிந்து வகைகளில் அமைந்துள்ளது.  இப்பாடலமைப்பினைக் காணும்போது இச்சுவடியானது அண்மைக் காலத்தில் எழுத்து வடிவம் பெற்றிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

சுவடி அமைப்பு

சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதை எனும் இச்சுவடி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் (சுவடி எண்.1842) பாதுகாக்கப்பெற்று வருகிறது.  47 செ.மீ. நீளமும், 3.5 செ.மீ. அகலமும் கொண்ட இச்சுவடி ஏழு ஏடு - பதினான்கு பக்கங்களைக் கொண்டது.  பக்கத்திற்கு மூன்று பத்தியாகவும் பத்திக்கு எட்டு வரியாகவும் என எழுதப்பட்டுள்ள இச்சுவடி தெளிவான கையெழுத்துடனும் நல்ல நிலையிலும் முழுமையாகவும் இருக்கின்றது.  இச்சுவடியை அச்சிட்டால் ஏறத்தாழ டெம்மி அளவில் 12 பக்கங்கள் வரும்.

சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் வசன நடை எதுவும் இல்லை.  முழுக்க முழுக்க பாடல் அமைப்பிலேயே இக்கதையைச் சுவடியில் எழுதி இருக்கின்றனர்.  வில்லுப்பாட்டில் கதையைக் கூறும் போது இடையிடையே வசன நடை அமைவது இயல்பு.  ஆனால் இக்கதையில் வசன நடை இல்லாமல் இருக்கிறது.  வசன நடையினை வில்லுப் பாட்டுக்காரன் தன்னுடைய கற்பனையில் அமைத்துக் கொள்வதாகலின் சுவடியில் எழுதுவதை விட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.  இதே கருத்தினை தி.ச. கோமதிநாயகம் அவர்கள், "இக்காலத்தில் கிடைக்கப்பெறும் கதைகளை நோக்கினால் அவை இருவகையாக, இடையிடையே உரைநடை அமைந்து நெடும் பாட்டாகக் காணப்படுவனவாகவும் உரைப்பகுதியினை இடையிலே பெறாமல் அமையும் நெடும்பாட்டாகவும் காணப்படுவனவாகவும் உள்ளன. எழுதப்பெற்றுள்ள அல்லது அச்சிடப்பெற்றுள்ள நிலையிலேயே அவை இவ்வாறு காணப்படினும் வில்லடியில் பாட்டாகப் பாடப்பெறும் நிலையில் அவ்வப்போது உரிய உரைவிளக்கங்கள் தரப்பட்டு புலவர்களால் பாடப்படுகின்றன.  எனவே உரைப்பகுதியினைப் புலவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, பாடும்போது இடையே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் அவை வரையறுத்து எழுதப்படாமல் விடப்பட்டன எனக் கொள்ளலாம்.  மேலும், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பாட்டுப் பகுதிகளே என்பதால் அப்பகுதிகளை மட்டும் தொடர்ச்சியாகத் தொகுத்து வைத்துக்கொண்டனர் எனலாம்" (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.19) என்கின்றார்.

சிறுத்தொண்டன் கதையில் கட்டமைப்பு

கதைப்பொருளின் அடிப்படையில் வில்லுப்பாட்டுக் கதைகள் பல்வேறு வகையினவாக அமையினும், அவை அனைத்தும் பொதுவானதோர் கட்டமைப்பினைப் பின்பற்றியே உருவாகியிருத்தலைக் காணலாம்.  அக்கட்டமைப்பு முறையினைக் கீழ்வருமாறு குறிப்பிடுவார் தி.ச. கோமதிநாயகம் அவர்கள்.

1.  காப்பு விருத்தம்
2.  வருபொருள் உரைத்தல்
3.  குருவடி பாடுதல்
4.  அவையடக்கம்
5.  நாட்டுவளம் அல்லது கயிலைக்காட்சி
6.  கதைத்தலைவன் அல்லது தலைவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச்
சுவைகள் பலவும் அமைய எடுத்துக் கூறிக் கதையின் உச்சநிலையில்
அவர்தம் தலைமைச் சிறப்பு மேலோங்கிடுமாறு காட்டி முடித்தல்
7.  வாழி பாடுதல்

என அமையும் (தமிழ் வில்லுப்பாட்டுகள், ப.23) என்பார்.  ஆனால் சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் இம்முறையான கட்டமைப்பு காணமுடியவில்லை.  காப்பைத் தொடர்ந்து போற்றியும், நூலும் தொடங்கி வாழியுடன் முடிவடைகின்றது.  நூலுக்கு முன் ஓரேட்டில் மட்டும் காப்புப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.  இதனை அடுத்து நூல் தொடங்குகின்றது.  இடையில் இருக்க வேண்டிய குருவடி பாடுதல், அவையடக்கம், நாட்டு வளம் அல்லது கயிலைக் காட்சிகள் இடம்பெறவில்லை.  இதற்கு என்ன காரணம் என்று ஆராயும்போது, இக்கதை ஏற்கெனவே பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதும் பெரியபுராணத்துள் இடம்பெற்று இருப்பதுமாகும்.  ஆகவே, இக்கதையை வில்லுப்பாட்டில் எழுதியவர் மேற்காண்பனவற்றை விடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.  வருபொருள் உரைத்தல் மட்டும் காப்புப் பாடலிலேயே சேர்த்திருப்பதைக் காணமுடிகின்றது.

சிறுத்தொண்டன் கதை

சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் வேள்வியாளர் குலத்தில் பரஞ்சோதியார் பிறந்தார்.  இவர் இளமையில் வில் வித்தை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் போன்ற வித்தைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.  சோழ அரசபையில் சேனாபதி பட்டம் வகித்தார். பரஞ்சோதியாரின் படைத்தலைமையில் உத்தரவாதாபியை வென்றுவந்தார். இதனைக் கண்ட சோழமன்னன், மகிழ்ந்து, வியப்பு மேலிட, இத்துஷ்டனை எப்படி இவ்வளவு எளிதில் வென்றீர் என வினவ, மற்ற அமைச்சர்கள் 'இதுவென்ன மன்னா, இவருக்கு ஈசுர கடாக்ஷம் மிகவே உண்டு; ஏறூர்ந்தோனடியருக்கு இவர் எப்பொழுதும் திருத்தொண்டு செய்பவர்' அதனால் இவ்வெற்றி இவருக்கொன்றும் கடினமல்ல என்றனர்.  மேலும் பரஞ்சோதியாரின் புகழை 'நெருப்பினில் புழுப்பற்றுமோ' என்று உயர்த்திக் காட்டினர்.  இதனைக் கேட்ட மன்னன் இறையடியாரின் நிலை தெரியாமல் பிழை செய்துவிட்டேனே என்று வருந்துகின்றார்.  இத்தவற்றுக்கு வழிகால் எதுவோ என நினைத்தவனாய் பரஞ்சோதியாரிடம் மன்னிப்புக் கேட்டு 'நீர் இறையடியவர், இறைவனுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர், தாங்கள் இங்கிருப்பதோ' எனக் கூறி நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து தினந்தினம் இறைத்தொண்டு செய்ய பணித்துக்கொண்டான்.

அதன் பின்னர் பரஞ்சோதியார் வீடு வந்து மகனீச்சரத்தில் குடியிருக்கும் நீலகண்டப் பெருமானை மனத்திலிருத்தி திருவெண்காட்டு நங்கையுடன் திருத்தொண்டு ஆற்றி வரலானார்.  தினமும் சிவனடியார்க்கு அமுதளித்த பின்பே தாமுண்ணும் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாகச் செயலாற்றியும் வரலானார்.  சிவனடியார்களுக்குத் தினந்தினமும் தொண்டு செய்வதால் பரஞ்சோதியார் சிறுத்தொண்டரானார்.  இவ்வாறு இருக்கையில் திருவெண்காட்டு நங்கை இறைவனின் திருவருளால் அழகான ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்து, சீராளன் எனப் பெயரிட்டு அகமகிழ்ந்து வளர்த்து வரலாயினர்.  சீராளனுக்கு ஐந்து வயதான போது ஆசானை அழைத்து சீராளனுக்குக் கல்வி கற்பிக்கச் செய்தனர்.  பரஞ்சோதியாரும் திருவெண்காட்டு நங்கையும் மனமொருமித்து இறைத்தொண்டு புரிந்துவரும் வேளையில், சிவபெருமான் தன்னுடைய இயல்பான வடிவைப் போக்கி பைரவர் வடிவுதாங்கி கயிலைமாமலையினை விட்டு திருச்செங்காட்டங் குடியில் இருக்கும் சிறுத்தொண்டன் இல்லத்திற்கு வருகின்றார்.

அப்போது சிறுத்தொண்டன் வீட்டிலில்லை.  சிவனடியாரை அழைக்க வீட்டைவிட்டுச் சென்றிருந்தார்.  அந்நேரம் சிவனடியார் சிறுத்தொண்டன் வீட்டிற்குமுன் நின்று 'சிறுத்தொண்ட பக்தனைக் காண வந்தோம் அவருண்டோ' என்கின்றார்.  திருவெண்காட்டு நங்கை வெளிப்பட்டு வந்திருந்த சிவனடியாரைப் பார்த்து வணங்கியவள், 'சிவனடியாரை அழைக்கச் சென்றவர் விரைவில் வந்துவிடுவார்.  தாங்கள் இல்லத்துள் வந்து அமுதுண்ண வேண்டும்' என்கிறாள்.  சிவனடியாரோ 'பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குச் செல்லமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்' என்கிறார். அமுதுண்ணாது சிவனடியார் சென்றுவிடுவாரோ என்று எண்ணியவள் 'என்னுடைய மன்னவர் இறையடியார்க்கு என்றும் அமுது செய்விப்பார்; தவறொன்றுமில்லை' என்று கேட்டுக்கொண்டாள்.  சிவனடியாரோ 'நான் சிறுத்தொண்டனைக் காணவந்தேன்.  காணாமல் செல்லமாட்டேன்.  மாதரசே! யாங்கள் சென்று கணபதீச்சரத்தில் திருவாத்தியின் கீழ் அமர்ந்திருப்போம். அடிகள் வந்ததும் எனைக் காணச்சொல்' என்று சொல்லிவிட்டு விரைந்து வந்து திருவாத்தியின் கீழ் வந்து அமரலானார்.

சிறுத்தொண்டர் சிவனடியார் எங்கும் காணாது கவலையுடன் வீடு வருகிறார்.  அப்போது, நங்கையவள் சொல்வாள், 'உத்தர தேசத்தில் இருந்து பைரவர் ஒருவர் வந்தார்.  அமுதுண்ணச் சொன்னேன்.  ஆடவரில்லா இல்லத்துள் நான் வரமாட்டேன் என்று ஆத்தியின் கீழமரச் சென்றிருக்கின்றார்' என்கிறாள்.  இதைக் கேட்ட சிறுத்தொண்டன் மிக்க மகிழ்ச்சி கொண்டு உடனடியாக கணபதீச்சரத்தில் ஆத்தியின் கீழமர்ந்திருக்கும் சிவனடியாரைக் காணச் செல்கிறான்.  அடியவரைத் தொழுது நின்ற சிறுத்தொண்டனைப் பார்த்து பைரவர் 'நீர்தாம் சிறுத்தொண்டனா' என்று வினவுகின்றார்.  'சிவனடியார் கருணையினால் என்னை அவ்வாறழைப்பர்' என்றவர், 'இன்று சிவனடியார் எவரையும் காணாது தவித்த எனக்குத் தங்களின் வருகை  மகிழ்விக்கச் செய்கிறது.  தாங்கள் திருவமுதுண்ண எங்கள் இல்லம் எழுந்தருள வேண்டும் என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவரோ, எனக்கு அமுதுசெய்ய உம்மாலியலாது என்கிறார்.  'தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் சொன்னால் செய்ய சித்தமாக இருக்கிறேன், கட்டளையிடுங்கள்' என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவரோ, 'நான் ஆறு மாதத்துக்கொரு தடவைதான் உண்பேன். இன்று அந்த நாள்' என்கிறார்.  'அப்படியா, மிக்க மகிழ்ச்சி.  தாங்கள் உண்ணும் வகையதைச் சொன்னால் உடனடியாக பாகம் பண்ண ஏதுவாகும் என்கிறார் சிறுத்தொண்டர்.  பைரவர் 'நாம் உண்பது நரபசுவாகும்.  ஐந்து வயது நிறைந்த வீட்டுக்கு ஒரு பிள்ளையாகவும் இருக்கவேண்டும்.  அவ்வாறுள்ள பிள்ளையை அன்புடன் தாயார் மடிமீது வைத்து மகிழ்வுடன் தந்தையார் கத்திகொண்டு தலையை அறுத்துக் கறியாக்கிச் சமைத்து விருந்திட்டால் உண்பேன்' என்கிறார். 'அப்படியா, அப்படியேயாகட்டும், சீக்கிரம் சமைத்துவிட்டு வந்தழைக்கின்றேன்' என்று புறப்படுகின்றார் சிறுத்தொண்டர்.

சிவனடியோரோடு வருவார் எனக் காத்திருந்த திருவெண்காட்டு நங்கைக்குக் கணவன் தனியாக வருவதைக் கண்டு 'அடியார் என்ன சொன்னார்' என்று கேட்கிறாள். அடியாரின் விருப்பத்தைச் சொன்னவுடன் இதற்கு வழி ஏதுவென வினவினாள்.  அதற்குச் சிறுத்தொண்டர் 'பணங்கொடுத்து விலைக்குப் பிள்ளையை வாங்கிவிடலாம். ஆனால் அன்புடன் தாய் மடிமீது உட்காரவைத்து தந்தை மகிழ்வுடன் அறுத்துக் கொடுப்பாருண்டோ' என்கிறார். மேலும், இவ்வகையில் இசைவார் எவரும் இருக்கமாட்டார்.  எனவே தேவி, 'நம்முடைய சீராளனை அறுத்துக் கறிசமைப்போம்' என்று கூற, நங்கையவளும் முழுமனதுடன் சம்மதித்து பள்ளிக்கூடத்தில் இருக்கும் மகனை அழைத்து வாருங்கள் என்கிறாள்.

பள்ளிக்கூடத்தில் இருந்து சிறுத்தொண்டன் சீராளனைத் தோள்மீது வைத்துக் கொண்டு வந்து வீட்டில் நீராட்டி கலங்கமில்லா மனதுடன் தாய் மடிமீது அமரச் செய்து இறைவன் திருநாமம் கூறிய சிறுத்தொண்டன் சீராளனின் சந்ததி கண்டம் மற்றும் மற்றமற்ற உறுப்புக்களைத் தனித்தனியாக அறுத்து கறிசமைத்தான்.  அதன்பின் சிறுத்தொண்டன் பைரவரிடம் மகிழ்வுடன் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அமுதுண்ண அழைத்தார்.  பைரவர் மகிழ்வுடன் எழுந்து சிறுத்தொண்டனின் வீடு வந்து சேர்ந்தார்.  சிவனடியாருக்கு விருந்துவைக்க சிறுத்தொண்டரும் நங்கையும் தயாரானார்கள்.  சிவனடியார் முன் சமைத்த கறி வகைகளை வைத்தனர்.  சிவனடியார் இறைச்சியில் குறைவொன்றுள்ளதே என்ன, தாதியானவள் சமையலுக்கு ஆகாதெனத் தள்ளிய தலைக்கறியையும் கொண்டுவந்து வைத்தாள்.

குழந்தையை அறுத்து கறிவைத்து விருந்து வைக்கும் சிறுத்தொண்டனே, நான் தனியாக உண்ணமாட்டேன்; யாராவது ஒரு தவசியைக் கூட்டி வாரும் என்கிறார் பைரவர்.  பைரவரின் சொல்படி விபூதியணிவாரை விரைவாகத் தேடப் போன சிறுத்தொண்டன் யாரும் காணாது வீடு திரும்பி அடியவரை வணங்கி அமுதுண்ண வேண்டுகிறார். பைரவர் உன்னைவிட விபூதியணிவாரை யான் கண்டதில்லை. நீரே என்னுடன் அமுதுண்ணலாமே என்ன, மிக்க மகிழ்ந்த சிறுத்தொண்டன் உடனமர்ந்து உத்தமியை அன்னமிடச் செய்தான்.  அன்பனே, நான் ஆறு மாதத்துக்கோர் தடவை உண்பவன்.  'நான் அருந்துமுன் உண்ணவந்த பக்தனே, உன்னுடைய அன்பு மகனையும் கூட்டிவா' என்கிறார் பைரவர். இதனைக் கேட்ட சிறுத்தொண்டன் எழுந்து மனைவியுடன் உள்ளே சென்று 'என்மகனே! சீராளா!! வா' என்றனர்.  இவர்கள் அழைத்தவுடன் சீராளன் பள்ளியிலிருந்து வீடு வருவதுபோல் வருகின்றான்.  சீராளனை அழைத்துக்கொண்டு இருவரும் விருந்துண்ணும் இடத்திற்கு வருகின்றனர்.  அங்கு பைரவருமில்லை இலையில் வைத்த கறியுமில்லை.  ஐயோ நான் என்ன தவறு செய்தேனோ என்று சிறுத்தொண்டன் இறைவனிடம் வேண்ட இறைவன் இடபவானத்தில் உமாதேவியுடனும் விநாயகப் பெருமானுடனும் முருகப் பெருமானுடனும் எழுந்தருளி, சிறுத்தொண்டன்-திருவெண்காட்டுநங்கை-சந்தன நங்கை மற்றும் சீராளன் ஆகிய நால்வருக்கும் காட்சிதந்து கயிலைக்குக் கூட்டிச் செல்கின்றார்.

இவ்வாறமையும் இக்கதை, சிவத்தொண்டில் ஈடுபடுபவர் எவரும் நான், எனது என்ற கொள்கை இல்லாதவராகவும்; எல்லாம் இறைவனுடையதே என்னும் கருத்தினை உடையவராகவும் இருப்பதைச் சிறுத்தொண்டன் மூலம் உணர்த்துகின்றது எனலாம்.

காப்பு

நூல் தொடங்குவதற்கு முன் நூலாசிரியர் இந்நூல் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்று இறைவனை நினைத்துக் காப்புச் செய்யுள் ஒன்றைப் பாடுவதியல்பு.  இக்காப்புச் செய்யுள் நூலாசிரியர் காப்புக்கு அழைக்கும் இறைவனின் புகழைப்பாடி இவ்வகைப்பட்டவரே இந்நூல் சிறக்கக் காப்பாயாக என்பர்.  ஆனால் சிறுத்தொண்டன் வில்லுப்பாட்டுக் கதையில் 'விநாயகரை'க் காப்புக் கடவுளாகக் கொண்டு இருந்தாலும், விநாயகப் பெருமானைப் பற்றியொன்றும் சொல்லாது சிறுத்தொண்டனின் கதைச்சுருக்கத்தினைக் கூறி, இக்கதையைப் பாட சங்கரன் மைந்தன் காப்பாம் என்கிறார் நூலாசிரியர்.  இதனை அவரது பாடல்கள் வழிக் காண்போம்.

"காலனை வென்றோன் பாதம் கண்ணுற வன்னதானம்
சீலமாய்த் தினமுஞ் செய்த சிறுத்தொண்டன் வெண்காட் டாளும்
கோலமாம் வைர வர்க்குக் குணமுடன் படித்து வந்த
பாலனை யறுத்துப் பொங்கிப் பரிவுடன் சனமிட் டாரே. (1)

இட்டதோ ரடிசில்ப் பையன் இயல்தலை கறிகா ணாது
தட்டுச்செய் ததினா லன்னம் சாப்பிட மாட்டே னென்ன
சட்டென சமைத்த தாதி சந்தன நங்கை தானும்
கட்டுட னிறைச்சி தன்னை கலத்தினிற் படைத்தா ளன்றே. (2)

படைத்திட வைர வர்தான் பாலனை எழுப்பி மாயத்
திடத்துடன் தர்மஞ் செய்த சிறுத்தொண்டன் வெண்காட் டாளும்
முடக்கமாய் நிற்க ஈசன் மூவர்க்கும் முத்தி ஈய்ந்த
தடிதனில் கதையைப் பாட சங்கரன் மைந்தன் காப்பாம்" (3)

என்னும் காப்புப் பாடல்களில் வருபொருளைச் சுட்டிய தன்மையைக் காணமுடிகின்றது.

சிறப்புக் கூறுகள்

சிறுத்தொண்டன் கதையில் பல்வேறு வகையான சிறப்புக் கூறுகள் இடம்பெற்று இருக்கின்றன.  சிறுத்தொண்டனை மனிதனாகவும். பக்தனாகவும் தொண்டனாகவும் இறைவனாகவும் காணமுடிகின்றது.  அதேபோல், இக்கதையில் வரும் திருவெண்காட்டு நங்கையும், தாதியும், சீராளனும் கூட அவ்வவர்களுடைய மனநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலையில் இறைத்தன்மை பெற்றுள்ளமையை உணரலாம்.  இவற்றையெல்லாம் ஆயின் ஆய்வு விரிவும்.  எனவே, இச்சிறுத்தொண்டன் கதையில் இடம்பெற்றிருக்கும் சில கூறுகளை மட்டும் இங்குக் காண்போம்.

அ. சிறுத்தொண்டரில் சிறுத்தொண்டர்

சிறுத்தொண்டர் என்னும் இக்கதையில் சிறுத்தொண்டரைப் பற்றிப் பலரும் பல விதங்களில் குறிப்பிடுகின்றனர்.  சோழமன்னன் உத்தரவாதாவியை உன்னால் எப்படி எளிதாக வென்றுவர முடிந்தது என்று வியப்பு கலந்த மகிழ்வோடு கேட்கும் போது, உடன் இருந்த அமைச்சர்கள் இதுவென்ன பெரிதோ மன்னா, "ஏறூர்ந்தோ னடியருக்கு இவர், எப்பொழுதுந் திருத்தொண்டு செய்பவர்" என்று இவரை மன்னவருக்கு அறிமுகப்படுத்துகன்றனர்.  சிவனடியாராகக் கொண்ட சிவபெருமான் சிறுத்தொண்டரைப் பார்த்து,

"குழந்தையை அறுத்துக் கறிசமைத் தசனந் தந்த பக்தா"

 என்றும்,

"ஆசாரஞ் செய்த சிறுத்தொண்ட பக்தனே" 

என்றும், 

"உன்னைப்போல் விபூதியிடும் நபரையானுங் கண்டதில்லை" 

என்றும், 

"........ நானடியன் அருந்துமுன் உண்ணவந்த பக்தா" 

என்றும் பலவாறாகக் குறிப்பிடுகிறார்.  மேலும், இக்கதையில் இவரைச் "சிறு ஈகையன்" என்றும், "சிறுத்தொண்ட பக்தன்" என்றும், "தொண்டருக்கும் தொண்டர்" என்றும், "எங்கள் ஆண்டவன் பக்தன்" என்றும், "ஈசுரன் தொண்டர்க்குத் தொண்டனான சிறுத்தொண்டன்" என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆ. சிவனடியார் நெறி

"ஓழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஒப்ப சிவனடியார்கள் பல ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி ஒழுகுவராவர்.  குறிப்பாக, பிறர் மனம் நோகாமல் நடப்பதையே முக்கிய நெறியாகக் கொண்டவர்கள் சிவனடியார்கள்.  தன்னால் பிறருக்கு எத்துன்பமும் வாராமல் பார்த்துக்கொள்வர்.  இச் சிறுத்தொண்டன் கதையில் சிவனடியார்தம் நெறியாக "ஆணில்லா வீட்டில் புகாத" தன்மை வெளிப்படுகின்றது.  அதாவது, 

"ஆடவர்களில்லா அகந்தனிலே யாங்கள் சென்று
அமர்ந்திருக்க மாட்டோம்"

என்றும்,

"பெண்கள் தனியாக இருக்கும் மனையகஞ் செல்லேன்"

என்றும்,

"காளையில்லா மனைதனிலே களிப்புடனே நானும்
  கௌவையில்லா துள்ளேவந்து பொம்மலுண்ண மாட்டோம்"

என்றும் பல இடங்களில் பைரவரின் வாக்காக இந்நெறி வெளிப்படுகின்றது.

இ. சிறுத்தொண்டரின் இறைபக்தி

சிவனடியார்கள் தாமாற்றும் செயல்கள் எல்லாம் இறைவன் செயல்களே என்று எண்ணும் கருத்து கொண்டவர்கள்.  சிவனடியார்கள் ஆடுபொருளே.  தம்மை ஆட்டும் பொருள் சிவபெருமானே என்பதில் உறுதியாக இருப்பவர்கள். 'எல்லாம் அவன் செயல்' என்று நித்தம் தொண்டாற்றுபவர்கள்.  இதனால் எத்துன்பம் வந்தாலும் அத்துன்பம் தனக்கு வந்ததாகக் கருதமாட்டார்கள்.  எல்லாம் சிவனுக்கே என்பதால் எத்துன்பமும் சிவனடியார்க்கு இல்லை என்றாகிவிடுகிறது.  இதனால்தான் பிள்ளைக்கறி சமைத்து விருந்துவைத்த சிறுத்தொண்டருக்குத் தன்னுடைய ஐந்து வயதுப் பாலகனை இழந்த துன்பம் பெரியதாகத் தெரியவில்லை.  சிவன் செயலாகவே இதைச் செய்திருக்கின்றார் என்று கூறுதலே சிறப்பு.

"அகத்துக்கொரு பாலக னாக வேணும்
அங்ஙன முள்ள மகனை அன்புடனே 
தாயாரும் அணைத்து மடிமீதிலே இருத்தி
சந்தோஷமாய்ப் பிடித்திருக்க தந்தை கையில் 
கத்திகொண்டு தலைதனை யறுத்துக் கறியாக்கி"

என்று பைரவர் சிறுத்தொண்டரிடம் விருந்து வகைதனைக் கூறும்போது எவ்விதத் தயக்கமும் சலனமும் இல்லாமல் அப்படியே சீக்கிரம் விருந்து சமைத்து வருகிறேன் என்கின்றார்.  பைரவர் சொன்ன - கேட்ட விருந்து வகைகளைத் தன் இல்லாளுடன் சொல்லும்போது,

"..............   ..............  ஓர்குடிக்கோர் பிள்ளை
ஐந்துவயசுப் பிராயம் அவயவப் பழுதில்லாத
அன்புடைய பிள்ளைதனை அன்னை அணைத்து
மடிமீ திருத்தி அகமகிழ்ச்சி யுடனிருக்க
அப்பனும் அவ்வண்ணம் வந்தறுத்து
அறுத்துக் கறிசமைத்து"

விருந்து வைக்கவேண்டும் என்கிறார்.  இதனைச் சொல்லும் போது சிறுத்தொண்டருக்குத் தயக்கம் ஏதும் தோன்றவில்லை.  பைரவரின் விருந்துக்கு ஏற்றவன் தன் மகனே என்று நினைத்த சிறுத்தொண்டர் மனைவியிடம்,

"அள்ளிப் பணங்கொடுத்த துண்டால் ஆண்மகவை வாங்கிடலாம்
அன்னை பிடித்தப்ப னறுப்பானோ?"

என்கின்றார்.  இத்தன்மை சிறுத்தொண்டர்க்கன்றி வேறு யார்க்கு வரும்.  இறைத்தொண்டர்க்குப் பிள்ளைக்கறி சமைத்துவிட்டு பைரவர் விருந்துக்குப் பிள்ளையை அழைத்துவா என்றபோது சிறுத்தொண்டரும் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கையும் பூசை அறைக்குச் சென்று சுவாமியிடம் வேண்டுகிறார்களே!  இவற்றையெல்லாம் பார்க்கும்போது "எல்லாம் அவன் செயலே" என்று செயல்படுவது விளங்குகின்றது.

ஈ. சிறுத்தொண்டரின் நெறி

சிவத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு நெறியில் பிழையேற்படாது வாழ்ந்து வருபவர்கள்.  எத்துன்பம் வந்தாலும் கொண்ட நெறியில் வழுவாதவர்களாக வாழ்ந்து வந்தனர், வாழ்ந்து வருகின்றனர்.  சிறுத்தொண்டர் சிவனடியார்க்குத் தினமும் அமுதிட்ட பிறகு தானுண்ணும் நெறியைக் கொண்டவராக இருந்தார்.  இதனை இக்கதையில், 

"........     ........  அன்பர்க் கமுதிட்டல்லால்
திண்ணாதிருந்து அடியருண்ட பின்பு
தேவியுடனிருந் தன்னமுண்பார்"

எனும் தொடர் இவரின் நெறியை விளக்குகின்றது.  மேலும் சிறுத்தொண்டர் அடக்கத்தின் உருவமாகவே காணப்படுகிறார்.  பைரவர் சிறுத்தொண்டனைப் பார்த்து, "நீர்தாமோ சிறுத்தொண்டன்" என்று கேட்கும் போது அவர்,

"சிவனடியார் கருணையினாலெனை இப்படிச் சொல்வர்
திருவருளா லெந்தனுக்கு அப்பெருமையில்லை"

என்று கூறுகிறார்.  இத்தன்மை வேறு யாருக்கு வரும்.

இதுபோன்ற பல கூறுகள் இக்கதையில் வெளிப்படுகின்றது.  வில்லுப்பாட்டுக் கதைக்கான கட்டமைப்பு முழுமையாக இதிலில்லை.  ஆனால், வில்லுப்பாட்டுப் பாடுவோர் அவைகளை நிவர்த்தி செய்துகொள்வர் என்ற நியதி இருப்பதால் இவைகளை ஓலையில் எழுதாமல் விட்டிருக்கின்றனர் எனலாம்.  ஓலைச்சுவடியின் முதலேட்டில் காப்புப் பாடலிலும், இறுதியேட்டில் வாழிப் பாடலிலும் வில்லுப்பாட்டு என்று குறிப்பிடுவதைக் கொண்டே இக்கதைப்பாட்டு 'வில்லுப்பாட்டுக் கதை' என்று உறுதி செய்யப்பெற்றுள்ளது.  வாழிப் பாட்டு பின்வருமாறு அமையும்.

"சிறுத்தொண்டன் பக்தன் காதை செவியிலே கேட்ட பேரும்
மறுவில்லா தவனைப் போலே மண்ணினில்த் தர்மஞ் செய்து
கறுவியா தடிய ருக்கு கண்ணியஞ் செய்த பேரும்
வறுமையில் லாது வாழ்ந்து வைகுந்தஞ் சாரு வாரே".

முடிவுரை

பல்வேறு வகையான புராணங்களிலும் காவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடிய நாயகர்கள் எல்லோரையும் பட்டியலிட்டு இதுபோல் வெளிவந்திருக்கக் கூடிய நூல்களை எல்லாம் தொகுத்து ஆய்வு செய்தால் புராணங்களில் - காவியங்களில் இவர்களின் பங்கு என்னவென்று தெரியவரும்.  இவ்வாறான கதை நாயகர்களை  மாவட்டம்-வட்டம் வாரியாகப் பிரித்துக்கொண்டும் ஆய்வு செய்யலாம்.  இதனால் யார்யார் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? அப்பகுதி மக்கள் அவர்களை ஏன்? எப்படி? எதற்கு? போற்றி வந்தார்கள் என்பனவற்றிற்கெல்லாம் விடை காணமுடியும்.  புராண நாயகர்களும் நாட்டுப்புறக் கதைமாந்தர்கள் தான்; நாட்டுப்புறக் கதைமாந்தர்களும் புராண நாயகர்கள் தான் என்பது இக்கதையின் மூலம் வெள்ளிடைமலை.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்

1. தமிழ் வில்லுப்பாட்டுகள், தி.ச. கோமதிநாயகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1979.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக