செவ்வாய், 15 அக்டோபர், 2024

சோழர் மெய்க்கீர்த்திகள்

 


          தன் ஆட்சியில் நிகழ்ந்த உண்மையான வரலாற்றுச் செய்திகளை முறையாக விளக்கும் மெய்க்கீர்த்தியை முதன் முதலில் தோற்றுவித்தவன் இராசராசன்.  அவனுடைய மெய்க்கீர்த்தி தொடங்கி சோழர்களின் மெய்க்கீர்த்திகளில் காணப்படக் கூடிய சில முக்கியச் செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்பெறுகிறது. இதற்கு ஆதாரமாக பூ. சுப்பிரமணியம் அவர்களின் மெய்க்கீர்த்தி எனும் நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இராசராசன் (கி.பி.985-1014)

          காந்தளூர் போரில் மரக்கலங்களை அழித்து மக்களுக்கு அருள் செய்தவனும்,   வேங்கை நாடு, கங்க பாடி, நுளம்ப பாடி, தடிகை பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழ மண்டலம், இரட்டபாடி, பழந்தீவு ஆகிய நாடுகளை வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டவனும் ஆகியவன் இராசராசனாவான்.  இவனுக்குத் திருமகளும் நிலமகளும் உரிமையுடையோராயினர்.  அதனால்,

          "திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

          தனக்கே உரிமை பூண்டமை மக்கொள"

(முதலாம் இராசராசன், வரிகள்.1-2)

என்பது இராசராசன் மெய்க்கீர்த்தியின் தொடக்கமாகும்.  இராசராசன் பெருஞ்செல்வத்தை உடையவன்.  ஆதலின் செல்வத்திற்கு உரியவளாகிய நிலமகளும் தனக்கே உரிமை பூண்டவளாக அமையவேண்டும்.  இப்பரந்த நிலவுலகம் முழுமையும் தன் ஆட்சியின் கீழ் அடங்க வேண்டும் என்பது அவனது ஆசை.  இதையே இவ்வரிகள் விளக்குகின்றன.  காந்தளூர்ச் சாலை முதலாகப் பல நாடுகளையும் வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தித் தன் நாட்டை விரிவுபடுத்தினான்.

          இராசராசனின் சிறிய தந்தையாகிய உத்தமசோழனது ஆட்சியில் இளவரசனாக இருந்தபோது பெற்ற அரசியல் அனுபவமும், அவனது தனித்த பேராற்றலும் இணைந்து நின்றன.  அவன் பட்டம் பெற்றவுடன் தன் நாட்டை விரிவுபடுத்தும் ஒரு பெரும் திட்டத்தைத் தீட்டித் தந்தன.  அவனது திட்டத்தை 'மனக்கொள' என்னும் தொடர் புலப்படுத்துகிறது.

          "காந்தளூர்சாலை கலமறுத்தருளி (வரி.3), கோஇராசகேசரி வர்மன்" (வரிகள்.13-14) என்ற தொடர்களே தனி ஒரு மெய்க்கீர்த்தியாக இராசராசன் கல்வெட்டுகள் சிலவற்றுள் காணப்படுகிறது.  காந்தளூர்ப் போர் இவனது கன்னிப்போர் என்பது பெறப்படுகிறது.

          "வேலை கெழு காந்தளூர்ச்சாலை" என்பது ஒரு கடற்கரைப் பட்டினம் ஆகும்.  இராசராசன் காந்தளூர்ச்சாலை என்னும் இடத்தில் சேரரோடு போரிட்டு அவர்தம் கப்பற்படையை அழித்தான் என்பதும், இராசராசன் காலத்துச் சேர நாட்டை ஆண்டவன் பாஸ்கர ரவிவர்மன் (கி.பி.978-1036) என்பதும், இராசராசன் அச்சேர மன்னனிடம் ஒரு தூதுவனை அனுப்பினான் என்பதும், அவனைச் சேரன் சிறை பிடித்ததால் சினம் கொண்ட இராசராசன் சேர நாட்டின் மீது படையெடுத்தான் என்பதும் காந்தளூர்ச்சாலை போருக்குரிய காரணங்களாகும்.

          இவ்வுலகத்தில் துன்பம் நீங்கவும், நாட்டினைத் தூய்மை செய்து இந்நிலவுலகில் புலிக்கொடியை உயர்த்தியவன் மதிசூடி வலம்புரி இடம்புரி டைய இடபத்தில் வீற்றிருப்பவனாகிய சடைமுடியை டைய இறைவனின் நெற்றிக் கண்ணையும், நிலவுலகத்து மானிடர் நினைந்த நடையுடை கண்ணையும் சிந்தாமணியையும் போன்று சோழர் குலத்தில் தோன்றி புகழ் வளர்த்தவன் இராசராசன் ஆவான் என்று அவனுடைய மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன.

முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012-1044)

          "திருமன்னி வளர" என்பது இராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் தொடக்கமாக அமைந்த மங்கலமொழித் தொடராகும்.  இவனது மூன்றாம் ஆண்டு முதல் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.  இவனது மெய்க்கீர்த்தியானது பதின்மூன்றாம் ஆட்சியாண்டு வரை வளர்ந்துள்ளது.  எனவே, பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக்குப் பிறகு போர் நடைபெறவில்லை என்று தெரிகிறது.

          இவனது ஆட்சியில் செல்வம் நிலைத்து வளர்ந்தது.  நில மடந்தை, வெற்றி மடந்தை, புகழ் மடந்தை ஆகியோர் அவனுக்குத் துணைவியராகி விளங்கினர்.  இடைதுறைநாடு முதலாகக் கடாரம் ஈராக உள்ள பல நாடுகளை வென்று, தன் நாட்டை விரிவுபடுத்தினான்.  முறைப்படி பரகேசரி என்னும் பட்டப்பெயரைப் பெற்றான் என்பன போன்ற பல செய்திகள் இவனுடைய மெய்க்கீர்த்திகளால் அறியமுடிகிறது.

முதலாம் இராசாதிராசன் (கி.பி.1018-1054)

          கங்கைகொண்ட சோழபுரத்தைத் தன் தலைநகராகக் கொண்ட முதலாம் இராசாதிராசன்,

          "திங்களேர் பெறவளர் அங்கதிர்க் கடவுள்"

          "திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்"

போன்றவாறு அமைந்த மெய்க்கீர்த்திகளை அமைத்திருக்கின்றான்.  முதலாம் இராஜேந்திரனின் நிலப்பரப்பை இராசாதிராசனும் தன் வெண்கொற்றக்குடை நிழலில் செங்கோலோச்சினான்.  மேலும் பாண்டிய நாடு, வேணாடு, கூவகம், காந்தளூர்ச்சாலை போன்ற பிற நாடுகளிலும் படையெடுத்துச் சென்று தன்னாட்டோடு சேர்த்துக் கொண்டான்.  இவன், செயங்கொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயரையும், இராசகேசரி என்னும் பட்டப் பெயரையும் பெற்றவன்.  இராசாதிராசன் தன் ஆட்சியில் தன் சிறிய தந்தை, தமையன், தம்பியர், தன் மக்கள் ஆகியோருக்குத் தன் நாட்டில் சில பகுதிகளை ஒதுக்கி அவர்களுக்கு முடிசூட்டினான்.

          மானாபரணன், வீரகேரளன் ஆகிய இரு பாண்டிய மன்னரையும் வென்றான்.  சுந்தரபாண்டியனைத் தோற்றோடச் செய்தான்.  வேணாட்டு மன்னன் இராமகுட நாட்டு மன்னன், சாளுக்கிய மன்னன் ஆகியோரைப் போரில் தோற்கடித்தான்.  ஆகவமல்லனின் படைத்தலைவர்களாகிய கண்டப்பய்யன், கங்காதரன், சாங்கமய்யன்  ஆகியோரைக் கொன்றான்.  ஆகவமல்லனின் விக்கியண்ணன், விநயாதித்தன் ஆகியோரையும் வென்றான்.  வில்லவர், மீனவர், சாளுக்கியர் போன்ற பல மன்னர்களை அடக்கி அவர்கள் அளித்த திறைப்பொருள்களை மறையவருக்கு அளித்தான்.  அசுவமேத யாகம் செய்து அரசு வீற்றிருந்தான்.

          இராசாதிராசன் இலங்கை, கன்னகுச்சி ஆகிய நாட்டு மன்னர்களைக் கொன்றான்.  விச்சயன் போன்ற பல சாளுக்கிய மன்னர்களை வென்றான்.  சாளுக்கிய மாளிகையை எரியூட்டினான். ஆகவமல்லனின் ஒற்றரைப் பிடித்து அவர்கள் மார்பில் ஆகவமல்லனின் அச்சத்தை எழுதித் துரத்தினான். சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமரசி என்ற மூன்று நீர்த்துறைகளிலும் தன் யானைப்படையை நீராடச் செய்தான்.  இவ்வாறு வீரக்கொடியும், தியாகக் கொடியும் எடுத்துத் தான் கவர்ந்த பொருள்களை இரவலர்க்கு அளித்தான்.  கூர்ச்சரர்களை வென்றான்.  தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்குரிய நாட்டை அவர்களுக்கு அளித்தான்.  கல்யாணபுரம் என்னும் நகரை அழித்து மாளிகையைப் பொடியாக்கி அவ்விடத்திலேயே விஜய ராசேந்திரன் என்ற பெயரோடு விசயாபிஷேகம் செய்துகொண்டான்.  பின் தன் நாடு திரும்பிய இராசகேசரிவர்மரான இராசாதிராசன் அசுவமேத யாகம் முதலியன செய்து மனுநெறி தவறாது செங்கோல் செலுத்தினான் என்று இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்துகின்றன.

இரண்டாம் இராசேந்திரன் (கி.பி.1051-1063)

          "இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு" என்ற தொடக்கத்தினைக் கொண்ட ஒரு மெய்க்கீர்த்தியில் இரண்டாம் இராசேந்திரன் இரட்டபாடி ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான் என்பதும், அப்பகுதியின் சிறந்த நகரமாகிய கொல்லாபுரத்தில் வெற்றித் தூண் ஒன்றினை நிறுவினான் என்பதும், கிருஷ்ணா பேராற்றின் கரையில் அமைந்த கொப்பம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆகவ மல்லனைத் துரத்தி அவனது யானை, குதிரை, மகளிர், செல்வம் அனைத்தையும் கவர்ந்து கொப்பத்திலேயே விசயாபிஷேகம் செய்து கொண்டான் என்பதும், இவன் பரசேகரி பட்டம் பெற்றவன் என்பதும் இம்மெய்க்கீர்த்தியால் அறியமுடிகிறது.

          "திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்" என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில், இரண்டாம் இராசேந்திரன் மிகுந்த செல்வத்தை உடையவன் என்பதும், நீதி தவறாதவன் என்பதும், கொப்பத்துப் போரில் தன் தமையன்படை பின் வாங்கியது அறிந்து தானே படைத் தலைமை தாங்கிப் போரில் வெற்றியைத் தேடித் தந்தான் என்பதும், இரட்டபாடியைக் கொண்டு கொல்லாபுரத்தில் வெற்றித்தூண் நாட்டியவன் என்பதும், மீண்டும் கொப்பத்தில் நடைபெற்ற போரில் ஆகவமல்லன் தோற்றோட, அவன் படைகளைக் கொன்று குவித்து, அவனது யானைகளையும் குதிரைகளையும் பிற செல்வத்தையும் கவர்ந்து விசயாபிஷேகம் செய்துகொண்டான் என்பதும் இம்மெய்க்கீர்த்தியால் அறியமுடிகிறது.

          "திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்" என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில், இரண்டாம் இராசேந்திரன் தன் சிறிய தந்தை முதல் பெயரன் ஈராகப் பலருக்குப் பட்டப் பெயர் கொடுத்து ஆங்காங்கு ஆளும் உரிமை வழங்கினான் என்பதும், ஆகவமல்லனுடன் கொப்பத்துப் போர் நிகழ்த்தி அவன் வீரர் பலரைக் கொன்று வாகை சூடி அவனது பொருள் பலவற்றைக் கவர்ந்து வந்தான் என்பதும், இலங்கைக் போரில் வீரசலாமேகனை வென்றான் என்பதும் இம்மெய்க்கீர்த்தியால் அறிய முடிகிறது.

          மேலும், தன் தமையன் செய்த கொப்பத்துப் போரில் அவனுக்குத் துணையாய்ச் சென்றான் என்பதும், தமையன் போரில் இறந்துபட, வீரர்களை அஞ்சேல் என்று கூறி உற்சாகப்படுத்தி அப்போரில் பெரும் வெற்றியைத் தேடினான் என்பதும், ஆகவமல்லனும் அவனுக்குத் துணையாய் வந்த பல மன்னரும் படைத்தலைவரும் தோற்றோடச் செய்து அவர்களுடைய உரிமைப் பொருள்களையும் மகளிரையும் கவர்ந்து சென்றான் என்பதும், அக்களத்திலேயே விசயாபிஷேகம் செய்து கொண்டதோடு சோழப் பேரரசின் மன்னனாகவும் முடிசூட்டிக் கொண்டான் என்பதும், தன் சிறிய தந்தை முதல் பெயரன் ஈறாகப் பலருக்குத் தன் நாட்டின் பகுதிகளை அழித்து அந்நாடுகளுக்கு அவரவர்களையே அரசர்களாக்கிச் சிறப்பித்தான் என்பதும், இலங்கை மீது போர்தொடுத்து அங்கிருந்த கலிங்க மன்னன் வீரசலாமேகனை அழித்தான் என்பதும், மீண்டும் சாளுக்கியர் தொடக்கிய முடக்காற்றுப் போரில் தலைமை தாங்கி வாலாதேவன் முதலிய பல மன்னர்களைக் கொன்று ஆகவமல்லனைப் புறமுதுகிட்டோடச் செய்தான் என்பதும் பிறிதொரு மெய்க்கீர்த்தியால் அறியமுடிகிறது.

இராசமகேந்திரன் (கி.பி.1060-1063)

          "அடல் களிற்றால் ஆகவ மல்லனை

          முடக்காற்றில் முதுகிடுவித்து"

          "கோவிராச கேசரிவன்மரான உடையார்

          ஸ்ரீஇராச மகேந்திர தேவர்க்கு"

          "முரட்சளுக்கியை முடுக்காற்றில்

          முதுகு கண்டு முனிவாறி........

          இகல் வீரராசேந்திரன்"

போன்ற மெய்க்கீர்த்தித் தொடர்கள் முடக்காற்றுப் போரினைப் பற்றித் தெரிவிக்கின்றன.  இராசமகேந்திரனைப் பற்றியும், வீரராசேந்திரனைப் பற்றியும் கூறுவது.  முடக்காற்றுப் போரில் பங்கு கொண்டுள்ளனர் என்பதைப் பற்றிக் கூறுகின்றது.  இருவரும் இராசேந்திரனின் தம்பியர் ஆவர்.  இராசமகேந்திரன் மூத்தவன்.  வீரராசேந்திரன் இளையவன் ஆவான்.

          "தரும நெறிநிற்ப மனுநெறி நடாத்திய

          கோவிராச கேசரி வன்மரான

          உடையார் ஸ்ரீஇராசமகேந்திர தேவர்க்கு"

என்னும் இராசமகேந்திரனது மெய்க்கீர்த்தித் தொடர்களால் இவன் மனுநெறி தவறாது செங்கோல் செலுத்தியவன் என்பது விளங்குகிறது.

          இராசேந்திரன் பரகேசரி எனவும், இராசமகேந்திரன் இராசகேசரி எனவும் பட்டம் பெற்றுள்ளனர்.  ஆனால் இராசமகேந்திரனை அடுத்துப் பட்டம் எய்திய வீரராசேந்திரனும் இராசகேசரி என்னும் பட்டப் பெயரையே பெற்றுள்ளான்.  இதனால் இராசமகேந்திரன் இளவரசனாக இருந்தபோது பேரரசனாய் இருந்த இராசேந்திரன் இறந்துபட அடுத்துப் பட்டம் எய்திய வீரராசேந்திரன் இராசகேசரி பட்டத்தைப் பெற்றுள்ளான் என்பது இவனது மெய்க்கீர்த்திகளால் தெரியவருகிறது.

வீரராசேந்திரன் (கி.பி.1063-1070)

          இராசமகேந்திரன் தன் தமையன் இரண்டாம் இராசேந்திரன் ஆட்சியில் இருக்கும்போது இறந்தான்.  அவனுக்குப் பின் இரண்டாம் இராசேந்திரன் பட்டம் எய்தினான்.  எனவே இரண்டாம் இராசேந்திரன் பரகேசரி என்றும், வீரராசேந்திரன் இராசகேசரி என்றும் பட்டத்தைப் முறையாகப் பெற்றுள்ளனர்.  வீரராசேந்திரன் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆதலால் ஆயில்ய நாளில் ஆலயங்களில் திருவிழா முதலியன நடக்க நிவந்தங்கள் அளித்துள்ளான்.

          "கோ இராசகேசரி வன்மரான ஸ்ரீ வீரராசேந்திர

தேவர்க்கு யாண்டு 2ஆவது திருவெண் காடுடையார்"

என்ற வரிகள் வீரராசேந்திரன் பிறந்த நாளைக் குறிப்பிடுகின்றன.  தந்தையின் தலைநகரமாகிய கங்கைகொண்ட சோழபுரமே இவனுக்கும் தலைநகரமாக விளங்கியது. 

          "வீரமே துறையாகவும் தியாகமே அணியாகவும்"

          "திருவளர் திரள்புயத்து இருநில வலயம்"

எனத் தொடங்கும் நீண்ட மெய்க்கீர்த்திகள் இவனுடையதாகும்.  வீரத்தைத் துணையாகவும், தியாகத்தை அணியாகவும் பெற்ற வீரராசேந்திரன், பாண்டியன் மன்னன் வீரகேசரி, கேரளமன்னன் சனநாதன், இலங்கை மன்னன் விசயபாகு ஆகியோரை வென்றான் என்பதும், கூடல், சங்கம், கம்பிலி ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் ஐந்து முறை ஆகவமல்லனைத் தோற்கடித்தான் என்பதும், தான் வெற்றி பெற்ற இரட்டபாடியை ஆகவமல்லன் மகனுக்கே கொடுத்தருளினான் என்பதும், எல்லாச் செல்வங்களையும் ஒருங்கே பெற்றவன் என்பதும், தன் தமையன், மக்கள் ஆகியோருக்கு தனது நாட்டினைப் பிரித்துக் கொடுத்து ஆட்சிபுரியச் செய்தான் என்பதும், கங்கபாடிப் போரில் விக்கிரமாதித்தனை வென்றான் என்பதும், கூடல் சங்கமப் போரில் ஆகவமல்லனை வென்று பலவகைப் பொருள்களைக் கவர்ந்து வந்தான் என்பதும், கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து முடிசூடி விளங்கினான் என்பதும், மீண்டும் தொடங்கிய போரில் பொத்தப்பி மன்னன், கேரள மன்னன், பாண்டிய மன்னன் வீரகேசரி ஆகியோரை வென்றான் என்பதும், உதகைப் போரில் சேரரை வென்றான் என்பதும், போரில் பெற்ற வரிசைப்பொருள்களை தன் வீரர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தான் என்பதும் இம்மன்னனுடைய மெய்க்கீர்த்திகள் உணர்த்துகின்றன.

அதிராசேந்திரன் (கி,பி,.1067-1070)

          வீரராசேந்திரன் இராசகேசரிப் பட்டம் பெற்றவன்.  அடுத்து சோழப் பேரரசனாக விளங்கிய முதல் குலோத்துங்கன் இராசகேசரி எனவும், வீரராசேந்திரனுக்கும் முதல் குலோத்துங்கனுக்கும் இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில் ஆட்சிபுரிந்த அதிராசேந்திரன் பரகேசரி பட்டம் பெற்றவன் எனவும், இவன் வீரராசேந்திரனின் மகன் எனவும் "திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம்" என்னும் மெய்க்கீர்த்தி உணர்த்துகிறது.  மேலும், எல்லாச் செல்வமும் பெற்று, அதனால் புகழ் பெற்று விளங்கிய அதிராசேந்திரன் ஆட்சியில் போர் ஏதும் நிகழவில்லை.  அமைதியான ஆட்சி நிலவியது.  தன் முன்னோர் வென்றளித்த நாடுகளுக்கு உரிமை பூண்டு, மன்னர் பலரும் திறைசெலுத்தி மனுநெறி நின்று புகழை வளர்த்தான் என்பது இவனது மெய்க்கீர்த்தி உணர்த்தும் செய்திகளாகும்.

முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120)

          "திருமன்னி விளங்கும் இருகுவ டனையதன்"

          "பூமேல் அரிவையும் போர்ச்செயப் பாவையும்"

          "புகழ்சூழ்ந்த புணரி அகழ்சூழ்ந்த புவியில்"

          "புகழ்மாது விளங்க சயமாது விரும்ப"

          "பூமியும் திருவும் தாமெய்ப் புணர"

          "பூமன்னு பாவை காமுற்று முயங்க"

என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இவனுடையதாகும்.  குலோத்துங்கன் தன் கன்னிப் போராகச் சக்கரக்கோட்டப் போரினை நிகழ்த்தி தாராவர்ஷனை வென்றான் என்பதும், பின் தாய்மொழி உரிமை பாராட்டிச் சோழ நாட்டின் மணிமுடி புனைந்து மன்னர் பலரும் தன் அடிபணிய சோழ நாட்டை ஆண்டு வந்தான் என்பதும், சக்கரக்கோட்டப் போரில் வென்று வயிராகத்தில் குந்தள அரசனை வென்றான் என்பதும், பின் வேங்கைநாடு இரட்ட மண்டலம் ஆகியவற்றை வென்றான் என்பதும், சக்கரக்கோட்டம், வயிராகரம் ஆகிய இடங்களில் வெற்றி பெற்று சோழ நாட்டின் செல்வச் செழிப்பை உண்டாக்கினான் என்பதும், அளத்தல் போரில் பல பொருள்களைக் கவர்ந்து வந்தான் என்பதும், பின்னர் பாண்டிய மன்னர் ஐவரை வென்று எல்லாத் திசைகளிலும் வெற்றித் தூண் நிறுத்தினான் என்பதும், தெற்கே குமரி வரை தன்நாட்டு எல்லையைப் பரப்பினான் என்பதும், கோட்டாற்றில் சேரரை வென்று அங்குத் தன் படையை நிறுத்தினான் என்பதும், வேங்கை நாடு, சிங்கள நாடுகளை வென்று தன்னாட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பதும் போன்ற பல செய்திகள் இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் உணர்த்துவனவாகும்.

விக்கிரமசோழன் (கி.பி.1118 – 1135)

          "பெரிய திருநாள் பெரும் பெயர் விழாவெனும்

          உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில்"

என்னும் மெய்க்கீர்த்தி அடிகள் இவனது பிறந்த நட்சத்திரத்தை உணர்த்துகின்றன.

          "பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தர"

          "பூமாது புணர புவிமாது வளர"

          "கோக்கவி மூர்க்க"

என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இம்மன்னனுடைய மெய்க்கீர்த்திகளாத் திகழ்கின்றன.

          எல்லா வகையான செல்வமும் கல்வியும் நிரம்பப் பெற்றிருந்த விக்கிரம சோழன், நாட்டில் எவ்விதத் துன்பமும் இல்லாதவாறு ஆட்சி செய்தான் என்பதும், இளமைப் பருவத்திலேயே காகுளம் என்னுமிடத்தில் தெலுங்க வீமனை வென்று வேங்கை நாட்டை ஆண்டு வந்தான் என்பதும், தந்தை குலோத்துங்கனின் அழைப்பின் பேரில் சோழ நாடு வந்து இளவரசனானான் என்பதும், தந்தைக்குப் பின் சோழப் பேரரசனானான் என்பதும், போர் அதிகமில்லாமல் அமைதியான ஆட்சியைச் செய்தான் என்பதும் இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்துகின்றன.  மேலும், கலிங்கப்போரில் வெற்றிவாகை சூடியவன் என்பதும், முக்கோக்கிழானடிகள் என்னும் தேவியைப் பட்டத்தரசியாகப் பெற்றவன் என்பதும், பரகேசரி பட்டம் பெற்றவன் என்பதும்,  சிறந்த புலமை வாய்ந்தவன் என்பதும் இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்தும் செய்திகளாகும்.

இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150)

          கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்தான்.

          "பூமருவிய புவிஏழும் புவிசூழ்ந்த பொருப்பேழும்"

          "பூ மன்னு பதுமம் பூத்த ஏழுலகும்"

          "பூமேவு வளர்திருப் பொன்மார்பு புணர"

என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இரண்டாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திகளாகும்.

          குலோத்துங்கனது நிலமாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலகம், மகாலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு உலகமும், அந்த நிலத்து விளங்கும் கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி ஆகிய ஏழு மலைகளும் அவனது வெண்கொற்றக் கூடையினால் நீண்ட காலம் தண்ணளி செய்யப்பட்டதென்பதும், சிறந்த கொள்கையுடைய சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கணாபத்தியம், கௌமாரம் ஆகிய ஆறு வகை சயமங்கள் நாட்டில் பரவி இருந்தன என்பதும்,  மக்கள் கற்பு நெறி வழுவாது வாழ்ந்தனர் என்பதும், சாதிகளுக்குரிய ஒழுக்கங்கள் தவறாமல் நீதிநெறிகள் வழுவாமல் மக்கள் வாழ்ந்தனர் என்பதும், பல்லவர் முதலாகச் சீனர் வரை அனைத்து மன்னர்களும் அவனது ஆணைக்கு உட்பட்டுத் தங்கள் முறைப்படி திறைப்பொருள்களைக் கொண்டு வந்து வணங்கி நின்றனர் என்பதும், இராசகேசரி என்றும் பட்டம் பெயர் பெற்றவன் என்பதும் இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்தும் செய்திகளாகும்.

இரண்டாம் இராசராசன் (கி.பி.1146-1163)

          சோழப் பேரரசினை அமைதியோடு அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசன்.  பரகேசரி என்னும் பட்டம் பெற்ற இவன் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

          "பூமருவிய திருமாதும் புவிமாது செயமாது"

          "பூமருவிய பொறுப்பேழும் பனைநித்தி லத்தாம்"

எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இம்மன்னனுடையதாகும்.  செல்வம் பலவும் விளங்க சோழ நாட்டின் மணிமுடியினை உரிமையாற் சூடிய இராசராசன் தன் முன்னோரிடம் தோற்றுத் திறை செலுத்தி வந்த மன்னர் அனைவரும் திறை செலுத்திப் பணிந்து நிற்குமாறு நாட்டில் அமைதி நிலவப் பரகேசரி பட்டத்துடன் ஆட்சி செய்தவன் என்பதும், பாற்கடலில் இருந்து எழுந்தருளிய திருமால் சோழ நாட்டின் முடிபுனைந்தருளிய தன்மைபோல இராசராசன் சோழ நாட்டின் அரசுரிமையை ஏற்றான் என்பதும், நாடு வளம் சுரக்க எல்லா அறமும் தழைக்க அரசு செலுத்திய அவனுடைய ஆட்சியில் யானைகளே பிணிக்கப்பட்டன, ஓடைகளே கலக்கம் பெற்றன, ஆற்று நீரே சிறை செய்யப்பட்டன என்பன போன்ற இயற்கைச் செயல்களைத் தவிர துன்பம் அடைந்த உயிர்கள் எதுவும் நாட்டில் இல்லையாம்படி அனைத்துயிர்களுக்கும் தந்தையும் தாயுமாகி நலம் புரியும் ஆட்சியினைச் செலுத்தி வந்தான் என்பதும் இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்தும் செய்திகளாகும்.

இரண்டாம் இராசாதிராசன் (கி.பி.1163-1178)

          இரண்டாம் இராசராசனின் இறுதிக் காலத்தில் அவன் மக்கள் இருவரும் ஓரிரு ஆண்டு நிரம்பியவர்களாகவே இருந்தனர்.  ஆதலால் தன் பாட்டனாகிய விக்கிரமசோழனின் மகள் வயிற்றுப் பேரனும் நெறியுடைப் பெருமாள் என்பானின் மகனுமாகிய எதிரிலிப் பெருமாள் என்பவனைத் தன் நாட்டின் இளவரசனாக்கி முடி சூட்டினான்.  அவனே இரண்டாம் இராசாதிராசன் என்னும் பெயரோடு ஆட்சி செலுத்தியவன்.

          "கடல் சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும்"

          "பூமருவிய திசைமுகத்தோன் படைத்த பெரும்புவி விளங்க"

          "கடல் சூழ்ந்த பாரேழும் திசையெட்டும் காத்து நின்று"

என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இவனுடையதாகும்.  இராசாதிராசன் செல்வமும் கல்வியும் வீரமும் புகழும் நிரம்பப் பெற்றவனாய் முடிசூடி சமய நெறியும் இயற்கையின் தொழிலும் துணைபுரிய, மன்னர் பலரும் திறை செலுத்த பரகேசரி என்னும் பட்டப் பெயரோடு சோழ நாட்டில் ஆணை நடத்தினான் என்பதும், நிலவலகைக் காக்கும் நெடுமாலே போலச் சூரிய குலத்துத் தோன்றிய இராசாதிராசன் சோழநாட்டின் முடிசூடி நாட்டில் கலி நீங்க நாட்டில் மகிழ்ச்சி பொங்க ஆட்சி செய்தான் என்பதும், மேருவில் புலிக்கொடி பறக்க எண்திசையும் தனது ஆணையைச் செலுத்தினான் என்பதும், நாட்டில் போரின்றி வளம் நிறைந்தது என்பதும், இயற்கை வளம் பல நிறைய உயிர்கள் பகையின்றி வாழ அரசுரிமையைப் பெற்றிருந்தான் என்பதும் இவனது மெய்க்கீர்த்திகள் உணர்த்தும் செய்திகளாகும்.

மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218)

          இரண்டாம் இராசராசன் மகன் மூன்றாம் குலோத்துங்கன்.  இவன் இரண்டாம் இராசாதிராசனுக்குப் பின்பு சோழப் பேரரசின் முடியை ஏற்றான்.  தந்தை இறந்தபோது இவன் இளையவனாக இருந்ததால் இரண்டாம் இராசராசன் தன் பாட்டனாகிய விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனை இளவரசு பட்டம் கட்டினான்.  அதன் பிறகு இரண்டாம் இராசாதிராசன் என்ற பட்டப் பெயருடன் சோழ நாட்டை ஆண்டான்.  அவனுக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் பட்டம் பெற்றான்.

          "புயல் வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்"

          "புயல்வாய்த்து மண்வளரப் புலியானையும் சக்கரமும்"

          "திருவாய் கேழ்விமுன் உடைத்தாக"

என்னும் தொடக்கத்தினை உடைய மெய்க்கீர்திகள் இம்மன்னனுடையது ஆகும்.  எல்லாச் செல்வங்களையும் உடையதாக விளங்குமாறு சோழ நாட்டின் முடிபுனைந்து செங்கோல் செலுத்தினான் குலோத்துங்கன்.  இவன் வீரபாண்டிய மகனைக் கொன்று வீரபாண்டியனைப் புறமுதுகிடச் செய்தான்.  சிங்களரை அழித்தான்.  அந்நாட்டைக் கைப்பற்றினான்.  தான் பெற்ற மதுரையின் ஆட்சிப் பொறுப்பை தன்னிடம் வந்து வணங்கிய விக்கிரம பாண்டியனுக்குக் கொடுத்து வீரக்கொடியுடன் தியாகக் கொடியையும் பறக்கவிட்டான்.  செல்வம் நிறைய முடிபுனைந்த குலோத்துங்கன் நாட்டில் சுங்க வரியை நீக்கி உணவுப் பொருள்களை நிறைத்து, உயர்களிடையே அமைதியை நிலவச்செய்தான்.  வென்ற நாடுகளை இறைஞ்சி வந்த மன்னர்களுக்குத் திருப்பிக் கொடுத்து மகிழ்ந்தான்.  இதுபோன்ற பல செய்திகள் இம்மன்னனுடைய மெய்க்கீர்த்திகளில் காணமுடிகிறது.

மூன்றாம் இராசராசன் (கி.பி.1216-1256)

          மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்திலேயே மூன்றாம் இராசராசன் இளவரசுப் பட்டம் பெற்றிருந்தான்.  குலோத்துங்கன் இறந்த பின்பு சோழப் பேரரசின் மன்னனானான். 

          "சீர்மன்னி இருநான்னு"

          "உத்தம நீதி"

எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் இம்மன்னனுடையதாகும். இவனது ஆட்சியில் எட்டுத் திசையிலும் புகழ் பரவியிருந்தது என்றும், செல்வ மகளும், வெற்றி மடந்தையும் புகழின் செல்வியும் அவனை விரும்பி அடைந்தனர் என்றும், மறைநெறியும் மனுநெறியும் சிறக்க தமிழர் சுற்றம் உயர சோழப் பேரரசின் முடிசூடி விளங்கினான் என்றும் இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் உணர்த்தும் செய்திகளாகும்.

          சோழர் மெய்க்கீர்த்திகளால் அவர்களது ஆட்சித் திறத்தையும், போர்ச் செய்திகளையும், பெற்ற வெற்றிகளையும், பகைவர்க்கு நாடு கொடுத்த திறத்தையும், பொருட் கொடைத் திறத்தையும், அவர்களின் பட்டப் பெயர்களையும் இம்மன்னர்களுடைய மெய்க்கீர்த்திகளால் தெள்ளிதின் அறிந்துகொள்ள முடிகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக