செவ்வாய், 10 ஜூலை, 2018

இறையனார் அகப்பொருளும் கம்பராமாயண அகமரபும்

இறையனார் அகப்பொருளும் கம்பராமாயண அகமரபும்

செவ்வியல் இலக்கியங்கள் என்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நாற்பத்தொரு நூல்களில் அகஇலக்கியங்கள், புறஇலக்கியங்கள், அகப்புற இலக்கியங்கள், இலக்கணங்கள் என அமைந்திருக்கின்றன.  இவற்றில் இலக்கணம் என்ற நிலையில் தொல்காப்பியரின் தொல்காப்பியமும், இறைவனால் அருளிச்செய்யப்பட்டு தெய்வப்புலமை நக்கீரனாரால் உரை வரையப்பட்ட களவியல் என்ற இறையனார் அகப்பொருளும் அமையும்.  கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்டு ஏட்டுருவம் பெற்ற காவியங்களில் இராமாவதாரம் என்ற இராமாயணமும் ஒன்று.  இதனைக் கம்பர் எழுதியதால் கம்பராமாயணம் என்ற பெயர் பெறுவதாயிற்று.  இறையனார் அகப்பொருள் இலக்கணத்தில் கம்பராமாயணக் கூறுகள் இடம்பெறும் தன்மை குறித்து இக்கட்டுரை அமைகிறது.

இறையனார் அகப்பொருள்
மதுரை ஆலவாயிற் பெருமானடிகளால் (இறைவனால்) யாக்கப்பெற்ற அறுபது நூற்பாக்களால் ஆனது.  இதற்குக் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகை நக்கீரரால் ஆக்கப்பட்டதெனவும், அதனை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்மன் என்பான் கேட்டுச் சிறந்த உரையென ஒப்புக்கொள்ளப்பெற்றதெனவும் இந்நூலில் கூறப்பெற்றுள்ள முதற் நூற்பாவின் உரை உணர்த்துகிறது.  அதாவது, “ஐயனாவான் உருத்திரசன்மரைத் தரல்வேண்டும் என்று வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்தணிந்து, கன்மாப்பலகை யேற்றி, இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக்கேட்டு வாளா இருந்து, மதுரை மருதன் இளநாகனார் உரைத்த இடத்து ஒரோ வழிக் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் நிறுத்தி, பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்துப் பதந்தொறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப ஆர்ப்பெடுத்து, மெய்யுரைபெற்றாம் இந்நூற்கு என்றார்”.  இவ்வாறமைந்த இவ்வுரையைக் கடைச்சங்கக் காலத்து உக்கிரப்பெருவழுதியின் அவைக்களத்தில் கேட்கப்பட்டிருப்பதால் இவ்வுரை எழுந்த காலம் அவ்வரசனின் காலமான ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.  

இவ்வுரை பலருடைய வாய்மொழியாக வளர்ந்து பின்னாளில் ஏட்டுருவம் பெற்றுள்ளது.  இதனை, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார், அவர் தேனூர்க்கிழார்க்கு உரைத்தார், அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார், அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார், அவர் மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார், அவர் செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார், அவர் திருக்குன்றத்தாசிரியர்க்கு உரைத்தார், அவர் மாதளகனார் இளநாகனார்க்கு உரைத்தார், அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார் என்று சொல்லப்படுகிறது.

கம்பராமாயணம்
வடமொழியில் வால்மீகி, துளசி போன்றோரின் இராமன் கதைகளை உற்று நோக்கி தமிழ் மக்களின் உள்ளக்கிடங்கை வெளிப்படுத்தும் விதமாக கம்பரால் காப்பப்பட்ட இராமாவதாரமே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது. பால காண்டத்தில் ஆற்றுப்படலம் தொடங்கி பரசுராமப் படலம் வரை 23 படலங்களும், அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலம் தொடங்கி திருவடி சூட்டு படலம் வரை 13 படலங்களும், ஆரணிய காண்டத்தில் விராதன் வதைப் படலம் தொடங்கி சவரி பிறப்பு நீங்கு படலம் வரை 13 படலங்களும், கிட்கிந்தா காண்டத்தில் பம்பை வாவிப் படலம் தொடங்கி மயேந்திரப் படலம் வரை 16 படலங்களும், சுந்தர காண்டத்தில் கடல் தாவு படலம் தொடங்கி திருவடி தொழுத படலம் வரை 14 படலங்களும், யுத்த காண்டத்தில் கடல் காண் படலம் தொடங்கி விடை கொடுத்த படலம் வரை 39 படலங்களும் என ஆறு காண்டங்களும் 118 படலங்களும் கொண்டதாகக் கம்பராமாயணம் அமைந்துள்ளது.

கம்பர் காளிகோயிலில் பூசை செய்யும் எளிய குடுத்பத்தில் தோன்றியவர் என்றும், இளம் வளதில் கம்பம் கொல்லையைக் காவல் செய்ததால் ஏற்பட்ட பெயர் என்றும், காளி கோயில் அருகே ஒரு கம்பத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டமையால் கம்பர் என்றும், கவிபாடுவதற்கு முன் போதிய அறிவற்று, கம்பம் போல் நின்றமையால் கம்பர் என்றும், ஏகம்பன் என்ற சொல்லில் ஏ என்ற எழுத்தை நீக்கிக் கம்பர் என்ற பெயர் பெற்றார் என்றும் பல நிலைகளில் கம்பன்  என்ற பெருக்குக் காரணம் கூறுகின்றனர்.  இவர் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சோழநாட்டுத் திருவழுந்தூரில் ஆதித்தனுக்கு மகனாகப் பிறந்தவர் என்பர்.  கம்பனை ஆதரித்த வள்ளல் திருவெண்ணெய்நல்லூர் சடையன் ஆவான்.  கம்பருடைய காலம் கி.பி.9 முதல் 12 வரை கூறுவர்.

இலக்கியங்களில் கம்பராமாயணம்
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கியம் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்களில் அதன் தாக்கங்கள் இருக்கும்.  அதுபோல் கம்பராமாயணத்திற்கு முன்னர் தோன்றிய இலக்கியங்களின் தாக்கம் கம்பராமாயணத்திலும், கம்பராமாயணத்திற்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களில் கம்பராமாயணத்தின் தாக்கமும் இருப்பது இயல்பே.  அதுபோல் இலக்கண விதிகளும் அமையக் காணலாம்.  இலக்கிய வரிவடிவம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இராமகாதை மக்களின் எண்ணத்தில் வார்த்தெடுக்கப்பட்டு வளர்ந்திருத்தலினால்தான் சங்க இலக்கியமான அகநானூறு,புறநானூறு, பழமொழி நானூறு போன்றவற்றிலும், இரட்டைக் காப்பியமான சிலப்பதிகாரம், மணிமேலையிலும், பெருங்கதையிலும், திருஞானசம்பர் தேவாரத்திலும், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலும் இராம கதைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதை உணரமுடிகிறது.

வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகம்.70.13-17)

என்ற அகநானூற்று வரிகளில், இராமன் சீதையைத் தேடித் தென்னகத்திற்கு வந்த போது பாண்டிய நாட்டில் கோடிக்கரை என்ற ஊரில் ஆலமரத்தின் அடியில் இராமன் சீதையைக் காண்பதற்குரிய ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, ஆலமரத்தில் உள்ள பறவைகள் மிகுதியான ஒலிகளை எழுப்பியதால் பேச்சுக்கு இடைஞ்சலாக இருந்தது.  அதனால் இராமன் பறவைகளின் ஒலியை அவிந்தான்.  இது எப்படிப்பட்டது என்றால், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் களவுக் காலத்தில் இணைந்தபோது, ஊர்மக்கள் அலர் தூற்றினர்.  ஆனால் இருவருக்கும் திருமணம் உறுதியான பின்பு அலர் நின்றுவிட்டது.  இராமன் பறவைகளின் ஒலியை அவித்தது போன்று அகநானூற்றுக் காதலன் காதலியின் அலர் திருமணத்தால் அலரை நிறுத்தியது என்று மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் குறிப்பிடுகின்றார்.

எமக்குஎன வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே, அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கு அமைமரபின மிடற்றுயாக் குநரும்,
மிடற்று அமைமரபின அரைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு,
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே...
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. (புறம்.378.10-24)

என்று சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலில் சீதையை இராவணன் தூக்கிச் சென்ற செய்தியையும், சீதை தன் அணிகலன்களைக் கழற்றி வீசி எறிந்த செய்தியையும் இப்பாடலில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  ஊன்பொதி பசுங்குடையார் தம் சுற்றத்தினருடன் சோழன் இளஞ்சேட் சென்னியைப் பார்க்க சென்றபோது அவன் சிறந்த ஆபரணங்களைப் புலவரின் சுற்றத்தினர்களுக்குக் கொடுத்தான்.  அவ்வணிகலன்களை அவர்கள் எந்தெந்த உறுப்புக்களுக்கு அணியவேண்டும் என்பது தெரியாமல், விரல்களில் அணிய வேண்டிய அணிகலன்களைக் காதிலும், காதில் அணியவேண்டியவற்றை விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றை கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டியவற்றை இடையிலும் என மாறிமாறி அணிந்தனர்.  இச்செயல் எப்படி இருப்பது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்பாடல் ஆசிரியர், மிகுந்த வலிமையுடைய இராமன் மனைவி சீதையை இராவணன் தன் வல்லமையால் கவர்ந்து சென்ற போது சீதை தான் அணிந்திருந்த அணிகலன்களைக் கழற்றி எறிய, அவற்றைக் காட்டிலுள்ள சிவந்த முகம் உடைய குரங்குகள் காதில் அணிவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிவனவற்றை இடையிலும் அணிந்தன.  அதுபோல ஊன்பொதி பசுங்குடையாரின் சுற்றத்தினர் நடந்து கொண்டனர் என்கிறார் ஆசிரியர்.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்கு  இளையான் இலங்கைக்கே
போந்துஇறை யாயதூம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇ யிலார்இல். (பழமொழி, 92)

என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய பழமொழி, வீடணன் இராமனிடம் அடைக்கலம் புகுந்ததால் இலங்கையை அரசாட்சி செய்ய முடிந்தது.  இது பெரியோரைத் துணைக்கோடலால் அமைகின்ற ஒன்று என்று பழமொழி சுட்டுகிறது.

        மூவுலகும் ஈர்அடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டுஅழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே?
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே
                                                                            (சிலம்பு,ஆய்ச்சியர்குரவை, 35)

என்ற ஆய்ச்சியர் குரவையில் இடைக்குலமடந்தை மாதரி பாண்டிய அரசன் மாளிகைக்கு நெய் கொண்டு போபவள், ஒருநாள் காலை தீ நிமித்தம் கண்டு திருமாலைப் பற்றிய பாலசரிதை நாடகத்தை ஒன்பது வெண்களைக் கொண்டு ஆடுகிறாள்.  அப்போது திருமால் பத்து அவதாரங்களைப் பற்றியும் பாடல்களில் பாடுகின்றனர்.  இராமன் இலங்கையை அழித்த குறிப்பும், நரசிங்க அவதாரக் குறிப்பும் பாடலில் வருகின்றன.
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்உயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்,
ஏவலாளர் யாங்கணும் சென்று
கோவலன் தேடிக் கொணர்கஎனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அரும்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும். (சிலம்பு.13.58-65)

என்ற சிலப்பதிகார வரிகளில் இராமனோடு கோவலனை ஒப்புமைப்படுத்தி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  அதாவது, இராமன் அயோத்தியைப் பிரிந்த காலத்தில் அயோத்தி நகர மக்கள்ள எவ்வாறு துன்புற்றார்களோ அதுபோன்று கோவலன் புகாரைப் பிரிந்த காலத்தில் புகார் நகர மக்கள் துன்புற்றனர் என்கிறார்.

மணிமேகலையில் சாபத்தால் திருமால் மயங்கி உலகில் தோன்றியதையும், கடலைக் கடக்க குரங்குகள் அணை கட்டியதையும் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.  

பெருங்கதையில் சீதையின் கற்பின் பெருமை, இராமனுக்கு உதவிய தம்பி இலக்குவனின் பெருமை, சீதையைத் தேடிச் சென்ற குரங்கினங்களின் பெருமை ஆகியவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணி இராமனின் வில் வீரத்தைக் கூறுகிறது.

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகப் பாடல்களில் எட்டாவது பாடல் இராவணன் கதையைக் குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்களில் பல இடங்களில் இராவணன் பேசப்படுகிறான்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் பாடல்களில் இராமனை அவதாரம் என வணங்குவதையும், பெரியாழ்வாரின் பாடல்கள் அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம், குலசேகராழ்வாரின் பாடல்களில் தயரதன் புலம்பல், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் குகனைத் தன் உடன்பிறப்பாக இராமன் கொண்ட செய்தி போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

இறையனார் அகப்பொருளும் கம்பராமாயணமும்
தமிழர்களின் அக ஒழுக்கங்களை எடுத்தோதும் எழுத்தோவியமாக இறையனார் அகப்பொருள் அமைந்திருக்கிறது.  இதற்கு உரை வரைந்த தெய்வப்புலமை நக்கீரனார் அகப்பொருள் கூறுகள் நிரம்பிய பாண்டிக்கோவையை உதாரமாகக் கொண்டுள்ளார்.  இவற்றில் களவும் கற்பும் மிகைபடப் பேசப்பட்டுள்ளன.  தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலித்தாய்க் கூற்று எனத் திட்டமிட்ட கூற்றுகளை வட்டமிட்டதாக இறையனார் அகப்பொருள் அமைந்திருக்கிறது.  கம்பராமாயணமோ மேற்படி கூற்றுப் பாண்மையின்றி தன்னிகரில்லாத் தலைவனாகிய இராமனைப் பற்றியும், கற்புடையாள் சீதையைப் பற்றியும் அவர்கள் கானக வாழ்க்கை பற்றியும், அவற்றில் அவர்கள் பட்ட இடர்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்குமிடத்து களவு ஒழுக்கத்தையும் கற்பு ஒழுக்கத்தையும் இக்காவியத்தில் நேரிடையாகக் காண்பது அரிது.  ஒருசில இடங்களில் இறையனார் அகப்பொருள் கூறுகளைச் சுட்டக் காணலாம்.

கம்பராமாயண சுந்தரகாண்டம் காட்சிப் படலத்தில் சீதைக்குக் காவலாக பல அரக்க மகளிர் இருக்க,அவர்களில் ஒருவராக விபீஷணன் மகளாகிய திரிசடை ஒருத்தி.  அவள் சீதையிடம் மிகுந்த அன்புடையவளாக இருந்தாள்.  சீதை மிகவும் துயரப்படும் போது அவளை ஆற்றுவிப்பவளாக/தோழியாக திரிசடை விளங்கினாள் எனலாம்.

தோழிக் குரியவை கோடாய் தேஎத்து
மாறுகோ ளில்லா மொழியுமா ருளவே (இறை.அகப்.14)

என்ற நூற்பாவால் தோழிக்குத் தலைவியை ஆற்றுப்படுத்தும் தன்மை உண்டு என்பதை உணர முடிகிறது.  இதன்படி பார்க்கும்போது, திரிசடையும் மற்ற அரக்க மகளிரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது சீதைக்கு இடப்புருவரும் இடக்கண்ணும் துடித்தன.  அதனால் அவள் தன்னருகே தூங்கிக்கொண்டிருந்த திரிசடையை எழுப்பி என் மீது மிகுந்த அக்கறை கொண்டவளாய் உள்ளவளே! நான் இப்பொழுது சில நிமித்தங்களைக் கண்டேன்.  அதற்கு உரிய பொருளை ஆராய்ந்து சொல்வாயாக என்கிறாள்.  முன்னொரு நாள், விசுவாமித்திர முனிவருடன் என் நாயகர் மிதிலைக்கு வந்த காலத்தே எனக்கு இடப்புருவமும் இடக்கண்ணும் துடித்தன.  தாம் பெற்ற அரசச் செல்வத்தைத் தம்பிக்குக் கொடுத்துவிட்டு கானகம் புகுந்த நாளிலும் அவ்விடத்தில் வஞ்சனையால் இராவணன் என்னைக் கவர்ந்து வந்த காலத்திலும் என்னுடைய வலப்புருவமும் வலக்கண்ணும் துடித்தன.  சற்றுமுன் எனக்கு இடக்கண்ணும் இடப்புருவமும் துடிப்பதைக் கண்டேன்.  இதற்கு உரிய நிமித்தத்தைக் கூறுவாயாக என்று சீதை திரிசடையைக் கேட்க, திரிசடையோ, உன் செவியருகே இப்போது ஒரு பொன்வண்டு மெல்லென ஊதிச் சென்றது.  அதுபோல் உன் நாயகனிடத்தில் இருந்து தூதொன்று வரும்.  இது திண்ணம் என்று சொன்னாள்.

களவிலும் கற்பிலும் எதிர்வினை
தலைவன்-தலைவிக்குரிய செயற்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.  ஆனால் தழுவல் காப்பியமான கம்பராமாயணத்தில் அச்செயற்பாடுகள் தலைகீழாக அமைந்திருக்கின்றன.
நாடக வழக்கும், உலக வழக்கும், புலனெறி வழக்கு பற்றி தொல்காப்பியம் உரைத்தாலும் கம்பராமாயணம் நாடக வழக்கு பற்றியும் உலக வழக்கு பற்றியும் எடுத்துரைக்காமல் புலனெறி வழக்கு பற்றியே எடுத்துரைக்கிறது.
தலைவன் பரத்தையரை நாடுவதை இலக்கணங்கள் குறிப்பிட, கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை இராமனை நாடி வருகிறாள்.

கம்பராமாயணத்தின் தனித்தன்மை
அறத்தொடு நிற்றல் தலைமைக்கு உரித்து. இக்கூற்று கம்பராமாயணத்தில் எல்லா கதாபாத்திரங்களிலும் காணலாம்.  இராமன் தன்நிலையில் நிற்கின்றான்.  இலட்சுமண் தன் நிலையில் நிற்கின்றான். இராவணன் தன் நிலையில் நிற்கின்றான்.  பரதன் தன் நிலையில் நிற்கின்றான்.  அனுமன் தன் நிலையில் இருக்கின்றான்.  சீதை தன் நிலையில் நிற்கின்றாள். 

கம்பராமாயணத்தில் தன்னிகரில்லா தலைவனைப் பற்றியும் தலைவியைப் பற்றியும் கூறி இருக்க, இறையனார் களவியலில் நிகழ்ச்சிப் பாங்கு வெளிப்படுகிறது.  சங்கத் தனித்தனிப் பாடல்களில் கூற்று இலக்கணங்களாக களவும் கற்பும் பற்றிக் கூறியிருக்க கம்பராமாயணம் நிகழ்ச்சிக் கூறாக அமைந்திருப்பதால் இறையனார் அகப்பொருள் உணர்த்து களவும் கற்பும் இங்கு முழுமையாக காண்பது அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக