அரசர்கள் செய்யும் தானங்களைப்
பெரும்பாலும் செப்புச் சாசனங்களில் வெளியிடுவது இயல்பு. சோழ அரசர்களின் செப்புச் சாசனங்களுள் ஒன்றாக
திகழும் முதலாம் இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு 57
ஏடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இச்செப்பேடு சோழ மன்னனின்
முத்திரை முகப்புடன் வார்க்கப்பட்டு உலோக வளையத்துடன் இருபுறமும் எழுதப்பட்டு
மொத்தம் 114 பக்கங்களுடைய தொகுப்பாய் அமைந்திருக்கின்றது. வளையத்தில் அமைக்கப்பட்ட
முத்திரை முகப்பானது புலிக்குப் பின் வரிசையாக எட்டு மங்கல சின்னங்களான முழவு,
தவிசு, பன்றி, சுவத்திகம், ஐந்திதழ்த் தாமரை மலர் ஆகியவையும் புலி கயல்களுக்கு மேல்
இருபுறமும் கவரியுடன் கூடிய கொற்றக்குடை, கீழமைந்த
காற்பங்கிடத்தில் வில் நாணுடன் இடம்பெற திருவிளக்கு, கொடி,
அங்குசம், உடைவாள் ஆகிய மங்கலச் சின்னங்களுடன்
காட்டப்பட்டுள்ளன (Karandai Tamil Sangam Plates of Rajendra Chola I8th
year, p.4).
சோழ அரச மரபுப் பட்டியலை இச்செப்பேடு
குறிப்பிடுகிறது. சோழ மரபைக் குறிக்கும்
பொழுது சூரிய குலத்தில் பிறந்த மனுவின் வழி வந்தவர்கள் என்று கூறுகிறது. பிற்பகுதியில் 13ஆம் செய்யுள் முதல் தொடங்கி வரும் செய்யுள்கள் வரலாற்றுப் பெயர்களைத்
தாங்கியுள்ளன. முதலில் சங்க கால மன்னன்
கரிகாலனையும், பின் பிற்காலச் சோழ மன்னன் விசயாலயனையும்,
ஆதித்தனுக்குப் பின் வந்த முதல் பராந்தகன் பல்லவனை வெற்றி கொண்டமையை
விவரிக்கின்றது. பின் அரிஞ்சயனையும்,
அவன் சேவூர் போரில் வீர பாண்டியனை வெற்றி கொண்டமையைக்
கூறுகின்றது. பின்னர் இவன் வழி வந்த
முதலாம் இராஜராஜன் ஈழம், பாண்டிய நாடு, சேரநாடு, கொங்கணம், ஆந்திரம்
ஆகிய நாடுகளையும், மேலைச் சாளுக்கிய மன்னன்
சத்தியாசிரயனையும் வெற்றி கொண்டமையைக் குறிப்பிடுகின்றது. பின் முதலாம் இராஜேந்திரனுடன் காம்போச
மன்னனாகிய சூரிய வர்மன், மலேசிய மன்னனாகிய ஜெயசிம்மனின்
தாக்குதலில் இருந்து விடுபட்டு
நட்புறவு கொண்டது, தந்தையின் சபதத்தை நிறைவேற்ற மானியகேடத்தை அழித்தது, ஈழ மன்னனை வென்று அங்கிருந்து பாண்டியன் முடியையும் பாண்டியன் மகனையும்
கைப்பற்றியது, கடாரமன்னன் ஜெயசிம்மனை வென்றது போன்ற வரலாற்று
செய்திகளைச் செப்பேடு தெரிவிக்கிறது (வாழ்வியல் களஞ்சியம்
தொகுதி -6, ப.725).
நில அளவும்
உரிமையும்
அக்கால மன்னர்கள்
நிலங்களையும், எளிய முறையில் மிகத் துல்லியமாக அளந்து வரியை
விதித்துள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சோழர், பாண்டியர்
காலத்தில் நிலம் அளக்கப்பெற்ற செய்தியைப் பல கல்வெட்டுக்கள்
குறிப்பிடுகின்றன. முதலாம் இராசராசனின் 14ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.999) 'குரவன் உலகளந்தான்
இராசமாராயன்' என்பவனின் தலைமையில் சோழநாடு முழுவதும் நன்கு
அளந்து கணக்கிடப் பெற்றது. இரண்டாம்
முறையாக முதலாம் குலோத்துங்க சோழனின் 16ஆம் ஆட்சியாண்டில்
(கி.பி.1086) "திருவேகம் பம்தேவன்" என்பவரின்
தலைமையில் நிலம் அளக்கப்பெற்றது (கல்வெட்டில் வாழ்வியல்,
ப.243). மேலும், அரசர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பிராமண மக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ நிலம் தானமாக வழங்கும் போது அதன் எல்லைகளை அளந்து கல்லும் கள்ளியும் நடுவார்கள்.
இதுபோன்ற முறை இச்செப்பேட்டிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
நில அளவைகளும் வரிகளும்
நில அளவுகளைப் பொறுத்தவரை காலத்தின் சூழ்நிலைக்கேற்பப் பல்வேறு வகையான அளவு முறைகள் இருந்துள்ளன. 'மா' என்பது வேலி இருபதின் ஒரு பங்கைக் குறிக்கும்
நில அளவு ஆகும். 144
(12x12) சதுர அடிகளைக் கொண்டது ஒரு குழியாகும். 100 குழிகளைக் கொண்டது
ஒரு மா என்பது இன்றைய வழக்கியும் இருந்துவரும் பொதுவான அளவு முறையாகும். அக்கணக்கில் ஒரு
மாவின் பரப்பளவு 14400 சதுர அடிகளைக்
கொண்டதாகும். ஈண்டு அடி என்பது இரு சாண் அளவைக் குறிப்பதாகும் (ஓலைச்சுவடியியல், ப.62). இதுபோன்ற நில அளவு முறைகளில் மிகத் துல்லியமான கீழ் அளவுகளான முந்திரிகை, முக்காணி, அரைக்காணி,
அரைமா போன்றவைகளைப் பயன்படுத்தி அதற்கேற்றவாறு வரி விதித்துள்ளதைக்
கரந்தைச் செப்பேடு பின்வருமாறு எடுத்துரைக்கக் காணலாம்.
1.
திரிபுவன மஹாதேவி
பேரேரியில் 578 வேலி 7 மா
வரையரைக்காணி கீழ் 4 மா முக்காணிக்கீழ் முக்காலே 1 மா நிலத்துக்கு 200 கலம் நெல்
2.
நெற்குப்பையில் 160½ வேலி 2 மா வரை கீழ் 7 மா
அரைக்காணி முந்திரிகை கீழ் 4 மா நிலத்துக்கு 1500 கலம் நெல்
3.
செம்பங்குடியில் 137 வேலி 6 மாகாணி யரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 4000 கலம் நெல்
4.
குளப்பாடுவில் 119 வேலி 1 மாகாணி யரைக்காணி முந்திரிகைக் கீழரையே 3 மா முக்காணி நிலத்துக்கு 3100 கலம் நெல்
5.
துளாரில் 114¾ வேலி காணி முந்திரிகைக் கீழ் முக்காலே 1 மா
அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 3900 கலம் நெல்.
6.
நல்லம்பரில் 122½ வேலி 4 மா வரை கீழரையே 4 மா
வரை முந்திரிகைக் கீழரையே 2 மா நிலத்துக்கு 800 கலம் நெல்
7.
திரிபுவன மாதேவி
நல்லூரில் 90 வேலி 7 மா
முக்காணிக் கீழரையே 3 மா அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 2500 கலம் நெல்
8.
வீச்சூரான சிக்கரில்
79 வேலி 8 மா முக்காணி முந்திரிகைக் கீழ் 7 மா முக்காணிக்கீழ் முக்காலே 1 மா நிலத்துக்கு 1100 கலம் நெல்
9.
முஞ்ஞாவலில் 77 வேலி 6 மா வரை அரைக் காணிக்கீழ் 8 மா நிலத்துக்கு 400 கலம் நெல்
10.
கூத்தனூரில் 76¾
வேலி முந்திரிகைக் கீழரையே 2 மா அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 2000 கலம் நெல்
11.
கமுகஞ்
செந்தன்குடியில் 75¾ வேலி 3 மாகாணி அரைக்காணிக்கீழ் 3 மா அரைக்காணி முந்திரிகைக் கீழ் 4 மா நிலத்துக்கு 2500 கலம் நெல்
12.
வைகுந்த நல்லூரில் 70½ வேலி அரைக்காணி முந்திரிக்கைக்கீழ 3 மா அரைக்காணி
முந்திரிகைக்கீழ 4 மா நிலத்துக்கு 1100
கலம் நெல்
13.
மஹிமாலய நல்லூரில் 69 வேலி 8 மாகாணிக்கீழ் அரையே 3
மா முக்காணிக்கீழ் முக்காலே 1 மா நிலத்துக்கு 2500 கலம் நெல்
14.
பரகேஸரி நல்லூரில் 58 வேலி 3 மா முக்காணியரைக்காணி முந்திரிகைக்கீழ் காலியும் உள்ள நிலத்துக்கு 200 கலம் நெல்
15.
பெண்ணாகடத்தில் 55 வேலி ½ மா அரைக்காணிக்கீழ் முக்காலே 3 மாகாணி அரைக்காணிக்கீழ் 8 மா நிலத்துக்கு 600 கலம் நெல்
16.
உறத்தூரில் 54ரு வேலி காணிக்கீழ் காலேயரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 1000 கலம் நெல்
17.
சிறையூரில் 49 வேலி 2 மா அரைக்காணிக் கீழரையே 4 மாகாணி அரைக்காணிக்கீழ் 8 மா நிலத்துக்கு 1300 கலம் நெல்
18.
கீழ்ச்சோற்றுத்
துறையில் 45½ வேலி 1
மாகாணி முந்திரிகைக்கீழ் 7 மா வரை அரைக்காணி
முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 1000 கலம் நெல்
19.
நெடுவாயிலில் 39¾ வேலி 4 மா அரைக்காணிக் கீழரையே 2 மா முக்காணிக்கீழ் முக்காலே 1 மா நிலத்துக்கு 1750 கலம் நெல்
20.
புளிகைக்குடியில் 38¾ வேலி 3மா வரை அரைக்காணிக் கீழரையே 3 மா அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 1200 கலம் நெல்
21.
பெருங்குடியில் 31¾ வேலி காணிக்கீழ் முக்காலே 4 மா அரைக்காணி
முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 600
கலம் நெல்
22.
முண்டனூரில் 29½ வேலி 4 மா வரை கீழ் 8 மா
அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 600 கலம் நெல்
23.
தாமோத நல்லூரில் 26½ வேலி 1 மா வரை கீழ் 3 மா
அரைக்காணி முந்திரிகைக்கீழ் 4 மா நிலத்துக்கு 300 கலம் நெல்
24.
செய்யா நல்லூரில் 24½ வேலி 4 மா வரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் 7 மா வரை முந்திரிகைக் கீழரையே 2 மா நிலத்துக்கு 1100 கலம் நெல்
25.
சிற்றாலி நல்லூரில் 25¾ வேலி 2 மா வரை அரைக்காணிக் கீழ் 3மா வரை முந்திரிகைக்கீழரையே 2 மா நிலத்துக்கு 1000 கலம் நெல்
26.
நித்த வினோத
நல்லூரில் 23 வேலி நிலத்துக்கு 1000 கலம் நெல்
27.
கருவூரில் 18 வேலி 6 மா வரை முந்திரிகைக்கீழ் முக்காணிக்கீழ்
முக்காலே 1 மா நிலத்துக்கு 700 கலம்
நெல்
28.
வீரசோழ நல்லூரில் 16½ வேலி மாகாணி முந்திரிகைக் கீழரையே 4 மாகாணி
அரைக்காணிக் கீழ் 8 மா நிலத்துக்கு 800
கலம் நெல்
29.
கொஞ்ஞாப்பூரில் 16 வேலி 7 மா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரையே
2 மா நிலத்துக்கு 400 கலம் நெல்
30.
ஆதி நல்லூரில் 82½ வேலி மா அரைக்காணிக்கீழ் ¾ , 4 மா 3 காணி ½ காணி
முந்திரிகைக் கீழ் முக்காலே 3 காணி நிலத்துக்கு 1000 கலம் நெல்
31.
சிறுமுன்னியூரில் 44½ வேலி 4 மா 3 காணி
முந்திரிகைக் கீழ் 8 மா முக்காணி ½
காணிக்கீழ் 8 மா நிலத்துக்கு 400 கலம்
நெல்
32.
மேட்டு மேற்குடியில்
36½ வேலி 4 மா வரை ½ காணி
முந்திரிகைக்கீழ் 9 மா வரையான நிலத்துக்கு 1000 கலம் நெல்
33.
பூதமங்கலத்துப்
பாலகாடன் காரிகுறிச்சியில் 21 வேலி 1மா ½ காணி முந்திரிகைக் கீழ் 8
மா காணி ½ காணி முந்திரிகைக் கீழ் 8 மா
நிலத்துக்கு 500 கலம் நெல்
34.
விளங்குடியில் 6 வேலி 8 மா காணி கீழரையே காணி ½ காணி கீழ் 8 மா நிலத்துக்கு 150 கலம் நெல்
35.
நெடுங்கணக்குடியில் 13 வேலி 3 மா 3 காணி கீழ்
முக்காலே 2 மா காணி ½ காணி கீழ் 8 மா நிலத்துக்கு 250 கலம் நெல்
36.
பூதமங்கலத்து
பாலயலூட்டி காணியில் 7 வேலி 4 மா ½ காணி முந்திரிகைக் கீழரையே 2 மா 3 காணிக் கீழ் முக்காலே 1
மா நிலத்துக்கு 50 கலம் நெல்
37.
பள்ளிசந்த
மிறங்கினஸ்ரீகரண மங்கலமான கொட்டாரக் குடிப் பள்ளியில் 45 வேலி 3 மா வரை ½ காணி
முந்திரிகைக் கீழரையே ½ மா முந்திரிகைக் கீழரையே 2 மா நிலத்துக்கு 350 கலம் நெல்
38.
புறக்குடியில் 12ரு வேலி முந்திரிகைக் கீழ் காலே முந்திரிகைக் கீழ் கீழரையே 2 மா நிலத்துக்கு 300 கலம் நெல்
39.
இவ்வூர்கள் யாண்டு 8வது முதல் ஓரூராய் அளந்தபடி நிலம் 3135 வேலி 4 மா வரை முந்திரிகைக்கீழ் முக்காலே 2 மா 3 காணி ½ காணிக் கீழ் 7மா 3 காணி 5150 கலம் நெல்
40.
உதையமார்த் தாண்ட
சதுர்வேதி மங்கலத்தில் 102¾ வேலி காணி ½ காணி முந்திரிகைக் கீழ் 1 மா வரை முந்திரிகைக்
கீழரையே 2 மா நிலத்துக்கு 5000 கலம்
நெல்
41.
ஸ்ரீபூதியில் 148 வேலி 8 மா 3 காணி ½ காணி முந்திரிகைக் கீழ் 3 மாகாணி ½ காணிக் கீழ் 8 மா நிலத்துக்கு 5000 கலம் நெல்
என்றவாறு
ஊர்தோறும் நில அளவுகளுக்கு ஏற்ப நெல்
வரியாகப் பெற்றதை மேற்காணும் விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
நில உரிமையும் வரி வகையும்
தானம் வழங்கிய நிலத்தில்
காராண்மை, மீயாட்சி போன்ற நில உரிமைகள் பேசப்படுகின்றன. இச்செப்பேட்டின் வாயிலாக முன்காணி உடையவர்களை
மாற்றி குடி நீக்கிவிட்டு, காராண்மை, மீயாட்சியும்
உள்ள வெள்ளான் வகை ஊர்களை எல்லாம் ஆண்டு 8ஆவது முதல்
திரிபுவன மாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற பிரம்மதேயமாக மாற்றிய செய்தியைத்
தெரிவிக்கின்றது. மேலும் பள்ளிச்சந்தம், தேவதான ஊர்களையும் பிரம்ம தேயமாக
மாற்றி வழங்கியுள்ளான். எடுத்துக்காட்டாக
பள்ளிச் சந்தமிறங்கின கொட்டாரக்குடி பள்ளியும், பருத்தி
நிலத்து திறப்பான தேவதானம் தேவத்தானக்குடியையும் குறிப்பிடலாம்.
காராண்மை என்பது கார்
காலத்தில் பயிரிட உரிமை பெறுந்தன்மை, மழைக்காலத்தில்
நீர்ப்பாய்ச்சலின்றி விளையும் நெல் என்றும், நிலத்தை உழும்
உரிமையைக் குறிக்கிறது என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், காராண்மை காணி எனவும், காராண்மையுமாக
குடுக்கையில் எனவும் கல்வெட்டில் காணலாம் (கல்வெட்டுத் தேன்துளிகள், ப.243). மீயாட்சி என்பது நிலத்தைக்
கட்டுப்பாடின்றி துய்க்கும் மேலுரிமையையும் குறிக்கும். இந்த இரண்டு நில உரிமை பற்றிய சொற்கள்
காணப்பட்டாலும் விரிவான செய்தியை இச்செப்பேட்டில் அறிய
இயலவில்லை.
பெரும்பாலும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய ஊர்களின் நிலங்கள் இறை
நீக்கப்பட்டதாகவும், நீக்கப்படாததாகவும் கொடுக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறியலாம். ஆனால், வரி
வசூலிக்கப்பட்ட பிரம்மதேய ஊர்களுக்கு உதாரணமாக இந்த திரிபுவன மாதேவி
சதுர்வேதிமங்கலம் விளங்குகின்றது.
திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்து தானமாக வழங்கப்பட்ட நிலத்தில்
முதலாண்டின் கூடுதல் வருவாய்க்குரிய வரியில் 4இல் 1 பங்கும், 2ஆம் ஆண்டு 4இல் 2 பங்கும், 3ஆம் ஆண்டு 4இல் 3 பங்கும், 4ஆம் ஆண்டு 4இல் 4 பங்கும் முழுமையாக இறை கட்டுமாறு கணக்கிட்டு, அதற்கேற்ப
இறைக்கட்டும் உரிமையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரம்மதேய நிலமென்பது விலை
கொடுக்காமல் தானமாகப் பெற்ற அனுபோக உரிமையினையே கொண்டுள்ளது என்பது விளங்கும்.
"யாண்டு எட்டாவது
முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும், இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்றும் கூறும்,
இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின ஆட்டாண்டு தோறும்
நின்றிறையாப்பிருப்பதாகவும்" (க.செ.தொ.2, ஏடு 6, ப.2, வரி 16-14) எனும்
செய்தி விளக்குகின்றது. நான்காம் ஆண்டின்
நிறைவு முதல் முழு வரியினைப் பிரம்மதேயத்தாரும்
கட்டியுள்ளனர்.
மேலும், இடைப்பாட்டம், தட்டார்பாட்டம்,
பிதாநாழி, வட்டிநாழி, கண்ணாலக்
காணம், மீன்பாட்டம், ஈழம்பூச்சி,
இலைக்கலம், தறிப்புடவை, தரகு,
ஆட்டுக்கிறை, நல்லா, நாடுகாவல்,
நல்லெருது, ஊரடுபோக்கு, வீரப்பிடி,
உல்கு, வாலமஞ்சாடி, ஓடக்கூலி,
மன்றுபாடு, மாவறை, தீபெறி,
கூத்திக்கால், வண்ணாரப்பாறை போன்ற வரி வகைகள்
இச்செப்பேட்டில் பேசப்படுகின்றது.
மேலும், பிரம்மதேய ஊர்களில் பிராமணர்கள் மட்டுமே
காணப்படுவார்கள் என்பது பொதுவான கருத்து.
அவ்வூர்களில் பிற வகுப்பினரும் வாழ்ந்துள்ளனர் என்பதை இச்செப்பேட்டின்
மூலம் அறிய முடிகின்றது. ஏனெனில்
மீன்பாட்டம் என்ற வரி வகை 41 ஊர்களில் வசூலிக்கப்பட்டு
உள்ளதைக் கொண்டு கூறலாம்.
இச்செப்பேட்டின் வாயிலாக
உதயமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலமும், ஸ்ரீபூதி
என்ற ஊர்கள் தனித்தனி பிரம்மதேயமாகக் காணப்பட்டுள்ளது. இதனை ஆண்டு 8ஆவது முதல்
திரிபுவன மாதேவி சதுர்வேதிமங்கலத்தோடு ஓரூராக இணைந்து கொண்டு தங்களுடைய நிலங்களைப்
பெற்று அந்த நிலத்தில் வரும் வருவாயைத் தாங்கள் வசூலித்துக் கொள்ளுமாறு
ஆணையிட்டுள்ள செய்தியை அறியலாம். (எ.கா.) "இவ்வூரொடும்
உன்னுடைய பிராம்ஹணர் தங்கள் நிலந்தாங்களே பெற்று தங்கள் நிலத்தால் வந்த இறை
தாங்களே இறுப்பதாக ஏறின உதயமாத்தாண்ட சதுர்வேதிமங்கலமும் ஸ்ரீபூதியும் வீரசோழ
வளநாட்டு ப்ரம்ஹதேயம் திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலத்தோடும் யாண்டெட்டாவது
மூலகுடி ஆக" (கரந்தை செப்பேட்டு தொகுதி 2, ப.75) எல்லா ஊர்களிலும் வரியாக
நெல் வசூலிக்கப்பட்டுள்ளன. இருப்பினும்
ஒருசில ஊர்களில் நெல் அளவு கூடியும், குறைந்தும்
காணப்படுகின்றன. மேலும் வரி வருவாய் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேட்டில்
குறிக்கப்பெறும் வரி வகைகளின் விவரங்கள் பின்வருமாறு:-
1.
ஈழம்பூச்சி - கள்
இறக்குவதற்கு விதிக்கும் வரி. இதனை ஈழம்
புஞ்சை என்றும் கூறுவர்.
2.
தறிப்புடவை - ஆடை
நெய்வோர் தறிக்கு ஒரு புடவையாகச் செலுத்தும்
வரி
3.
இடைப்பாட்டம் -
இடையர் வரி
4.
நாடுகாவல் - கிராம
காவலினின்றும் வேறானதாக நாடு என்னும் பிரிவின் காவலை மேற்கொள்வதற்கான
வரி
5.
வட்டி நாழி -
முன்னாளில் வழங்கி வந்த வரி வகை
6.
புரவு
- நிலவரி. அரசிறை, இக்கணக்கு அடங்கிய
புத்தகம்.
7.
ஆட்டுக்கிறை -
தர்மத்துக்கு அளிக்கப்படுவனவற்றிற்கு விதிக்கப்பெறும் வரி
8.
ஊரடுபோக்கும் -
ஊர்ப்பொது நிலத்துக்கு அரசுக்குரிய நிலத்து வழி அமைத்துக் கொள்ளுதற்குரியதாக
பெறும் வரி.
9.
உல்கும் - சுங்கவரி.
கடல்துறைமுக வழியாக ஏற்றுமதி, இறக்குமதி
செய்யப்பெறும் பொருள்களின் மீது விதிக்கப்பெறும் வரி.
10.
ஓடக்கூலி - ஏரி,
ஆறு முதலிய நீர்நிலைகளைக் கடப்பதற்கு அரசோ, ஊராரோ
அமைத்துள்ள ஓடத்தில் செல்லுதற்குரிய கட்டணமாகவும் செலுத்துபவனுக்குரிய கூலியாகவும் பெறும் வரி.
11.
மன்றுபாடும் - கிராம
நியாய விசாரணை சபையார் செய்த தீர்ப்புப்படி மன்றத்திலேயே செலுத்தும் அபராதப் பணம்.
12.
மாவறையும் - ஊர்களிலும், நெடுஞ்சாலைகளிலும் அரசு
அமைக்கும் குதிரைலாயம் போன்ற கட்டுத்தறிகட்கு அரசு பெறும் வரி
13.
தீபெறியும் -
சூளையிடுதல் போன்ற பெருந்தீயிட்டு ஆக்கும் தொழில்கட்கு அரசு பெறும் வரி.
14.
கல்லெருது - சிறந்த
சாதி எருதுகளை வளர்ப்பதற்குரியதாக
அரசுபெறும் வரி.
15.
நல்பசு - கிராமத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ள
பசுக்களின் பாதுகாப்பிற்கான வரி.
16.
வீரபிடியும் -
வீரர்கள் மீது வசூலிக்கப்படும் வரி.
17.
மீன்பாட்டாங்காசு -
மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது வசூலிக்கப்படும் வரி
இதுபோன்ற
வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் (க.செ.தொ.2, ஏடு
20, பக்.1-2, வரிகள் 24-25).
மேலும், இச்செப்பேட்டில்
அவ்வூர்களின் பெயர்களும் நான்கு எல்லைகளும், விளைநிலம்
கணக்கும் அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லும், காசும் அவற்றைப் பெறுவதற்குரிய அந்தணர்களின்
ஊர்களும், பெயர்களும் இங்கு விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களில் இருந்து நெல்லும், காசும் ஆண்டுதோறும் பெற்று வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.
இராசன்,
கே., வாழ்வியல் களஞ்சியம் தொகுதி - 6, தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988.
2.
கிருஷ்ணன்,அ.,
கல்வெட்டில் வாழ்வியல், மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை, 1991.
3.
கோவைமணி, மோ.கோ., ஓலைச்சுவடியியல், சோழன்
பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2022, ப.62.
4.
கோவிந்தராசன்,
சி., & தெய்வநாயகம்.சி.கோ., கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி 2, மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், மதுரை, 1984.
5.
மகாதேவன், வே., கல்வெட்டுத் தேன்துளிகள்.
6.
Krishnan, K.G., Karandai Tamil
Sangam Plates of Rajendra Chola I8th year, The State Department of Archaeology,
Government of Tamil Nadu, 1973.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக