உதயத்தூர் புலைமாடத்தி வரத்து
நாட்டுப்புற இலக்கியங்கள் பெரும்பான்மை இன்னும் அச்சேறாத நி¬லாயில் இருத்தலைக் காண்கிறோம். இந்நிலையில் 'உதயத்தூர் புலைமாடத்தி வரத்து' என்னும் நாட்டுப்புறக் கதையும் ஒன்று. இக்கதை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகத்தில் (சுவடி எண்.1848) பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய இக்கதையை அறிமுகப்படுத்தும் வகையானும் அதில் உள்ள சிறப்புக் கூறுகளை ஆயும் முகத்தானும் இவ்வாய்வு அமைக்கப்பெற்றுள்ளது.
உதயத்தூர் புலைமாடத்தி வரத்து என்னும் இக்கதை புலைமாடத்தி வரவழைத்த பேய்ப்படைகள் விசையாபதி குமாரர்கள் அரசோச்சிக் கொண்டிருந்த உதயத்தூர் நாட்டை எவ்வாறெல்லாம் பாழ்படுத்தின என்பதைச் சுட்டுகிறது.
சுவடி அமைப்பு
ஒன்பது ஏடுகள் - பதினெட்டுப் பக்கங்களைக் கொண்ட இச்சுவடி 41செ.மீ. நீளமும், 2,5செ.மீ. அகலமும் கொண்டது. ஒவ்வொரு பக்கமும் மூன்று பத்திகளைக் கொண்டு பத்திக்கு ஏழு வரிகளைக் கொண்டுள்ளது. நாட்டுப்பாடல் அமைப்பைக் கொண்ட இக்கதை 257 அளவடியினைக் கொண்டுள்ளது. இக்கதையின் ஆசிரியர் இன்னரென்று தெரியவில்லை.
பாடலமைப்பு
இந்நூற்பாடல் ஆசிரியப் பாவினைப் போல அளவடியினதாய்க் கதைப் போக்கிற்கு ஏற்பத் தொடர்ந்து செல்லும் நீண்ட பாடலாய் (257 அடிகள் கொண்டதாய்) அமைகிறது. ஆசிரியர், கதையைக் கேள்வியும் பதிலுமாய்ச் சொல்லிச் செல்கின்றார். வழக்குச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் அதிகமாகக் கலக்காமல் முடிந்த மட்டும் இலக்கிய வழக்குச் சொற்களையே பயன்படுத்தியுள்ளார். எதுகையோ மோனையோ பெற்றிருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனை - அதாவது முதல் சீரும் மூன்றாம் சீரும் ஓசை ஒத்துவரும் தன்மை காணப்படுவது இப்பாடல் அமைப்பின் சிறப்பம்சம் ஆகும். தட்டுத் தடுமாறாமல் ஆற்றொழுக்காகச் செல்லும் இப்பாடலின் போக்குப் படிப்போருக்கு மேலும் மேலும் சுவை இன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது.
கதை
பாண்டிய நாட்டில் உதயத்தூர் என்னும் ஊரில் கரையர்கள் என்னும் பிரிவினர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் செல்வாக்கில்லாமலும் சிலர் செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் விசையாபதி என்பவரின் குமாரர்களும் விசையாபதி குமாரர்களின் சிற்றன்னைக் குமாரர்களும் அடங்குவர்.
இவ்விரு குமாரர்களுக்குமிடையே நீண்ட நாளாகப் பகை இருந்து வந்தது. இப்பகை உணர்வை நீக்கிச் சமாதானம் செய்ய முற்பட்ட போது சிற்றன்னைக் குமாரர்களாகிய கரையர்கள் அதை எதிர்த்தார்கள். விசையாபதிக் குமாரர்கள் தங்களை அழித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் எல்லாக் கரையாளர்களும் ஒன்றுகூடி, நம்மில் யாராவது ஒருவர் மந்திரவாதம் தெரிந்திருந்தாலொழிய இங்கு நாம் இவர்களிடையே வாழ்தல் கடினம் என்ற முடிவுக்கு வருகின்றனர். மலையாளம் சென்று மந்திரவாதம் படிப்பதற்குத் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஒருநாள் நடு இரவில் கூடிக் கூனப்பிறவி கரையாளனைத் தேர்ந்தெடுத்தனர். அவனுடைய செலவுக்கு ஆயிரத்தெட்டுப் பணமும் கொடுத்து வழி அனுப்பினர்.
கூனப்பிறவி கரையாளன் தன்னுடைய வயதான தாயிடம் விடைபெற்றுக்கொண்டு, வழியில் தங்குவதற்கும் சமைத்து உண்பதற்கும் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு, மலையாள நாட்டில் காக்காச்சி மலையில் இருக்கும் காழிப்புலையனிடம் மந்திரவாதம் படிக்கவேண்டும் என்று திட்டமிட்டவனாய்ப் புறப்படுகிறான். வழியில் செங்கோடியில் வாழுகின்ற ஐயனாரைத் தொழுது கொண்டவன் பிராமணக்குடி அகரம், பிள்ளையார் கோவில், கல்லோடை, காட்டூரணி, ஆனைக்கால் ஓடை, பரமேசுபுரம், மங்கம்மா சாலை, முப்பந்தரம், ஆரல்வாய்மொழி, தோவாளை, வௌ¢ளமடம், ஒழுகினசேரி, வடசேரி, பார்வதி அகரம், சுங்காங்கடை, வில்லுக்குறி, தக்கலை, குளித்துறை ஆறு, நெய்யாறு, கரமனையாறு, சாலைக்கடை பாதை போன்ற ஊர்களின் ஆறுகளின் வழியாகச் சென்று திருவனந்தபுரம் பத்மநாதரைத் தொழுதுகொண்டு காக்காச்சி மலையில் இருக்கக்கூடிய காழிப்புலையன் வீட்டருகே வந்தடைகிறான் கூனப்பிறவி கரையாளன்.
காக்காச்சி மலையில் குடியிருக்கும் காழிப்புலையனும் அவனுடைய புலைச்சியும் மக்களோடு வாழ்ந்து வந்தனர். ஒருநாள் வௌ¢ளிக்கிழமை காலையில் விரதம் இருப்பதற்காகத் தண்ணீர் எடுத்துவரும் வேளையில், புலைச்சி தன் வீட்டருகே கரையாளன் நின்றிருப்பதைக் கண்டு வினவ, கரையாளன் நான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன். எனக்குத் தாய், தந்தை, காப்பாளர் எவரும் இல்லாத வளர்ப்பார்க்குப் பிள்ளை என்றான். இதுகேட்டு புலைச்சி அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தன் இல்லாளனிடம் அறிமுகப்படுத்துகிறாள்.
கரையாளன், தனக்கு அடைக்கலம் தரவேண்டும் என வினவுகின்றான். தானொரு கீழ்ச்சாதி என்பதை உணர்ந்த காழிப்புலையன் தயங்கி, 'நீர் அடைக்கலம் தேடி வந்தது உண்மையானால் எங்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவை நாம் இரண்டு பேரும் ஒரே தட்டில் உண்ண வேண்டும்' என்கின்றான். அதற்குக் கரையாளனும் இசையவே, புலைச்சி சமைத்துக் கொண்டு வந்த உணவைக் கரையாளன் பிசைந்து உண்ணும் போது மனம் பொருக்காத காழிப்புலையன் தடுத்து, தனியாக அரிசி பானை கொடுத்து சமைத்து உண்ணச் சொல்கிறான். பிறகு கரையாளன் அவர்கள் வீட்டிலேயே அவர்கள் பிள்ளைபோல் இருந்து தான் கொண்டு வந்த ஆயிரத்தெட்டுப் பணத்தைக் காழிப்புலையனிடம் கொடுத்துவிட்டு மல்லடவு, சிலம்புத்தொழில், நோக்கும் வித்தை, குறளிவித்தை, மோகனம், வசிகரம், மாரணம், தம்பனம் போன்ற வித்தைகளை எல்லாம் கற்றுக்கொள்கிறான்.
ஒருநாள் காழிப்புலையன் வாழைத் தோட்டக் காவலுக்குச் செல்கிறான். அப்போது புலைச்சியும் வீட்டில் இல்லை. இந்த நேரம் பார்த்து கரையாளன், காழிப்புலையன் வீட்டில் இருந்த மை, செப்பேடு, மந்திர ஏடு, ஈரக்குழல், கொம்பரக்கு மெழு போன்வற்றை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு புறப்படுகிறான். காக்காச்சி மலையும் முத்துக்குளி வயலும் கடந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தபோது, கரையாளன் வீட்டில் இல்லாததைக் கண்ட காழிப் புலையன் கோபம் கொண்டு, கரையாளனை அழிக்கப் புலைமாட சுவாமியை வேண்டி ஓமம் வளர்க்கின்றான்.
பலி கொடுக்காது ஓமம் வளர்த்த காழிப்புலையன் எதிரே புலைமாட சுவாமி தோன்றவில்லை. புலைமாட சுவாமி மீது அதிகக் கோபங்கொண்டு பொருமினான் காழிப்புலையன். அப்போது புலைமாட சுவாமி இருமாப்புடன் எழுந்து புலையனை செவியடி அடித்து பலிகொண்டார். இந்த வேளையில் புலைச்சி புலையனைத் தேடி வரும்போது புலைமாட சுவாமி கரும்பூனை வடிவு கொண்டு புலைச்சி வரும் பாதையில் குறுக்கே பாய்கின்றார். கரும்பூனை குறுக்கே பாய்வது கணவனுக்கு ஆகாதென்று உணர்ந்த புலைச்சி ஓமக் குழியருகே விரைவாக வருகிறாள். அங்குத் தன் கணவன் பலியுண்டு கிடப்பதைக் கண்டு அலருகிறாள். பின் சோதிடக் காரியை வரவழைத்துச் சொற்பொருத்தம் பார்க்கின்றாள். அவளோ, 'உன்னுடைய மருமகளை ஓமக்குழியருகே நரபலி கொடுப்பாயானால் உன்னுடைய கணவன் உயிர்தெழுவான்' என்கிறாள். சோதிடக்காரியின் சொற்படியே தன்னுடைய ஏழு மாத கர்ப்பிணி மருமகளைச் சம்பங்கி எண்ணை தேய்த்து, தலைமுழுகி, மஞ்சள் பூசி, கண்டாங்கி சேலைகட்டி, அழகுபடுத்தி, சிவிகையில் ஏற்றி ஓமக்குழியருகே கொண்டு வந்து சிங்கவாழை இலையைத் தென்வடக்காய்ப் பரப்பி வௌ¢ளி கத்தி கொண்டு நரபலி கொடுக்கிறாள். புலைமாட சுவாமி நரபலியை ஏற்றுப் புலையனை உயிர்ப்பிக்கின்றார்.
ஓமத்தில் சுடலையாண்டி, சுடலைப்பேச்சி, வன்னியன், வண்ணாரமாடன், காடோடிமாடன், கழுவடிமாடன், பலவேசக்காரன், பூதத்தான், சிவனஞ்சத்தக்க வடிவுடைய பெருமாளும் என இப்படிப் பேய்ப்படைகள் சத்தம் போட்டுத் தோன்றி 'எங்களை ஏன் அழைத்தாய் புலையா' என்றன. 'என் வாழ்வையெல்லாம் கூனப்பிறவி கரையாளன் கொண்டு போய்விட்டான். அவனைத் தாங்கள் கொண்டு வரவேண்டும்' என்கிறான் காழிப்புலையன். புலையன் சொற்கேட்ட பேய்ப்படைகள் கரையாளன் இருக்கும் திசை நோக்கிப் புறப்பட்டன.
இதற்குள், கரையாளன் திருவனந்தபுரத்தைவிட்டு கரமனை, நெய்யாறு, குளித்துறையாறு இவைகளைக் கடந்து தக்கலை, தோட்டியோட்டிமடம், சுங்காங்கடை, பார்வதி அகரம், வடசேரி வழியாகப் போய்க்கொண்டு இருக்கும் போது பேய்ப்படைகள் வருவதைக் காண்கிறான். மந்திரத் தன்மையால் இப்பேய்ப்படைகளை அடக்கவேண்டும் என்று மந்திரத்தை உச்சரித்துத் தன்னுடைய சுண்டுவிரலை பலி கொடுக்கிறான். பலி கொடுத்ததும் பேய்ப்படைகள் எல்லாம் கட்டுப்பட்டு மூங்கில் குழலுக்குள் அடைபட்டன. கொம்பரக்குமெழுகு கொண்டு குழலை அடைத்துவிட்டுப் பின் ஒழுகினசேரி, வௌ¢ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, பரமேசுபுரம், ஆனைக்கால், காட்டூரணி, கல்லோடை, பிள்ளையார் கோவில், பிராமணர் அகரம், அண்ணாவி சந்து போன்ற ஊர்களின் தெருக்களின் வழியாக வந்து தன்னாடு சேர்ந்தான்.
ஒரு கிணற்றின் கரையில், அங்கு வைக்கப்பட்டிருந்த தொட்டியின் கீழே மூங்கில் குழலைப் புதைத்து வைத்துவிட்டுப் போனான் கூனப்பிறவி கரையாளன். அதன் பிறகு கரையர்கள் பகையோர் தாக்கம் இல்லாமல் ஒரு தலைமுறைக் காலம் வாழ்ந்து வந்தனர்.
பின்னொரு நாள் மாடொன்று தொட்டியை உருட்டவும் மூங்கிலின் மீது கால் தடுக்கவும் - மூங்கில் உடைந்து மூங்கிலின் உள்ளே அடைபட்டுக்கிடந்த பேய்ப்படைகள் மேலே புறப்பட்டு உதயத்தூர் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங் குழந்தைகள், தாய்மார்கள் என்று வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் வறுத்திக் கொண்டு, உயிரை எடுத்துக்கொண்டு ஆரவாரம் போட்டன. இதனைக் கண்ட கரையர்கள் ஏதோ தெய்வக் குற்றம் வந்துவிட்டது என்று எண்ணி சோதிடக்காரியை வரவழைத்துச் சொற்பொருத்தம் பார்க்கிறார்கள். சோதிடக்காரியோ, 'போன தலைமுறையில் கூனப்பிறவி கரையாளன் கொண்டு வந்த கர்மம். இதற்குக் குடைகொடுத்தால் வந்த வினை தீரும்' என்கிறாள். அதன்படியே தக்கதொரு நாளில் பொருத்தமான இடத்தில் கரையர்கள் எல்லோரும் ஒன்று கூடி பேய்ப்படைகளுக்குக் குடை கொடுக்கிறார்கள். அதன் பின் எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்பமுடன் வாழ்கிறார்கள்.
கருத்து மாற்றம் சுட்டும் வகை
புதுப்புது கருத்துகளுக்கு ஏற்பத் தனித்தனி பத்தி அமைத்து உரைநடையில் எழுதுவது போல இந்நெடும் பாடலில் பொருள் மாற்ற நிலைகளைச் சொற்களைக் கொண்டே பிரித்துக் காட்டும் பாங்கினைக் காணலாம். இருக்கையிலே, வேளையிலே போன்ற சொல்லமைப்பு இதனை உணர்த்துவனவாக இருக்கின்றன.
நாட்டுப்புறக் கூறுகள்
எந்தவொரு கதையாயினும் அதற்கெனச் சில தனிக் கூறுகள் இடம்பெற்றிருத்தல் வேண்டும். தனி கூறுகளின் தன்மையினைக் கொண்டு கதை, நாட்டுப்புறச் சூழலைச் சுட்டுகிறதா? நகர்ப்புறச் சூழலைச் சுட்டுகிறதா? எந்த இடச் சூழலைச் சுட்டுகிறது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தருவனவாக அமைந்திருத்தல் வேண்டும். இக்கதையில் சில நாட்டுப்புறக் கூறுகள் அமைந்திருக்கின்றன. அவைகள் இறைநம்பிக்கை, சோதிட நம்பிக்கை, மந்திரத்தன்மை, அடைக்கலத்தன்மை, சகுனம் காணல், வட்டார வழக்குகள், வட்டார வழக்குச் சொற்கள் என்றவாறு அமைந்திருக்கின்றன.
அ, இறைநம்பிக்கை
தொன்றுதொட்டு பெரும்பாலான மக்களிடத்து இறைநம்பிக்கை இருத்தல், இருந்து வருதல் கண்கூடு. இறைநம்பிக்கை என்பது, கண்மூடித்தனமாக மூடச் செயல்களைச் சுட்டுவதில்லை. ஒரு செயலைச் செய்யும்போது தன்னினும் மேலான ஒரு சக்திக்குள் மனதை உட்படுத்தி வணங்கி முழுமனதுடன் தெளிவான நேர்மையான செயலைச் செய்வதையே சுட்டும். அதாவது தன்நம்பிக்கையே இறைநம்பிக்கையாக பரிணமிக்கிறது. இறைநம்பிக்கை செயலுக்கு வழி காட்டுமே அல்லாமல் செயலைச் செய்வதில்லை. ஒருவனுடைய மனம் தூய்மை பெறுதலை அவன் தெய்வத்தின் பாற்கொண்ட பக்தி, நம்பிக்கை எனலாம். இக்கதையின் நாயகன் கூனப்பிறவி கரையாளன், சிறந்த இறைநெறி, இறைபக்தி கொண்டவனென்பது அவன் செயல்களிலிருந்து புலப்படுகிறது. மலையாள நாட்டில் மந்திரவாதம் படிப்பதற்குப் போகுமுன்,
"தன்னுடைய வீடுவிட்டு தலைவாசல் தனைக்கடந்து
செங்கோடிவாழ் ஐய(னா)ரையும் சிறப்புடனே அடிதொழுது"
செல்கின்றான். போகும் வழியில்,
"பூதிவிடங்கன் ஐயனாரை புதுமையுடன் தொழுதுகொண்டு"
தமிழக எல்லையைக் கடந்து மலையாள நாட்டில் திருவனந்தபுரத்தை அடைகின்றான். அங்கிருந்து தான் செல்ல வேண்டிய காக்காச்சி மலைக்குப் போகும் முன்,
"திருவனந்த புரத்திலே ஸ்ரீபத்மநாதரையும் அதொழுது"
செல்கின்றான். இந்த நிலைகளைப் பார்க்கும்போது இறைவன் எங்கெல்லாம் குடிகொண்டுள்ளானோ அங்கெல்லாம் வணங்கிச் செல்வதும் புறப்பட்டவிடத்தும் சென்றடைந்தவிடத்தும் பயணத்தை மேற்கொள்ளும் போதும் பயணத்தை முடிக்கும் போதும் இறையடி தொழுது நிற்றலும் கரையாளனின் இறைநெறியைச் சுட்டிக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
இடுக்கண் வரும்போது குலதெய்வத்தை வழிபட்டுச் செயல்படும் பாங்கும் இக்கதையில் வெளிப்படுகிறது. மலையாள நாட்டைவிட்டு தன்னாடு நோக்கிச் செல்லும் வழியில் - வடசேரியில் தனக்குக் கொடுமைகள் - இன்னல்கள் நேர இருப்பதைக் கண்டு கரையாளன்,
"செங்கோடிவாழ் ஐயனாரை சிறப்பாக அடிதொழுது"
தன்னைக் காத்துக்கொள்ளும் மந்திரத்தையும் சொல்லிக் காப்பிட்டுக்கொள்கிறான். தான் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடிய இறைவனை அடிதொழாமல் - தான் இருக்கும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை அடிதொழாமல் தன்னுடைய ஊர் எல்லையில் இருக்கக் கூடிய இறைவனை அடிதொழுவதைக் காணும்போது அவ்விறைவன், கரையாளனின் குலதெய்வமாகவோ அல்லது அவனூர் எல்லைக் காவல் தெய்வமாகவோ இருந்திருத்தல் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
ஆ. சோதிட நம்பிக்கை
உலகம் அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சி கண்டிருந்தும் இன்றும் பெரும்பாலான மக்கள் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நற்செயலைச் செய்ய முற்படும் போது பெரும்பாலானோர் தன்னுடைய - தன் குடும்பத்தாருடைய சாதகக் குறிப்புகளைப் பரிசோதித்து நல்ல நேரத்தில் தொடங்குவதையும், தனக்கோ - தன் குடும்பத்தாருக்கோ இடுக்கண் வரும் போது இது ஏன் வந்தது? எதனால் வந்தது? இதற்கு என்ன வழி? என்ற வினாக்களுக்கு விடை காணவும் சோதிடத்தை நாடுவர். இத்தன்மை இக்கதையின் வாயிலாகவும் வெளிப்படுதலைக் காணமுடிகிறது.
இக்கதையில், இடுக்கண் வரும் போதுதான் சோதிடத்தில் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அறியமுடிகிறது. காழிப்புலையன், தான் வளர்த்த கரையாளன் தனக்குத் துரோகம் விளைவித்ததற்குப் பழிவாங்க ஓமம் வளர்க்கின்றான். பலி கொடுக்காததால் புலையனை புலைமாடசாமி பலி கொள்கிறது. காழிப்புலையன் ஓமக் குழியருகில் மாண்டு கிடப்பதைக் கண்டு புலைச்சி சோதிடக்காரியை வரவழைத்து சொற்பொருத்தம் பார்க்கிறாள். சோதிடக்காரி,
"அம்மாநீ புலைக்கொடியே ஆயிழையே சொல்லக்கேளு
உன்னுடைய மருமகளை ஓமநல்ல குழியதிலே
நரபெலிகொடுப் பாயானால் நாயகனும் எழுந்திருப்பான்" (வரி.153-155)
என்றவுடன், புலைமாடத்தி,
"சம்பங்கி எண்ணெதேய்த்து தலைமுழுகி வாடியம்மா
பஞ்சமஞ்சள் சொச்சமஞ்சள் பகளமஞ்சள் பூசிவாடி
கோட்டாத்தான் கண்டாங்கி கொய்துடுத்து வாடியம்மா
செங்கல் சிகப்பழகி சிவந்தகண் மையழகி
ஏழுமாத சூலியவள் இளங்கொடியாள் பெண்கொடியே
தண்டியலில் ஏத்தியல்லோ தான்வாறாள் புலைச்சியவள்,
ஓமநல்ல குழியருகே கொண்டுவந்தாள் மருமகளை
சிங்கவாழை இலையறுத்து தென்வடக்காய்த் தான்போட்டு
ஏழுமாத சூலியத்தான் இளமான பெண்கொடியை
தென்வடக்காய்த் தான்கிடத்தி வௌ¢ளிபுலைக் கத்திகொண்டு
ஈரலொரு சட்டியிலே இரத்தமொரு சட்டியிலே
பிள்ளையொரு சட்டியிலே தள்ளையொரு சட்டியிலே
பகுத்து வைத்தாள் புலைச்சியவள்" (வரி.161-173)
நரபலி கொடுக்கின்றாள். ஆடு, மாடுகளை பெலிகொடுக்கும் முன் தூய்மை செய்வது போல மனிதர்களைப் பலிகொடுக்கும் போதும் தூய்மை செய்வர் என்ற நிலை இதன் மூலம் வெளிப்படுதலைக் காணமுடிகிறது. உதயத்தூர் நாட்டில் மர்மத்தனமாக உயிர்கள் வதைபடுவதைக் கண்ட கரையர்கள் சோதிடக்காரியை அழைத்து சொற்பொருத்தம் பார்க்கின்றனர். அவளோ,
"போன தலைமுறையில்
கூனப்பிறவி கரையாளர் கொண்டுவந்த வாதையிது
குடைகொடுப்பீ ரானாக்கால் குற்றமொன்றும் வாராது" (வரி.241-243)
என்கிறாள். கரையர்களும் அவளின் சொற்படியே,
"நாள்கேட்டு முகூர்த்தம்வைத்து நல்லவௌ¢ளி கிழமையிலே
கோவிலுக்கு கால்நாட்டி கோவில்கட்டி பீட்மிட்டார்.
பீடமிட்டு நிலையஞ்செய்து போதரவாய் படுக்கைவைத்தார்
தேங்காயோ பழம்யிளனீ சிறப்புடனே கொண்டுவைத்தார்
புண்ணாக்கு கருப்பக்கட்டி போதரவாய் கொண்டுவைத்தார்
சென்னநல்ல அரிசிபொங்கி, சிறப்புடனே படப்பேத்தி
காடை கருவாலி காட்டிலுள்ள முசல்உடும்பு
வௌ¢ளியாச்சை சாமத்திலே பேய்ப்படைக்கு பூவும்வைத்தார்
ஆட்டும் பாட்டும் ஊட்டுமாக ஆதரவாய் குடைகொடுத்தார்" (வரி.245-253)
என்ற நிலையினை நோக்கும் போது மக்கள் சோதிடக்காரி என்ன சொல்கிறாளோ அதன்படி பிறழாது அப்படியே செய்யும் மனப்பக்குவம் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது.
இ. மந்திரத்தன்மை
தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய எதிரியை அழிப்பதற்காகவும், தொழில் முறையில் இன்னொருவனுக்கு அவனுடைய எதிரியை அழிப்பதற்காகவும், இன்னொருவனை காப்பதற்காகவும் என நான்கு நிலைகளில் மாந்திரீகம் மந்திரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இக்கதையில் தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் எதிரியை அழிப்பதற்காகவும் மட்டுமே மாந்திரீகம் பயன்படுத்தியுள்ளமை புலப்படுகிறது.
கூனப்பிறவி கரையாளன் மந்திர ஏடுகளை - காழிப்புலையனின் வீட்டில் இருந்த மந்திர ஏடுகளைக் களவாடிச் சென்றதையறிந்த காழிப்புலையன் அவனை பழி தீர்க்க எண்ணமிடுகின்றான். செயல்படுத்தவும் செய்கின்றான். இதனை,
"என்னைச் சதித்தானே என்குடிலைக் கெடுத்தானே!
இவனையினி விடுவதில்லை இவன்குடியை நான்கெடுப்பேன்
என்றுசொல்லி புலையனவன் ஓமநல்ல குழியைவெட்டி
ஓமநல்ல பலகைமேலே அச்சரத்தை உருவெழுதி
சிதம்பரச் சக்கரமும் சீர்காழி மந்திரமும்
புலைமாடனுட சக்கரத்தை புகழுடனே உச்சரித்தான்.
இருபத்தொரு வேததையும் இப்போது வருத்தவேணும்
என்றுசொல்லிப் புலையனவன் இன்பமுடன் சேவித்தானே" (வரி.121-128)
என்ற வரிகளின் மூலம் அறியலாகும். இவ்வாறு புலையன் ஏவிவிட்ட பேய்ப்படைகள் தன்னை அழிக்க வருகின்றன என்பதை அறிந்த கூனப்பிறவி கரையாளன் தன்னைக் காத்துக்கொள்ளும் மந்திரத்தையும் பேய்ப்படைகளை அடக்கியாளும் மந்திரத்தையும் பயன்படுத்துகின்றான்.
"வடசேரி மேடுதன்னில் வளமான கோட்டை(க்)கீறி
தன்கோட்டைக் குள்ளல்லவோ தன்னைக்கட்டு மந்திரத்தை
உச்சரித்துக் கரையாளர் மாறன மையெடுத்து
நெத்தியிலே பொட்டுமிட்டு நின்றதோர் வாதைகளை
மூங்கில் குழலுக்குள்ளே பிடித்தடைக்க வேணுமென்று
பிடித்தடைக்கு மந்திரத்தை பிரபலமாய் உச்சரித்தார்" (வரி.200-205)
என்ற செயல்களின் மூலம் தன் எதிரியை அழிக்கவும் தன்னைக் காத்துக்கொள்ளவும் மந்திரத்தைப் பயன்படுத்தி உள்ளமை புலப்படுகிறது.
மேற்காணும் மந்திரங்களைப் பயன்படுத்தும் முன் மந்திரத்திற்கு பலி கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலையையும் இங்குச் சுட்டப்பெற்றுள்ளது. கூனப்பிறவி கரையாளன் தன்னைக் காத்துக் கொள்ளும் மந்திரத்தைப் பயன்படுத்திய பின்,
"சுண்டுவிரல் தனையறுத்து சுறுக்காக பெலிகொடுத்தார்" (வரி.206)
என்பதைக் காண்கின்றோம். மந்திரத்தைப் பயன்படுத்திய பின் பலி கொடுக்காத போது, வேண்டும் தெய்வம் வேண்டுபவனை அழிப்பான் என்பதையும் இங்கு இக்கதையில் சுட்டப்பெற்றமையைக் காணமுடிகிறது.
கரையாளனை அழிப்பதற்காகக் காழிப்புலையன் ஓமக்குழி வெட்டி அழிக்கும் மந்திரத்தை உச்சரித்தும் பலி கொடுக்காததால்,
"பெலியொன்றும் காணவில்லை போகவும் கூடாது
என்றுசொல்லி புலைமாடன் பின்வாங்கி நின்றிடுவார்
அந்நேரம் புலையனக்கு அதிகோபம் தானெழும்பி
புலைமாட சாமியைத்தான் கண்உருட்டிப் பார்த்தானே!
அப்போது புலைமாடன் ஆங்கார மாயெழும்பி
சேவிக்கின்ற புலையனைத்தான் செவிட்டடியா யடித்திடுவார்.
அடிபட்ட வேளையிலே அரதியல்லோ கீழ்விழுந்தான்" (வரி.130-136)
என்பதையும் காண்கிறோம். மந்திரத்தைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுமேயானால் அதற்குப் பலி கொடுக்க வேண்டும் என்ற நியதி இங்கு இக்கதையில் வெளிப்படுதலைக் காணமுடிகிறது.
ஈ. சகுனம் காணல்
நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் அறிகுறிகளே சகுனம் என்பர். இதனை நல்ல சகுனம், தீய சகுனம் எனப் பிரிப்பர். வீட்டைவிட்டுப் புறப்படுமுன் சகுனம் காணுதல் இன்றும் வழக்காற்றில் உள்ளது. 'சகுனங்களில் நலமுள்ளவை எதிர்ப்படின் காரியங்களைச் செய்க. பிரிதிகூலமாயின் அவற்றை விடுக. புத்திமான் சகுனத்தை மும்முறை பார்த்தும் நலமாகாவிடின் அக்கருமத்தை விடுக' என்கிறது அபிதான சிந்தாமணி. நல்ல அல்லது தீய சகுனத்தை, செயலில் ஈடுபடுமுன் காண்பதும்; செயலில் ஈடுபட்டபின் - இடையே செயலில் தொய்வு ஏற்பட்டபின் காண்பதும் எனப் பிரிக்கலாம்.
இக்கதையில் தீய சகுனம் குறுக்கிடுதலைச் சுட்டுகிறது. புலையன் வளர்க்கும் ஓமக்குழிக்குச் செல்லும் புலைச்சிக்கு புலையன் நிலையை உணர்த்த புலைமாட சுவாமி கரும்பூனை வடிவினைக் கொண்டு குறுக்கே பாய்கின்றார். "கரும்பூனை பாய்ந்தாக்கால் கணவனுக்கு ஆகாது"(வரி.143) எனத் தீய சகுனத்தைக் கண்ட புலைச்சி மிக வேகமாக ஓமக்குழியருகே ஓடி வருகின்றாள்.
உ. அடைக்கலத்தன்மை
பிறிதொருவன் துணை இருந்தாலொழிய இனிமேல் தன்னால் வாழ் இயலாது என்றவொரு நிலை வந்தபிறகு, தன்னுடைய உள்ளத்து உரிமையனைத்தும் இழந்து பிறிதொருவனின் உள்ளப் போக்கிற்கேற்ப வாழும் தன்மையே அடைக்கலப் பாங்கை வெளிப்படுத்தும் கருதுகோலாகும். அதாவது, தன்னால் இயலாத ஒரு செயலைச் செய்துமுடிக்க பிறனொருவன் துணைகொண்டு அவன் கட்டளைக்குட்பட்டு அவனால் செய்துமுடித்துக் கொள்வதாகும். இக்கதையிலும் இத்தன்மை தெளிவாக வெளிப்படுதலைக் காணமுடிகிறது.
கூனப்பிறவி கரையாளன் காக்காச்சி மலையில் வாழக்கூடிய காழிப்புலையனிடம்,
"கிழக்கே வெகுதூரம் கீழ்நாடு பாண்டிச்சீமை
சாதியிலே கரையாளன், தாயுமில்லை தகப்பனில்லை
வளர்ப்பார்க்குப் பிள்ளையாக வந்தேனான் உன்னிடத்தில்" (வரி.76-78)
என்று சொல்லவும், அவன் (காழிப்புலையன்) இரக்கங்கொண்டு கரையாளனக்கு அடைக்கலம் கொடுக்கத் துணிகிறான். அடைக்கலம் கொடுத்த பின் தன்னுடைனேயே தங்கும் அவன், தான் உண்ணும் உணவு வகைகளை அவனும் உண்ணவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். அதற்கும் இசைகின்றான் கரையாளன்.
"செந்நெல் அரிசிபொங்கி செங்கிடாத் தலையறுத்து
ஆட்டிறச்சி மாட்டிறச்சி அழகான உடும்பிறச்சி
காடை கருவாலி காட்டிலுள்ள முசல்உடும்பு
பேடைக்கோழி கறிசமைத்து பொங்கி பொரித்துவைத்தாள்,
ஏழடுக்குச் சட்டியிலே ஒருசட்டி தானெடுத்து
இருபேர்க்கும் பரிமாறி இன்பமுடன் கொண்டுவந்தாள்" (வரி.87-92)
புலைச்சி கொண்டு வந்த உணவை உண்ண முற்படும் போது காழிப்புலையன் தடுக்கின்றான். என்னதான் அடைக்கலம் வந்தவனாக இருந்தாலும் கரையாளன் மேல்சாதியைச் சேர்ந்தவன். அவன் சாதிக்குக் கொடுக்கக் கூடிய மதிப்பை நாம் கொடுத்தேயாக வேண்டும் என்று எண்ணியவனாய் கரையாளன் உண்ணவிருந்த உணவைத் தடுத்து,
"நாங்களல்லோ புலைச்சாமி நாயகமே உண்ணலாமோ?
தவளைப்பானை காய்கறிகள் சமயலுக்கு அரிசிதாறேன்
சமைத்து சாப்பிடுங்கள் தம்பிரானே எனக்கொடுத்தான்" (வரி.96-98)
எனக் காண்கிறோம். அடைக்கலம் புகுவோர் தன்னினும் உயர்ந்த குலத்தாருடனோ சாதியினருடனோதான் புகுதல் வேண்டும் என்ற நியதி ஒருமுகத்தான் இருந்தாலும் இங்குத் தாழ்ந்த சாதியைச் சார்ந்தவரிடம் மேல்சாதியைச் சார்ந்தவர் அடைக்கலம் புகுதல் நாட்டுப்புறப் பாடல்களில் வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கிறது. இந்தப் புரட்சிப் போக்கு நாட்டுப்புறத்தில் தோன்றியதின் காலத்தைக் கணித்தல் அவசியமாகிறது.
ஊ. வட்டார வழக்குகள்
சில வழக்குகள் சில வட்டாரங்களுக்கு மட்டுமே உரியதாக அமைந்து வட்டார வழக்காகிறது. இக்கதையில் கரும்பூனை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பூனை என்றே குறிக்கப்பெற்றுள்ளது. 'பூனை குறுக்கே போனால் போறகாரியம் ஆகாது' என்றும், 'பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம்' என்றும் தென்பாண்டி நாடற்றவிடங்களில் வழக்காக இன்றும் இருந்துவருகிறது. ஆனால் தென்பாண்டி நாட்டில், "கரும்பூனை பாய்ந்தாக்கால் கணவனுக் காகாது" (வரி.141) என்னும் இவ்வழக்கு இன்றும் உள்ளதைக் காண்கிறோம். இவ்வழக்கு வேறெந்த பகுதியிலும் காணப்படாத ஒரு வட்டார வழக்காகத் திகழ்கிறது.
குடைகொடுத்தல் என்பது நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் சொல்லப்படும் சொல்லாகும். இருந்தாலும் இச்சொல் இடத்திற்குத் தகுந்தவாறு பொருள் மாறுபடும். தென்பாண்டி நாட்டில் குடைகொடுத்தல் என்பது அம்மனுக்கு - பலிபெறும் அம்மனுக்கு எடுக்கப்படும் திருவிழாக்களைக் குறிக்கும். பெண்தேவதைகளே அம்மன்களாக வணங்கிவரும் வழக்கம் நாட்டில் பரவலாக இருந்த போதிலும் தென்பாண்டி நாட்டில்தான் மிக அதிகமான அளவிற்குப் போற்றிப் பாராட்டி வணங்கி வருகின்றனர். தென்பாண்டி நாடற்ற எல்லைப் பகுதிகளில் குடைகொடுத்தல் என்பது கோயிலுக்குக் குடைகொடுத்தல் என்பதாகும். சிதம்பரம் நடராசர் ஆலயக் கோபுரத்திற்கு சோழ மன்னன் ஒருவனால் பொன்னால் குடை வேயப்பட்ட செய்தியையும் உற்று நோக்கத்தக்க ஒன்றாகும். நேர்த்திக் கடனுக்காகவும் சிலர் கோயிலுக்குக் குடை வாங்கித் தருவதும், கோயிலின் தேவைக்கு வேறொரு கோயிலிருந்து குடையை இலவசமாகக் கேட்டுப் பெறுவதும் (திருப்பதிக்குடை) ஆகும். இக்கதையிலோ குடைகொடுக்கும் நிகழ்ச்சி குறிப்பிடப் பெற்றமையைக் காணமுடிகிறது.
இறந்தவொரு பெண்தேவதையின் உடலைப் புதைத்து மேடைகட்டி அதன் மீது பீடம் அமைத்து பீடத்தில் மாடம் ஒன்று வைத்து மாடத்தின் மேற்புறம் கலசம் வைத்துச் சுற்றிச் சுவரெழுப்பி கோயிலாக்கி வழிபடுவர். இவ்வழிபாட்டு தேவதைக்கு ஆண்டுக்கொரு முறை தேங்காய், பழம், இளநீர், புண்ணாக்கு, கருப்பக்கட்டி கொண்டுவந்து செந்நெல் அரிசி பொங்கி படைத்து பின் நடுஇரவில் காடை, கருவாலி, முசல், உடும்பு போன்ற காட்டில் உள்ள விலங்குகளைப் பலிகொடுப்பர். அன்று இரவு முழுவதும் யாரும் தூங்காமல் தேவதைக்கு ஆட்டமும் பாட்டுமாக ஊட்டம் அளிப்பர்.
"பார்த்தாரே கரையர்காள், பார்நல்ல தலமதிலே
நாள்கேட்டு முகூர்த்தம்வைத்து நல்லவௌ¢ளி கிழமையிலே
கோவிலுக்கு கால்நாட்டி கோவில்கட்டி பீடமிட்டார்
பீடமிட்டு நிலையஞ்செய்து போதரவாய் படுக்கைவைத்தார்
தேங்காயோ பழம்யிளனீ சிறப்புடனே கொண்டுவைத்தார்
சென்னநல்ல அரிசிபொங்கி, சிறப்புடனே படப்பேத்தி
காடை கருவாலி காட்டிலுள்ள முசல்உடும்பு
வௌ¢ளியாச்சை சாமத்திலே பேய்ப்படைக்கு பூவும்வைத்தார்
ஆட்டும் பாட்டும் ஊட்டுமாக ஆதரவாய் குடைகொடுத்தார்" (வரி.244-253)
மேற்காணும் இந்த வழக்கு தென்தமிழ் நாட்டில் மட்டுமே - தென்பாண்டி நாட்டில் மட்டுமே காணப்படக் கூடிய ஒன்றாகும். எனவே, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் பகுதிகளில் இக்கதை நிகழ்ந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
வழக்குச் சொற்கள்
சில வட்டாரங்களுக்குச் சில விளைபொருட்கள் உரிமை உடையதைப் போல் சில வழக்குச் சொற்களும் உரிமை உடையதாக உள்ளதைக் காணலாம். கன்னியாகுமரி - நாகர்கோயில் பகுதிகளில் கருப்பக்கட்டி, பெலி ஆகிய சொற்கள் தனித் தன்மை வாய்ந்தவை. அதேபோல் மற்றெந்த பகுதியிலும் விளையாத செந்நெல் அரிசி இப்பகுதியிலேயே விளைகின்றதையும் காணமுடிகிறது. மலைவாழை கனியின் சுவையை யொத்த சிங்கவாழை கனியும் கன்னியாகுமரி - நாகர்கோயில் - திருவனந்தபுரம் பகுதிகளில் விளகின்றதையும் காணமுடிகிறது.
எ. கதை நிகழிடம்
இக்கதை, தென்பாண்டி நாட்டில் நடப்பதாக அறியமுடிகிறது.
"தன்னுடைய வீடுவிட்டு தலைவாசல் தனைக்கடந்து
செங்கோடிவாய் ஐயரையும் சிறப்புடனே அடிதொழுது
பிராமணக்குடி அகரம்விட்டு பிள்ளையார் கோவில்விட்டு
கல்லோடை தனைக்கடந்து பூதிவிடங்கன் அய்யனாரை
பூதிவிடங்கன் அய்யனாரை புதுமையுடன் தொழுதுகொண்டு
காட்டுஊரணி தனைக்கடந்து ஆனக்கால் ஓடைவிட்டு
பரமேசுபுரம் கடந்து பறவக்குளம் மேடும்விட்டு
தனக்கார குளமும்விட்டு ராமலிங்க புரமும்விட்டு
மங்கம்மா சாலைவிட்டு முப்பந்தரம் போக்குமிட்டு
ஆருவாய் மொழிகடந்து தோவாளை தனைகடந்து
வௌ¢ளமடம் போக்குமிட்டு ஒழுகுன சேரிவிட்டு
வடசேரி மேடும்விட்டு பார்வதி அகரம்விட்டு
சுங்காங்கடை போக்குமிட்டு வில்லிக்குறி தனைக்கடந்து
தக்கலைவாழ் ஊரும்விட்டு குளித்துறை ஆறும்விட்டு
நெய்யாற்றின் கரைகடந்து கரமனை ஆறும்விட்டு
சாலைக்கடை பாதைகூடி திருவனந்த புரத்திலே
ஸ்ரீபத்மநாதரையும் அடிதொழுது புறப்படுவார் அழகுபிள்ளை
கரையாளர்" (வரி.38-54)
என்ற அடிகளின் வாயிலாகக் கதை நிகழிடங்களைக் காணமுடிகிறது. இன்றும் இவ்விடங்களில் சில நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாதையில் இருத்தலைக் காணலாம். இன்று 'ஆருவாய்மொழி' என்பது 'ஆரல்வாய்மொழி' என்றும், 'வில்லிக்குறி' என்பது 'வில்லுக்குறி' என்றும், 'தக்கலை' என்பது 'தக்களை' என்றும் வழங்கப்பட்டு வருதலைக் காணலாம்.
ஏ, காலம்
மேற்காணும் சான்றாதாரங்களைக் கொண்டு பார்க்கும் போது இக்கதை தென்பாண்டி நாட்டில் வழக்கத்தில் இருந்து நடந்த கதையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பாண்டியரின் ஆட்சிக் காலத்திலோ அல்லது அவர்களின் பகுதியை ஆண்ட ஒரு சிற்றரசனின் கதையாகவும் இக்கதை இருக்கலாம். சேரநாடு, மேல் - மேற்கு நாடாகவும்; பாண்டியநாடு, கீழ்நாடு - கிழக்கு நாடாகவும்; சோழநாடு, வடநாடு - வடக்கு நாடாகவும் தென்னகத்தில் மூவரச நாட்டெல்லைகளைக் குறிப்பிட்டு வந்துள்ளனர். "கிழக்கே வெகுதூரம் கீழ்நாடு பாண்டிச்சீமை"(வரி.76) என்று குறிப்பிடுவதனால் மேல் நாடாகிய சேர நாட்டிற்கு கீழ்நாடாகிய பாண்டிய நாட்டில் இருந்து வந்தவன் என்று உணர்த்தப்படுகிறது. எனவே இக்கதை தென்பாண்டி நாட்டில் தொடங்கி நாகர்கோவில் வழியாக சேரநாட்டில் திருவனந்தபுரம் வரை சென்று பிறகு மீண்டும் சென்ற வழியே திரும்பி தென்பாண்டி நாட்டை அடைந்து முடிவுறுகிறது.
இக்கதையில் பாண்டிய நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டாலும் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கதை நடைபெறவில்லை. இதில் 'மங்கம்மா சாலை' பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. கி.பி.1689 முதல் 1706 வரையுள்ள பதினெட்டு ஆண்டுகள் மதுரையை ஆண்ட இராணி மங்கம்மாள் பல நீண்ட சாலைகளை அமைத்தாள். அவள் அமைத்த சாலைகளில் ஒன்றுதான் (மதுரை-நாகர்கோவில்-கன்னியாகுமரி) மங்கம்மாசாலை. எனவே, இக்கதை நாயக்கர் காலத்தில் உருவானதாகத்தான் இருக்கமுடியும். அதாவது, கி.பி.1689-1706க்குட்பட்ட காலத்திற்குள்ளாகவோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்திற்குள்ளோ தான் இக்கதை வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். ஓலைச்சுவடியில் முற்குறிப்போ பிற்குறிப்போ இல்லை. சுவடியின் அகப்புற அமைக்பைக் கொண்டு காலத்தை ஓரளவிற்கு உறுதி செய்யலாம். அது ஓலையின் காலத்தை மையமாகக் கொண்டதாகத்தான் அமையும். ஓலை படிச்சுவடியாயின் அதனைக் கொண்டு நூலின் காலத்தை கணிக்க இயலாது. எனவே, அது அவ்வளவு சரியான காலத்தைச் சுட்டுவன அல்ல. அவை ஒலைச்சுவடிச் செய்தியின் காலத்தைச் சுட்டப்பயன்படாது. எப்படி இருந்தாலும் சுவடியின் அமைப்பை ஒப்பிட்டுக் கதைக் கூறில் இடம்பெற்ற சாலையைக் கொண்டும் பார்க்கும் போது இக்கதை கி.பி.1689-1706க்குள்ளோ அல்லது அதற்குப் பிறகு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாகவோ தென்பாண்டி நாட்டில் நாயக்கர் காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இக்கதைப்பாடலின் காலத்தை ஓரளவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள நாட்டுப்புறக் கூறுகள் இக்கால கட்டத்தில் நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்பது இதன் மூலம் தெளிவடைகிறது. இன்றும், சில இக்கூறுகள் வழக்கத்தில் உள்ளமை அக்காலப் பழக்கவழக்கங்கள் இதுநாள் வரை மாற்றமின்றி உள்ளமையைக் காட்டுவனவாகும். இதுபோன்ற நாட்டுப்புறக் கதைகளையோ கதைப்பாடல் களையோ பாடல்களையோ உற்று நோக்கினோமானால் பழந்தமிழரின் பழக்கவழக்கங்களையும் அவர்களின் சமுதாய அமைப்புகளையும் தெளிவாக்கிக் கொள்ளுதல் இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக