செவ்வாய், 19 நவம்பர், 2019

பழந்தமிழிலக்கியத்தில் நெருப்பியல்



உயிரினத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்குமுள்ள உறவுமுறைகளைச் சுட்டுவது சூழலியல்.  ஓர் உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள காரணிகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே அது நிலைத்து வாழ முடியும்.  உயிரினத்தைச் சூழலியலில் இருந்து பிரிக்க முடியாது.  தாவரமும் விலங்கினமும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.  உயிரினங்களின் செயற்பாடுகளில் அதன் சூழலியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.  இச்சூழலியல் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.  ஒன்று, இயற்கைச் சூழல். மற்றொன்று, உயிரினச் சூழல்.  சூழலியல் பாகுபாட்டில் இயற்கைச் சூழல் இன்றி உயிரினச் சூழல் உருவாகியிருக்க முடியாது.  இவை இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கக் கூடியவை.  இயற்கைச் சூழல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களால் ஆகியது.  இவ்வைம்பூதங்களில் ஒன்றான நெருப்பினைப் பற்றி அறிவதும் அறிவுறுத்துவதுமான நிகழ்வுகளே நெருப்பியல்.  இந்நெருப்பியல் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெறுவது பற்றி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
நெருப்பு
மனிதன் கண்டு பிடித்தவைகளில் பயன்பாட்டுக்கு ஏற்றவையும் பயன்பாட்டுக்கு மாறுபட்டவையும் என அமைந்திருக்கின்றன.  இவற்றில் நெருப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.    நெருப்பின் கண்டுபிடிப்பால்  மனிதன் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணத் தொடங்கினான்.  அழிக்கவும் ஆக்கவும் வல்லது நெருப்பு.  ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பினை மனிதன் வழிபாட்டுக்குரிய ஒன்றாகவும் கருதினான்.  இந்நெருப்பினைச் சங்கப் பாடல்களில் தீ, அழல், எரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அதாவது,
“முளிஅரில் பொத்திய முழங்குஅழல் இடைபோழ்ந்த”     (கலி.13:20 )
“மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி”                            (அகம்.65:10)
“இருதலைக் கொள்ளி இடைநின்று  வருந்தி”                    (அகம்.339:9)
என்றவாறெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கக் காணலாம்.
காட்டில் மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் காட்டுத்தீ உண்டாகிறது.  நெருப்புக்கு வன உயிர்கள் அஞ்சின.  கோடைக்காலத்தில் வெப்பத்தின் கால அளவு நீண்டிருப்பதால், காட்டில் உள்ள மரங்கள் காற்றில் அசைந்து மோதும்.  அவ்வாறு மோதும்போது நெருப்பு உண்டாகி காடு முழுவதும் தீ பரவும்.  அதனால் காடு அழிக்கப்படும்.  இது இயற்கை நிகழ்வு.  அதிக வெப்பத்தினால் பாலை நிலத்தில் இருக்கக் கூடிய மரங்கள் ஒன்றுடனொன்று உரசி காடு அழிந்தமையை ஐங்குறுநூறு பல இடங்களில் சுட்டுகின்றது.
செல்வச் செழிப்பு மிக்க அரசர்களின் யானைகளைப் பிணிக்கும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல, ஒளிபொருந்திய காட்டுத்தீ தொடர்ந்து மண்டிய பாலைக் காடு என்று கூறப்புகுந்த இடத்தில்,
“ஒள்எரி மேய்ந்த சுரத்திடை”                                   (ஐங்.356:3)
என்றும், பிணைமானின் விழிபோன்ற நெடிய கண்கொண்ட காதலியே! காட்டுத்தீ பரவி அதனால் அழிவுற்றதும், கோடைப்பருவம் நீடியதால் வெம்மை மிகுந்ததும், நீண்டதும், கடத்தற்கு அரியதுமான பாலை வழியைக் கூறப்புகுந்த இடத்தில்,
“எரிகவர்ந்து உண்ட என்றூழ் நீள்இடை”              (ஐங்.360:1)
என்றும், நல்ல வினைத்திறத்தோடு கட்டப்பட்ட எம் பெரிய மாளிகை கல்லென்னும் ஆரவாரத்தோடு கலக்கமுற, குவளைப்பூப் போன்ற மையுண்ட கண்களை உடைய என் மடப்பம் பொருந்திய மகள் எம்மை நீங்குமாறு செய்த அறம் சிறிதுமற்ற ஊழும், என் மகளை இழந்து நாடொறும் கலங்கும் என்னினும் பன்மடங்கு கலங்கி, காட்டில் எழுந்த தீயிடை அகப்பட்டு வெந்தொழிவதாக என்று கூறப்புகுந்த இடத்தில்,
“காடுபடு தீயின் கனலியர் மாதோ”                        (ஐங்.376:2)
என்றும், காய்ந்து போன மூங்கிலின்கண் தோன்றி, வீசும் காற்றால் வளர்ந்து சுடர்விட்டு எரியும் நெருப்பின் ஒழுங்கு கற்பிளவுகளிலும், மலை முழைஞ்சுகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்புகுந்த இடத்தில்,
“முளிவயிர்ப் பிறந்த, வளிவளர் கூர்எரிச்
சுடர்விடு நெரடுங்கொடி விடர்முகை முழங்கும்
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம்”                              (ஐங்.395:1-3)
என்றும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இதுபோன்ற பாடல்களின் வரிகளில் காடு அழிந்தமை பற்றிக் காணமுடிகிறது.  மேலும், காட்டுத்தீயானது கானகம் முழுவதும் பரவியதால் மரங்களில் இருந்த இலைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இலையற்று இருந்ததைக்,
“கனைஎரி நிகழ்ந்த இலைஇல் அம்காட்டு”           (அகம்.379:19)
என்ற அகநானூற்றுப் பாடல்வரி சுட்டிக் காட்டுகிறது. 
வேனிற் காலத்தில் கதிரவனின் மிகு வெப்பத்தால், காட்டில் வீசும் பெருங்காற்று தழைத்த மூங்கிலின் கணுக்களைத் தாக்கும்.  இதனால் மூங்கில்கள் உரசி சிதறி விழுந்த தீப்பொறிகள் தோற்றுவித்த பெருநெருப்பால் தீ உண்டாகி அக்காட்டையே அழித்தது என்பதை,
“தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண்உறுபு தீண்டலின்,
பொறிபிதிர்பு எடுத்த பொங்குஎழு கூர்எரிப்
பைதுஅறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை”          (அகம்.153:8-11)
என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் எடுத்துரைக்கக் காணலாம்.  இவ்வாறு மூங்கிலால் எழுந்த தீயானது, ஊகம் புல்லின் மீது பரவி காடு முழுவதும் பரவியது. அப்போது, அவ்வழியாக வணிகத்திற்காகச் செல்ல முயன்ற வாணிகச் சாத்தர் அவ்வழியினைத் தவறவிட்டு வழி மாறி தீயைக் கண்டு அஞ்சி ஓடினார் என்பதை,
            “…………………… சேண் இகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுல் மீமிசை வளி கழற்றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய சாத்தொடு”             (அகம்.39:5-10)
என்ற பாடல் வரிகள் எடுத்தியம்புகின்றன.
சூரியனின் கதிர்கள் அளவுக்கு மீறிய வெப்பமாக இருப்பதால் காடு தன்னுடைய அழகு கெட்டு மரங்களின் நீண்ட கிளைகளில் இருந்த இலைகள் நீரின்றிக் காய்ந்து போயின.  தேக்கு இலைச் சருகுகளின் மீது காற்றுப் பட்டதால் நெருப்பு உண்டானது.  இதனை,
            “காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய ஆக, ஒல்லென
வாடுபல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்”  (அகம்.143:2-7)
என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.  காட்டில் சூறைக்காற்று வீசுகிறது. அப்போது மூங்கில்களுக்கிடையே ஏற்பட்ட உரசலில் தீ உண்டாகிறது.  இத்தீ காடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வெடிப்பையுடைய குகைகளைக் கொண்ட மலைப் பக்கங்களில் பரவியது.  மிக்க தீயால் மூங்கிலின் கணுக்கள் வெடித்தமையால் எழுந்த ஒலி, குட்டமான கலைமான்களைத் துரத்தியதென்பதை,
            “……………………… ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடன்இயைந்து
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி”                                (அகம்.47:3-8)
என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.  அடர்ந்த  காடுகளில் மட்டுமன்றி மூங்கில்கள் வளர்ந்த மலைகளிலும் பலத்த காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசும் போது தீப்பரவும் என்பதை,
            “………………… மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி”                 (அகம்.65:9-10)
என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம். 
இப்படித் தானாக நெருப்பு உருவாவதன்றி மக்களாலும் நெருப்பினைத் தன்னுடைய தேவைக்காகவும் மூட்டி இருக்கின்றனர்.  நெருப்பை உருவாக்க பழங்காலத்தில் தீக்கடைக்கோலைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.  இத்தீக்கடைக் கோலை வெளிச்சத்திற்காக வாசலில் செருகி வைத்திருந்தனர்.  இதனை,
            “இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல”           (புறம்.315)
என்று புறநானூற்றுப் பாடல் வரி எடுத்துக் காட்டுகிறது.
            இவ்வாறான நெருப்பை மனிதன் தன்னுடைய நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் தற்போது மிகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.  இன்று, வெப்பம் ஒரு சக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.  இவ்வெப்பம் நச்சுத்தன்மை கொண்ட பொருள்களை எரிக்கும்போது காற்று மாசு அடைகிறது.  காற்று மாசு அடைவதால் இயற்கையினுடைய சூழல் கெடுகிறது.  இதனால் நிலத்தில் வாழும் அனைத்துவகை உயிர்களுக்கும் அஃறிணைப் பொருள்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒருபக்கம் பாதிப்பென்றாலும் மறுபக்கம் நெருப்பின் பயன்பாடு தேவையாகவே கருதப்படுகிறது.
நெருப்பின்  பயன்பாடு
தொன்று தொட்டே நெருப்பின் பயன்பாடு மக்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது.  ஐம்பூதங்களில், நெருப்பைத் தான் மானிட இனம் முதன் முதலில் பயன்படுத்தியிருக்கிறது.  நெருப்பின் பயன்பாடே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்க மாற்றியது என்பர். 
Ø  கொடுங்குளிரிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும்
Ø  மாமிசத்தை உணவு முறைக்கு மாறிக்கொள்ளவும்
Ø  உணவைப் பதப்படுத்திக் கொள்ளவும்
Ø  உணவு எளிதாக செரிக்கும்படி மாற்றிக் கொள்ளவும்
Ø  நெருப்பின் புகை, ஒளி வழியாக இருப்பிடத்தை அறிவிக்கவும்
Ø  கொடிய விலங்குகளிலிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும்
Ø  தற்காப்புக் கருவியாக பயன்படுத்திக் கொள்ளவும்
Ø  குகைகளில் இருந்த விலங்குகளை விரட்டுவதற்கும்
Ø  இரவிலும் குளிர்காலத்தில் ஒளி பெறுவதற்கும்
ஆகியவற்றுக்கெல்லாம் நெருப்பினை மனிதன் பயன்படுத்துகின்றான். 
இவ்வாறெல்லாம் நெருப்பைப் பற்றி பழங்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் இடம்பெற்றமையைக் கூறலாம்.  இந்நெருப்பு காலந்தோறும் உயிரினங்களுக்கு நன்மை செய்வதாகவும், தீமை செய்வதாகவும் இருந்திருப்பதைக் அறியமுடிகிறது.  ஆகவே, நெருப்பினைப் பற்றி அறிவுறுத்துவதும் அறிவதுமான நெருப்பியலை ஒரு துறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுவது தேவையாகிறது.

தமிழில் அறிவியல் புனைகதை - ஒரு பார்வை



அறிவியல் கருத்துக்களை அடிப்படையாகவோ பின்புலமாகவோ கொண்டு கற்பனையுடன் ஆக்கப்படும் படைப்புக்களை அறிவியல் புனைவு அல்லது அறிபுனை என்பர்.  அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களைத் தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்டது புனைகதையாகும். குறிப்பாக வருங்கால அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியது எனலாம்.  கட்டுரை, சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் எனப் பல வடிவங்களில் அறிவியல் படைப்புகள் இருக்கலாம்.  எதிர்காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக, அதிக முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக, விண்வெணிப் பயணம், வேற்றுக்கிரக வாசிகள், இயல்பு கடந்த நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவியல் புனைகதைகள் அமையும்.  அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்விளைவுகளை ஆராய்வது அறிவியல் புனைகதைகளின் முக்கியக் கருத்தாக அமைகிறது.  இங்கு அறிவியல் புனைகதையின் கூறுகள்-நோக்கம்-அமைப்பு-போக்கு பற்றி ஆராயப்படுகிறது.
அறிவியல் புனைகதையின் கூறுகள்வெவ்வேறானதும் நடக்கக் கூடியதுமான எதிர்கால உலகத்தைப் பற்றிப் பகுத்தறிவோடு ஆராய்வதாக அறிவியல் புனைவுகள் அமையும்.  புனைவின் அடிப்படையில் அறிவியல் புனைவுகள் அதிபுனைவுகயோடு ஒத்துப்போகும்.  ஆனால், அறிவியல் புனைவுகள் நடைபெறும் நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் அறிவியல் கருதுகோள்களின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் அறிவியல் மேம்பாட்டின் மூலம் நிகழக்கூடியதாகவும் இருக்கும். எனினும் சில கதாபாத்திரங்கள் அல்லது கருத்துகள் முற்றிலும் கற்பனையானதாகவும் அமையும்.
வழக்கமாக அறியப்பட்டிருக்கும் நிதர்சனங்களிலிருந்து அறிவியல் புனைவுகளில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வேறுபட்டிருக்கும்.  ஏறக்குறைய அனைத்து அறிவியல் புனைவுகளும் வாசகர் அல்லது பார்வையாளர்களின் கற்பனைகளும் முக்கிய பங்காற்றும்.  மேலும், அவற்றில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு கருதுகோள்களும் கதையோட்டத்திலேயே பின்னர் விவரிக்கப்படும் அல்லது வாசகரின் கற்பனைக்கே விடப்படும்.  அறிவியல் புனைவின் முக்கியக் கூறுகள் பின்வருமாறு:
Ø வெவ்வேறான எதிர்காலக் கோட்பாடுகள்.
Ø அறியப்பட்ட வரலாற்றிலிருந்தும் தொல்பொருளிலிருந்து மாறுபட்டதாக அமைந்த கடந்தகாலம்.
Ø விண்வெளியில் நடைபெறும் நிகழ்வுகள்.
Ø விண்வெளிப் பயணங்கள்.
Ø வேற்றுக்கிரக வாசிகள், விகாரிகள், மனிதப்போலி எந்திரங்கள் போன்ற கதாபாத்திரங்கள்.
Ø தற்காலத்தில் இல்லாத, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய தொழில்நுட்பங்கள்.
Ø தற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கும் அறிவியல் கருதுகோள்களோடு ஒத்துப் போகாத ஆயினும் நடைபெறக் கூடிய கருதுகோள்கள்.
Ø புதிய மன்றும் வழக்கத்துக்கு மாறான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள்.
Ø மனக்கட்டுப்பாடு, தொலைவிலுணர்தல், தொலைவியக்கல் (பொருள்களைத் தொடாமல் நகர்த்துதல்) மற்றும் தொலைப்பெயர்த்தல் போன்ற இயல்பு கடந்த திறன்கள்.
Ø மற்ற அண்டங்கள் மற்றும் அதிக பரிமாணங்களும் அவற்றினிடையே பயணித்தல்
போன்ற பல்வேறு கூறுகளைப் பெற்று அறிவியல் புனைகதைகள் அமைந்திருக்கும்.
அறிவியல் புனைகதையின் நோக்கம் 
தமிழில் வெளிவந்த இதுவரை வெளிவந்த அறிவியல் புனைகதைகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இடம்பெறவில்லை.  எனினும் அறிவியல் புனைகதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஏற்பப் படைக்க வேண்டும் என்பர்.  “அறிவியல் புனைகதை என்பது அறிவியலிலும் சமுதாயத்திலும் ஏற்படும் மாறுதல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள புனைகதை வகையாகும்.  நிலையான அறிவியல் வாய்ப்பாடுகளுக்கு எதிரான அறிவாராய்ச்சி விரிவாக்கம், புலனாய்வு, பெருமாற்றம் ஆகியவற்றை அது கூறுகிறது.  நிலையான வாய்ப்பாட்டை விடுத்து மாறுதலுக்கு இடமளிப்பதாயும், இயற்கையுடன் இயைந்ததாயும் இருக்கக் கூடிய கண்ணோட்டத்தை உருவாக்குவது இப்புனைகதை வகையின் நோக்கம்”1 என்கிறார் மணவை முஸ்தபா.  அதாவது, சமுதாய மாற்றங்களை அறிவியல் பார்வையுடன் படைப்பது அறிவியல் புனைகதையின் நோக்கம் ஆகும். 
அறிவியல் புனைகதையின் அமைப்பு
“அறிவியல் புனைகதைகள் கனவுகளோ, கற்பனைகளோ மட்டுமில்லை.  கூர்ந்து கவனித்தால் எதிர்காலத்தில் இப்படியும் நடக்கக் கூடும் என்ற தீர்க்க தரிசனம் இருக்கும்”2 என்று மாலனும், “சென்றகால, நிகழ்கால, வருங்கால உலகங்கள், நாகரிகங்கள் குறித்தும், விண்வெளி, காலவெளிப் பயணங்கள் குறித்தும், இயற்கை விபரீதங்களான கிரகங்களின் மோதல்கள் குறித்தும் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படைகளோடு எழுதப்பெறுவது அறிவியல் புனைகதை”3 என்று சிற்பியும், “அறிவியல் சிறுகதைகள் நடைமுறை உலகில் நிலவும் விதிகளை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன.  ஆனால் நடைமுறை விதிகளை மாற்றி அமைத்துப் படைக்கப்படும் உலகில் இன்றைய உலகத்தின் அடையாளங்களை முழுவதுமாக மாற்றக் கூடியது”4 என்று சுஜாதாவும் குறிப்பிடுவதிலிருந்து அறிவியல் புனைகதைகளின் நோக்கம் புலப்படுகிறது.  அதாவது, அறிவியல் புனைகதைகளில் காணப்படும் கற்பனைகள் பிற்காலத்தில் நிகழக் கூடிய வல்லமை கொண்டதாகவும், கடந்த காலப் பதிவுகளுடன் வருங்கால அறிவியல் முன்னேற்றங்களை அறிவியல் புனைகதைகள் விவரிப்பதாகவும், கற்பனை, அறிவியல் விதிகளின் படி அமைய வேண்டியதில்லை.  ஆனால் அறிவியல் புனைகதை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் அடிப்படை அறிவியல் அறிவு தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறமையும் அறிவியல் புனைகதையானது, “கூறுவோன் கதைக்குப் புறம்பானவனாகவிருத்தல், கதையைக் கூறும்பொழுது ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, அவை பற்றி அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கூறலாம்.  நிகழ்ச்சிகள் சம்பந்தமாகக் கூறுவோனுக்குத் தோன்றும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கூறலாம்.  அன்றேல் புறநோக்காளனாக நின்றும் கூறலாம்.  கூறகின்ற முறைமையே புனைகதையின் நடையாகும்”5 என்று அறிவியல் புனைகதையின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
அறிவியல் புனைகதையின் போக்குகள்
புதினம், சிறுகதை என்னும் இரண்டு இலக்கிய வகைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லாக புனைகதை அமைந்திருக்கிறது.  மேனாட்டார் வருகையை அடுத்துத் தமிழ்நாட்டில் அரசியல் அமைப்புகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியதும் சிறுகதை, புதினம் என்னும் இலக்கிய வகைகள் தமிழில் இடம்பெறலாயின.
புதிய புதிய இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கியத்திற்குள் புகுவது என்பது புதிதன்று.  காலங்காலமாக இவ்வாறு நடந்தேறி வருவதால் தமிழிலக்கியத்தின் பரப்பு பல்கிப் பெருகி நீண்டுக் கொண்டே இருக்கிறது.  மேனாட்டார் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குவதற்குப் புனைகதைகளையே பெரும்பாலும் கையாண்டனர்.  தொன்றுதொட்டுக் கதைமரபு நம்மிடம் இருந்து வந்தது.  எனினும் அதனை விடுத்து அதன் வழிவரும் புனைகதைகளை எழுதத் தொடங்கினர்.
புதியதாகத் தோன்றுகின்ற ஒவ்வொன்றும் பழமையின் அடியாகத் தோன்றுவதே இயற்கை.  ஆகையால் புதியதாகத் தோன்றும் புனைகதைகளும் முதலில் தோன்றும் பொழுது பரம்பரையாக இருந்துவரும் கதை மரபையொட்டி, அக்கதைகளைப் போன்றே நீண்ட கதைகளாகத் தோன்றுவதே இயல்பு.  தமிழில் புனைகதை இலக்கிய வகையில் முதலில் தோன்றியவை புதினங்களே.  மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மற்றும் ‘சுகுணசுந்தரி கதை’, இராஜமையரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆகியவை புதினங்களே.  ஆனால் சிறிது காலத்தின் பின்னர் புதினங்கள் ஓரளவிற்கு செல்வாக்கு இழந்து அதற்குப் பதிலாக சிறுகதைகள் செல்வாக்குப் பெற்றன.
குடும்பம், குலம் என்ற சமூக அமைப்பு குன்றத் தொடங்கிய காலத்தில் தனிமனிதன் முக்கியமானவனானான்.  புதியதாகத் தோன்றி பொருளாதார உறவுகள், புதிய சமூக உறவுகளை ஏற்படுத்தின.  இப்புதிய சமூக உறவுகளை எடுத்துக்காட்டுவதற்கு வழக்கிலிருந்த இலக்கியங்கள் வலுவற்றவையாயின.  எனவே, மரபுக் கதைகளின் வழியாகப் புதிய இலக்கிய வகையொன்று தோன்றுவிக்கப்பட்டது.  அப்புதிய இலக்கிய வகையே புனைகதையாயிற்று.
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்குமுன்ன உறவு முறைகள், அவற்றினடியாகத் தோன்றும் தனிமனிதச் சிக்கல்கள், சமுதாய நிலைமை, அந்நிலையை உணர்த்தும் மனித நடவடிக்கை, சமுதாய மாற்றம், அம்மாற்றத்தால் மனித நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம் ஆகியனவற்றைப் புதினத்தில் எழுதப்படலாம்.  ஒரு தனிமனிதனைக் கதாபாத்திரமாகக் கொண்டு அப்பாத்திரத்தின் வளர்ச்சியில் அல்லது இயக்கத்தில் அனைத்து சக்திகளும் செயல்படுகின்றன. இதனை உணர்ந்து அவற்றை அப்பாத்திரத்துடன் தொடர்புபடுத்தும் பொழுதுதான் புதினம் தோற்றம் பெற்றது. தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள மரபான உறவு பிறழும் நிலையிலேயே புனைகதை தோன்றும். 
சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து பெருகும் கால கட்டத்தில் வாழும் இலக்கியப் படைப்பாளர்கள் உணர்வினைத் தாக்குவது புதிய சூழ்நிலையில் தோன்றும் மனித இன்னல்கள் அல்லது புதிய சூழ்நிலையால் ஏற்படும் நடைமுறையே ஆகும்.  இதுவே சிறுகதையின் கருவாக அமையும்.  குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை.
சமுதாயத்தில் தோன்றி வளரும் மாற்றங்கள் நன்கு புலப்படப் புலப்பட அவற்றைப் பற்றிய அறிவு தெளிவாகும்.  அப்போதுதான் அம்மாற்றங்களை மனித வாழ்க்கையுடன் பின்னிப் பார்க்க முடிகிறது.  தொடக்கத்தில் முக்கியத்துவம் பெற்ற புதினம் காலப்போக்கில் செல்வாக்கிழந்து சிறுகதை முக்கியத்தும் பெற்றது.  இச்சிறுகதையும் ஒரு காலத்தில் செல்வாக்கிழந்து வேறொரு வகையாகவோ அல்லது புதினம் முக்கியத்துவம் பெறுவதாகவோ அமையும்.
இவ்வாறு தமிழில் அறிவியல் புனைகதைகளின் அமைப்பும் நோக்கும் போக்கும் அமைந்திருக்கிறது.  மேலைநாடுகளின் தாக்கத்தால் தோற்றுவிக்கப்பெற்ற புனைகதை, மேலைநாடுகளில் வளர்ச்சி கண்டு மாற்றம் பெற்று வளர்வதுபோல் தமிழகத்திலும் வளர்ச்சி கண்டு மாற்றம் பெற்று வளர்ந்து வருவது கண்கூடு.
அடிக்குறிப்புகள்
1. மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பதிப்பகம், சென்னை, பதினாறாம் பதிப்பு, 2001, ப.53.
2. மேலது, ப.13.
3. பூ. இந்துமதி, தமிழில் அறிவியல் நாவல்கள், வாசுதேவன் கண்ணன் வெளியீட்டகம், கோவை, 2005, ப.44.
4. சுஜாதா, விஞ்ஞானச் சிறுகதைகள், உயிர்மைப் பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 2007, ப.11.
5. கார்த்திகேசு சிவத்தம்பி, நாவலும் வாழ்க்கையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013, ப.4.



வள்ளுவச் சிலம்பு




தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு ஒப்பற்ற வழிபாட்டு நூலாகத் திகழ்வது திருக்குறள்.  இந்நூல் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கும் வழிகாட்டியாக விளங்குவதால் உலகப்பொதுமறை என்கின்றோம்.
            “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
                        வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று பாரதியார் பாடியது முற்றிலும் உண்மை.  வள்ளுவரது நெஞ்சமும் உலக மக்களின் வாழ்வியலும் ஒரே தராசில் சம எடையாக நிறுத்தளந்த்துபோல் ஒரே சீராக நிற்பதைக் கண்டவர் பாரதியார். அதனால்தான்  அவர் இவ்வாறு வள்ளுவரைக் குறிப்பிடுகின்றார்.  இதனை மெய்ப்பிக்கும் விதமாக,
            “எல்லாப் பொருளும் இதன்பால்உள; இதன்பால்
            இல்லாத எப்பொளும் இல்லையால்”
என்று திருவள்ளுவ மாலை எடுத்துரைக்கின்றது.  இதனை மெய்ப்பிக்கும் விதமாக வள்ளுவப் பெருந்தகை கூறிய திருக்குறள் கருத்துக்களைப் பின்னர் வந்த தமிழ்ப் புலவர்கள் தம்முடைய நூல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.  பல நூல்களுக்கு வழிகாட்டியாக அமைந்த முதல் நூலாகத் திருக்குறள் விளங்குகின்றது.  திருவள்ளுவர் வகுத்துத் தந்த வழியினைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் தோன்றியுள்ளன.  அந்த வகையில் தமிழ் மொழியில் தோன்றிய முதல் தமிழ்க் காப்பியம் என்றும், முத்தமிழ்க் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் போக்கில் ஆங்காங்கே திருவள்ளுவரின் கருத்துக்களைச் செருகி வள்ளுவத்தைக் கற்பக மரமாக வளர்த்துள்ளமை வெள்ளிடை.
            “அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
            உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
            ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்”
                                                                                    (சிலப்.பதிகம், 55-57)
அரசியலில் குற்றம் செய்தவர்களை அறமே யமனாகிக் கொல்லும், புகழ் பொருந்திய பத்தினியை உயர்ந்தோர் புகழ்வர். ஊழ்வினை காலம் வரும்போது வடிவெடுத்து வந்து தன் பயனைத் தரும் ஆகிய மூன்று நியதிகளை அடிப்படையாகக் கொண்டது சிலப்பதிகாரம்.  இந்நியதிகளை எழுதுவதற்கு இளங்கோவடிகளுக்குத் திருக்குறள் ஆதாரமாக அமைந்திருக்கிறது எனலாம்.  இம்மூன்று நியதிகளையும் திருக்குறளோடு ஒப்பிட்டு எழுதின் விரியும் என்பதால் ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்ற நியதிக்கு இளங்கோவடிகள் திருக்குறளை எவ்வாறு பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை விளக்குவதாக ‘வள்ளுவச் சிலம்பு’ என்னும் இக்கட்டுரை அமைகிறது. 
            ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
            சூழினுந் தான்முந் துறும்”                             (குறள்.380)
என்று திருவள்ளுவர் ஊழின்வலியைக் கூறுகின்றார்.  அதாவது, தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுயாபமே யானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்.  அதனால் ஊழ்போல் மிக்க வலிமையுடையது வேறு எது வும் இல்லை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
            ஊழ்வினை இரண்டு வகைப்படும்.  அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.  இதனை ஆகுஊழ், போகுஊழ் என்பர்.
            ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்குக் காணரம் அவனது முற்பிறவியின் பயனே என்கிறது திருக்குறள்.
            ஒருவர் வாழ்க்கையில் இன்பம் துன்பம் ஆகிய முன்வினையின் தொடர்ச்சியாகவே இப்பிறவியில் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.  இந்தப் பிறவியல் ஒருவர் இன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா அல்லது துன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா என்பதை அவரின் முற்பிறவிப் பயனைப் பொறுத்து அமையும் எனலாம்.  ஒருவர் செய்த வினை அவரையே சேருமேயல்லாது மற்றவரைச் சேராது.
            “பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
            ஆகலூ ழுற்றக் கடை.”                      (குறள்.372)
ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனைப் பேதையாக்கும்.  அவனறிவு சுருங்கி இருப்பினும் கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃததனை விரிக்கும் என்பார் பரிமேலழகர்.  அதாவது, தீவினை தோன்றினால் அறிவைக் கெடுத்துவிடும் என்றும், நல்வினை தோன்றினால் அறிவை விரிவுபடுத்தும் என்றும், செல்வமும், வறுமையும் போல் அறிவீனமும், அறிவுடைமையும் கூட நம்முடைய தீவினை, நல்வினை மூலம்தான் ஏற்படும் என்றும் வற்புறுத்துகிறது வள்ளுவம்.
 “எனைப்பகை யுற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றடும்”                              (குறள்: 207)
எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்.  அவ்வாறன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் என்பர்.  அதாவது, எத்தகைய கொடிய பகையை உடையவர்களும், அதிலிருந்து தப்பி வாழ முடியும்.  ஆனால் தீவினை என்னும் பகை விடாமல் பின் தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.
            ஒருவனுடைய நிழல் அவனைவிட்டு நீங்காமல் அவனைத் தொடர்ந்து வருதல்போல பிறர்க்குத் தீவினைசெய்தால் அத்தீவினை அவனை நிழல்போல் தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.  தீவினைக்கு என்றும் மன்னிப்பு என்பது கிடையாது.  தீவினை செய்த ஒருவன் இந்தப் பிறவியில் தண்டனை பெறவில்லை என்றாலும் மறுபிறவியில் நிச்சயம் தண்டனை பெற்றே தீருவார் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.  இக்கருத்தினை இளங்கோவடிகள் மதுராபதியின் கட்டுரைப் பகுதியில்,
            “உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது”         (சிலப்.23:170-171)
எனக் கூறுகின்றார்.  அதாவது, முற்பிறப்பிற் செய்த தீவினை வடிவெடுத்து பயனளிக்க வந்த காலத்து, அக்காலத்துச் செம்மை இல்லாதவர்க்குச் செய்த தவம் உதவாது.  அது அவரைக் காக்கவும் செய்யாது.  அத்தீவினைப் பயனை அவர் முற்றிலும் தாமாகவே அனுபவித்தாக வேண்டும்.
            இந்திரவிழாவின் போது கோவலனும் மாதவியும் மகிழ்ந்து பாடிய கானல் வரிப்பாட்டில் ஊழ் தன் விளையாட்டைத் தொடங்கியது எனலாம்.  கோவலன் பாடிய பாடலில் தன் மனதில் வேறு மகளிர்பால் கோவலனுக்கு விருப்பம் சென்றுள்ளது என்பதைக் குறிப்பால் பொருள் கண்ட மாதவி, கோவலனிடம் இருந்த யாழினைத் தான் வாங்கி, தானும் ஒரு குறிப்பினள்போல் பாடினாள்.  இவ்விடத்தில்தான் ஊழ்வினை உருத்து வந்து பயனைத் தரத் தொடங்கியது.
            “கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என
யாழ்இசைமேல் வைத்துத் தன்ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்”
                                                            (சிலப்.கானல். கட்டுரை. 2-4)
என்பதால் கோவலன் மாதவியைப் பிரிந்ததற்குக் காரணம் ஊழ்வினைதான் எனக் காண்கின்றோம். 
            கானல்வரிப் பாட்டால் மனமுடைந்த கோவலன் கண்ணகியிடம் திரும்பி வருகின்றான்.  கண்ணகியை அழைத்துக் கெண்டு மதுரைக்குப் புறப்படும் எண்ணமே ஊழ்வினையால் விளைந்தது எனலாம்.  இதனை இளங்கோவடிகள்,
            “காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப”                     (சிலப்.10:3-4)
என்பதால் முன்னைத் தீவினையானது வந்து உருத்தியதன் பயனாக உள்ளம் தன்னைச் செலுத்த கோவலனும் புகாரைவிட்டு ஏகினான் என்கின்றார்.  அதுபோல், பாண்டிய மன்னனும் முன்வினைப் பயனைத் தரும் காலம் என்பதை சற்றும் ஆராயாமல் “கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க” என்பதற்கு,
            “வினைவிளை காலம் ஆதலின் யாவதும்”             (சிலப்.16:148)
என்கின்றார்.
 வினைவிளை காலம் ஆதலின் யாவதும்            (சிலப்.16:148)
முன்வினைப் பயனைத் தரும் காலம் ஆதலால் எதையும் ஆராயாமல்கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க என்றான் பாண்டியன்.  இது அவனது முன்வினைப் பயனால் விளைந்தது.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
            பிற்பகல் தாமே வரும்                                              (குறள்.319)
என்ற திருக்குறள், துறந்தவர் பிறர்க்கின்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கட் செய்வராயின், தமக்கின்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்  என்கின்றது.  இக்கருத்தினை அடியொற்றி இளங்கோவடிகள்,
            “பரதன் என்னும் பெயரன்;அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்
“ஒற்றன் இவன்”எனப்  பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி
கொலைக் களப்பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களம் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ? பரதர் முறையோ?
ஊரீர் முறையோ? சேரீயீர் முறையோ?“               (சிலப். 23:154-161)
என மதுராபுரித் தெய்வத்தின் மூலம் கோவலனுக்கு எதிரி கோவலனே என்பதைச் சுட்டிக்காட்டி அவன் வினையே அவனை அழித்தது என்பதற்குக் கோவலனின் முற்பிறப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் காட்டுகின்றார் இளங்கோவடிகள்.
            முற்பிறவியில் செய்த தீவினை இப்பிறவியில் தானே வந்து சேரும் என்னும் வள்ளுவரின் கருத்துக்கேற்ப சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  எனவே,  இளங்கோவடிகள் ஊழின் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் திருவள்ளுவர் வழி நின்று படைத்துள்ளார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.