குறுந்தொகை - முல்லைத்திணைப் பாடல்களில் பாடவேறுபாடும் மீட்டுருவாக்கமும்
எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகையில் முல்லைத்திணைப் பாடல்களாக 21, 24, 64, 65, 66, 94, 98, 99, 108, 110, 126, 148, 155, 162, 167, 183, 186, 188, 190, 191, 193, 194, 200, 210, 220, 221, 233, 234, 240, 242, 251, 270, 275, 279, 287, 289, 314, 319, 323, 344, 358, 382, 387, 391, 400 ஆக 45 பாடல்கள் இடம் பெற்றிக்கின்றன. இப்பாடல்கள் அனைத்திலும் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன.
குறுந்தொகை பதிப்புகளும் சுவடிகளும்
திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கனார் தம்முடைய உரையுடன் குறுந்தொகையை 1915ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி, முத்துரத்தின முதலியார் வருவித்துக் கொடுத்த சுவடி, மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி என மூன்று சுவடிகளைக் கொண்டு இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.
குறுந்தொகை மூலம் மட்டும் 1920ஆம் ஆண்டு கா. நமச்சிவாய முதலியார் வெளியிட்டுள்ளார்.
இராமரத்ந ஐயரின் குறுந்தொகை புத்துரையைக் கலாநிலையம் வார இதழில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதந் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வெளியிட்டுள்ளது. இவ்வுரை தனிநூலாக வெளிவரவில்லை.
திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனாரின் குறுந்தொகை அச்சுப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு குறுந்தொகை மூலம் மட்டும் புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகர் 1933ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் தம்முடைய பதவுரை, விளக்கவுரையுடன் குறுந்தொகையை 1937ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். திருவாவடுதுறை ஆதீனச் சுவடி, திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் சுவடி, மந்தாத்தோப்பு மடத்துச் சுவடி, செங்கோல் மடத்துச் சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளை காகிதச் சுவடி, சோடாசவதானம் சுப்பராய செட்டியார் சுவடி, தொழுவூர் வேலாயுத முதலியார் சுவடி, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக காகிதச் சுவடி, புதுக்கோட்டை ராதாகிருஷ்ணையர் காகிதச் சுவடி, திருக்கோணமலை த. கனகசுந்தரம் பிள்ளை காகிதச் சுவடி எனப் பத்து மூலச் சுவடிகளைக் கொண்டு குறுந்தொகை பதிப்பை உ.வே. சாமிநாதையர் பதிப்பித்திருக்கின்றார். இதன் இரண்டாம் பதிப்பு 1947ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் குறுந்தொகை விளக்கவுரையை (முதல் 112 பாடல்கள்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1946ஆம் ஆண்டு வெளியாட்டுள்ளது.
உ.வே. சாமிநாதையரின் விளக்கவுரைப் பதிப்பை அடியொற்றி பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய குறுந்தொகை விளக்கவுரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955இல் வெளியிட்டுள்ளது.
புலியூர்க்கேசிகனின் குறுந்தொகை தெளிவுரையைப் பாரி நிலையம் 1965ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது.
பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகை 1985ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச் சுவடியின் நுண்படம் (எழுதப்பெற்ற ஆண்டு 1894), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் கையெழுத்துப்படி (மதுரையில் 1899இல் எழுதப்பெற்றது), மதுரைப் புலவர் இளங்குமரனிடமிருந்து பெறப்பெற்ற பூண்டியப்பப் புலவரின் ஏட்டுக் குறிப்பு, திரு. அடிகளாசிரியரின் வழியாகக் கிடைத்த 226 பாடல்களுக்கான காகிதச்சுவடி ஆகிய நான்கு சுவடிகளையும், திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் அரங்கனாரின் பதிப்பு, புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகரின் மூலப்பதிப்பு, கலாநிலையம் இதழில் வெளியான இராமரத்ந ஐயரின் உரை, உ.வே. சாமிநாதையரின் பதிப்பு, பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு ஆகிய ஐந்து குறுந்தொகை பதிப்புகளையும் அடியொற்றி பொழிப்புரையாக, ஆய்வுப்பாட நுண்பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாளரங்கனார் பதிப்பும், உ.வே. சாமிநாதையர் பதிப்பும், பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை ஆய்வுப்பாட நுண்பதிப்பும் ஆகும்.
தற்போது குறுந்தொகைச் சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றும், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. இங்குள்ள சுவடிகளை உ.வே. சாமிநாதையரும், மு. சண்முகம் பிள்ளையும் பயன்படுத்தி உள்ளதால் இனிக் குறுந்தொகைச் சுவடிகள் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல தமிழறிஞர்கள் வீடுகளில் இருக்கலாம். மாற்றுச் சுவடி கிடைக்கும் நிலையில் குறுந்தொகைக்கு வேறொரு பதிப்பு தேவையாகிறது.
பாடவேறுபாடுகள்
1. சௌரிப்பெருமாளரங்கனார், 2. கலாநிலையம் இராமரத்நம், 3. அருணாசலதேசிகர், 4. உ.வே.சா., 5. வையாபுரிப்பிள்ளை, 6. மு.சண்முகம் பிள்ளை ஆகியோரின் பதிப்புகளில் கையாண்டிருக்கிற பாடவேறுபாடுகள் பின்வருமாறு:
(குறிப்பு: பின்வரும் பாடவேறுபாடுகளில் கொடுக்கப்பெற்றிருக்கும் எண்கள் மேலே சுட்டிய பதிப்புகளின் எண்ணை முறையே குறிப்பனவாகும். ‘பா.’ என்பது பாடவேறுபாட்டைக் குறிக்கும்).
21.5:2. தேறேனவர் (1,2,4,5)
- தெறேனவர் (3,6)
24.4:1. எழுகளிறு (1,2,3,6)
- எழுகுளிறு (4,5)
24.5:1. குழையக் (1,6)
- குழையகக் (3,4ல் பா.)
- குழையக் (4,5,6)
- சிதைய (2)
24.5:2. கோட்டியோர் (1)
- எமைநீத்தி (2),
- கோடியோர் (3, 4ல் பா.)
- கொடியோர் (4,5,6)
- கோட்டியோ (4ல் பா.)
24.5:3. நாவே (1,3,4,5,6)
- அகன்ற (2)
24.6:1-4. நாம்வெங்காதலர்க் கலவென்றவ்வே (1)
- நாம்வெங்காதலர் நல்கார் கொல்லோ (2)
- காதலர் அகலக் கல்லென் றவ்வே (3-6)
64.1:3-4 கன்றுவருந்தெனப் (1,2)
- கன்று வந்தெனப் (3)
- அகன்றுவந்தெனப் (4,5,6)
64.3:1 மடக்கண் (1-6)
- மக்கட் (4ல் பா.)
64.3:3-4 அவண்வந்தன்ன (1,3)
- அவண் வந்தென்ன (2)
- அணவந்தன்ன (4)
- அலம் வந்தன்ன (5,6)
64.4:1 நோயேம் (1-6)
- நோவே (4ல் பா.)
65.1:1. வன்பாற் (1,2,3)
- வன்பரற் (4,5,6)
- வான்பாற் (4ல் பா.)
65.3:3 தளிதரு (1-6)
- துளிதரு (1ல் பா.)
- களிதரு (2 & 4ல் பா.)
65.5:1 வருந்தி நொந்து (1-6)
- நோநொந்து (4ல் பா.)
65.5:3 இருந்திரோ (1-6)
- இருந்தனிரோ (4ல் பா.)
- இருந்தீரோ (4ல் பா.)
- இருந்தினரோ (4ல் பா.)
- இருந்தன்றால் (4ல் பா.)
66.1:1 மடவ (1,2,3,4,5,6)
- மடவை (4ல் பா.)
66.4:1-3 கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த (1,3-6)
- கொம்புசேரக் கொடியிணர் ஊழ்த்த (2)
- கொம்புசேர் கொடியிணர் பூத்த (4ல் பா.)
66.5:1 வம்ப (1,2,3,4,5,6)
- வம்பு (4ல் பா.)
94.3:2. மருள்வேன் (1,2,3,4)
- மருள்வென் (5,6)
94.4:3 கேட்பின் (1-6)
- கேட்டின் (4ல் பா.)
94.6:3. தக்க (1,2,3)
- தத்தக் (4,5,6)
98.2:1. துன்னாச் (1,2)
- துன்னச் (3,4,5,6)
- துன்னர்ச் (4ல் பா.)
99.1:2. அல்லெனோ (1,2,4,5,6)
- அல்லனோ (3)
99.1:4 பள்ளி (1,2)
- உள்ளி (3,4,5,6)
99.2:2 அல்லெனோ (1,2,4,5,6)
- அல்லனோ (3)
99.2:4 நினைத்து (1,2,4,5)
- நினைந்து (5,6)
99.3:2 அல்லெனோ (1,2,4,5)
- அல்லனோ (3)
- அல்லெனே (6)
99.4:2 மாஅத்த (1,2)
- மராஅத்த (3,5)
- மரத்த (4,6)
- மாத்த (4ல் பா.)
99.4:3 கோடுதோய் (1-6)
- தோடுதோய் (4ல் பா.)
- கோடுகொய் (4ல் பா.)
99.4:4 மலிர்சிறை (1,2,3)
- மலிர்நிறை (4,5,6)
99.5:1 இறைத்துணை (1.2)
- இறைத்துணைச் (3)
- இறைத்துணச் (4,5,6)
99.6:4 கொளலே (1,2,3)
- கொளவே (4,5,6)
108.2:3 படர் (1,2)
- படரப் (3,4,5,6)
108.4:1 செவ்வான் (1-6)
- செவ்வறன் (4ல் பா.)
108.5:1 உய்யேன் (1-6)
- உய்வன் (4ல் பா.)
110.2:4 நீர்நிலைப்பைம் (1,2)
- நீர்நிலைப் (3)
- நீர (4,5,6)
- நீர் (4ல் பா.)
110.3:1 போதுளரிப் (1,2)
- பைம்போது (3)
- நீலப் (4,5,6)
- பொதுளீரிப் (1ல் பா.)
110.3:4 புதல் (1,2, 4ல் பா.)
- புதன் (3)
- புதல (4,5,6)
110.4:1 பிலி (1)
- மலி (1ல் பா., 2,3,4ல் பா.)
- பீலி (1ல் பா.,4,5,6)
110.4:3-4 கருவிளை (1,2,3)
- கருவிளையாட்டி (4,5,6)
110.6:2 துய்ம்மலர் (1,3,4,5,6)
- துய்மலர் (2)
110.7:2 எறிவரும் (1,2)
- எறிதரும் (3,4,5,6)
126.1:3 நசைச் (1,2,3)
- நசைஇச் (4,5,6)
126.2:1 இவணும் (1,3,4,5,6)
- இன்னும் (2)
126.2:3-4 எவணரோஎன்ப(1,2,3)
- எவணரோஎன(4,5)
- எவணரோ எனப் (6)
- எவணரோ என்ப (4ல் பா.)
148.1.2-3 சிறாஅர் சீறடிப்(1,2,3)
- சிறாஅர் சீறடி (4,5)
- சிறாஅர் சீறடிப் (6)
- சிறாஅர்ச் சீரடிக் (4ல் பா.)
148.2:2-3 வாஅய பொலன்செய் (1,2)
- வாஅய பொலஞ்செய் (3,5,6)
- வாயபொலஞ்செய் (4)
148.4:1 குருந்தோடு (1,2,3,4)
- குருந்தொடு (5,6)
148.4:2 அலமரும் (1,2)
- அலம்வரும் (3,4,5,6)
- அலரும் (3&4ல் பா.)
148.5:1-2 காரெனத் தேறாய் (1,2)
- காரன்றென்றி (3-6)
155.6:3 அயர்மார் (1,2,4,5,6)
- அயர்வர் (3)
155.7:2 என்னுமுன் (1,2)
- என்னும் (3,4,5,6)
- என்முன் (4ல் பா.)
162.1:1 கார்புனம் (1,2,3)
- கார்புறம் (4,5,6)
- கார்ப்புனம் (4ல் பா.)
162.1:4 வியன்புலத்துப்(1-6)
- வியன்புனத்து (3ல் பா.)
- வியன்புனத்துப் (4ல் பா.)
162.5:1 நகுவை (1,3,4,5,6)
- நகுவல் (2)
167.2: உடீஇக் (1-6)
- உரீஇ (4ல் பா.)
167.3:3-4 குய்ப்புகை கமழத்(1-4)
- குய்ப்புகை கழுமத் (5,6, 4ல் பா.)
- குய்ப்புகை கமழ (4ல் பா.)
183.5:3 பூக்கெழு (1-6)
- புக்கெழு (3ல் பா.)
183.7:1 கான (1-4)
- புன்புல (5,6)
- புன்புல, கானக (4ல் பா.)
183.7:3 புன்புலத் (1-4)
- கானத் (5,6, 4ல் பா.)
186.1:2 ஏற்றொடு (1,2,4,5,6)
- ஆற்றொடு (3, 4ல் பா.)
186.1:3 காத்தலை (1)
- கார்தலை (2-6)
186.3:2 முகைக்கும் (1,2,3,4)
- முகையும் (5,6, 4ல் பா.)
186.4:3 தோழிஎம் (1,2,3,5)
- தோழிஎன் (4)
188.2:2 றினவே (1-6)
- றினமே (4ல் பா.)
190.5:1 வரவுறு (1,2,)
- உரவுரு (4, 6)
- மாவுரு (3)
- நரைஉரும் (5)
190.6:2 இயங்குதொறு (1,2,5,6)
- இயங்குதோறு (3,4)
190.6:3 இயம்பும் (1,3,4,5,6)
- இயங்கும் (3)
190.7:3 ஒருமணிக் (1-6)
- தெழுமணி (3ல் பா.)
- எழுமணிக் (4ல் பா.)
191.1:3 இதுவென (1,2,3,5)
- இதுவென் (4,6)
191.2:1 நேர்சினை (1,2,4ல் பா.)
- நோன்சினை (3,4,5,6)
191.3:4 உள்ளா (1,2,4,6)
- உள்ள (3)
- உள்ளத் (5, 4ல் பா.)
- உள்ளாது (4ல் பா.)
191.7:3-4 என்குவம் மன்னே (1-3, 4ல் பா.)
- என்குவெம் மன்னே (4,5)
- என்குவெம் யாமே (6)
193.2:1 இட்டுவர்ச் (1,2,4ல் பா.)
- இட்டுவாய்ச் (3,4,5,6)
193.2:4 தட்டைப் (1,2)
- தேரை (3,4,5,6)
193.3:1-2 பறையின் (1,2)
- தட்டைப் பறையின் (3-6)
193.5:2 மன்னனெம் (1,3&4ல் பா.)
- மன்னனென்(2)
- மன்னெந் (3)
- மன்னெடும் (4,6)
- மன்னெம் (5, 4ல் பா.)
194.1:4 மின்னுவர (1,2,3,5,6)
- மின்னுபு (4)
- மின்னு (4ல் பா.)
194.2:1 வலனேர்பு (1,2,3,4ல் பா.)
- வானேர்பு (4,5,6)
- வானே (4ல் பா.)
- வரலே (4ல் பா.)
194.2:3 மென்தோடு (1,2,3,)
- ஒன்றோ (4,5,6)
194.4:3 இரண்டற்கென் (1-6)
- இரண்டற்கே (4ல் பா.)
200.1:4 தண்கலுழ் (1-6)
- தண்மகழ் (4ல் பா.)
200.2:1-2 மீமிசைச்சினை மிசைத் (1)
- மீமிசைச் சிரமிசைத் (2)
- நிலமிசை மீமிசை (3)
- மீமிசைத் தாஅய (4,6)
- மீமிசைத்தாஅய் (5)
- நிலமிசைத் தாஅய (4ல் பா.)
200.2:3-4 தாஅய் வீசுமந்து (1,2,3)
- வீஇ சுமந்து வந்து (4,6)
- வீசும் வந்து (4ல் பா.)
- வீசுமந்து (4ல் பா.)
- வீசும் வளி கலந்து (5, 4ல் பா.)
- வீழும் வீசுமந்து (4ல் பா.)
200.5:4 மாமறை (1,2,3,4ல் பா.)
- மாமழை (4,6)
- மாமலை (5)
200.6:3-4 உருமின் குரலும் (1,2,3, 4ல் பா.)
- உருமின முரலும் (4,5,6)
210.3:2 விளைந்த (1-6)
- விழைந்த (4ல் பா.)
210.4:1 ஒருகலத்து (1,2,3,4ல் பா.)
- எழுகலத்து (4,5,6)
210.5:4 செல்வற்கு (1,2,3,4ல் பா.)
- செல்லற்கு (4,5,6, 1&3ல் பா.
210.6:1 விருந்து வரக் (1-6)
- விரைந்து வரக் (1,2&4ல் பா.)
220.1:1 பழமழைக் (1-6)
- பழமழை (4ல் பா.)
220.2:4 பரவை (1,2,3)
- பாவை (4,5,6)
220.3:1 அருவிசேர் (1,2,3,4ல் பா.)
- இருவிசேர் (4,5,6)
220.4:3 பசுவீ (1,2,4,5,6)
-பருவீ (3,4ல் பா.)
221. 4:3 சென்னிச் (1,2,4,5,6)
- சென்னி (3, 4ல் பா.)
233.1:3 கல்வாய்ச் (1,2,3,5,4ல் பா.)
- அகல்வாய்ச் (4, 6)
233.2:2 ஔ¢வீ (1-6)
- பொன் வீ (1ல் பா.)
233.3:2 காரெதிர் (1,2,3,6)
- காரெதர் (4)
- கானெதிர் (4ல் பா.)
233.4:4 உயர்ந்தோர்க்கு (1,2,3,4,5,6)
- உணர்ந்தோர்க்கு (4ல் பா.)
233.6:1 வரைகொள (1,2,3,4ல் பா)
- வரைகோள் (4,5,6)
- வரைகொள் (4ல் பா.)
233.7:3 தந்தை (1,2,3,4,5,6)
- தடக்கை (1ல் பா.)
234.2:1 எல்லுறு (1,2,3,4ல் பா.,5,6)
- எல்லறு (4)
- எல்லிறு (4ல் பா.)
240.2:4 பன்மலர் (1-6)
- பணைமலர் (4ல் பா.)
240.3:1 வெருக்குப்பல் (1,2,3,4,5,6)
- வெருகுப்பல் (3&4ல் பா.)
240.3:4 கஞலி (1,2,3,5,6, 4ல் பா.)
- கஞல (4)
240.4:4 நோய்பொரக் (1,2,3,4,5,6)
- நோயோர்க் (4ல். பா.)
240.6:3 தோன்றி (1,2,4,5,6, 3ல் பா.)
- தோற்றி (3, 4ல் பா.)
242.1:1-2 கானங்கோழி (1,2,3,4,5,6)
- கானக்கோழிக் (4ல்.பா.)
242.2:1 ஒண்பொறி (1,3,4,5,6)
- நுண்பொறி (2, 1&4ல் பா.)
- ஒண்பொரி (4ல் பா.)
242.5:3 செல்லினும் (1,2,4ல் பா.)
- செலினும் (3,4,5,6)
242.6:1 சேர்ந்துவரல் (1,3,4ல் பா.)
- சேந்து வரல் (2,4,5,6)
- சேர்ந்து வர (3ல் பா.)
242.6:2 அறியாது (1,2,3,4,5,6)
- அரியது (1&2ல் பா.)
242.6:3 செம்மற் (1,2,4ல் பா.)
- செம்ம (3,4,5,6)
- செம்மறேர் (1ல் பா.)
251.1:1 மடவ (1,2,3,4,5,6)
- மடவரல் (4ல் பா.)
251.1:4 யாயினம் (1,2,6)
- மாயினம் (3,4,5)
251.2:1 கால (1,2,3,4,5,6)
- காலை (4ல் பா.)
251.3:1 ஆலலும் (1,2,4,5,6)
- ஆலும் (3, 3&4ல் பா.)
251.4:2 இகுளை (1,3,4,5,6,2ல் பா.)
- உகுவளை (2)
251.7:1 நொதுமலர் (1, 2&3&4ல் பா.)
- நொதுமல் (2,3,4,5,6)
270.2:1 வீழுறை (1,2,3,4,5,6)
- வீழ்முறை (4ல் பா.)
270.2:4 ஊழியின் (1,2,3,4ல் பா.,5,6)
- ஊழின் (4, 3ல் பா.)
270.3:1 கடிப்பிடு (1,2,3,4ல் பா.)
- கடிப்பிகு (4,5,6,3ல் பா.)
270.4:1 பெய்தினி (1,2,3,4,6)
- பெய்கினி (5, 4ல் பா.)
- பெய்யினி (4ல் பா.)
270.4:3 பெருமான் (1)
- பெருவான் (2,3,4,5,6)
270.5:4 உள்ளமொடு (1,2,3,5,6)
- உள்ளமொடு (4)
270.6:2-3 மேவலமாகிக் (1,2&4ல் பா.)
- மேவினமாகி (2,3)
- மேவினமாகிக் (4,5,6)
- மேவலமாகி (3ல் பா.)
275.1:3 கல்லுயர்பு (1,2,3,5,6, 4ல் பா.)
- கல்லுயர் (4)
275.4:1 புல்லூர் (1,6, 4ல் பா.)
- புல்லார் (2,3,4,5, 1ல் பா.)
275.4:3 பூமணி (1,2,3,6,4ல் பா.)
- பூண்மணி (4)
279.3:3 இயம்புதொறு (1,3)
- இயம்புதோறு (2)
- இயங்குதொறு (4,5,6)
279.5:1-2 மழைகெழு மறைந்த (1,2,3,4ல் பா.)
- மழைகழூஉமறந்த (4,5)
- மழைகெழூ மறந்த (6)
279.7:1 இரும்கல் (1,2,3,4,5,6)
- அரும்பல் (4ல் பா.)
279. 7:3 போக்கித் (1,2,4ல் பா.)
- போகித் (3,4,5,6)
287.3:1 முந்நாள் (1,2,3,5,6,4ல் பா.)
- முந்நால் (4)
- முந்நாட்டிங்கள் (3ல் பா.)
287.8:3 எழுதரும் (1)
- ஏர்தரு (2,3,4,5,6)
289.1:3 வழிவழி (1,2,3,4ல் பா.)
- வழிவழிப் (4,5,6)
289.4:1-2 உழையானமையின் (1,2)
- உழையரன்மையின் (3,4,5)
- உழையர் அன்மையின் (6)
289.6:4 கண்ணம் (1,3,4ல் பா.)
- கண்ணேம் (2)
- கண்ணும் (4,5,6)
314.2:4 இமைப்பப் (1,2,3,4,5,6)
- இழைப்பப் (4ல் பா.)
314.3:1-2 பெயரும் இருளிய (1,2,3,4ல் பா.)
- பெயல்தாழ்பிருளிய (4,5,6)
314.5:1-2 மின்னுறழ் இளமுலை (1,2,3)
- இன்னுறல் இளமுலை (5)
- மின்னுறல் இளமுலை (4ல் பா.)
- மின்னும் இளமுலை (4ல் பா.)
- மின்னுறழ் இழைமுலை (6)
314.6:3 சுரனிறந் (1,2,3,4,5,6)
- சுரமிறந் (4ல் பா.)
319.3:4 பொருந்தி (1,2,3,4,5,6)
- பொருந்திய (4ல் பா.)
319.4:1 அமையணி (1,2,3,6)
- மையணி (4,5)
319.5:4 மாமழை (1,2,3,4,5,6)
- மாழைப் (4ல் பா.)
319.6:3 நன்னலம் (1,2,3,4,5,6)
- நன்னிறம் (4, 3ல் பா.)
323.3:2 எடுஞ்சுவர் (1,2, 4ல் பா.)
- எழுஞ்சுவர் (3,4)
- அஞ்சுவர (5,6, 4ல் பா.)
323.6:2 தோளிணைத் (1,3,4,2ல் பா.)
- தோளணைத் (2,5,6, 4ல் பா.)
323.7:3 வாழும் (1,3,4,5,6)
- வாழ்ந்த (2)
344.2:2 திவலைப் (1,2)
- துவலைப் (3,4,5,6)
- திவலை (4ல் பா.)
344.3:1-2 புலம்பயிர் அருந்த (1,3,4,5,6)
- புலம்பயிர் அருந்தி (2)
344.3:4 ஏறொடு (1,2,3)
- ஏற்றொடு (4,6)
- நல்ஏறொடு (4ல் பா.)
344.5:1-2 பார்வார் குழவி (1,2,3,4ல் பா.)
- பால்வார்புகுழவி (4,6)
344.5:3-4 யாளின் நிரையிறந்து (1,2,4ல் பா.)
- யானின் நிரையிறந்து (2, 4ல் பா.)
- ஆளினிரை (2ல் பா.)
- யான் நிறையிறந்து (4ல் பா.)
- யாநாள் நிரையிறந்து (4ல் பா.)
- உள்ளிநிரையிறந்து (4,5,6)
358.1:3 விம்ம (1, 4ல் பா.)
- விம்மி (2,3,4,5,6)
358.2:2-3 பேதுறல்ஆய்கோடு (1,2,4,5,6)
- பேதுறல்யாங்கோடு (3, 4ல் பா.)
- பேதுறவாய்கோடு (4ல் பா.)
358.3:1 வாய (1,2,3,6,4ல் பா.)
- சுவர்வாய் (4)
- சுவர்வாஅய (4ல் பா.)
358.3:3 படர்தெண் (1,2)
- படர்சேண் (3,4,5,6)
358.6:2 கோவலர்க் (1,2,3)
- கோவலர் (4,5,6)
358.7:1 சொல்லு (1,2,3,4ல் பா.)
- சொல்லுப (4,5)
- சொல்லுவ (6, 4ல் பா.)
358.7:3 முல்லைமென் (1,2,4)
- முல்லைவெண் (3,5,6)
382.1:1-2 கண்டுழிக் கொற்றம் (1,2,3)
- தண்துளிக்கேற்ற (4,5,6)
- கண்டிசின்தோழி (4ல் பா.)
382.2:1 முகைத்தலை (1,2,3,4ல் பா.)
- முகைதலை (4,5,6)
382.3:1 பூமலர் (1,2,3,4ல் பா.)
- பூமலி (4,5,6)
- பூமலர்பு (4ல் பா.)
382.3:3-4 தேங்கமழ் பூக்கால் (1,2)
- தேங்கமழ் புகஞல (3,4,5,6)
382.4:1-2 வம்பும் பெய்யுமார் (1,2,3,6)
- வம்புப் பெய்யுமால் (4)
- வம்பம் பெய்யுமார் (4ல் பா.)
382.4:4 வம்பழன்று (1)
- வம்பன்று (2,3,4,5,6)
387.2:4 மாலை (1,2,3,5,6,4ல் பா.)
- மாலையும் (4)
387.3:1 உயிரை வரம்பு (1,2,4ல் பா.)
- உயிர்வரம்பு (3,5,6)
- இரவரம்பு (4)
- நிறைவரம்பு (4ல் பா.)
387.5:2 வௌ¢ளம் (1,2,3,4,5,6)
- வௌ¢ளக் (4ல் பா.)
391.1:3 உழாஅது (1,2,3,5,6,4ல் பா.)
- உழாது (4)
391.3:4 யவிந்து (1,2,3,4ல் பா.)
- யவிய (4,5)
- அவிய (6)
391.5:3 தழீஇப் (1,2,3,4,5,6)
- தழீஇயப் (4ல் பா.)
391.6:1 கையறப் (1,2,3)
- கையற (4,5,6)
391.9:1 கூஉம் (1,2,3,4,5,6)
- கூவும் (4ல் பா.)
400.1:2 செல்லாம் (1,2,3,4,5,6)
- செல்வாம் (4ல் பா.)
400.2:1 கனைஇக் (1,2,3)
- களைகலம் (4,5,6)
- களைக (4ல் பா.)
- கனைக (4ல் பா.)
- கனைஇ (4ல் பா.)
400.4:1 களரிக் (1,2,3,6)
- கரம்பைப் (4,5)
- களரிக் கரம்பை (4ல் பா.)
400.5:1 கரம்பை (1,2,3,6)
- புதுவழிப் (4,5)
400.6:4 தேரேர் (1,2)
- தேரே (3)
- தேரோ (4,5,6)
மீட்டுருவாக்கம்
மேற்காணும் குறுந்தொகை முல்லைத்திணைப் பாடவேறுபாடுகள் அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்தல் என்பது பெரும்பணி. எனவே, சில மட்டும் இங்குச் சுட்டப்படுகிறது.
“எழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்” (குறுந்.24.4)
என்னும் தொடரில் ‘எழுகளிறு’ என்பது ‘எழுகுளிறு’ என்று உ.வே. சாமிநாதையர் பாடம் கொண்டு ‘எழுகளிறு’ என்பதைப் பாடவேறுபாடாகக் காட்டியுள்ளார். சௌரிபெருமாள் அரங்கனார் ‘எழுகளிறு’ என்பதற்கு உரை கூறும் முகத்தான் ‘எழுகின்ற களிறு’ என்றும், கலாநிலைய உரைகாரர் இராமரத்ந ஐயர் ‘எழுகின்ற களிறு’ என்பதையே பாடமாகக் கொண்டு ‘ஆற்று நீராடி எழுந்த ஆண்யானை’ என்று உரை வரைந்துள்ளார். இத்தொடர் இடம்பெற்ற பாடல் பின்வருமாறு:
“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லொ
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.” (குறுந்.24)
“கரிய அடிமரத்தை உடைய வேப்ப மரத்தினது ஔ¢ளியவான பூக்களாகிய புது வருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் வந்தே செல்லுவதோ? கொடியோர்களாகிய அலர் தூற்றும் மகளிருடைய நாக்கள், என்னுடைய காதலர் என்னை விட்டு நீங்கிச் செல்லவும் ஆற்றின் அருகே கரைக்கண் முளைத்து வளர்ந்த வெண்ணிறமான கொம்புகளையுடைய அத்திமரத்தினது எழுந்து வருகின்ற ஆண்யானையின் காலால் மிதித்து உழக்கப்பெற்ற ஒற்றைப்பழம் குழைவது போலக் குழைந்து நான் வருந்தும்படி அலர் கூறிக் கல்லென்ற ஆரவாரத்துடன் முழங்கின” என்பதாக இப்பாடலின் பொருளை மு. சண்முகம்பிள்ளை (பக்.28)இல் குறிப்பிட்டுள்ளார்.
உ.வே. சாமிநாதையர் ‘எழுகளிறு’ என்பதை ‘எழுகுளிறு’ என்கின்றார். குளிறு என்றால் நண்டு. எழு என்பதை ஏழு எனப் பொருள் கொண்டு ஏழு நண்டுகள் மிதிக்கப்பட்ட அத்திப்பழம் குழைவது போல, தலைவி வருந்தினள் என்பதாகப் பொருள் உணர்த்துகின்றார். மேலும், அவர் தம்முடைய விரிவுரையில் “அத்திப்பழம் மென்மையுடையதாதலின் நண்டுகள் மிதில்லலாற் குழைவதாயிற்று; இங்ஙனம் குழைகின்ற பொருளுக்கு அத்திப் பழத்தை உவமை கூறுதல், “அதம்பழத்துருவுசெய்தா ரவளிவ ணல்லூ ராரே” (திருநா. தேவாரம்) என்பதனாலும் விளங்கும். ஒன்றுக்கு ஏழு கூறுவது மரபு. இங்கே ஏழென்பது பலவென்பதைக் குறிக்க நின்றதொரு வாய்பாடு; ‘ஏழென்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, ஒருவர் கூறை யெழுவ ருடுத்தென்றாற் போல’ (குறள்.1269, பரிமேல்.); இவ்வாய்பாடுகளை அநந்தவாசி என்று கூறுவர் தக்கயாகப் பரணி யுரையாசிரியர்” (பக்.64) என்கின்றார்.
இவ்வுரையாசிரியர்களின் கருத்துக்களை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது, ஒன்று தெளிவாகத் தெரிகிறது. உ.வே.சாமிநாதையர் ‘குளிறு’ என்று பாடங்கொண்டு உரை வரைந்துள்ளார். ஏனையோர் ‘களிறு’ என்று பாடங்கொண்டு உரை வரைந்துள்ளனர். இங்கு நமக்குத் தெளியவேண்டிய பாடம் ‘களிறு’ அல்லது ‘குளிறு’ மற்றும் ‘எழு’ அல்லது ‘ஏழு’.
இங்குப் பாடத்தைத் தீர்மானம் செய்வதற்குச் சில நடைமுறைகளைச் சிந்திக்க வேண்டியதாகிறது. இரு வேறு உரைகளிலும் அத்திப்பழம் குழைவது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். குழைதல் என்பது “கலங்குதல், வளைதல்” என்றும், குழைத்தல் என்பது “இளகுவித்தல், தளிர்த்தல்” என்றும் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ்மொழி அகராதி (பக்.502) குறிப்பிடுகிறது. ஒன்று இன்னொன்றோடு நெகிழ்ந்து கலத்தலை இச்சொல் உணர்த்துகிறது எனலாம். யானை அத்திப்பழத்தை மிதிக்கின் பழம் குழையுமா? நசுங்குமா? என்று எண்ணிப் பார்க்கும் போது வலிமை கொண்ட யானை அத்திப் பழத்தை தன் காலால் மிதிபடும் போது மெருதுவாய் உள்ள அத்திப்பழமானது யானையின் பாதம் பட்ட இடத்தில் இருந்த இடம் தெரியாமலே போய்விடும். அதுவும் போர்க்குணம் கொண்ட ஆண்யானை மிதித்தல் என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால் இக்கூற்று முற்றும் பொருந்துவதாகத் தெரியவில்லை. அதனால் யானை மிதித்து மென்மையான அத்திப்பழம் குழைந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மென்மையான அத்திப்பழத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நண்டுகள் கடற்கரையில் உருட்டிச் செல்லும் போது மென்மையான அத்திப்பழத்தின் உண்மை நிலையில் சற்று மாற்றம் ஏற்படும். இளகலாம், வளையலாம், தளிர்வடையலாம். ஆகவே, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் கொண்ட ‘குளிறு’ என்ற பாடத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தம்.
“ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” (குறள்.1269)
என்னும் குறளுக்குப் பரிமேலழகர், “சேணிடைச் சென்ற தம்காதலர் மீண்டு வரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்குஒருநாள் பலநாள் போல நெடிதாகக் காட்டும்.
ஏழென்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, “ஒருவர் கூறை எழுவர் உடுத்து” என்றாற்போல தலைமகள் வருத்தம் பிறர் மேலிட்டுக் கூறியவாறு. இதனால் இதுவும் தலைமகள் கூற்றாகாமை யறிக. இருநாளென்று பாடமோதுவாருமுளர்” என்கின்றார். இங்கு ‘எழு’ என்பது ‘ஏழு’ என்று கொண்டால் ஏழு நண்டுகள் மென்மையான அத்திப்பழத்தை உருட்டிச் செல்லும் போது குழைந்தது என்று கொள்ள நேரிடுகிறது.
இக்கூற்றைத் தலைவியின் நிலையில் வைத்துப் பார்க்கும் போது, தலைவன் பிரிவு நேர்ந்த வழி தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவியின் உள்ளம் எத்தன்மையதாக இருக்கிறது என்பதை தலைவி கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவனின் பிரிவை ஊரார் பலவாறாக ஏசுவதை கேட்ட தலைவி, தன்னுடைய மனம் எவ்வாறு இருக்கிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. ஆண்யானையின் காலால் மிதிப்பட்ட பழம் எவ்வாறு ஆகியிருக்குமோ அவ்வாறு நான் இருக்கிறேன் என்று பொருள் கொண்டால் யானையால் மிதிபட்டிருந்தாள் அவள் உயிருடன் இருந்திருக்கமாட்டாள். அவள் இச்செய்தியைக் கூறுவதற்கும் வழியில்லை. எனவே, ஏழு நண்டுகள் மென்மையான அத்திப்பழத்தை உருட்டிச் செல்லும் போது வளைந்து நெகிழ்வதைப் போல மென்மை மனம் கொண்ட தலைவியின் உள்ளம் ஊரார் ஏசும் போது வளைந்து நெகிழ்வதை உணர்த்துவதாகக் கொள்ளவேண்டும். எனவே, எழுகுளிறு, ஏழுகுளிறு என்கின்ற பாடமே முற்றிலும் சரி.
இவ்வாறாக குறுந்தொகை முல்லைத்திணைப் பாடல்களில் காணப்படக் கூடிய பாடவேறுபாடுகளை வாழ்க்கையின் உண்மைத் தன்மையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் பாட மீட்டுருவாக்கம் செய்யலாம். இப்பணி தொடர் பணியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக