ஞாயிறு, 14 அக்டோபர், 2018

செந்தமிழும் மு.இராவும்

மதுரையில் 1901ஆம் ஆண்டு பாண்டித்துரைத்தேவர் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவினார்.  1902ஆம் ஆண்டு அத்தமிழ்ச்சங்க மாத வெளியீடாக 'செந்தமிழ்' உருவாயிற்று.  இதன் மூலம் இதழாசிரியராக ரா. இராகவையங்காரும் முதல் உதவியாசிரியராக மு. இராகவையங்காரும் அமர்ந்து செந்தமிழ் இதழை உலகில் நிலையாக கால்கொள்ளச் செய்திருக்கின்றனர்.  தமிழ்க் கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் பேரவாக்கொண்ட தமிழ்மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ் என்றால் அதுமிகையல்ல.  ஒவ்வொரு மாத இதழும் புதிய புதிய பல அரிய செய்திகளை வெளியிடுவதாகவே வெளிவந்துள்ளது.  "ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள்.  தமிழ்நாட்டுப் பெரும் பேராசியனா யமைந்து தமிழ்மக்கள் வீடுதோறுஞ் சென்று தமிழர் கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைக்கே உரியதாயிருந்தது.  இப்பத்திரிகையின் உயிர்நிலையாயிருந்தவர்கள் இவ்வாசிரியரவர்களே (ஆராய்ச்சித் தொகுதி, முன்னுரை, பக்.10-11)" என்னும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி செந்தமிழுக்கும் மு.இராவுக்கும் இருந்த தொடர்பு வெளிப்படும்.  மு.இரா. அவர்கள் முதல் எட்டு ஆண்டுகளுக்கு செந்தமிழ் இதழின் உதவியாசிரியராக இருந்தபோதும் அதன்பிறகும் (43ஆம் தொகுதி வரை) வெளிவந்த செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் இவர்தம் ஆய்வுப்பணி தொடர்ந்திருக்கின்றது.  குறிப்பாக, இலக்கியம், இலக்கணம்,  மொழிநூல், எழுத்து வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, நாட்டு வரலாறு, சமயம், பண்டை ஆசிரியர்கள், பண்டைத் தமிழர்களின் ஒழுக்கநெறி, சிலாசாசனங்கள், இடப்பெயர்கள், பண்டைக் காலத்துச் சான்றோர்கள் முதலிய பலபொருள்கள் இவர்தம் ஆய்வுகளில் இடம்பெற்றிருக்கின்றன.  மேலும், பழந்தமிழ்ச் சுவடிகளிலிருந்து வெளிவந்த நூல்கள், வாழ்த்துப்பா, இரங்கற்பா என்றவாறும் இவர்தம் பணிகள் செந்தமிழ் இதழில் இடம்பெற்றிருக்கின்றன.  இவற்றைப் பொதுவாக மூன்று வகைகளாகப் பாகுபடுத்திக் காணலாம்.  அதாவது, பதிப்பு, படைப்பு, ஆய்வு என அவை அமையும்.

1.  பதிப்பு

மகாவித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் இதழில் பதிப்பித்த சுவடிப்பதிப்புநூல்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, அ. தனிநூலாகாத இதழ்ச் சுவடிப்பதிப்பு, ஆ. தனிநூலான இதழ்ச் சுவடிப்பதிப்பு என்பனவாகும்.

அ. தனிநூலாகாத இதழ்ச் சுவடிப்பதிப்பு

சுவடியிலிருந்து நேரிடையாக இதழில் வெளியாகி இன்றுவரை இதழ்ப் பதிப்பாகவே இருப்பதைத் 'தனிநூலாகாத இதழ்ச் சுவடிப்பதிப்பு'  எனலாம்.  இவ்வாறு அமைந்த இதழ்ப்பதிப்புகள், இதழ்கள் வெளிவந்த காலத்து மட்டும் பேசப்பட்டு இன்று பேசுவாறற்று கிடப்பனவாகும்.  'பருவஇதழ்களில் சுவடிப்பதிப்புகள்' (மோ.கோ. கோவைமணி, தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு, 2002) என்னும்  ஆய்வேடு 184 புதிய இலக்கியங்களைத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.  இவற்றில் மு.இரா. அவர்கள் தன்னுடைய பங்கிற்கு எதிராசரந்தாதி, புரூரவ சரிதை ஆகிய இரண்டு நூல்களைத் தமிழிலக்கிய உலகிற்குச் செந்தமிழ் இதழ் வாயிலாக அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.  இவ்விரு நூல்களும் இன்றுவரை இதழ்ப் பதிப்பாகவே இருந்துவருகின்றன.

எதிராசரந்தாதி

பத்து கலித்துறைப் பாடல்களாலான இந்நூலைப் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் இயற்றியுள்ளார்.  இந்நூல் உடையவரென்றும், எம்பெருமானாரென்றும் வழங்கும் ஸ்ரீஇராமாநுஜரது வைபவத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  இந்நூல் 1906ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில் மு.இரா. அவர்களாலும், 1929ஆம் ஆண்டு உறரிசமய திவாகரன் இதழில் ரெ. இராமையங்கார் அவர்களின் குறிப்புரையுடனும் வெளிவந்துள்ளது.  இந்நூல் இதழ்ப் பதிப்பன்றி தனிநூற்பதிப்பாக வந்திலது.  இதழில் வெளிவந்து ஏறக்குறைய 75 ஆண்டுக்கால இடைவெளியில் இந்நூலைத் தமிழுலகம் மறந்தே போயிருக்கும்.  எனவே, வருங்கால ஆய்வுக்குத் துணைபுரியும் வகையானும், தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டுவதன் தேவையை உணர்த்தும் முறையானும் இந்நூற் பாடல்கள் இதழில் வெளிவந்ததன் முறைப்படியே இங்குக் கொடுக்கப்பெறுகின்றது.

பூமான் பிறந்து சிறந்தது வேலை புவிபடைத்த
கோமான் பிறந்து சிறந்தது நான்மறை கூடற்சங்க
நாமான் பிறந்து சிறந்தது பண்டெதி ராசனென்னுஞ்
சீமான் பிறந்து சரணா கதியுஞ் சிறந்ததுவே. (1)
சிறந்தது செல்வஞ் சிறவா ததுகலி சில்சமய
மறந்தது மாதவன் பேர்வாழ்ந்த வைகுந்த மன்னுமுனி
திறந்தது வாசல் திறவா நரகந் தெரிந்தவையம்
பிறந்தது பூதூர்ப் பிறவாமுனிவன் பிறந்த பின்னே. (2)
பின்னே தொடரும் பிறவிப் பெரும்பிணி பேர்க்கும்வண்ண
மின்னே யிதற்கு மருந்தறிந் தேனிந்த மேதினியிற்
றன்னே ரொருவரொவ் வாவெதி ராசன் சரணமென்று
சொன்னே னறிந்திலை யேமன மேயிந்தத் துக்கம்விட்டே. (3)
விட்டது தீவினை மாண்டது கோபமெய்ஞ் ஞானநெஞ்சிற்
பட்டது வேறு பரவச்சந் தீர்ந்தது பாவமெல்லாங்
கெட்டது வீடு தருமென்று கேசவன் றாடலைமே
லிட்டது வெங்க ளிராமா நுசனென் றிருப்பவர்க்கே. (4)
இருக்கும் பொருளு மறிவின் பொருளு மெழுத்தெட்டினா
லுருக்கும் பொருளு முணர்வின் பொருளுமொன் றாகவெல்லாஞ்
சுருக்கும் பொருளுந் துணிவின் பொருளுந் துணிந்தபின்பு
செருக்கும் பொருளு மெதிராச ராசன் றெரித்தபின்னே. (5)
தெரியாத வாதியர் தேற்றவிட் டேதிரு வெட்டெழுத்தி
னுரியா ரருள்பெற வேண்டெதி ரேயுடு வும்பிறவும்
பிரியா மதிட்பெரும் பூதூர் முனிசொன்ன பேச்சைநெஞ்சிற்
றரியா தவரறி யாரினி வேறில்லைச் சத்தியமே. (6)
சத்தியத் தின்பொரு டத்துவத் தின்பொரு டன்னிலுன்னும்
புத்தியத் தின்பொருள் புண்ணியத் தின்பொருள் பூசுரர்தம்
பத்தியத் தின்பொருள் பற்றறுக் கும்பொருள் பற்றறுத்தால்
முத்தியத் தின்பொருள் பூதூர் முனிவன் மொழிந்தபின்னே. (7)
மொழிக்கே கரும்பையுந் தேனையும் வைத்தந்த மொய்குழலார்
விழிக்கே யகப்பட் டுழலுகின் றீர்கள்மெய்ஞ் ஞானநெஞ்சிற்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறைமுனி சொல்லச்சொன்ன
வழிக்கே நினையுங் செடீரெதி ரேவரும் வைகுந்தமே. (8)
வையகத் தேதன்னை வள்ளலென் றேத்தினும் வாய்திறவாக்
கையகத் தேநின்று கண்குளிர் வீர்கரு ணாகரனை
மெய்யகத் தேவைத்த பூதூர் முனிதன் விரைமலர்த்தாள்
பொய்யகத் தேநிற்கி லும்மக லாண்மணப் பூமகளே. (9)
சந்தார் புயத்தெங்க ளாழ்வார் தமக்குந் ததியருக்கு
மந்தாதி பத்து மணவாள தாத னலற்றியதால்
நந்தாத குற்றமுண் டாகா தவர்க்கொரு நாய்கங்கைநீர்
தந்தாபந் தீரக் குடித்தாலுந் தீர்த்தத்திற் றாழ்வில்லையே. (10)
முற்றும்.
புரூரவ சரிதை

ஐயம்பெருமாள் சிவந்த கவிராயரின் 'புரூரவ சரிதை' 845 பாடல்களால் ஆனது.  இதில் புரூரவா உற்பத்திப் படலம் முதல் தேவிசேர் படலம் ஈறாக 26 படலங்கள் இடம்பெற்றுள்ளன.  அதாவது, புரூரவா உற்பத்திப் படலம், உருப்பசிப் படலம், யாகப் படலம், உருப்பசி சாபமடைந்து சாபநீங்கு படலம், சனிபகவான் தோற்று படலம், இளவேனிற் படலம், போதுகொய் படலம், புனல்விளையாட்டுப் படலம், வித்துமாலி நகர் கொண்ட படலம், வனம் புகு படலம், சந்திரகிரி படலம், ஓடமேற்றுப் படலம், மக்கட்பிணியுறு படலம், கும்பப் படலம், காந்திமதிப் படலம், கைலைப் படலம், கிரவுஞ்சப் படலம், காந்திமதி மாலையிடு படலம், மூவர் காட்சிப் படலம், காந்திமதி கலியாணப் படலம், மீட்சிப் படலம், போர்புரி படலம், மக்கள் சேர் படலம், தேவி சேர் படலம் ஆகியனவாம்.  இந்நூல் சந்திரகுல திலகனாகிய புரூரவ சக்கரவர்த்தியின் வரலாற்றைக் கூறுகின்றது.  இவனது கதை மகாபாரதத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.  அச்சுருக்கத்தின் விரிவாக ஆசிரியர் 845 பாடல்கள் 26 படலங்களாக யாத்திருக்கின்றார்.  கும்பப் படலத்தை அடுத்த ஓர் படலம் ஏட்டிலேயே இடம்பெறவில்லை என்பதை மு.இரா. அவர்கள் தமது பதிப்புரையில் சுட்டிச்சென்றிருக்கின்றார்.  ஆக, இந்நூலினின்று 25 படலங்களே செந்தமிழ் இதழில் வெளிவந்த ஒரு குறைப்பதிப்பாகத் திகழ்கின்றது.  சனிபகவானால் ஏற்படும் இன்னல்களை இந்நூல் பூர்வச்சக்கரவர்த்தியின் வாழ்க்கை வரலாற்றோடு எடுத்தியம்புகின்றது.  இந்நூலைப் பற்றிய அறிமுகத்தை மு.இரா. அவர்கள் செந்தமிழ்த் தொகுதி 6இல் முதன் முதல் ஆய்வுக் கட்டுரையாகத் தந்திருக்கின்றார்.  அதன்பிறகு இதழ்ப் பதிப்பாக 1922-25ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.  இந்நூலும் இதழிலன்றி வேறெங்கும் அறியமுடியாத ஒன்று.  தமிழறிஞர் அறிய வேண்டி புரூரவா உற்பத்திப் படலத்தின் முதலிரு பாடல்கள் சான்றுக்காகக் கீழே தரப்பெறுகின்றது.
ஆழியா னுந்திவரு மயனருளு மத்திரியாம்
வாழியார்க் கனசூயை வயிற்றிலுடு பதியுதித்தாங்
கூழினான் மறையனைத்து மொருங்குணர்வான் பெருங்குணத்துத்
தாழுமா கடலனைய பொன்னவன்பாற் சார்ந்தனனால். (1)
இருக்காதி மறையனைத்து மின்னளியாற் பொன்னுதவப்
பெருக்காறு புகுங்கடல்போ லுரத்தடங்கப் பெறுநாளின்
முருக்கான செந்துவர்வாய் முக்தமணி வெண்முறுவற்
குருக்காத லுறுமனைவி யுடுபதியைக் குறுகினாள். (2)

ஆ.  தனிநூலான இதழ்ச் சுவடிப்பதிப்பு

மகாவித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் இதழில் வெளியிட்டுப் பின்னர் தனிநூற் பதிப்பான சுவடிப்பதிப்புகளை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை,
1. இதழ்ப் பதிப்பிற்குப் பின் தனிநூற்பதிப்பு
2. இதழ்ப் பதிப்பிற்குப் முன்-பின் தனிநூற்பதிப்பு
என்பனவாகும்.

1. இதழ்ப் பதிப்பிற்குப் பின் தனிநூற்பதிப்பு

சுவடியிலிருந்து முதன்முதலில் மு.இரா. அவர்களால் செந்தமிழ் இதழில் வெளியிடப்பெற்று பின்னர்த் தனிநூலாக ªளியிடப்பெற்றதை 'இதழ்ப் பதிப்பிற்குப் பின் தனிநூற்பதிப்பு'  எனலாம்.  இம்முறையில் சிதம்பரப்பாட்டியல், நரிவிருத்தம், பாண்டிமண்டல சதகம், பெருந்தொகை, விக்கிரமசோழனுலா ஆகிய ஐந்து சுவடிப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.

சிதம்பரப்பாட்டியல்

பரஞ்சோதியாரின் 'சிதம்பரப்பாட்டியல்' 52 செய்யுட்களாலானது.  உறுப்பியல், செய்யுளியல், மொழியியல், பொருத்தவியல், மரபியல் என்ற ஐந்து இயல்களில் 57 வகையான சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  இந்நூற்குப் பழைய உரை ஒன்றுண்டு.  இவ்வுரையுடன் மு.இரா. அவர்கள் 1907-08ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் தனிப்பக்க எண் கொடுத்து வெளியிட்டிருக்கின்றார்.  பின்னர் இவ் இதழ்ப்பதிப்பு 1911ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பிரசுரம் 20ஆவதாக வெளிவந்திருக்கின்றது.  இதன் இரண்டாவது பதிப்பை திரு.கி. இராமாநுஜையங்கார் அவர்கள் 1932ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் செந்தமிழ்ப் பிரசுர வெளியீடு 20ஆவதாகவே வெளியிட்டு இருக்கின்றார்.

நரிவிருத்தம்

சீவகசிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்கதேவரின் 'நரிவிருத்தம்' காப்பு 1, நூல் 50 ஆக 51 பாடல்களாலானது.  இவற்றுள் நரியின் கதையைக் கூறும் பாடல்கள் எட்டு, ஏனையவற்றில், இக்கதையை ஆதாரமாகக் கொண்டு நீதிகளும் அந்நீதிகட்கேற்ற பல கதைகளும் கூறப்பெற்றுள்ளன.  இந்நூலுள் 18 நீதிக்கதைகள் இடம்பெற்றுள்ளன.  அவை முழுவதும் சைன மதம் தொடர்பானவைகளாகும்.  யாக்கை செல்வங்களது நிலையாமையும், பொய் கொலை களவு கட்காமம் என்பவற்றால் அழிந்தவர் கதைகளும், அவையின்றி உயர்ந்தோர் கதைகளும்,  யதி தர்ம சிராவக தர்மங்களது பெருமையும் பிற தர்ம விஷயங்களும் இதனுள் அடங்கியுள்ளன.

நரிவிருத்தம் என்பது நரியைப் பற்றிய பாடல்களாலானதொரு நூல் எனப் பொருள்படும்.  இக்கதை, "தினைப்புனத்தை யழித்த யானையும் யானையை யெய்த வேடனும் வேடனைக் கடித்த பாம்பும் ஒருசேர இறந்து கிடந்ததனில் பக்கத்தே கண்டிருந்த ஒரு நரி மிக்க மகிழ்ச்சியுடன் 'ஆ நமக்கு நிரம்பவும் உணவு குவிந்துவிட்டன.  யானை ஆறு மாதத்துக்கும் வேடன் ஏழு நாட்கும் நாகம் ஒரு நாட்கும் ஆகாரமாகும்' என்று பலவாறு நினைந்து அப்பிணங்களின் அருகே வந்து முதலில் வீழ்ந்துகிடக்கும் வேடன் கை வில்லின் குதைவரைக் கடித்துண்ணத் தொடங்கவும் அவ்வாரறுந்து போக வில்லு விசையாக நிமிர்ந்து, கடித்த நரியின் வாய்க்குட் கோத்துக் கொண்டமையால் நரியும் விரைவிற் செத்தது" (நரிவிருத்தம்-முன்னுரை, செந்தமிழ், 6:11:1907) என்பர்.

இந்நூல் மு.இரா. அவர்களால் 1907ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் வெளியிடப்பெற்றுள்ளது.  பின்னர் இவ்விதழ்ப் பதிப்பு செந்தமிழ்ப் பிரசுரம் 21ஆவதாக 1907, 1920ஆம் ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  இதற்குப்பிறகு  ஆறுமுகஞ்சேர்வை அவர்களின் விளக்கவுரையுடன் 1923ஆம் ஆண்டு சைன இளைஞர் மன்ற வெளியீடாக வெளிவந்துள்ளது.

பாண்டிமண்டல சதகம்

மதுரை ஐயம்பெருமாளின் 'பாண்டிமண்டல சதகம்' காப்பு 2, அவையடக்கம் 1, நூல் 100 கட்டளைக் கலித்துறையாலானது.  பாண்டிமண்டலத்தின் வைபவத்தைக் கூறும் இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை.  கிடைத்தவரை மு.இரா. அவர்களால் செந்தமிழ் இதழில் 1921ஆம் ஆண்டு தெளிவான 36 பாடல்கள் மட்டும் வெளியிடப்பெற்றிருக்கின்றன.  அதன்பிறகு நூல் முழுமையும் ஸ்ரீகாழிக் கண்ணுடைய வள்ளல் சந்தானத்து ஸ்ரீமுத்துச்சட்டைநாத வள்ளலவர்கள் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துத் தர ப.அ. முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களால் 1932ஆம் ஆண்டு சீர்காழி ஸ்ரீஅம்மாள் பிரஸ்ஸில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

பெருந்தொகை

தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களின் பழைய உரைகளினின்றும், முற்காலத்தவும் பிற்காலத்தவுமான இலக்கிய உரைகளினின்றும் தனிப்பாடல்களாக ஏட்டுப்பிரதிகளிலும் இதழ்களிலும் வாய்மொழியிலும் சிலாசாசனங்களிலும் கிடைத்த 2215 பாடல்களின் தொகுப்பாகப் 'பெருந்தொகை' அமைந்துள்ளது.  இது, கடவுள் வாழ்த்து, அறவியல், பொருளியல், இன்பவியல், ஒழிபியல் என்ற ஐந்து இயல்களைக் கொண்டது.  இந்நூற்குப் பின்னிணைப்பாக ஒவ்வொரு பாடலுக்கும் 'விசய சூசிகை' அமைந்துள்ளது.  இத்தொகைச் செய்தவர் மு.இரா. அவர்களேயாவர்.

"இந்நூற் பாடல்கள் பழைய உரைகளிலே மேற்கோளாக ஆளப்படும் பாடல்களில் பெரும்பாலும் இப்போது அச்சேறிய நூல்களில் இருக்கின்றவையாக அமைந்துள்ளன.  இவையன்றி, உரைகாரர் காலத்து வழங்கி, இப்போது பெயர் தெரியாத நூல்களினின்று உதகரிக்கப்பட்ட செய்யுட்களும் பலஉள.  இவற்றுள் வெளிவந்த நூற்பாடல்களை விடுத்து, இன்னநூலென்று தெரியாத உதாரணச் செய்யுட்களும், உரையாளர்களாற் பெயர்கூறி ஆளப்பட்டு இப்போது கிடைத்தற்கியவாயுள்ள பாரதம், தகடூர் யாத்திரை, ஆசிரியமாலை, முத்தொள்ளாயிரம் போன்ற நூற்பாடல்களுமே இதனுள் தொகுக்கப்பட்டுள்ளன.  இவையன்றி பேரரசர், சிற்றசர், வள்ளல்கள், பெரியோர் முதலியவரைப் பற்றியும் தமிழ்நாட்டின் நிலைமை நிகழ்ச்சிகளைப் பற்றியும், உள்ள பழம்பாடல்களை பலவிடங்களினின்றுந் திரட்டி முறைப்படுத்தியுள்ளேன்" (பெருந்தொகை-முன்னுரை, செந்தமிழ், 33:4:1936) என்னும் மு.இரா. அவர்களின் கூற்று இந்நூலமைப்பை விளக்குவதாக உள்ளது.

இந்நூல் 1923ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டு வரை வெளிவந்த செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் தனிப்பக்க எண்ணுடன் வெளிவந்துள்ளது.  பின்னர் இவ்விதழ்ப் பதிப்பு 1936ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பிரசுரம் 62ஆவதாக வெளிவந்துள்ளது.  இதனையடுத்து இதிலுள்ள முதல் ஐம்பது பாடல்களுக்கு சீ. ஆழ்வாரையங்கார் அவர்களின் உரையுடன் 1969ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பிரசுரம் வெளியிட்டுள்ளது.  பின்னர் இவ்வைம்பது பாடல்களுக்கு இரா. இளங்குமரன் அவர்களின் உரையுடன் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1974ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

விக்கிரம சோழனுலா

ஒட்டக்கூத்தரின் 'விக்கிரம சோழனுலா' 342 கண்ணிகள் மற்றும் நூற்பயன் 1 ஆக 343 பாடல்களாலானது.  விக்கிரமசோழன் உலாச் சிறப்பை விவரிக்கும் இந்நூல் கலிவெண்பாவாலாகியது.  இது, அரசன் உலாவைக் கண்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகை மகளிர் நிலைகளை விளக்குகின்றது.  எழுவகை மகளிர் உருவ அழகையும் அவர்தம் உள்ளத்தில் எழுந்த காதலுணர்ச்சியையும் இவ்வுலா சித்தரிக்கின்றது.

இந்நூல் மு.இரா. அவர்களால் 1909ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் தனிப்பக்க எண்ணுடன் வெளியிடப்பெற்றுள்ளது.  பின்னர் இவ் இதழ்ப் பதிப்பு செந்தமிழ்ப் பிரசுரம் 23ஆவதாக 1914, 1951ஆம் ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  இந்நூல் மூவருலாப் பதிப்புகளில் இடம்பெற்றிருக்கக் கூடியவை.  எனவே, மூவருலாப் பதிப்புகளிலும் இந்நூல் இடம்பெற்றிருக்கின்றது.  பண்டித அ. கோபாலையர் அவர்கள் 1926ஆம் ஆண்டு அடையாறு கலாக்ஷேத்திர வெளியீடாக பழைய உரைக் குறிப்புடன் ஆன பதிப்பு எஸ். கலியாணசுந்தரம் ஐயர்(1946) பதிப்பும், திருமதி ருக்மணி தேவி (1952)யின் இரண்டாம் பதிப்பும் என மூவருலாப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.  இப்பதிப்புகளுக்குப் பிறகு சங்குப்புலவரின் உரையுடன் 1971ஆம் ஆண்டு சைவசித்தாந்த நூற்பதிப்புப் கழகம் இந்நூலைத் தனியாக வெளியிட்டுள்ளது.

2.  இதழ்ப் பதிப்பிற்கு முன்-பின் தனிநூற்பதிப்பு

இதழ்ப் பதிப்பாக வெளிவருவதற்கு முன்னும் பின்னும் தனிநூற்பதிப்பாக வெளிவந்தவை 'இதழ்ப் பதிப்பிற்கு முன்-பின் தனிநூற்பதிப்பு' எனலாம்.  இதழ்ப் பதிப்பிற்கு முன்னர் வெளிவந்ததாகினும் இதழில் வெளிவந்தவை திருத்தப் பதிப்பாகவும், மூலச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட பதிப்பாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இம்முறையில் மு.இரா. அவர்கள் செந்தமிழ் இதழில் திருக்கலம்பகம், தொட்டிக்கலைக் கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை ஆகிய இரண்டு சுவடிப்பதிப்புகள் வெளியிட்டுள்ளார்.

திருக்கலம்பகம் 

உதீசித்தேவரின் 'திருக்கலம்பகம்' 110 செய்யுட்களாலானது.  அருகக்கடவுள் வழிபாடு, சமண சமயக் கோட்பாடு போன்றவற்றை இயம்பும் இந்நூல் கலம்பக இலக்கணங்களையும் எடுத்தியம்புகின்றது.  இந்நூலின் மூலம் மட்டும் திருவேங்கட முதலியார் அவர்களால் 1883ஆம் ஆண்டு பாகுபலி நயினாரின் இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்றுள்ளது.  இந்நூலுக்கு அனந்தகவி என்பார் பொழிப்புரை, பதவுரை என இருவேறு உரைகள் செய்திருக்கின்றார்.  இவற்றில் பொழிப்புரையை மு.இரா. அவர்கள் 1907-08ஆம் ஆண்டு செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் வெளியிட்டுள்ளார்.  பின்னர் இவ்விதழ்ப் பதிப்பு செந்தமிழ்ப் பிரசுரமாக 1911, 1951ஆம் ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  திண்டிவனம் திரு.ஆ. பழனிச்சாமி சிவாசாரியார் 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.  1955ஆம் ஆண்டு தஞ்சை ஆ. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மகளின் திருமண வெளியீடாகவும், 1995ஆம் ஆண்டு தன்யகுமார் அவர்களின் உரையுடனும் இந்நூல் பதிப்பாகி இருக்கின்றது.

தொட்டிக்கலைக் கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை

தொட்டிக்கலை ஸ்ரீசுப்பிரமணிய முனிவரின் 'தொட்டிக்கலைக் கேசவப் பெருமாள் இரண்டடைமணிமாலை'  காப்பு வெண்பா 1, நூல் 20(வெண்பா, கலித்துறை என முறையே அமைந்தது) பாடல்களாலானது.  இந்நூல், தொட்டிக்கலையில் கோயில் கொண்டிருக்கும் கேசவப்பெருமாள் மீது பாடப் பெற்றதாகும்.  முனுசாமி முதலியார் அவர்கள் 1892ஆம் ஆண்டு பதிப்பித்த 'தொட்டிக்கலைச் சுப்பிரமணியர் பிரபந்தங்கள்' என்னும் தொகுப்பு நூலில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.  அடுத்து மு.இரா. அவர்களால் 1906ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில் வெளியிடப்பெற்றுள்ளது.  பின்னர், இவ்விதழ்ப்பதிப்பு செந்தமிழ்ப் பிரசுரம் 25ஆவதாக 1906, 1929ஆம் ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  அடுத்து, 1953ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட 'தொட்டிக்கலை மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள்' எனும் தொகுப்பு நூலிலும் இந்நூல் இடம்பெற்றுள்ளது.

2.  படைப்பு

மகாவித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் இதழ் வழியாக வெளியிட்ட படைப்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  அவை, 
அ. வாழ்த்துப்பா
ஆ. இரங்கற்பா
என்பனவாகும்.  வாழ்த்துப்பா என்ற நிலையில் சண்முகநாத சேதுபதி அவர்களின் 35ஆவது வௌ¢ளணி விழாவின்போது பாடிய 5 பாடல்களும்; இரங்கற்பா என்ற நிலையில் மஉறாராஜா ஸ்ரீராஜராஜேசுவர சேதுபதி அவர்கள் மறைவு குறித்துப் பாடிய 10 பாடல்கள், மகோமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் அவர்கள் மறைவு குறித்துப் பாடிய 12 பாடல்கள், மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் மறைவு குறித்துப் பாடிய 20 பாடல்கள் முறையே 1943, 1926, 1942, 1946ஆம் ஆண்டுகளில் செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் வெளிவந்திருக்கின்றன.  இன்று இவ்விதழ்ப் பகுதிகளைக் காண்பது அரிதாக இருக்கின்றமையினாலும், மு.இரா.வின் படைப்புகளை இதழ்வழி வந்தவாறே இங்குத் தரப்பெறுகின்றது.

இராமநாதபுரத்து ஸ்ரீராஜமாந்ய சண்முகநாத சேதுபதி வேந்தரவர்களது
35ஆவது ஆண்டுவிழா

வாழ்த்துப்பா

மூவேந்தர் தங்கள்பின் முத்தமிழ்ப் பைங்கொடி மூண்டுபடர்
தேவேந்தர் தாருவென் றான்றோர் புகழ்ந்த திருக்குலத்தே
கோவேந்தன் சண்முக ராஜேசப் பூம்பணை கோலமுடன்
பாவேய்ந்த நாண்மங் கலத்திற் றழைத்துப் பலித்ததுவே. (1)
பண்டுகொண் டாரின்று போலவுண் டோபசி போய்வறிஞர்
உண்டுகொண் டார்நல் லுடைகள்கொண் டார்விடுந் தூட்டமுதம்
மொண்டுகொண் டார்சண்முகராஜ னாண்மங் கலமுழுதுங்
கண்டுகொண் டார்பல வாடலும் பாட்டுங்கண் காட்சியுமே. (2)
கோடிக் கதிபரெனப்பட் டவர்பல கோடிகடல்
ஓடிப் படைத்த பொருள்பொரு ளோவுயர் தெய்வம்வந்து
தேடிக் கொடுத்தநின் செல்வமன் றோநிலை நின்றசெல்வம்
கோடிக்கு நாயக சண்முக ராஜ குணாகரனே. (3)
தேவை திருவுத் தரகோச மங்கை திருச்சுழியல்
மாவைகு புல்லை மருதூரா டானை வயங்கிறையோர்
கோவைக லும்பணி கொற்றவை யோடருள் கூர்கமன்னோ
சேவை நிதந்தந்து சண்முக நாகநா தேந்திரற்கே. (4)
ககராஜ கேதன காமா இரணிய கர்ப்பயஜ்ஞ
ரகுநாத வம்ச ரவிகுல தீப நயசுகுணா
ஜெகராஜ சேகர சண்முக ராஜேந் திரமுகவை
மகராஜ ஸேது மகிபால வூழியும் வாழியவே. (5)

மஉறாராஜா ஸ்ரீராஜராஜேசுவர சேதுபதி மீது சரமகவி

தண்டமிழா மணங்குதனைத் தாங்குமொரு தலைவனின்றித் தளர்ந்த காலை மண்டுதுய ரிருளகல வந்தருள்பாற் கரன்பினுவா மதியிற் றோன்றும்
எண்டகுசீர்ச் சேதுபதி யிராசரா சேசவள்ளா லிந்நா ளுன்னைக்
கண்டிலமால் யாங்கொளித்தாய் காசினியி னிலையிதுவோ காணுங் காலே. (1)
உலகவியன் முழுதுமுணர்ந் தொழுகியபே ரறிவாள வோங்கு மன்னர்
திலகமனாய் ராசரா சேச்சுரநீ செல்கால மீதோ சொல்லாய்
குலகுமர ரினைந்தேங்கக் கோமகளிர் தாமாற்றக் குலவர் கூவ
அலகில்துய ருறுமருமை யன்னையர்தம் முதுமைகண்டு மகல வம்மா. (2)
புலம்புரியும் பேரவைகள் புலம்பினநா யகமிழந்து புனித சேது
நிலம்புரிந்து தாங்கியதன் னிருபனையின் றிழந்திரங்கா நின்ற தன்பர்
குலம்புலம்பற் களவுண்டோ குறுகாரும் மதியாற்றற் குருகா ரில்லை
வலம்புரிபோற் சேதுகுலம்வரும் பெருமான்பெரும் பிரிவால் வருந்தி மன்னோ. (3)
புலமையாற் பெரியாரைப் புந்தியா லளந்தவரைப் போற்ற வல்ல
குலமையார் கொடைவேந்த னீயன்றி யாவருளர் குறிக்கொண் டியானும்
நிலைமையா ரச்செய்த நெடுந்தகாய் நின்பிரிவுன் னன்பு மிக்க
தலைமையார் புலவரையென் படுத்தாது பலபுலம்பத் தமிழ்க்கோ மானே. (4)
அருமையறியாக் காலத்தழைத் தறிஞர்தமைப் பேணியணைத்த கையைப்
பெருமையறியாத நமன்பிரித் தனன்காண் புண்ணிடைக்கோல் பெய்தாற்போலத்
திருமதுரைத் தமிழ்ச்சங்கந் தென்னவர்பிரா னென்னவுறுஞ் சேதுவேந்தன்
றருமதுரை தலைமையினாம் பொலிவை யிழந்ததுவென்னோ தமிழ்செய்பாவம். (5)
மதிபுக்க திருமுகத்தான் மகிழ்ந்தேற்கு முபசரிப்பும் மதுர வாக்கால்
எதிபுக்க பாடல்பல வின்னிசையிற் பன்னழகு மேற்பக் கூறுந்
துதிபுக்க சொன்னயமுஞ் சூழ்திறமும் ஆழ்மதியுந் தோன்றா லென்றும்
பதிபுக்குன் பாற்காண்பேன் விதிபுக்கவா வின்று பாரா வாறே. (6)
பண்டுற்ற நின்குடியுட் பழம்பெருமைக் குடிப்பிறந்த பண்பு நோக்கி
அண்டுற்ற வெமக்கெனநீ யன்புற்றுப் புரிந்தனவு மருளற் கெண்ணிக்
கொண்டுற்ற பேரளியுங் குறிக்கொண்டு நினைதோறுங் கோவே தீவாய்
கண்டுற்ற மெழுகென்னக் கரையுமென துளஞ்சேது காவ லோனே. (7)
தானக்கோப் பாற்கரனார் தவப்பயனே தரியலரை யிரியல் கண்ட,
கானக்கோ ளரியனையாய் காவலருன் போலினியுங் காண்ப துண்டோ
ஏனக்கோட் டிடைநின்றிவ் விருநிலமா தன்றடைந்த வெழுச்சி போலுன்
ஞானக்கோட் டிடைச்சேது நாடுநின்று பெற்றவெழில் நாங்கண் டோமே. (8)
மூதறிவால் யாதனையு முன்னறிந்து கணிக்கவலாய் முகவை வேந்தே
தீதகலுன் னாட்டுரிமைத் திருமகனுக் கொருநாமந் தெரிந்து நாக
நாதனென வாதியினீ நாட்டியதுங் குறைவுறுமோ ஞானச் சீரும்
பூதலமார் தோள்வலியும் புகழ்பெறவுன் கோமகன்பாற் றிகழு மன்றே. (9)
தென்முகவா புரித்தோன்றிச் சீர்க்கதிர்கொள் பாற்கரன்பின் திகழு மன்னோன்
மன்மகவாய் வந்தளித்த மாமதியோன் பிரிந்ததுயர் மாறா தேனும்
நன்மரபாஞ் சேதுகுல நடுக்கடல்வந் துயர்நாக நாத னாகிப்
பன்முகமா யொளிபரப்பும் பாற்கரரோ தயங்கண்டோம் பயம்மண் டோமே. (10)

மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் மீது இரங்கற்பா

பாவாழ்ந்த சங்கத்தார் பலருருவும் ஓருருவாய்
நீவாழ்ந்தாய் உன்காலம் நெடுஞ்சங்க காலமெனப்
பூவாழ்ந்து தமிழகத்தைப் புதுக்கியநீ பொன்னுலகம்
சாவாழ்ந்து சென்றதென்னோ சாமிநா தேந்திரனே. (1)
பூரணமாய் நலம்பலவும் புகும்சாமி நாதவள்ளால்
நேரணவு மாயுளினும் நிறைவுறுவா யென்றிருந்தேம்
பேரணவு நூற்றாண்டுப் பெருவிழவுங் காணாதே
மாரணமிங் குற்றயோர் மாமாங்கம் பொறுத்திலையே. (2)
அதரசினரா லகிலகலை யவையினரா லரும்பொருள்கள்
உரைசெய்குரு வாலுலகி லுயர்பட்டம் பெற்றனையால்
தரைசெய்தவப் பேறனைய சாமிநா தையவுன்றன்
விரைசெலவு விண்புலவர் மிகுசிறப்பும் வேண்டியதோ. (3)
'மீண்டிளமை யுற்றேனென் வேலையினி மேன்மேலும்
ஈண்டுநிறை வேறும்'என்றே எண்பதா நிறைவான
ஆண்டுவிழ வினிற்சொற்றா யருஞ்சாமி நாதவண்ணால்
மாண்டனவோ அவ்வுரையு மாளாத வாய்மையினாய். (4)
புல்லேறிப் போனதமிழ்ப் புலந்திருத்திப் புந்தியெனும்
நல்லேரின் வளம்படுத்த நயச்சாமி நாதனெனும்
சொல்லேரி னுழவனின்றேல் தொல்சங்கச் செய்யுளெலாம்
செல்லேறிப் போகாதோ செந்தமிழின் பயிர்சிதைந்தே. (5)
பண்டுமுது மைக்கிரங்கிப் பாடியவர் போலொருகைக்
கொண்டதொரு கோலுண்டோ குனியுடலுண் டோவூன்றும்
தண்டெனநூல் கொண்டுநிமிர் சாமிநாதன் தமிழ்க்குத்
கொண்டுவந்து செய்தவகை சொல்லுந் தரத்ததுவோ. (6)
சேயோடு தான்பெற்ற செல்வம்போ மென்பர்தமிழ்த்
தாயோதன் வளம்புதுக்குஞ் சாமிநா தப்பெயர்கொள்
தூயோனாந் திருமகனைத் தோற்றனளந் தோவவளை
ஆயோவென் றாதரிக்கும் அருந்தனயர் இனியாரே. (7)
இம்பரிடை நல்லறிஞ ரிருந்தளவு மின்பத்திற்
கும்பர்நுக ரின்பமுமொப் பாகாதென் றோதுதமிழ்
நம்பவுரை செய்சாமி நாதனின்று சென்றதுதான்
அம்பரவின் பத்தளவும் ஆராயும் நோக்கேயோ. (8)
களிப்படுத்த சொல்வழங்கு கனிவாயு மினிமையினை
வெளிப்படுத்த திருமுகமும் விரைந்துதவுந் திருக்கரமும்
தளிப்படுத்துப் பூசிக்கத் தகுஞ்சாமி நாதவுனைப்
பளிப்படுத்த பின்காணும் பாக்கியத்தை யிழந்தேமால். (9)
குலவுபல ரன்பருடன் கூடியுவப் பித்திடுநீ
உலகிலவ ரெந்நாளு முள்ளப்பி ரிந்தனையால்
புலவர்தொழி லாமிதுதான் புகழ்ச்சாமி நாதவுனை
விலகுமதோ நின்பிரிவு விளைத்ததுயர் மிகக்கொடிதே. (10)
மெய்வினய மார்புலவர் மேம்படுத்த சீர்த்தியினாய்
பொய்வினையுங் கொடுமையுமாம் புத்துலக மிதைவெறுத்துச்
செய்வினைமுற் றினையாகித் தேவவிமா னத்தூர்ந்தாய்
உய்வினையென் றுன்சரித முலகென்று மோதுமரோ. (11)
தொண்டிழைத்துப் பாடிநனி துதத்தவடி யார்தம்மைப்
பண்டழைத்துக் கொண்டருளுங் கயிலைப் பரம்பரன்றான்
மண்டழைத்த நற்கீர்த்தி மான்சாமி நாதனையும்
தண்டழைத்த தாணிழற்கீழ்ச் சாந்திபெற வைத்தனனே. (12)

மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மீது இரங்கற்பா

கம்பன் பிறப்போ கபிலாவ தாரமோ
இம்பரிவ னென்ன இருந்தா னிறந்தானே
செம்பதுமை ஈன்றருளும் சீராகவ னோடும்
அம்புவியிற் காண்டற் கரும்புலமை மாய்ந்ததுவே. (1)
வித்தைப் பெருக்கினைநா வீறமைந்த சொற்பொழிவைப்
புத்தமுதப் பாவளத்தைப் போற்ற லுறுங்குணத்தை
எத்தைநினைந் தாலும் இடிந்துகுநெஞ் சென்னருமை
அத்தை மகனார் பிரிந்ததுய ராற்றலனே. (2)

நுண்மா ணுழைபுலத்தாய் நூற்கடலின் தேக்கமனாய்
எண்மாண் புகழாளா ராகவநீ எம்மைவிட்டு
விண்மான மேறி விரசா நதிகடந்தால்
கண்மாறு மெங்கள் கதியென்ன சொல்லாயே. (3)
இத்தா ரணியு ளிசையுடம்பை யீங்குவைத்துச்
செத்தார் குழுவிடைநீ சேர்ந்த செயலென்னோ
அத்தானே! உன்னருமை யன்பர்தமக் கவ்வுடல்தான்
எத்தாற் பயன்படும்நீ இல்லா திசையாயே. (4)
கல்விக் கடலே! கவிசேகர! சொல்லின்
செல்வப் பெருமானே சீராகவ! உன்னைக்
கொல்வித் ததுமூடக் கூற்றம் அஃதுனது
சொல்வித் தகத்தின் சுவையறிய வல்லதுவோ. (5)
மாரி மழைபோல மண்புலவர் தேக்கிடநீ
வாரி வழங்கினையால் மாளாத வாக்கமுதம்
வீரியஞ்சே ரன்னதனை விண்புலவ ரும்விழைய
ஆரியநீ சென்றாயோ அன்னோரை ஊட்டுதற்கே. (6)
மன்றேறி வாதிப்போர் வாயடங்க வேகல்விக்
குன்றேறி நின்று குமுறுகின்ற கோளரியே
சென்றே பிரிந்தனையேற் சீரா கவவுன்றன்
இன்றேன் மொழிகேளா தெஞ்செவிகள் தூராவோ. (7)
மூத்த துடலேனும் மூவாத நாவலத்தால்
ஏத்திளமை கொண்டா யிறந்தாயென் றேங்குமனம்
கோத்திருவன் சேதுபதி கொற்றமணி வாயிலுக்கோர்
கூத்தனென நின்றதமிழ்க் கோவே யிராகவனே. (8)
நாடு புகழ்ச்சாமி நாதனைநாம் அன்றிழந்தோம்
ஈடில் பெரும்புலவன் இராகவனை இன்றிழந்தோம்
பீடுபெற வாழ்ந்த பெருந்தமிழின் தாயந்தோ
கூடுமிரு கண்போய்க் குருடாய் வருந்தினளே. (9)
செந்தமிழின் பாவளமோ தேர்சமய தத்துவமோ
அந்தமில்சீ ராழ்வார் அரும்பா சுரநயமோ
இந்த உலகியலோ இராகவன்வாய் வாய்த்தவெலாம்
விந்தைமிகுத் தோர்க்கு வியப்பே விளைத்தனவால். (10)
கீதை மொழிபெயர்த்தான் கேடில் புகழ்க்காளி
தாதனார் சாகுந் தலைத்தைத் தமிழ்செய்தான்
தீதகல எம்மான் திருவடிமேற் பாமாலை
ஓதியே யுய்ந்தான் உரைத்தான் தொழிற்சிறப்பே. (11)
வஞ்சி நகரை வரையறுத்தான் வண்புவியின்
விஞ்சு நலம்விரித்தான் வேள்பாரி பாட்டிசைத்தான்
செஞ்சொற் பொருளுரையாற் செந்தமிழை மேம்படுத்தான்
எஞ்சும் இவைநிதிகள், இராகவனார் வைத்தனவே. (12)
சங்கத் தமிழ்வளத்தைச் சாற்றுபவரார்? உலகிற்
பங்கமறக் கம்பன்றன் பாநயங்கள் சொல்பவரார்?
எங்கள்மத மேன்மை இசைப்பவரார்? வாதீப
சிங்கம் இராகவன்றான் விண்பாய்ந்து சென்றபினே. (13)
எந்தைக் கினிய மருமகனே என்னுடைய
புந்திக் கினித்துவந்த புத்தமுதே! நீதிளைத்த
விந்தைப் பெருங்கடலில் மேலுமெமை வீழ்த்தாது
சிந்தைத் துயர்க்கடலிற் சேர்த்த தழகேயோ. (14)
மாடுமனை மக்களினும் மைத்துனனைப் பெற்றதுவே
ஈடிலதென் றெண்ணி யிருந்து மகிழ்ந்தேனே
தேடியுமென் அத்தை திருமகனை யான்காணேன்
நீடுலக மென்முன் இருளாய் நிறைந்ததுவே. (15)
தென்சொற் கடல்பருகித் தெய்வமொழியிற் றிளைத்து
மன்சொற் கடலாடி மன்றிவரும் மாமுகிலே
இன்சொற் பொருட்பொழிவால் இராகவநீ ஈங்கிறைத்த
நன்சொன் மணிபொறுக்கி நாவலர்கள் வாழ்வாரே. (16)
சின்ன வயதுமுதற் சீராகவ! நீசெல்
நன்னெறியே சென்றுநலம் படைத்தேன் நாடறிய
'என்னருமை யம்மான்சேய்' என்றெனையும் போற்றினையால்
பின்னமுற என்னோ பிரிந்திங் ககன்றாயே. (17)
ஏய்ந்ததமிழ் வாழ்வி லிருவே மொருவேமென்
றாய்ந்துபல ஒப்பை யறைந்து மகிழ்ந்தாயால்
போந்தனையே பொன்னுலகம் போலியாய் என்னைவிட்டு
வாய்ந்த பெருநா வரலா கவமணியே. (18)
பன்னாக்கள் கொண்டு பலவாண் டழுதாலும்
செந்நாப் புலவனெங்கள் சீராகவன் திரும்பான்
பின்னா னவர்க்கவன்றன் பீடும் பெருமையுமே
மின்னாகி நன்னெறியே காட்டி விளக்குமரோ. (19)
'உன்னுடையன்' என்ற உயர்மொழியே யோதியுடல்
மின்ன லெனநழுவி விண்ணகர்சென் றின்புற்றான்
தென்னுடைய சீர்த்தி திகழ்ரா கவன்கவிஞர்
மன்னுடைய காதைநமை வாழ்விக்க வல்லதுவே. (20)

3. ஆய்வு

மகாவித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் பதிப்பு, படைப்பு ஆகியவற்றில் காட்டிய ஈடுபாட்டைவிட பல்வேறு வகையான ஆய்வுகளிலேயே ஆழ்ந்திருக்கின்றார் என்பது செந்தமிழ் இதழில் வெளிவந்த அவர்தம் ஆய்வுக் கட்டுரைகளை நோக்குவார்க்கு எளிதில் புலனாகும்.  செந்தமிழ் இதழில் அவர்தம் ஆய்வு,
அ. இலக்கிய ஆய்வு
ஆ. இலக்கண ஆய்வு
இ. பெயராய்வு
ஈ.  வரலாற்றாய்வு
என்ற நிலைகளில் பரந்து செல்கின்றது.

அ. இலக்கிய ஆய்வு

செந்தமிழ் இதழில் மு.இரா. அவர்களின் இலக்கிய ஆய்வை ஆறு நிலைகளாகப் பகுத்துக் காணலாம்.  அவை, 
i. நூலாய்வு
ii. நூலறிமுகம்
iii. பாடவேறுபாடு
iv. வானொலி உரை
v. மறுப்புரை
vi. உரை
என்பனவாகும்.

i. நூலாய்வு

அருச்சுனனும் பாண்டியன் மரபும், கண்ணபிரானைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள், மார்கழி நோன்பாகிய தைந்நீராடல், வீரத்தாய்மார், வேள்-பேகன் ஆகியவை நூலாய்வு என்ற நிலையில் வெளிவந்திருக்கின்றன.

அருச்சுனனும் பாண்டியன் மரபும்

வியாசபாரதம் ஆதிபர்வத்தில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செல்லும்போது நாக கன்னியாகிய உலுபியையும் பாண்டியன் மகளையும் மணந்தான் என்பதையும், பாண்டியன் மகளுக்குப் பப்ருவாகனன் என்னும் மகன் பிறந்தான் என்பதையும், அம்மகனை பாண்டிய மன்னனுக்கே புத்திரிகாதானம் அருச்சுனன் செய்து தந்தான் என்பதையும் அம்சாவதரண பர்வத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது.  மேலும், இச்செய்தியை விஷ்ணுபுராணம் 4ஆம் அம்சம் 20ஆம் அத்தியாயத்திலும், பாகவதம் 10ஆம் ஸ்கந்தம் 86ஆம் அத்தியாயத்திலும், பாரதசம்புவிலும் பிறவற்றிலும் மணலூரரசனாகிய பாண்டியன் மகளையே அருச்சுனன் மணம் புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  ஆனால், வடநாட்டுப் பிரதிகளில் மணிபுரத்து அரசனாகிய சித்திரவாகனன் மகளையே விஜயன் மணம்புரிந்து பப்ருவாகனனைப் பெற்றான் என்று கூறுகின்றது.  இங்ஙனம் வழங்கிவரும் வடநாட்டுப் பாடமே உண்மையென்றும் பாண்டியன் மகளென்னும் தென்னாட்டு வழக்கு பிற்காலத்து இடைச்செருகலாகக் கொள்ளத்தக்கது என்றும் சிலர் கூறுகின்றனர்.  இவ்வழக்கு இடைச்செருகலா, அன்றி தொன்றுதொட்டுவரும் வழக்கா என்பதை மு.இரா. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் வழியும் சிலாசாஸனங்களின் வழியும் ஆராய்ந்திருக்கின்றார்.

10ஆம் நூற்றாண்டில் அமைந்ததான சின்னமனூர்த் தமிழ்த் தாமிரசாஸனம் ஒன்றில், 'அருச்சுனற்குச் சித்திராங்கதையிடம் பிறந்த பப்ருவாஉறனனைப் பாண்டியரது முன்னோர்களில் ஒருவனாகக் குறிக்கப்பட்டிருத்தல் தமிழ் நாட்டில் வழங்கிய வழக்கு உணர்த்துகின்றது'.

அருச்சுனன் பாண்டியன் மகளை மணந்து பப்ருவாகனனைப் பெற்றாள் என்பதை,

"பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
தாரழ லாற்றா தைஇ யோகியிற்
பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
முத்தினு முழங்கற் செந்தீப்
பொத்துவது போலும் புலம்புமுந் துறத்தே"

என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் 54ஆம் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர் எடுத்தாண்ட மேற்கோள் உணர்த்துகின்றது.

வில்லிபுத்தூராரும் இச்செய்தியை அருச்சுனனின் தீர்த்தயாத்திரைச் சருக்கத்துள்ளே பல இடங்களில் பாடியுள்ளார்.  புகழேந்தியாரின் அல்லியரசாணி மாலையும் இக்கதையையே கூறுகின்றது.  "அயிலிலங்கு மணற்புரத்தரசற் குவந்தறி வித்தனன்" என்ற வேம்பத்தூரார் திருவிளையாடற்புராணமும் (படலம் 53, பா.10) இக்கதையை உணர்த்துகின்றது.  

இவற்றையெல்லாம் பார்க்கும் போது வடநாட்டார் கருத்து தவறு என்பதும், தென்னாட்டார் வழக்கே உண்மை என்பதும் தெளிவாகின்றது என்கின்றார்.  மேலும், மணற்புரமென்பது மணலூர்புரமே என்றும்; இந்த மணற்புரம், மணலூர்புரம் என்பதை வடநூலார் மணபுரம் என்றனர் என்றும் கூறி தம் ஆய்வை நிறைவுசெய்திருக்கின்றார்.

கண்ணபிரானைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள்

வடமொழி நூல்களில் காண்பதற்கு அரிதாகவும், தென்மொழி(தமிழ்) நூல்களில் பரவலாகக் காணப்படும் கண்ணபிரான் குறித்த வரலாறுகள் இக்கட்டுரை வாயிலாக மு.இரா. அவர்கள் விளக்கிச் செல்கின்றார்.  கண்ணபிரான் வழியினராய் தென்னாட்டில் குடியேறியவர்கள் வேளிர் மற்றும் ஆயர் என்றும், இவர்களைப் பற்றிய வரலாறுகளும் கண்ணபிரானோடு தொடர்புடைய வரலாறுகள் பலவும் தென்னாட்டில் வழங்கி வருகின்றன என்றும் கூறுகின்றார்.  அவை, நப்பின்னைப்பிராட்டி திருமணம், குருந்தொசித்தது, குடக்கூத்தாடியது, ததி பாண்டனுக்குந் தாழிக்கும் வீடளித்தது, சீமாலிகன் தலையறுப்புண்டது போன்ற வரலாறுகளாகும்.  இவற்றையெல்லாம் மு.இரா. அவர்கள் தமக்கே உரிய பாணியில் தக்க மேற்கோள்கள் காட்டி ஆராய்ந்திருக்கின்றார்.

மார்கழி நோன்பாகிய தைந்நீராடல்

ஆண்டாளின் திருப்பாவையிலும், வாதவூரடிகளின் திருவெம்பாவையிலும் மார்கழி நோன்பு குறித்த செய்தி இருக்கின்றது.  கோகுலத்துள்ள ஆயர்கள் மழை பெய்யாக் குறையை நீக்கவேண்டிக் கண்ணனைத் தலைமையாக நியமித்துத் தங்கள் பெண்களை மார்கழி நோன்பு நோற்கச் சொல்வர்.  அவர்கள் அதற்கிசைந்து பெருமானையும் தோழிமார்களையும் அதிகாலையில் துயிலுணர்த்தி அழைத்துக் கொண்டு யமுனை நதியில் மார்கழி நீராடி நோற்று, கண்ணபிரானை நாயகனாகப் பெறுவர் என்று திருப்பாவையும்; வாதவூரர் திருவண்ணாமலை சென்று சிவபிரானை வணங்கிக் கொண்டு சிலகாலம் அத்திருப்பதியில் தங்கியிருக்கும் நாளில் மார்கழி மாதம் வருதலும் திருவாதிரையுற்சவத்துக்கு முற்படப் பத்துத் தினங்களுள்ள காலத்தே மகளிர் எல்லாம் வைகறையிலெழுந்து வீடுதோறும் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை துயிலுணர்த்தி அழைத்துக்கொண்டு பொய்கையிற் கூட்டமாகத் திருவாதிரை வரை நீராடி சிவபிரானை நாயகனாகப் பெறுவர் என்று திருவெம்பாவையும் உணர்த்துகின்றன.

இவையன்றி, இந்நோன்பு பற்றிய பண்டைத்தமிழ் நூல் வழியாலும் பிறவழிகளாலும் தெரியும் வரலாறுகளை ஒருங்குதிரட்டி மு.இரா.  அவர்கள் இக்கட்டுரையை அமைத்திருக்கின்றார்.  அதாவது, திருப்பாவை, திருவெம்பாவைகளால் மார்கழி நோன்பின் வரலாறு அறியப்படுதல் போலவே, பண்டைச் சங்க நூல்கள் வாயிலாகவும் அதன் செய்திகள் சில புதியனவாகத் தெரியவருகின்றன என்கின்றார்.

ஆசிரியர் நல்லந்துவனாரின் "கனைக்கு மதிர்குரல்" (பரிபாடல், பா.11) எனத் தொடங்கும் பாடலில் இந்நோன்பின் வரலாறு உள்ளது என்றும்; பரிபாடலால் இந்நோன்பு சங்க காலத்தில் பெருவழக்காயிருந்தமை தெரிகிறது என்றும்; இந்நோன்பை அக்காலத்தில் 'அம்பாவாடல்' என்றழைத்திருக்கின்றனர் என்றும்; இதைப் பழந்தமிழ் நூல்கள் 'தைந்நீராடல்' என்று சுட்டுகின்றன என்றும்; பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, பிங்களந்தை போன்ற நூல்களில் தைந்நீராடல் பற்றி எடுத்துக் காட்டப்பெற்றிருக்கின்றன என்றும்; பிங்களந்தை கூற்றால் ஐந்து முதல் ஒன்பது வரை உள்ள  சிறுகன்னியரே தைந்நீராடி நோற்றற்குரியர் என்பது பழைய விதியால் பெறப்படும் என்றும்; நல்லந்துவனாரது பரிபாட்டினும், காமக்குறிப்பில்லாத கன்னியர் நடத்தும் விதமாகவே கூறப்பட்டிருக்கின்றது என்றும்; சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தே கன்னியரெல்லாராலும் இந்நோன்பு கைக்கொள்ளப்பெற்று வழங்கியதென்பது திருப்பாவை திருவெம்பாவைகளினின்று தெரிகின்றது என்றும் விளங்கிச் செல்கின்றார்.

வீரத்தாய்மார்

தமிழ்நாட்டில் முற்கால முதலே வீரப்பெண்டிர்களின் பெருமையைப் புகழ்ந்து வந்த வழக்கமும் இருந்தது.  புறப்பொருட்டுறைகளில் இது 'மூதின்முல்லை' என்று கூறப்படும்.  இவ்வீரப் பெண்டிரின் செய்கைகளாகத் தமிழ் நூல்களில் கண்ட பாடல்கள் முழுவதும் நல்லிசைப் புலமை வாய்ந்த பெண்மணிகளாலேயே பாடப்பட் டிருத்தலும் குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக, பொன்முடியார்(புறம்.312), பூங்கணுத்திரை (புறம்.277), ஓக்கூர் மாசாத்தியார் (புறம்.279), காக்கைப் பாடினியார் நச்செல்லையார் (புறம்.278), காவற்பெண்டு (புறம்.86), ஔவையார் (புறம்.295) போன்ற பெண்பாற் புலவர்களின் பாடல்களும்; புறத்திரட்டுள் 'தருமமும் ஈதேயாந்', 'எற்கண் டறிகோ' . 'குரங்கு மேனித்' போன்ற தகடூர் யாத்திரைப் பாடல்களும் வீரத்தாய்மார்களின் செயல்களைச் சுட்டுவதாக இருக்கின்றதைச் சுட்டிக்காட்டி, சங்க நாளில் தமிழ்நாட்டின் மேல் வடவரசர் படையெடுத்து வென்ற செய்தி கேட்கப்படுதலே அரிது என்றும், தமிழரசர் வடவருடன் போர் புரிந்து வெற்றிபூண்ட செய்தியே பெரிதும் காணமுடிகிறது என்றும், இதற்குக் காரணமானவர்கள் அக்காலத்து விளங்கிய வீரத்தாய்மார்களின் மாட்சிமையேயாகும் என்றும் விளக்கிச் செல்கின்றார்.

வேள் - பேகன்

வேள் - பேகன் என்பவன் வேளிர் தலைவருள் ஒருவனான ஆவியின் குடியிலுதித்த பெருந்தகையாவான்.  இவனை வையாவிக்கோப்பெரும்பேகன் எனவும் வழங்குவர்.  கடைச்சங்க நாளில் விளங்கிய கடைபெறு வள்ளல்களில் இவனும் ஒருவன்.  இவன் மனைவி கண்ணகி.  இவன் வாழ்வில் பரத்தை ஒருத்தி குறுக்கிடுகின்றாள்.  இதனால் கண்ணகியின் வாழ்வு கோவலன் - கண்ணகி வாழ்வு போல் ஆகின்றது.  இதைக் கண்ட அரிசில்கிழார் மற்றும் பெருங்குன்றூர்க்கிழார் ஆகிய புலவர்கள் பேகனையும் கண்ணகியையும் சேர்த்துவைப்பதற்கு முயல்கின்றனர்.  இச்செய்திகளைப் புறநானூறு 143, 144, 145, 146, 147ஆம் பாடல்கள் விளக்குகின்றன.  இப்பாடல்களை எடுத்துக்காட்டியுள்ள மு.இரா. அவர்கள் இப்பேகனின் கொடைச் சிறப்பைப் பரணர் கூற்றாக,

"குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும்
வரையறையில்லாத மாரிபோலப் பேகனும்
கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது
பிறர்படைவந்து பொரும்போது அப்படையிடத்துத்
தான் அறியாமைப்பட்டான்" (மேற்கோள், செந்தமிழ், 11:2:1912)

என்றும்; மயிலுக்குப் போர்வை தந்ததைப் பரணரின் புறநானூற்றுப் பாடல்களிலும் (141, 145), இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப்படையிலும் (84-87 வரிகள்) விளக்கிச் செல்கின்றனர் என்றும், முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் தந்ததை ஐயனாரிதனார்,

"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாம ல¦ந்த இறைவர்போ னீயுங்
கரவாம ல¦கை கடன்" (மேற்கோள், செந்தமிழ், 11:2:1912)

எனும் பாடலாலும் இவனைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டி மு.இரா. அவர்கள் விளக்கிச் செல்கின்றார்.

ii. நூலறிமுகம்

கருமாணிக்கன் கோவை எனும் கப்பற்கோவை, நரிவிருத்தம் ஆகியவை நூலறிமும் என்ற நிலையில் வெளிவந்திருக்கின்றன.  இவற்றில் நரிவிருத்தம் செந்தமிழ் வெளியீடு 20ஆவதாக வெளிவந்திருக்கின்றது.  இந்நூல் பற்றிப் 'பதிப்பு' என்ற பகுதியில் கூறப்பெற்றிருப்பதால் இங்குக் கூறவில்லை.

கப்பற்கோவையின் பாட்டுடைத்தலைவன் கருமாணிக்கன் என்னும் சிற்றரசன் ஆவான்.  இவன் பாண்டிய நாட்டிலுள்ள கப்பலூர், துரை என்னும் ஊர்களிலிருந்து ஆட்சி புரிந்தவன், யாதவ குலத்தவன்; தொண்டைமான் என்ற பட்டப்பெயர் பெற்றவன் ஆவான்.  இக்கருமாணிக்கனைப் படைத்தலைவனாகக் கொண்ட பாண்டியன் யார் என்பது துணிய இடமில்லை.  என்றாலும் கருமாணிக்கன் வரலாறுகளில் வடவரசரை வென்றது, கன்னடர் நாடு கவர்ந்தது, காடவர்மன் கொண்டது என்னும் வீரச்செயல்களை நோக்கும்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த ஜடாவர்மன்-சுந்தரபாண்டியன் இவன் தலைவனாயிருக்கக் கூடும் என்ற கருத்தை மு.இரா. அவர்கள் இக்கட்டுரையில் முன்வைக்கின்றார்.

மேலும், இலக்கண விளக்கம் அகத்திணையுரையுள் இந்நூலின் எட்டு பாடல்கள் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.  இதனால் இந்நூல் இலக்கண விளக்கத்திற்கு முற்பட்டதாகலாம் என்றும் இந்நூலின் காலத்தை வரையறுக்கின்றார்.

இந்நூல் தனிநூலாக வெளிவர இருப்பதால் சுருக்கமான முறையில் சிலவற்றை மட்டும் செந்தமிழ் இதழில் தொகுதி 6இல் வெளியிட்டிருக்கின்றேன் என்றும், பின்னர் இந்நூல் சுவடி அழிந்துபடவே (சிலவாண்டுகட்குமுன் மதுரைச் சங்க மாளிகையில் நேர்ந்த அக்கினியுபாதையால் எரிவாய்ப்பட்ட சுவடிகளுள், இக்கருமாணிக்கன் கோவையும் ஒன்று என்ற செய்தி யாவர்க்கும் பெருந்துக்கம் விளைக்கத்தக்கது.  அதனால், இக்கோவையுள் மேலே யானெழுதிய பாடல்களுள் தொடர்களுமே இப்போது எஞ்சியுள்ளவை என்று சொல்லலாம்.  ஒருகால், இக்கோவைப்பிரதி வேறிடங்களில் உண்டாயின், அறிஞர் அதனை வெளியிட, முந்துவார்களென்றே நம்புகின்றேன் - ஆராய்ச்சித் தொகுதி,ப.459) செந்தமிழ் வெளியீடாக வெளிவரவில்லை என்றும் கூறுகின்றார்.

மு.இரா. அவர்களின் இக்கூற்றுக்குப் பிறகு உ.வே.சா. அவர்களின் சுவடித் தொகுப்புள் இந்நூல் இருப்பதைக் கண்ட ஸ்ரீநிவாஸன் அவர்கள் 1958ஆம் ஆண்டு உ.வே.சா. நூலக வெளியீடாக இந்நூலைப் பதிப்பித்திருக்கின்றார்.  ஆக, அழிந்து விட்டதாக எண்ணியிருந்த ஒரு நூல், இவர்தம் ஆய்வுக்கட்டுரை மூலமாக ஒரு பதிப்பு வெளிவந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

iii. பாடவேறுபாடு

அருளிச்செயற் பாடவமைதி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி ஆகியன பாடவேறுபாடு என்ற நிலையில் வெளிவந்திருக்கின்றன.

அருளிச்செயற் பாடவமைதி

நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்திற்குப் பலர் உரைவரைந்திருக்கின்றனர்.  அவ்வுரைகள், முன்னோரின் பாடங்களைப் பொன்னே போல் போற்றி அப்படியே மறுப்பின்றி வெளிவந்திருக்கின்றன.  இப்பதிப்புகளில் பாடவேறுபாடுகள் மலிந்திருப்பதைக் கண்ட மு.இரா. அவர்கள் அவற்றில் சிலவற்றை விளக்கும் முகமாகவும் பாடவேறுபாட்டைக் களையும் முகமாகவும் இக்கட்டுரையை அமைத்துள்ளார்.  அவர் மேற்கொண்ட பாடவேறுபாடுகள் பின்வருமாறு:- (முதல் பாடம் முன்னைப் பதிப்புகளில் காணப்படக்கூடியது.  அடுத்த பாடம் மு.இரா.  அவர்களுடையது)

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவ நம்பி பிறந்தினில்     -  பிறந்தீனில்(பெரிய.திரு.முதற்பத்து)
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்    -  பிறந்தீனில் (மேற்படி.)
ஓசலிக்கும்    -   ஓசனிக்கும் (பெரிய.திரு.4ம் பத்து முதல் பாடல்)
பாடுகாவலிடுமின் -  பாடிகாவலிடுமின் (பெரிய.திரு.3:7)
அரவதண்டம் -  அறவதண்டம் (பெரிய.திரு.4-5ம் பத்துக்கள்)
அதில் நாயகர் -  மதில் நாயகர் (பெரிய.திரு.9:4)
குழற்கற்றை -  குழக்களிற்றை (இயற்பா 2:53)
நறவேற்றான் -  நரையேற்றான் (பெரிய.3:31)
பல்லவன் -  வல்லவன் (பெரிய.2:9:1)
பஞ்சியமெல்லடி -  பஞ்சிமெல்லடி (பெரிய.3:4:4)
விண்ணி -  வெண்ணி (பெரிய.6:6:4)
விளைந்தவேளை -  விளந்தைவேளை (பெரிய.6ம் பாசுரம்)
அஞ்சலோதி -  அஞ்சிலோதி (பெரிய.10:2:4)
பிறவிக்கள் -  பிறவிக்கண் (பெரிய.11:8-3; 6:10:6; 4:10:6)
திருவடிக்கள் -  திருவடிக்கண் (மேலது)

கலிங்கத்துப்பரணியாராய்ச்சி

தமிழ்ப் பண்டிதர் அ. கோபாலையர் அவர்களின் கலிங்கத்துப்பரணிப் பதிப்பு நான்காவதாக வெளிவந்திருக்கின்றது.  இவருக்கு முன் மூவர் இதனைப் பதிப்பித்திருக்கின்றனர்.  இந்நான்கு பதிப்புகளிலும் படிப்படியே பாடவேறுபாடுகள் திருத்தம் செய்யப்பெற்றிருப்பினும் மேலும் திருத்தம் பெறவேண்டிய பாடங்களை மு.இரா. அவர்கள் எடுத்துக்காட்டி அவற்றின் உண்மைப் பாடங்களை இக்கட்டுரை வழியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.  அதாவது,

"மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடிக்
கானம்புக வேழம்புகு மடவீர்கடை திறமின்"

என்பது  சிறைபிடிக்கப்பட்ட மகளிர் பற்றிக் கூறுகின்றது.  இங்கு வேழம்புகு, வேனம்புகு என்பனவற்றில் வேறுபட்ட மு.இரா. அவர்கள் வேளம்புகு என வருதல் பொருத்தமுடையது என்கின்றார்.

"தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற்
றொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது சென்றுகண் டிவைமிகைக்கணென்
றிங்க ழிக்கவே யங்க ழிந்ததும்" (184)

என்பது கரிகாலன் காவிரிக்கரை கட்டிய வரலாற்றைக் கூறுகின்றது.  இதில், 'இதுமிகைக்கண், இவை மிகைக்கண்' என முன்பதிப்புகளில் இடம்பெற்றதை இவர் 'இவைமிகைக்கண்' என்பதே சரியான பாடம் என்கின்றார்.

அபயன் பரிவேட்டைக்குப் புறப்பட யானைமீது ஏறியபோது அவனுடன் விளங்கிய தேவியைக் குறிக்கும் இடத்தில்,

"வாழி சோழகுல சேகரன் வகுத்த விசையின்
மதுர வாரியென லாகுமிசை மாதரிதெனா
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான்
யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே"

என்று பாடுகின்றார்.  இவற்றில் 'உரியான்' என்பது 'உரியாள்' என்று இருத்தலே பொருத்தமான பாடம் என்கின்றார்.

"முறையி டத்தரு மந்திர வோலையாண்
முன்வணங்கி முழுவதும் வேந்தர்தம்"

என்பதில் 'திருமந்திரவோலையாள்' என்றிருக்கவேண்டிய பாடம் 'தருமந்திர வோலையாண்' என்றிருக்கின்றது என்கின்றார்.

"தண்ணார் மலர்சேர் திரடோ ளபயன்
தானேவிய சேனை தனக்கடையக்
கண்ணாகிய சோழ னிசக்கரமாங்
கருணாகரன் வாரண மேற்கொளவே" (350)

என்ற பாடலில் 'சோழனசக்கிரமாம், சோழனிசக்கரமாம்' போன்ற பாடங்கள் பயிலப்பெற்று வருகின்றன.  ஆனால், 'சோழனசக்கிரமாம்' என்னும் பாடமே சரியானது என்கின்றார்.

"தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
அளத்திற் பட்ட தறிந்நிலை யையநீ"(378)

என்பதில் 'அளத்திற்பட்டது'  என்பது 'அளத்திபட்டது' என்றிருக்கவேண்டும் என்று கூறுகிறார்.  இதுபோல் பல்வேறு இடங்களில் இந்நூற் பாடவேறுபாடுகளைப் பரவலாகக் காட்டிச் செல்கின்றார்.

iv.  வானொலி உரை

சிலப்பதிகார வழக்கவொழுக்கங்கள், பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, மதுரைக்காஞ்சி, வில்லிபுத்தூரார் காட்டிய வீரநெறிகள் ஆகியவை திருச்சி வானொலியில் இலக்கியச் சொற்பொழிவுகளாக ஒலிபரப்பப்பெற்றவை.  இச் சொற்பொழிவுகள் பின்னர்ச் செந்தமிழ் இதழில் வெளிவந்திருக்கின்றன.

சிலப்பதிகார வழக்கவொழுக்கங்கள்

கோவலன் - கண்ணகி வரலாற்றைக் கூறும் நூலாகச் சிலப்பதிகாரம் விளங்கினாலும் இந்நூலிற்குள் இடம்பெற்றிருக்கும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய நிலப்பாகுபாட்டின் படி அமைந்த நில ஒழுக்கங்களைப் பற்றியும்; அந்நிலத்தில் வாழும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை வருணத்தவர் பற்றியும் பாமரரும் எளிதில் உணரும் வகையில் 6.8.1943இல் திருச்சி வானொலியில் உரையாற்றிய மு.இரா. அவர்கள் அப்பொழிவினை 1943ஆம் ஆண்டு செந்தமிழ் இதழிலும் வெளியிட்டிருக்கின்றார்.

பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை முதன்முதல் அறிவித்த நூல் புறநானூறு.  அந்நூலின் தொடக்கப் பாண்டியரில் முதலாவதாக நிற்பவர் இவனது தந்தை 'கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி' ஆவான்.  முதுகுடுமிப்பெருவழுதி பல யாகங்கள் புரிந்தவன் என்பதும், முதுகுடுமி என்பதனால் அந்த யாகத்திற்குரிய மயிர்முடியை நெடிது வளர்த்திருந்தவன் என்பதும் அறியலாம்.  இம்முதுகுடுமியின் காலத்தவராய் இவனால் பரிசுபெற்ற புலவர்கள் மூவர்.  காரிக்கிழார் (புறம்.6), நெட்டிமையார் (புறம்.9,12,15), நெடும்பல்லியத்தனார் (புறம்.64) போன்றோராவர்.  இம்மூவரின் பாடல்களிலிருந்து, "பஃறுளி என்ற நதி இவன் காலத்தில் இருந்ததென்றும், பழைய பாண்டியனொருவனால் அஃது உண்டாக்கப்பட்டது என்றும் தெரியவருகின்றன.  இந்த நதி குமரியாற்றோடு கடல்கொள்ளப்பட்டதென்று கூறுவர் இளங்கோவடிகள்.  ஆனால், தென்பாண்டியின் கோடியில் உள்ள ஆய்நாட்டில் பறளியாறு என்ற நதியொன்று உண்டு.  இது, திருவாங்கூர்ச் சாஸனத்தாலும் இப்போதை வழக்காலும் அறிந்தது.  பறளி என்பது, பஃறுளி என்பதன் திரிபே.  பலதுளி பெருவௌ¢ளமாய் ஓடும் காட்டாறுகள் சிலவும் இப்பெயர் பெற்றுள்ளன.  தென்திருவாங்கூர்ச் சீமையில் உள்ள இப் பறளி என்ற பஃறுளியே நெட்டிமையார் கூறியதாயின், பழைய கடல்கோளால் இந்த நதியின் கடலோரத்து முனைப்பகுதியே அழிபட்டதாகவேண்டும்.  இவ்வாறு சரித்திரப்பிரசித்தனான சங்க காலத்துப் பாண்டிய முன்னோன் ஒருவனது வரலாறுகள் சுருக்கமாத் தெரிய வருகின்றன" (பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, செந்தமிழ், 40:3:1943) என்கின்றார்.  இக்கருத்தினை மு.இரா. அவர்கள் 5.2.1943இல் திருச்சி வானொலியில் உரையாற்றியிருக்கின்றார்.  அதன் பிறகு அச்சொற்பொழிவினை 1943ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில் வெளியிட்டிருக்கின்றார்.

  வீடுபேறு பெறுவதற்குத் தேவையான நிமித்தங்களையும், பலவகை நிலையாமைகளையும் அரசர்க்கு எடுத்துரைப்பது மதுரைக்காஞ்சி.  காஞ்சி என்பது உலகம் நிலையற்றதென்பதைக் கூறும் ஒரு தமிழ்த்திணை.  இத்திணைப் பொருளை மதுரையோடு இணைத்து நெடுஞ்செழியனுக்குப் புலவர் கூறியதே இந்நூல்.  இதன் சிறப்புகளையெல்லாம் மு.இரா. அவர்கள் 14.8.1942இல் திருச்சி வானொலியில் உரையாற்றியிருக்கின்றார்.  அதன் பிறகு அச்சொற்பொழிவினை 1943ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில் வெளியிட்டிருக்கின்றார்.

வில்லிபுத்தூரார் காட்டிய வீரநெறிகள்

வில்லிபாரதம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை உறுதிப் பொருளையும் விளக்கவல்லது.  அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளையும் அறநிலை, மறநிலை என்ற இருவகையால் அடக்குகின்றார்.  அறநிலையாவது, சாந்தமான முறை என்றும்; மறநிலையாவது, வீரமடியாக நிகழும் முறை என்றும் விளக்குகின்ற மு.இரா. அவர்கள், வீடுபேறு பெறுதற்கு அறநிலையே போதும் என்பதில்லை மறநிலையும் வேண்டும் என்கின்றார்.  மேலும், மறநிலையாவது,

"ஆனிரை மீட்டல் அரும்பகை தெறுதல்
ஊனமில் செஞ்சோ றுதவி யோர்பகை
ஈனஞ்செய்தல்" (திவாகரம்)

என்பர்.  இம்மூன்று செயல்களையும் வில்லிபாரதம் தெளிவாக விளக்குகின்றது என்பதை மு.இரா. அவர்கள் 26.5.1943இல் திருச்சி வானொலியில் உரையாற்றியிருக்கின்றார்.  அதன் பிறகு அச்சொற்பொழிவினை 1943ஆம் ஆண்டு செந்தமிழ் இதழில் வெளியிட்டிருக்கின்றார்.

v.  மறுப்புரை

செந்தமிழ் இதழில் மு.இரா. அவர்கள் இரண்டு விதமான மறுப்புரைகள் அளித்துள்ளார்.  பிறர் கருத்துக்கு மறுத்தெழுதியது.  இந்நிலையில், ஆழிவடிவம்பலம்ப நின்றானும் எனும் நளவெண்பாப் பாட்டுரை, சேரவேந்தர் தாயவழக்கு ஆகியனவும்; தாம் எழுதிய கருத்துக்கு மறுப்புரை எழுதியவர்க்கு மறுப்புரை எழுதியது.  இந்நிலையில் ஆழ்வார்கள் சரித்திரவாராய்ச்சி, பொய்கையார் ஆகியனவும் வெளிவந்திருக்கின்றன.

நளவெண்பாப் பாட்டுரை

புகழேந்திப் புலவரின் நளவெண்பாவில் 'ஆழிவடிவம்பலம்ப' (பா.137) எனத் தொடங்கும் பாடல் தமிழ்நாட்டைச் சாராத வேற்றரசன் ஒருவனின் வரலாறு என்பர்.  இக்கருத்தை மு.இரா. அவர்கள் மறுக்கின்றார்.  இப்பாடல் பாண்டிய மன்னனைப் பற்றிக் கூறுகின்றது என்பதற்குப் 'புறநானூறு 9ம் பாடலின் விசேடவுரையிலும், வில்லிபாரதம் 15ம் போர்ச்சருக்கம் 18ஆம் கவியிலும், வேம்பத்தூரார் திருவிளையாடலில் 21ம் படலத்து 9ம் கவியிலும், மதுரைக்காஞ்சி உரையிலும்' இடம்பெற்றிருக்கும் செய்திகளைக் கொண்டு ஆராய்ந்தவர் இப்பாடலும் பாண்டியனுக்கு உரியவையே என்கின்றார்.  மேலும், நளவெண்பாவின் 135ஆவது பாடலில்,

"பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டாற்
றிரித்தகோ இங்கிருந்த சேய்"

என்னும் 3,4ஆம் வரிகள் பாண்டியனைக் குறிப்பிடுகின்றது என்பாரின் கருத்தையும் மறுத்து இவ்வரிகள் கரிகாற்சோழனைக் குறிப்பிடுகின்றன என்று விளக்குகின்றார்.  அதாவது, "பாண்டியன் மேருவைச் செண்டாலடித்த கதையைச் சோழனதாகக் கொண்டது பொருந்துமோவெனிற் கூறுவேன்; அவ்வரலாறு பாண்டியனுக்கு வழங்குவதினும் சோழனுக்கே அது பெருவழக்காக உள்ளதாம்.  கரிகாற்சோழன் என்பான், உலகமுழுதுந் தன்னடிப்படுத்து வரும்போது, இமயமலை 'தன்னொடு எதிர்த்து விலக்குதலின் அதனைப் புறங்காண்டற்கும், அதன் வடபாலும் தனதாணை சேறற்கும் சாத்தனதருளால் தான் பெற்ற செண்டினாலே அதனை அடித்துத் திரித்துப் பொறித்து மறித்து நிறுத்தா'னென்பது கதையாதல் காண்க" (ஆராய்ச்சித் தொகுதி, ப.471) என்பதால் இவ்வரிகள் சோழனுக்குரியன என்று தக்க சான்றுகளுடன் விளக்கிவிட்டு 137ஆம் பாடல் பாண்டியனுக்குரியதென்று உணர்த்துகின்றார்.

சேரவேந்தர் தாயவழக்கு

'மருமக்கட்டாயமே சேரர்க்குப் பழைமையாக உரியது'  என்ற கொள்கையை 'சேரர் தாயமுறை' என்ற கட்டுரையில் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியிருக்கின்றார்.  இதனைக் கண்ணுற்ற மு.இரா. அவர்கள், 'சேரன்-செங்குட்டுவன்' சரித்திரத்தை எழுதப் புகுந்தபோது சேரர்க்கு 'மக்கட்டாயமுறை' இருப்பதையே உணர்த்துகின்றார்.  இதன் விளைவாக முன்னவரின் முடிவுக்கு மாற்றாக இக்கட்டுரையை எழுதியிருக்கின்றார்.

மருமக்கட்டாய முறைக்கு பதிற்றுப்பத்தினுள் ஒவ்வொரு பதிகத்தின் இறுதிதோறும் அமைந்துள்ள பதிகங்களை ஆதாரமாகக் கொண்டு முன்னையோர் நிறுவினர்.  ஆனால், மு.இரா. அவர்கள் அதற்கு மறுப்பாக இப்பாடல்களைக் கொண்டே மக்கட்டாய முறையை நிறுவியிருக்கின்றார்.  அதாவது, மருமக்கட்டாயப் பொருள் ஆராய்ச்சி, மக்கட்டாய முறைக்கு அமைந்த பொருள், அதற்குகந்த பிறசான்றுகள் என்றவாறு தம்முடைய ஆ,ய்வை  வழிநடத்திச் சென்றுள்ளார் எனலாம்.  இவ் ஆய்வின் வழி, "படைப்புக் காலந் தொட்டு வரும் பழந்தமிழ்க் குடியினராய முடிகெழுவேந்தர் மூவரும் வழக்கவொழுக்கங்களாலும் மனோபாவனைகளாலும் பெரிதும் ஒற்றுமையும் தொடர்பும் கொண்டிருந்தவரே என்பது பண்டை நூல்களால் அறியமுடிகிறது.  அவருள் சோழ பாண்டியரை விலக்கிச் சேரராகிய ஒரு பிரிவினர்க்கு மட்டும் பிற்காலத்துண்டாகிய புதிய தாயமுறையைப் புகுத்துவது கற்பனையேயன்றிச் சரித்திரவுண்மைக்குச் சிறிதும் உரியதன்று என்பது தெளிய அறியத்தக்கது" (ஆராய்ச்சித் தொகுதி, ப.397) என்று முத்தாய்ப்பான தமது முடிவை எடுத்துரைத்திருக்கின்றார்.

ஆழ்வார்கள் சரித்திரவாராய்ச்சி

ஆழ்வார்கள் கால ஆராய்ச்சியில் ஸ்ரீமாந் கோபிநாதராயரவர்களும், ஸ்ரீமாந் மு. இராகவையங்கார் அவர்களும் ஈடுபட்டு மாறுபட்ட காலத்தைச் சுட்டுகின்றார்கள்.  இதனைக் கண்ணுற்ற ஸ்ரீமாந் என்.எஸ். ரெங்கசாமி ஐயங்கார் அவர்கள் முதலாமரின் கருத்தை ஆதரித்தும் இரண்டாமவரின் கருத்தை மறுத்தும் செந்தமிழ் இதழில் மறுப்புரை ஒன்றை வெளியிட்டார்.  இந்த மறுப்புரைக்கு மறுப்புரையாக மு.இரா. அவர்கள் தாம் முதலில் எழுதிய கருத்துக்கு மாறாக திருமங்கைமன்னன் பற்றிய ஆய்வில் கோபிநாத ராயருக்கு ஆதரவாகவே எழுதப்பெற்றதை நினைவூட்டி இக்கட்டுரையை எழுதியிருக்கின்றார்.  இதனை மு.இரா. அவர்கள், "பெரியாழ்வார் கால நிர்ணயம் என்னும் தலைப்பின் கீழ் என்னால் முன்னர் எழுதப்பட்ட விஷயத்தில், அவ்வாழ்வார் காலத்துக்குப் பின்னெல்லையாக நாதமுனிகள் காலத்தை அளக்குமிடத்து யான்கொண்ட அபிப்பிராயங்கள் இடையினிகழ்ந்த வேறாராய்ச்சிகளால் மாறலாயின.  இக்கருத்தைத் திருமங்கை மன்னனைப் பற்றிய என் விஷயத்தைக் காட்டி, ஸ்ரீமாந் இராயரவர்கள் கொள்கையையே தழுவியிருக்கிறேன்.  நண்பரவர்கள் அதனை யறிந்திருந்தால் இம்முறைச் செந்தமிழ்ப் பக்கங்களில் இரண்டொன்று வீணே கழியாதிருந்திருக்கும்" (ஆழ்வார்கள் சரித்திரவாராய்ச்சி, செந்தமிழ், 4:2:1905) என்கின்றார்.  முதலில் தாம் ஏற்றுக்கொண்ட கருத்தைப் பின் வந்தவர்தம் ஆய்வு பொய்ப்பிக்கும் போது அதனை ஏற்றுக்கொண்ட அவர்தம் மனப் பக்குவம் மற்றும் ஆய்வுத்திறன் வெளிப்படுவதை உணரலாம்.

பொய்கையார்

திருமாலடியாராகிய பொய்கையாரும், களவழி பாடிய பொய்கையாரும் ஒருவரே என்று மு.இரா. அவர்கள் எழுதினார்.  இதற்கு என்.எஸ். ரெங்கசாமி ஐயரவர்கள் களவழிப் பொய்கையார்க்கும், பொய்கையாழ்வாருக்குமுள்ள பெயர் ஒற்றுமை ஒன்றையே கொண்டு இவ்விருவரும் ஒருவரென்று காட்டுதல் சிறிதும் ஏற்றதன்று என்று மறுத்தெழுதியிருக்கின்றார்.  நச்சினார்க்கினியர் முதலிய உரையாளர்களால் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்ட 'யாப்பருங்கலவிருத்தி' என்னும் பழைய உரைநூலில், பொய்கையாரொருவர் "இம்மை மறுமை முக்காலமுமுணர்ந்த தமிழிருடி" என்று கூறப்படுதலோடு அவர் பாடல்களிற் சிலவும் "இது பொய்கையார் வாக்கு" என்ற குறிப்பும் காணப்படுகின்றன.  இவ்விருத்தி பழைய நூலென்பதற்கு, அதனானே அறியப்பட்ட சான்றுகளும் உண்டு.  இதிற்கண்ட பொய்கையார் பாடல்கள் இரண்டு பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதியில் உள்ளன; இது விருத்திகாரர் கருதிய தெய்வப் பொய்கையார் ஆழ்வாரில் முன்னவரே என்பதை விளக்கியதாம்.  இனி, எஞ்சிய தெய்வப்பொய்கைப் பாடல்கள் சேரசோழரையும் பிறவற்றையும் பற்றி அமைந்துள்ளது.  இஃது, ஆழ்வாரே அரசர் முதலியோரையும் பாடினவரென்பதைக் காட்டியதாம்.  ஆக, ஆழ்வாராகிய ஒரு பொய்கையாரே அரசரையும் பாடியவர் என்று நன்கு விளக்கியதாதலால், களவழியிற் சோழனைப் புகழ்ந்த தன்மையொன்று பற்றி ஆழ்வாரின் வேறான பொய்கையாரொருவரை நாம் கற்பிக்க வேண்டுவது இல்லை என நியாயங்காட்டி அவ்வியாசம் எழுதலாயிற்று என்றவர், யான் அம்முடிவுக்குக் கூறிய காரணங்களையெல்லாம் ஐயங்காரவர்கள் ஆராய்ந்தவர்களாயின், என் கொள்கை ஒருகால் அவர்கட்கு ஏற்புடையதாகலாம் என்று தம்முடைய மறுப்புரையை நயமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

இவரது காலத்தையும் மு.இரா. அவர்கள் இக்கட்டுரை வழி நிலைநாட்டுகின்றார்.  தென்னிந்தியா சிலாசாஸன ஆராய்ச்சிப் பத்திரிகை நான்காம் புத்தகத்திற் காணப்படும் யாவருமுண்மையென்று கருதற்குரிய சோழவம்சாவளியொன்றில் ஒருவனே செங்கணான் காணப்படுகின்றார்.  அவன் பெயர் முதலாங் கரிகாற்சோழனுக்குப் பின்னும் கி.பி.890ஆம் ஆண்டிற் பட்டமெய்திய விஜயாலய சோழனுக்கு முன்னுங் கூறப்பட்டுள்ளது.  எனவே, கரிகாலன் கி.பி.2ஆம் நூற்றாண்டில் செழித்து விளங்கினன் என்பதும் தெளியப்படுதலால், சோழன் செங்கணானும் கி.பி.2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் இருந்தவனாதல் வேண்டுமெனவும் சரித்திரவாராய்ச்சி செய்யும் அறிஞர் கூறுகின்றனர்.  இக்கூற்றாலும் முற்கால நூல் என்று கருதப்படும் புறநானூற்றில் அவ்வரசன் பெயரும் அப்புலவர் பெயரும் காணப்படுதலாலும் கரிகாற்சோழனுக்குச் சில தலைமுறைக்குப் பிற்பட்ட அவ்விருவரும் இருந்தனரென்றே கொள்ளலாம் என்று முன்னவர்களின் கூற்றை ஆதரித்து இலக்கியச் சான்று காட்டி விளக்கியிருக்கின்றார்.

vi. உரை

திருவள்ளுவரின் திருக்குறள் 22ஆம் அதிகாரமான 'ஒப்புரவறித'லுக்கு மு.இரா. அவர்கள் உரை வரைந்திருக்கின்றார்.  இவ் உரைப் பகுதி செந்தமிழ் இதழில் வெளிவந்திருக்கின்றது.

மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத லோகோபகாரங்களை அறிந்துசெய்தல் என்பதே ஒப்புரவறிதல் அதிகாரத்து வரும் ஒவ்வொரு குறளும் விளக்கி நிற்கின்றது.  செல்வம் வலி முதலியவற்றை ஒருவன் எவ்வளவு சிறப்பாக அடையப் பெற்றவனே யாயினும், பிறருடைய உதவியில்லாதவிடத்து அவன் உலகத்தே தனித்து நின்று இல்வாழ்க்கையில் கிடைக்கும் இன்பத்தை நுகர்தல் ஒருபோதும் இயலாத ஒன்று என்பதைத் திருவள்ளுவர் இவ்வதிகாரத்துள் விளக்குகின்றார்.  இதிலுள்ள பத்து குறட் கருத்துகளை விளக்குவதாக மு.இரா.அவர்கள் இப்பகுதியை அமைத்துள்ளார்.  காட்டாக,

"ஒப்புரவி னால்வருங் கேடனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து"

என்னும் குறளுக்கு மு.இரா. அவர்கள், "இவ்வருமைக்குறள் இவ்வதிகாரத்திற்கே ஓர் சிகாமணி என்னலாம்.  லோகோபகாரஞ் செய்யும் முயற்சியில், ஒருவனுக்கு வருவது கேடு என்பா ருண்டாயின், அக்கேடு, அவன் தன்னை விற்றாயினும் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையதாம் என்பது இதன் பொழிப்பு என்றது ஒப்புரவு செய்தலால் ஒருவனடையுங் கேடு கேடன்று, பேறென்று கருதத்தக்கது என்பதாம்"  (ஆராய்ச்சித் தொகுதி, ப.216) என்கின்றார்.  இதுபோல் பத்து குறட்பாக்களுக்கும் உரை செய்திருக்கின்றார்.

ஆ.  இலக்கண ஆய்வு

தொல்காப்பியனாரும் புள்ளியெழுத்துகளும், ஆய்தவோசை ஆகிய இரண்டு இலக்கண ஆய்வுகள் செந்தமிழ் இதழில் வெளிவந்திருக்கின்றன.

தொல்காப்பியனாரும் புள்ளியெழுத்துக்களும்

தொல்காப்பியர் எழுத்துகளுக்கான வரிவடிவம் எப்படியிருக்கும் என்று நூற்பா வகுக்கவில்லை.  என்றாலும் உயிர், மெய், சார்பெழுத்தின் தோற்றம் என்ற மூவகைப்பட்ட எழுத்துகளினம் புள்ளிபெறுவன பற்றித் தொல்காப்பியர் கூறியிருக்கின்றார்.  இவற்றைப் பற்றி மு.இரா. அவர்கள் இக்கட்டுரை வாயிலாக விளக்கியிருக்கின்றார்.

புள்ளிபெறும் மெய்களை, "மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்" (தொல்.எழுத்து. நூன்மரபு, 15) என்றும்;  புள்ளிபெறும் உயிர்களை, "எகர ஒகரத் தியற்கையு மற்றே" (தொல்.எழுத்து. நூன்மரபு, 16) இதனை எ, ஒ என்றும்; புள்ளிபெறுஞ் சார்பெழுத்துக்களை "அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தமென்ற, முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன" (தொல்.எழுத்து. நூன்மரபு,2) என்ற நூற்பாப்படி குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்பதை பேராசிரியரும், யாப்பருங்கலம் 2ம் சூத்திரமும், சங்கயாப்பும், நன்னூல் விருத்தியாசிரியர் சங்கரநமச்சிவாய புலவரும் கூறுகின்றனர் என்றும்; முற்றுகரத்தின் வேறுபாடு தோன்றக் குற்றுகரங்கட்குக் கொக்கு, நாடு, வரகு என்பன போல் புள்ளியிடுதல் தொல்காப்பியர் வழக்கு என்றும்; குற்றியலிகரமும் புள்ளிபெறும் வண்டியாது, நாகியாகி, கேண்ம்யா என்றும்; ஆய்தம் ஃ   என்று வந்தது    என்றாகியது என்றும் விளக்குகின்றார்.

மேலும், புள்ளிபெறும் மகரக்குறுக்கத்தினை, "உட்பெறு புள்ளி யுருவா கும்மே"  இதனை    என்றும்; காலுக்குப் பிரதியாக வழங்கிய புள்ளியினை, "புள்ளியில்லா வெல்லா மெய்யும், உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும், ஏனை யுருவோ டுருவுதிரிந் துயிர்த்தலும், ஆயீ ரியல வுயிர்த்த லாறே" (தொல்.எழுத்து.நூன்மரபு,17) என்ற நூற்பாப்படி இதற்கு நச்சினார்க்கினியர் "உருவுதிரிந்துயர்த்தலாவது - மேலும் கீழும் விலங்கு பெற்றும் கோடுபெற்றும் புள்ளிபெற்றும் புள்ளியுங் கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம்.  கி, கீ முதலியன மேல் விலங்கு பெற்றன ......... கா, ஙா முதலியன புள்ளிபெற்றன.  அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினர்" என்றும் விளக்குகின்றார்.  இவ்வாறு தொல்காப்பியர் கூறிய புள்ளியெழுத்துக்கள் இவையிவை என்று எடுத்தோதி இருப்பது இவரின் இலக்கண அறிவைப் புலப்படுத்துகின்றது.

ஆய்தவோசை

தொல்காப்பியர் காலத்தில் வழங்கிவந்த ஆய்தவோசை குறித்து தொல்காப்பியனாரும் புள்ளியெழுத்துகளும் என்ற கட்டுரையில் விரிவாக ஆராய்ந்த மு.இரா. அவர்கள் வல்லெழுத்தின் முன்பு ஒலிக்கும் ஆய்தமானது இடைக்காலத்தில் வேறோர் ஓசையும் பெற்றதை அறிந்து அவற்றை வெளிப்படுத்தும் முகமாக இக்கட்டுரையை அமைத்திருக்கின்றார்.

போலி எழுத்துகளைப் பற்றி மு.இரா. அவர்கள் தெளிவாக ஆய்ந்திருக்கின்றார்.  தொல்காப்பியனார்,

"அகரம் இகரம் ஐகாரம் ஆகும்" (தொல்.எழுத்து.நூன்மரபு,21)
"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" (தொல்.எழுத்து. நூன்மரபு,22)

என்ற இரண்டு நூற்பாக்களால், ஐகாரத்திற்குப் போலியாக வரும் எழுத்துகளைக் குறிப்பிட்டிருத்தல் கற்றார் பலரும் அறிவர் என்றும்; இச்சூத்திரங்களின் படி, அஇ, அய் என்ற இரண்டும் ஐகாரத்தின் போலிகளாகும் என்றும் கூறியவர், இவ்விரண்டு மட்டுமன்றி வேறொன்றும் அதற்குப் பதிலாக வழங்கியதுண்டு என்பதை யாப்பருங்கல விருத்தி எடுத்துரைக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.  அதாவது அவிநயனார்,

"ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே
ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்"

என்ற சூத்திரத்தின்வழி குறிப்பிட்டுள்ளதை, அவ்விருத்திகாரர் ஐகாரத்துக்கு அய் என்பதும் அஃ என்பதும் போலிகளாக முன்னோர் கொண்டிருந்தமை தெரியலாம் என்கின்றார்.  இக்கருத்தையே நன்னூலாரும் தழுவினர் என்று சொல்ல இடமுண்டு.  அவர், 

"அம்முன் இகரம் ஆய்தம் என்றிவை
எய்தின் ஐயொத் திசைக்கும்" 

என்று சூத்திரத்திருந்தனர் என்பதும், 'அகரமுன் இகரமும் ஆய்தமும் வரின்' என்று பதப்பொருளும், 'அஇவனம், ஐவனம், கஃசு, கைசு' என உதாரணமும் தந்து மயிலைநாதர் உரையிட்டிருந்தனர் என்பதும் அறியப்படுகின்றது.  கைசு முதலிய ஐகார முதன்மொழிகள் கஇசு, கய்சு, கஃசு என்ற மூவகையுருவினும், அக்காலத்து வழங்கி வந்தமை தெரியலாம்.  எனவே, அஇ, அய், அஃ, ஐ என்ற நான்கும் தம்முள் ஓசையொற்றுமை பெரிதுமுடையன என்பதும், அதனால் அகரத்தையடுத்த ஆய்தம் ஐ, அய், அஇ என்ற ஒலிகளைப் பெற்று இசைத்தற்கும் உரியன என்பதும் பெறப்படுகின்றன என்று விளக்குகின்றார்.

மேலும், "ஐகாரத்துக்கு அய் போலியாவது போலவே, அவ்வைகாரப் போலியான அஃ என்பதற்கும் அய் என்பது போலியாக வந்தமை தெளியப்படும்.  இதனால் அஃ என்பது ஐகாரத்தின் போலிகளையெல்லாம் கொண்டொலிக்கும் என்பது அறியலாகும்.  ஆகவே, ஐயின் மற்றொரு போலியாகத் தொல்காப்பியரும் அவரைத் தழுவி நன்னூலாருங் கூறிய அஇ என்பதும், அஃ என்பதற்குப் பிரதியாக வந்து இசைத்தற்குரியது என்பது பெறப்படுகின்றது.  இங்ஙனம் அஃ, அய், அஇ இம்மூன்றும் ஓசை ஒப்புமை கொண்டு தம்முட் பரிமாறிவரக் கூடுமேனும், இவற்றுள் அய், அஃ என்பன ஒற்றுநீங்க ஒரு மாத்திரையும், அஇ என்பது இரண்டு மாத்திரையும் உடையவாகச் செய்யுளில் வருமென்றும் உணர்ந்துகொள்க.

இதுகாறும் கூறிப்போந்தவற்றால், ஆய்தவெழுத்து, தொல்காப்பியர் காலத்தே தான் சார்ந்த வல்லெழுத்துச் சாயலான ஓசையையும், இடைக்காலத்தில் அய், அஇ என்ற இரண்டு ஓசைகளையும், பிற்காலங்களிலே குகரச்சாயலான ஓசையையும் ஏற்று ஒலித்துவந்த செய்தி விளக்கமாகும்" (ஆய்தவோசை, செந்தமிழ், 41:1:1943) என்று தெளிவுறுத்துகின்றார்.

இ.  பெயராய்வு

அமிதசாகரர், இளம்பூரணவடிகள், கருணாகரத் தொண்டைமான், கூத்தச்சாக்கையன், திருவள்ளுவர், பகழிக்கூத்தர், வேள் ஆயண்டிரன், ஸ்ரீஇருந்தவளமுடையார் போன்ற பெயராய்வுக் கட்டுரைகள் செந்தமிழ் இதழில் வெளிவந்திருக்கின்றன.  இவற்றில் ஸ்ரீஇருந்தவளமுடையார் மட்டும் தெய்வப்பெயர் கொண்டதாகவும், ஏனையவை மக்கட்பெயர் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன.

அமிதசாகரர்

அமிதசாகரர், அமுதசாகரர் என்ற பெயர் வழக்கு இரண்டும் ஒருவரையே குறிக்கும் என்றும், இவர் முதல் இராசேந்திரன் காலமான கி.பி.985-1013ஆம் ஆண்டை ஒட்டி வாழ்ந்தவர் என்றும் சாசனப் பாடலை ஆதாரமாகக் கொண்டு மு.இரா. அவர்கள் விளக்கியிருக்கின்றார்.  மேலும், யாப்பருங்கலப் பாயிரத்துள், 

"யாப்பருங் கலநனி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துளக்கலுங் கேள்வித் துகடீர் காட்சி
அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே"

என்று கூறியவற்றில் 'அளப்பருங்கடற்பெயரினர்' என்று குறிப்பிடுவதை மு.இரா. அவர்கள் எடுத்துக்கொண்டு ஆராய்கின்றார்.

வடமொழியில் 'அளப்படும்' என்பது 'அமித' என்றும்; 'கடல்' என்பது 'சாகரம்' என்றும் அழைப்பர்.  இதனால் அமிதசாகரர் என்பதே சரியான பாடம் என்கின்றார். இவரது காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்கின்றார்.  அதாவது, "காரிகை யழகு பெண்ணே கலித்துறை யொருசொற் கும்பேர்" (11,187) என்று சூடாமணி நிகண்டு கூறுதலால், அவர் காரிகையாசிரியரான அமிதசாகரர்க்குப் பிற்பட்டவரே என்றும், அமிதசாகரர் 10ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவராகார் என்பதற்கு வேண்டிய ஏதுக்கள் உள்ளன என்றும் விளக்கிச் செல்கின்றார்.

இளம்பூரணவடிகள்

இளம்பூரணவடிகள் என்பவர் யார்? அவரைப்பற்றிப் பிறவகை இலக்கியங்களில் கூறப்படும் பெயர் என்ன?  என்ற வினாக்களுக்கு விடைபகர்ந்துவிட்டு இவரது காலத்தைச் சுட்ட முற்படுவதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர், தம் சூத்திரங்கள் சிலவற்றை இளம்பூரண அடிகள் உரைக்கருத்தையே தழுவி இருக்கின்ற காரணத்தினால் பவணந்திக்கு முந்தியவர் இளம்பூரணர் என்றும், இளம்பூரணர் கொள்கைகள் சிலவற்றை சேனாவரையர் பல இடங்களை மறுக்கின்றார்.  இம்மறுப்பு எதையும் பவணந்தியார் சுட்டவில்லை.  அதனால் பவணந்திக்கும் பிற்பட்டவர் சேனாவரையர் என்றும் இவர்களின் கால முறைவைப்பைச் சுட்டுகின்றார்.  அதாவது, முதலில் இளம்பூரணர் பின்னர் பவணந்தியார் அதற்கும் பின்னர் சேனாவரையர் என்றவாறு முறைப்படுத்துகின்றார்.

மேலும், அச்சிடப்பெற்றுள்ள இறையனார் களவியலுரைக்கும் இளம்பூரணருக்கும் தொடர்பிருக்குமோ என்ற எண்ண வெளிப்பாட்டில் இவ் ஆய்வு நீள்கின்றது.  நக்கீரனாரின் வேறான உரை ஒன்று களவியலுக்கு உண்டு என்பது தமிழுலகம் அறிந்த ஒன்று.  அவ்வுரையில் தொல்காப்பிய சொல்லதிகார இளம்பூரணத்தில் பயிலும் பல இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது என்றும், இதனால் இவ்வுரைகாரர் இளம்பூரணராக இருக்கலாமோ என்றும் தம்முடைய எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார்.  அதாவது, "களவியலுரைகாரர் இளம்பூரணர் தாமோ என்னும் ஐயத்தை எழுப்புதற்குக் காரணமாயிருந்தவற்றைக் காட்டியபடியாம்.  இதற்குப் பிற சான்றுகளும் வேண்டி இருத்தலின் இக்கொள்கையே முடிவுடையதென்பது என் கருத்தன்று.  ஆயின், இதனை ஈண்டுக் கூறவந்த தென்னையெனின் இப்புதிய கருத்து வெளியிடப்படின், அது பின் ஆராயப்பெற்று முடிவடைதற்குங் காரணமாகலா மென்னும் எண்ணங்கொண்டே என்க" (ஆராய்ச்சித் தொகுதி, ப.405) என்பதால் உணரலாம்.

கருணாகரத் தொண்டைமான்

கருணாகரன் வண்டை என்ற ஊரின் தலைவனென்பதும், பல்லவ வமிசத்தவனாய்த் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயர் பெற்றவன் என்பதும், அபயனது சேனாபத்தியத்துடன் மந்திரத் தலைமையும் வகித்து விளங்கியவன் என்பதும் கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.  ஆனால், தொண்டைமண்டல சதகம் கருணாகரனுக்குரிய வண்டை என்னும் ஊர் தொண்டை நாட்டிள்ள வண்டலூர் என்று கூறுகின்றது.  இவ்விரு கூற்றுக்களும் பொய் என்றும், கருணாகரனது வண்டை என்னும் ஊர் சோழநாட்டில் உள்ளது என்றும் மு.இரா. அவர்கள் நிலைநாட்டுகின்றார்.  இதற்குத் தக்க சாசனங்கள் மற்றும் இலக்கியச் சான்றுகள் போன்றவற்றை மேற்கோளாகக் காட்டித் தம் ஆய்வை நிலைப்படுத்துகின்றார்.  மேலும் இராமபிரானுக்குக் கருணாகரப்பெருமான், கருணாகரமூர்த்தி போன்ற பெயர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இவனுக்கும் கருணாகரன் என்ற பெயர் வந்தமைக்கான பெயர்க்காரணத்தையும் இக்கட்டுரை வாயிலாக விளக்குகின்றார்.

கூத்தச்சாக்கையன்

இலக்கியங்களிலும் சாசனங்களிலும் கூத்தச்சாக்கையன் என்பவர் யார்?  அவனது தொழில் எது?  என்பன பற்றியெல்லாம் இக்கட்டுரையில் மு.இரா. அவர்கள் ஆய்ந்திருக்கின்றார்.  சிலப்பதிகாரம் நடுகற்காதை (65-79)யில் இளங்கோவேண்மாளோடு சேரன்செங்குட்டுவன் வஞ்சிமாடம் செல்லும் போது இடையிலுள்ள நாடக அரங்கத்தில் கூத்தச்சாக்கையன் நிகழ்த்திய கூத்தைக் கண்டுகளித்தான் என்றும், அவன் ஆடிய ஆட்டம் 'கொட்டிச்சேதம்' என்றும், இக்கொட்டிச்சேதம் சிவபெருமான் உமையவளுடன் ஆடிய பதினொரு புறநாடகங்களில் ஒன்று என்றும் சுட்டிச்செல்கின்றார்.  மேலும், இச்சாக்கையர் தமிழ்நாட்டிலுள்ள பழைய குடியினராய்க் கூத்து நிகழ்த்துவதில் தொன்றுதொட்ட பெருமை உடையவர் என்றும், சிலப்பதிகாரத்தில் "இமையவனாடிய கொட்டிச்சேதம், பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க், கூத்தச் சாக்கையன்" ஆடினன் என்னும் செய்தியும் கூத்தச்சாக்கையனின் பழைமையைப் புலப்படுத்தும் என்றும் விளக்கிச் செல்கின்றார்.

திருவள்ளுவர்

திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவர் பெயர்க்காரணம், அவரின் ஊர், அவர்தம் தேவியர் பெயர்க்காரணம், பிரமதேவனோடு திருவள்ளுவருக்குள்ள தொடர்பு ஆகியன பற்றியெல்லாம் மு.இரா. அவர்கள் இக்கட்டுரையில் விளக்கிச் செல்கின்றார்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"

என்ற சாத்தனாரின் வாக்கைப் பார்க்கும் போது திருவள்ளுவரின் காலம் சில நூற்றாண்டுகளாவது சாத்தனார்க்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் என்கின்றார். பிரமதேவர் இயற்றிய திரிவர்க்கம் முப்பால் உணர்த்தும் முதல் நூலாகத் திகழ்கின்றது.  அதிலிருந்தே ஏனைய நீதிநூல்கள் தோன்றின என்பது ஆய்வாளர் கருத்து.  திரிவர்க்க நூலைச் சுருக்கி திருவள்ளுவர் திருக்குறளை தமிழுலகிற்கு அருளினார் என்கிறார்.  அதாவது, "நான்முகன் அவதாரமான திருவள்ளுவர்" என்ற முன்னோர்தம் கூற்றை ஆதாரமாகக் கொண்டு பிரமதேவரோடு திருவள்ளுவரையும் ஒப்பீடு செய்து ஆய்ந்திருக்கின்றார்.

அரசர்க்குக் கருமத்தலைவராய் உயர்பதவி வகித்தவர்க்கு வள்ளுவன், சாக்கை என்ற சிறப்புப் பெயர்கள் வழங்கப்பெற்றதைத் திவாகரம் உணர்த்துகின்றது.  இதனை,

"வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத் தலைவர்க் கொன்றும்"

என்னும் திவாகர சூத்திரத்தினால் உணரலாம்.  வல்லபர் என்ற வடசொல் வள்ளுவர் என்றாகியது என்கின்றார்.  இதற்குப் புதுக்கோட்டை சித்தன்னவாசல் சாசனம் 'ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்' என்றும், திருவிசலூர் பரகேசவரிவர்மன் இராசேந்திரசோழன் சாசனம் 'பாண்டியன் ஸ்ரீவல்லுவர்' என்றும், வீரராஜேந்திரன் மெய்க்கீர்த்தி 'சிரீவல்லவன்' என்றும் வழங்குவதை உணர்த்தி வல்லபன் என்பது வல்லுவன் என்று ஆகிப் பின்னாளில் 'ல' கரம் 'ள'கரமாகத் திரிந்து 'வள்ளுவன்' என்றாகியது என்கின்றார்.  புறநானூற்றில் (137) படைத்தலைமை வகித்தவனை 'நாஞ்சில் வள்ளுவன்' என்று சுட்டப் பெறுவதைச் சிறப்பாகக் காட்டி விளக்கிச்செல்கின்றார்.

"உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப - இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு" (திருவள்ளுவ மாலை)

என்பதில் உலகை வாழ்வித்தருளிய கண்ணபிரான் மதுரைக்கு எங்ஙனம் ஆதாரமாய்ச் சிறந்தவரோ, அங்ஙனமே திருக்குறளாசிரியராய்த் தமிழகத்தை வாழ்வித்த வள்ளுவர் தென்மதுரைக்கு ஆதாரமாகச் சிறந்தவர் என்பது உண்மை.  ஆகவே வள்ளுவர் பிறந்தது தென்மதுரையே அன்றி மயிலாப்பூர் அல்ல என்று உணர்த்துகின்றார்.

மேற்கூறிய 'உப்பக்க நோக்கி' எனும் பாடலில் கண்ணன் தேவியாக உபகேசியைக் கூறியது போல வள்ளுவரின் தேவியாக மாதானுபங்கியைக் குறிப்பிடுகின்றார். நப்பின்னையை உபகேசி என்ற சிறப்புப்பெயரால் அழைத்தது போல வாசுகியை மாதானுபங்கி என்ற சிறப்புப்பெயரால் அழைத்திருக்கின்றனர் என்கின்றார்.

பகழிக்கூத்தர்

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பகழிக்கூத்தர்.  இவர் பிறப்பால் வைணவர் என்றும், முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டு இந்நூலைப் பாடியவர் என்றும், சைவராக வாழ்ந்தவர் என்றும் மு.இரா. அவர்கள் இக்கட்டுரை வாயிலாக விளக்கிச் செல்கின்றார்.  அதாவது, சர்க்கரை இராமசாமிப் புலவர் அவர்கள் மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு அளித்த ஏட்டுப்பிரதியில் "செம்பிநாட்டுச் சன்னாசிக் கிராமத்துத் திருப்புல்லாணி மாலடியான் தர்ப்பாதனன் மகன் பகழிக்கூத்தன் வாக்கு"  என்பதை அடிப்படையாகக் கொண்டு இவரது தந்தையார் தீவிர வைணவர் என்பது இவ்வரிகளால் தெரிகின்றது என்கின்றார்.  பிறப்பால் வைணவரான பகழிக்கூத்தர் தம்முடைய வயிற்று வலியைப் போக்கத் திருச்செந்தூரில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் மீது 'திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்' பாடினார் என்ற கூற்று உண்மையே என்று விளக்குகின்றார்.

ஈ. வரலாற்றாய்வு

தமிழரும் ஆந்திரரும், திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், பண்டைக் கைத்தொழில் வியாபாரங்கள், பாரத காலமும் தமிழரும், பெரியாழ்வார் காலநிர்ணயம், வால்மீகி முனிவரும் தென்னாடும், வேளிர் வரலாறு ஆகிய வரலாற்றாய்வுகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழரும் ஆந்திரரும்

சங்க காலத்தில் தமிழ்மக்கள் ஆந்திரரை வடுகர் என்றும் அவர் மொழியை வடுகு என்றும் வழங்கிவந்தனர்.  அவ்வாறே ஆந்திரர் தமிழரை அரவர் என்றும் அவர் மொழியை அரவம் என்றும் வழங்கிவந்தனர்.  இன்றும் அவ்வாறே வழங்கிவருகின்றனர்.  'வடுகர், அரவர்' என்ற இருசொற்கள் யாருக்குரியது இவற்றின் உண்மை வடிவம் என்ன? என்பது குறித்து மு.இரா. அவர்கள் இக்கட்டுரையில் விவரிக்கின்றார்.

மைசூர்-ராஜ்யத்தின் உட்பாகத்துக்கும், பல்லாரி அனந்தபுர ஜில்லாக்களின் பகுதிகட்கும் 'படகநாடு' என்று பெயர்.  படகநாடு என்பது வடுக நாடென்பதன் திரிபே.  அகநானூறு (253, 107), குறுந்தொகை (11) மற்றும் சுந்தரர் தேவாரம் போன்றவற்றில் குறிப்பிடப்பெறும் வடுகர் படகநாட்டவர் என்பது இக்கட்டுரையில் உறுதிசெய்யப் பெற்றிருக்கின்றது.

தமிழகத்தைச் சூழ்ந்த நிலங்களிலே கன்னடம், வடுகு, தெலுங்கம் என்பவை தனித்தனி நாடுகள் என்று நச்சினார்க்கினியரும் (தொல்.சொல்.400இன் உரை), மயிலைநாதரும் (நன்னூல் 272இன் உரை) கூறுகின்றனர்.  இவ்வாறு தெலுங்கு நாட்டின் வேறாக வடுகநாடென ஒன்று எண்ணப்படுவது உணரலாம் என்றும், பிற்காலத்தில் வடுகு, வடகர் ஆகிய இரண்டும் தெலுங்கர்களைக் குறிக்கும் வடுகர் என்ற சொல்லாக நிலவியது என்றும் சுட்டுகின்றார்.

அரவர், வடுகர் என்ற பெயர் 300 வருடங்களுக்கு முன் வழங்கியதற்கான சான்றில்லை.  ஆனால் அகராதி நிகண்டு 'அரவரென்பது தமிழராகும்' என்று எடுத்தாண்டுள்ளதை எடுத்துக்காட்டி, அரவர் என்பது தமிழருக்குண்டா? என்ற வினாவுக்கு, 'அருவர் என்பதே அரவர்' என்று விரிவாக அதற்குத்தக்க சான்றுகளுடன் விளக்கியிருக்கின்றார்.  மேலும், தமிழரும் வடுகரும் முற்காலத்தும் பிற்காலத்தும் எவ்வகைத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்திருக்கின்றார்.  அவை,

1.  தமிழரும் ஆந்திரரும் தம்முட் பெரும்பாலும் நட்பினராய் வாழ்ந்த காலம்
   (முடிவேந்தர் மூவர் காலம்)
2.  தமிழர் ஆந்திரரின் மேம்பட்டு ஆண்ட காலம்
   (சங்க காலத்திற்குப் பிறகு இராசராசன்-2 வரை)
3.  ஆந்திரர் தமிழரின் மேட்பட்டு ஆண்ட காலம்
   (விஜயநகர பேரரசு உதயம் தொடங்கி)

என்பனவாக இவ் ஆய்வு அமைந்திருக்கின்றது.  மேலும் இவர்களின் உறவு முறைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை வரலாற்றாதாரத்துடன் விளக்கிச் செல்வதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.

திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும்

பல்லவர்க்கு வயிரமேகன் என்ற பெயர் வழக்கு உண்டென்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கூறுகின்றார்.  இதற்கு ஆதாரமேயில்லை.  "இக்காலத்தில் உள்ளது  போலச் சரித்திரச் செய்திகள் தெரியவருவதற்கு வேண்டிய சாதனங்கள் அப்போது இல்லாமையால், கர்ணபரம்பரையாக அறியப்பட்ட தொண்டைமான் சக்கரவர்த்தியையே திருமங்கைமன்னன் நெடுகக் கூறினவராகக் கொண்டு அவனுக்கேற்பப் பூர்வீகர் பொருளை இணக்கி எழுதநேர்ந்தது சிறிதும் வியப்பன்று"(திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், செந்தமிழ், 22:1:1923) என்றவர் அவ்வழியைப் பின்பற்றிச் செல்வது இன்றைய வரலாற்றாராய்ச்சியார்க்கு உகந்ததன்று என்கின்றார்.  இவர் தம்முடைய ஆய்வில், "பல்லவ மன்னன் அறுபது வருஷங்கட்கு மேல் ஆட்சிபுரிந்தவன் என்பது, சரித்திரப் பிரஸித்தமாயுள்ளது.  அவனது ஆட்சியின் தொடக்கத்தில் நடந்த போர்களையே உதயேந்திர சாஸனமும் பரமேச்சுர விண்ணகரப் பதிகமுங் கூறுவன.  இவனாட்சி முடிவுக்குப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்புதான் வயிரமேகனாகிய தந்திதுர்க்கன் இவனை வென்றவனென்று அறியப்படுகிறது.  இதனால், திருமங்கைமன்னன், பரமேச்சுர விண்ணகரப் பதிகத்தைப் பல்லவமல்லனது ஆட்சியிடையிலும், அட்டபுயகரப் பதிகத்தை வயிரமேகன் வெற்றிகொண்ட காலமாகிய கி.பி.754லும் பாடினவராதல் வேண்டுமென்று கருதுவது, ஒருபோதும் தவறான ஊகமாகாதென்க" (திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், செந்தமிழ், 22:1:1923) என்கின்றார்.

மேலும், வயிரமேகன் என்ற பெயர்க்காரணத்தைப் பற்றி எழுதும்போது, "அது, தோற்றவனான பல்லவர்குலப் பெயரைத் தந்திதுர்க்கன் தன் வெற்றிக் குறியாகத் தரித்ததாகலாம் என்று ஐயரவர்கள் கருதுகிறார்கள்.  வென்றவன் பெயரைத் தோற்றவன் தானடங்கியதற்கறிகுறியாகத் தரித்தல் பொருந்துமேயன்றித் தோற்றவன் பெயரை வென்றவன் தரிப்பதென்பது அருமையேயாம்.  ................ பல்லவனை வெற்றிகொண்ட வயிரமேகன் ஆகிய தந்திதுர்க்கன், பின் பகைமை நீங்கித் தன்மகள் ரேவாவை அப்பல்லவனுக்கே யளித்தானென்றும், அவளிடம் பல்லவமல்லனுக்குப் பிறந்த மகனே தந்திவர்மனென்றும் சிலரால் ஊகிக்கப்படுவதால், தாய்வழிப்பாட்டனான அவ்வயிரமேகன் பெயரைப் பின்வந்த பல்லவர் சிலர் தரிக்கலாயினர் என்று ஒருகாற் கொள்ளலாமேயன்றி, மாறிக் கூறுவது சிறிதும் பொருந்தாதென்க" (திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், செந்தமிழ், 22:1:1923) என்று விளக்குகின்றார்.

"பல்லவமல்லன் வழியிற் சிலரும் வயிரமேகன் என்று பெயர் தரித்திருப்பதாகத் தெரியவருவதால், அதனைப் பற்றிக்கொண்டு அவர்களில் ஒருவனே ஆழ்வார் கூறினவராக வேண்டும் என்று ஆதாரமில்லாமல் பொதுப்படையாக நலிந்து கூறும் பொருள்களிலும், பல்லவனை வெற்றிகொண்டவனாகச் சாசனத்தாலும் ஆழ்வார் வாக்காலும் தெளிவாக அறியப்படுபவனும் முன்னவனுமாகிய வயிரமேகனையே கொள்வது எத்துணை நேர்மையும் சிறப்புமுடையது என்பதை அறிஞர் சிந்திப்பார்களாக" (திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், செந்தமிழ், 22:1:1923) என்ற சிந்தனை வினாவையும் இதனுள் வைத்திருக்கின்றார்.

பண்டைக் கைத்தொழில் வியாபாரங்கள்

முற்காலத்தே தமிழ்நாட்டில் நிகழ்ந்த கைத்தொழில் வியாபாரங்களைத் தமிழ் முன்னூல்களால் தெரியவருவனவற்றை மு.இரா. அவர்கள் இக்கட்டுரை வாயிலாக எடுத்துரைக்கின்றார்.

"உழவு தொழிலே வரைவு வாணிபம்
வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில்
கற்கும் நடையது கருமபூமி" (திவாகரம்)

என இந்தியாவில் நிகழக்கூடிய அறுவகைத் தொழில்களில் முக்கியமானது உழவும் வாணிபமும் ஆகும்.  இவை குறித்து இலக்கியங்கள் உணர்த்தும் சான்றுகளிலிருந்து தெரியவருவனவற்றை இவர் தெளிவாக இதில் எடுத்துரைத்திருக்கின்றார்.

"தனிமை யாதல், முனிவில னாதல்,
இடனறிந் தொழுகல், பொழுதொடு புணர்தல்,
உறுவது தெரிதல், இறுவ தஞ்சாமை
ஈட்டல், பகுத்தல் என்றிவை யெட்டும்
வாட்ட மில்லா வணிகர தியற்குணம்"

என்று வணிகர்தம் குணங்களைத் திவாகரம் குறிப்பிடுகின்றது.  இத்தகைய எட்டு குணங்களுடைய வணிகர்கள் வெளிநாடு, உள்நாடுகளில் தங்களின் வாணிபத்தைப் பெருக்கினர்.  துணி, மணி, மிளகு, தந்தம், முத்து போன்றவற்றை இவர்கள் ஏற்றுமதி செய்தும்; கண்ணாடி, உயர்ந்த வகை மது, பித்தளை போன்றவற்றை இறக்குமதி செய்தும் இருக்கின்றனர். இதனைத் தக்க இலக்கியச் சான்றுகளுடன் மு.இரா. அவர்கள் விளக்கியிருக்கின்றார்.  இலக்கியங்களில் ஆடைகளின் வகைகள் குறித்தும், நூற்றற்றொழில் மகளிர்க்குண்டானது என்றாலும் சிறப்பாகக் கைம்பெண்களுக்கு மிகவும் ஏற்றமுடையதாக இருந்திருக்கின்றது என்றும் கூறுகின்றார்.  பட்டு, மயிர், பருத்தி ஆகியவற்றினால் நெய்யப்பட்ட ஆடைகள் குறித்து சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் விளக்குவனவற்றை மேற்கோளாகக் கொண்டு பண்டைய தமிழர்கள் ஆடையேற்றுமதியில் செயலாற்றிய திறனை வெளிப்படுத்துகின்றார்.  உள்நாட்டு வணிகத்துக்கு அரசர்கள் கொடுத்த பாதுகாப்பு குறித்தும் அதன்பொருட்டு அவர்கள் அமைத்துக்கொடுத்த சுங்கச்சாலை, பண்டகசாலை போன்றவற்றைப் பற்றியும் தக்க சான்றுகளுடன் இதனுள் விளக்கிச் செல்கின்றார்.

பாரத காலமும் தமிழரும்

பாரதப்போர் நிகழ்ந்த காலமும் கடைச்சங்க காலமும் ஒன்றே என்பதை மு.இரா. அவர்கள் 'பாரத காலமும் தமிழரும்' என்ற கட்டுரையில் விளக்கிச் செல்கின்றார்.  மேலும் ஆதியில் மூன்று சங்கங்கள் இருந்தன என்னும் கூற்றுக்கு மறுப்பாகவும் இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.

இடைச்சங்க மிருந்தாருள் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் ஒருவன் என்பது முன்னூல்களில் காணப்படுகிறது.  இவனே தொல்காப்பியம் புலப்படுத்தினான்.  இதனை 'நிலந்தருதிருவிற் பாண்டியனவையத்து' எனவரும் அவ்விலக்கண நூற் பாயிரத்தால் அறியலாம்.  இவனைப் பற்றிக் கடைச்சங்கத்தாராகிய மாங்குடி மருதனார் மருதக்காஞ்சியில் புகழ்ந்திருப்பதால் இடைச்சங்கம் என்று ஒன்று ஆதியில் இல்லை என்கின்றார்.  மூன்று சங்கங்களுள் தலைச்சங்கம் செய்தியாக வழங்குவனவற்றில், முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர், அச்சங்கமிருந்தாருள் ஒருவர் என்று இறையனார் களவியலுரை முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.  ஆனால் மு.இரா. அவர்கள் புறநானூற்றின் இரண்டாவது பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பாடியிருக்கின்றார்.  இதனால் முதற்சங்கம் ஒன்று இல்லை என்று கூறுகின்றார்.  இச்சேரலாதன் பாரத யுத்தத்திற் பாண்டவர் பக்கம் நின்று, அப்போர் முடியும் வரை பாண்டவர் சேனைகட்கு உணவளித்தவன்.  இக்காரணம் பற்றியே இவன் 'பெருஞ்சோற்றுதியன்' என்றழைக்கப்பட்டான் என்கிறார்.  இவ்வரலாற்றுச் செய்தியை பண்டைக் காலத்துப் புலவர் சிலரும் புகழ்ந்துரைத்துள்ளனர்.  குறிப்பாக, மாமூலரின் அகநானூற்றில் 'மறய்படைக் குதிரை' என்ற பாட்டாலும்; இளங்கோவடிகளின் 'ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்' என்ற வரிகளாலும் இக்கருத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்துகின்றார்.

இவ்வுதியனை முன்னிலையில் வைத்துப் பாடிய முடிநாகராயரும், தலைச்சங்கப் புலவர் வரிசையில் நூல்களிற் கூறப்படும் முடிநாகராயரும் ஒருவரே.  இவ்விரண்டடிகளிலும் 'முரஞ்சியூர்' என்ற ஒரே ஊர் இடம்பெற்றுள்ளது என்று ஊர் அடிப்படையிலும் ஆய்வு செய்து தம் கருத்தை நிலைநாட்டுகின்றார்.

மேலும், ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்' என்னும் தொல்காப்பிய சூத்திரவுரையில் தலைச்சங்கக் காலத்தவராக வான்மீகனார், மார்க்கண்டேயனார், கௌதமனார் போன்றோரைக் கூறுகின்றார்.  ஆயின், இவர்களும் பாரத காலத்தை ஒட்டியிருத்தல் கூடும் என்று மு.இரா. அவர்கள் உணர்த்துகின்றார்.  வான்மீகனார் இயற்றிய பாடல் ஒன்று புறநானூறு 366இல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டி இவர்களும் பாரத காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று கூறுகின்றார்.  மேலும் குமட்டூர்க்கண்ணனார், அகத்தியர் போன்றோரும் பாரதயுத்த காலத்தில் வாழ்ந்த புலவர்களே என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கிச் செல்கின்றார்.

பெரியாழ்வார் காலநிர்ணம்

கர்ண பரம்பரைச் செய்திகளைக் கொண்டு ஆழ்வார்களின் காலத்தைப் பின்வருமாறு சுட்டுவர்.

பொய்கையார்    - கி.மு. 4203
பூதத்தாழ்வார் - கி.மு. 4203
பேயாழ்வார் - கி.மு. 4203
திருமழிசையாழ்வார் - கி.மு. 4203
நம்மாழ்வார் - கி.மு. 3102
மதுரகவியாழ்வார் - கி.மு. 3102
குலசேகராழ்வார் - கி.மு. 3075
பெரியாழ்வார் - கி.மு. 3056
ஆண்டாள்         - கி.மு. 3005
தொண்டரடிப்பொடியாழ்வார்- கி.மு. 2814
திருப்பாணாழ்வார் - கி.மு. 2760
திருமங்கையாழ்வார் - கி.மு. 2706
இக்காலப் பகுப்பு முற்றிலும் போலியானது என்கின்றார் மு.இரா. அவர்கள்.  நாதமுனிகளால் அறியப்பட்டுப் பின்னர்க் குருபரம்பரையில் வந்த ஆழ்வார்கள் கால வரலாறு பிற்காலத்துச் சிலபல மாறுதல்களுக்கு உள்ளாகியிருத்தல் கூடும் என்றவர், ஆழ்வார்கள் வரலாறு தெரிவிக்கும் சில பழைய நூல்களில் மேற்கண்ட காலம் குறிக்கப்பட்டிருத்தல் காணவில்லை என்கின்றார்.  எனவே, "மேலே கூறிய கால வரையறைகள் அதிகப்பட்டிருப்பனவாகத் தோன்றினும், அவற்றால் நாமறியக் கிடக்கும் விஷயங்களும் உண்டு.  முன்னின்ற பொய்கையார் முதலிய நால்வரும் இடைநின்ற நம்மாழ்வார் முதலிய ஐவரும் பின்னின்ற தொண்டரடிப்பொடியாழ்வார் முதலிய மூவரும் தனித்தனி மூவேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிகின்றது" (பெரியாழ்வார் காலநிர்ணயம், செந்தமிழ், 2:3:1903) என்று பழைய வரிசை முறையை மு.இரா. அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்.

கம்பர் காலம் கி.பி.885 ஆகும்.  நாதமுனிகள் சந்நிதியில் கம்பராமாயணம் அரங்கேறியது என்ற வழக்கால் கம்பருக்கும் முன்னவர் நாதமுனிகள் என்றும்; பெரியாழ்வார், ஆண்டாள் பாடல்கள் விருத்தப் பாடல்களால் ஆனவை.  விருத்தம் சங்கப் பாடல்கள் காலத்தில் இல்லை.  ஆண்டாள் திருப்பாவை முடிவில் அருளிய 'பைங்கமலத் ...' என்னும் பாசுரக் கூற்றை நன்றாக ஆராய்ந்தால் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள் என்று துணியலாம்.  கடைச்சங்க காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு என்பர்.  எனவே, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோரது காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு என்றும் விளக்குகின்றார்.

பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் வெண்பாவில் செய்யுள் செய்திருக்கின்றனர்.  நம்மாழ்வார் பிற்காலத்தனவாகிய பாவினங்களில் செய்யுள் செய்திருப்பதால் நம்மாழ்வாருக்கும் முன்னவர்கள் இம்மூவர் என்றும்; திருமழிசையாழ்வார் சந்த விருத்தத்தால் செய்யுள் செய்திருப்பதால் முதலாழ்வார்க்குப் பிற்பட்டவர் என்றும்; திருமழிசையாழ்வார் காலத்திருந்த பல்லவ அரசன் செழித்து வளமுடன் இருந்தது பற்றி பழைய நூல் ஒன்று கூறுகின்றது.  இதிலிருந்து திருமழிசை ஆழ்வார் கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும்; அவதார முறையில் திருமழிசை யாழ்வாருக்கு அடுத்தவராக நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் இவர்கள் பல்லவர் செழித்து வாழ்ந்த 6ஆம் நூற்றாண்டினருக்குப் பிறகான 7ஆம் நூற்றாண்டவர் என்றும்; பெரியாழ்வார் திருமொழி திருமாலிருஞ்சோலைமலைப் பாசுரத்தின் (மன்னன் மறுக) வழி ஆராயின் மதுரையை ஆண்ட நெடுமாறன் என்னும் பாண்டியன் குறிக்கப்பட்டுள்ளான் என்பது விளங்கும்.  இவனது காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது பல இலக்கியச் சான்றால் விளங்கும் என்றும் ஆழ்வார்களின் காலத்தை வரையறை செய்கின்றார்.

வால்மீகி முனிவரும் தென்னாடும்

வால்மீகி முனிவர் தம்முடைய இராமாயணத்தில் பரதகண்ட நிலையைப் பரவலாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.  இவற்றில் தென்னாடு பற்றிய நிலையை மு.இரா. அவர்கள் இக்கட்டுரையில் தனிப்படுத்திக் காட்டியிருக்கின்றார்.  அதாவது, விந்திய மலையின் தென்பக்க முழுமையும் தென்னாடு (நருமதை, கோதாவரி, கிருஷ்ணவேணி, காவிரி, தாமிரபரணி முதலிய ஆறுகளும்; சேர, சோழ, பாண்டிய நாடுகளும்; தண்டகாரணியம் என்னும் வனப்பகுதியும்) என்றும்; அகத்தியர் தண்டகாரணியம், பொ£தியமலை, கோதாவரிக் கரையிலுள்ள பஞ்சவடி போன்ற இடங்களில் வாழ்ந்திருந்தார் என்றும்; கபாடபுரம், முசிரி, திருவெண்காடு போன்ற இடங்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார் என்றும்; தென்னாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் இவையிவை என்றும் விளக்கிச் செல்கின்றார்.  மேலும், அரக்கரைப் புதைத்தல் மற்றும் அவர்தம் மொழி வடமொழி அல்ல என்பது பற்றியும்; புறநானூற்றுப் பாடல் ஒன்று வால்மீகி பாடியிருப்பதால் அவர் சங்க காலத்தவர் என்பது பற்றியும் மு.இரா. அவர்கள் எடுத்துக்காட்டிச் செல்கின்றார்.

முடிவுரை

மகாவித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் இதழின் உதவி ஆசிரியராக இருந்த காலத்தும், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தும் அவர்தம் ஆய்வுக் கட்டுரைகளும் பதிப்புகளும் படைப்புகளும் செந்தமிழ் இதழில் பல்வேறு நிலைகளில் வெளிவந்திருக்கின்றன.  இவரது எழுத்துருக்களில் பெரும்பான்மை செந்தமிழ் இதழே வெளியிட்டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல.  செந்தமிழ் இதழோடு முதல் எட்டு ஆண்டுகள் நெருங்கியிருந்தாலும் அதற்கும் பிறகு சுமார் 33 ஆண்டுகள் இவ்விதழோடு உறவு வைத்திருந்திருக்கின்றார் என்பது இவர்தம் எழுத்துரு வெளிவந்த ஆண்டைக் கண்ணுற்றோர்க்கு விளங்கும்.

ஆய்வுக்குப் பயன்பட்டவை

1.  ஆராய்ச்சித் தொகுதி, மு. இராகவையங்கார், தமிழ்ப் பல்கலைக்கழகம்,           தஞ்சை, நிழற்படப் பதிப்பு, 1984
2.  செந்தமிழ், தொகுதி 1 முதல் 43 வரை
3.  பருவஇதழ்களில் சுவடிப்பதிப்புகள், மோ.கோ. கோவைமணி, முனைவர்            பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, 2002

செந்தமிழ் இதழில் மு.இரா.வின் எழுத்துருக்கள்

 1.  அமிர்தசாகரர், தொகுதி 24:பகுதி 4:1926
 2.  அருச்சுனனும் பாண்டிய மரபும், 8:10:1910
 3.  அருளிச்செயற் பாடவமைதி, 40:1:1942 - 40:10:1943
 4.  ஆய்தவோசை, 41:1:1943
 5.  ஆழ்வார்கள் சரித்திர ஆராய்ச்சி, 4:2:1905
 6.  'ஆழிவடிம்பலம்ப' என்ற நளவெண்பாப் பாட்டுரை, 6:7:1907-08
 7.  இளம்பூரணவடிகள், 4:7:1906
 8.  எதிராசரந்தாதி, 4:10:1906
 9.  ஒப்புரவறிதல், 4:9:1906
10.  கண்ணபிரானைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள், 8:4:1909-10
11.  கருணாகரத் தொண்டைமான், 23:8:1925
12.  கருமாணிக்கன் கோவை எனும் கப்பற்கோவை, 6:7:1907-08
13.  கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, 23:3:1925 - 23:9:1925
14.  கூத்தச் சாக்கையன், 7:11:908-09
15.  சண்முகநாத சேதுபதி-வாழ்த்துப்பா, 41:2:1943
16.  சாமிநாதையர்-இரங்கற்பா, 39:6:1942
17.  சாஸனமும் தமிழ்ச் சரிதங்களும், 13:8:1915
18.  சிதம்பரப்பாட்டியல் - உரையுடன், 5:5:1907 - 6:5:1908
19.  சிலப்பதிகார வழக்கவொழுக்கங்கள், 40:12:1943
20.  சேதுபதி - சரமகவி, 26:9:1928
21.  சேரவேந்தர் தாயவழக்கு, 27:10:1929 - 27:11:1929
22.  தமிழரும் ஆந்திரரும், 22:8:1924
23.  திருக்கலம்பகம் - மூலமும் உரையும், 5:7:1907 - 6:4:1908
24.  திருமங்கையாழ்வாரும் தந்திதுர்க்கனும், 22:1:1923
25.  திருவள்ளுவரைப் பற்றிய சில குறிப்புகள், 8:4:1909-10
26.  தொட்டிக்கலைக் கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை, 5:1:1906
27.  தொல்காப்பியனாரும் புள்ளியெழுத்துக்களும், 25:5:1927
28.  நரிவிருத்தம், 5:11:1907
29.  பகழிக்கூத்தர், 6:6:1907-08
30.  பண்டைக் கைத்தொழில் வியாபாரங்கள், 7:3:1909
31.  பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, 40:3:1943
32.  பாண்டிமண்டல சதகம், 19:8:1921
33.  பாரத காலமும் தமிழரும், 3:9:1905
34.  புரூரவ சரிதை, 20:1922 - 23:1925
35.  பெரியாழ்வார் காலநிர்ணயம், 2:3:1903
36.  பெருந்தொகை, 21:12:1923 - 33:4:1936
37.  பொய்கையார், 1:6:1903
38.  மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மறைவு-இரங்கற்பா, 43:8:1946
39.  மதுரைக்காஞ்சி, 40:6:1943
40.  மார்கழி நோன்பாகிய தைந்நீராடல், 19:7:1918-19
41.  விக்கிரமசோழனுலா, 7:4:1909 - 7:6:1909
42.  வில்லிபுத்தூரார் காட்டிய வீரநெறிகள், 40:11:1943
43.  வீரத்தாய்மார், 5:10:1907
44.  வேள் ஆயண்டிரன், 4:3:1906
45.  வேள்-பேகன், 11:2:1912
46.  வேளிர் வரலாறு, 3:7:1905
47.  ஸ்ரீஇருந்தவளமுடையார், 8:1909-10
48.  ஸ்ரீவால்மீகி முனிவரும் தென்னாடும், 8:1:1909-10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக