ஞாயிறு, 20 அக்டோபர், 2024

குமரகுருபரரின் நூல்கள்

 


          குமரகுருபரர் இயற்றிய நூல்கள் பதினொன்று எனக் கூறுவர்.  எனினும் மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை என்னும் நூல்களும் அவர் அருளியனவே என எண்ணுதற்கு இடமுண்டு.  "பதினாறு கலைகளையுடைய முழுமதிபோல் அவர் நூட்கோவை விளங்குகிறது" (குமரகுருபரர் அடிகள் வரலாறும்           நூலாராய்ச்சியும், ப.21) எனக் கா. சுப்பிரமணியபிள்ளை குறிப்பிடுவதால் இவர் இயற்றிய நூல்கள் பதினாறு என்று தெரிகிறது.  உ.வே. சாமிநாதையர் பதின்மூன்று நூல்களையே அடிகள் அருளியதாகக் குறிப்பிடுகின்றார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, முகவுரை, ப.2). இப்பதின்மூன்று நூல்களில் கயிலைக் கலம்பகமும், காசித் துண்டி விநாயகர் பதிகமும் கிடைக்கவில்லை.  எஞ்சிய பதினொன்று மட்டுமே முழுமையாகக் கிடைத்திருப்பவை ஆகும்.  அடிகள் அருளிய நூல்களின் எண்ணிக்கை பற்றிச் சிறப்புப் பாயிரம்,

          "கலிவெண்பாவெறும் ஒலிபெறும் அலங்கல்அக்

          குகன் திருமுடி தனக்கு உகந்திடச் சூட்டி

          பிள்ளைக் கவி முதல் வெள்ளைக் கிழத்தி

          மாலை யீறாகச் சாம்பமை பிரபந்தம்

          முந்நான் கியற்றித் தனக்குச் சமய

          நிலையையுங் காட்டி யுலைவிலாதியாரும்

          தீதெலா மொருவி நீதியே புரிய

          நீதிநெறி விளக்கமென்று ஏதமில் பனுவலும் இயற்றினர்"

(குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, முகவுரை, ப.11)

எனக் குறிப்பிடுகிறது.

ஞானகுருவும் அருள்வாக்கும்

          சிவஞான உபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து குமரகுருபரருக்கு வரவே தமக்குரிய ஞானாசிரியரைத் தேடி வரும் வேளையில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை அறிந்து அவரை ஞானாசிரியராகப் பெற்றார்.  பின் தமக்குத் துறவு நிலையருள வேண்டினார்.  அங்ஙனம் செய்தற்கு முன் தலயாத்திரை செய்து வரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார் காசி யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டனர்.  காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று கூறிய குமரகுருபரரை நோக்கிச் சில காலம் சிதம்பர வாசமேனும் செய்யும்படிப் பணித்தனர்.

          ஞானாசிரியர் கட்டளைப்படியே சிதம்பரம் செல்லும் வழியில் வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்து கொண்டு அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி மீது பிள்ளைத்தமிழ் இயற்றினார்.  பின்பு சிதம்பரம் சென்று சில காலம் தங்கியிருந்தனர். அக்காலத்தில் 'சிதம்பர மும்மணிக்கோவை' என்னும் பிரபந்தம் இவரால் இயற்றப்பட்டது.

          சிவநேசகர்களும் தமிழறிவுடையவர்களும் ஆகிய சில அன்பர்கள் யாப்பருங்கலக்காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் சமண சமயச் சார்பு உடையனவாய் இருத்தலின் அதற்கு உதாரணமாக நடராசப் பெருமான் விசயமான செய்யுட்களை இயற்றித் தரவேண்டுமெனக் கூறச், 'சிதம்பரச் செய்யுட்கோவை' எனும் நூலினை அருளினார்.

          சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்து வந்த குமரகுருபரர் தம் ஞானதேசிகர்பால் சென்று தம் வேட்கையை மீண்டும் விண்ணப்பிக்க, அவர் தம் பரிபக்குவத்தையறிந்து துறவு நிலை யருளினார்.  அப்பொழுது ஞானதேசிகர் மீது பண்டார மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தை இயற்றினார்.

காசி வாழ்வும் கலைமகள் அருளும்

          அடிகளார் ஞானதேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும், தவப் பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார்.  அப்பாதுஷாவின் தாய்மொழியாகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள கலைமகளை நோக்கிச் சகலகலாவல்லி மாலை என்னும் நூலினை அருளினார். 

கலைவாணியின் அருளால் சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவிடம் பேசிப் பழகினார்.  இவர்பால் கொண்ட அன்பினால் பாதுஷா காசியில் மடம் அமைக்க இடம் தந்து உதவினார். அதுவரை மறைபட்டிருந்த ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

          அடிகளார் காசியில் வாழும் காலத்துப் படைக்கப்பட்ட பிற நூல்கள் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் ஆகும்.  குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தருமபுரம் வந்து ஞானாசிரியரைத் தரிசித்து மீண்டும் காசிக்குச் சென்று வாழ்ந்து விளங்கியிருந்து வைகாசித் திங்கள் கிருட்டினபட்ச திதியில் இறைவனடி அமைந்தார்.

நூல்கள்

          இக்கருத்திற்கேற்ப உ.வே. சாமிநாதையர் பதிப்பில் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லை சிவகாமியம்மை இரட்டைமணிமாலை ஆகிய பதினான்கு நூல்கள் இடம்பெற்றுள்ளன. அடிகள் சிற்றிலக்கிய நோக்கிலே பல நூல்களையும் இயற்றியுள்ளது, அவர்தம் கால இலக்கிய வகைக்குச் சான்றாகும்.  சிவபெருமான் மீது ஐந்து நூல்களும், உமையம்மை மீது நான்கு நூல்களும், முருகன் மீது இரண்டு நூல்களும், கலைமகள் மீதும் ஞானகுரு மீதும் முறையே ஒரு நூலும், நீதிக்கருத்து இயைய ஒரு நூலும் இயற்றியுள்ளார்.

1.      கந்தர் கலிவெண்பா

          இந்நூல் குமரகுருபரர் அருளிய முதல் நூல் ஆகும்.  122 கண்ணிகளை உடையது.  கலிவெண்பா யாப்பில் அமைந்தது.  சைவ சித்தாந்தக் கருத்துக்களை முன்னர்க் கூறி முருகனுடைய தோற்றம், அருட்செயல்களை அடுத்து வைத்த அடிகள் தமது வேண்டுகோளை இறுதியில் அமைத்துப் பாடியுள்ளார்.

          இந்நூல் தோத்திர நூலாகவும், சாத்திர நூலாகவும் திகழ்கிறது.  பழுத்த தமிழ்ப் புலமையும், ஒழுக்கமும் பெறுதற் பொருட்டுச் சைவர்கள் பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்பட்டு வரும் சிறப்புடையது.  இந்நூலில் கந்தபுராணக் கருத்துக்கள் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளன.

2.      மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

          இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.  இது பெண்பாற் பிள்ளைத்தமிழைச் சார்ந்தது.  இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் எடுத்துரைக்கின்றன. 

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்ற ஏழும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இரண்டுக்கும் பொதுவானவை.  சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் இறுதியில் அமைக்கப்படுவன.  ஆசிரிய விருத்தப் பாவால் பாடப்பெறும் குழந்தையின் மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத் தொன்றாம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒன்றாக ஒவ்வொரு பருவத்தையும் அமைத்துப் பத்துப் பருவங்களால் பாடப்படுவதாகும்.

          அடிகளின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மேற்கூறிய இலக்கண அமைதிகள் அழகுற அமைந்துள்ளன.  கடவுள் வாழ்த்து ஒன்றும், காப்புப் பருவத்தில் பதினொன்றும், ஏனைய ஒன்பது பருவங்களில் பப்பத்து வீதம் தொண்ணூறுமாக 102 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இந்நூலுக்குச் சிறப்பான இடமுண்டு. மீனாட்சியம்மையைக் குழந்தை யாகப் பாவித்து அன்போடும் பக்தியோடும் ஒப்பில்லாத மகிழ் வோடும் குமரகுருபரர் பாடிப் போற்றுகிறார்.  அடிகள் துறவறத்தை மேற்கொண்டிருப்பினும் இல்லற இன்பமான குழந்தைப் பருவ அனுபவங்களை அழகுற எடுத்தியம்புகிறார்.  இவற்றால் இந்நூலின் சிறப்பு தெரிய வருகிறது.

3.      மதுரைக் கலம்பகம்

          இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.  இது கலம்பக அமைப்பில் பாடப்பெற்றுள்ளது.  இந்நூல் மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது பாடப்பெற்றது.  கலம்பகம் என்னும் சொல்லுக்குக் கலவை என்பது பொருள். 

'பல்பூமிடைந்த படலைக் கண்ணி'

(பெரும்பாணாற்றுப்படை, அடி.174)

எனவரும் பெரும்பாணாற்றுப்படை தொடருக்கு, உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல பூக்கள் நெருங்கிய கலம்பகம் ஆகிய மாலை என உரை செய்துள்ளார் என உ.வே.சா. குறிப்பிடுகின்றார் (பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ப.228).  எனவே, பல்வேறு வகைப்பட்ட நிறமும், மனமும், வடிவமும் உடைய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை, கலம்பகம் எனப் பெயர் பெறும்.  இங்ஙனம் பலவகைப்பட்ட பாக்களும், இனங்களும், உறுப்புகளும் விரவி வரும் கவிதைத் தொகுதி கலம்பகம் எனப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

          புயவகுப்பு, தவம், வண்டுவிடுதூது, அம்மானை, பாண், மதங்கியர், கைக்கிளை, சிந்து, ஊசல், கவி, மடக்கு, ஊர், மரம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், மேகவிடுதூது என்னும் பதினெட்டு உறுப்புகளை அமைத்துப் பாடுவது கலம்பகமாகும் என்று வெண்பாப்பாட்டியல் செய்யுளியலில் உள்ள16ஆவது பாடல் எடுத்துரைக்கிறது.  இக்கலம்பக உறுப்புகளில் பல்வேறு பாட்டியல் நூல்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.  இந்நூல் விநாயகர் காப்புப் பாடலுடன் 103 பாடல்களைக் கொண்டது.

4.      நீதிநெறி விளக்கம்

          அடிகள் மதுரையில் தங்கியிருந்த காலத்துத் திருமலை நாயக்க மன்னன் ஒருநாள் உணவு கொள்ளக் காலந் தாழ்ந்தமை கண்டு,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"

(திருக்குறள், ப.377)

என்ற குறளை அடிகள் கூறினார்.  அக்குறளின் பொருள் கேட்டு வியந்த மன்னன், திருக்குறட் கருத்துக்களை எளிதாகவும், சுருக்கமாகவும் பாடி அருளுமாறு வேண்டிக் கொள்ள நீதிநெறி விளக்கம் எனும் இந்நூல் அடிகளால் பாடப்பட்டது என்பர் (குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, பா.21). 

காப்புச் செய்யுளில் நிலையாமையை உணர்த்தும் எம்பிரான் மன்றினை வழுத்தாதது என்னே? என்று கூறுவதை நடராசர் துதி என்று கொண்டு இந்நூல் சிதம்பரத்தில் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்று தோன்றுவதாக உ.வே.சாமிநாதையர் கருதுகின்றார் (குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, பா.14).

இக்கருத்திற்கேற்ப இந்நூலின் காப்புச் செய்யுள் அடிகளின் சிதம்பரச்செய்யுட் கோவையிலும்,

கூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்

தோற்றம் துடைத்தேர் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்

ஏற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்

போற்றினா னல்கும் பொருள்

(சிதம்பரச் செய்யுட்கோவை, பா.8)

என்று காணப்படுகிறது.

          எனினும் திருமலை மன்னனால் சிறப்பிக்கப்பெற்றவராதலால் அவன் வேண்ட மதுரையில் பாடியிருப்பதாகக் கொள்வதே ஏற்றது.  இலக்கியம் இயற்றவல்ல புலவர்கள் நீதி நூலும் இயற்ற விரும்புதல் அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது போல் தெரிகிறது.  எனவே தான் குமரகுருபரர் ஒரு நீதி நூலும், சிவப்பிரகாசர் மற்றொரு நீதிநூலும் இயற்றினார்கள் என்று மு. வரதராசனார் குறிப்பிடுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு, ப.194).

          இந்நூல் காப்பு உட்பட 102 வெண்பாக்களைக் கொண்டது.  நீதிக் கருத்துக்களைக் கூறினும் இலக்கிய இன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.   கல்வி, செல்வம், அரசுநிலை, காமத்தின் இழிவு, நிலையாமை, உலகியல் ஒழுக்கம், துறவறம் முதலிய கருத்துக்கள் பற்றி அடிகள் எடுத்துரைத்துள்ளார்.

5.      திருவாரூர் நான்மணிமாலை

          இந்நூல் திருவாரூர் தியாகராசப் பெருமான் மீது பாடப் பெற்றது.  வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய பாக்களில் 40 பாடல்கள் அமைவது நான்மணிமாலை ஆகும் என்று வெண்பாப் பாட்டியல் செய்யுளியல் 16ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

இந்நூல் நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை ஆசிரியப்பா என்ற முறையில் 40 பாடல்கள் அந்தாதியாக அமைய இயற்றப்பட்டதாகும்.  விநாயகர் காப்புடன் 41 பாடல்கள் உள்ளன.  திருவாரூரின் அழகும், கமலாலயமும் தியாகேசரின் அற்புதச் செயல்களும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன.

6.      முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

          இந்நூல் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்த முருகப் பெருமானைப் பற்றிய ஆண்பாற் பிள்ளைத்தமிழாகும்.  முற்கூறிய பிள்ளைத்தமிழ் இலக்கணங்களுக்கேற்ப முதல் ஏழு பருவங்களும் அமைந்து இறுதியில் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற மூன்றும் இணைய ஆண்பாற் பிள்ளைத்தமிழாகப் பாடப்பட்டுள்ளது.  முருகனைச் சிறு குழந்தையாக்கி அவர்தம் அற்புதச் செயல்களை அழகுபடப் புனைந்துள்ளார்.

முருகனது சிறப்புகளையும் வைத்தீஸ்வரன் கோயில் வருணனையும் விரிவாகப் பாடியுள்ளார்.  இந்நூலிற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமார தேவன் பிள்ளைக்கவி என்னும் பெயர்களும் ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகின்றன (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.289).

7.      சிதம்பர மும்மணிக்கோவை

          புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்னும் மூன்று மணிகள் மிடைந்த கோவையைப் போல மூன்று வேறு செய்யுட்களால் அந்தாதித் தொடையமைப்பில் பாடப்படுவது இப்பிரபந்தம் ஆகும் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.378).  விநாயகர் காப்புடன் இதில் 31 பாடல்கள் உள்ளன. 

மும்மணிக்கோவை இலக்கியத்திற்கு இயைய நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பாக்களில் அந்தாதியாக 30 பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. 

இந்நூலைத் (தில்லை சிற்றம்பலவன் மும்மணிக்கோவை) என்றவாறு அடிகள் குறித்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.378). தில்லை இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்ட நூல்.

8.      சிதம்பரச் செய்யுட்கோவை

சிதம்பரச் செய்யுட்கோவை பல்வகை யாப்பினால் ஆகிய 84 செய்யுட்களைக் கொண்ட கோவை நூல். யாப்பருங்கலக் காரிகையின் செய்யுளியலின் அமைப்பிற்கேற்ப அதனை அடியொற்றிய மேற்கோள் பாடல்களாக யாக்கப்பட்டிருக்கின்றன.  இந்நூல் யாப்பிலக்கணமாகவும் சைவக் கடவுளான சிவனைப் பற்றியதாகவும் அமைத்து இயற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு செய்யுளுக்கும் யாப்பிலக்கணக் குறிப்புக்கள் அடிகளா லேயே எழுதப் பெற்றுள்ளன. 

அடிகளின் இறையனுபவமும், வழி காட்டும் மொழிகளும் விளங்குகிறது.  யாப்பிலக்கணத்திற்கும், இறைச் சிறப்பிற்கும் ஏற்ற வகையில் இருவகை நற்பயன் விளைவித்தல் தனிச் சிறப்பாகும்.  மேலும் இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் திகழ்கிறது.

9.      பண்டார மும்மணிக்கோவை

          மும்மணிக்கோவையின் இலக்கணத்திற்கு ஏற்ப நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக்கலித்துறை என்ற முறையில் அந்தாதியாக அமைந்து 30 பாடல்களைக் கொண்டதாக விளங்குகிறது.  இந்நூலின் முதற்கண் விநாயகர் காப்புப் பாடல் ஒன்றும், இறுதியில் நூற்சிறப்பும் அடிகளின் அடக்கமும் கூறும் முறையில் அமைந்த பாடல்கள் நான்கும் இடம்பெற்றுள்ளன.  சில பழைய பதிப்புகளில் மேலும் இரு பாடல்கள் மாசிலாமணி தேசிகரின் சிறப்பினைக் கூறும் முறையில் அமைந்து இந்நூலின் இறுதியில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.450). 

திருமயிலை சுப்பராய ஞானியாரால் பதிப்பிக்கப்பெற்ற பண்டார மும்மணிக்கோவையில் மேலும் ஒரு பாடல் காணப்படுகிறது.  இதனை உ.வே. சாமிநாதையர் தனிச் செய்யுட்களில் சேர்த்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.8). 

இவை அனைத்தையும் சேர்க்க இந்நூலிடத்து நூற்கருத்தோடு பெரிதும் தொடர்புடைய வகையில் மற்ற ஏழு பாடல்களும் அமைந்துள்ளன.

          தருமையாதீன நான்காம் பட்டத்திற்குரிய மாசிலாமணி தேசிகர்பால் அடிகள் ஞானோபதேசம் பெற்று, அவர் மீது இந்நூலைப் பாடியுள்ளார். 

இந்நூல் சிறந்த குருவணக்கப் பாமாலையாய்த் திகழ்கிறது. அடிகள் தமக்கு உபதேசித்த குருவின் சிறப்பையும், சிவனே குருவாக வந்துள்ளமையையும் தெளிவாக உணர்த்துகிறார்.  தமக்கு அருளியமையையும், குருவிற்குரிய தருமை, கயிலை, மதுரை ஆகிய தலங்களின் வளத்தையும் இடையிடையே காட்டியும், சித்தாந்தக் கருத்துக்கள் விளங்க அமைத்தும் இந்நூலைப் பாடியுள்ளார்.  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக மூர்த்திகள் ஆதீன மகாசந்நிதான குருமூர்த்திகளாதலால் அவர்கட்குப் பொதுவாக வழங்கும் பெயரால் இந்நூல் "பண்டார மும்மணிக்கோவையெனப் பெயர் பெறுவதாயிற்று" (தருமபுர ஆதீனம் பத்தாண்டு ஆட்சி மலர், ப.160) என்று ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

10.    காசிக்கலம்பகம்

          விநாயகர் காப்புடன் 101 பாடல்கள் பெற்றுள்ள காசிக் கலம்பகம் கலம்பக இலக்கண முறையை ஒட்டிக் காசியில் உள்ள விசுவநாதர் மீது பாடப்பட்டதாகும்.

இந்நூல் இறைக்கருணை யையும், முதன்மையையும், காசிப் பதியின் சிறப்பையும் எடுத்து இயம்புகிறது.  சைவசித்தாந்தக் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. 

கொச்சகக் கலிப்பா 1ம், நேரிசை வெண்பா 14ம், கலித்துறை 27ம், மருட்பா ஒன்றும், ஆசிரியப்பா 3ம், கலிப்பா 13ம், ஆசிரிய விருத்தம் 35ம், கலிவிருத்தம் 3ம், கலித்தாழிசை 2ம், வஞ்சி விருத்தம் 1ம், வஞ்சித் துறை ஒன்றும் அமைந்துள்ளன. இருபது கலம்பக உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. அவ்வுறுப்புகளால் 26 பாடல்களும், அகப்பொருள் மரபில் 39 பாடல்களும், இறைவனைப் பற்றி அமைந்த புறப்பொருள் மரபில் 36 பாடல்களும் இடம்பெற்று உள்ளன. 

அடிகள் அருளிய மதுரைக் கலம்பகத்தோடு ஒப்பு நோக்கும்போது தவம், காலம், இரங்கல், மடல், வலைச்சியார், இடச்சியார், கிள்ளைவிடுதூது, கார் ஆகிய உறுப்புகள் காசிக் கலம்பகத்தில் இடம்பெறவில்லை.  பாங்கி விடுதூது என்னும் உறுப்பு மதுரைக் கலம்பகத்தில் இடம்பெறவில்லை.  ஆனால் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

11.    சகலகலாவல்லி மாலை

          கலைமகள் மீது பாடப்பட்டுள்ள இந்நூல் சகலகலாவல்லி மாலை என்றும் சரசுவதி தோத்திரம் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.581) என்றும், வெள்ளைக் கிழத்தி மாலை (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.11) என்றும் வழங்கப்படுகிறது.  பத்து கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளது. கலைமகள் சிறப்பினை உரைத்துத் தமக்கு அருளுமாறு வேண்டும் முறையில் இந்நூலை அமைத்துள்ளார். 

இதுபோன்று எளிய நடையிலுள்ள சரசுவதி தோத்திரம் வேறு இன்மையின் இந்நூல் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.  மண்ணாளும் அரசரையும் தன் பண்ணால் பணியச் செய்ய கலைவாணியை நோக்கி,

          "விண்கண்ட தெய்வம் பல்கோடியன்

                    பேனும் விளம்பிலுன் போற்

          கண்கண்ட தெய்வம் உளதோ

                    சகலகலா வல்லியே"

(சகலகலாவல்லிமாலை, பா.10)

என்று வேண்டுகிறார்.

12.    மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை

          வெண்பாவும், கலித்துறையுமாக இருபது பாடல்கள் அந்தாதி அமைத்துப் பாடுவது இரட்டைமணிமாலை எனப்படும் என்று பன்னிரு பாட்டியல் 151ஆம் நூற்பா எடுத்துரைக்கிறது. 

பவளமும் முத்தும் ஆகிய இருவேறு மணிகள் மிடைந்த மாலை போல் அமைந்துள்ளது.  இந்நூலும் இருபது பாடல்கள் அமைய அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது.  அடிகள் மீனாட்சியம்மை தன் மனத்து உறைவதைப் பலவிடத்தும் குறிக்கின்றார்.  பிற நூல்களில் காணும் சொல்லாட்சி, கருத்து, கற்பனை முதலியன இந்நூலிலும் இழையோடி உள்ளன.

13.    மதுரை மீனாட்சியம்மை குறம்

          இந்நூலும் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடப்பெற்றதாகும்.

          "இறப்பு நிகழ்வெதிர் வென்று முக்காலமுந்

          திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே"

(பன்னிரு பாட்டியல், நூ.216)

என்ற இலக்கணத்திற் கேற்பக் குறத்தி, குறிசொல்வதாக அமைந்தது.  இந்நூலில் மதுரை இறைவனிடத்து காமுற்ற தலைவி ஒருத்தியிடம் குறத்தி குறி கூறும் முறையில் மீனாட்சியம்மையின் பெயரும், புகழும் பேசப்படுகின்றன. 

குறத்தியின் பொதியமலைச் சிறப்பும், அவனது வரலாறும், குறிச் சிறப்பும் விரிவாக இடம்பெற்றுள்ளன.  அம்மைக் குரிய தசாங்கம் கூறி வாழ்த்தும் முறையில் நூல் முடிவுறும்.

          விநாயகர் காப்புப் பாடல் ஒன்றும், குறத்தி கூற்றாக 51 பாடல்களும் ஆக 52 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  இவற்றுள் 29 பாடல்கள் சிந்து என்னும் இசைப்பாடல்களாக இருத்தல் குறிக்கத்தகும்.

'வருங்காலம், நிகழ்காலம், கழிகாலம் என்ற மூன்றையும் ஒக்க வகுத்துப் பார்த்துத் தருகாலம் தெரிந்து உரைப்பது எளிதேயன்றி அரிதன்று.  எங்கள் குறச்சாதிக்கு என்று குறத்தி கூறுவது குறம் என்ற பிரபந்தத்திற்குப் பொருந்துவதாய் உள்ளது.  அப்பாடல் பின்வருமாறு அமையக் காணலாம்.

ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் கெண்ணெயுமோ

டுறுப்பு மீந்தார்

பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ நினைத்தவெல்லாம்

புகல்வன் கண்டாய்

வருகால நிகழ்காலங் கழிகால மூன்றுமொக்க

வகுத்துப் பார்த்துத்

தருகாலம் தெரிந்துரைப்ப தெளிதரிதன் றெங்கள்குறச்

சாதிக் கம்மே.

(மீனாட்சியம்மை குறம், பா.24)

14.    தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

          இந்நூல் தில்லையில் கோயில் கொண்டுள்ள சிவகாமியம்மை மீது பாடப்பெற்றதாகும். இந்நூல் நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாக அந்தாதித் தொடையில் இருபது பாடல்கள் அமைத்துப் பாடப்பட்டு உள்ளது. தில்லை இறைவனுடைய பெருமையினும், இறைவியின் பெருமை பெரிதென்பது இந்நூலில் குறிக்கப்படுகிறது.

          இவ்வாறுகுமரகுருபரர் நூல்கள் பற்றியும் அந்நூல்களின் அமைப்பு முறைகள் பற்றியும் அறியமுடிகிறது.

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக