சுவடி திரட்டுதல் என்பது, பல்வேறு இடங்களில் பரவலாக-தனித்தனியாக இருக்கின்ற ஒருபொருளுடைய அல்லது பல்வேறு வகைப்பட்ட சுவடிகளை ஓரிடத்தில் கொணர்ந்து சேர்ப்பதாகும். இப்பணி சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகும்.
சுவடி திரட்டுதலின் நோக்கம்
இன்றைய நிலையில் சுவடிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அருகியே காணப்படுகின்றது. சுவடிகளில் உள்ள செய்திகள் இதுவெனத் தெரியாமலேயே பலர் சுவடிகளை வைத்திருக்கின்றனர். அவற்றிலுள்ள செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலும் அவர்களுக்கு இல்லை. இதனால் அவர்கள் அவர்களிடம் உள்ள சுவடிகளைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதனால் பயன்படுத்தாத நிலையில் உள்ள சுவடிகள், சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளால் தாக்கப்பெற்று அழிவுக்குள்ளாக்குகின்றன. சுவடிகளைப் பயன்படுத்தாததாலும் பாதுகாப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும் சுவடிகள் பெருமளவு அழிந்திருக்கின்றன. இவ்வழிவிலிருந்து சுவடிகளைக் காத்தலே சுவடி திரட்டுதலின் முதன்மை நோக்கமாகத் திகழ்கின்றது. மேலும், இவ்வாறு திரட்டப்பெற்ற சுவடிகளிலிருந்து இதுவரை அச்சாகாத நூல்களை அச்சிடுவதும், அச்சான நூலாயின் திருத்தப்பதிப்பு கொணர்வதும் இப்பணியின் துணைமை நோக்கமாகத் திகழ்கின்றது.
சுவடி திரட்டும் முறைகள்
காலந்தோறும் சுவடி திரட்டும் பணி நடைபெற்றிருக்கிறது என்றாலும் அவ்வக்காலத்துத் திரட்டுதலின் நோக்கம் வெவ்வேறாக இருந்திருக்கிறது. காலநிலைக்கேற்ப சுவடி திரட்டும் முறைகளை மூன்றாகப் பகுக்கலாம். அவை,
1. சங்க கால சுவடி திரட்டும் முறைகள்
2. இடைக்கால சுவடி திரட்டும் முறைகள்
3. பிற்கால சுவடி திரட்டும் முறைகள் என அமையும்.
அ. சங்க கால சுவடி திரட்டும் முறைகள்
சுவடி திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கப்பெற்றுள்ளது. சங்கப் புலவர்கள் நாடெங்கும் பரவி தங்கள் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கின்றனர். இவை தனி நூல்களாக இல்லாதவை. ஒரு காலகட்டத்தில் இப்பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்ட போது நாடெங்கும் உள்ள புலவர்களை ஒன்று சேர்த்து உதிரியாக இருந்த பாடல்களையெல்லாம் தேடித் திரட்டி ஒருபொருளுடைய பாடல்களையெல்லாம் ஒருங்குபடுத்தித் தொகுத்துச் சேர்த்திருக்கின்றனர். இவ்வாறு சேர்த்த பாடல்களின் தொகுப்பு தான் இன்று நாம் படித்துக்கொண்டிருக்கும் பாட்டும் தொகையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும். ஆகச் சங்க காலத்தில் சிதறிக் கிடந்த புலவர்களின் முயற்சியால் ஒன்று திரட்டும் முறை வெளிப்பட்டிருக்கிறது.
ஆ. இடைக்கால சுவடி திரட்டும் முறைகள்
பக்தி காலமான இடைக்காலத்தில் பல ஆதீனங்களும், மடாலயங்களும், தேவாலயங்களும் அவரவர் சமயச் சார்புடைய சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்து வந்துள்ளனர். சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும் கோயில்கள் கல்விச் சாலைகளாகத் திகழ்ந்திருக்கின்றன. பாண்டியர் காலத்தில் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பெற்று தமிழறிஞர்களை ஒன்று கூட்டி தமிழ்ப் பணிகளைச் செய்திருக்கின்றனர். கோவில்களில் உள்ள கல்விச் சாலைகளிலும், தமிழ்ச் சங்க நூலகங்களிலும் சுவடிகள் சேகரித்து வைக்கப்பெற்றும், புதியதாக எழுதப்படும் சுவடிகளைப் பொதுமக்கள் கற்கும் பொருட்டும் வைத்திருந்திருக்கின்றனர். ஆக இடைக்காலத்தில் எல்லோரும் கல்வி பெறவேண்டி சுவடிகளைத் தொகுத்து நூலகமாக்கிய முறை வெளிப்பட்டிருக்கிறது.
இ. பிற்கால சுவடி திரட்டும் முறைகள்
சுவடிகளின் பயன்பாடு குறைந்த ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தைப் பிற்காலம் என்று கூறுகிறோம். இக்காலத்தில் சுவடி திரட்டும் பணிகள் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்திருக்கின்றன.
அழிவிலிருந்து சுவடிகளைக் காக்கவேண்டி அந்நியராட்சி அதிகாரிகளான மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்ல¦ஸ் போன்றவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்த பல்வேறு வகைப்பட்ட சுவடிகளைத் திரட்டியிருக்கின்றனர். இச்சுவடிகள் இன்றைய பல்வேறு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களாகத் திகழ்கின்றன.
அந்நியராட்சியின்கீழ் வாழ்ந்த மன்னர்களும் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். குறிப்பாக, தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் சரபோஜி இந்தியா முழுவதும் சுற்றி அங்கங்கு கிடைக்கும் சித்தா, யுனானி, ஆயுள்வேத மருத்துவச் சுவடிகளையும் உடன் கிடைத்த இலக்கியச் சுவடிகளையும் தொகுத்துத் தஞ்சையில் சரஸ்வதி பண்டாரம் என்னும் சரஸ்வதிமகால் நூலகம் அமைத்திருக்கிறார்.
தொடக்கக் கல்வியை முடித்தபின் ஒருசிலர் மேலும் சில சிறந்த நூல்களைக் கற்க விரும்பி பலவிடங்களில் உள்ள சுவடிகளைத் திரட்டிக் கொணர்ந்தோ படியெடுத்தோ படித்திருக்கின்றனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றோர் கற்பதற்காகவே சுவடிகளைத் திரட்டி இருக்கின்றனர். பிறர் படிப்பதற்காகவும் பலர் சுவடிகளைத் தேடிக் கொணர்ந்திருக்கின்றனர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் படிக்க விரும்பிய சுவடிகளைச் சண்பகக் குற்றாலக் கவிராயர் தேடிக் கொணர்ந்திருக்கின்றார்.
ஜமீன்களும், செல்வந்தர்களும், தமிழறிஞர்களும் சுவடிகளைத் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சுவடிகளை அச்சேற்றம் செய்வதற்காகவும் சுவடி திரட்டும் பணி நடந்திருக்கிறது. சி.வை. தாமோதரம் பிள்ளை, சிவன்பிள்ளை, கனகசபை பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்றோர் திரட்டிய சுவடிகள் பல அச்சேற்றம் பெற்றிருக்கின்றன.
திருத்தப் பதிப்பு செய்வதற்காகவும் பலர் சுவடி திரட்டும் பணியைச் செய்திருக்கின்றனர். குறிப்பாக, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்றோர் இப்பணிக்காகவும் சுவடிகளைத் திரட்டி இருக்கின்றனர்.
சுவடிகளைப் பாதுகாக்கும் எண்ணத்திலும் கற்கும் ஆர்வத்திலும் பலர் சுவடிகளைத் திரட்டியிருக்கின்றனர். இப்பணியில் தனியார் பலரும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயற்பட்டிருக்கின்றன.
பாண்டித்துரைத்தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 'பாண்டியன் புத்தகாலயம்' ஒன்றை நிறுவி அதில் தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்து வைத்திருக்கின்றார். அச்சில் வராத தமிழ் நூல்களைத் தேடிப் பெறுவதில் கனகசபை பிள்ளை ஈடுபட்டிருக்கின்றார். இரா. இராகவையங்கார் தம் சொந்த முயற்சியில் தொகுத்த சுவடிகள் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாத்து வருகின்றனர். உ.வே. சாமிநாதையர் தொகுத்த சுவடிகள் சென்னையில் உ.வே. சாமிநாதையர் நூலகமாகத் திகழ்கிறது. இவ்வாறு தமிழறிஞர்கள் திரட்டிய சுவடிகள் பல நூலகங்களாகத் திகழ்கின்றதைக் காணமுடிகிறது. தனியார் திரட்டைப் போல் அண்மைக் காலத்தில் அரசு மற்றும் நிறுவனங்களும் சுவடிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு பல சுவடி நூலகங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகம், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை ஆசியவியல் நிறுவனம், அடையாறு நூலகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
திரட்டுதலின் பயன்கள்
எழுத்து வடிவம் பெற்றுப் பலவிடங்களில் முடங்கிக் கிடந்த சுவடிகளைத் தேடித் தொகுத்ததின் விளைவாக பல நூல்கள் அச்சேற்றம் பெற்று தமிழை வளம்பெறச் செய்திருக்கின்றன. அச்சேற்றம் பெற்ற நூல்களுக்கு மேலும் சுவடிகள் கிடைக்குமாயின் பாடவேறு-மூலபாடம் ஆகியவற்றைக் களைந்து-தெளிந்து பதிப்பிக்க உதவியிருக்கின்றன.
ஒரு நூலுக்கான சுவடிகள் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை. சுவடி திரட்டும் போது ஒரு நூலின் மூலம் மட்டுமோ, உரை மட்டுமோ, மூலமும் உரையும் மட்டுமோ, புத்துரையாகவோ கிடைக்கலாம். அவை முழுமையாகவோ குறைவாகவோ கூட கிடைக்கலாம். முதலும் முடிவும் இல்லாததாகவும், இடையிடையே சிலபகுதிகள் இல்லாததாகவும் கிடைக்கலாம். இவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ஒப்பு நோக்குவோமாயின் திருத்தமான-தெளிவான-சரியான-முழுமையான பாடத்தை தெளிய வாய்ப்பேற்படும்.
அச்சான நூல்களின் சுவடிகளுள் மூலம் மட்டும் கிடைப்பின் மூல வேறுபாடுகள் திருத்தம் பெறுகின்றன. உரையுடன் கிடைப்பின் மூலபாட வரிகள், உரையில் மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வரிகள், உரையின் பொருத்தம் ஆகியவற்றின் துணைகொண்டு பொருத்தமான மூலபாடத்தை உறுதிப்படுத்த இச்சுவடிகள் பயன்படும்.
சுவடி தொகுத்தலின் பயனாக புதிய நூல்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்படும். இப்புதிய நூல்களின் வரவால் தமிழ் இலக்கிய இலக்கண எல்லை பெருகும் என்றால் அது மிகையல்ல.
கடந்த 2010ஆம் ஆண்டு இக்கட்டுரையாளனால் தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் களப்பணி சென்று சுவடிகள் திரட்டப் பெற்ற போது ஏற்பட்ட அனுபவங்கள் இங்குச் சில விவரிக்கப்படுகிறது.
திரட்டுநரின் அறிமுகம்
சென்னை-வடபழனி கார்த்திக் குருக்களிடம் தொலைபேசியில் பேசப்பட்டது. ஒரு சுவடி இருப்பதாகச் சொன்னார். மறுமுறை பார்க்கச் சென்றபோது மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதால் அந்த வேளையில் இருக்கிறோம் என்று இழுத்தடிக்கும் நிலையில் பேசினார். அப்போது என்னைப் பற்றியும் என் சுற்றத்தார் பற்றியும் பேச்சில் இடம்பெற்றது. அவர் என்னுடைய ஊரான பொதட்டூர்பேட்டை பற்றியும் அவ்வூரில் உள்ளவர்கள் பற்றியும் தெரிந்திருக்கிறார். அவர்களை எல்லாம் விசாரித்தார். முதலில் தயங்கியவர் உறவு முறைகளைக் கேட்டபிறகு, பிறிதொரு நாள் தொடர்பு கொண்டு வரவும். சுவடி தருகிறேன் என்றார்.
சிவகிரி,பெரிய குருசாமி மூப்பனார் வீட்டிற்கு மதியம் 1.40க்குச் சென்றேன். அவர் சுவடி இல்லை என்றார். தகவல் தெரிந்து தான் வந்திருக்கிறேன் என்றதும், ஒரு சுவடி உண்டு. அதை மகன் வந்தால்தான் கேட்டு கொடுக்க முடியும் என்றார். மகன் 2.00மணிக்குச் சாப்பிட வருவார் கேட்டு கொடுக்கிறேன் என்றார். அதற்குள் சாப்பிட்டு வந்துவிடலாம் என்று புறப்பட்டேன். 2.30க்கு மீண்டும் பெரிய குருசாமி மூப்பனார் வீடு சென்றேன். அவர் ஒரு மாந்திரீகச் சுவடியைக் கொடுத்தார். மேலும் அவரிடம் சுவடிகள் இருப்பது தெரிந்து மேலும் கேட்டேன். இல்லை என்று வாதிட்டனர். இதற்கிடையில் அவருடைய மருமகளின் அண்ணன் சிவகிரி-தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தை நடத்தி வருபவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். தகவல்கள் பரிமாறிக்கொண்ட பின் அவரிடம் பேசி மீதி வைத்திருந்த ஒரு மாந்திரிகச் சுவடியையும் ஒரு மருத்துவச் சுவடியையும் பெற்றுத் திரும்பினேன்.
சுவடியும் பனைவீடும்
நெல்கட்டும்செவல் என்ற ஊரில் NMM தொகுப்பில் சுட்டப்பெற்றிருந்த 45 முகவரிகளை விசாரித்தேன். அம்முகவரிகள் எல்லாம் நெல்கட்டும்செவல் பச்சேரிக்குரியவை என்றனர். பிறகு அவ்வூருக்குச் சென்றேன். அவ்வூரில் இருப்பவர்கள் யாருக்கும் சுவடி பற்றித் தெரியவில்லை. சுவடி என்றால் பனையோலையில் வேய்ந்த கூரை வீட்டைக் காட்டுகிறார்கள். நெல்கட்டும்செவலில் மாவீரன் புலித்தேவனின் நினைவு மண்டபத்திற்குச் சென்று அங்கு மாவீரன் பற்றிய கதைப்பாடல் ஏடுகள் நான்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திரும்பினேன். வரலாற்றுப் புகழ்பெற்ற மாவீரன் புலித்தேவனின் ஊரில் இன்று மக்கள் இவ்வாறு இருக்கிறார்களே என்ற மனவருத்தத்துடன் திரும்பினேன்.
ஆக்கர் கடையில் சுவடி
நாகர்கோயில்-இரணியல் டி. முருகன் அவர்கள் “என்னுடைய இரண்டு சுவடிகள் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். பிறகு வாங்கித் தருகிறேன்” என்றவர் பஜாரில் ஒருவர் ஆக்கர் கடை (பழைய சாமான்கள் வாங்கி விற்கும் இடம்)யில் சுவடி இருப்பதைச் சொன்னார். ஆக்கர் கடை வைத்திருக்கும் விவேகானந்தம் அவர்களைச் சந்தித்தேன். ஏற்கெனவே சுவடிகள் வந்து விற்றுவிட்டேன். இன்னும் சுவடிகள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். அவற்றை வாங்கித் தருகிறேன் என்றார். சுவடிகள் ஆக்கர்கடைக்கு வந்து விற்பனையாவதைக் கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
அச்சிடக் கொடுத்த சுவடி
அம்மையார்குப்பம் தமிழாசிரியர் திரு.ச.த. கார்த்திகேயன் அவர்கள், “மறைந்த தமிழாசிரியர் O.D. கோவிந்தசாமி அவர்களிடம் ‘மூவடி முப்பது’ என்ற சுவடி இருந்தது. அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் சென்னை பூம்புகார் பதிப்பகத்தில் கொடுத்தேன். ஆனால் அந்நூல் இதுவரை வெளிவரவும் இல்லை” என்றார்.
வடபழனியில் உள்ள தாமரை நூலக உரிமையாளர் திரு.மோகன் அவர்கள், “மீன்சுருட்டியில் இருந்து ஒரு பெரியவர் ஒரு சாக்கு மூட்டையில் மருத்துவச் சுவடிகளைக் கொடுத்தார். மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. வீணாகப் போனவை தவிர மற்றவற்றை எடுத்து வைத்திருக்கிறோம். சுமார் பத்துக் கட்டுகள் இருக்கும். நாங்களே சுவடிகளில் இருந்து நூல்களை வெளியிடுகிறோம். ஆகையால், சுவடிகளைத் தரமுடியாது” என்றார்.
பெயர் மாற்றிக் கூறுதல்
சென்னை-நசரத்பேட்டை திரு.சண்முகம் என்பவரை வீடு செல்லும் முன் வழியில் பார்த்தேன். விசாரித்ததில் சுவடிகள் இல்லை என்றார். வேறொரு சண்முகம் கிராமணியாக இருக்கிறார். அவரிடம் இருக்கலாம் என்று சொல்லி வீட்டிடையும் காட்டி அனுப்பி வைத்தார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் விசாரித்ததில் சுவடி வைத்திருக்கும் சரியான சண்முகம் முகவரியைத் தெரியப்படுத்தினார்கள். நாங்கள் ஏற்கெனவே சந்தித்த அதே சண்முகத்தை அடையாளம் காட்டினார்கள். இவருடைய தந்தையார் பல கோயில் கணக்குகளை நிர்வாகித்தவர் என்ற தகவலைச் சொன்னார்கள். இவரிடம் இருந்தால் கணக்குச் சுவடிகள் இருக்கலாம் என்ற கணிப்புடன் திரும்பினேன்.
வைத்தியம் கற்ற முறை
திருவள்ளூர்-மெய்யூர் இரவி வைத்தியர், கேரளாவில் மருத்துவம் பழக்கிக்கொண்டு வைத்தியம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். சுவடி என்றவுடன் எங்களை மிரட்ட ஆரம்பித்தார். சுவடியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், நான் மலையாளம் சென்று சுவடி படித்து வைத்தியம் பார்ப்பவர். வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்திய பின் சமாதானமடைந்தார். கேரளாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அங்குச் சுவடி படிக்கத் தெரியும் என்றால் சுவடிக் கட்டுகள் உள்ள அறையில் விடமாட்டார்கள். சுவடி படிக்கத் தெரியாது என்றால் சுவடிக் கட்டுகள் உள்ள அறையில் விட்டு சுத்தம் செய்யச் சொல்வார்கள். நான் சுவடி படிக்கத் தெரியாது என்று சொல்லி வைத்தியம் தெரிந்து வந்து இங்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். கேரளாவில் வைத்தியர் வீட்டில் வேலை செய்ய எப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதை இவரின் கூற்று வெளிப்படுத்துகிறது. விருப்பமும் நாட்டமும் இருந்தால் சுவடியைப் படித்து வைத்தியம் செய்யலாம் என்பதை இவரின் கூற்று விளக்குகிறது.
சுவடிகளைப் பெற்ற விதம்
களப்பணி மேற்கொண்ட போது பின்வரும் பத்து நிலைகளில் சுவடிகள் பெறப்பட்ட அனுபவம் மிக்க பயனுடையதாக அமைகின்ற தன்மையைப் பார்க்கலாம். அவை பின்வருமாறு:
1. திரட்டப்பெற்ற சுவடிகளைப் பெறுதல்
2. மிரட்டக் கொடுத்தவர்கள்
3. மறுத்துக் கொடுத்தவர்கள்
4. மறுப்பில்லாமல் கொடுத்தவர்கள்
5. விழா வைத்துக் கொடுத்தவர்கள்
6. சுவடி கொடுத்து திரும்பப் பெற்றவர்கள்
7. சொன்னபடி சுவடி கொடுத்தவர்
8. சுவடி கொடுத்தும் திரட்டியும் கொடுத்தவர்
9. தானாக முன்வந்து சுவடி கொடுத்தவர்
10. ஊர்ப் பொதுச் சுவடி பெற்ற விதம்
1. திரட்டப்பெற்ற சுவடிகளைப் பெறுதல்
பழவேற்காடு திரு.கந்தசாமி குருக்களின் மகன் கணேசன் அவர்கள், “பொன்னேரி கிளை நூலகர் திரு.போனிக் பாண்டியனிடம் மூன்று கிரந்தச் சுவடிகளைக் கொடுத்தேன். அவை இன்னும் என்னிடம் என்றார். அடுத்து, அரிதாஸ் அவர்களைச் சந்தித்தேன். என்னிடம் சில கணக்குச் சுவடிகள் இருந்தன. அதைப் பொன்னேரி கிளை நூலகர் திரு.போனிக் பாண்டியனிடம் கொடுத்துவிட்டேன் என்றார். மறுநாள், பொன்னேரி கிளை நூலக நூலகர் திரு.போனிக் பாண்டியன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர் நாளிதழ் வாங்கச் சென்றிருக்கின்றார் என்றனர். சிறிது நேரங்கழித்து, அவர் வெளியே சென்று விட்டார். நாளைக்குத் தான் வருவார். நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். கைபேசி எண் பெற்று தொடர்பு கொண்டு பேசினேன். கணிப்பொறி பிரிண்டருக்கு டோனர் வாங்குவதற்கு வெளியூர் சென்று கொண்டிருக்கிறேன். நான் பெற்ற சுவடிகளைச் சுவடிக்காரர்களிடம் கொடுத்துவிட்டேன் என்றார். இவர் பெற்று வந்த சுவடிக்காரர்கள் சுவடிகள் எங்களிடம் வரவில்லை என்கின்றனர், இவரோ சுவடிக்காரர்களிடம் கொடுத்துவிட்டேன் என்கின்றார். இங்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்தேன். இரவெல்லாம் யோசனை செய்து பொன்னேரி நூலகரிடம் சுவடிகள் இருக்கின்றன என்பதை மனதில் கொண்டும், அவர் அதைக் கொடுக்க மறுக்கிறார் என்பதை நினைவில் கொண்டும் அடுத்த கட்டப் பணியைத் தொடர முடிவு செய்தேன். மறுநாள், திருப்பாலைவனம் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் திரு.அரிதாஸ் அவர்களைச் சென்று பார்த்தேன். அவர் பொன்னேரி நூலகரிடம் தான் அச்சுவடிகள் இருக்கின்றன என்று உறுதிப்படுத்தினார். அடுத்து, அவரிடமிருந்தே கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, சுவடிகளை வேறொருவரிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவர் அவர்களிடம் கொடுக்கவில்லை. இப்போது நான், அவரிடம் இருந்து சுவடிகளைப் பெற்று நூலகத்தில் வைத்திருக்கிறேன். வந்து பெற்றுச் செல்லுங்கள் என்றார். அடுத்த நாள், பொன்னேரி கிளை நூலகம் சென்று திரு.போனிக் பாண்டியனைச் சந்தித்தேன். எங்கோ தவறு நடந்துவிட்டது என்றவர் அவரிடம் இருந்து நான்கு கிரந்தச் சுவடிக் கட்டுகளைக் (ஒரு ஆணவச்சுவடிக்கட்டு மற்றும் மூன்று கிரந்தச் சுவடிகள்) கொடுத்தார்.
2. மிரட்டக் கொடுத்தவர்கள்
பெரிய நெமிலி (மகாபலிபுரம் அருகில்) கோவிந்த நாயக்கர் மகன் என்.ஜி. கங்காதரன், “முதலில் என்னிடம் சுவடியே இல்லை” என்றார். அவரிடம் சுவடி இருப்பதை உணர்ந்த நான், போல¦ஸ் உதவியுடன் வந்தால் தான் நீங்கள் சரியான பதில் சொல்வீர்கள் என்று அதட்டிப் பேசியவுடன், வீட்டில் இருந்த பெண்மணி அச்சுவடியை அவர்களிடம் கொடுத்துவிடு, நமக்கு ஏன் வம்பு என்றார். அப்பெண்மணியின் கட்டளைப்படி அவர் வீட்டில் இருந்த ஒரு பிள்ளைத்தமிழ்ச் சுவடியைக் கொடுத்தார்.
திருச்செங்கோடு T.N. நாககிரி பண்டிதர் மகன் திரு.தங்கராஜ் அவர்கள், “உங்களிடம் சுவடிகள் எதுவும் இல்லை. உங்களுக்கு யார் சொன்னது என்றார். உங்களிடம் சுவடிகள் இருப்பதை அதிகார பூர்வமாக தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறேன் என்றேன். எங்களிடம் இல்லவே இல்லை என்றார். “நீங்கள் பூசை அறையில் சுவடிகளை வைத்திருக்கிறீர்கள், சாமி சத்தியமாக சொல்லுங்கள், உங்களிடம் இல்லை என்று” என்று கேட்டேன். தயங்கியவர் பேசாமல் இருந்தார். போல¦ஸ் வந்து கேட்டால் தான் கொடுப்பீர்கள் என்று மிரட்டியபடி பேசினேன். மறுநாள் வந்தால் தருவதாகச் சொன்னார். தந்தையிடம் கேட்க வேண்டும் என்றார். தந்தை வீட்டில் தான் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். மறுநாள் வருவதாகச் சொல்லித் திரும்பினேன். மறுநாள் காலை 9.00க்குச் சின்னப்ப அய்யர் என்கின்ற T.N. நாககிரி பண்டிதரைச் சந்தித்தேன். சுவடிகள் கொடுப்பது குறித்து நீண்ட நேரம் பேசினார். நேற்று மிரட்டப்பட்டதின் எதிரொலியால் சுமார் 40கட்டு கிரந்தச் சுவடிகளைக் கொடுத்தார். அப்போது அவர், ஏற்கெனவே இச்சுவடிகளை 2006ஆம் ஆண்டு சுவடிகளைக் கணக்கெடுப்பவர்கள் வந்து கேட்டனர். நானும் கொடுத்தனுப்பினேன். அவர்கள் அவைகளை என்ன செய்தார்கள் என்று தெரியாது. பத்து நாள்கள் கழித்து எனக்குத் தெரிந்த பேருந்து நிலையக் கடையில் கொடுத்துவிட்டுச் சென்றனர். நாங்கள் எவ்வளவு பொறுப்பாக வைத்துக் கொண்டு இருக்கிறோம். இவற்றை இவர்கள் பொறுப்பில்லாமல் எவரிடமோ கொடுத்துச் சென்றுள்ளனரே என்று வருத்தப்பட்டேன். அதனால் தான் உங்களிடம் முதலில் சுவடி இல்லை என்று சொன்னோம். உங்களின் வேண்டுகோளும் தேவையான பேச்சும் எங்களை மனம்மாற வைத்தது என்று கூறி சுவடிகளைக் கொடுத்தார்.
நாகர்கோயில்-வௌ¢ளமோடி எஸ். மரியா அந்தோணியை விசாரித்தேன். அவர் சின்னப்பிள்ளை என்ற பெயரில் அழைத்தால் தான் அவரைப் பற்றித் தெரியும் என்று டீக்கடையில் தெரிவித்தனர். அவர்கள் கூற்றுப்படி சின்னப்பிள்ளை வீடு தேடிச் சென்றேன். வீட்டில் அவர், அவரது மனைவி, இரண்டு மகள்கள் இருந்தனர். சுவடி பற்றி விசாரித்தேன். முதலில் சுவடி பற்றியே எனக்குத் தெரியாது என்றவர்கள் இடக்குமடக்காகப் பேசினர். பிடிகொடுக்காமல் பேசுவதைக் கண்டு மிரட்ட ஆரம்பித்தேன். பெரிய மகள் வங்கியில் வேலை செய்பவள். அவர் இல்லை என்று எழுதிச் செல்லுங்கள். நாங்கள் இல்லை என்று சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும் என்றவாறு பேசினார். நாங்களும் விடாமல் பேசிக்கொண்டே இருந்ததில் சுவடி இருந்ததை ஒத்துக்கொண்டார். அதன் பிறகு அச்சுவடியை வேறொருவரிடம் கொடுத்து விட்டேன். இப்போது இல்லை என்றவாறு பேசத் தொடங்கினர். அதன் பிறகு கேட்டுப் பெற்றுத் தருகிறேன் என்றார்கள். ஆனால், பல முறை சென்றும் சாக்குப் போக்குச் சொல்லி தரவில்லை.
3. மறுத்துக் கொடுத்தவர்கள்
திருக்கழுக்குன்றம் ஒரகடத்தில் திரு.ஆர். விஜயராகவன் அவர்கள், முதலில் சுவடி பற்றிப் பிடி கொடுக்காதவர், பின்னர் களப்பணியின் நோக்கங்களை எடுத்துரைத்தவுடன் சுவடிகளைக் காட்டினார். ஒரு டிரங் பெட்டியில் வாசல் பக்கத்தில் வைத்திருந்தார். சுமார் இருபத்தைந்து கட்டு கிரந்தச் சுவடிகள் வைத்திருந்தார். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். சில நல்ல நிலையிலும் சில பழுதுற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டேன். மீண்டும் சுவடி பெறும் முயற்சியில் பேசப்பட்டபோது சுவடி கொடுப்பதற்கு ஒத்துக் கொண்டார். அவரிடம் குறைந்தது இரண்டு மணி நேரம் செலவழிந்தது. அவரிடம் பழைய புத்தகங்களும் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கொடுக்க மறுத்துவிட்டார். சுவடிகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.
ஸ்ரீபெரும்புதூர் T.A. பாஷ்யம் அவர்கள் முதலில் சுவடிகள் இருப்பதை ஒத்துக்கொள்ளவில்லை. என்னிடம் உங்களிடம் சுவடிகள் இருப்பதற்கான தகவல் இருப்பதை எடுத்துரைத்தேன். சுவடிகள் இருக்கின்றன. அவைகள் மிகவும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். முதலில் சுவடியைக் காட்டுங்கள் என்றேன். அதன் பிறகு முதலில் ஒரு சுவடியைக் கொண்டு வந்தார். அது சுமாரான நிலையில் இருப்பதைக் கண்டேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திண்ணை நிறைய சுவடிகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவற்றைப் பார்க்கும் போது விட்டுவிட்டு வர மணமில்லை. இவற்றில் பெரும்பான்மை பழுதுற்ற நிலையில் இருந்தாலும் சில சுவடிகள் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு அனைத்தையும் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி சுமார் 40 கட்டுகள் எடுத்துக் கொண்டு வந்தேன்.
தண்டரை வைத்தியர் என்கிற டாக்டர் கார்த்திகேயன் அவர்களிடம் சித்த மருத்துவச் சுவடிகள் இருப்பதைக் கண்டேன். தந்தையின் நினைவாகவும் அவற்றைக் கொண்டு வைத்தியமும் செய்து வருகிறேன். ஆகையால், கொடுப்பதற்கு இல்லை என்றார். அப்போது அவ்வீட்டில் அவருடைய வயதான தாயார் இருப்பதைக் கண்டேன். அனுபவம் மிக்கவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது நல்லது என்ற முறையில் அவர்களின் பாதம் தொட்டு வணங்கி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களின் ஆசி பெற்று அவரது கணவரைப் பற்றி பரிவோடு விசாரித்தேன். உருக்கமான நெஞ்சத்தில் அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். வந்த வேலையை விட்டு விட்டு வேறே வேலை செய்கிறோமோ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும், அவ்வம்மையாரின் அனுபவங்கள் மற்றும் நினைவுகள் எழுந்துவர மனமில்லாமல் இருந்தேன். நல்ல வெயில் வேளை என்பதால் மோர் கொடுக்கச் செய்தார். விடைபெறும் முன் இன்னொரு முறை சுவடி கொடுக்கும்படி வேண்டிக்கொண்டேன். உங்களின் அப்பாவை நீங்கள் எப்படி போற்றுகிறீர்களோ அப்படி நாங்கள் சுவடிகளைப் போற்றிப் பாதுகாக்கிறோம். எங்கள் நூலகத்தில் இதுபோல் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இருக்கும் சுவடிகள் அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். அதற்குப்பிறகு உங்கள் விருப்பம் என்று விடைபெற்றேன். அதன் பிறகு ஆசி வழங்கிய மூதாட்டி என்னுடைய அணுகுமுறையைக் கண்டு இவரிடம் சுவடியைக் கொடுத்துவிடலாம் என்றார். அதன் பிறகு அவரிடமிருந்து 13 சித்தமருத்துவச் சுவடிகளைப் பெற்றேன்.
4. மறுப்பில்லாமல் கொடுத்தவர்கள்
ஸ்ரீபெரும்புதூர் T.R. விஜயராகவன் அவர்கள் மூன்று கட்டுகள் கிரந்தச் சுவடிகள் வைத்திருந்தார். கேட்டவுடன் மறு பேச்சு பேசாமல் கொடுத்துவிட்டார்.
செம்பூண்டி திரு.சண்முகம் அவர்களிடம் இருந்த ஒரு ஆரூட ஏடு இப்போது மாம்பட்டுவில் உள்ள திரு.கணேசன் அவர்களிடம் இருப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்லுங்கள் நான் சென்று பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அவர் உடனே அவரிடம் தொடர்பு கொண்டு பேசி, நான் வருவதையும், வருபவரிடம் அச்சுவடியைக் கொடுத்துவிடும்படியும் சொன்னார். வந்தவாசி - மாம்பட்டுக்குச் சென்று செம்பூண்டி சண்முகத்தின் ஆரூடச் சுவடியை கணேசன் அவர்களிடமிருந்து பெற்றேன்.
பவுஞ்சூர் - திருவாத்தூர் திரு.இல.நரேந்திரகுமார் வழக்கறிஞர் காஞ்சிபுரத்தில் வக்கீலாக இருக்கிறார் என்று அவரது தம்பி திரு.கமல் அவர்கள் சொன்னார். அவரிடம் அண்ணனின் கைபேசி எண் பெற்று தொடர்பு கொண்டேன். பேச முடியவில்லை. இரவு 8.00க்கு மீண்டும் தொடர்பு கொண்டேன். மூன்று சுவடிகள் இருப்பதாகவும், காஞ்சிபுரம் வந்தால் தருவதாகவும் சொன்னார். திரு.இல.நரேந்திரகுமாரின் அண்ணன் ஈகை. இல. இராஜ்மோகன் அவர்களைச் சந்தித்தேன். அருணாசல புராணம், நாலடியார், சிற்றிலக்கியம் ஒன்று ஆக மூன்று சுவடிகளைக் கொடுத்தார். கொடுப்பதற்கு முன் அவர் என்னைப் பற்றித் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விசாரித்துள்ளார். அதன் பிறகு எனக்கும் ஆசிரியர் மங்கலங்கிழாருக்கும் உள்ள தொடர்பையும் பற்றிப் பேசப்பட்ட போது அவருடைய குடும்பமும் ஆசிரியர் மங்கலங்கிழாருடன் தொடர்புடையது என்ற மகிழ்ச்சியில் பேசிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு மகிழ்ச்சியுடன் சுவடிகளைக் கொடுத்து மின்னணுப் படி வேண்டும் என்றார். கொடுப்பதாகச் சொல்லிப் பெற்று வந்தேன். மேலும், இச்சுவடிகளை மின்னணுப்பதிவு செய்து அனுப்பினால் நாங்கள் நடத்தி வரும் ‘தமிழர் கழக’ இணைய தளத்தில் வெளியிட இருக்கிறோம் என்றார்.
அதன் பிறகு அவருடைய சித்தப்பா பேராசிரியர் த. சீனிவாசன் அவர்களிடம் இன்னும் சுவடிகள் இருப்பதாகச் சொன்னார். அலைபேசியில் பேசினேன். சென்னை பச்சையப்பன் கல்லூரில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என்னிடம் அகத்தியர் தேவாரத் திரட்டு ஒன்று இருப்பதாகச் சொன்னார். உங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். பிறிதொரு நாள் நேரில் சென்றேன். நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவன் என்றதால் ஒரு நெருக்கம் உருவானது. மேலும் என்னுடைய சுவடி ஆர்வத்தைக் கண்டு இச்சுவடியை நான் என் தந்தையாக வழிபடுகிறேன். ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் இச்சுவடியை வைத்துத்தான் வழிபாடு செய்கிறேன். அதனால் இதனைக் கொடுக்க இயலாது. ஆனால் மின்னணுப்பதிவு செய்து கொண்டு உடன் கொடுப்பதாக இருந்தால் கொடுக்கிறேன் என்றவர், சரி என்றதும், உபசரனையுடன் கொடுத்தனுப்பினார்.
நாமக்கல்-கணபதி நகர் சிவ ஆதிமூல சிவ சுவாமிகளிடம் ஞான சைசன்னியம் என்னும் ஒரு சுவடி இருந்தது. கேட்டவுடன் கொடுத்துவிட்டார்.
5. விழா வைத்துக் கொடுத்தவர்கள்
முனைவர் கிள்ளிவளவன் எனக்கு ஏற்கெனவே பழக்கமானவர். நான் சென்னை பச்சையப்பனில் முதுகலை படித்த காலத்தில் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தவர். அந்த வகையில் நண்பராயிருந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 2006ல் NSS மாணவர்களைக் கொண்டு சுவடிகள் கணக்கெடுப்புப் பணியை நான் தான் மேற்கொண்டேன். அப்போது சில மாணவர்கள் சில சுவடிகளைப் பெற்று வந்தனர். அவற்றைச் செம்மொழி அலுவலகத்தில் கொடுத்துவிட்டேன் என்றார். இப்போது திருவேங்கடன் என்ற மாணவரின் வீட்டில் சுவடி இருப்பதைச் சொல்கிறார்கள். அவற்றைப் பெற்றுத் தருகிறேன் என்றார். சனி,ஞாயிறு விடுமுறையானதால் மாணவன் திங்கள் கிழமை கல்லூரிக்கு வருவான் என்றார். திங்கள் கிழமை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் திருவேங்கடத்தைக் காணச் சென்றேன். சுவடியை மாணவர் வீட்டில் இருந்து எடுத்துவரவில்லை என்றார். சுவடி கொடுத்தால் எனக்கு என்ன நன்மை என்றார். சான்றிதழ் கொடுப்போம் என்றேன். பிறிதொரு நாள் தருகிறேன் என்றார். பிறகு அக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கிள்ளிவளவன் அவர்களைச் சந்தித்தேன். அவர் மாணவரிடம் இருந்து சுவடியைப் பெற்றுத் தருவதாகச் சொன்னார். எங்கள் மாணவர்களிடம் சுவடி பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்ய நீங்கள் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 8.3.2010 காலை செங்கற்பட்டு அரசு கலைக்கல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 11.30க்குக் கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடலில் களப்பணியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினேன். முதல்வர் அவர்கள் மாணவர்கள் திரட்டி வைத்திருந்த மூன்று உதிரிச் சுவடிகளை அன்பளிப்பாக அளித்தார்கள்.
6. சுவடி கொடுத்து திரும்பப் பெற்றவர்கள்
NMM தொகுப்பில் கூறப்பட்ட சிவகிரி முகவரிகள் சரியில்லை. தீர விசாரித்ததில் முகவரி தவறாகப் போடப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்தேன். திரு.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் இராமநாதபுரத்தில் ராஜா ஜவுளிக் கடை நடத்தி வருபவர் என்று தெரிந்தது. அங்கு அவரைச் சந்தித்தேன். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர். அவரிடம் ஒரு மகாபாரத அம்மானை இருந்தது. அதைப் பெற்றுக் கொண்டேன். முதலில் அன்பளிப்பாகக் கொடுத்தவர் சில நாள்கள் கழித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுவடி எனக்கு வேண்டும். திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்றார். முதலில் அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு திருப்பிக் கேட்கும் சூழல் அவருக்கேற்பட்டதை உணர்ந்து மின்னணுப் பதிவு செய்து கொண்டு நேரில் சுவடியைக் கொடுத்துவிட்டு வந்தேன்.
7. சொன்னபடி சுவடி கொடுத்தவர்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள திரு. வெங்கட்டநரசிம்ம பட்டாச்சாரியார் அவர்களிடம் நிறைய சுவடிகள் இருப்பதை அறிந்து சென்று கேட்டேன். அவற்றை நாளை மாலை தருவதாகச் சொன்னார். மறுநாள் மாலை 6.00க்கு அவரிடம் இருந்த சில உதிரி கிரந்த ஏடுகளைக் கொடுத்துவிட்டு மேலும் சில ஏடுகள் பரணையில் இருக்கின்றன. அவற்றைப் பிறகு தருகிறேன் என்றார். என்னுடைய களப்பணியில் நாமக்கல் மையமாக வைத்துக் கொண்டுள்ளதால் வரும்போதும் போகும் போதும் கேட்கலாம் என்று வந்துவிட்டேன். ஒருநாள் இரவு 7.20க்கு வெங்கடநரசிம்ம பட்டாச்சாரியாரைச் சந்தித்தேன். நேரம் ஆகிவிட்டதால் இன்று சுவடி தரமுடியாது பிறிதொரு நாளில் வரச் சொன்னார். விளக்கு வைத்துவிட்ட பிறகு வீட்டில் உள்ள பொருள்களை நாங்கள் தரமாட்டோம் என்ற கருத்து இங்கு வெளிப்பட்டது. பிறிதொரு நாள் விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன் நாமக்கல்லில் வெங்கடேச நரசிம்ம பட்டாச்சாரியார் அவர்களைச் சந்தித்து அவரிடம் இருந்த சாக்கு நிறைய உதிரி கிரந்த ஏடுகளைப் பெற்றுக் கொண்டேன்.
8. சுவடி கொடுத்தும் திரட்டியும் கொடுத்தவர்
பனையூர் A. பாலகிருஷ்ணமூர்த்தி வைத்தியர் நாள் வேலைக்குச் சென்றிருந்தார். கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். உடன் வருவதாகச் சொன்னார். வந்தார், சுவடிகள் அவரிடம் பல இருப்பதைக் கண்டேன். செண்பகபுரத்தில் உள்ள பால்ராஜ் என்பவருடைய சுவடிகள் 16 இருப்பதாகச் சொன்னார். அவற்றைக் கொடுக்க முடியாது. அவரிடம் கேட்க வேண்டும் என்றார். அவரிடம் இருந்த ஏனைய மூன்று சுவடிகளைக் கொடுத்தார். மறுநாள் எங்களுடன் ஏனைய முகவரிகளை காட்ட வழிகாட்டுநராக வரக் கேட்டுக் கொண்டேன். வரவும் சம்மதம் தந்துள்ளார். மேலும், தென்மலையில் திரு. சொக்கலிங்கம் என்பவரிடம் சுவடி இருப்பதையும் சொன்னார். பிற்பகல் 1.00க்குச் செண்பகபுரத்தில் வி. பால்ராஜ் அவர்களைச் சந்தித்தேன். என்னிடம் சுவடிகள் தற்போது இல்லை. என்னிடம் இருந்த சுவடிகள் பனையூரில் பாலகிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இருப்பதைத் தெரிவித்தார். ஏற்கெனவே அவரைப் பார்த்துவிட்டேன். உங்கள் சுவடிகளைக் காட்டினார், பார்த்தேன் என்றேன். நீண்ட நேரம் பேசினேன். கொடுப்பதற்குத் தயங்கினார். பேசிப் பேசி ஓரளவு ஒத்துத் கொள்ள வைத்தேன். நல்ல சுக்குக் காப்பி கொடுத்தார். எல்லா சுவடிகளையும் கொடுக்கத் தயங்கினார். பனையூர் பாலகிருஷ்ணமூர்த்தியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். மறுநாள் வரச் சொல்லியுள்ளார். மறுநாள், செண்பகாபுரம் திரு.பவுல்ராஜ் அவர்களின் சுவடியை அவருடைய அண்ணன் திரு.சுடலைமுத்துவின் அனுமதியுடன் பனையூர் வைத்தியர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நேரில் வந்து பெற்று பத்துச் சுவடிகளைக் கொடுத்தார். நேற்று பதினாறு சுவடிகள் இருப்பதாகத் தெரிவித்தீர்கள், இன்று பத்து சுவடிகளைக் கொடுக்கிறீர்களே என்றேன். இவ்வளவுதான் இருப்பதாக பாலகிருஷ்ணன் சொல்கிறார் என்றார். இதில் பாலகிருஷ்ணன் தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு தேவையற்றதை கொடுத்துவிட்டார் என்று எண்ணத் தோன்றியது. அவரிடம் மேலும் விசாரித்ததில் அவைகளைக் கொண்டு நான் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நகல் எடுத்துக்கொண்டு பிறகு தருகிறேன் என்றார். நானே நகல் எடுத்துக் கொடுக்கிறேன் என்றேன். இல்லை, நான் எடுத்துக் கொண்டு பிறகு தருகிறேன் என்றார். அதன் பிறகு அவரை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்குச் சென்றேன். அவர் சரியான வழிகாட்டுநராக செயல்படவில்லை என்பதை சிறிது நேரத்திலேயே அறிந்துகொண்டேன். சில முகவரிகளை சரியாகக் காட்டியவர் மருத்துவச் சுவடிகள் இருக்கும் முகவரிகளை அவ்வாறு காட்டவில்லை. அவர்களைச் சந்திக்க விடாமல் வேறு வழியில் அழைத்துச் சென்றார். எங்களுடன் பயணித்து தனக்குத் தேவையான மருத்துவச் சுவடிகளைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்துகொண்டேன்.
9. தானாக முன்வந்து சுவடி கொடுத்தவர்
சிவகிரி திரு.க. தங்கப்ப நாடார் அவர்கள் சுவடிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்த உடன் தானாக வந்து “என்னிடம் ஒரு சுவடி இருக்கிறது” என்று கூறி பார்த்தசாரதி மாலை என்ற குறைச் சுவடியைக் கொடுத்தார்.
10. ஊர்ப் பொதுச் சுவடி பெற்ற விதம்
அரியநாயகிபுரம் பிள்ளையார் கோயில் பொறுப்பில் உள்ள சித்திரபுத்திரன் கதை, மார்க்கண்டேயன் அம்மானை ஆகிய சுவடிகளை திரு.மாரியப்பன் வாத்தியார் வைத்திருந்தார். இச்சுவடிகள் 40 குடும்பத்தாருக்குச் சொந்தமானது. அவற்றைக் கொடுக்க இயலாது, கோயில் தலைவர் ஊரில் இல்லை என்றார். கூட்டம் போட்டு பேசி முடிவு செய்யுங்கள் என்றேன். உடனே மற்றொரு நாடார் வந்து இப்போதே பேசி முடிவு எடுப்போம், உங்கள் பேச்சுக்குத் தலைவர் ஒன்றும் மறுப்பு சொல்லப் போவதில்லை. வேண்டுமானால் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம் என்றார். அதன்படி ஊரில் இருந்த கோயில் நிர்வாகிகள் உடன் கூடி சுவடிகளைக் கொடுப்பதாக முடிவு எடுத்து கொடுத்தனர். சுவடி கொடுக்கும் போது அச்சுவடிகளை எடுத்துச் செல்லும் எனக்குச் சுவடியைப் படிக்கத் தெரியுமா என்று சோதிக்கும் விதத்தில் சுவடியின் சில பகுதிகளைப் படிக்கச் சொன்னார்கள். குறைந்தது இவ்வூரில் நான்கு மணி நேரம் (இரவு ஒன்பது வரை) இருக்க நேர்ந்தது. இவ்வளவு நேரம் செலவிட்டாலும் சுவடி கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக