அறிவியல் கருத்துக்களை அடிப்படையாகவோ பின்புலமாகவோ கொண்டு கற்பனையுடன் ஆக்கப்படும் படைப்புக்களை அறிவியல் புனைவு அல்லது அறிபுனை என்பர். அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களைத் தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்டது புனைகதையாகும். குறிப்பாக வருங்கால அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியது எனலாம். கட்டுரை, சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் எனப் பல வடிவங்களில் அறிவியல் படைப்புகள் இருக்கலாம். எதிர்காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக, அதிக முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக, விண்வெணிப் பயணம், வேற்றுக்கிரக வாசிகள், இயல்பு கடந்த நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவியல் புனைகதைகள் அமையும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்விளைவுகளை ஆராய்வது அறிவியல் புனைகதைகளின் முக்கியக் கருத்தாக அமைகிறது. இங்கு அறிவியல் புனைகதையின் கூறுகள்-நோக்கம்-அமைப்பு-போக்கு பற்றி ஆராயப்படுகிறது.
அறிவியல் புனைகதையின் கூறுகள்வெவ்வேறானதும் நடக்கக் கூடியதுமான எதிர்கால உலகத்தைப் பற்றிப் பகுத்தறிவோடு ஆராய்வதாக அறிவியல் புனைவுகள் அமையும். புனைவின் அடிப்படையில் அறிவியல் புனைவுகள் அதிபுனைவுகயோடு ஒத்துப்போகும். ஆனால், அறிவியல் புனைவுகள் நடைபெறும் நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் அறிவியல் கருதுகோள்களின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் அறிவியல் மேம்பாட்டின் மூலம் நிகழக்கூடியதாகவும் இருக்கும். எனினும் சில கதாபாத்திரங்கள் அல்லது கருத்துகள் முற்றிலும் கற்பனையானதாகவும் அமையும்.வழக்கமாக அறியப்பட்டிருக்கும் நிதர்சனங்களிலிருந்து அறிவியல் புனைவுகளில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வேறுபட்டிருக்கும். ஏறக்குறைய அனைத்து அறிவியல் புனைவுகளும் வாசகர் அல்லது பார்வையாளர்களின் கற்பனைகளும் முக்கிய பங்காற்றும். மேலும், அவற்றில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு கருதுகோள்களும் கதையோட்டத்திலேயே பின்னர் விவரிக்கப்படும் அல்லது வாசகரின் கற்பனைக்கே விடப்படும். அறிவியல் புனைவின் முக்கியக் கூறுகள் பின்வருமாறு:
Ø வெவ்வேறான எதிர்காலக் கோட்பாடுகள்.
Ø அறியப்பட்ட வரலாற்றிலிருந்தும் தொல்பொருளிலிருந்து மாறுபட்டதாக அமைந்த கடந்தகாலம்.
Ø விண்வெளியில் நடைபெறும் நிகழ்வுகள்.
Ø விண்வெளிப் பயணங்கள்.
Ø வேற்றுக்கிரக வாசிகள், விகாரிகள், மனிதப்போலி எந்திரங்கள் போன்ற கதாபாத்திரங்கள்.
Ø தற்காலத்தில் இல்லாத, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய தொழில்நுட்பங்கள்.
Ø தற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கும் அறிவியல் கருதுகோள்களோடு ஒத்துப் போகாத ஆயினும் நடைபெறக் கூடிய கருதுகோள்கள்.
Ø புதிய மன்றும் வழக்கத்துக்கு மாறான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள்.
Ø மனக்கட்டுப்பாடு, தொலைவிலுணர்தல், தொலைவியக்கல் (பொருள்களைத் தொடாமல் நகர்த்துதல்) மற்றும் தொலைப்பெயர்த்தல் போன்ற இயல்பு கடந்த திறன்கள்.
Ø மற்ற அண்டங்கள் மற்றும் அதிக பரிமாணங்களும் அவற்றினிடையே பயணித்தல்
போன்ற பல்வேறு கூறுகளைப் பெற்று அறிவியல் புனைகதைகள் அமைந்திருக்கும்.
அறிவியல் புனைகதையின் நோக்கம்
தமிழில் வெளிவந்த இதுவரை வெளிவந்த அறிவியல் புனைகதைகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இடம்பெறவில்லை. எனினும் அறிவியல் புனைகதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஏற்பப் படைக்க வேண்டும் என்பர். “அறிவியல் புனைகதை என்பது அறிவியலிலும் சமுதாயத்திலும் ஏற்படும் மாறுதல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள புனைகதை வகையாகும். நிலையான அறிவியல் வாய்ப்பாடுகளுக்கு எதிரான அறிவாராய்ச்சி விரிவாக்கம், புலனாய்வு, பெருமாற்றம் ஆகியவற்றை அது கூறுகிறது. நிலையான வாய்ப்பாட்டை விடுத்து மாறுதலுக்கு இடமளிப்பதாயும், இயற்கையுடன் இயைந்ததாயும் இருக்கக் கூடிய கண்ணோட்டத்தை உருவாக்குவது இப்புனைகதை வகையின் நோக்கம்”1 என்கிறார் மணவை முஸ்தபா. அதாவது, சமுதாய மாற்றங்களை அறிவியல் பார்வையுடன் படைப்பது அறிவியல் புனைகதையின் நோக்கம் ஆகும்.
அறிவியல் புனைகதையின் அமைப்பு
“அறிவியல் புனைகதைகள் கனவுகளோ, கற்பனைகளோ மட்டுமில்லை. கூர்ந்து கவனித்தால் எதிர்காலத்தில் இப்படியும் நடக்கக் கூடும் என்ற தீர்க்க தரிசனம் இருக்கும்”2 என்று மாலனும், “சென்றகால, நிகழ்கால, வருங்கால உலகங்கள், நாகரிகங்கள் குறித்தும், விண்வெளி, காலவெளிப் பயணங்கள் குறித்தும், இயற்கை விபரீதங்களான கிரகங்களின் மோதல்கள் குறித்தும் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படைகளோடு எழுதப்பெறுவது அறிவியல் புனைகதை”3 என்று சிற்பியும், “அறிவியல் சிறுகதைகள் நடைமுறை உலகில் நிலவும் விதிகளை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. ஆனால் நடைமுறை விதிகளை மாற்றி அமைத்துப் படைக்கப்படும் உலகில் இன்றைய உலகத்தின் அடையாளங்களை முழுவதுமாக மாற்றக் கூடியது”4 என்று சுஜாதாவும் குறிப்பிடுவதிலிருந்து அறிவியல் புனைகதைகளின் நோக்கம் புலப்படுகிறது. அதாவது, அறிவியல் புனைகதைகளில் காணப்படும் கற்பனைகள் பிற்காலத்தில் நிகழக் கூடிய வல்லமை கொண்டதாகவும், கடந்த காலப் பதிவுகளுடன் வருங்கால அறிவியல் முன்னேற்றங்களை அறிவியல் புனைகதைகள் விவரிப்பதாகவும், கற்பனை, அறிவியல் விதிகளின் படி அமைய வேண்டியதில்லை. ஆனால் அறிவியல் புனைகதை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் அடிப்படை அறிவியல் அறிவு தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறமையும் அறிவியல் புனைகதையானது, “கூறுவோன் கதைக்குப் புறம்பானவனாகவிருத்தல், கதையைக் கூறும்பொழுது ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, அவை பற்றி அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கூறலாம். நிகழ்ச்சிகள் சம்பந்தமாகக் கூறுவோனுக்குத் தோன்றும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கூறலாம். அன்றேல் புறநோக்காளனாக நின்றும் கூறலாம். கூறகின்ற முறைமையே புனைகதையின் நடையாகும்”5 என்று அறிவியல் புனைகதையின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
அறிவியல் புனைகதையின் போக்குகள்
புதினம், சிறுகதை என்னும் இரண்டு இலக்கிய வகைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லாக புனைகதை அமைந்திருக்கிறது. மேனாட்டார் வருகையை அடுத்துத் தமிழ்நாட்டில் அரசியல் அமைப்புகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியதும் சிறுகதை, புதினம் என்னும் இலக்கிய வகைகள் தமிழில் இடம்பெறலாயின.
புதிய புதிய இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கியத்திற்குள் புகுவது என்பது புதிதன்று. காலங்காலமாக இவ்வாறு நடந்தேறி வருவதால் தமிழிலக்கியத்தின் பரப்பு பல்கிப் பெருகி நீண்டுக் கொண்டே இருக்கிறது. மேனாட்டார் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குவதற்குப் புனைகதைகளையே பெரும்பாலும் கையாண்டனர். தொன்றுதொட்டுக் கதைமரபு நம்மிடம் இருந்து வந்தது. எனினும் அதனை விடுத்து அதன் வழிவரும் புனைகதைகளை எழுதத் தொடங்கினர்.
புதியதாகத் தோன்றுகின்ற ஒவ்வொன்றும் பழமையின் அடியாகத் தோன்றுவதே இயற்கை. ஆகையால் புதியதாகத் தோன்றும் புனைகதைகளும் முதலில் தோன்றும் பொழுது பரம்பரையாக இருந்துவரும் கதை மரபையொட்டி, அக்கதைகளைப் போன்றே நீண்ட கதைகளாகத் தோன்றுவதே இயல்பு. தமிழில் புனைகதை இலக்கிய வகையில் முதலில் தோன்றியவை புதினங்களே. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மற்றும் ‘சுகுணசுந்தரி கதை’, இராஜமையரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆகியவை புதினங்களே. ஆனால் சிறிது காலத்தின் பின்னர் புதினங்கள் ஓரளவிற்கு செல்வாக்கு இழந்து அதற்குப் பதிலாக சிறுகதைகள் செல்வாக்குப் பெற்றன.
குடும்பம், குலம் என்ற சமூக அமைப்பு குன்றத் தொடங்கிய காலத்தில் தனிமனிதன் முக்கியமானவனானான். புதியதாகத் தோன்றி பொருளாதார உறவுகள், புதிய சமூக உறவுகளை ஏற்படுத்தின. இப்புதிய சமூக உறவுகளை எடுத்துக்காட்டுவதற்கு வழக்கிலிருந்த இலக்கியங்கள் வலுவற்றவையாயின. எனவே, மரபுக் கதைகளின் வழியாகப் புதிய இலக்கிய வகையொன்று தோன்றுவிக்கப்பட்டது. அப்புதிய இலக்கிய வகையே புனைகதையாயிற்று.
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்குமுன்ன உறவு முறைகள், அவற்றினடியாகத் தோன்றும் தனிமனிதச் சிக்கல்கள், சமுதாய நிலைமை, அந்நிலையை உணர்த்தும் மனித நடவடிக்கை, சமுதாய மாற்றம், அம்மாற்றத்தால் மனித நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம் ஆகியனவற்றைப் புதினத்தில் எழுதப்படலாம். ஒரு தனிமனிதனைக் கதாபாத்திரமாகக் கொண்டு அப்பாத்திரத்தின் வளர்ச்சியில் அல்லது இயக்கத்தில் அனைத்து சக்திகளும் செயல்படுகின்றன. இதனை உணர்ந்து அவற்றை அப்பாத்திரத்துடன் தொடர்புபடுத்தும் பொழுதுதான் புதினம் தோற்றம் பெற்றது. தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள மரபான உறவு பிறழும் நிலையிலேயே புனைகதை தோன்றும்.
சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து பெருகும் கால கட்டத்தில் வாழும் இலக்கியப் படைப்பாளர்கள் உணர்வினைத் தாக்குவது புதிய சூழ்நிலையில் தோன்றும் மனித இன்னல்கள் அல்லது புதிய சூழ்நிலையால் ஏற்படும் நடைமுறையே ஆகும். இதுவே சிறுகதையின் கருவாக அமையும். குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை.
சமுதாயத்தில் தோன்றி வளரும் மாற்றங்கள் நன்கு புலப்படப் புலப்பட அவற்றைப் பற்றிய அறிவு தெளிவாகும். அப்போதுதான் அம்மாற்றங்களை மனித வாழ்க்கையுடன் பின்னிப் பார்க்க முடிகிறது. தொடக்கத்தில் முக்கியத்துவம் பெற்ற புதினம் காலப்போக்கில் செல்வாக்கிழந்து சிறுகதை முக்கியத்தும் பெற்றது. இச்சிறுகதையும் ஒரு காலத்தில் செல்வாக்கிழந்து வேறொரு வகையாகவோ அல்லது புதினம் முக்கியத்துவம் பெறுவதாகவோ அமையும்.
இவ்வாறு தமிழில் அறிவியல் புனைகதைகளின் அமைப்பும் நோக்கும் போக்கும் அமைந்திருக்கிறது. மேலைநாடுகளின் தாக்கத்தால் தோற்றுவிக்கப்பெற்ற புனைகதை, மேலைநாடுகளில் வளர்ச்சி கண்டு மாற்றம் பெற்று வளர்வதுபோல் தமிழகத்திலும் வளர்ச்சி கண்டு மாற்றம் பெற்று வளர்ந்து வருவது கண்கூடு.
அடிக்குறிப்புகள்
1. மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பதிப்பகம், சென்னை, பதினாறாம் பதிப்பு, 2001, ப.53.
2. மேலது, ப.13.
3. பூ. இந்துமதி, தமிழில் அறிவியல் நாவல்கள், வாசுதேவன் கண்ணன் வெளியீட்டகம், கோவை, 2005, ப.44.
4. சுஜாதா, விஞ்ஞானச் சிறுகதைகள், உயிர்மைப் பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 2007, ப.11.
5. கார்த்திகேசு சிவத்தம்பி, நாவலும் வாழ்க்கையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013, ப.4.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக