செவ்வாய், 15 அக்டோபர், 2024

கரந்தைச் செப்பேட்டில் அதிகாரிகள்

 

 

அரசர்கள் செய்யும் தானங்களைச் செப்புச் சாசனங்களில் பெரும்பாலும் வெளியிடுவது இயல்பு.  சோழ அரசர்களின் செப்புச் சாசனங்களுள் ஒன்றாகத் திகழ்வது கரந்தைச் செப்பேடு.  இச்செப்பேட்டுத் தொகுதி முதலாம் இராஜேந்திரனின் 57 ஏடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.  இச்செப்பேடு சோழ மன்னனின் முத்திரை முகப்புடன் வார்க்கப்பட்டு உலோக வளையத்துடன் இருபுறமும் எழுதப்பட்ட 114 பக்கங்களுடையதாய் அமைந்திருக்கின்றது.  வளையத்தில் அமைக்கப்பட்ட முத்திரை முகப்பானது புலிக்குப் பின் வரிசையாக எட்டு மங்கல சின்னங்களான முழவு, தவிசு, பன்றி,  சுவத்திகம்,  ஐந்திதழ்த்  தாமரை மலர் ஆகியவையும் புலி கயல்களுக்கு மேல் இருபுறமும் கவரியுடன் கூடிய கொற்றக்குடை, கீழமைந்த காற்பங்கிடத்தில் வில் நாணுடன் இடம்பெற திருவிளக்கு, கொடி, அங்குசம், உடைவாள் ஆகிய மங்கலச் சின்னங்களுடன் காட்டப்பட்டுள்ளன.1

சோழ அரச மரபுப் பட்டியலைக் குறிக்கும் இச்செப்பேடு, சோழர்களைச் சூரிய குலத்தில் பிறந்த மனுவின் வழி வந்தவர்கள் என்று கூறுகிறது.  பிற்பகுதியில் 13ஆம் செய்யுள் முதல் தொடங்கி வரும் செய்யுள்கள் வரலாற்றுப் பெயர்களைத் தாங்கியுள்ளன.  முதலில் சங்க கால மன்னன் கரிகாலனையும், பின் பிற்காலச் சோழ மன்னன் விசயாலயனையும், ஆதித்தனுக்குப் பின் வந்த முதல் பராந்தகன் பல்லவனை வெற்றி கொண்டமையையும் விவரிக்கின்றது.  பின் அரிஞ்சயனையும், அவன் சேவூர் போரில் வீர பாண்டியனை வெற்றி கொண்டமையையும் கூறுகின்றது.  பின்னர் இவன் வழி வந்த முதலாம் இராஜராஜன் ஈழம், பாண்டிய நாடு, சேரநாடு, கொங்கணம், ஆந்திரம் ஆகிய நாடுகளையும், மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனையும் வெற்றி கொண்டமையையும் குறிப்பிடுகின்றது.  பின் முதலாம் இராஜேந்திரனுடன் காம்போச மன்னனாகிய சூரிய வர்மன், மலேசிய மன்னனாகிய ஜெயசிம்மனின் தாக்குதலில் இருந்து விடுபட்டு நட்புறவு கொண்டது, தந்தையின் சபதத்தை நிறைவேற்ற மானியகேடத்தை அழித்தது, ஈழ மன்னனை வென்று அங்கிருந்து பாண்டியன் முடியையும் பாண்டியன் மகனையும் கைப்பற்றியது, கடாரமன்னன் ஜெயசிம்மனை வென்றது போன்ற வரலாற்று செய்திகளைச் இச்செப்பேடு தெரிவிக்கிறது.2

கரந்தைச் செப்பேட்டில் அக்காலத்தில் அரசவையில் அரசனுக்கு அணுக்கமாகவும், பெருந்தரம் மற்றும் சிறுதரமாகவும் இருந்த அதிகாரிகளின் பெயர்கள் குறிக்கப்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக, விஞ்ஞாப்பி, திருமந்திரவோலை, திருமந்திரவோலை நாயகம், கருமமாராய்வார், புரவுவரித் திணைக்களக் கண்காணி, புரவுவரித்திணைக்கள நாயகன், புரவுவரித் திணைக்களத்தார், வரிப்பொத்தகம், வரிப்பொத்தகக் கணக்கு, முகவெட்டி, வரியிலீடு, பட்டோலை, பேர்தரப்பட்டோர், ஊர்ச்சபையார் போன்ற அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

விஞ்ஞாப்பி

          அரசனிடத்து அறம் வேண்டுவோர் விஞ்ஞாப்பி.  ஸ்ரீசகநாதன் என்ற இராசேந்திரனின் தலைமை அமைச்சர் விஞ்ஞாப்பியாக இருந்துள்ளார்.3

திருமந்திரவோலை

          அரசன் வாய்மொழியாக ஆணையிடுவதனைத் 'திருவாய்மொழிதல்' என்பர்.  இத்திருவாய்மொழிதலை அப்படியே ஓலையில் எழுதுபவனே 'திருமந்திர ஓலை' எனும் பணியாளனாவான். "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டு கோட்டத்து பாலையூர் நாட்டுப் பாலையூர் கிழவன் அரையன் முடிகொண்ட சோழன்" என்பவன்  திருமந்திரவோலையாகப் பணியாற்றியுள்ளான்.4

திருமந்திரவோலை நாயகம்

          திருமந்திர ஓலையில் வல்லமையும், பயிற்சியும், முதிர்வும் உடைய தலைவர் ஓலைநாயகம் எனப்படுவர்.  அரசனின் திருவாய்மொழிதலை ஓலையில் தீட்டிய திருமந்திர ஒலையைச் திருத்தம் செய்து செம்மையாக்குவது திருமந்திரவோலை நாயகத்தின் பணியாகும்.  கரந்தைச் செப்பேடு தொகுதி 2ல் பின்வரும் நான்கு திருமந்திரவோலை நாயகர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.5

அ.      உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்து நராக்கன் கிருஷ்ணன் இராமனான இராசேந்திரசோழ பிரம்மராயன்.

ஆ.     உய்யக்கொண்டார் வளநாட்டு திரைமூர் நாட்டு சாத்தமங்கல முடையான் அரையன் ராஜராஜனான விக்கிரம சோழச் சோழிய வரையன்.

இ.      நித்த வினோத வளநாட்டு பாம்புனிக் கூற்றத்து அரை சூருடையான் ஈராயிரவன் வல்லவயினான உத்தம சோழப் பல்லவரையன்.

ஈ.       அருமொழிதேவ வளநாட்டு நென்மலி நாட்டு உத்தமசோழ நல்லூருடையான் பாளுரம் பலத்தாடியான் முடிகொண்ட சோழ விழுப்பறையன்.

கருமமாராய்வர்

அரச கட்டளையினை ஆய்ந்து முழுமை பெறச் செய்பவர் கருமமாராய்வார் ஆவார். அரசனது அணுக்கத் தொண்டாகவே கருமமாராய்வாரின் பணி அமைந்திருக்கும்.  அரசனது ஆணையினை ஆராய்ந்து சாசன ஓலையாக ஆக்கும் முழுப் பொறுப்பாளராகக் கருமமராய்வார் இருந்துள்ளனர்.  அறவாணை, செயல், நிலை விளக்கம், எல்லை, உரிமை ஆகிய செய்திகளை வரையறை செய்து முழுமை செய்பவர்.  அவர்கள் ஐவர், நால்வர் கொண்ட இரு குழுக்களாக அமைந்த ஒன்பதின்மரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அவ்வற விளக்கம் ஆணையோலை க்கப்பட்டுள்ளது.  அக்குழுக்களில் பணிபுரிவோர் பற்றிக் கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் பின்வருமாறு எடுத்துரைக்கப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  இதில் முதல் குழுவான ஐவர் முதலில் ஆராய்ந்து அடுத்து இரண்டாவது குழுவான நால்வர் இறுதி செய்திருப்பதை மேலது ஏட்டு வரிகள் உறுதிப்படுத்துகின்றன.  கரந்தைச் செப்பேட்டில் குறிப்பிடப்பெற்றிருக்கும் அக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

முதற்குழு

அ.      உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்து நராக்கன் மாராயன் ஜநநாதனான ராஜேந்திர சோழ ப்ரம்ஹாதிராஜன்.

ஆ.     உய்யக்கொண்டார் வளநாட்டு பேராவூர் நாட்டு காஞ்சி வாயிலுடையான் உதைய திவாகரந்தில்லை யாளியான ராஜராஜ மூவேந்த வேளாண்.

இ.      அருமொழிதேவ வளநாட்டு சிங்கணாட்டு இளையான குடையான ராஜாதித்தன் கூத்தாடியான பரகேசரி விழுப்பரையன்.

ஈ.       நடுவிருக்கும் நித்த வினோத வளநாட்டு கிழார் கூற்றத்தும் புள்ளமங்களத்துப் பரமேஸ்வரபட்ட ஸர்வக்ருத்துயிராகி.

உ.      உகளூர் கூற்றத்து திட்டைக்குடி மறவடிகள் ஸதாசிவ பட்டச் சோமயாஜி.

இரண்டாம் குழு

அ.      உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்நாட்டு வயலூர் கிழவன் தத்தன் சேந்தன் ராஜேந்திர சோழன் அணுக்கப் பல்லவரையன்.

ஆ.     உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டுப் பரகேசரி நல்லூருடையான் மாணிக் எடுத்த பாதமான சோழ மூவேந்த வேளாண்.

இ.      அருமொழிதேவ வளநாட்டு இடையள நாட்டு சிரிஞார் கிழவன் தன்னிச்சை ஆதித்தன்.

ஈ.       ஷத்திரிய சிஹாமணி வளநாட்டு வைப்பூர் கிழவன் தீரன் பாஸ்கரன்.

புரவுவரித் திணைக்களக் கண்காணி

மேற்கூறப்பெற்ற இரு குழுக்களின் ஒன்பது கருமமாராய்வாரின் ஆணையினை, பலதரப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகள் ஒருங்கே கூடி மேலும் ஆய்வு செய்து அவ்வறத்தினை வரியிலீடு செய்வர்.  இவ்வரியிலீடு என்பது புரவுவரித்திணைக்களப் புத்தகத்துள் அறத்தைக் குறித்து அதன் வருவாய்க்கு வரிவிலக்களித்து அரசவாணையினை அளவிட்டு அனுமதிக்கும் நிலவருவாய்த் துறையின் செயலாகும்.  இச்செயலைச் செயற்படுத்தும் அதிகாரிகள் அரசனது அழைப்பின் பேரில் எந்த நேரத்திலும் ஒருங்கு கூடக்கூடிய அதிகாரிகளாகவே இருப்பர் என்று நீலகண்ட சாத்தியார் கூறுவர்.7 இத்தகைய கூட்டத்துள் பெருந்தரம் முதல் சிறுதரம் வரை உள்ளவர்களை உறுப்பினர்களாகக் காணலாம்.

புரவு என்பது விளைநிலத்தைக் குறிக்கும். நிலவருவாய்த்துறையின் மேலாண்மையாளர் கண்காணி எனப்படுவர்.  கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் பின்வருமாறு எடுத்துரைக்கப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.8  "சத்திரிய சிகாமணி வளநாட்டு பனையூர் நாட்டு விசலூர்க் கிழவன் கணவதி யழகியான்" என்பான் முதல் இராசேந்திர சோழன் காலத்தில் புரவுவரித் திணைக்களக் கண்காணியாகப் பணி புரிந்திருக்கின்றான்.

புரவுவரித்திணைக்கள நாயகன்

புரவுவரித் திணைக்களத் துறையின் தலைமையதிகாரியே புரவுவரித்திணைக்கள நாயகன் பற்றி "நித்த விநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்தும் பூஞ்சிற்றூருடையான் நக்கன் அரங்கன்" இருந்துள்ளார் என்பதை கரந்தைச் செப்பேடு தொகுதி 2 இல் எடுத்துரைக்கப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.9

வரிப்பொத்தகம்

நிலவரிக் கணக்கினைச் சரிபார்க்கும் அலுவலர்களை வரிப்பொத்தகம் என்பர். இந்நிலையில், "சத்திரிய சிகாமணி வளநாட்டு பனையூர் நாட்டு இரையான் சேரி கிழவன் புழமதனிராமன்" என்பவன் நிலவரிக் கணக்கினை நேர்பார்க்கும் அலுவலராகப் பணிபுரிந்துள்ளான் என்பது கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல்  குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.10

முகவெட்டி

அ.      சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டிநக் கூற்றத்து உவர்க்குடி கிழான் அரையன் கணபுரம்.

ஆ.     அருமொழிதேவ வளநாட்டு ஆர்வலக் கூற்றத்து இலுப்பையூறுடையான் இராமனமலன்.

இ.      வீராணமுடையார் நூற்றெண்மன் கருணாகரன்

ஈ.       பனையூருடையான் காவிரிவெண்காடன்

ஆகியோர் முகவெட்டியாகப் பணியாற்றியுள்ளனர் என்பதைக் கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் குறிப்பிடப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.11

வரிப்பொத்தகக் கணக்கு

          "செல்காருடையான் நரதொங்கன் கருத்தன்" என்பவன் நில வருவாய்க் குறிப்பேடுகளில் அறச்செயலை வரியிலீடாக குறித்து வைக்கும் பணி புரிந்துள்ளான் என்பதைக் கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.12

வரியிலீடு

          "பூதிகுடையான் சிங்கன் புலியன்" என்பவன் வரியிலீடுகளைப் பதிவு செய்யும் பதிவாளராக இருந்துள்ளார்.13

பட்டோலை

          அரசனது ஆணை ஓலையில் எழுதப்பட்டு பல அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தணிக்கை பெற்ற அறவோலை 'தீட்டு' எனப்படும்.  தீட்டினைப் படியோலையாக ஊர்ச்சபையார்க்கு அனுப்புதற்குரியதாகத் தீட்டுபவரே பட்டோலை ஆவார்.

          "ரிகுடையான் சத்தி இராமன்" இப்பணியினைப் புரிந்துள்ளான்.14

பேர் தரப்பட்டோர்

          அரசன் தான் அளித்த அறநிலத்தின் எல்லைகளைத் தெரிவித்து அளந்தறிய ஆணையளித்து அனுப்பும் அதிகாரிகள் பேர் தரப்பட்டோர்களாவர்.  எனவே, பலதிறப்பட்ட துறையதிகாரிகளே தற்காலிகமாக நியமிக்கப்படுவர்.  இவர்களை அரசனே தேர்ந்தெடுத்தல் மரபு. 

அ.      நித்த விநோத நாட்டு வகை செய்கின்ற களத்தூர் கிழவன் சிறியான் ஆதித்தன்.

ஆ.     புரவுவரித் திணைக்களத்து பூஞ்சிற்றூருடையான் நக்கன் அரங்கன்.

இ.      பட்டன் சத்திய சிகாமணி வளநாட்டு வேளாநாட்டு ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்து கவிணியன் கிருஷ்ணமாற பட்டன்

ஆகியோர் பேர்தரப்பட்டோராகப் பணியாற்றியுள்ளனர் என்பதைக் கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் அறியமுடிகிறது.15

ஊர்ச் சபையார்

அரசியலதிகாரிகளைக் கொண்டு அரசாணை செயற்படுத்தக் கோறும் பணி வந்தவுடன் அதனை நிறைவேற்றும் பொறுப்பு ஊர்ச்சபையிடம் இருப்பது சோழராட்சியின் சிறப்புக்குரியதாகும்.  “தாங்களும் இவர்களோடும் உடனின்று எல்லை தெரித்துக் காட்டிப் பிடி சூழ்ந்து பிடாகை நடந்து கல்லுங் கள்ளியு நாட்டி அறவோலை செய்து போத்தக” எனச் சபையோரை இராசேந்திர சோழன் பெருமைப்படுத்தி இருப்பதை கரந்தைச் செப்பேடு தொகுதி 2இல் அறியமுடிகிறது.16  இவ்வுறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்படுவர்.  சோழ அரசர்களும் இவ்வூர்ச் சபையாரை மதித்து ஆட்சி செய்துள்ளனர்.

          இவ்வாறு அரசவை அதிகாரிகள் இராசேந்திரன் காலத்தில் இருந்ததைப் பற்றிக் கரந்தைச் செப்பேடு உணர்த்துவதை தெள்ளிதின் உணரலாம்.

அடிக்குறிப்புகள்

1.                         Krishnan, K.G., Karandai Tamil Sangam Plates of Rajendra Chola I8th year, The State Department of Archaeology, Government of Tamil Nadu, 1973, p.4.

2.                         கே. இராசன், வாழ்வியல் களஞ்சியம் தொகுதி - 6, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, ப.725.

3.                         ARIE for 1949?50 and 1956. P.5.

4.                         கரந்தைச் செப்பேடு தொகுதி 2, தொகை 10, பக்கம் 1, ஏடு 7, வரிகள் 17-18.

5.                         மேலது, வரிகள் 19-24.

6.                         மேலது, பக்கம் 2, ஏடு 7, வரிகள் 1-11.

7.                         Nilakanda Sastri, K.,          Cholas, University of Madras, Madras, Second Edition 1955, p.472. 

8.                         க.செ.தொகுதி 2,  தொகை 10, பக்கம் 2, ஏடு 7, வரிகள் 12-13.

9.                         மேலது, வரிகள் 13-14.

10.                     மேலது, வரிகள் 17-18.

11.                     மேலது, வரிகள் 19-21.

12.                     மேலது, வரி 22.

13.                     மேலது, வரி.22.

14.                     மேலது, வரி.23.

15.                     க.செ. தொகுதி 2, தொகை 11, பக்கம் 1, ஏடு 8, வரிகள் 20-22.

16.                     மேலது, வரிகள் 23-24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக