உயிரினத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்குமுள்ள உறவுமுறைகளைச் சுட்டுவது சூழலியல். ஓர் உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள காரணிகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே அது நிலைத்து வாழ முடியும். உயிரினத்தைச் சூழலியலில் இருந்து பிரிக்க முடியாது. தாவரமும் விலங்கினமும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. உயிரினங்களின் செயற்பாடுகளில் அதன் சூழலியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இச்சூழலியல் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, இயற்கைச் சூழல். மற்றொன்று, உயிரினச் சூழல். சூழலியல் பாகுபாட்டில் இயற்கைச் சூழல் இன்றி உயிரினச் சூழல் உருவாகியிருக்க முடியாது. இவை இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கக் கூடியவை. இயற்கைச் சூழல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களால் ஆகியது. இவ்வைம்பூதங்களில் ஒன்றான நெருப்பினைப் பற்றி அறிவதும் அறிவுறுத்துவதுமான நிகழ்வுகளே
நெருப்பியல். இந்நெருப்பியல் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெறுவது பற்றி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
நெருப்பு
மனிதன் கண்டு பிடித்தவைகளில் பயன்பாட்டுக்கு ஏற்றவையும் பயன்பாட்டுக்கு மாறுபட்டவையும் என அமைந்திருக்கின்றன. இவற்றில் நெருப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நெருப்பின் கண்டுபிடிப்பால் மனிதன் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணத் தொடங்கினான். அழிக்கவும் ஆக்கவும் வல்லது நெருப்பு. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பினை மனிதன் வழிபாட்டுக்குரிய ஒன்றாகவும் கருதினான். இந்நெருப்பினைச் சங்கப் பாடல்களில் தீ, அழல், எரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது,
“முளிஅரில் பொத்திய முழங்குஅழல் இடைபோழ்ந்த” (கலி.13:20
)
“மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி” (அகம்.65:10)
“இருதலைக்
கொள்ளி இடைநின்று வருந்தி” (அகம்.339:9)
என்றவாறெல்லாம்
குறிப்பிடப்பட்டிருக்கக் காணலாம்.
காட்டில் மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் காட்டுத்தீ உண்டாகிறது. நெருப்புக்கு வன உயிர்கள் அஞ்சின. கோடைக்காலத்தில்
வெப்பத்தின் கால அளவு நீண்டிருப்பதால், காட்டில் உள்ள மரங்கள் காற்றில் அசைந்து மோதும். அவ்வாறு மோதும்போது நெருப்பு உண்டாகி காடு முழுவதும்
தீ பரவும். அதனால் காடு அழிக்கப்படும். இது இயற்கை நிகழ்வு. அதிக வெப்பத்தினால் பாலை நிலத்தில் இருக்கக் கூடிய
மரங்கள் ஒன்றுடனொன்று உரசி காடு அழிந்தமையை ஐங்குறுநூறு பல இடங்களில் சுட்டுகின்றது.
செல்வச்
செழிப்பு மிக்க அரசர்களின் யானைகளைப் பிணிக்கும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல,
ஒளிபொருந்திய காட்டுத்தீ தொடர்ந்து மண்டிய பாலைக் காடு என்று கூறப்புகுந்த இடத்தில்,
“ஒள்எரி
மேய்ந்த சுரத்திடை” (ஐங்.356:3)
என்றும், பிணைமானின்
விழிபோன்ற நெடிய கண்கொண்ட காதலியே! காட்டுத்தீ பரவி அதனால் அழிவுற்றதும், கோடைப்பருவம்
நீடியதால் வெம்மை மிகுந்ததும், நீண்டதும், கடத்தற்கு அரியதுமான பாலை வழியைக் கூறப்புகுந்த
இடத்தில்,
“எரிகவர்ந்து
உண்ட என்றூழ் நீள்இடை” (ஐங்.360:1)
என்றும், நல்ல
வினைத்திறத்தோடு கட்டப்பட்ட எம் பெரிய மாளிகை கல்லென்னும் ஆரவாரத்தோடு கலக்கமுற, குவளைப்பூப்
போன்ற மையுண்ட கண்களை உடைய என் மடப்பம் பொருந்திய மகள் எம்மை நீங்குமாறு செய்த அறம்
சிறிதுமற்ற ஊழும், என் மகளை இழந்து நாடொறும் கலங்கும் என்னினும் பன்மடங்கு கலங்கி,
காட்டில் எழுந்த தீயிடை அகப்பட்டு வெந்தொழிவதாக என்று கூறப்புகுந்த இடத்தில்,
“காடுபடு
தீயின் கனலியர் மாதோ” (ஐங்.376:2)
என்றும், காய்ந்து
போன மூங்கிலின்கண் தோன்றி, வீசும் காற்றால் வளர்ந்து சுடர்விட்டு எரியும் நெருப்பின்
ஒழுங்கு கற்பிளவுகளிலும், மலை முழைஞ்சுகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்புகுந்த இடத்தில்,
“முளிவயிர்ப் பிறந்த, வளிவளர் கூர்எரிச்
சுடர்விடு நெரடுங்கொடி விடர்முகை முழங்கும்
இன்னா
அருஞ்சுரம் தீர்ந்தனம்” (ஐங்.395:1-3)
என்றும் கூறப்பட்டுள்ளதைக்
காணலாம். இதுபோன்ற பாடல்களின் வரிகளில் காடு அழிந்தமை பற்றிக் காணமுடிகிறது. மேலும், காட்டுத்தீயானது கானகம் முழுவதும் பரவியதால்
மரங்களில் இருந்த இலைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இலையற்று இருந்ததைக்,
“கனைஎரி
நிகழ்ந்த இலைஇல் அம்காட்டு” (அகம்.379:19)
என்ற அகநானூற்றுப்
பாடல்வரி சுட்டிக் காட்டுகிறது.
வேனிற்
காலத்தில் கதிரவனின் மிகு வெப்பத்தால், காட்டில் வீசும் பெருங்காற்று தழைத்த மூங்கிலின்
கணுக்களைத் தாக்கும். இதனால் மூங்கில்கள் உரசி
சிதறி விழுந்த தீப்பொறிகள் தோற்றுவித்த பெருநெருப்பால் தீ உண்டாகி அக்காட்டையே அழித்தது
என்பதை,
“தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண்உறுபு தீண்டலின்,
பொறிபிதிர்பு எடுத்த பொங்குஎழு கூர்எரிப்
பைதுஅறு
சிமையப் பயம்நீங்கு ஆர்இடை” (அகம்.153:8-11)
என்ற அகநானூற்றுப்
பாடல் வரிகள் எடுத்துரைக்கக் காணலாம். இவ்வாறு
மூங்கிலால் எழுந்த தீயானது, ஊகம் புல்லின் மீது பரவி காடு முழுவதும் பரவியது. அப்போது,
அவ்வழியாக வணிகத்திற்காகச் செல்ல முயன்ற வாணிகச் சாத்தர் அவ்வழியினைத் தவறவிட்டு வழி
மாறி தீயைக் கண்டு அஞ்சி ஓடினார் என்பதை,
“…………………… சேண் இகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுல் மீமிசை வளி கழற்றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து
அலறிய சாத்தொடு” (அகம்.39:5-10)
என்ற பாடல்
வரிகள் எடுத்தியம்புகின்றன.
சூரியனின்
கதிர்கள் அளவுக்கு மீறிய வெப்பமாக இருப்பதால் காடு தன்னுடைய அழகு கெட்டு மரங்களின்
நீண்ட கிளைகளில் இருந்த இலைகள் நீரின்றிக் காய்ந்து போயின. தேக்கு இலைச் சருகுகளின் மீது காற்றுப் பட்டதால்
நெருப்பு உண்டானது. இதனை,
“காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய ஆக, ஒல்லென
வாடுபல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர்
நெடுங்கொடி விடர்முகை முழங்கும்” (அகம்.143:2-7)
என்ற அகநானூற்றுப்
பாடல் வரிகள் உணர்த்துகின்றன. காட்டில் சூறைக்காற்று
வீசுகிறது. அப்போது மூங்கில்களுக்கிடையே ஏற்பட்ட உரசலில் தீ உண்டாகிறது. இத்தீ காடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வெடிப்பையுடைய
குகைகளைக் கொண்ட மலைப் பக்கங்களில் பரவியது.
மிக்க தீயால் மூங்கிலின் கணுக்கள் வெடித்தமையால் எழுந்த ஒலி, குட்டமான கலைமான்களைத்
துரத்தியதென்பதை,
“……………………… ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடன்இயைந்து
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை
அருஞ்சுரம் நீந்தி” (அகம்.47:3-8)
என்ற அகநானூற்றுப்
பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அடர்ந்த காடுகளில் மட்டுமன்றி மூங்கில்கள் வளர்ந்த மலைகளிலும்
பலத்த காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசும் போது தீப்பரவும் என்பதை,
“………………… மலைதொறும்
மால்கழை
பிசைந்த கால்வாய் கூர்எரி” (அகம்.65:9-10)
என்ற அகநானூற்றுப்
பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம்.
இப்படித்
தானாக நெருப்பு உருவாவதன்றி மக்களாலும் நெருப்பினைத் தன்னுடைய தேவைக்காகவும் மூட்டி
இருக்கின்றனர். நெருப்பை உருவாக்க பழங்காலத்தில்
தீக்கடைக்கோலைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இத்தீக்கடைக் கோலை வெளிச்சத்திற்காக வாசலில் செருகி வைத்திருந்தனர். இதனை,
“இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல” (புறம்.315)
என்று புறநானூற்றுப்
பாடல் வரி எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறான நெருப்பை மனிதன் தன்னுடைய நாகரீக
வாழ்க்கைக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் தற்போது மிகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். இன்று, வெப்பம் ஒரு சக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வெப்பம் நச்சுத்தன்மை கொண்ட பொருள்களை எரிக்கும்போது
காற்று மாசு அடைகிறது. காற்று மாசு அடைவதால்
இயற்கையினுடைய சூழல் கெடுகிறது. இதனால் நிலத்தில்
வாழும் அனைத்துவகை உயிர்களுக்கும் அஃறிணைப் பொருள்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒருபக்கம் பாதிப்பென்றாலும் மறுபக்கம் நெருப்பின் பயன்பாடு தேவையாகவே கருதப்படுகிறது.
நெருப்பின் பயன்பாடு
தொன்று தொட்டே நெருப்பின் பயன்பாடு மக்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது. ஐம்பூதங்களில், நெருப்பைத் தான் மானிட இனம் முதன் முதலில் பயன்படுத்தியிருக்கிறது. நெருப்பின் பயன்பாடே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்க மாற்றியது என்பர்.
Ø கொடுங்குளிரிலிருந்து
தன்னைக்
காத்துக்கொள்ளவும்
Ø மாமிசத்தை
உணவு
முறைக்கு
மாறிக்கொள்ளவும்
Ø உணவைப்
பதப்படுத்திக்
கொள்ளவும்
Ø உணவு
எளிதாக
செரிக்கும்படி
மாற்றிக்
கொள்ளவும்
Ø நெருப்பின்
புகை,
ஒளி
வழியாக
இருப்பிடத்தை
அறிவிக்கவும்
Ø கொடிய
விலங்குகளிலிடமிருந்து
தன்னைக்
காப்பாற்றிக்
கொள்ளவும்
Ø தற்காப்புக்
கருவியாக
பயன்படுத்திக்
கொள்ளவும்
Ø குகைகளில்
இருந்த
விலங்குகளை
விரட்டுவதற்கும்
Ø இரவிலும் குளிர்காலத்தில் ஒளி பெறுவதற்கும்
ஆகியவற்றுக்கெல்லாம்
நெருப்பினை மனிதன் பயன்படுத்துகின்றான்.
இவ்வாறெல்லாம்
நெருப்பைப்
பற்றி பழங்காலத்தில்
எழுந்த
இலக்கியங்களில் இடம்பெற்றமையைக் கூறலாம். இந்நெருப்பு காலந்தோறும் உயிரினங்களுக்கு நன்மை
செய்வதாகவும், தீமை செய்வதாகவும் இருந்திருப்பதைக் அறியமுடிகிறது. ஆகவே, நெருப்பினைப் பற்றி அறிவுறுத்துவதும் அறிவதுமான
நெருப்பியலை ஒரு துறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுவது தேவையாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக