திங்கள், 1 அக்டோபர், 2018

சித்தார்த்த 'சே' குவேரா சிறுகதைகளின் உள்ளடக்கம்

'கண்ணில் தெரியுது வானம்' (2001) எனும் தொகுப்பு நூலில் சித்தார்த்த 'சே' குவேரா அவர்களின் சிறுகதைகள் நான்கு (பக்.463-498) இடம்பெற்றுள்ளன.  இவற்றில் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகள் மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாக அமைகிறது.  இச்சிறுகதைகளின் அமைப்பு, பாத்திர அமைப்பு, மொழியமைப்பு, குவேராவின் மனநிலை, அமெரிக்கரின் மனநிலை, அமெரிக்கச் சிகை சிரைப்பு நிலைய அமைப்பு, குவேராவின் தத்துவக் கருத்துகள், குவேராவின் உவமைகள், குவேராவின் காக்கையாராய்ச்சி என்பன பற்றியெல்லாம் இங்கு ஆராயப்பெறுகின்றது.

கதை அமைப்பு

குவேராவின் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகளும் தன்னுணர்வுச் சிறுகதைகளாகத் திகழ்கின்றன.  அதாவது, ஆசிரியர் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாகவே இக்கதைகள் அமைந்திருக்கின்றன எனலாம்.  பள்ளிப் பருவம் முதல் 'காகங்கள்' எனும் கதை எழுதத் தொடங்கும் காலம் வரை 'காக்கை'கள் குறித்துத் தாம் ஆராய்ந்து குறித்து வைத்திருந்த ஆராய்ச்சிக் கருத்துகளின் தொகுப்பாக 'காகங்கள்' அமைந்துள்ளது.  ஒருமுறை சிகை சிரைப்பு நிலையத்திற்குச் சென்று சிகை சிரைப்பு செய்துகொண்டு வீடு திரும்பும் வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக 'சிகை சிரைப்பு' அமைந்துள்ளது.  எட்டு வயதில் எழுதத் தொடங்கி சிறந்த எழுத்தாளனாகத் தன்னை உலகு ஏற்றுக்கொண்டது வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக 'தோற்பை' அமைந்துள்ளது. 

பாத்திர அமைப்பு

குவேராவின் சிறுகதைகளில் ஆசிரியர் தாமே ஒரு பாத்திரமாக நின்று செயல்பட்டு இருக்கின்றார்.  இவரின் காகங்கள், சிகை சிரைப்பு, தோற்பை ஆகிய மூன்று சிறுகதைகளும் தன்னுணர்வுக் கதைகளாகத் தமிழுலகில் வளம் வந்திருக்கின்றன.

காகங்கள்                - குவேரா மற்றும் காக்கை
சிகை சிரைப்பு -       குவேரா, குவேராவின் மனைவி, குவேராவின்                                                                      நண்பன் 'பில்', சிகை சிரைப்புக்காரர் 'பாபா                                                                       பொயிட்'
தோற்பை   - குவேரா மற்றும் 'பெட்டிக்கடை' எழுத்தாளர்
என்ற வகையில் பாத்திரங்கள் அமைந்துள்ளன.  இப்பாத்திரங்கள் அனைத்தும் குவேராவை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன எனலாம்.  இம்முறையினை இவரின் ஒவ்வொரு சிறுகதையிலும் காணமுடிகிறது.  குவேராவைத் தவிர வேறு பாத்திரங்கள் இருந்தாலும் அப்பாத்திரங்கள் அனைத்தும் குவேரா கதை சொல்லும் வாயிலாகவே வெளிப்படுகின்றார்.  உரையாடலில் எவரும் இடம்பெறவில்லை.

குவேராவின் மனநிலை

காகங்கள் எதற்காகப் பறக்கின்றன? ஒற்றை இலக்கக் காகத்தின் நிலை என்ன? காகங்கள் கரைவதின் நோக்கம் யாது? அதன் உணவுமுறை எப்படி? பறப்பும் நடப்பும், இரையும் இறையும், காகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் போன்றவற்றையெல்லாம் காக்கையோடு பரிமாறிக்கொண்டிருந்த குவேரா இறுதியில் 'போய் வருகிறேன்' என்று விடைபெறும் போது, அக்காக்கை இதுவரை தன்னுடன் பழகிய நினைவு சிறிதும் இல்லாமல் தான் கவ்வி வைத்திருந்த இரையை உண்ணுவதிலேயே குறியாக இருந்தது.  இதனைக் குவேரா அவர்கள், "போய் வருகிறேன் என்று அக்காக்கையிடம் சொன்னேன்.  குரல் மதித்து, என் கூற்றுக்குப் பதில் அது சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை.  அந்தப் பொழுதிலே, அதற்கு நான் ஒரு கடந்த காலத்தில் 'கா' அரிசிக் காக்கை.  முற்கணம் அழிக்கப்பட்ட புதுக்கரும்பலகை இக்கணப் புத்தி.  அதிலே ஒரு செத்த மண்புழுவின் சிதிலச் சதை மட்டும் 'வா வா' என்றரற்றிச் சுற்றிச் சுழன்றுகொண்டு" (பக்.468) என்று கூறுகிறார்.  அன்றையிலிருந்து காகங்களைப் பற்றி உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்பெழுதிக் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டு வேறு சிந்தனையில் ஈடுபட்டேன் என்றும் கூறுகின்றார்.

காகங்கள் இரையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க மனிதனாகிய நாம் மட்டும் ஏன் இரையில் மட்டும் குறிக்கோளின்றி அலைகின்றோம் என்று ஆராயத் தொடங்குகின்றார்.  தன்னைப் புறக்கணித்த காக்கையைத் தானும் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தவர், மனதில் 'காக்கையைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் தம்முடைய பழைய நினைவலைகள் வரத்தான் செய்கின்றன' என்று கூறுவதிலிருந்து அவரின் மனித மனம் வெளிப்படுகின்றது.

ஒருமுறை குவேரா சிகை சிரைப்பு நிலையத்திற்குச் சென்று, சிகை சிரைப்பு செய்து கொள்கிறார்.  அப்போது வெட்டுக்கூலி பன்னிரண்டு டொலர் என்றதும், 'நண்பர்க்குப் பாத்து; எனக்குப் பன்னிரண்டா' என்று அதிர்ச்சி அடைகின்றார்.  நாம் அயல்நாட்டுக்காரர், வேற்றினத்தவர் என்பதற்காக பாபாபொயிட் நம்மிடம் கூடுதலாக இரண்டு டொலர் கேட்கிறார் என்று நினைத்து டிப்ஸ் கொடுக்காமல் வெட்டுக்கூலி மட்டும் கொடுத்துவிட்டு வெளியேறுகின்றார்.  வெளியில் அறிவிப்புப் பலகையில் 'தை மாதம் முதல் வெட்டுக்கூலி இரண்டு டொலர் அதிகப்பட்டிருக்கின்றது' என்று கண்ட குவேரா மனவேதனை அடைகின்றார்.  டிப்ஸ் இரண்டு டொலர் கொடுக்காமல் வந்துவிட்டோமே, பாபாபொயிட் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று குமுறுகின்றார்.  இதனை விடுவித்துக்கொள்ளாத குவேரா அடுத்த முறை சிகை சிரைக்க பாபாபொயிட்டிடம் செல்லாமல் வேறொருவரிடம் சென்று சிகை சிரைத்துக்கொண்டதைப் பார்க்கும் போது குவேராவின் மனம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணரமுடிகிறது.

அமெரிக்கரின் மனநிலை

குவேராவின் சிறுகதைகளில் அமெரிக்கரின் மனநிலை படம்பிடித்துக் காட்டப்பெற்று உள்ளது.  பாபாபொயிட் மற்றும் பில் ஆகியோரின் மனநிலை 'சிகை சிரைப்பில்' தெளிவாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  பாபாபொயிட் குவேராவை 'வருக, கதிரையிலே (இருக்கை) அமர்ந்திருந்து பத்திரிகை காண்க' என்பதிலிருந்து சிகை சிரைப்பு நிலையத்திற்கு வருகை தருவோரை வரவேற்கும் பாபாபொயிட்டின் அன்புமனம் வெளிப்படுகிறது.  "அதிகமா, குறைவா, இடையா?" என்று முடியினைக் குறைக்க வேண்டிய அளவினைக் கேட்கும் பாபாபொயிட், வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்படும் விதம் புலப்படுகிறது.

மேலும், சிகை சிரைக்க 'பில்' வெட்டுக்கூலி பத்து டொலரும் டிப்ஸ் இரண்டு டொலரும் கொடுத்துச் சென்றதைக் கண்டவர், தனக்கு வெட்டுக்கூலி பன்னிரண்டு டொலர் என்று சொன்னதும், "நான் இந்த நாட்டுக்காரன் இல்லை என்பதை அறிந்து கிழவர் என்னை ஏமாற்றுகிறாரா அல்லது என் நிறத்துக்காக எனக்கு மட்டும் இந்த கூலியா?" என்று நினைத்த குவேரா வெட்டுக்கூலி மட்டும் கொடுக்க, அதை மனம் கோணாமல் வாங்கி, "மேசை இழுப்பறைக்குள்ளே வைத்துவிட்டு, அடுத்து, காத்திருந்தவரை அழைத்தது, நான் நடக்கும் திசையிலே இருக்கும் கண்ணாடியிலே தெளிவாகத் தெரிந்தது" என்பதைப் பார்க்கும் போது டிப்ஸ்க்காக ஏங்கும் மனிதர் பாபாபொயிட் இல்லை என்று சுட்டப்பெற்றிருப்பதை உணர முடிகின்றது.

சிகை சிரைப்புக் கூலி ஏற்றப்பட்டிருப்பதைக் கண்ட குவேரா மனம் நொந்தார்.  என்றாலும் 'பில்'லுக்குப் பத்து டொலர் தனக்குப் பன்னிரண்டு டொலர் என்றதும் டிப்ஸ் கொடுக்காததற்குச் சமாதானம் அடைகிறார்.  மறுநாள் குவேரா 'பில்'லைப் பார்த்துச் சிகை சிரைப்புக் கூலி நீ குறைத்துக் கொடுத்தது தவறல்லவா என்று கேட்க, 'பில்'லோ நான் குறைத்துக் கொடுக்கவில்லை பழைய பாக்கியை இந்த முறை கழித்துக்கொண்டேன் என்கிறார்.  அமெரிக்கர் பண வகையறாவில் சரியாக இருப்பவர்கள் என்பது இதனால் வெளிப்படுகிறது.

அமெரிக்கர் எவரும் முத்தம் இட்டுக்கொள்வதை அருவெறுப்பாக நினைப்பது இல்லை.  மாறாக, முத்தமிட்டுக்கொள்வதில் அதிக ஆர்வமிக்கவர்களாக இருக்கிறார்கள்.  இன்னொருவருடைய எச்சில் தாம் எடுத்துக்கொள்கின்றோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாதவர்கள்,  "ரொட்டித் துண்டைக் கொத்தித் திண்ணும் காகங்கள் மற்றதின் எச்சில் உள்ளதே என்று நினைப்பதில்லை.  அதுபோலத்தான் நாங்களும் அன்பைப் பரிமாறிக்கொள்ள வாய்முத்தம் இட்டுக்கொள்கின்றோம்"(ப.464) என்னும் குவேராவின் கூற்று அமெரிக்கரின் முத்தமிட்டுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்காவில் சிகையலங்கார நிலையம்

நமது நாட்டில் சிகை அலங்கார நிலையங்கள் இருப்பது போலவே அமெரிக்க நாட்டிலும் அமைந்திருக்கின்றது என்பதைக் குவேராவின் 'சிகை சிரைப்பு' எனும் கதை வாயிலாக அறியமுடிகிறது.  இதனைக் குவேரா பின்வருமாறு சுட்டுகின்றார்.

"கடை, நடைபாதைத் தாழ்வாரத்துக்கு வலது புறமாக, இரண்டு பிரிவுகளாகத் தடுப்பினாலே பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதலாவது (வயதுபோன) பெண்களுக்கு......... அடுத்ததாக, ஆடவருக்கானது ......... மேசையிலே மாசிகையும் தாளிகையும் மாதமிரு பத்திரிகையும் அறுபதாம் ஆண்டிலிருந்து முந்தாநாள் வரைக்குமாக தொடர்ச்சியில்லாது, இலவச 'ஒன்றெடுத்தால் இரண்டு இனாம்' போட்டிக் கட்டங்கள் கத்தரிக்கோலே படாது கைவரிசைக்குக் கிழிக்கப்பட்டு, பின்னர், நிலம் முழுவதும் மயிரிடையே, இராணுவம் புகுந்து சோதனை செய்த வீட்டுப்பொருட்களாக எறிந்துகிடந்தன. 'நஷனல் எஸ்குயரர், த குளோப், தஸ்ரார், «உறாம் கார்டினிங் செவன்ரீன், ஸாரா பெர்குஸ்ஸன் அன்ருவின் மார்பகம் வெனீஸ் ஓடத்திலே வெளிச்சத்திலே வெண்மையாகத் தெரிகின்றது' போன்ற படங்கள் கண்ணாடி போட்டு மாட்டப்பெற்றிருந்தன.  மேலும் வானொலியில் லூயிஸ் ஆம்ஸ்ரோங்கின் 'ஜாஸ்' குரலிலே ஒலித்துக்கொண்டிருந்தது ............... கிறிஸ்மஸுக்கு வைத்த மரம் இன்னமும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் கழற்றப்படாமலே ஒரு மூலையிலே சாத்திக் கிடந்தது ......... அறை முழுவதும், ஐம்பது அறுபதாம் ஆண்டுக் காலப் பாடர்களினது படங்கள், கறுப்பர்-வௌ¢ளையர் பேதமில்லாது, கண்ணாடி தவிர்த்த அனைத்துப் பிரதேசங்களிலும் பெரிய அளவுகளிலே ஒட்டப்பட்டிருந்தன".  இவற்றையெல்லாம் படிக்கும் போது நம்நாட்டுச் சிகையலங்கார நிலையத்தைப் பற்றிய உணர்வு ஏற்படுவதை உணரலாம்.

குவேராவின் தத்துவங்கள்

குவேராவின் சிறுகதைகளில் பல தத்துவக் கருத்துகள் இடம்பெற்றிருக் கின்றன.  அவற்றுள் சில:-
  • அழுக்கு மூட்டையைச் சுமந்தாற்றான் வெளுக்க முடிகின்றது.  அழுக்கு நீரை   வடித்தாற்றான், துலக்க முடிகின்றது (ப.464)
  • பறப்பும் நடப்பும் ஒரே காரியத்தினைச்செய்து முடிப்பதற்கான வெவ்வேறு செயலூடங்கள்.  ஒரு காக்கை தத்திச் சென்றும் இன்னொரு காக்கை இறகெத்தி, இறங்கி, கொத்திச் செல்வதும் இயல்பு.  இதிலே எத்துணை இலகுவாக இரையைக் கௌவிக்கொள்கின்றதுதான் முக்கியம் (ப.466)
  • எந்த இடமும் வாழ்வசதி கூடினால், தேவைப்படின், எந்த உயிரியினதும் இருப்பிடமாகக் கூடும் (ப.467)  
  • சில நோய்கள் பெண்களுக்கு வராது.  ஆனால், அவர்களின் மரபணுக்களூடாக, ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் (ப.470)
  • எந்தப் படைப்புக்கும் அதன் படைப்பாளியின் நோக்குக்கு அப்பாலும் அவன் அறியாத பல பயன்பாடுகள் உண்டு (ப.486)
  • தீவிரமாக வாசிப்பது, எழுதுவதிலும்விட மிகவும் அதிகப் படியான படைப்புத் தன்மை வாய்தது (ப.483)
  • உன்னளவிலே உன் எழுத்தின் தரத்தைக் கண்டுகொள்ள, ஓரிரண்டு வாரம் எழுதுமுன் சிந்தனையை ஊறப்போடு, நீருக்கும் ஆகாரத்துக்கும் மலமூத்திரத்துக்குமாய் வேண்டி நிறுத்தாமல் எழுது, எழுதியபின் எழுதியதை ஊறப்போடு ...... ஊறப் போட்டதை அந்த எழுத்துக்கான உன் உத்வேகம் வடிந்தபின்னர் வாசி.  அப்போதும் அஃது எழுத்துத்தான் என்று உனக்குப்பட்டால், அஃது எழுத்துத்தான் (ப.488)
  • எழுத்தாளன் வாழும்போது கிடைக்காத மரியாதை, அவனது மறைவிற்குப் பிறகே பெரும்பாலும் கிடைக்கின்றது (ப.485)
  • பலரின் உற்சாகமான பாராட்டுக் கிடைக்காமல் இருப்பதும் குறை கூறலும் கருத்துக்கள் வெளிவராமலே இருப்பதுவும் உனது எழுத்து எந்தளவுக்கு நீ தரமாக எழுதிக்கொண்டிருக்கின்றாய் என்பதற்கு ஓர் அறிகுறி (ப.489)
  • உன் படைப்பு கிணற்றில் போட்ட கல்லாயிருப்பதும் எழுத்துலகிலே உனக்கான இடத்தை நீ பிடித்துவிட்டாய் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி (ப.489)
  • பேசுகின்ற வாசகரோடு அவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஊடாடிக் கருத்தைப் பதியவைக்கின்றதே மகிழ்வூட்டும் கலையின் நோக்கு இதுபோன்ற தத்துவக் கருத்துகள் குவேராவின் சிறுகதைகளில் நிரம்பக் கிடக்கின்றன.  இவற்றினைப் பார்க்கும் போது குவேரா ஒரு தத்துவ ஆசிரியராக இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.


குவேரா கதைகளில் உவமை

குவேரா சிறுகதைகளில் சில உவமைகளும் இடம்பெற்றிருக்கின்றன.  அவையாவன,

  • கரையில் வந்தடிக்கும் ஆற்றடைசல் (ப.465)
  • நீர் நிலைத்துத் தூங்கிய குளத்திலிட்ட ஒற்றைக் கூழாங்கல் எழுப்பிப் பரப்பும் ஒரு தொகுதிச் சலன வட்டம் (ப.468)
  • வேலையில்லாத வேலிக்கு சாட்சிசொல்ல வாலில்லாத ஓணான்கள் (ப.471)
  • இருக்கும் இடத்திற்கேற்ப கட்டிடம் எழுப்பும் கொத்தனார் (ப.484)

இதுபோன்ற உவமைகள் குவேராவின் சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.

குவேராவின் காக்கையாராய்ச்சி

காக்கையோடு தாம் நிகழ்த்திய ஆராய்ச்சி முடிவுகளைக் 'காகங்கள்' என்னும் சிறுகதை வாயிலாகப் பலவிடங்களில் வெளிப்படுத்துகின்றார்.  அவ்வாராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு:-
  • காகங்கள் மற்ற காகங்களின் எச்சில்களுக்காக வெட்கப்பட்டுக் கொள்கிறதில்லை.
  • காகங்கள் இரைக்காகப் பறக்கின்றனவா, அல்லது பறக்கின்றதற்காக இரையை ஓர் எய்-இலக்காக எண்ணிக் குறிக்கின்றனவா?
  • காகங்கள் தமக்குப் பெயரிட்டுக் கொள்கின்றவை இல்லை.
  • காகங்கள் பெருமூச்சு விடக்கூடியவை.
  • காகங்கள் அருகருகே இல்லாத பட்சத்திலே, அடுத்ததன் இருப்பையும் இல்லாமையையும் பற்றி ஏதும் குறைவாகவோ நிறைவாகவோ பேசிக்கொள்வதில்லை.
  • காகங்கள் எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பேசிக்கொள்கின்றன என்கின்றதால், தம் இருப்பிற்கான ஏற்பாடுகளை மட்டுமே பேசிக்கொள்கின்றன.
  • தமது தொழிலின் நெளிவு சுழிவுகளை மாற்று உயிரினம் ஒன்று கற்றுத் தெளிவதை மானுடர்கள் போலவே காகங்களும் கூட விரும்புவதில்லை.
  • ஒற்றைப்பட காகவுயிரிகள், தனிப்படவே ஒதுக்கப்பட்டு வாழ்வது வழக்கம்.
  • மூன்று காகங்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பட்சத்திலே, அருகிலிருக்கும் காகம் 'கா' என்றும், அதற்கடுத்த காகம் 'காகா' என்றும் சொல்லிக் கொள்ளப்படும்.  அந்தக் காகங்கள் அடுத்த கணத்திலே ஒரு சிறுவனின் கல்லெறிக்குப் பயந்து, கிளையிலே இடம்மாறிக் கொள்ளும் கணத்திலே 'கா' எனப்பட்ட காகம் 'காகா' எனவும், மற்றது  'கா' எனவும் அழைக்கப்படலாம்.


இதுபோன்ற ஆராய்ச்சிக் கருத்துகளைக் காணும் போது குவேரா ஓர் சிறந்த ஆராய்சியாளராக இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

குவேராவின் மொழியமைப்பு

குவேராவின் சிறுகதைகளில் அமைந்துள்ள மொழிநடைக்கு ஒரு சிறப்புண்டு. வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.  இதனை யமுனா ராஜேந்திரன் அவர்கள், "இசைக் குறிகளின் இடையில் உறைந்திருக்கும் மௌனகதை ஊடறுப்பதில் தோன்றும் லயம் போல் அவரது மொழி மென்மேலாக மன அடுக்குகளாக விரிகிறது" (கண்ணில் தெரியுது வானம், ப.462) என்கின்றார்.  இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, "கடைசி நேரத்திலே, அவரின் சிறுநீரகக் கோளாறு காரணமாக, செயற்கை முறையிலே உடற்கழிநீர் வெளியேற்றம் அவருக்கு நிகழ்ந்து கொண்டிருந்தபோது, வைத்தியசாலையில் அவரைச் சந்திக்க நான் சென்றிருந்த போது, ஏதோ சிறு செலவுக்குப் பணம் நான்தான் தந்திருந்தேன் என்கின்றதை அவரின் சிறுமகள் அவரிடம் பதட்டத்திலே, நான் இருக்கும்போதே கூறிவிட்டாள்" (ப.485) என்ற தொடரால் இவரின் மொழியமைப்பு பற்றித் தெளிவாக உணரலாம்.

முடிவுரை

குவேராவின் சிறுகதைகளில் குவேராவை முழுவதுமாகக் காணமுடிகிறது.  இவரின் சிறுகதைகள் ஒருமுறை மட்டும் படித்தால் புரியக்கூடியதல்ல.  பலமுறை படித்துப் படித்துத்தான் மனதில் நிறுத்த முடிகிறது.  குவேராவின் சிறுகதைகளில் தன்னையொரு ஆராய்ச்சியாளராகவும், தத்துவ ஆசிரியராகவும், நிகழ்காலத்தைப் படம் பிடிக்கும் ஒளியூடகராகவும் விளக்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக