சுவடிகளைப் பெறமுடியாத நிலைகள்
களப்பணி மேற்கொண்ட போது பின்வரும் எட்டு நிலைகளில் சுவடிகள் பெறப்பட முடியாத அனுபவம் எதிர்கால களப்பணிக்கு மிக்க பயனுடையதாக அமைகின்ற தன்மையைப் பார்க்கலாம். அவை பின்வருமாறு:
1. பார்க்க அனுமதி, எடுத்துச் செல்ல இல்லை
2. பயன்பாட்டில் உள்ளவை
3. சுவடி எறிந்துவிட்டதாக பொய்யான தகவல்
4. காப்பிரைட்
5. சுவடி தர ஒப்புதலும் மறுப்பும்
6. ஏமாற்றத் தகவல்கள்
7. காடும் மேடும் அலைந்தது
8. சுவடி பராமரிப்பு தொடர்பான ஒப்புதல்
1. பார்க்க அனுமதி, எடுத்துச் செல்ல இல்லை
தொண்டைமண்டல ஆதீனம் 232ஆவது சந்நிதானம் தவத்திரு. ஞானப்பிரகாசம் சுவாமிகள் அவர்கள், “மடத்துக் கணக்குகள் நிறைய கட்டுகளாக இருக்கின்றன. ஏற்கெனவே டாக்டர் ஜெயராஜ் அவர்கள் அவற்றைச் சுத்தம் செய்து எண்ணெய் போட்டுக் கொடுத்துள்ளார்” என்றார். அவற்றைப் பார்க்க விரும்பிப் பார்த்தேன். அவற்றுள் சைவ சித்தாந்தம், தேவாரம், ஒருபொருள் பலபொருட்டொகுதி போன்ற சுவடிகள் இருப்பதையும் கண்டேன். அவற்றைக் கொடுக்குமாறு கேட்டேன். பார்த்துக் கொள்ளுங்கள் தருவதற்கு எனக்கு உரிமை இல்லை. இங்குள்ள பொருள்களைப் பாதுகாக்கும் உரிமையே எனக்குண்டு என்றார்.
2. பயன்பாட்டில் உள்ளவை
காஞ்சிபுரம் திரு.பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி அவர்கள் வீடு தேடிச் சென்றேன். சுவடிகள் இருக்கின்றன. நாங்கள் பயன்பாட்டில் வைத்திருப்பதால் கொடுப்பதற்கு இல்லை என்றார்.
அச்சரப்பாக்கம் ஸ்ரீசிவ சண்முகம் நாடி சோதிடரிடம் சோதிடம் தொடர்பான முப்பது சுவடிகள் இருப்பதைக் கண்டேன். ஒரு தகரப் பெட்டியில் அடுக்கி வைத்துள்ளார். பயன்பாட்டில் இருப்பதால் கொடுக்க மறுத்துவிட்டார்.
கீழ்அத்திவாக்கம் எ. சேதுபதி அவர்கள் ஒரு மாந்திரீகச் சுவடியை வைத்திருந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். இருப்பினும், பயன்பாட்டில் வைத்துள்ளதால் கொடுக்க மறுத்துவிட்டார்.
3. சுவடி எறிந்துவிட்டதாக பொய்யான தகவல்
கொல்லிமலை-தேனாங்குட்டிபட்டி பஞ்சாயத்துத் தலைவர் எம். செல்லாண்டியின் வீட்டிற்குப் போகும் வழியை அவ்வூர் விதவைப் பெண் ஒருவர் வழிகாட்டினார். குறைந்தது மலையில் ஆறு கிலோ மீட்டர் நடக்கவைத்துவிட்டார். செல்லும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த அவ்வூர்க் கதைகளையும், பஞ்சாயத்துத் தலைவர் பற்றியும், அவருடைய குணநலன்கள் பற்றியும், அவரிடம் சுவடிகள் இருப்பதை நான் பலமுறை பார்த்தது பற்றியும் கூறி வந்தார். செல்லும் வழியெல்லாம் மிளகுத் தோட்டம் என்பதால் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே சென்றேன். வழியில் பஞ்சாயத்துத் தலைவரின் தம்பி சிங்காரம் வரக்கண்டு, அவரிடம் எங்களை அறிமுகப்படுத்தினாள். “திரட்டு, மகாபாரதம், இராமாயணம் எல்லாம் எழுதி வைத்திருக்குமே அதுதானே நீங்கள் கேட்பது” என்றார். ஆமாம் என்றவுடன், அது இப்போது எங்கள் வீட்டில் இல்லை என்றார். ஒரு காலத்தில் இருந்தன. இப்போது வீடு எறிந்துவிட்டதில் எறிந்துவிட்டன என்றார். அவர் சுவடி இல்லை என்று கூற, இப்பெண்மணியும் உடனே மாற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். ஊர்த்தலைவரின் விருப்பம் இல்லாமல் யாரும் எத்தகவலையும் தானாகச் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் பலவகையான தண்டனைகள் அவர்களுக்குப் பஞ்சாயத்தாரால் கொடுக்கப்படும் என்ற தகவலும், தீர விசாரித்ததில் அவர் வீடு எப்பவுமே எறியவில்லை என்ற தகவலும் பெறப்பட்டது. இதனைப் பார்க்கும் போது அவரிடம் இலக்கியச் சுவடிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்று எண்ணத் தோன்றியது. செல்லாண்டி வீட்டில் இருந்துகொண்டே இல்லை என்றதும் இச்சந்தேகம் வலுப்பெறுகிறது.
4. காப்பிரைட்
திருநெல்வேலி-சங்கரன்கோயில் ஓடைத்தெரு சங்கர் வீட்டில் இல்லை. கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சுவடி இருப்பதாகவும், அது பிரம்மமுனி வைத்தியம் என்றும் சொன்னார். சுவடியைக் கொடுப்பதானால் காப்பிரைட் தரவேண்டும் என்றார். அவர் கேட்டதையும் ஒத்துக் கொண்டு வரச் சொன்னேன். வர மறுத்துவிட்டார். மறுநாள் வரச்சொல்லிவிட்டார். மறுநாள் காலை 8.15க்குப் சென்றேன். நேற்று சென்றவர் வரவில்லை என்றனர். மீண்டும் வருவதாகச் சொல்லி வந்தேன்.
5. சுவடி தர ஒப்புதலும் மறுப்பும்
சிந்தாமணி வைத்தியர் ராமையார் மகன் பால்வண்ணன் அவர்களிடம் நான்கு சுவடிகள் இருப்பதைக் கண்டேன். நீண்ட நேரம் பேசி கொடுப்பதற்குச் சம்மதித்தார். வௌ¢ளிக்கிழமையானதால் இன்று கொடுக்க முடியாது ஞாயிற்றுக்கிழமை காலையோ மாலையோ வந்தால் தருகிறேன் என்றார். மறுநாள் டாக்டர் ஆர்.பால்வண்ணன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று வருவதை முன்கூட்டித் தெரிவித்தேன். அப்போது அவர் சுவடி தருவதற்கு இல்லை. நான் வக்கீலைச் சந்தித்தேன். அரசு ஆணை பிறப்பித்திருந்தால் கொடு, இல்லை என்றால் வேண்டாம் என்றார். பல்கலைக்கழகம் கேட்கிறது, வேறு என்ன வேண்டும் என்றேன். அவர், மறுத்துவிட்டார். என் பையன் பையோ இன்ஜினியரிங் படிக்கிறான், எங்கள் குடும்பச் சொத்து தர இயலாது என்றார்.
6. ஏமாற்றத் தகவல்கள்
நாகர்கோயில்-தக்கணங்கோடு எஸ். அருளானந்த ஜார்ஜ் அவர்கள் நாகர்கோயிலுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவ்வூர்ப் பஞ்சாயத்துத் தலைவர். இன்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார் என்று பூக்கடைக்காரர் சொல்ல, அந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றேன். அங்குப் பந்தி நடந்து கொண்டு இருந்தது. எங்களைக் கண்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்திருக்க, சாப்பிட்டு வரச்சொல்லி வெளியில் அமர்ந்தேன். சாப்பிட்டு வந்தவரிடம் விவரம் சொல்லிக் கேட்டேன். என்னிடம் நிறைய மருத்துவச் சுவடிகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை சுரேஷ் என்பவரிடம் கொடுத்துள்ளேன். அவற்றைத் திருப்பிக் கேட்க முடியாது. இருந்தாலும் என்னிடம் இன்னும் சில சுவடிக் கட்டுகள் இருக்கின்றன. அவற்றை நாளை காலை 9.00க்கு வந்தால் தருகிறேன். இன்று எனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொன்னார். நாளை வருவதாகச் சொல்லித் திரும்பினேன். மறுநாள், ஏற்கெனவே சந்தித்த பஞ்சாயத்துத் தலைவர் அருளானந்த ஜார்ஜ் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். ஏற்கெனவே என்னிடம் உள்ள சுவடிகளை சுரேஷ் என்பவரிடம் கொடுத்துள்ளேன். மீதமுள்ள சுவடிகளைத் தருகிறேன் என்று இன்று வரச் சொன்னார். குறைந்தது பத்துக் கட்டுகளாவது இருக்கும் என்று நேற்று சொன்னவர், இன்று ஒன்றரை மணி நேரங் காத்திருக்கச் செய்து வந்தவர், வீட்டில் தேடிப்பார்த்து சுவடி இல்லை என்றார். என்னுடைய வீடு இரண்டு வருடங்களாகப் பூட்டி இருக்கின்றது. நான் நாகப்பட்டிணத்தில் குடியேறியதால் உள்ளூர் சரேஷிடம் சாவி கொடுத்திருந்தேன். அவர் எல்லாச் சுவடிகளையும் எடுத்துக் கொண்டுள்ளார் போலும் நான் வாங்கித் தருகிறேன். இன்னொரு முறை வரச்சொன்னார். காத்திருந்தது வீண் என்று திரும்பினேன்.
7. காடும் மேடும் அலைந்தது
பனையூர் ஆர். திருமலைகுமாரசாமி அவரிடம் ஒரு மருத்துவச் சுவடி இருப்பதை ஏற்கெனவே கண்டு வந்தேன். கோயிலுக்குச் சென்றவர் திரும்பியிருப்பார் என்று வழிகாட்டுநர் திரு.பாலகிருணனன் சொல்ல, அவரைத் தேடிச் சென்றேன். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவருடைய கைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டேன். நான் வெளியூரில் இருக்கிறேன். நான் வந்து உங்களைப் பார்த்தால் தான் தரமுடியும் என்றார். மேலும்மேலும் பேசப்பட்டதும், என்னுடைய மகன் சங்கரபாண்டியன் பன்றிக் காட்டிற்குச் சென்றுள்ளான். அவன் மாலை 5.00க்கு வருவான் அப்போது அவனைக் கொடுக்கச் சொல்கிறேன் என்றார். அவ்வளவு நேரம் இருப்பது கடினம் என்ற எண்ணத்தில், பன்றிக் காடு எங்கே என்று விசாரித்ததில் பக்கத்தில்தான் என்றனர். உடனே காட்டிற்குப் புறப்பட்டேன். வண்டியை விட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று பன்றிக்காடு வீடு சென்றேன். அங்கு அவர் இல்லை. அவருடைய அண்ணன் இருந்தார். விசாரித்தேன். சுவடியை நேற்றே திருச்சியில் இருந்து வந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். இப்போது வீட்டில் சுவடி இல்லை என்றார். உடனே அவருடைய தந்தையாருடன் தொடர்பு கொண்டு செய்தி பரிமாறிக் கொண்டபோது, அவர் அவர் மகனிடம் சொல்லவும், அந்தச் சுவடியா, அது பனையூர் வீட்டில் இருக்கிறது. நான் ஊனப்பட்டவன், என்னால் அங்கு வரமுடியாது, தம்பி வரட்டும் என்றார். நான் தம்பியைத் தான் தேடி வந்தேன். அவர் எங்கே என்றேன். அவர் காட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அது இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டும் என்றார். உடனே அவருடைய தந்தையாரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் ஆச்சரியத்துடன், நீங்கள் பன்றிவீடு வரை வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சுவடி மீது உங்களுக்குள்ள ஈடுபாட்டை உணர்ந்து கொண்டேன். ஐயா, நீங்கள் எப்ப வந்தாலும் அந்தச் சுவடியைப் பெற்றுச் செல்லுங்கள். இன்று மட்டும் வேண்டாம் என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
8. சுவடி பராமரிப்பு தொடர்பான ஒப்புதல்
நாகர்கோயில்-திங்கள் சந்தை மாங்குழியில் தேவசகாயம் மருந்து அறைத்துக்கொண்டு இருந்தார். சுவடி பற்றி விசாரித்தேன். முதலில் தயக்கத்துடன் பேசியவர் என்னுடைய நோக்கம் பற்றித் தெளிவாகச் சொன்னதும், ஏற்கெனவே இருந்தது இப்போது இல்லை என்றவாறு பேசினார். அவரது பேச்சில் பொய் இருப்பதை உணர்ந்து தொடர்ந்து பேசப்பட்டதில் சுவடி இருப்பதை ஒத்துக்கொண்டார். மருந்து அறைத்து முடித்த பிறகு காட்டுகிறேன் என்றார். மருந்து அறைக்கும் வரை காத்திருந்தேன். அவ்வீட்டு அம்மையார் எங்களுக்குச் செவ்வாழை தந்தார். சிறிது நேரங்கழித்து அவர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று பீரோவில் இருந்த சுவடிகளைக் காட்டினார். சுமார் பத்துக் கட்டுகள் இருக்கும். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கேட்டேன். மகனிடம் கேட்டுத் தருகிறேன் என்றார். மகன் இரவுதான் வருவார் நாளை சொல்கிறேன் என்றார். நாளை வருவதாகச் சொல்லி வந்தேன். மறுநாள் திங்கள் சந்தை மாங்குழியில் உள்ள டாக்டர் தேவசகாயத்தைத் தேடிச் சென்றேன். அவர் குடும்கத்தாருடள் வெளியில் புறப்பட்டுக் கொண்டு இருந்தார். ஏற்கெனவே வந்து சென்றதால், மகனிடம் விசாரித்துவிட்டேன். எங்களிடம் உள்ள சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்க சம்மதம். ஆனால், எங்களின் சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் எப்படி பயன்படுத்துகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு ஏற்கெனவே கொடுத்தவர்களின் சுவடிகளை நீங்கள் பயன்படுத்திய விதத்தைத் தெரியப்படுத்துங்கள், புத்தகம் காட்டுங்கள் கொடுக்கிறேன் என்றார். புத்தகம் அனுப்பி வைப்பதாகச் சொல்லி வந்தேன்.
அழிந்த சுவடிகள்
களப்பணி மேற்கொண்ட போது பின்வரும் பத்து நிலைகளில் சுவடிகள் அழிந்த மறைந்த தன்மையைப் பார்க்கலாம். அவை பின்வருமாறு:
1. மழைநீரால் அழிந்த சுவடி
2. புயலில் சிக்கி அழிந்த சுவடிகள்
3. நீரில் மிதக்கவிடல்
4. அறியாமையாமை
5. வீடு இடித்ததால் அழிந்த சுவடி
6. தீக்கிறையான சுவடிகள்
7. மறைவால் மறைந்த சுவடிகள்
8. அயல்நாட்டவர் பெற்ற சுவடிகள்
1. மழைநீரால் அழிந்த சுவடி
சென்னை-அசோக் நகர், பாரி நகரில் திரு.T.K. நம்பியாரை (வயது 85) அவர் வீட்டார் பார்க்கவிடவில்லை. வீட்டிற்கு வெளியிலேயே பேசினர். முதலில் சுவடிகள் இல்லை என்றனர். பேச்சுக் கொடுத்ததில், நாங்கள் மலையாளிகள். முன்னர் நாங்கள் சுவடிகளை வைத்திருந்தோம். மழைக்காலத்தில் இப்பகுதியில் வீடு முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கும். அப்படி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வீடு முழுகும் அளவிற்கு மழை நீர் தேங்கியதில் பல அழிந்துவிட்டன. அவற்றில் எங்களிடம் இருந்த சில சுவடிகளும் அழிந்துவிட்டன என்றனர்.
2. புயலில் சிக்கி அழிந்த சுவடிகள்
பெரிய நெமிலி (மகாபலிபுரம் அருகில்) சண்முக ரெட்டியார் அவர்கள், “1966இல் வந்த புயலில் தகரப்பெட்டி நிறைய வைத்திருந்த சுவடிகள் அடித்துச் சென்றுவிட்டன. இவ்வூரில் நிறைய பேரிடம் சுவடிகள் இருந்தன. அவைகளும் அவர்களும் புயலில் சிக்கிப் பெருமழையால் மாண்டுவிட்டனர்” என்றார்.
3. நீரில் மிதக்கவிடல்
குலசேகரமங்கலம் கோவிந்தன் அவர்கள், மாநாட்டுக்காக ஆட்களை திரட்டி அழைத்துச் செல்லும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அவருடைய மகளிடம் கைபேசி எண் பெற்று தொடர்பு கொண்டதில். நான் ஊரில்தான் இருக்கிறேன். உடன் வருகிறேன் என்றார். வந்தவர், என்னிடம் நிறைய சுவடிகள் இருந்தன. அவைகள் அழிந்த நிலையில் இருந்ததால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் குற்றாலத்திற்குச் சென்று நீரில் விட்டுவிட்டேன். எஞ்சி இருப்பது இது ஒன்று தான் என்று ஒரு சுவடியைக் காட்டினார். அச்சுவடியைப் பெற்றுக் கொண்டு, மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் சுவடிகளைத் தேடச் செல்லும் போது குற்றாலத்தில் திரிகூடராசப்பக் கவிராயரின் சுவடிகள் நீரில் விட்டதை நினைத்து வருத்தத்துடன் திரும்பினேன்.
4. அறியாமையாமை
புதுப்பேடு (மீஞ்சூர்) திருநாவுக்கரசு காலமாகிவிட்டிருந்தார். அவரது பேரன் சிவக்குமார் அவர்களைச் சந்தித்தேன். “எங்கள் தாத்தாவிடம் ஒரு ஓலை இருந்தது. அதைப் பெறுவதற்கு அவ்வப்போது ஒரு மீசைச்காரர் வருவார். அவர் கொடுக்கவில்லை. அவர் இறந்ததற்குப் பிறகு எங்களை வந்து கேட்டார் நாங்கள் அவரிடம் கொடுத்துவிட்டோம். அவர் யார் என்பது தெரியாது” என்றார்.
5. வீடு இடித்ததால் அழிந்த சுவடி
நாமக்கல்-இராஜலிங்கம்பாளையம் கணேசன் வீட்டை இடித்துவிட்டு வேறு வீட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தார். அங்குத் தேடிச் சென்றேன். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் வெளியூர் சென்றிருப்பதாக அவர் மகன் திரு.ராஜா கூறினார். தந்தையுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசப்பட்டதில், “வீடு இடிக்கப்பட்ட போது இருந்த ஒரு சுவடி உடைந்துவிட்டது என்றும், அதைக் குப்பையில் போட்டு விட்டேன்” என்ற தகவல் பெறப்பட்டது.
6. தீக்கிறையான சுவடிகள்
திருத்தணி கார்த்திகேயபுரம் எஸ். லோகநாதன் அவர்கள், “எங்கள் அப்பா சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களிடம் பல சுவடிகள் இருந்தன. எங்கள் வீடு அப்போது கூரை வீடு. எங்கள் வீடு ஒரு சமயத்தில் எறிந்து விட்டது. அப்போது அங்கு வைத்திருந்த சுவடிகளும் தீக்கிறையாயின என்று வறுத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நான் படித்த சில செய்திகள் எனக்கு நினைவுக்கு வர அதை சிலரிடம் ஒப்பிப்பேன். அவ்வகையில் சில மருத்துவக் குறிப்புகளைச் சிலருக்குச் சொல்வேன் என்றார். தற்சயமம் சுவடிகள் எதுவும் இல்லை என்றார். அவரின் தந்தை பெயரில் ஒரு ஆசிரமம் அருகிலேயே கட்டப்பட்டு பராமரித்து வருகின்றனர்.
7. மறைவால் மறைந்த சுவடிகள்
சென்னை-ஜாபர்கான்பேட்டை துரைசாமி குறிப்பிட்ட முகவரியில் இல்லை. பக்கத்தில் விசாரித்ததில் பக்கத்து வீட்டார் “அவர் எங்களின் பெரியப்பா என்றும், அவர் இறந்துவிட்டார் என்றும், துறவியாக வாழ்ந்தவர் என்றும், அவரிடம் ஒரு தகரப்பெட்டி இருந்தது என்றும், அதில் ஒரு சுவடி வைத்திருந்தார் என்றும், அவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றும், அவர் இறந்தபோது அவரிடம் அந்தச் சுவடி இல்லை என்றும்” கூறினர்.
திருவாலங்காடு மதுர ரெட்டியார் மகன் சிவா அவர்கள், “என்னுடைய அப்பா ஒரு தகரப் பெட்டி வைத்திருந்தார். அதில் இரண்டு கட்டுச் சுவடிகள் இருந்தன. என்னுடன் சண்டை போட்டுக்கொண்டு அக்காள் வள்ளியம்மாள் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கூடவே அவருடைய தகரப் பெட்டியையும் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் அங்கேயே காலமாகிவிட்டார். சுவடி அங்குதான் இருக்கவேண்டும்” என்றார். பிறகு அவருடைய வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள அக்காள் வீட்டிற்குச் சென்றேன். அவர் வெளியூர் சென்று இருந்தார். அவரது மகன் திரு.ஆறுமுகம் அவர்கள் “எங்களிடம் மாமா சொல்வது போல் சுவடி இல்லை. கிராம நிர்வாக அதிகாரி விசாரித்தார் நாங்கள் எழுதிக் கொடுத்துவிட்டோம்” என்றார். உரியவர் உயிருடன் இல்லாததால் அச்சுவடி எங்குச் சென்றதென்றே தெரியாத சூழல் ஏற்பட்டதை உணரலாம்.
பெரியநெமிலி திரு. கோபால் நாயக்கர் வீட்டில் தகரப் பெட்டியில் சுவடிகள் இருந்ததாகவும், அவருடைய மகன் வீட்டில் கோபித்துக் கொண்டு அத்தகரப் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். இப்போது கடந்த ஏழு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் காலமாகிவிட்டான். அத்தகரப்பெட்டியில் சுவடிகளும் எங்கள் வீட்டுப் பத்திரமும் இருந்தன. அவை இப்போது எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று மகன் இறந்த செய்தியில் அவனது பெற்றோர் புலம்பினார்கள்.
8. அயல்நாட்டவர் பெற்ற சுவடிகள்
பெரிய நெமிலி (மகாபலிபுரம் அருகில்) ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியிடம் இங்கில¦சுக்காரர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இப்போது வேறெந்த சுவடியும் வீட்டில் இல்லை என்றார்.
பிற தகவல்கள்
NMM தொகுப்பில் பெயர் இடம்பெற்ற விதம்
நாமக்கல்-கொங்கு நகரில் உள்ள முனைவர் பெருமாள் முருகன் நாமக்கல் அரசு கலைக்கல்லூரில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். “மாணவர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் வாகடச் சுவடி ஒன்றை என்னிடம் காட்டினார். ஆனால், சுவடியை என்னிடம் கொடுக்கவில்லை” என்றார். 2006இல் களப்பணி இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்ட மகளிர் கல்லூரிப் பேராசிரியை முனைவர் இந்திரா அவர்களின் மாருதி நகர் முகவரியைக் கொடுத்தார். பிறகு மாருதி நகர் சென்றேன். அங்கு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இந்திரா அவர்களைச் சந்தித்தேன். நாமக்கல் முதல் ராசிபுரம் வரையுள்ள முகவரிகளை மாவட்ட மைய நூலகர் கொடுத்தார். அம்முகவரிகளை அடிப்படையாகக் கொண்டு களப்பணி இயக்கத்தில் சுவடிகள் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்தோம். அம்முகவரிகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், “மாவட்ட மைய நூலகர் கொடுத்த முகவரிகளை மாணவிகளுடன் நானும் சென்று பார்த்ததில் பலரிடம் சுவடிகள் இல்லை என்பது தெரிந்தது. பெயரைப் பதிவு செய்து கொண்டால் அரசு ஏதாவது உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் பலர் பெயரைப் பதிவு செய்திருக்கின்றனர் என்ற தகவலைத் தெரிவித்தார்.
தவறான முகவரி
சென்னை-நல்லதண்ணீர் ஓடகுப்பத்தில் D. கண்ணனைச் சந்திக்கச் சென்றேன். குப்பத்து மக்கள் எங்களைப் பார்த்ததும் சூழ்ந்து கொண்டு கண்ணனைப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டு என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என்னுடன் வந்தவர்கள் கடற்கரையோரம் சென்று விட்டனர். நான் மட்டும் அவர்களுடன் தனியாகப் பேசி நிலைமையை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தினேன். என்னை நம்பாமல் என்னுடைய அடையாள அட்டை காட்டிய பிறகு நான் தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியன் என்று நம்பினார்கள். அதன் பிறகு அவர்களே கண்ணனை வரவழைத்தனர். அப்போது அவரிடம் கேட்டதில் ஏற்கெனவே ஒருவர் வந்து விசாரித்தார். என்னிடம் சுவடி இல்லை என்று சொல்லிவிட்டேனே என்று கூறினார். எப்படி உங்கள் பெயர் பட்டியலில் சேர்ந்தது என்று அவரிடம் கேட்டதில், நான் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பர்கள் முகவரியைத் தொகுக்குப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் யாரோ என் பெயரைச் சேர்த்திருக்கலாம் என்றார். இப்படியும் NMM தொகுப்பில் தவறான முகவரிகள் இடம்பெற்றிருப்பதை உணர்ந்தேன்.
சுவடி பற்றிச் சோதிடர்கள் கருத்து
சோதிடர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். அவை 1. இருப்பிட சோதிடர்கள்; 2. நடை சோதிடர்கள் எனலாம். இருப்பிட சோதிடர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வருபவர்களுக்கு பல நிலை சோதிடங்களைச் சொல்பவர்கள். நடை சோதிடர்கள் மக்களைத் தேடிச் சென்று சோதிடம் பார்ப்பவர்கள்.
1. இருப்பிட சோதிடர்கள்
சுவடிகளை வைத்துக்கொண்டு சோதிடம் பார்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சோதிடர்கள் எல்லோரும் சுவடிகளைத் தங்களிடம் வைத்துக்கொள்வதில்லை என்றும், தேவைப்படின் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து அதன் நகலைப் பெற்று வந்து உரியவர்களுக்குச் சொல்லுவோம் என்றும் சென்னை-திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅகத்திய மகா சிவ துள்ளிய ஜோதிட நிலைய சோதிடர் திரு.T தங்கமாரியப்பன் கூறுகின்றார். தங்களிடம் சுவடி இருக்கிறது என்று சொல்லுவதும், அதனைக் கொண்டு சோதிடம் சொல்லுவதும் பொய்யான வழக்கு என்று கூறுகின்றார். இவர் சொல்லுவதில் எவ்வளவு உண்மை என்று புரியவில்லை. இவரை நேரில் சந்திக்க சென்ற போது முதல் நாள் இவர் வீட்டில் இல்லை. வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் இவர் சுவடியைக் கொண்டு சோதிடம் சொல்கிறார், வீட்டில் சுவடிக் கட்டுகள் உள்ளன என்று தகவல் பெறப்பட்டது. மறுநாள் நேரில் கேட்டபோது, மேற்காணும் பதிலைச் சொல்லுகின்றார். குடும்பத்தாரும் இவரும் வேறுவேறு பதில்களைச் சொல்லுவதைக் காணும் போது இவர் உரைப்பதில் உண்மையில்லை என்று தோன்றுகிறது.
சென்னை-ஜே.ஜே.நகரில் A. பாலகிருஷ்ணன் அவர்களும் ஒரு சோதிடர். நாடி சோதிடம் பார்ப்பவர். எங்களது குரு வைத்தீஸ்வரன் கோயில் சிவசாமி ஆவார். எங்களுக்குச் சுவடிகள் தேவைப்படும் போது வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்துபெற்று நாடி சோதிடம் சொல்வோம். எங்களது கிளை பரவலாக இருக்கிறது. ஆனால் யாரிடமும் சுவடிகள் இருக்காது. நாங்கள் கைரேகையை வாங்கிக் கொண்டு அதற்குத் தக்க சுவடியைத் தலைமையிடத்தில் இருந்து பெற்று சோதிடம் சொல்வோம் என்ற தகவலைச் சொன்னார். அதனால்தான் எங்களிடம் வருபவர்களுக்கு உடனடியாக நாடி சோதிடம் பார்க்க முடியவில்லை என்கிறார். இவரைக் கொண்டு பார்க்கும் போது திரு.T.தங்கமாரியப்பனின் கூற்று உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
சென்னை-விருகம்பாக்கத்தில் திரு.சிவானந்தம் நாடி சோதிடர் சுவாமி படத்திற்கு முன் பத்து ஏடுகள் கொண்ட ஒரு சுவடிக் கட்டை வைத்திருந்தார். அவரிடம் சில சுவடிகள் இருக்கும் என்று தெரிகிறது. பிடிகொடுத்துப் பேசவில்லை. சுவாமி படத்திற்கு முன்னே உள்ள சுவடி பற்றி விசாரித்தேன். அவற்றைத் தொடக்கூடாது. சாமி குற்றம் ஆகிவிடும். நான் அந்தச் சுவடியன்றி வேறு சுவடிகள் என்னிடம் நிறைய உள்ளன என்றவர், அவற்றைக் காட்ட மறுத்துவிட்டார். சுவாமி படத்திற்கு முன் உள்ள சுவடி சோதிடச் சுவடி இல்லை என்பது அவற்றின் மேல் என் கண்ணில் பட்ட சில பாடல் வரிகள் புலப்படுத்தின. மேலும், என்னிடம் உள்ள NMM பட்டியலை வாங்கி நோட்டம் விட ஆரம்பித்தார். சுவடிகள் எங்கெல்லாம் இருக்கும் என்று கேட்கத் தொடங்கிவிட்டார். அவரிடம் இருந்து பட்டியலைப் பெறுவதற்குக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களை எல்லாம் வீட்டிற்குள் விட்டிருக்கக் கூடாது என்று மிரட்டல் தொனியில் சொன்னார். விட்டால் போதும் என்று தப்பித்து வந்துவிட்டேன். இவர் கிடைக்கும் சுவடிகளைத் திரட்டி வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது மட்டும் நன்கு புலப்படுகிறது. ஆனால் இவரிடமும் நாடி சோதிடச் சுவடி இருக்குமா என்பதில் சந்தேகமே. பொதுவாக, நாடி சோதிடம் பார்ப்பவர்கள் தங்களிடம் ஏதாவதொரு சுவடியை வைத்துக் கொண்டிருந்தால் போதும் அதனைக் காட்டி வருபவர்களுக்குத் தங்களுக்குத் தெரிந்த சோதிடத்தைச் சொல்லிவிடலாம். மக்களின் நாடி சோதிட நம்பிக்கையில் சோதிடர்கள் விதைக்கும் விதை மக்களிடம் பல வினைகளை விளைவிக்கக்கலாம்.
2. நடை சோதிடர்கள்
நாமக்கல்-என்.கொசவன்பட்டி அன்னை சத்தியா நகரில் இருபத்தைந்து வீடுகளில் சுவடிகள் இருப்பதாக NMM பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ளவர்கள் தங்கல் முறையில் சோதிடம் பார்க்கச் செல்பவர்கள். எல்லோரும் வெளியூர் சென்றிருக்கின்றனர். வரும் தமிழ் பங்குனி மாதம் 1ந் தேதி எல்லோரும் வீடு வருவர். அப்போது வந்து பாருங்கள் என்று திரு.முனியப்பன் என்பவர் தெரிவித்தார். அவர்களிடம் சுவடி எதுவும் இல்லை என்று அவ்வவர்களின் குடும்பப் பெண்கள் தெரிவித்தனர். வெளியூர் சென்றிருக்கும் அவர்கள் கையில் சுவடிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், சில நாள்கள் கழித்து வெளியூர் சென்ற இவ்வூர் கன்னியப்பனை இராஜலிங்க பாளையத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் சோதிடம் பார்ப்பதாகக் கூறி பேச்சுக் கொடுத்து, அவரிடம் இருந்த சுவடியைப் பார்வையிட்டேன். அச்சுவடியில் படங்கள் வரையப்பட்ட மணிக்கிடைக் கயிறு சாத்திரச் சுவடி இருப்பதைக் கண்டேன். அச்சுவடி பற்றி விசாரித்தேன். இதுபோல் சுவடி எங்களூரில் நிறைய பேரிடம் இருக்கும். தேவைப்படும் போதெல்லாம் நாங்களே இப்படங்களை வரைந்து வைத்துக்கொள்வோம் என்றார். வெளியூர் வரும் போது இச்சுவடியை எடுத்துக் கொண்டு வந்து கயிறு போட்டு சோதிடம் சொல்வோம் என்றார். இப்படியான சுவடிகள் பயன்பாட்டில் நிறைய இருப்பதை உணரமுடிந்தது.
முன்னரே திரட்டப்பெற்ற சுவடிகள்
சுவடிகளை வைத்திருப்பதாகக் கூறப்பெற்ற சென்னை-வண்ணாரப் பேட்டையில் திரு. ஆறுமுகம், கே. பாஸ்கர், கணேசன், மோகனவேல் நாடார், இராஜ், சுந்தர், தணிகைவேல் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராகச் சென்று சந்தித்தேன். இவர்களிடம் சுவடிகள் இல்லை. இறுதியாக திரு. T. பாஸ்கர் அவர்களைச் சந்தித்தேன். அவரிடமும் தற்போது சுவடிகள் எதுவும் இல்லை. என்றாலும், இராமாயண வசனம் கொண்ட (750 ஏடுகள்) சுவடி ஒன்று மேற்குறிப்பிட்டவர்களிடம் காட்டியிருந்தேன். அதை அவர்கள் சில காலம் வைத்திருந்தனர். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டனர். இச்சுவடியைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த திரு. பாலகிருஷ்ணன் என்பவரிடம் ஆய்வுக்காக கொடுத்துவிட்டேன் என்றார். மேலும், எங்கள் தாத்தா வைத்திருந்த ஒரு மூட்டை சுவடிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுரேஷ் என்பவர் எடுத்துச் சென்றார். அவர் எடுத்துச் செல்லும் போது மேற்காணும் இராமாயண வசனச் சுவடி என்னிடம் இல்லாமல் மேற்குறிப்பிட்டவர்களில் ஒருவரிடம் இருந்தது. அதனால், அதை அவரிடம் கொடுக்கவில்லை. இப்போது சுரேஷ் என்பவரைப் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறினார். நல்லதொரு தொகுப்பு எங்கோ மறைந்துவிட்ட இழப்பில் வருத்தத்துடன் திரும்பினேன்.
சென்னை-திருவான்மியூர் T. வேதாத்திரி அவர்கள், “எங்கள் குடும்பத்தில் ஒரு தகரப்பெட்டி நிறைய சுவடிகள் இருந்தன. அவற்றைப் பாண்டிச்சேரி பிரெஞ்சிந்திய நிறுவனத்தினரிடம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கொடுத்துவிட்டோம். அவை போக சில ஏடுகள் எங்கள் வீட்டில் இருந்தன. நாங்கள் பாகப்பிரிவினை செய்த போதும், வீடு கட்டும் போதும் சுவடிகள் இருந்தன. அதன் பிறகு அச்சுவடிகள் சென்ற இடம் தெரியவில்லை” என்றார். அவ்வீட்டு மாமி நல்ல காபி ஒன்றைக் கொடுத்தார். உபசரிப்பின் மகிழ்வில் திரும்பினேன்.
திருத்தணி-நல்லாட்டூர் திரு.ஆறுமுகம் அவர்கள், “எங்கள் வீட்டில் சீதாளப்பனையில் எழுதப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மாந்திரீகச் சுவடிகள் இருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி தேவஸ்தானத்தில் கொடுத்துவிட்டோம்” என்றார்.
திருப்பரங்குன்றம் முதுபெரும் தமிழ்ப் பண்டிதர் திரு. வேதாசலம் முதலியார் (வயது 91) அவர்கள், “என்னிடம் இருந்த சுவடிகள் மற்றும் பழைய நூல்களைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குக் கொடுத்துவிட்டேன் என்றவர், டாக்டர் உ.வே. சாமிநாதையருடன் தனக்கிருந்த தொடர்பு பற்றிக் கலந்துரையாடினார். ஐயர் மறைவில் நானும் என்னுடன் மற்ற மூன்று நண்பர்களும் மட்டுமே இறுதிச் சடங்கில் இருந்தோம் என்ற தகவலைச் சொன்னார். உ.வே.சா. பற்றிப் பலப்பல தகவல் புதிய முறையில் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
கடைய நல்லூர் கீழ் அக்ரகாரம் ஹரிஹரகிருஷ்ணன் அவர்கள், “பத்து ஆண்டுகளுக்கு முன் திருவெண்காடு சுப்பிரமணியம் அவர்களிடம் கிரந்தச் சுவடிகள் 350 கட்டுகள் கொடுத்துவிட்டேன்” என்றார்.
உணவும் தங்குமிடமும்
களப்பணி மேற்கொள்ளும் போது உணவிற்கும் தங்குவதற்கும் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. கொல்லிமலைப் பகுதிகளில் களப்பணி மேற்கொண்டபோது, அப்பகுதி வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலைகளில் இருக்கின்றன. அம்முகவரிகளைத் தேடிச் செல்வதற்கு நடந்தே செல்ல வேண்டும். மேலும் உணவு விடுதிகள் அங்கங்கு இருப்பதில்லை. உணவு சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும். இவ்வாறான சூழலில், கொல்லிமலையில் வழிகாட்டியவர் மதிய நேரத்தில் சாப்பாடு பற்றிச் சிந்திக்காமல் உணவு விடுதி இல்லாத வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். மதியம் இரண்டு மணிக்குச் சாப்பிட வேண்டும் என்றேன். இங்கிருந்து 35 கிலோமீட்டார் பயணித்தால் தான் உணவு என்றார். வயிறு சிறுகுடலும் பெருகுடலும் ஒட்டிவிட்ட நிலையில், வழியில் சிறு கடை ஒன்றில் கிடைத்த பிஸ்கட் வாங்கிச் சாப்பிட்டேன். இதேநிலை மறுநாளும் ஏற்பட்டது. முதல் நாள் அனுபவத்தில் முன்கூட்டியே சில தின்பண்டங்களை வாங்கி வைத்துக் கொண்டேன்.
நாகர்கோயில் பகுதிகளில் களப்பணி மேற்கொண்ட போது, அப்பகுதியில் உள்ள அரிசி பெரியதாகவும் வேகாமலும் கொடுத்த உணவைச் சாப்பிட முடியாமல் இரண்டு வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடக் கூடிய சூழல் ஏற்பட்டது.
திருநெல்வேலி - கள்ளிடைக்குறிச்சிப் பகுதியில் களப்பணி மேற்கொண்ட போது, தங்குவதற்கு மிகவும் துன்பப் பட்டேன். அன்று கள்ளிடைக் குறிச்சியில் சினிமா சூட்டிங்கிற்காக வந்தவர்கள் தங்கிவிட்டதால் நாங்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வந்து அலைந்து திரிந்து இரவு ஒரு மணிக்கு ஒரு விடுதியில் அறை கிடைத்து தங்கினேன்.
இவ்வாறு சுவடி திரட்டப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். அவற்றில் சில மட்டுமே இங்குப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக