ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சுவடிகளில் பிழைகள்

மூலச்சுவடியிலிருந்து அவற்றின் கீழ்வழியேடுகளில் பிழைகள் ஏற்பட்டதால் தான் இன்று மூலபாட ஆய்வு செய்வதற்கான களம் உருவாகியிருக்கின்றது எனலாம்.  எனவே, சுவடிகளில் பிழைகள் நேர்வதற்கான வழிமுறைகளை அறிதல் மூலபாட ஆய்வாளனுக்கு இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கின்றது.  சுவடிகளில் இரண்டு வகையான பிழைகள் நேரிடுவதைக் காணமுடிகிறது.  அவை,
i. படியெடுப்போர் ஏற்படுத்தும் பிழை
ii. சுவடிகளின் புற அமைப்பு மாறுபாட்டால் விளையும் பிழை ஆகும்.

i. படியெடுப்போர் ஏற்படுத்தும் பிழை

மூல நூலாசிரியர் எழுதிய/பார்வையிட்ட சுவடியில் காணப்படும் பாடத்தை அப்படியே மாற்றமேதும் இல்லாமல் படியெடுத்தலே படியெடுப்பவரின் கடமையாக இருக்கிறது.  அதாவது மூலச் சுவடியில் உள்ளதை எழுத்திற்கு எழுத்து மாறுபடாமல் எழுதுவதாகக் கருதலாம்.  ஆனால், படியெடுப்போர் பெரும்பான்மையினர் அவ்வாறு செய்வதில்லை.  அதனால் பல்வேறு வகையான பாடவேறுபாடுகளும் பிழைகளும் தோன்றுகின்றன.  பொதுவாக, படியெடுப்போர் பல்வேறு நிலைகளில் சுவடிகளில் படியெடுக்கும் போது ஏற்படுத்தும் பிழைகளை மூன்று நிலைகளாப் பிரிக்கலாம்.  அவை,

அ.  அறியாமையினால் ஏற்படும் பிழைகள்
ஆ. படியெடுப்போரின் குறைபாட்டினால் ஏற்படும் பிழைகள்
இ. மிகக் கற்றவர்களால் ஏற்படும் பிழைகள்  ஆகும்.

அ. அறியாமையினால் ஏற்படும் பிழைகள்

படியெடுப்போர் படியெடுக்கும் போது தனக்குத் தெரியாமலேயே சில சுவடிகளில் பிழைகள் ஏற்படுத்துவதுண்டு.  அவைகள் பின்வருமாறு:-

1. எழுத்து, சொல், தொடர் விடுதல் ஆகியவற்றால் படியெடுப்போரால் சுவடிகளில் பிழைகள் நிறையவே ஏற்படுகின்றன. எ.கா.

"மணந்தனை யருளா யாயினும் பைபயத்
தணந்தனை யாகி யுய்ம்மோ" (ஐங்.83)

என்னும் தொடரில் வரும் 'பைபய' என்பது ஓரேட்டில் 'பைய' எனப் 'ப'கர எழுத்து விடுபட்டுள்ளதைக் காணமுடிகிறது.

"நமக்கொன் றுரையா ராயினும்" (குறுந்.266)

எனும் பாடலில் ஈற்றயலடியாக 

"மறப்பரும் பணைத்தோள் மரீஇத்" 

எனும் தொடர் சௌரிப்பெருமாள் அரங்கனார், உ.வே. சாமிநாதையர் ஆகியோரின் குறுந்தொகைப் பதிப்புகளில் விடுபட்டிருக்கின்றது.  ஆனால் சைவ சித்தாந்த சமாஜத்தார் 1940ஆம் ஆண்டு வெளியிட்ட 'சங்க இலக்கியம்' என்னும் நூலில் தமக்குக் கிடைத்த சுவடியை ஆதாரமாகக் கொண்டு சேர்த்திருப்பதைக் காணமுடிகிறது.

2. ஒரு சொல்லுக்குள்ளேயே எழுத்துக்களை மாற்றி எழுதுதல்

3. ஒரு சொல்லையோ தொடரையோ இருமுறை எழுதுதல்

4. பாடம் சொல்பவர்களும் கேட்பவர்களும் படியெடுத்துக் கொடுப்பவர்களும் தாம் கேட்கும் அல்லது எண்ணும் கருத்துக்களைத் தம்முடைய நினைவிற்காக மூலத்தின் வரிகளுக்கிடையிலோ வரம்புப் பகுதியிலோ மூலச் சுவடியின் இடையிடையே சில குறிப்புகள் சேர்த்து எழுதி வைப்பர். பிற்காலத்தில் இச்சுவடியைப் பார்த்து படியெடுக்கும் போது படியெடுப்பவர் இக்குறிப்புகளையும் நூற் பகுதியோடு சேர்த்துவிடுதல்

5. படியெடுப்பவர் தமக்கு விளங்காத இடத்தில் ஓரெழுத்தை மற்றோர் எழுத்தாகக் கொண்டு எழுதுதல்

6. படியெடுப்போரின் ஊகத்தினால் சொல்லை மாற்றி எழுதுவதாலும் பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன.    காட்டாக, 'அங்கியங்கடவுள்' என்ற பொருளுடைய 'தீப் புத்தேளார்' என்ற பெயரைப் படியெடுப்பவர், 'திப்புத் தோளார்' என்று எழுதிவிட, அவருக்குப் பின் வந்தவர் அதனைச் செப்பம் செய்வதாகக் கருதி 'திட்புத் தோளார்' என்று எழுதியிருக்கின்றார்.  இவ்வாறு ஒருவர் ஊகத்தால் மாற்றியெழுதிய ஒரு சொல் பின் வந்தவரால் திருத்தம் செய்யப்பெற்றதாகக் கூறி பாடவேறுபாடு உருவாக்குவதை உணரலாம்.

7. சொற்களை, முன்னோ பின்னோ தவறாகச் சேர்த்தோ அல்லது பிரித்தோ அல்லது விடுத்தோ எழுதுதல்

8. சொற்றொடர்களையே தவறாக இணைத்து எழுதுதல்

9. வேற்றுமொழிச் சொற்களைத் தம்மொழியில் தவறாக எழுதுதல்

10. எண்களின் வடிவமைப்பில் நிகழும் ஒற்றுமையினால் மாற்றி எழுதுதல்

11. வல்லின மெல்லின இடையின வேறுபாடுகள் அறியாமல் ஓரெழுத்திற்கு மாற்றாக மற்றோர் எழுத்தை எழுதுதல்.  எ.கா. 

சிறியவர் - சிரியவர்;  கேட்க - கேள்க்க, கேழ்க்க;  அலறி - அலரி; 
இருபுறம் - இறுபிரம்;  வயறு - வயர்

12. பேச்சொலியை எழுத்தொலியாக்கி எழுதுதல்.  எ.கா. 

நீ - நீய்;  அவனே - அவனேய்;   போற்ற - போத்த;  
முற்றும் - முத்தும்;  பிழை - பிளை

13. ஒத்த ஓசையும் பொருளுமுடைய சொற்களைச் சொல்லுவோர் ஒன்றற் கொன்றாகக் கொண்டு கூறுதல்.

14. புள்ளியெழுத்துகளைத் தவறாகப் படித்து எழுதுதல். 

முருகமர் மாமலை - முருக மாமலை (ஐங்.308)

15. சிதைந்தும் பழுதுற்றும் காணப்பட்ட சுவடியைப் படியெடுக்கும் போது படியெடுப்பவர் விடுபாடுகளை நிரப்புதல் மற்றும் விடுபாடுகளை தவிர்த்தல் 

16. இரட்டிப்பினால் ஒரே விதமான தொடக்கமானது அசைகளாகவோ சொல்லாகவோ தொடராகவோ உள்ளமையால் விடுதல்

17. இரட்டிப்பினார் ஒரே விதமான முடிவானது அசைகளாகவோ சொல்லாகவோ உள்ளமையால் விடுதல்

18. இரட்டிப்பில்லாமல் இயல்பாகவே ஒரு சொல்லையோ தொடரையோ வரியையோ விடுதல்

ஆ. படியெடுப்போரின் குறைபாட்டினால் ஏற்படும் பிழைகள்

படியெடுப்போரின் கண்பார்வை குறைவு, செவியுணர் திறன் குறைவு, உடல் சோர்வு, வயது மிகுதி போன்ற உடல் குறைபாட்டினால் தனக்குத் தெரியாமலேயே சுவடிகளில் சில பிழைகள் ஏற்படுத்துவதுண்டு.  அவை பின்வருமாறு:-

1. மேலேட்டில் உள்ள கையெழுத்து விளங்காமை

2. கண்பார்வை குறைவினால் பார்வைக்கு ஒன்றுபோலத் தோன்றும் சொற்களை மாற்றி எழுதுதல்.  படியெடுப்பவரின் கண் சோர்வும், உடற்சோர்வும், பார்வைக் கோளாறும் இருப்பதினால் ஓரெழுத்தைப் பிறிதொரு எழுத்தாகக் கொண்டு எழுதிவிடுவர்.  இதனால் அதன் பொருளும் மாறிவிடுவது இயல்பு.  காட்டாக, 

புயல் புறந்தந்த - அயல் புறந்தந்த (ஐங்.25)
குவவு மணல்  - குலவு மணல் (ஐங்.153)
பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
புரியுடை நன்மான் பொங்குளை யன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும் (ஐங்.13)

இங்குப் புயல் - அயல், குவவு - குலவு, பரியுடை - புரியுடை எனப் பாடம் வேறுபட்டுள்ளமை மேற்காணும் காரணங்களாலேயே எனலாம். 

3. ஒருவர் சொல்ல மற்றொருவர் படியெடுக்கும் போது படியெடுப்போரின் செவிப்புலன் குறைவின் காரணமாக ஒலியமைப்பில் ஒன்று போலத் தோன்றும் அசையொலியுடைய ள, ல, ழ;  ண, ந, ன ஆகிய எழுத்துக்களை ஒன்றற்கொன்றாக மாற்றி எழுதிவிடுதல்.   

4. தாமே சுவடியைப் பார்த்துப் படியெடுக்கும் போது ஒலி ஒப்புமையுடைய எழுத்துக்களைத் தவறுதலாக எழுதிவிடுதல்.  மேலும், சொல்பவரின் எழுத்தோலி வேற்றுமையும், கேட்பவரின் எழுத்தொலியுணர்திறன் வேற்றுமையும், சொல்பவரின் நாக்குழறும் தன்மையும், கேட்பவரின் செவித்திறன் தன்மையும் கொண்டு ஒலி ஒப்புமையுடைய எழுத்துக்களை மாற்றி எழுதிவிடுதல்.  காட்டாக, 

தேனூ ரன்ன இவள் தெரிவளை நெகிழ
-  தேனா றன்ன இவள் தெரிவளை நெகிழ (ஐங்.54)

5. வடிவ அமைப்பில் ஒன்று போலத் தோன்றும் எழுத்துகளால் உண்டாகும் பிழைகள்.  ஒருவர் சொல்ல மற்றவர் எழுதும் போதும், தாமே சுவடியைப் பார்த்து எழுதும் போதும் உருவ ஒப்புமையுடைய கு-ரு, ண-ன, த-ந, ப-ம, ஒ-ஓ, எ-ஏ, து-று-நு ஆகிய எழுத்துக்களைத் தவறுதலாக ஒரு எழுத்திற்குப் பதிலாக பிறிதொன்றை எழுதிவிடுதல் 

இ. மிகக் கற்றவர்களால் ஏற்படும் பிழைகள்

புலவர்கள், மிகப் படித்த புரவலர்கள் பலர் தாங்களாகவே தமக்காகச் சுவடிகளை எழுதியிருக்கின்றனர்.  சிலர் பிறருக்காகச் சுவடிகளை எழுதியிருக்கின்றனர்.  கூலிக்காக எழுதியவர்களின் சுவடிகளில் பிழைகள் மலிந்து காணப்படும்.  இப்பிழைகள் அறியாமையினால் விளைந்தவையாகும். ஆனால் கற்றவர்கள் சுவடியை எழுதும் போது நிகழும் பிழைகள் தாமாக உருவாக்குபவையாகவே இருக்கின்றன.  இவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  அவ்வாறு நிகழும் பிழைகளைப் பின்வருமாறு கூறலாம்.

1. சுவடியைப் படியெடுக்கும் வேகம் காரணமாக நேரிடும் விடுகைகள் சேர்க்கைகள்

2. எழுதுபவரின் மறதி

3. மூல ஏட்டிலுள்ள தொடர் பிழையானதென்று தாமாகவே எண்ணிக்கொண்டு அத்தொடரை விடுதல்.  இந்நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண் 1092இல் உள்ள குறிப்பை நோக்கும் போது இவ்வுண்மை புலப்படுகிறது.  அதாவது, "இவ்வுரையாசிரியர் கருத்துணராமல் காலத்தார் வேண்டாதனவற்றிற்கு வேண்டுவன வாகக் கருதி இடையிடைமடுத்த தப்புரைகளைச் சொல் வேறுபாட்டானும் பொருள் வேறுபாட்டானும் இலக்கண வழுவானும் வாசக பேதத்தானுங் கண்டு தள்ளி எழுதின சிந்தாமணி.  நச்சினார்க்கினியர் முதற் புத்தகம் முடிந்தது" என்றிருப்பதைக் காணலாம்.

4. மூல ஏட்டிலுள்ள தொடர் பிழையானதென்று தாமாகவே எண்ணிக்கொண்டு தம் கருத்திற்கு ஏற்ப ஊகத்தினால் மூல பாடத்தைத் திருத்துதல்.  இதனை ஊகபாடத் திருத்தம் என்பர்.

5. கடினமான சொல் சுவடிகளில் இருக்கும் போது அதற்கு மாற்றாக எளிமையான சொல்லைப் புகுத்துதலும்; தமக்கு அறிமுகமில்லாத அல்லது விளங்காத சொற்கள் வருமாயின், அவற்றிற்கு மாற்றாகத் தமக்கு அறிமுகமான அல்லது அவற்றின் ஒத்த பொருளுடைய சொற்களை எழுதுதலும்

6. இடக்கர்ச்சொல் எனக் கருதி மாற்றுச் சொல்லை எழுதுதல்.  
முலை - நகல், புணர்ந்தார் - கலந்தார்

7. சந்தி சேர்த்தும் பிரித்தும் வரும் சொற்றொடர்களை மூலப்படியில் உள்ளவாறு எழுதாமல் சொல்பவர் மற்றும் எழுதுபவர் தத்தம் விருப்பம்போல் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.

8. ஒருவர் சொல்ல பிறிதொருவர் எழுதும்போது சந்திகளை வேண்டுமிடங்களில் விடுத்தும், வேண்டாதவிடங்களில் சேர்த்தும் எழுதுதல்

9. படியெடுப்பவர் எழுதும்போது தாம் படித்த ஒத்த சொற்பொருள்கள் நினைவுக்கு வர, மூலப் படியிலுள்ளவாறு எழுதாமல் தமக்கு அப்போது நினைவில் தோன்றிய புத்துருவங்களை இடைமடுத்தல்.

10. படியெடுப்பவர் சிலவிடங்களில் வட்டார வழக்குச் சொற்களையும் புகுத்திவிடுவர். 

சோதிடர் - சோதியர், சோதிரி;  ஓட்டுதல் - பரத்திரடல்;  
விரைவு - துரிசு; மீசை - வீசை

11. படியெடுப்பவர் சிலவிடங்களில் பேச்சு வழக்குச் சொற்களையும் புகுத்திவிடுவர்.  

வேண்டும் - வேணும்;  அடைவு - அடவு;  காத்து - கார்த்து; 
குற்றம் - குத்தம்; பிழை - பிளை; தேகம் - (தி)ரேகம்.

12. சொற்களையோ தொடர்களையோ பாடல்களையோ படியெடுப்பவர் தாமே இயற்றி இடையில் சேர்த்தல் 

13. பிற நூற்பாடல்களை இணைத்தல்

14. வாய்மொழியாக வளர்ந்த ஒரு நூலைப் படித்தவர்களில் சிலர் ஏதாவதொரு காலத்தில் ஏட்டுருவம் ஆக்கும் போது அவ்வெல்லாச் சுவடிகளும் மூலச்சுவடிகளாகின்றன. என்றாலும், வாய்மொழியாக வழங்கிய மூல நூலாசிரியரின் பாடத்திலிருந்து சிறிதேனும் வேறுபட்டிருக்கும்.  அதாவது, பாடங்கேட்ட மாணவர்களுடைய அறிவுத்திறன், கேள்வி ஞானம், எழுத்துப் போக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு வகையான பாடங்கள் ஏற்படும்.  இப்பாடங்களில் மாசுக்களும், உருவச் சிதைவுகளும், சொல் மாற்றங்களும், சொல் அழிவுகளும் ஏற்படக்கூடும்.  எடுத்துக்காட்டாக, நாம் தமிழிலக்கிய வரலாற்றை உற்று நோக்கும் போது இவ்வுண்மை புலப்படுகிறது. 

'இறையனார் அகப்பொருள் உரை' இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.  இந்நூலின் முதற் சூத்திர உரையானது 'உரை நடந்துவந்த முறை'யினைக் கூறுகின்றது.  நக்கீரர் இயற்றிய அகப்பொருளுரை, ஒன்பது மாணவர் தலைமுறைகளாக வாய்மொழியாக  வழங்கியதென்பது புலப்படுகின்றது.  அதாவது, "மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் படியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருங்சுவனார்க்கு உரைத்தார்; அவர் மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர் மாதளவனார் இளநாகனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்தாசிரியர்க்கு உரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்" (இறையனார் அகப்பொருள், கழகம், ப.9) என்பதால் உணரலாம்.

ii. சுவடிகளின் புற அமைப்பு மாறுபாட்டால் விளையும் பிழைகள்

சுவடிகளின் புற அமைப்பு பல்வேறு நிலைகளில் காலந்தோறும் மாற்றம் அடைகின்றன.  இம்மாற்றங்களாலும் சில பிழைகள் நேர்வதுண்டு.  அவை பின்வருமாறு:-

1. சுவடிகளின் ஓரங்கள் ஒடிந்தும் மடிந்தும் கிழிந்தும் போவதால்
2. ஓலையின் மேல்வரியும் கீழ்வரியும் புலப்படாமல் போதல்
3. மூலப்பகுதியின் சிதைவு
4. களைந்து கலந்த சுவடி
5. ஏடுகள் கட்டுக்குள் முன்-பின் மாறியிருத்தல்
6. துளைப்பகுதியின் சிதைவு மற்றும் தேய்வு
7. பூச்சிகளின் அரிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக