ஞாயிறு, 20 அக்டோபர், 2024

சீவேந்திரர் சரிதம்

 


தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் காவியத்தை அடியொற்றிச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய அம்மானைக் கதைப்பாடல் சுவடி ‘சீவேந்திரர் சரிதம்’ என்ற பெயரில் கிடைக்கப்பெற்று, ஓலைச்சுவடித்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது.  இச்சுவடிப் பதிப்பினை ஆராயுமுகமாக இக்கட்டுரை அமைகிறது.

சீவகன் சரிதம்

காவியத் தலைவனாகிய சீவகனின் சரிதம் பற்றி வடமொழியில் க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என நான்கு நூல்கள் உள்ளன.  இவற்றுள், க்ஷத்திர சூடாமணியை மூலமாகக் கொண்டு தமிழில் சீவக சிந்தாமணி இயற்றப்பட்டுள்ளது.

மஹாபுராணத்தின் ஒரு பாகத்திலும், ஸ்ரீபுராணத்திலும் சீவகனுடைய வரலாறு கூறப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் போன்ற பெருங்கவிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி என்னும் பெருநூல் சமண சமயத்தவரால் பூசித்துப் பாராயணம் செய்யப்பெற்றுவரும் தெய்வீகச் சிறப்புடையதாகும்.

அம்மானைப் பாடல்கள்

17,18ஆம் நூற்றாண்டுகளில் அம்மானைக் கதைப்பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன.

அம்மானை’ என்பது மகளிரை விளிக்கும் சொல்.  ‘அம்மானை’ என்பது தாய் என்னும் பொருள் தருவது.  இச்சொல் ஈறு திரிந்து அம்மானாய், அம்மானே, அம்மானார் எனப் பாடல்களில் பயின்று வரக் காண்கிறோம்.

பொதுவாக, இராமாயண, பாரத இதிகாசங்களிலுள்ள கதைப்பகுதிகள், புராணக் கதைகள், வரலாறுகள் போன்றவை பிற்காலத்தில் கதை தழுவிய அம்மானைப் பாடல்களாக உருவெடுத்துள்ளன.  காட்டாக, வைகுந்த அம்மானை, பார்ச்சுவநாதர் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை போன்றவற்றையும், அல்லியரசாணி மாலை, பவளக் கொடி மாலை, அபிமன்னன் சுந்தரி மாலை, சிந்தாமணி மாலை போன்றவற்றையும் சுட்டலாம்.

சித்திரபுத்திர நயினார் கதை, நல்லதங்காள் கதை, தேசிங்குராசன் கதை, சிறுத்தொண்டன் கதை போன்றன கதையம்மானைகள்.

பஞ்ச பாண்டவர் வனவாசம், பூங்காவனப் பிரளயம் போன்றவையும் கதையம்மானைகளே.

இவை, இதிகாச புராண நிகழ்ச்சிகள், வரலாற்று நிகழ்ச்சிகள், அடியார் சரிதங்கள் முதலியன பற்றிய கதையம்மானை நூல்கள் ஆகும்.

கோவலன் கதை, மேருமந்திர மாலை, சீவேந்திரர் சரிதம் போன்றன இலக்கிய அடிப்படையில் எழுந்த அம்மானைகளாகும்.

சீவேந்திரர் சரிதம் - சுவடிகள்

இது, சீவக சிந்தாமணிக் காவியத்தின் வழிநூல்.  இதற்கு இரண்டு ஏடுகள் கிடைத்துள்ளன.

ஒரு சுவடியில் நூலின் பெயர் எதுவும் இல்லை.  ஆயின், காப்புச் செய்யுளில், ‘சீவேந்திரரது சரிதம் பாட’ என எழுதப்பட்டுள்ளது.  மேலும், முதலிலுள்ள நாமகள் இலம்பகம்,

சீதமதி முக்குடைத்தான் சீவேந் திரர்சரிதம்

ஆதரவாய்ப் பாடிநாம் ஆடுவோம் அம்மானார்”                            

(53-54)

எனத் தொடங்குகிறது.  இதில், ‘சீவேந்திரர் சரிதம்’ என்றே குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சுவடியில், முதலில், ‘ஜீவேந்திர அம்மானார்’ என்றும், இறுதியில், ‘ஜீவேந்திர ஸ்வாமி அம்மானார் முகிஞ்சது’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

எனவே, இந்நூலின் பெயர், சீவேந்திரர் சரிதம் என்றும், ஜீவேந்திர அம்மானார் என்றும் வழங்கப்பெற்று வந்ததை அறியமுடிகிறது.

இந்நூல் பதிப்பிற்கான ஏடுகள் கிடைத்த விவரம் குறித்து இதன் பதிப்பாசிரியர் விரிவாக முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.  நூல் முழுவதும் அடங்கிய முதல் ஏடு 158 இதழ்களைக் கொண்டது.  இரண்டாவது ஏடு 138 இதழ்களைக் கொண்டது.  இவ்விரண்டும் முறையே வளத்திக் கிராமம், நெம்மிலிக் கிராமம் (வட ஆர்க்காடு மாவட்டம்) ஆகிய இடங்களிலிருந்து திரு.சிவ. ஆதிநாதன் என்பார் வழியாகப் பெறப்பட்டுள்ளன.

முதல் ஏட்டின் இறுதியில், ‘துந்துபி வருஷம் வையாசி மாதம் 19ஆம் தேதி வளத்தி கிராமம் கனகபிரப நயினார் புஸ்தகம்’ என்னும் குறிப்பு உள்ளது.  இரண்டாவது ஏட்டின் இறுதியில், ‘நெம்மிலியிலிருக்கும் கோமட்டநாத நயினார் குமரன்’ என்னும் குறிப்பு உள்ளது.  இரண்டும் சமண சமயத் தொடர்பானவர்களிடமிருந்து பெறப்பட்டன எனத் தெரிகிறது.  இவை, சுமார் இருநூற்றிருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டவை என்பதும் விளங்குகின்றது.

நூலமைப்பு

முதலில் கலைவாணியைக் குறித்த காப்புச் செய்யுள் உள்ளது.  அடுத்து, அருகன் வணக்கம், பாயிரம், பத்து இலம்பப் பிரிவும் உள்ளன.  நூலில் மொத்தம் 3284 அடிகள் உள்ளன.  கதையம்மானைப் பாடலாதலின் பாடலுக்குரிய எதுகை மோனைக் கட்டுக் கோப்புகளும் இடம்பெற்றுள்ளன.

நூலாசிரியர்

சீவேந்திரர் சரிதம் நூலின் ஆசிரியர் தேவராசன் என்பவராவார்.  இவர் தச்சாம்பாடி என்னும் தச்சை என்ற ஊரினர்.

பார்புகழும் தச்சைப் பதிவாழ் அருகந்தர்

          சீரடியை அர்ச்சிக்கும் தேவராசன் தமிழால்

          அம்மானை யார்பாடி யாடுவோம் அம்மானார்”              

(41-43)

என்பது பாயிரம்.  மேலும்,

அருகன் அறம்வாழ்க! அம்புவியில் உள்ளோர்கள்

          மருமதி பாற்கரனார் வாழீகாண் அம்மானார்”    

          (49-50)

என்பதிலிருந்து, இந்நூலாசிரியருக்குச் சமய தருமம் உரைத்த குரு பாற்கரனார் என்பவர் என்பதும் புலனாகின்றது.  மேலும்,

பாண்டிமகா ராசனுடன் பார்மன்னர் எல்லோரும்

வேண்டிய கேட்டருளும் வேதமுனி வாக்கியத்தைக்

கங்கை குலத்திலதன் காங்கயர்தன் புத்திரனாம்

அங்கணை வேள்பயந்தான் அன்புடனே கேட்டருளிர்”  

(85-88)

என்பதிலிருந்து, இந்நூலாசிரியருக்கு இப்பெருங்காப்பியப் பொருளை வழங்கியவர் ‘அங்கணைவேள்’ என்னும் தமிழாசான் என்பதும் தெரிகின்றது.

திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணிக் காவியத்தை அடியொற்றியே தான் இந்தச் சீவேந்திர சரிதம் நூலைப் பாடியதாக ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை எல்லாம் கொடுக்கும் சிந்தா மணியிட

அந்தரச காவியத்தின் அர்த்தம் எல்லாம் நானுரைப்பேன்

மாமுனிவர் சொன்னதொரு வாய்மை தவறாமல்

…………...    …………..   …………..  …………..

பன்னும் தமிழ்அதனால் பாடினேன் அம்மானார்”         

(69-84)

இவ்வாறாகக் கதையமைப்பும் காவிய நிகழ்ச்சிகளும் சீவக சிந்தாமணியை அடியொற்றிப் பாடியிருப்பினும், இக்கதைப் பாடலில் பல புதிய சொற்கள் காலத்தால் சேர்க்கப்பட்டுள்ளமையை இவண் குறிப்பிட வேண்டியுள்ளது.

அம்மானார்

பெரும்பான்மையான இடங்களிலும் இச்சொல் பாட்டின் இசையை நிரப்பும் சொல்லாக அசைச்சொல் நீர்மையில் வருகின்றது.

இலம்பகம் - இலம்பம்

சீவக சிந்தாமணியின் உட்பிரிவுகளாக நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்கள் உள்ளன.  சீவேந்திரர் சரிதத்தின் உட்பிரிவுகளாக நாமகள் இலம்பம் முதலாக இலக்கணையார் இலம்பம் வரை 10 இலம்பங்கள் உள்ளன.

இலம்பகம் என்பது நூலின் உட்பிரிவு ஆகும்.  இலம்பம் என்ற சொல்லுக்கு மாலை, தொங்கல் என்னும் பொருள் உண்டு.

சீவேந்திரர் சரித ஆசிரியர், இலம்பகம் என்பதற்குப் பதிலாக ‘இலம்பம்’ என்னும் பெயரை நூற்பகுதிகளுக்குத் தந்துள்ளார்.  மேலும், பதினோர் இடங்களிலும் ஆளுகின்றார்.  இஃது இந்நூலாசிரியர் கண்ட புதுச்சொல் ஆகும்.  சிந்தாமணியினின்றும் மாறுபட்ட பெயர் அமைப்புமாகும்.

கட்டியங்காரன் - கட்டியக்காரன் - காஷ்டாங்கன்

சிந்தாமணியில் சச்சேந்திர மன்னனின் அமைச்சர்களுள் ஒருவனாகக் கட்டியங்காரன் கூறப்படுகிறான்.  இவனுடைய வரலாற்றை விரிவாக விளக்கும் சீவேந்திரர் சரிதம் இவனை, ‘காஷ்டாங்கன்’ என்று கூறுகிறது.  இதற்கு, ‘விறகு வெட்டி விற்றுப் பிழைப்பவன்’ என்று விளக்கமும் தருகிறது.

கேமசரியார் - கேசரியார்

சிந்தாமணியில் கேமசரியார் இலம்பகம் என்பது, சீவேந்திரர் சரிதத்தில் கேசரியார் இலம்பம் என்பதாக அமைந்துள்ளது.  இவ்வாறே, வேறு சில சொற்களையும் பெயர் மாறுபாடுகளையும் பின்வருமாறு காணலாம்.

சீவக சிந்தாமணி    சீவேந்திரர் சரிதம்

சீவகன்         -         சீவேந்திரன், சீவேந்திரர்

          சச்சந்தன்      -         சச்சேந்திரன்

          கந்துக்கடன்  -         கந்தோர்க்கன்

          நந்தட்டன்     -         நந்தாட்டியன்

          சுதஞ்சணன்   -         சுதஞ்செயன்

          சாசுரதத்தன்  -         சக்ரந்தன்

          தரன்             -         தாரன்

இவை போன்ற மாற்றங்கள் மக்களின் பேச்சு வழக்கை ஒட்டியும் மக்களுக்குப் புரிவதற்காகவும், அம்மானையின் நடை கருதியும் அமைக்கப்பட்டவை எனலாம்.

வடசொல்லாட்சி

இவ்வாறே, வடமொழிச் சொல்லாட்சியும் இந்த அம்மானைப் பாடலில் மிகுதியாக உள்ளன.  இவற்றுள், அர்ச்சனை, அர்த்தம் முதலாக வாலிபம், வைராக்கியம் ஈறாகவுள்ள பல சொற்கள் நாட்டு நடப்பில் மக்களிடையே வழங்கப்பெற்று வரும் சொற்களேயாகும்.

வழக்குத் தொடர்கள்

மக்களிடையே காணப்படும் சில தொடர்களும் இந்நூலில் பரவலாக அமையக் காணலாம்.  காட்டாக,

காடு மலைபுனலும் கடிய வனாந்தரமும்” (125)

துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலன்” (98)

சகலசன ரெட்சகன்” (3176)

அகுதி பரதேசி” (1838)

என்பன நாட்டு வழக்குகளே.

கெடுமதிதான் கண்ணுக்குத் தோணாது கெட்டது போல்”

(493)

என்பது பழமொழி.

இந்தாரும் என்று சொல்லி ஏந்திழையார் தன்கையிலே”

(692)

          கூறிடுவான் கண்டிகளோ கொற்றவனார் தேரும் இப்போ”

(979)

என்பவற்றில் ‘இந்தாரும்’, ‘கண்டிகளோ’ என்னும் சொற்கள் மக்களின் பேச்சு வழக்கில் அடிக்கடிப் பயில்வனவாகும்.

காட்டிக் குடுத்தனன்காண் கந்தோர்க்கன் அம்மானார்’

(1770)

என்பது சாதாரண நடைமுறை வழக்கமாகும்.

பேச்சு வழக்கு

மக்களின் பேச்சு வழக்கில் வரும் பெயர்களும், குறைச்சொற்களும், உருமாற்றச் சொற்களும் இந்நூலில் விரவி வரக் காணலாம்.  காட்டாக,

அகுதி, அடிச்சு, அப்ப, அப்போ, அற்பசி, அன்பது, ஒண்டி, ஒயரம், தீனம், நாலு, வக்கணை, மாட்டாமல், மெச்சி, வாறதும் என்பன போன்று பல.

இவ்வாறு வருவனவற்றை ஆராயின், பேச்சு வழக்கில் சொற்கள் பெறும் உருமாற்ற நிலைகளையும் அவற்றிற்கான ஏதுக்களையும் அறியலாம்.

அரிய வழக்குகள்

1.       கண்டேன் இது வழியில்; காளைஒரு திங்களின்மேல்’

(2062)

இங்கு, ‘இந்த’ என்னும் பொருளில் ‘இது வழியில்’ என்று குறிப்பது ஒரு வகை மக்கள் வழக்கே யாகும்.  இந்த வழியில் என்பது இதன் பொருளாகும்.

2.       அப்படியே நல்லது’ என்று ஆணழகி தான் உகந்து’

(205) 

அரசன்விடை பெற்று அவளும் ஆணழகி போகல் உற்றாள்’

(281)

அரசாளும் மன்னவனும் ஆணழகி தன்னுடனே’

(380)

அப்படியே ஆகுது’ என்றாள் ஆணழகி அம்மானார்’

(2262)

ஆஎன்றேதான் அழுதாள் ஆணழகி அம்மானார்’

(2337)

அந்த வயணம் எல்லாம் ஆணழகி தோழியர்கள்’

(2850)

அன்னை பிதா தன்னுடனே ஆணழகி செப்பிடவே’

(2854)

ஆணழகியாள் சுரமஞ்சரியார் கேட்பதற்கு’

(2800)

என இந்நூலாசிரியர் ‘ஆணழகி’ என்ற புதிய சொல்லைக் கையாண்டிருப்பது இவண் கருதத்தக்கது.

ஆணழகி’ என்பதற்கு ஆளுந்தன்மையுடைய அழகி என்பது நேர் பொருளாம்.  இங்கே பெண்டிருக்கக் குடும்பத்தை ஆளும் தன்மை என்பது பொருள்.

3.       இவ்வாறே, ‘ஏதல்’ என்னும் ஒரு சொல் இந்நூலுள் 22 இடங்களில் வரக் காணலாம்.  இது, ஏது, அறிவுரை, ஆறுதல், வெறுப்பு, கவலை, தெளிவு, உன்னிப்பு, அன்பு, பாசம், ஒற்றுமை, இன்பம், பெருமை, தூண்டுதல், மிகுதி, வியப்பு, முறைமை, திறமை, ஒப்புமை போன்ற பல்வேறு பொருள்களில் வந்துள்ளது.

4.       காரிழையார்’, ‘காரிழையாள்’ என்னும் சொற்களைப் பெண் என்னும் பொருளில் இந்நூலில் வழங்கக் காண்கிறோம்.  ‘கார்’ என்பதற்கு அழகு என்னும் பொருள் கூறுவர்.  எனவே, காரிழையார் எனின் அழகிய ஆபரணம் அணிந்தவர் எனலாம்.

5.       ஆரிழையாள் (2793), ஆரிழையாள் (195, 1158) என்னும் ஆட்சியும் இந்நூலுள் காணலாம்.

6.       கனக்கப் பிரியமுடன்’ (677, 1877, 2188, 2210, 2283)

கனக்க விசாரமுற்று’ (1109)

கனக்கக் கிலேசம் உற்று’ (2447)

கனக்கப் பழிசுமக்கும்’ (2725)

என்னுமிடங்களில், கனக்க என்ற சொல் மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது.

7.       குயவனுக்கு மறுபெயர் கும்பகாரன் ஆகும்.  இதனை, ‘கும்பாரன்’ என இந்நூலாசிரியர் கூறுகிறார்.

கும்பாரன் மண்மெதித்தாப் போலே குளறியிட’

(1268)

8.       வெளியே என்னும் பொருளில், ‘வெளிக்கிட்டுப் போய்’ என்னும் வழக்கு இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே இயல்பாயுள்ளது.  இந்நூலில்,

பாவையர்க்காய்த் தோற்றுஇருந்த பார்மன்னர் எல்லோரும்

மேடைதனை விட்டிறங்கி வெளிக்கிட்டே போய்அவர்கள்

வாடி மனங்கலங்கி மயங்கல் உற்றார் அம்மானார்”

(1367-1369)

என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காலந்தோறும் மக்கள் வாழ்வில் இடம்பெறும் வழக்கு நடைகளை அறிவதற்கு இத்தகைய நூல்கள் துணைபுரியும் என்பதற்கு இவை சான்றுகளாகும்.

காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களும் புதிய விளக்கங்களும்

சீவக சிந்தாமணி போன்ற பழைய பெருங்காப்பியங்கள் மக்களிடையே பரவியபோது காலத்திற்கேற்ற மாற்றங்களையும் புதிய விளக்கங்களையும் பெற்றுள்ளன.  புதிய புதிய இலக்கிய வடிவங்களில் புதுமையும் சுருக்கமும் தெளிவும் பெற்றுள்ளன என்பதும் உண்மையாகும்.

சீவக சிந்தாமணி 3145 விருத்தங்களில் அமைய, பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட சீவேந்திரர் சரிதம் 3284 அடிகளில் அம்மானார் பாடலாக மக்களிடையே பரவியதும் இவண் குறிப்பிடத்தக்கதாகும்.  புதிய விளக்கங்கள், தெளிவுகள் அனைத்தும் மக்களின் தேவைக்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வகையில், சீவேந்திரர் சரிதம் நூலின் அமைப்பில் காணும் தனித்தன்மைகளை இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் தம் முகவுரையில் தொகுத்தளித்துள்ளார்.  அவற்றுள் சில வருமாறு:-

1.       சீவகன் மகளிர் எண்மரை மணந்து கொண்டதாலும் நாமகள், மண்மகள், பூமகள், முத்திமகள் ஆகியோரை அவன் அடைந்தமையாலும் சிந்தாமணிக்கு ‘மணநூல்’ என்றும் ஒரு பெயர் உண்டு.  இப்பெயருக்கு ஏற்புடைய அமைப்பை சீவேந்திரர் சரிதத்தில் உள்ளது.  காந்தருவ தத்தையார் இலம்பம் முதலியவற்றை மணநிகழ்ச்சியுடன் முற்றுவிக்கிறார் ஆசிரியர்.  பிரிவு நிகழ்ச்சிகள் அடுத்த இலம்பத்தில் இடம்பெறுகின்றன.  ஆனால், சிந்தாமணியில் மணவினையும் அதன்பின் நிகழ்ச்சிகளும் அதே இலம்பகத்தில் இடம்பெறுகின்றன.

2.       சச்சேந்திர மன்னனின் அமைச்சர்களுள் ஒருவனான கட்டியங்காரன் வரலாறு சீவக சிந்தாமணியில் சொல்லப்படவில்லை.  ஆயின், அவன் அமைச்சனாவதற்கு முன் இருந்த வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிறுகதை வடிவில் கூறப்பட்டுள்ளன.

இவன் இராசமாபுரத்தில் வாழ்ந்த ஒரு விறகு தலையன்.  தினந்தோறும் காட்டில் விறகு வெட்டி வந்து நகரத்தில் விற்று வயிறு வளர்த்து வந்தான்.  அவன் முன் செய்த பாவ வினைப்பயனால் காடு, மலை, புனல், வனாந்தரங்களை நாடிச் சென்று கொண்டிருந்தான்.  காட்டிலே அவதி ஞானம் பெற்ற ஒரு முனிவரைக் காண்கிறான்.  அம்முனிவரிடம் தன் துயரம் போக ஒரு விரதம் அருள வேண்டுகிறான்.  அவர் அவனுக்கு மாமிச உணவைக் கைவிட்டு நிறைமதி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தையும் பிரமசரிய விரதத்தையும் போற்றி நடக்கப் பணிக்கிறார்.

ஒரு சமயம் விறகு விற்றபின் பட்டணத்தின் வீதி ஓரத்தில் ஒரு மரத்தடியில் அவன் உறக்கம் கொண்டிருந்தான்.  அப்பொழுது நாடகம் ஆடி அரசனிடமிருந்து விடைபெற்றுப் பல்லக்கில் திரும்பிவரும் தாசியர் இருவர் அவனை இகழ்ந்துரைத்துக் காறி உமிழ்ந்து சென்றனர்.  இதனால் விறகு தலையன் கோபங்கொண்டு தன் நிலைக்கு வருந்தி தன் உயிரை மாய்க்கக் கருதிச் செல்லுகிறான்.  அப்பொழுது மூவுலகும் முக்காலமும் உணர்ந்த ஒரு முனிவர் வர, அவரிடம், ‘என்குப் பிழைக்க வழி சொல்லும்’ என, அவர் சந்தனமரம் மலைபோல் குவிந்திருந்த இடத்தைக் கைகாட்டிச் செல்கின்றார்.  சந்தன விறகை வெட்டி வந்து விற்று அவன் செல்வனும் ஆகிறான்.

தன்னை முன்பு இகழ்ந்து சென்ற தாசியைத் தான் மருவ வேண்டும் என்னும் வைராக்கியத்தால், அவன் சென்ற நாள் நிறை மதி நாள் என்று அறியாமல் தாசி இல்லம் சென்று, ‘ஓரிரவு நித்திரை’க்கான பொன்னைத் தருகிறான்.  இன்பம் துய்க்கவும் செல்லுகிறான்.  அன்று நிறைமதிநாள் நினைவுக்கு வரவே தாசி வீட்டிலிருந்து அவன் வெளியேறுகிறான்.  அவன் செயல் குறித்து வேசி மன்னனிடம் முறையிடுகிறாள்.  மன்னனின் கட்டளைப்படி நகரத்தின் மேலை வாசல் தவிர ஏனைய திசைகளிலுள்ள வாசல்களை அடைத்து அந்த வாசல் வழியே மக்களை வரும்படி செய்கிறான்.  அந்த வாயிலில் வேசியை நிற்க வைத்து விறகு தலையனை அடையாளங்கண்டு பிடித்துவர ஆணையிடுகிறான்.  அவ்வாறே அவனும் அகப்படுகிறான்.  மன்னன் விசாரித்த பொழுது விறகு தலையன் தன் விரதத்திற்குப் பங்கம் வராமலிருக்க நீங்கிச் சென்றமை கூறுகிறான்.  விறகு தலையனின் விரத மேன்மையையும் உறுதிப்பாட்டையும் கண்ட மன்னன் அவனை மெச்சி, அவனுக்கு வெகுமானம் கொடுத்து, கட்டியக்காரன் என்று பெயர் சூட்டி, அவனைத் தன் சேனைகளுக்குத் தலைவனாக்கிச் சேனாபதிப் பட்டமும் அளிக்கிறான்.

இக்கட்டியக்காரன் கதை நிகழ்ச்சி தமிழறியும் பெருமாள் கதையை ஒத்துள்ளது.  மக்கள் வழக்கில் அறிந்த கதை நிகழ்ச்சிகளைக் கூறி விளங்க வைப்பதும் இக்கதைப்பாடலாசிரியரின் கருத்தாகலாம்.

3.       சிந்தாமணி கூறும் கேமசரியார் இலம்பகத்தில், கேமசரி எவனைக் கண்டு நாணுகின்றாளோ அவனே அவளுக்குக் கணவன் ஆவான் என்று கணிதர் கூறுகின்றார்.  சீவகனைக் கண்டதும் கேமசரி நாணமுற்று அவன்பால் மோகம் கொள்ள அவள் தந்தை சுபத்திரன் சீவகனுக்கு அவளை மணம் செய்வித்தான் என்பது சிந்தாமணி தரும் செய்தி.

ஆயின், சீவேந்திரர் சரிதம் இதனை வேறு வகையாகக் கூறுகின்றது.  கேசரி பெண்ணுக்குரிய வெட்கம் இன்றி ஆடையில்லாமல் அம்மணமாய் இருந்தாளாம்.  எவனைக் கண்டு நாணி அவள் ஆடையை உடுத்துகிறாளோ அவனே அவளுக்குரிய கணவனாவான் என்று சோதிடர் சொன்னதாக உள்ளது.  சீவகனைக் கண்டதும் அவள் சேலை உடுத்தி ஒரு மூலையில்போய் மறைந்தாள் என்று உரைக்கிறது இந்தக் கதையம்மானை.

4.       சீவகன் தன் தாய் விசையமகாதேவியை முதன் முதலாகத் தாபசப்பள்ளியில் சந்தித்தபோது இருவர்தம் பற்றும் பாசமும் விஞ்சி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.  இந்த இடத்திலே விசையமகாதேவி ‘தன்னைப் பெற்ற தாய்தானா?’ என்று சீவேந்திரன் சோதித்துப் பார்த்த நிகழ்ச்சி ஒன்று இந்த நூலுள் உள்ளது.  இது, சீவக சிந்தாமணிக் காவியத்தில் இல்லாத புதுச்செய்தி.

தன்னை வந்து வணங்கிய சீவகனைத் தாய் விசையை தன்னுடைய கைகளால் தழுவியெடுத்து அன்போடு அணைத்துக் கொள்கிறாள்.  அப்பொழுது சீவகன் தன் தாயை நோக்கி, ‘என்னைப் பெற்றதாய் நீரேயானால் ஐயம் நீங்க என்மேல் உம் முலைப்பால் சொரிய ஆதரத்துடன் அமைக’ என்று கேட்கிறான்.

அப்பொழுது தார்விசையை அன்னையிட மார்முலைகள்

          செப்பமுட னேசுரந்து சீவகர் மீதே சொரிந்தே

          ஆறாய் வழிந்ததனை அங்குஇருந்த தோழரும்தான்

          வீறான சீவகரும் விந்தை யுடனே பார்த்து

          கண்டும் அதிசயித்தே கவலைஎல்லாம் நீங்கிஅவர்

          கொண்டனர்காண் சந்தோஷம் கொற்றவர்கள் எல்லாரும்”

(2497-2502)

என்று விசையையின் முலைப்பால் சுரந்து சீவகன் மேல் ஆறாய்ப் பாய்ந்த அதிசயம் கண்டு உண்மை உணருகின்றனர் என்று காணப்படுகிறது.  பாரதத்தில் குந்தியும் கர்ணனும் சந்தித்தபோது தன் முலைப்பால் சொரிய அவன் தன் முதல் மகன் என்பதைப் புலப்படுத்தினாள் என்று வரும் செய்தியை ஒத்ததாயுள்ளது அம்மானையாசிரியர் கூறும் இந்நிகழ்ச்சி இவ்வாறு வேறு சிலவும் உள.

இவ்வாறு, மக்கள் நன்கு அறிந்த இதிகாச, புராண, இலக்கியக் கதைகளைத் தழுவிய கருத்துக்களைப் பிற்கால ஆசிரியர்களும், தம் நூல்களில் எடுத்தாண்டிருப்பதை அங்கங்கே காணலாம்.

பொது நிலையில், இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களைப் பலரும் அறியும் வகையில், அவற்றைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதிப் பதிப்பித்து வெளியிடுவது வளர் தமிழுக்குப் பெருந்துணை செய்வதாகும்.  இவற்றால், தொன்மையான இலக்கிய வடிவங்களை இனங்காண்பதற்கும், காலந்தோறும் வளர்ந்து வந்த வடிவங்களை அறிவதற்கும், இவை மக்களிடையே பரவிய வகைகளை உணர்வதற்கும், மொழிக்கலப்பு மற்றும் பிறமொழித் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பதிவு செய்வற்கும் வழிகள் பல உண்டாகும்.  இவ்வகையில், இத்தகைய நூற் பதிப்புகளை ஒருங்கே தொகுப்பதும், பாதுகாப்பதும், இலக்கிய ஆய்வுகளுக்குட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.

துணை நூல்கள்

1.       சீவேந்திரர் சரிதம், (பதிப்.) பேரா. மு. சண்முகம் பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,     தஞ்சாவூர், 1985.

2.       திருத்தக்க தேவரியற்றிய சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கியர் உரையும்,      (பதிப்) டாக்டர் உ.வே. சாமிநாதையர், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, நிழற்படப் பதிப்பு, தஞ்சாவூர், 1986.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக